கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா

அன்புள்ள ஜெயமோகன்,

நான்  உங்கள் எழுத்துக்களை பலவருடங்களாக விடாமல் வாசித்து வருகிறேன். இப்பொழுது இணையத்திலும் மிகவும் விருப்பத்துடன் உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். உங்கள் சிறுகதைகள்/நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உங்களுடைய பல எழுத்துக்கள் நான் என் வாழ்க்கையை பார்க்கும் விதத்தை பாதித்திருக்கின்றன.

நான் சமீப காலங்களாக ஒரு விதமான மன உறுத்தலில் இருக்கிறேன். அதை உங்களிடம் கூறி உங்கள் ஆலோசனையை பெறலாம் என நினைக்கிறேன். இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கூறினால் அது மிகவும் பயனுடையதாய் இருக்கும் என நம்புகிறேன்.

நான் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில். தற்பொழுது மென் பொருள் துறையில் லண்டனில் வேலை செய்து வருகிறேன்.  சமீபத்தில் திருமணம் செய்து கொண்டேன். காதல்/கலப்பு திருமணம்.(நான் ஐயர். என் மனைவி நாயுடு). நான் கடவுள் நமபிக்கையை தொலைத்து வெகு நாட்கள் ஆகிறது. ஓஷோ,கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் தன்னை அறிதல் என்ற கோட்பாட்டையே ஆன்மீகம் என்று நம்புகிறேன். கலப்பு திருமணம் என்பதால் சாதி குறித்தும் கவனத்துடன் இருக்கிறேன். அம்பேத்கர் எழுத்துக்கள் மூலமாகவும் இணையத்தில் கிடைக்கும் சில பெரியாரிய எழுத்துக்கள் மூலமாகவும் என் சாதி அடையாளத்திலிருந்து முடிந்த வரையில் மன அளவில் விலகியிருக்க முயல்கிறேன்.

அ)இதனால் குடும்பத்தில் என்ன விதமான அடையாளத்தை பேணுவது என்று சற்று குழப்பமாக தான் உள்ளது. உதாரணமாக குழந்தைகளுக்கு கடவுள் நம்பிக்கையை சொல்லி தர வேண்டுமா? அவர்களுக்கு ஒரு சாதி அடையாளத்தை கொடுக்க வேண்டுமா? சாதி அடையாளம் இல்லா விட்டால் அவர்கள் தனிமைபட்டு போய் விடுவார்களா? மேலும் கடவுள் நம்பிக்கை என்பது பொய்யாகவேனும் ஒரு மன ஆசுவாசத்தை  பல பேருக்கு அளிக்கிறது அல்லவா? இதை சொல்லி தரா விட்டால் அவர்களுக்கு அந்த வசதியை மறுப்பதாகிவிடாதா?

ஆ)உங்களது ஆன்மீகம் என்ன? உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் நீங்கள் தியானம் அல்லது வேறு பயிற்சிகள் செய்கிறீர்களா?எனக்கு பரிந்துரைக்க உங்களுக்கு ஏதேனும் குரு அல்லது ஆசிரியர் இருக்கிறார்களா?

 

இதை பற்றி உங்கள் கருத்துக்களை கூற முடியுமா?

அன்புடன்,

G

அன்புள்ள கோகுல்,

உங்கள் கடிதம் கண்டேன்

என்னுடைய மாமனார் இரா.சற்குணம் அவர்கள் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர். அவர் தன் வாழ்க்கையை கடுமையான நாத்திகநோக்கிலேயே அமைத்துக் கொண்டார். தி.க.வுக்குரிய எதிர்மறை நிலைபாடு அவருடையது. இந்துமதம் சார்ந்த எந்தவிழாவையும் கொண்டாடுவதில்லை. தீபாவளி நாட்களில் ஊரே விழாக்கோலத்தில் இருக்கும்போது தன் வீட்டில் வேண்டுமென்றே விளக்குகூட போடாமலிருப்பார். பொங்கல் அன்றுகூட பொங்கலை சமையலறையில் வைத்து செய்து மத்தியான்னம் சாப்பிடுவார்- சூரியனைவழிபடக்கூடாதாம்.

அவரது இந்த மனநிலை என் மனைவியின் மனதில் அழுத்தமான ஒரு வடுவை உருவாக்கிவிட்டது. தன் இளமைப்பருவத்தை தன் தந்தை அவரது பிடிவாதங்கள் காரணமாக நிறங்களில்லாததாகச் செய்துவிட்டதாக அவள் உணர்கிறாள். இந்தியப் பண்பாட்டுடன் உணர்வுபூர்வமான தொடர்பு தனக்கு ஏற்படாது போய்விட்டதாக நினைக்கிறாள். அவளுக்கு ஆர்வமிருந்த மரபிசை, பரதநாட்டியம் முதலியவற்றில் கூட அவளுக்கு அறிமுகம் உருவாகவில்லை. தஞ்சைமண்ணில் பிறந்து வளர்ந்தபோதும்கூட அவள் தஞ்சை பெருவுடையார் ஆலயமன்றி எதையும் பார்த்ததில்லை. அதற்கான இன்றும் அவள் தன் தந்தையை மன்னிக்கவில்லை.

