போலிக்கறுப்பு

வங்கநாவலான பாதேர்பாஞ்சாலி 1938ல் வங்கமொழியில் வெளிவந்து இன்றுவரை ஒரு பேரிலக்கியமாக கருதப்படுகிறது. 1968ல் அதன் தமிழ் மொழியாக்கம் த.நா.குமாரசாமியால்செய்யப்பட்டது. எல்லா இந்திய மொழிகளிலும் அது ஒரு நவீனச்செவ்வியல்படைப்பு என்றே விமர்சகர்கள் கருதுகிறார்கள். சத்யஜித் ரே அந்நாவலை தழுவி மூன்று படங்கள் எடுத்தார். அவை உலக அளவில் எடுக்கப்பட்ட மகத்தான திரைப்படங்களின் வரிசையில் வைக்கப்படுகின்றன.

நாவலை வாசித்தவர்கள் ஒன்றை உடனடியாகச் சொல்லிவிடுவார்கள், ரேயின் மகத்தான சினிமா அந்நாவலின் ஒரு பகுதியை மட்டுமே தொட்டுக்காட்டியிருக்கிறது. மூலநாவல் இன்னமும் ஆழமான தருணங்கள் வழியாகச்செல்லும் ஒரு படைப்பு. ஆனால் டி.டபிள்யூ.கிளார்க் மற்றும் தாராபாதா முக்கர்ஜி மொழியாக்கத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்த பாதேர்பாஞ்சாலி எந்த தாக்கத்தையும் உருவாக்கவில்லை. சமீபமாக ரிம்லி பட்டாச்சாரியாவின் நவீன மொழியாக்கம் வெளிவந்தது. அதுவும் ஐரோப்பிய வாசகர் நடுவே எந்த கவனத்தையும் பெறவில்லை.

இதேபோல மகத்தான இந்திய நாவல்களான தாராசங்கர்பானர்ஜியின் ‘ஆரோக்ய நிகேதனம்’ சிவராமகாரந்தின் ‘மண்ணும்மனிதரும்’ போன்ற பல நாவல்கள் ஆங்கிலத்தில் வெளிவந்தன. சொல்லப்போனால் இந்தியாவின் மிகச்சிறந்த செவ்வியல்நாவல்கள் அனைத்துமே ஆங்கிலத்தில் உள்ளன. பொதுவாக நல்ல மொழியாக்கங்கள் இல்லை என்றாலும் வங்க நாவல்களுக்கான மொழியாக்கங்கள் சிறப்பானவை. அவை எவையுமே ஐரோப்பிய வாசகர்களால் பொருட் படுத்தப் படவில்லை.

ஆனால் ஆர்.கெ.நாராயணனின் மால்குடி நாவல்கள், சல்மான் ருஷ்தியின் ‘நள்ளிரவின் குழந்தைகள்’ முதல் அருந்ததி ராயின் ‘சிறிய விஷயங்களின் கடவுள்’ வரை பெரும்பாலான இந்திய ஆங்கில நாவல்கள் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. ஒருநல்ல இந்திய வாசகன் ஒருபோதும் இந்நாவல்களை சிறந்த இந்தியநாவல்கள் என்று சொல்ல மாட்டான். ஆனால் இவையே உலக அளவில் இன்று இந்திய இலக்கியமாக அறியப்படுகின்றன

சிலவருடங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இந்திய இலக்கியம் என்பது இந்திய ஆங்கில இலக்கியமே என்றும் பிற பிரந்தியமொழி இலக்கியங்களுக்கு உலக இலக்கியத்தகுதி இல்லை என்றும் சொல்லி அது பெரிதும் விவாதிக்கப்பட்டது. இந்திய இலக்கியங்களுக்கு இன்னமும் நல்லமொழியாக்கமும் இன்னமும் நல்ல சந்தைப்படுத்தலும் தேவை என்றே பரவாக அதைப்பற்றிச் சொன்னார்கள்

