உலோகம் – 13

டெல்லியின் ஏதேனும் ஒரு நட்சத்திர ஓட்டலில்தான் பொன்னம்பலத்தார் என்னுடன் செல்வது வழக்கம். அனேகமாக புல்வெளியில் அல்லது அபூர்வமாக நீச்சல்குளத்தின் அருகே அமர்ந்துகொண்டு ஒரேயொரு ஸ்காட்ச் குடிப்பார். அதுவும் மிக மெதுவாக. அவர் அங்கே வருவதே மனிதர்களை வேடிக்கை பார்க்கத்தான் என்று தோன்றும். ஆனால் மிகப்பொதுவாக கூட்டத்தைத்தான் அவர் வேடிக்கைபார்த்தார். நீச்சல்குளத்தருகே அமர்ந்திருக்கும்போதுகூட ‘வடிவான பெட்டையள்’ என்று சொல்லிவிட்டு கவனமில்லாமல் இருப்பார். மனிதர்களைக்கூட கூர்ந்து கவனிப்பதில்லை என்று பிறகு பட்டது. தான் ஒரு சுதந்திர மனிதன் என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்ள அவர் ஆசைப்படுகிறார் அவ்வளவுதான் என்று தோன்றியது.

 

 

ஓபராய் ஓட்டலின் ரெட் எக் என்று பெயருள்ள முட்டைவடிவமான சிறிய உள்ளறை மதுச்சாலைக்கு நாங்கள் அன்று சென்றோம். அவருடன் வந்திருந்த காவலர்கள் பிரிந்து வெவ்வேறு இடங்களில் சென்று அமர்ந்துகொண்டார்கள். பொன்னம்பலத்தார் வழக்கமான ஸ்காட்சுக்குச் சொன்னார். கூடவே சாப்பிட ஆப்பிள்துண்டுகள். ஆப்பிளுடன் குடித்தால் ஈரலுக்குக் கெடுதலில்லை என்று அவரிடம் சொல்லியிருந்தார்கள். அவர் மாதம் இருமுறை குடிக்கும் இருநூறு மில்லி ஸ்காட்சினால் அவரது சுண்டு விரலுக்குக் கூட கெடுதல் இல்லை என்று சொல்ல பலமுறை விரும்பி அடக்கிக் கொண்டேன். அவருக்கு தன் உடல்நலம் பற்றி பதற்றம் இருந்தது. இரவில் கொஞ்சம் அஜீர்ணம் என்றால் இதயம் அடைக்கிறது என்று பயப்படுவார். காலையில் ஒரே பக்கமாகப் படுத்து கை கொஞ்சம் இறுக்கமாக இருந்தால் பக்கவாதமா என்று சந்தேகப்படுவார். விதவிதமான மருத்துவநூல்களை படுக்கை அருகே வைத்திருந்து படுப்பதற்கு முன்னால் அவற்றை படிப்பார்.

படிக்கப் படிக்க அந்த நோய்களெல்லாமே தனக்கு இருப்பதாக அவருக்குத் தோன்றிவிடும். காலையில் எழுந்ததுமே என்னிடம்தான் கேட்ப்பார் ”சார்லஸ்,மாரடைப்புக்கு முன்னாலே வேர்க்குமெண்டு சொல்றவங்கள். வேர்க்காமல் மாரடைப்பு உண்டு தெரியுமா?” என்றார். ”ஓம், சைலண்ட் அட்டாக்க்குன்னு கேட்டிருக்கிறன்” என்பேன். ”அது வலியில்லாத அட்டாக். இது வியர்வை இல்லாத அட்டாக். வாரதே தெரியாது…ஆனா தெரிஞ்சதுமே ஒரு அனாசினைப் போட்டு கொஞ்சம் பிராந்தியைக் குடிச்சா கொஞ்சம் நேரம் நிக்கும்” அவர் தன் கையெட்டும் தூரத்தில் விஸ்கியும் அனாசின் மாத்திரைகளும் வைத்திருந்தார்.