ஆனால் என் மாமனார் என் மகனுக்கு காதுகுத்து உட்பட எல்லா மதச்சடங்குகளையும் செய்தார். அதில் அவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் அதில் மென்மையான ஒரு கவித்துவம் இருப்பதை வயோதிகத்தில் மனம் நெகிழ்ந்த நிலையில் அவர் புரிந்ந்துகொண்டார். காசிக்குப்போய் கங்கையை பார்த்துவிட்டு வந்தார், ஏன் வட இந்தியர்கள் கூட்டம் கூட்டமாக ராமேஸ்வரம் வருகிறார்கள் என்பதை புரிந்துகொண்டார்.

என் மனைவிக்கு இப்போதும் மதநம்பிக்கையோ இறை நம்பிக்கையோ இல்லை. பிரார்த்தனை வழிபாடு நோன்பு எதையும் அவள் செய்வதில்லை. அவளே வாசிக்க ஆரம்பித்தபின் உருவான தெளிவு அது. ஆனால் இந்தியப் பண்பாடு என்பது மதமென்னும் வடிவிலேயே உள்ளது என்ற எண்ணம் அவளுக்கு உண்டு. ஆகவே கோயில்களுக்கு சென்றுகொண்டே இருக்கிறோம். விழாக்கள் கொண்டாட்டங்கள் எதையுமே விடுவதில்லை.  கிறிஸ்துமஸ் ஈஸ்டர் உட்பட எல்லா பண்டிகைகளையும் நாங்கள் வீட்டில் குழந்தைகளுடன் விமரிசையாகக் கொண்டாடுவோம்.

நம்முடைய கொள்கைகளை நம் குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது என்றே நான் எண்ணுகிறேன். நம்மைவிட மேலான சிந்தனையாளர்களாக அவர்கள் இருக்கலாமல்லவா? ஆனால் நம்முடைய சிந்தனைகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். பொதுவாக குடும்பத்துக்குள் எப்போதும் உரையாடல் இருக்க வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன். தமிழ்நாட்டில் பிராமணக் குடும்பங்கள் தவிர பிறவற்றில் பொதுவாக குடும்பத்தலைவருக்கும் பிறருக்கும் இடையே உரையாடலே இருப்பதில்லை. அதிகாரம் மிக்க ஒரு இடத்தில் குடும்பத்தலைவர் விலக்கி தனிமைப்படுத்தப்பட்டிருப்பார். அவரது ஆளுமையும் அப்படி ஒதுங்கியதாகத்தான் இருக்கும். என் அண்ணா அப்படிப்பட்டவர். அவருக்கு அவரது குடும்பத்தில் ஒரு மாற்று எண்ணம் இருப்பதை அவரால் தாங்கவே முடியாது.நான் கூட அவரிடம் எதையுமே பேசமுடியாது.

இந்த நிலையே குடும்பத்தில் பலவித புரிதல்சிக்கல்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் குடும்பவன்முறைகளுக்கும் காரணமாகிறது. பிராமணக் குடும்பங்கள் அல்லாத தமிழ் குடும்பங்களில் உக்கிரமான வன்முறை நிகழ்ந்தபடியே இருக்கிறது என்பது ஓர் உண்மை. அதை உரையாடல் மூலம் தளர்த்தவேண்டிய கட்டாயம் அடுத்த தலைமுறையினருக்கு உருவாகிவிட்டிருக்கிறது. ஆகவே குடும்பத்தில் உள்ளவர்களிடம் நேர்மையாகவும் வேடிக்கையாகவும் உங்கள் நம்பிக்கைகளை ஐயங்களை தேடல்களை விவாதியுங்கள், அதுபோதும். அவர்கள் அச்சூழலில் வளரட்டும். உங்கள் நீட்சியாக இயல்பாகவே அவர்கள் உருவெடுப்பார்கள். அவர்களுக்கு ஓர் கருத்துலகை உருவாக்கிக் கொடுக்க வேண்டிய சுமை ஏதும் உங்களுக்கு இல்லை. அது உங்களால் இயலவும் இயலாது. உங்கள் கருத்துலகை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