பிரச்சினை அவற்றில் இல்லை. ஐரோப்பிய வாசகர்களின் ஏற்பியலில் உள்ளது. மேலே சொல்லப்பட்ட இந்திய ஆங்கில எழுத்துக்கள் ஆங்கில மொழியில் எழுதப்பட்டவை. அதைவிடமுக்கியமாக இந்திய மன அமைப்பை உதறி தங்களை ஐரோப்பிய மயமாக்கிக்கொண்டவர்களால் எழுதப்பட்டவை. இந்த இந்திய ஆங்கில எழுத்தாளர்களின் தனிவாழ்க்கையை கவனித்தாலே இது தெரியும். உயர்தர இந்திய ஆங்கில கல்விநிறுவனங்களில் கற்றவர்கள். ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ கல்வி கற்றவர்கள், அங்கே வாழ்ந்தவர்கள்.

இவர்களுக்கு ஐரோப்பிய ரசனை தெரியும். ஐரோப்பிய ரசனையே இவர்களுடையதும். ஆகவே இவர்கள் உருவாக்கும் நாவல்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சட்டென்று விருப்பத்துக்குள்ளாகின்றன. அவற்றின் இந்தியத்தன்மை என்பது ஒரு மேலோட்டமான நிறம் மட்டுமே. அவற்றை எழுதுபவர்களுக்கு ஒரு கார் கண்ணாடிவழியாக தெரியும் இந்தியவாழ்க்கையே அறிமுகம். அவற்றை வாசிப்பவர்களுக்கும் ஒரு சுற்றுலாப்பயணியின் கண்கள் மட்டுமே உள்ளன. அந்த நிலையில் அவர்கள் இந்தியாவைப்பற்றி உருவாக்கியுள்ள எந்த மேலோட்டமான பிம்பங்களையும் உடைக்காமல் அவர்களைச் சீண்டாமல் இந்த ஆக்கங்கள் உருவாக்கப்படுகின்றன.

எந்த ஒரு இலக்கியத்தையும் உண்மையில் அறிய அந்த இலக்கியம் வழியாக அது முன்வைக்கும் பண்பாட்டையும் வாழ்க்கையையும் நுணுகி அறிய வேண்டும். அவை நம் ரசனைக்காக சமைத்துப் பரிமாறப்படவேண்டுமென நினைக்கக் கூடாது. அதை நோக்கி நம் ரசனையை நாம்தான் வளர்த்து நகர்த்திக்கொண்டுசெல்ல வேண்டும். நாம் ஐரோப்பிய இலக்கியங்களையும் அமெரிக்க இலக்கியங்களையும் அத்தகைய ஆர்வத்துடன், ஆழ்ந்த கவனத்துடன், உழைப்புடன் மட்டுமே வாசித்து உள்வாங்கினோம். அந்த உழைப்பையும் கவனத்தையும் நமக்கு அளிக்க மேலைநாட்டு வாசகர்கள் தயாராக இல்லை. அந்த அளவுக்கு நம் மீது அவர்களுக்கு ஆர்வமும் இல்லை

அதேசமயம் ஐரோப்பாவும் அமெரிக்காவும் இலக்கியங்களுக்கான மாபெரும் சந்தை. அங்கே கவனிக்கப்பட்ட ஆக்கத்திற்கு இங்கு உருவாகும் சந்தையும் பிரம்மாண்டமானது. ஆகவே ஆப்ரிக்க, ஆசியநாடுகளில் இருந்து மேல்நாடுகளுக்காக, அவர்களின் ரசனைக்கேற்ப தயாரிக்கப்படும் இலக்கியங்கள் அதிகமாக உருவாகின்றன. அவையே ஆசிய, ஆப்ரிக்க இலக்கியங்களாக மேலைநாட்டு ஊடகங்களாலும் விமர்சகர்களாலும் ஏற்கப்படுகின்றன. அந்த முத்திரையை நாமும் மெல்லமெல்ல ஏற்க ஆரம்பிக்கிறோம்.