மெத்தென்ற இருக்கையில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டு கையில் கண்ணாடிக் கோப்பையை உருட்டியபடி பொன்னம்பலத்தார் சொன்னார் ”எங்கடை அப்பா மாசத்திலே ஒருநாள் பிராந்தி குடிப்பவர். அதை கொளும்பிலை இருந்து வாங்கிக் கொண்டுவந்து பீரோவிலை பூட்டி வச்சிருப்பவர். வெள்ளி டம்ளரிலை விட்டுத்தான் குடிப்பவர். தொட்டுக்கொள்ள முறுக்கும் வடையும் இருக்கும்… அண்டைக்கு அப்பா சந்தோசமா இருப்பவர்.. அவர் சின்ன வயசிலை மலேசியாவிலை வளர்ந்தவர். அங்காலை வெள்ளைக்காரங்க குடிக்கிறதை சின்ன வயசிலை பாத்திருக்கிறவர். அதே மாதிரி குடிக்கணுமெண்டு நினைப்பவர். அதே மாதிரி வாயை வைச்சுக்கொண்டு குடிப்பவர்…” அவர் வெள்ளைக்காரன் போல வாயை அழுத்தி தலையை கொஞ்சம் சரித்தார். நான் புன்னகை செய்தேன்.

அவர் மிக முக்கியமானதென அவர் எண்ணக்கூடிய ஏதோ விஷயத்தை பேசப்போகிறார் என்ற எண்ணம் ஏற்பட்டது.பொதுவாக முக்கியமானவற்றைப் பேசுவதற்கு முன்னர்தான் அம்மாதிரி ஒரு தயக்கமும், முக்கியமில்லாத அந்தரங்கங்களைப் பேசும் மனநிலையும் உருவாகின்றன. அது ஒருவகையான தளர்த்திக்கொள்ளல்.

”இண்டைக்கு நான் முக்கியமான ஒரு விசயம் பேசணுமெண்டு நினைச்சனான்” என்றார். முகம் மெல்ல தீவிரம் அடைந்தது. ”சார்லஸ் இஞ்ச வந்தப்ப நான் சொன்னது ஞாபகமிருக்கா?” நான் தலைசயசைத்தேன்.”அது பொய்…நான்  ஆரையும் கொல்ல நினைக்கயில்லை. அப்படி ஒருத்தரை கொல்ல என்னாலே ஏலாது கண்டீரோ.. ” என்றவர் சட்டென்று புன்னகைசெய்து ”…வேணுமெண்டால் கடினமான கணக்கு சொல்லிக்குடுத்து ஆரையாவது கொஞ்சம் கொஞ்சமாக் கொல்லுவேன்…” நான் சிரித்துவிட்டேன்.

அவர் உடனே மீண்டும் தீவிரம் அடைந்து ”நான் உம்மை வரச்சொன்னது வேறே ஒரு விஷயமாத்தான்…” தயங்கி தன் கோப்பையை கொஞ்சநேரம் பார்த்தார். ”…சார்லஸ் உமக்கு ஆக்களை யூரோப்புக்கு கடத்துற குரூப்புகளை தெரியுமே?” என்றார். நான் ஆச்சரியத்துடன் ஏறிட்டுப் பார்த்தேன். அவர் என் கண்களை ஒருகணம் சந்தித்து பின் தவிர்த்து ”உள்ளதை சொல்லுவீரெண்டு கேக்குறன்” என்றார்.

நான் ”ஓம்” என்றேன். அவர் சட்டென்று பரபரப்புடன் மேஜைமேல் சரிந்து என்னை பார்த்தார். ”நல்ல நம்பிக்கையான ஆக்கள் இருக்காங்களே? நல்ல ஆக்களா இருக்கணும்…பணம் எவ்வளவானாலும் ஒண்டுமில்லை…ஆக்கள் நம்பிக்கையா இருக்கணும்” என்றார். நான் அவரையே பார்த்தேன். அவர் மனம் ஓடும் திக்கு தெரியவில்லை. குடும்பத்தையா? ”ஆரு போறவர்?”என்றேன்

அவர் சட்டென்று தளர்ந்து பின்னால் சாய்ந்தபின் ”நான்தான்” என்றார். எனக்கு ஆயாசமாக இருந்தது. வேறெதை எதிர்பார்த்தேன்? ”நீங்கள் எப்படி?” என்றேன். ”கஷ்டம்தான்…ஆனால் முடியும். எனக்கு அதுக்கு சரியான ஆள் இல்லை. அதனாலேத்தான் உம்மை நம்பியிருக்கிறன். இந்தமாதிரி ஒரு ஓட்டலுக்கு என்னாலை வர ஏலும். இங்கேயிருந்து தப்பி நேப்பாளம் பாகிஸ்தான் வழியா போயிட்டனான் எண்டால் யூரோப்புக்கு போகலாமே?” அவரது முகமும் பாவனையும் வயதான பேதைப்பெண்களைப் போலிருந்தன.

