சாதியுடன் புழங்குதல்…

அன்புள்ள ஜெயமோகன்,

நீங்கள் ‘சாதி பேசலாமா?’ என்றகட்டுரையில் சொல்லியிருந்த விஷயங்கள் எனக்குக் குழப்பத்தை அளித்தன. ஏன் நாம் சாதியைப்பற்றிப் பேசவேண்டும் என்று தெரியவில்லை. ஒருவருடைய சாதியைப்பற்றி நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? தெரியாமல் அல்லது அதைப்பற்றி அறிந்துகொள்ளாமல் வாழ்வதுதானே சிறந்த வழிமுறையாக இருக்க முடியும்? நான் எவருடைய சாதியைப்பற்றியும் தெரிந்துகொள்வது இல்லை. அதைப்பற்றிய அக்கறையும் எனக்கு கிடையாது. யாரிடமும் நான் சாதியைச் சொல்வதும் இல்லை. நீங்கள் சாதியை தெரிந்துகொள்ளவேண்டும் என்று சொல்வதுபோல இருக்கிறது. அதனால்தான் இந்த சந்தேகம்

விஜய் மணிகண்டன்

அன்புள்ள விஜய்,

உங்கள் கடிதத்தின் மனநிலை, நோக்கம் இரண்டும் எனக்குப் புரிகிறது. சாதியைப்பற்றிய அக்கறையே இல்லாமல் வாழக்கூடிய வாழ்க்கை என்பது நல்லதுதான். அது ஓர் இலட்சிய வாழ்க்கையும்கூட. ஆனால் அது எந்த அளவுக்கு நடைமுறைச் சாத்தியம் என்றுதான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். ‘நான் யாருடைய சாதியையும் தெரிந்துகொள்ள முயல்வதே இல்லை’ என்று அப்பாவித்தனமாக அல்லது சுய ஏமாற்றாகச் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அது நம்முடைய ஊரில் சாத்தியமே அல்ல.

அப்பட்டமாக்ச் சொல்கிறேனே, குறைந்தபட்சம் நம் சூழலில் ஒருவர் தலித்தா என்று தெரிந்துகொள்ளாமல் பழகுவது என்பது சாத்தியமேயல்ல. சாத்தியமல்ல என்பதுடன் அது அபாயமும்கூட. தலித்துக்களில் தான் ஒரு தலித் என்ற சுய உணர்ச்சி இல்லாதவர்கள் அனேகமாக இல்லை. அந்த சுய உணர்ச்சி நம் மரபின் சென்றகால இழிமுறைகளில் இருந்து அவர்களிடம் ஏற்றப்பட்ட ஆழமான தாழ்வுணர்ச்சியால் ஆனது. இன்றைய பொதுச்சூழலில் சாதாரணமாகச் சொல்லப்படும் சொற்கள்கூட அவர்களின் உணர்ச்சிகளை தீவிரமாகப் புண்படுத்திவிடும். அப்படி அவர்களைப் புண்படுத்துவதென்பது அநீதியானது, நட்புகளை உடைக்கக்கூடியது, பொது அமைப்புகளில் பல சங்கடமான நிலைமைகளை உருவாக்கக்கூடியது. ஆகவே நம்சூழலில் அத்தனை பேரும் இந்தக் கவனத்துடன் தான் இருந்துகொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

என்னுடைய அனுபவம் ஒன்று. பலவருடங்களுக்கு முன் எனக்கு நெருக்கமான இலக்கிய நண்பர் ஒருவர் இருந்தார். பறையர் சாதியைச் சேர்ந்தவர். அது என்னுடைய பிரக்ஞையில் இருந்தது இல்லை. திடீரென என்னிடமிருந்து முற்றாக விலகிச் செல்ல ஆரம்பித்தார். நட்பை நீட்டிக்க நான் பலவேறு வழிகளில் முயன்றேன். அவரது மனக்குறை என்ன என்று விசாரித்தேன். நான் செய்த தவறு என்ன என்று அறிய முயன்றேன்.பலனில்லை. ஆழமான மனச்சோர்வுடன் நானும் விலகிக்கொண்டேன். தீவிர இலக்கியமறிந்த இரண்டே நண்பர்களில் ஒருவரை இழப்பது அந்தவயதில் பெரிய சோகம்.