இந்த முத்திரையை பிடிவாதமாக நிராகரிப்பதில்தான் ஆசிய-ஆப்ரிக்க எழுத்துக்களின் எதிர்காலமே உள்ளது என்பதே உண்மை. இல்லையேல் சுயமில்லாமல், பிறருக்காக உருவாக்கப்பட்ட சுயம் கொண்ட, இலக்கியத்தையே நாம் நம்முடையதென கொண்டிருப்போம். இது ஒரு வகையான பண்பாட்டு ஆதிக்கம், உளவியல் ஆதிக்கம். இதற்கு எதிரான விழிப்புணர்வு இன்னமும் நம் அறிவுலகில் இல்லை

*

இரண்டு ஆப்ரிக்க நாவல்கள் கிட்டத்தட்ட ஒரேசமயம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. `சினுவா ஆச்சிபியின்’ `சிதைவுகள்’ (Things fall apart) என். மகாலிங்கம் மொழிபெயர்ப்பில் காலம் வெளியீடாக வந்தது. ஒஸ்மான் செம்பென் எழுதிய `ஹால’ (Xala) எஸ்.பொன்னுத்துரை மொழி பெயர்ப்பில் தமிழினி வெளியீடாக வந்தது. இரண்டுமே இலக்கியப்படைப்புகள் என்ற முறையில் பலவீனமானவை. ஆயினும் இவ்விரு படைப்புகளும் நமது இலக்கியத்தை நாம் ஆராய்ந்தறிவதற்கு உதவி செய்யக்கூடியவை.

`சிதைவுகள்’, `ஹால’ இரண்டு நாவல்களுமே நம்பமுடியாத அளவு புகழும் அங்கீகாரமும் பெற்ற படைப்புகள். அங்கீகாரம் ஐரோப்பாவில்தான். அதிகம் என்பதை கூடவே சேர்த்துக் கொள்ளவேண்டும். இந்த அங்கீகாரத்திற்குக் காரணம் என்ன என்று ஐரோப்பியச் சூழலை நேரில் அறியாமல் விளக்க முற்படுவது பிழையாகும். எனினும் இப்படைப்புகளை வைத்து ஒரு சில விஷயங்களைக் கூறமுடியும்.

ஓஸ்மான் செம்பெனின் நாவல் ஹால மிக எளிய ஒரு `முற்போக்கு’ கருத்தில் இருந்து தொடங்குகிறது. `சக மனிதனை, தன் சொந்த சகோதரனை, ஏய்த்துப் பிழைக்கும் முதலாளி வர்க்கம் உண்மையில் பேடி வர்க்கமே’ என்று அதை ஒரேவரியாகச் சுருக்கலாம். ஹால என்றால் சாபம் என்று பொருள்.

வெள்ளை முதலாளித்துவத்தின் எடுபிடிகளாக செனகல் நாட்டின் பொருளாதார கட்டுமானத்தை ஆக்ரமித்திருக்கும் வர்க்கத்தின் பிரதிநிதி அல்ஹாஜி அப்துல் காதிர் பாய். ஒரு பெரும் வணிக ஒப்பந்த வெற்றிக்குப் பின்னர் அதைக் கொண்டா அவர் ஒரு விருந்தை ஏற்பாடு செய்கிறார். அதன் உச்சகட்டமாக அவர் மூன்றாம் திருமணம் செய்தபோது அன்றிரவில் தனக்கு ஆண்மையில்லாமையை உணர்கிறார்

அப்துல் காதிர் பாய் பலவிதமான முயற்சிகள் செய்தும் ஆண்மை திரும்பக் கிடைக்கவில்லை. ஆப்ரிக்க மந்திரவாதிகள் பலரை தொடர்புகொள்கிறார். இறுதியில் ஆண்மையைத் திரும்பப் பெற ஒரு `வைத்தியம் கூறப்படுகிறது. அவரால் வியாபார நிமித்தம் ஒழிக்கப்பட்ட பழங்குடி இனம் ஒன்றில் பிரதிநிதிகள் அவர்மீது காறி உமிழ அவர் நிர்வாணமாக அவர்கள் முன் நிற்கவேண்டும். அந்தச்சடங்குடன் நாவல் முடிகிறது.