என் மகனிடமும் மகளிடமும் எனக்குத்தெரிந்த அனைத்தையும், இலக்கியம் முதல் அத்வைதம் வரை, பேசிக்கொண்டிருப்பதே என் பாணியாகும்.அவர்களுக்குப் புரியும்படி பேசமுடிந்தால் அதை நான் எனக்கு அவ்விஷயத்தில் தெளிவிருப்பதற்கான ஆதாரமாகக் கொள்வேன். அது அவர்களுக்கு என் மீதான நெருக்கத்தை உருவாக்கவும், தங்களைப்பற்றிய பெருமித உணர்வை உருவாக்கவும் உதவியாக இருக்கிறது. என் நிழலாக அவர்கள் உருவாக கட்டாயப்படுத்துவதில்லை, என் நீட்சியாக அவர்கள் இயல்பாக மலரக்கூடும்.

மதத்தை நிராகரிப்பதென்பது மரபை நிராகரிப்பதாகும் என்பதே என் எண்ணம். நம்முடைய சிந்தனைகள், கலைகள், வாழ்க்கைமுறைகள் அனைத்தும் மதம் என்ற வடிவிலேயே தொகுக்கப்பட்டிருக்கின்றன. மதத்தை முழுக்க நிராகரிப்பவர்கள் வறண்டதொரு வாழ்க்கையையே தேர்வுசெய்கிறார்கள். மதத்தை குழந்தைகளுக்குக் கொடுப்பதன் மூலம் நாம் ஒரு பெரும் மூதாதையர் சொத்தை அவர்களுக்கு அளிக்கிறோம். ஆனால் நம்பிக்கையை நீங்கள் குழந்தைகளுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு ஒரு சுமையாகவே இருக்கும். அது அவர்களிடமிருந்து பலவற்றை மறைத்துவிடும். ஆகவே கடவுளை குழந்தை மனதில் நிறுவ வேண்டிய தேவை இல்லை என்பதே என் எண்ணம்.

ஒற்றைப்படையாக கடவுளையோ மதநம்பிக்கையையோ குழந்தைகளுக்கு அளிப்பது தவறானது என்பதே என் எண்ணம். இந்துக்களில் மிகச்சிலர் மட்டுமே அப்படிச் செய்கிறார்கள். மற்றவர்கள் இயல்பாக ஒரு மதச் சூழலில் குழந்தைகளை வளரவிடுவதுடன் நின்றுவிடுகிறார்கள். அது ஆரோக்கியமாகவும் இருக்கிறது. ஆனால் இஸ்லாமிய, கிறித்தவ மதங்களில் தீவிர மத நம்பிக்கைகளுடனும் இறை நம்பிக்கைகளுடனும் குழந்தைகளை வார்த்து அவர்களின் வளர்ச்சிக்கு பன்முக வாய்ப்புகள் இல்லாமல் செய்துவிடுகிறார்கள். மிக வலுவான ஆளுமை கொண்ட குழந்தைகள் மட்டுமே அதிலிருந்து மீறி வெளிவர முடிகிறது. இஸ்லாமியர் உக்கிரமான மதக்காழ்ப்புகளை குழந்தைகளிடம் உருவாக்கி அவர்கள் எத்தனை கற்றாலும் அதிலிருந்து வெளியே வர முடியாமல்செய்துவிடுகிறார்கள். கிறித்தவர்களில் கேரளாவின் தொன்மையான கிறித்தவர்கள் மட்டுமே பெரும்பாலும் சமரச நோக்குள்ளவர்களாக இருக்கிறார்கள்.

குழந்தைகளுக்குச் சாதியை அளிக்க வேண்டுமா என்ற கேள்விக்கே பொருள் இல்லை. நாம் இப்போது சாதி சார்ந்த வாழ்க்கையை வாழ்வதில்லை. என் குடும்பத்தில் சாதி இல்லை. ஏனென்றால் நாங்கள் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். சாதிபற்றிய விஷயங்களை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் ஓரளவு வளர்ந்தபின்னர் விளக்கமாகச் சொன்னோம்.

என்னுடைய ஆன்மீகம் பற்றிக் கேட்டிருந்தீர்கள். அதை நான் விளக்கமாக மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆன்மீகம் என்று நான் சொல்வது இதுதான். மனிதனின் ஞானம் என்பது சாதாரணமாக அவனுடைய தேவைகள் சார்ந்து அவன் அடையும் அறிதல்களினால் ஆனது. அடுத்த கட்டத்தில் அவனுடைய இருப்பு சார்ந்து அவன் அடையும் ஞானம் உள்ளது. கற்றல் மூலம் அடையும் ஞானம் இந்த தூரம் வரை மட்டுமே செல்லமுடியும். இதை வைத்து இப்பிரபஞ்சத்தின் முழுமையை அவனால் உணர முடியாது. அது குறைப்பட்டதாகவும் அவனுடைய அகங்காரத்தை வளர்ப்பதாகவுமே இருக்கும். ஏதோ ஒரு புள்ளியில் அதன் போதாமையை அவன் உணர்ந்தபடியே இருப்பதனால் ஏமாற்றம் கொண்டவனாக இருப்பான். ஏதோ ஒரு இடத்தில் அது செயலற்று முறியும்போது அவன் கடும் துயரையும் அடைவான்.