நான் அந்த ஊரில் இருந்து மாற்றலாக வந்து சிலவருடங்களுக்கு முன் பழைய சங்கத்தோழர் ஒருவர் பேசும்போது நான் அந்த இலக்கிய நண்பரின் மனச்சிக்கலுக்குக் காரணத்தைச் சொன்னார். நான் அவரை வைத்துக்கொண்டே வேறு ஒருவரிடம் அவரது சாதியைச் சொல்லி இழிவாகப்பேசினேன் என்றும் அது அவரது மனதை புண்படுத்திவிட்டது என்றும் அநத இலக்கிய நண்பர் தோழரிடம் ஒரு குவளை மதுவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது சொல்லியிருக்கிறார்

நான் அந்த கடைசி உரையாடலை சொல்சொல்லாக நினைவுகூர்ந்தேன். ஏனென்றால் அத்தனைநாளும் அதை அத்தனை முறை மனதில் ஓட்டிக்கொண்டிருருந்தேன். என்ன பிழை நிகழ்ந்தது என்று துருவித்துருவி ஆராய்ந்துகொண்டிருந்தேன். நடந்தது இதுதான். நான் அன்றிரவு அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது என் அப்பாவின் குணநலன்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். அப்பா நிலப்பிரபுத்துவகால முரட்டுத்தனமும் நிலப்பிரபுத்துவகால அறமும் ஒருங்கே அமைந்த ஆத்மா. ஒருவன் வீட்டுக்குள் புகுந்து திருடிவிட்டான். அவனை கையும் களவுமாக பிடித்து தென்னையில் கட்டி வைத்திருந்தார்கள். ‘எந்தினுடா மோஷ்டிச்சு? பற நாயிண்டே மோனே’ என்று அப்பா சொன்னதாக நான் சொன்னேன். அவன் ‘பசிக்காக’ என்றதும் சோறுபோட்டு துரத்திவிட ஆணையிட்டார்.

நண்பரை புண்படுத்திய சொல் என்ன என்று சட்டென்று கண்டுகொண்டேன். அப்பா சொன்னதை நான் அப்படியே மலையாளத்தில் அவரது உச்சரிப்பு மற்றும் முகபாவனையுடன் சொன்னேன். மலையாளத்தில் ‘பற நாயிண்டேமோனே’ என்றால் ‘சொல்லுடா நாயின் மகனே’ என்று அர்த்தம். பறைதல் என்றால் சொல்லுதல் .[அது தூய பழந்தமிழ்ச் சொல். பறையர்கள் எட்டாம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் முரசு அறையக்கூடிய, விழாக்களிலும் கோயில்களிலும் மங்கலக் கௌரவம் கொண்ட உயர்சாதியினர். அதற்கு தொல்லாதாரங்கள் உள்ளன]

நான் சொன்னவற்றை விளக்கியதும் தோழர் ‘அடாடா,நான் அவனிடம் சொல்கிறேன்’ என்றார். அதன்பின் சிலநாட்கள் கழித்து அந்த இலக்கியநண்பர் என்னைக்கூப்பிட்டு மன்னிப்பு கோரினார். மீண்டும் உற்சாகமாக பேச முயன்றார். சில நாட்கள் பேசினோம். ஆனால் நட்புகளைப்பொறுத்தவரை ஒன்றுண்டு, ஒரு நட்பு உடைந்து கொஞ்ச காலம் ஆனால் இரு சாராருமே வாழ்க்கை போக்கில் வெகுதூரம் விலகிச் சென்றிருப்போம். மீண்டும் ஒட்ட முடியாது.