நாவல் எதையுமே வாசகக் கற்பனைக்கு விட்டு வைக்கவில்லை `ஏழைகளை சுரண்டி வாழ்பவர்கள்’ என்று குரல்கள் முழக்கமிடுகின்றன. `உன்னுடைய கடந்த காலச் சொத்துகள் ஏமாற்றுவதன் மூலம் திரட்டபட்டவை’ என்று பிச்சைக்காரர்கள் பிரசங்கம் செய்கிறார்கள். கு.சின்னப்பபாரதி அல்லது மேலாண்மை பொன்னுச்சாமி நாவல்களை விடச் சாதாரணமான ஆக்கம் இது. அவர்கள்கூட இன்று நேரடியாக கோஷங்களை எழுத கொஞ்சம் அஞ்சுவார்கள்.

இந்நாவலின் பலவீனம் இரண்டு. ஒன்று முன்கூட்டியே உருவாக்கப்பட்ட எளிய முற்போக்கு கருத்தையே கச்சிதமாக வந்தடையும் விதத்தில் மொத்த நாவலும் அமைந்துள்ளது. இரண்டு ஆப்ரிக்காவின் பண்பாட்டுத் தனித்துவம் கதையிலோ, படிமங்களிலோ, மொழியிலோ எங்குமே தென்படவில்லை. ஆப்ரிக்கா பற்றி இதில் வரக்கூடிய தகவல்களைக்கூட ஐரோப்பியநகரம் ஒன்றில் இருந்து எளிதில் திரட்டிவிடலாம்.

ஓர் ஊரைப்பற்றி கேள்விப்பட்டு நாம் அங்கே சென்றால் நுட்பமான ஓர் அதிர்ச்சி நமக்கு ஏற்படும். அது யதார்த்தத்தின் விரிவு நமக்கு அளிக்கும் அதிர்ச்சி. அதேதான் ஒரு தேசத்தைப்பற்றி எளிமையான கேள்விஞானத்துடன் அந்நாட்டின் இலக்கியத்தை வாசித்தால் உருவாவது. ஆனால் ஹாலவை வாசிப்பவர்களுக்கு அது உருவாவாகாது. ஒரு சாதாரண சுற்றுலாப்பயணியின் மேலோட்டமான பதிவையே இந்நாவலும் அளிக்கிறது. இதன் ஆப்ரிக்கத்தனம் ஒரு பாவ்லாதான்.

*

இஸ்லாமிய மீனவக்குடும்பத்தில் செனகல் நாட்டில் பிறந்த ஓஸ்மேன் செம்பேன் ஆப்ரிக்காவின் முக்கியமான இலக்கியவாதியாகவும் ஆப்ரிக்க சினிமாவின் பிதாமகராகவும் கருதப்படுகிறார். அவரது தாய்மொழி வொலோ·ப் [Wolof ] செம்பென் அரபுமொழியும் ·ப்ரெஞ்சும் பயின்றார். கல்வியை முடிக்காமல் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார். இரண்டாம் உலகப்போரில் பிரெஞ்சுக்காரர்களுக்காக போரிட்டார்.

1947ல் பிரான்ஸ் சென்ற செம்பேன் பாரீஸிலும் மார்சேல்ஸிலும் வேலைபார்த்தார். அங்கே பிரெஞ்சு தொழிற்சங்க இயக்கத்தில் ஆர்வம் கொண்டார். பின்னர் கம்யூனிஸ்டுக்கட்சியில் சேர்ந்தார். இந்தக்காலகட்டத்தில்தான அவருக்கு இலக்கிய ஆர்வம் உருவாகியது. ஆரம்பத்தில் பிரெஞ்சில்தான் எழுதினார். 1956ல் அவரது முதல் பிரெஞ்சுநாவலான Le Docker Noir வெளிவந்தது. அன்று பரவலாக பேசப்பட்ட சோஷலிஸ யதார்த்த பாணிநாவல் அது.