”சரி, அப்ப உங்கள் குடும்பம்?” என்றேன். ”அவங்களை ஒண்ணும் பண்ண மாட்டினம். நான் போனால் பின்னே அவங்களை வச்சுக்கொண்டு என்ன செய்ய ஏலும்? கொஞ்சநாள் வச்சுப்போட்டு பிறகு அவங்களையும் விட்டுப்போடுவினம்…” அவர் அதைப்பற்றியெல்லாம் நெடுநாட்களாக சிந்தித்துக்கொண்டிருந்திருக்கிறார் என்று புரிந்தது. எந்தக்கேள்விக்கும் அவரிடம் பதிலிருக்கும். ஓர் அந்தரங்கக் கனவாக அவர் அந்த எண்ணத்தை நெடுநாட்களாகப் பேணிவந்திருக்க வேண்டும். நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவர் மெதுவாக இறுக்கம் தளர்ந்து பேச ஆரம்பித்தார். அவருக்கு வேண்டியது  ஓர் ஆள்கடத்தல்குழுவின் உதவி. அவரை எப்படியாவது இந்திய உளவுத்துறையின் பிடியிலிருந்து மீட்டு வேறுபெயர், வேறு பாஸ்போர்ட்டில் அகதியாக ஏதேனும் ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்பிவைக்கவேண்டும். அவரிடம் பணம் நிறையவே இருக்கிறது. அந்தப்பணத்தில் அவர் எங்காவது ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும். கொஞ்சநாளில் அவரை எல்லாரும் மறந்துவிடுவார்கள். அதன் பின்னால் அவருக்குக் கனவுகள் இருந்தன. ஏதாவது பல்கலைகழகத்தில் சேர்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். நூல்கள் எழுத வேண்டும்.

ஆனால் அவர் சொன்னதெல்லாம் அபத்தம் என்று அவருக்குப் புரியவில்லை. அவரது முகம் உலகம் முழுக்க அவரைத்தேடும் இயக்கத்தினருக்கு நன்றாகத் தெரிந்தது. உலகம் முழுக்கவே இந்திய உளவாளிகளும் உண்டு. முகத்தை மாற்றிக்கொண்டு வாழ்வது அனேகமாக சாத்தியமே இல்லை. இன்று கம்ப்யூட்டர் முகத்தின் எல்லா சாத்தியங்களையும் எளிதில் அடையாளம் காட்டும். அவர் அரசியல் சதுரங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வரை மட்டுமே அவரால் உயிரோடிருக்க முடியும். அவரது பணிமுடிந்ததும் அவர் கொல்லப்படுவார். இன்று அவர் உயிருடனிருப்பது இந்திய அரசின் கௌரவப்பிரச்சினை.. ஆகவேதான் அவர் பாதுகாக்கப்படுகிறார்.

”தம்பி, உங்கிட்ட சொல்றதுக்கு என்ன? எனக்கு இவங்கள் ஆசைக்காட்டினவங்கள். இயக்கத்து மேலிடத்தை இல்லாமல் செய்துபோட்டுட்டு என்னை தலைவராக்குறம் எண்டு சொன்னவங்கள்.  ரோ அனுப்பின ஒரு பெங்காளி பையன் வந்து பேசிப்பேசியே என்னை மடையனாக்கிப்போட்டவன்… நான் பண்ணின பெரிய தப்பு அவனை நம்பினது மட்டும்தான். நான் அவன்கிட்ட பேசுறதை பதிவுபண்ணி இயக்கத்திலை போட்டுக்குடுத்திட்டவங்கள். இயக்கம் என்னை கொல்லப்போற தகவலை எனக்குச் சொல்லி தப்பி இந்தியா வந்திடுங்களெண்டு சொன்னவங்கள்… நான்  அவங்ககூட இங்காலை வந்ததும் என்னை வச்சு ஒரு டம்மி இயக்கத்தை ஆரம்பிச்சவங்கள்.. அதை வச்சு என்னவோ பிளான் பண்ணினவை. அது நடக்கயில்லை. அப்பிடியே விட்டுப்போட்டினம்…”