கடந்த இருபதாண்டுக்காலமாக தொழிற்சங்கம், இலக்கியம் இரு தளங்களிலும் புதியவர்களைச் சந்தித்தபடியே இருக்கிறேன். சாதியை அறிந்துகொள்ளாமல் ஒருபோதும் நெருக்கமான உரையாடல்களை நிகழ்த்த முடியாது. சாதாரணமான வணிக,அலுவலக பேச்சுகளுக்கு அதை தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. ஒட்டாமல் மேலோட்டமாக உரையாடி வேலைகளைச் செய்துகொள்ளலாம். எளிமையான முகமன் பேச்சுக்களைபேசி வருடக்கணக்காக தொடரலாம். ஆனால் தொழிற்சங்கம் போன்ற தனிப்பட்ட உறவு தேவையான அடித்தள வேலைகளில் அது முடியாது. எப்போது எந்தச் சொல் எங்கே தைக்கும் என்றே தெரியாது. சொற்களின் மீது எப்போதும் கவனம் தேவை, அதற்கு ஆளை தெரிந்திருக்கவேண்டும்.

தலித்துக்களைப் பொறுத்தவரை இன்று பிற அனைவருமே தங்களை இழிவாக நினைக்கிறார்கள், இழிவுபடுத்தும் மனநிலையுடன் பேசுகிறார்கள் என்ற எண்ணம் கொண்டவர்களே மிகமிகப் பெரும்பாலானவர்கள். ஆகவே அவர்கள் நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் உள்ளூர அலசிப்பார்த்தபடியே இருக்கிறார்கள். புண்பட்டால் அதை வெளியே காட்டிக்கொள்வதுகூட இல்லை. அதேசமயம் பிற்பட்ட சாதியினர் புண்பட்டால் உடனே குரல் உயரும், அடிதடி வரை போகக்கூடும். ஆகவே உரையாடலில் சுதந்திரம் எடுக்கும் நிலையில் வேறுசாதியினர் இல்லை என்பதே உண்மை. என் நண்பர் வட்டம் என்பது மிகமிகப்பெரிது. மிகநெருக்கமானவர்களிடமே அந்த கவனத்தை கலைத்துக்கொண்டு சுதந்திரமாக இருக்க முடியும். ஆனால் நாலைந்து தலித் நண்பர்களே எனக்கு அந்த சுதந்திரத்தை எடுக்கும் நிலையில் இருக்கிறார்கள்.

ஏன், நம் தலித் எழுத்தாளர்கள் அரசியல் செயல்பாட்டாளர்கள்கூட அந்த எச்சரிக்கை மனநிலையில்தான் எப்போதும் இருக்கிறார்கள் என்பதை எழுத்துக்களை படித்தாலே தெரிந்துகொள்ளலாம். பிற அனைவரையுமே அவர்கள் ஐயப்படுகிறார்கள். பிறசாதியினர் என்ன சொன்னாலும் அதை இழிவுபடுத்தலாக , தலித் விரோதமாக அவர்கள் புரிந்துகொள்ள தயராக இருக்கிறார்கள்.ஆதரித்தாலும் எதிர்த்தாலும். நம் முற்போக்கு தலித் ஆதரவாளர்கள் அனைவருமே அந்த குற்ற்ச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்கள். சும்மா இருந்தால் அதை மௌனம் என்ற குற்றமாகச் சொல்லக்கூடும்.

ஆச்சரியம் என்னவென்றால் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களாக உணராத சாதிகளே இல்லை என்பதுதான். தலித் சாதிகள் அப்படி உணர்வதற்கு ஒரு வரலாற்றுப்பின்புலம் உள்ளது. தமிழ்நாட்டின் மொத்த அரசியல்-சமூக-பொருளியல் ஆதிக்கத்தை கையில் வைத்திருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தங்களை ஒடுக்கப்பட்டவர்களாகவே சொல்வார்கள். அதற்காக ஒரு பிராமண வெறுப்பை உருவாக்கி வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.