செம்பேனின் ஹால [Xala] 1973ல் வெளிவந்தது.எழுத்தாளனின் அனுபவதளத்தில் இருந்தோ அல்லது அவனுடைய அடிப்படையான தேடலில் இருந்தோ பிறக்காமல் அவனது அரசியல்நிலைபாட்டில் இருந்து உருவான ஆக்கம் இது. ஓஸ்மான் செம்பேனுக்கு செனெகல் நாட்டு முதலாளி வர்க்கத்தைப்பற்றி என்ன சொல்வதற்கிருக்கிறது என்பதை மட்டுமே முன்வைக்கும் ஆக்கம்.

இலக்கியப்படைப்புகள் இரண்டுவகையில் முளைவிட்டு வளர்கின்றன. ஒரு கருத்துவிதை எழுத்தாளனின் மனதில் விழுந்து முளைப்பது ஒரு வகை, ஓர் உணர்வு அல்லது படிமம் எழுத்தாளனின் மனதில் விழுந்து முளைப்பது இரண்டாம் வகை.

இருவகையிலும் சிறந்த ஆக்கங்கள் உருவாவதுண்டு. கருத்து எப்போதுமே பிரக்ஞை சார்ந்த ஒன்றுதான். ஆனால் அது படைப்பாக விரிவடையும் போது அதில் ஆழ்மனதின் படிமங்களும் உள்ளுணர்வுகளும் படிந்து மெல்ல மெல்ல படைப்பு ஓங்கி எழக்கூடும், முக்கியமான இலக்கியப்படைப்பு ஒன்று உருவாகவும் கூடும், தாமஸ் மன் தனது பெரும் நாவல்களை கருத்துக்களாகவே அடைந்தார் என்று கூறியிருக்கிறார். ஆனால் ஆழ்மனதைச் சேர்ந்த ஒரு படிமம் ஒரு கனவு போல பிரக்ஞையை அதிர வைத்தபடி ஒரு படைப்பாளியில் விழுந்து அவனது கல்வித்திறனையும் கற்பனைத்திறனையும் முழுக்கப் பயன்படுத்திக்கொண்டு வளர்வதாகவே பெரும் நாவல்கள் காணப்படுகின்றன.

கருத்தில் தொடங்கும் ஒரு நாவல் அக்கருத்தைக் கடந்து சென்றால் மட்டுமே முக்கியமான நாவலாகிறது. அதாவது அது எதைக் `கூறவருகிறதோ’ அதைவிடப் பெரிய ஒன்றை அது தன் பயணத்தின் தீவிரம் வழியாக சென்றடையவேண்டும். அந்நிலையில் அந்த `முதல் கருத்து’ ஒரு தூண்டுதலாக மட்டுமே செயல்படுகிறது. ஆழ்மனதில் புதைந்துள்ள தரிசனம் ஒன்றை பிரக்ஞைக்கு எழுப்பித்தரும் ஒரு குறியடையாளமாக மட்டும் அது செயல்படுகிறது.

இதை இவ்வாறு தொகுத்துக் கூறலாம். ஒரு படைப்பில் பிரக்ஞையால் அடையப்பெற்ற ஒன்று இறுதி விளைவாக இருக்கும் பட்சத்தில் அப்படைப்பு முக்கியமான படைப்பாக ஆகவில்லை என்றே பொருள். படைப்பு என்பது அதன் அனைத்து அர்த்தத்திலும் ஆழ்மனதில் முத்துக் குளித்தலேயாகும். ஓர் ஆழ்மனம் என்பது சமூகப்பொதுமனமே, மானுடமேயாதலால் அது வரலாறும் கூடத்தான்.

ஒரு கலாச்சாரத்தின் `உள்ளே’ இருக்கும் படைப்பாளியில் மட்டுமே அக்கலாச்சாரத்தின் சாராம்சம் ஆழ்மனமாக வெளிப்பாடு கொள்கிறது. சுற்றுலாத்தனமான ஈடுபாடும்சரி, சீர்திருத்தப்பிரக்ஞையும் சரி `வெளியே’ உள்ள படைப்பாளிகளின் இயல்புகளாகவே உள்ளன. இவ்வாறு வெளியே உள்ள படைப்பாளிகள் ஒரு சமூகத்தைச் சார்ந்து `கருத்துக்களை’ உருவாக்கிக் கொள்கிறார்கள். அக்கருத்துக்களில் இருந்து தொடங்கி நாவல்களை எழுதுகிறார்கள். ஆழ்மனத்தின் எந்தவிதமான பங்காற்றலும் இல்லாமலேயே அப்படைப்புகள் அக்கருத்துகளை விளக்கி, வலியுறுத்தி, நின்று விடுகின்றன.