நான் அறிந்த விஷயங்கள்தான் அவை. ஈ.பி.ஆர்.எல்.எ·ப்  இந்திய அரசுடன் ஒத்துழைக்க முன்வந்ததும் இந்த சாதுப்பேராசிரியரும் அவரது பேரால் ஆரம்பிக்கப்பட்ட ஆளில்லா இயக்கமும் தேவைப்படாமலாயின. பயனற்று கார்ஷெட்டில் விடப்பட்டு துருப்பிடித்து அழியும் ஒரு பழைய பொருள் போல இருந்தார் பொன்னம்பலத்தார். ஆனால் அது அவரது விதி. எனக்கு அப்போது தோன்றிய எண்ணம், கொலையாவதுதான் அவரது இயல்பான முடிவு என்று.  குரூரமாக இருக்கலாம், ஆனால் அதுதான் அவருக்கு கௌரவம். அதன்மூலம் வரலாற்றில் இடம்பெறலாமென்றெல்லாம் நான் அபத்தமாக நினைக்கவில்லை. வரலாறாவது மண்ணாவது. அந்தக் கதைக்கு வழக்கமான எளிமையான மிச்சமீதி ஏதுமில்லாத முடிவு அது ஒன்றுதான்.

ஏன் என்னை தேர்ந்தெடுத்தார் என்று எண்ணிக்கொண்டேன். எனக்கு தொடர்புகள் இருக்கும் என்று ஊகித்தது ஒருவகையில் சரிதான். ஆனால்… அடுத்த கணமே அவர் வாயிலிருந்து அது வெளிப்பட்டது. ”…உமக்கு என்னவேணும்? பணம்தானே? நான் பணம் குடுக்கிறன்….ஐ வில் கிவ் யூ ·பி·ப்டி லேக்ஸ் ஆ·ப் ருப்பீஸ்…யெஸ்… ·பி·ப்டி லேக்ஸ்…! சச் எ ஹ்யூஜ் சம்..நான் தாறேன். எடுத்துக்கிட்டு என்னைக் காப்பாத்தும்… நீரும் எங்கயாவது ஓடிப்போயிடும்” அதுதான். என்னை பணத்துக்காக கொலை செய்யும் ஒருவன் என்ற கணிப்பில் இருக்கிறார். சிறி மாஸ்டரை இந்திய உளவுத்துறையின் பணத்துக்காகக் கொன்றவன்…

அன்று பொன்னம்பலத்தார் மேலும் ஒருலார்ஜ் சாப்பிட்டார். அவரது சமநிலை தவறிவிட்டது. திரும்பத் திரும்ப ”நான் எந்த தப்பும் செய்யயில்லை…எனக்கு ஒண்டுமே தெரியாது. நான் மேடையிலை பேசினதுதான் தப்பு…அதுக்காக நான் சாக ஏலாது” என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ”தம்பி, நீதான் எனக்கு ரட்சகன் இப்ப. நீ என் தம்பி…என் தெய்வம்…உன்னைத்தான் நான் நம்பியிருக்கிறன். நல்லூர் முருகனுக்கு அடுத்து உன்னைத்தான் நம்பியிருக்கிறன்…” அவரது குரல் தொய்ந்து சென்று தாடை மார்பில் ஒட்டியபோது நான் மெல்ல எழுப்பி கூட்டிக்கொண்டு காருக்கு வந்தேன்.

