டி.ஆர்.நாகராஜ்,குகா-அர்விந்துடன் உரையாடல்

அன்புள்ள ஜெ:தமிழாக்கத்திற்கு நன்றி. டி.ஆர்.நாகராஜின் பத்தியை ஆங்கிலத்தில் கொடுத்தற்கு மன்னிக்கவும். நானே தமிழில் மொழிபெயர்த்திருக்க வேண்டும். ஆனால் அப்பொழுது இருந்த மனநிலையில் முடியவில்லை).டி.ஆர்.நாகராஜ் எழுதிய அந்தப் பத்தியில் , ”முழுமையான பார்வைக்காக காத்திருக்கும் ஒருவர் செயல்படப்போவதேயில்லை. வரலாற்றில் குதிக்கப்போவதுமில்லை”, என்ற வாக்கியம் கூர்மையானது.வரலாறு மட்டும் அன்றி அனைத்து துறைகளுக்கும் இது பொருத்தமானது என்று எனக்குத் தோன்றுகிறது. உதாரணமாக, கணிப்பொறி மற்றும் சாஃப்ட்வேர் துறைகள் மெல்ல மெல்ல பொறியியலில் இருந்து வடிவமைப்பு (design) முறைமை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறன. வடிவமைப்பு அடிப்படைகளும் மாறிக் கொண்டே இருக்கின்றன. இப்பொழுது வடிவமைப்பில் முழுமையின்மை‘ (Incompleteness) என்பது முக்கியமான ஒரு கோட்பாடகிக் கொண்டிருக்கிறது, ”முழுமையின்மைக்காக வடிமைத்தல்‘ (designing for incompleteness) மற்றும் வடிவமைப்பால் முழுமையின்மை‘ (incompleteness by design) என்பது குறித்து
வடிவமைப்பு நிபுணர்கள் நிறைய எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். விக்கிபீடியா மற்றும் லினக்ஸ் போன்றவை இவ்வகை வடிவமைப்புக்குச்சிறந்த உதாரணம். முழுமையின்மையே இவற்றின் பலம். இவற்றின் அசுர வளர்ச்சிக்குக் அடிப்படைக் காரணமும் இதுவே.இப்படி இருக்க, இன்று ஒரு முழுமையானபார்வையை நோக்கிச் செல்லும்வடிவமைப்பாளனின், நிபுணனின், விஞ்ஞானியின், வரலாற்றாசிரியனின், சமூகவியல் அறிஞனின், எழுத்தாளனின் பங்கு என்ன என்பது குழப்பமாகவே உள்ளது. அல்லது ஒட்டு மொத்த சமூகத்தின் இயக்கம் என்பதே, ‘முழுமைக்கும்‘ ‘முழுமையின்மைக்கும்‘, ‘அமர்தலுக்கும்‘ ‘அலைதலுக்கும்இடையே நடக்கும் உரசல் தானோ?

அன்புடன்,
அர்விந்த்

அன்புள்ள அர்விந்த்

உங்கள் கடிதத்தில் உள்ள முக்கியமான சிக்கல் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். முழுமை என்பது இரண்டு வகை. ஒருவன் தான் கொள்ளும் நோக்கில் இறுதி உண்மையை அடைந்தால் மட்டுமே அவனை முழுமையான சிந்தனை கொண்டவன் என்று சொல்லலாம் என்பது உங்கள் வரிகளின் கோணம்.ஆனால் தன் சிந்தனையின் பயணத்தின் ஒவ்வொரு தருணத்திலும் அவன் சிந்தனையில் சமநிலை கொண்டவனாக இருந்தால் அவனுடைய சிந்தனை அவ்வக்கணங்களில் முழுமைகொண்டது என்று சொல்லலாம். இதுவே ஜென் ஞானத்தின் சாரம். மனிதனால் செய்யக்கூடுவது இது மட்டுமே.