ஆகவே அக்கருத்துக்கள் எத்தனை முக்கியமானவையாக இருப்பினும், எத்தனை அனுதாபத்துடனும் ஈடுபாட்டுடனும் அச்சமூகத்தை அணுகினாலும், அவை படைப்புரீதியாக பொருட்படுத்தத் தக்கவை அல்ல என்றே சொல்வேன். ஏனெனில் முன்பே குறிப்பிட்டது போல படைப்பின் நோக்கம் இத்தகைய கருத்தை முன்வைப்பது அல்ல. மேலும் அக்கருத்து அச்சமூகத்திற்கு வெளியே உள்ள மதிப்பீடுகளை அச்சமூகம் மீது போடுவதன் விளைவாக உருவாவதும்கூட. ஹால அப்படிபப்ட்ட அன்னியரால் எழுதப்பட்ட ஆக்கம்.

ஆனால் ஐரோப்பிய, அமெரிக்க விமர்சகர்களால் ஆப்ரிக்காவின் ஆகச்சிறந்த திரை இயக்குநராகவும் ஆப்ரிக்க இலக்கியத்தின் மிகச்சிறந்த முன்னுதாரணமாகவும் ஓஸ்மான் செம்பேன் முன்னிறுத்தப்படுகிறார். அவரைப்பற்றிய ஐரோப்பிய-அமெரிக்க விமரிசகர்களின் குறிப்புகள் ஆச்சரியத்தையும் சட்டென்று எரிச்சலையும் உருவாக்குகின்றன. இந்த விமர்சகர்கள் மறைமுகமாக ஆசிய-ஆப்ரிக்க எழுத்தாளர்களிடம் சொல்வது இதைத்தான் ‘உன்னால் இவ்வளவுதான் முடியும். நீ ஆழமாக ஒன்றும் எழுதவேண்டாம். எனக்குப்புரிந்த வகையில் உன்னுடைய நாட்டு சமூக சித்திரங்களை எழுதிக்காட்டு, போதும்’

ஆப்ரிக்க வாழ்வு குறித்த ஆர்வம் உடைய, மேல்நாட்டுப் பார்வை கொண்ட `உயர் சராசரி’ வாசகர்களுக்காகவும் மேட்டிமைத்தன்மைகொண்ட மேலைநாட்டு விமர்சகர்களுக்காகவும் எழுதப்பட்டு, தொழில்முறை எடிட்டர்களால் நன்கு செப்பனிடப்பட்ட படைப்புகள் ஹாலவும் சிதைவுகளும். ஐரோப்பியக் கறுப்பின மக்களுக்கும், ஆப்ரிக்கா மீது பற்று கொண்ட பிற ஐரோப்பியர்களுக்கும் இவை மிகச்சரியாக மனதில் இடம்பிடிப்பவையாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இருந்துகொண்டு பார்க்கையில் இவற்றில் ஆப்ரிக்காவின் கருமைச்சாயல் மேலோட்டமாகப் படிய நேர்ந்த ஐரோப்பாவே தெரிகிறது.

இவற்றின் துல்லியவடிவம், கனகச்சித மொழி ஆகியவை காம்யூ, ஹெமிங்வே நாவல்களை நினைவூட்டுகின்றன. சினுவா ஆச்சிபியிடம் உள்ளது ஆப்பிரிக்கனின் வீழ்ச்சிகண்டு வருந்தக்கூடிய, அன்னியனாகிய, ஒரு சமூகவியலாளனின் பார்வை. ஒஸ்மான் செம்பெனுடையது அன்னியனாகிய, இடதுசாரிப் பார்வை கொண்ட அரசியல் செயலாளனின் பார்வை. இவ்விரு பார்வையுமே இங்கு நமக்கும் பரிச்சயமானவையே.