டிரைவர் காரை சத்தமில்லாமல் ஓட்டிச்சென்றான். அவர் வாயிலிருந்து எச்சில் கொழகொழவென்று வழிய மூக்கு கசிய ஆடி ஆடி தூங்கியபடியே வந்தார். ஏதோ சில சொற்கள் அவ்வப்போது வந்தன. சட்டென்று ஒரு விசித்திர சத்தம் கேட்டது. நான் அது என்ன என்று ஒரு கணம் கழித்தே உணர்ந்தேன். அது பொன்னம்பலத்தார்தான்.  ‘ஊ ஊ’ என்று கேவிக்கேவி அழுதுகொண்டிருந்தார். வலதுகையால் தன் சட்டையை மார்பருகே பற்றி பிசைந்துகொண்டிருந்தார். நான் அவர் தோளைத்தொட்டு ”புரபசர்…என்ன இது.. வேண்டாம்…” என்றேன்.அவர் என் கையைப்பற்றிக்கொண்டு ”என்னைக் கொண்டுபோடுவாங்கள்…என்னை விடமாட்டாங்கள். என்னைக் கொண்டுபோடுவாங்கள்…” என்று சொல்லி அழுதார்

கார் வீட்டுக்கு வந்ததும் நான் அவரை கிட்டத்தட்ட கைத்தாங்கலாகவே தூக்கிக்கொண்டு சென்றேன். உள்ளே இருந்து வைஜயந்தி கையில் ஒர் ஆங்கில நாவலுடன் வெளியே வந்து எங்களை ஆர்வமில்லாமல் பார்த்தாள். அவள் எதையோ தின்றுகொண்டிருந்தாள், தாடை அசைந்தது. நான் அவரை படுக்கையறை நோக்கி கொண்டு சென்றேன். அவரது எச்சில் தரையில் சொட்டிக்கொண்டே வந்தது.

அவரது படுக்கையறை நட்சத்திர ஓட்டல் அறைகளுக்கு இணையான மெத்தைகள் விரிப்புகள் தலையணைகளுடன் இருந்தது. நேர் எதிரே ஏராளமான மலர்மாலைகளுடன் மாட்டப்பட்டிருந்த பெரிய முருகன்படம்   மட்டும்தான் வித்தியாசம். கட்டிலில் அவரைப் படுக்கச் செய்தேன். கைக்கடிகாரத்தையும் செருப்புகளையும் உருவி வைத்தேன்.

பின்னால் வந்த வைஜெயந்தி ”என்ன இண்டைக்கு ஜாஸ்தியா?” என்றாள். நான் ஒன்றும் சொல்லவில்லை. கனத்து களைத்த இமைகளைத் தூக்கி பொன்னம்பலத்தார் அவளைப் பார்த்தபின்னர் ”இவளைப்பத்தி உங்கிட்ட சொன்னவன்தானே? எல்லாமே இவளாலேதான்… அவன் இவளைத்தான் முதலிலே பிடிச்சவன்…” என்று சுட்டிக்காட்டினார். கண்கள் மூடியபின்னரும் நீட்டிய கைவிரல் அப்படியே இருந்தது ”ஷி இஸ் எ பிட்ச்… யூ நோ, ஷி இஸ் எ க்ரீடி பிச்” என்றபின் தலையணையில் முகம் புதைத்தார். நான் திரும்பி வைஜெயந்தியைப் பார்த்தேன். அவள் முகம் இறுக்கமாக இருக்க கண்களில் வெறுப்பும் கோபமும் ஒளிவிட்டன.

நான் அவளைப்பார்க்காமல் என் அறைக்கு வந்தேன். அவள் பின்பக்கம் என்னையே பார்த்துக்கோண்டிருக்கும் உணர்வு ஏற்பட்டது. சட்டென்று ஒரு புது மனிதன் எங்கள் நடுவே வந்து நிற்பதுபோல அந்த உண்மை நின்றது. அதை அறிந்துகொள்ளாமல் நான் மேற்கொண்டு எதையுமே செய்ய முடியாதென்று நினைத்துக் கொண்டேன்.

நான் சரியாகவே கண்ணை திருப்பவில்லை. ஆனால் அந்த அரைக்கணத்தில் பதிந்த வைஜெயந்தியின் தோற்றம் என்னுள் எத்தனை அழுத்தமாகப் பதிந்திருக்கிறதென அப்போது உணர்ந்தேன்.  அவள் முகத்தின் அத்தனை தசைநார்களின் அதிர்வையும் நெளிவையும் அப்போது என்னால் துல்லியமாகக் காணமுடிந்தது. அவள் கண்களில் இருந்த ஒளியை. பூரணமான மனக்கசப்பு உருவாக்கும் ஒளி அது.

[மேலும்]

முந்தைய கட்டுரைபடைப்புகள்,கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉலோகம் – 14