உங்கள் சிந்தனை சரியானதாக, முழுமையான உண்மையை கடைசியில் சென்றடைவதாக இருக்க வேண்டும் என்று எப்படி நீங்கள் தீர்மானிக்க முடியும்? அது வரை சிந்திக்காமல் இருப்பதும் சாத்தியமல்ல.ஆனால் சிந்திக்கும்போதெல்லாம் அது கூடுமானவரை எல்லா தரப்புகளையும் கணக்கில் கொண்டிருக்கிறதா என்று பார்க்க முடியும். இது என் உணர்ச்சிகளால் என் சார்புகளால் என் முன்முடிவுகளால் அனைத்தையும் விட மேலாக என் பழக்கத்தால் பக்கச்சார்பானதாக இருக்கிறதாஎன்று பார்த்துக்கொள்ள முடியும். நான் சிந்தனையின் முழுமை என்று இதையே சொல்கிறேன்.

கணிசமான செயல்விரர்கள் இந்த முழுமை நோக்கு இல்லாத காரணத்தால் அழிவை உருவாக்கியதை வரலாறு காட்டுகிறது என்பதே என் தரப்பு. இலக்கின் முழுமை அல்ல செல்லும் பாதையின் முழுமையே நம்மால் சாத்தியமான முழுமை. மேலைக்கல்வி முறைக்குள் உள்ள நீங்கள் உங்கள் வாழ்நாளெல்லாம் அதை உங்களிடமே கேட்டுக்கொள்ள வேண்டும்

ஜெ

என் நோக்கில் ராமசந்திர குஹா எழுதிய சில நூல்கள் முக்கியமானவை என்று தோன்றுகிறது. அவரது ஆளுமைத் தொகுப்புகள்மிகவும் சுவராசியமானவை. முக்கியமாக ‘An Anthropologist among the Marxist’, ‘The Last Liberal’ என்ற இரு புத்தகங்கள். அதே போல் அவரது சமீபத்திய புத்தகமான ‘India After Gandhi’. இவற்றில் குறைகள், சார்புகள் இருக்கலாம். எனக்கே கூடஇ.எம்.எஸ் குறித்த குஹாவின் கட்டுரை மிகவும் தட்டையாக இருந்ததாகப் பட்டது. மதம், இந்தியத் தத்துவம் குறித்த அவரது புரிதல்கள் மேலோட்டமானது என்பது என் எண்ணம். இருந்தும், பலர் குஹாவை ‘pseudo-secular’ என்று ஒதுக்கித் தள்ளுவது போல் என்னால் தள்ள முடிந்ததில்லை.விளிம்பு நிலை வரலாற்று ஆய்வுகள், ஹிந்த்வா-சார்புள்ள வரலாற்றுப் புனைவுகள் மற்றும் ஆய்வு நூல்கள்போன்றவற்றோடு ஒப்பிடும்போதுகுஹா எனக்கு மேலான வரலாற்றாசிரியராகவே தோன்றுகிறார். எனக்குத் தெரிந்து அவர் எங்கும் வெறுப்பைக் கொட்டியதில்லை. காந்தி மற்றும் நேரு, இருவர் குறித்தும் அவர் எழுதிய சமநிலையான பல கட்டுரைகளே இதற்குச் சான்று.டி.ஆர்.நாகராஜ் போல் இந்திய சமூக-கலாச்சார ஆழ்காரணிகள் குறித்த புரிதல் இவரிடம் இல்லை என்பது குறையே. நாகர்ராஜ் ஒரு இடத்தில் காந்தியைபுராணிகர்’(pouranika) என்று குறிப்பிடுவார். ஒருவிதத்தில் நாகராஜும் புராணிகரே. இதனாலேயே அவரால் எரியும் பாதங்கள்போன்ற கலாச்சார நுண்தளங்களுக்குள் செல்லும் ஒரு நூலை எழுத முடிந்தது என்பது என் எண்ணம். டூன் ஸ்கூலில் படித்து வளர்ந்த குஹா புராணிகர் அல்ல என்பதே அவரின் பலவீனம். ஒருவிதத்தில், பலமும் கூட. இதை வைத்தே அவரைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அதை விடுத்து, கோவல்கரை, ரவிசங்கரைத் திட்டி எழுதிவிட்டார், அதனால் குஹா pseudo-secular என்று கூறுவது அபத்தமாகப் படுகிறது.அன்புடன்,
அரவிந்த்