சினுவா ஆச்சிபி ஓஸ்மான்செம்பேன் இருவருமே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வாழ்ந்தவர்கள். ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் எழுதியவர்கள். அவர்களை ஆப்ரிக்க எழுத்தாளர்கள் என்பதே ஒருவகை வன்முறை. உண்மையான ஆப்ரிக்க எழுத்தாளர்களை மூர்க்கமாக மறைக்கும் உத்தி அது. அவர்கள் எழுதுவது வெள்ளை வாசகனுக்காக. ஆகவேதான் சினுவாஆச்சிபி ஒவ்வொரு சடங்கையும் நுட்பமாக வர்ணித்து காட்டுகிறார் – அவற்றின் உணர்வுத்தளத்தையோ குறியீட்டுத்தன்மையையோ இம்மிகூட அவர் பகிர்ந்துகொள்ளவில்லை.

ஒஸ்மான் செம்பெனுக்கு உண்மையில் ஆப்ரிக்கா ஒரு எளியகதைப்புலம் மட்டுமே, `முற்போக்கு’ கருத்து மட்டுமே அவருக்கு முக்கியம். வேறெந்த வாழ்க்கைநுட்பங்களையும் அவர் காட்டுவதில்லை. எல்லா கதாபாத்திரங்களும் கருத்துக்களின் பிரதிநிதிகளாக தட்டையாக உள்ளனர். ஆப்ரிக்கப் பழங்குடிக் கதைகளில், வோல் சொயிங்காவின் பிற்கால நாடகங்களில், நாம் காணும் அசலான ஆப்ரிக்க அம்சம் இவற்றில் இல்லை.

அருந்ததி ராயை அல்லது ரஷ்டியை நிராகரிக்கும் அதே வேகத்துடன் இவ்வகை `ஆப்ரிக்க’ படைப்புகளையும் நாம் நிராகரிக்க வேண்டியுள்ளது. அருந்ததி ராய் இந்தியப் படைப்பாளி அல்ல, செம்பென் ஆப்ரிக்கப் படைப்பாளியுமல்ல. அருந்ததி ஐரோப்பிய ரசனைக்கு உகந்தவராக இருப்பது போலவே செம்பெனும் ஐரோப்பிய நாவல்களால் கட்டமைக்கப்பட்ட நமது ரசனைக்கு உரியவராக இருக்கிறார். அந்த உடன்பாட்டைந் ஆம் ஐயப்படவேண்டும்.

உண்மையான ஒரு ஆப்பிரிக்க படைப்பு நம்மை சிறிது சிரமப்படுத்தக்கூடும். நம் ரசனையை பிதுக்கி வளைத்து உருமாற்றிய பிறகு மட்டுமே. அவற்றுள் நுழைவது சாத்தியமாகவும் கூடும். ஆனால் அதுவே ஆப்ரிக்காவை அறிய சிறந்த வழி. தன் ரசனையையே உலகமும் பிரதிபலிக்க வேண்டும் என்ற ஐரோப்பிய அகங்காரம் நம்மில் உருவாகக் கூடாது. ஆப்ரிக்காவின் தொன்மைமிக்க பண்பாட்டையும் வாழ்வையும் அறிய நமக்கு இன்று தடையாக இருப்பவை இம்மாதிரியான நாவல்களேயாகும் இத்தகைய ஐரோப்பிய சமையல்களைத் தாண்டிச் சென்றே நாம் ஆப்ரிக்காவை, உலக இலக்கியத்தை, அறிய முடியும்.

நாம் தாண்ட வேண்டியது எதை, எப்படி என்று அறிய இவற்றைப் படிக்கலாம். ஹால அவ்வகையில் (மட்டுமே) முக்கியமானது.

[ஹால _ ஓஸ்மான் செம்பென்; தமிழில் _ எஸ். பொன்னுத்துரை; தமிழினி பிரசுரம் வெளியீடு; ]

முந்தைய கட்டுரைஇணைப்புகள்,கடிதங்கள்
அடுத்த கட்டுரைநீலகண்டன் அரவிந்தன்