பிராமணர்கள் கிட்டத்தட்ட தலித்துக்கள் அளவுக்கே புண்பட்ட மனநிலையில் இருக்கிறார்கள் என்பது இன்னொரு ஆச்சரியம். மொத்த தமிழகமும் தங்களை வெறுப்பதாகவும் வேட்டையாடுவதாகவும் அவர்கள் நினைக்கிறார்கள். தாங்கள் அனைத்து ஊடகங்களிலும் வரலாறுகளிலும் அவமதிக்கப்படுவதாகவும் அதை தமிழகமே வேடிக்கைபார்ப்பதாகவும் சொல்கிறார்கள். தலித்துக்களைப்போலவே சிறு சொல்கூட பிராமணர்களை ஆழமாக புண்படுத்திவிடும்.

என் அனுபவத்தில் நான் இந்த புண்படுத்தல் சிக்கலுக்கு உள்ளானவர்களில் அனேகமாக பெரும்பான்மையினர் பிராமணர்களே. நம்ப மாட்டீர்கள் ஜைமினியின் மீமாம்ச சூத்திரங்களைப்பற்றி நான் சொன்ன ஒரு கருத்துக்காக என் நட்பையே முறித்துக் கொண்ட நெடுநாள் நண்பர் ஒருவர் உண்டு. சிலப்பதிகார மணமுறைகளைப்பற்றி பேசிக் கொண்டிருந்தபோது நான் ”சமணனாகிய கோவலன் எப்படி ‘மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட’ கண்ணகியை மணந்தான்?” என்று சொன்னதைக் கேட்டு பார்ப்பான் என்ற ‘வசை’ச்சொல்லை நான் வேண்டுமென்றே பயன்படுத்தினேன் என்று எண்ணி புண்பட்டு விலகிய நண்பரும் உண்டு.

பிள்ளைமாரும் முதலியாரும் தங்களை அரசியலதிகாரமும் நில உரிமையும் பறிக்கப்பட்டவர்களாக நினைக்கிறார்கள். அத்தனை சிறிய சாதிகளும் ‘சிறுபான்மை உளச்சிக்க’லில் இருக்கிறார்கள். முஸ்லீம்களோ இந்தியாவில் ‘வாழ்வுரிமை’ கோரி மாநாடுகள் நடத்துகிறார்கள். ஒருமுறை ஒரு நண்பர்வட்டத்தில் பேசும்போது நான் சொன்னேன் ”பேசிவரும்போது தமிழ்நாட்டில் ஒடுக்கப்படாத ஒரே சாதிதான் இருக்கிறது போல் தோன்றுகிறது — நாயர் சாதி !” டீக்கடை வைத்து சந்தோஷமாக இருக்கிறார்கள்.

ஆகவே சாதிபேசாமல் இருப்பது என்பது யாரிடமும் நெருக்கமாகப் பேசாமலே இருப்பது மட்டுமே. எல்லாருக்கும் அது சாத்தியமில்லை. ஆனால் தமிழகத்து மனச்சிக்கல் என்னவென்றால் சாதி சர்ந்த இத்தனை உளச்சிக்கல் இருந்தாலும் பொதுவெளியில்சாதி என்பது ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற பாவனையை அவர்கள் விரும்புகிறார்கள் என்பதுதான். ஆகவே சாதியைப்பற்றி பேசுவது பெரும்பாலானவர்களுக்கு பிடிப்பதில்லை. அது ஒரு பெரும்பான்மை நடைமுறை என்பதனால் அதைத்தான் கடைப்பிடித்தாகவேண்டும்.

ஆனால் சாதி என்ற அடையாளத்தை தொடர்ந்து அந்தரங்கமாகவேனும் பரிசீலனைசெய்துகொண்டிருப்போம், பரிகாசம் செய்துகொண்டிருப்போம். நெருக்கமான நண்பர்களிடமாவது அந்த பாவனைகளையும் இடக்கரடக்கல்களையும் கைவிட்டு பழக முடியுமா என்று முயல்வோம். நான் சொல்வது அவ்வளவே

ஜெ

முந்தைய கட்டுரைபருவமழைப் பயணம்
அடுத்த கட்டுரைகுப்பைத் தொட்டியும் சிம்மாசனமும்