அன்புள்ள அர்விந்த்

உண்மையைச் சொல்லப்போனால் நான் ராமச்சந்திர குகா குறித்து எதுவும் படிக்கவில்லை. உதிரிக்கட்டு ரைகளை தவிர. ஏதாவது புத்த்க வடிவில் படிக்கலாம் என்ற எண்ணத்து ட ன் இ க்கிறேன். என்னு டைய சொந்த ஆய்வுகள் அலைச்சல்கள் என இப்போது நேரம்செல்வதனால் முன்போல பரவலாக வாசிப்பது இப்போது சாத்தியப்படவில்லை.

ராமச்சந்திர குகா நான் புரிந்துகொண்டவரை பண்பாட்டு ஆய்வாளர். வரலாற்று ஆய்வாளரல்ல. உதாரணமாக ஏ.எல்.பாஷாம் [The wonder that was India] இந்தியாவின் முக்கியமான பண்பாட்டு வரலாற்றாசிரியர், வரலாற்றாசிரியர் அல்ல. ப ண்பாட்டின் வரலாற்றை, விழுமியங்களின் பரிணாமத்தை விவரிக்கும் ஆசிரியர்கள் இவர்கள். அதை வரலாற்றின் பின்னணியில் வைத்துப் பார்க்கிறார்கள்.

பொதுவாக நான் வரலாறு சார்ந்த செவ்வியல் பார்வை கொண்டவன். ஆட்சிமுறை, சமூக அமைப்பு ஆகியவற்றின் வளர்ச்சியின் காலவரிசைப்படுத்தபப்ட்ட சித்திரத்தை மட்டுமே நான் வரலாறு என்கிறேன். அதில் விழுமியங்களை ஏற்றுவதோ, விழுமியங்களின் அடிப்படையில் அதை சொல்லமுனைவதோ வரலாற் றின் எல்லைக்குள் வராது. அது பண்பாட்டு ஆய்வின் வரைவுக்குள் சென்றுவிடுகிறது

ஜெயமோகன்

அன்புள்ள ஜெ:

நான் பொதுவாகத் தான் சொன்னேன். ”ராமச்சந்திர குஹாவைப் போய் விட்டுவிட்டீர்களே”, என்ற நோக்கில் அல்ல. உங்கள் வாசிப்புத் தளம் என்னை பிரம்மிக்கவே வைக்கிறது.

‘காந்திக்குப் பிந்தைய இந்தியா’ நூலுக்கு முன் உள்ள குஹாவை நானும் பண்பாட்டு ஆய்வாளராகவே பார்க்கிறேன். ஆனால் இந்த நூலுக்குப் பின் அவரை வரலாற்றாசிரியராகவே எண்ணுகிறேன். தவிர அவர் சுற்றுச்சூழல் மற்றும் க்ரிகெட் வரலாற்றாசிரியராகவும் பல ஆண்டுகள் இருந்திருக்கிறார். ‘Environmentalism – A Global History’  மற்றும் ‘A Corner of a Foreign Field’ போன்ற அவரது நூல்கள் பிரபலம்.

ஆனால் எனக்கு அவரின் ஆளுமைத் தொகுப்புகளே மிகவும் பிடித்திருந்தது. ஆ.மாதவையா அவர்களின் மகனான எம்.கிருஷ்ணனின் கட்டுரைகளை  படித்திருப்பீர்கள் (தியோடர் பாஸ்கரன் தொகுத்தது, காலச்சுவடு பதிப்பகம் என்று நினைக்கிறேன்).  குஹாவும் கிருஷ்ணனைப் பற்றீய நூல் ஒன்றை எழுதியுள்ளார். ( Nature’s Spokesman – M  Krishnan and Indian Wildlife. Oxford University Press )

அன்புடன்,
அர்விந்த்

முந்தைய கட்டுரைகாந்தியின் வழி:கடிதங்கள்
அடுத்த கட்டுரைலோகி:கடிதங்கள்