ஆன்மீகம் என்பது முக்தியை அதாவது வீடுபேறை அளிப்பது என்றே நம்முடைய எல்லா நூல்களும் எல்லா தரப்புகளும் சொல்லி வருகின்றன. முக்தி என்பது என்ன என்று அவை விதவிதமாக விளக்குகின்றன. நம் தத்துவ நூல்களின்படி அறியாமை அளிக்கும் துயரில் இருந்து பெறும் விடுதலையே முக்தியாகும். அவ்விடுதலையை அளிப்பதே ஆன்மீகம். அது ஒரு முழுமையான ஞானத்தை அளிக்க வேண்டும். அறிவின் இரு படிகளைக் கடந்துஅடுத்தபடியை அளிப்பதே ஆன்மீகம். அது நம் இருப்பை தவிர்த்து நாம் அடையும் ஞானம் என்று சொல்லலாம். இப்பிரபஞ்சத்தை ஒரு முழுமையாக அறிவதும் அதில் நம்மை அறிவதும் என்று வகுக்கலாம். நம்மை வைத்து பிரபஞ்சத்தை அறியாமல் பிரபஞ்சத்தை மட்டும் அறிவது அது. ஒரு கருத்தாக அதை நம் மனம் உள் வாங்காது. ஓர் அனுபவமாகவே அது நிகழ முடியும். அந்த முழுமையனுபவம் அளிக்கும் அறிவே ஆன்மீக ஞானம். அது பிரபஞ்சத்தை இயற்கையை வாழ்க்கையை நாம் ஒரு முழுமைநோக்கில் அணுக உதவுகிறது.

இதை பௌத்தம் கேவலஞானம் என்கிறது. கைவல்யம் என்ற சொல் அதையே குறிக்கிறது. பௌத்தம் மற்றும் அத்வைதத்தின்படி [நான்X அது] என்ற பேதபுத்தியே அறியாமை. அறியாமையே நரகம். அதிலிருந்து விடுபடுதலே முக்தி. அதை ‘ஒவ்வொன்றாய் தொட்டு எண்ணி எண்ணும் பொருள் ஒடுங்கையில் நின்றிடும் பரம்’ என்கிறார் நாராயணகுரு. அவ்வாறு ஒவ்வொன்றாய் தொட்டு எண்ணுவதையே நான் செய்துவருகிறேன் என்று சொல்லலாம்.

என் குரு நித்ய சைதன்ய யதி. நாராயண குருவின் மூன்றாம் தலைமுறைச் சீடர்.  இப்போது அவர் இல்லை. என் குருவை நான் பத்னெட்டுவருடம் தேடியபின் கண்டடைந்தேன். ஒரு குரு கற்பிப்பதை நூல்கள் கற்பிக்க முடியாது. நூல்களில் ஞானத்தின் பாதை உள்ளது. குரு அப்பாதை சென்றடையும் இடமாகவே இருப்பவர். குருவை அவரவர் தேடிக் கண்டடையலாம். குரு அமையாத போது நூல்களே பாதைகாட்டிகள்.

நாம் இறைநம்பிக்கையை குழந்தைகள் மனதில் நிறுவினாலும்கூட பதின்பருவத்தில் அது முற்றாக உடையும். மறுபடியும் அப்பருவம் கழித்து அவர்களின் ஆளுமைகள் தொகுக்கப்படும்போது அவர்களுக்குக் கிடைத்த வாழ்க்கையனுபவங்கள் மற்றும் அவர்களின் மனஅமைப்பு சார்ந்து அவற்றில் இருந்து அவர்கள் பெற்றுக் கொண்டது  ஆகியவற்றுக்கு ஏற்ப  அவர்கள் நாத்திகர்களாகவோ ஆத்திகர்களாகவோ உருவாகப்போகிறார்கள். நம்முடைய பல நாத்திகர்கள் ஆத்திகக் குடும்பத்தில் பிறந்தவர்களே. அதற்கு என்ன செய்யமுடியும்? மேலும் நீங்கள் நம்பாத ஒன்றை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க முடியுமா என்ன?

ஆனால் பண்பாட்டுக்கூறுகளை ஒரு குழந்தை வளர்ந்தபின்னர் அதற்கு அளிப்பது மிகமிக கஷ்டமானது. என் மனைவியைப்போல முற்றிலும் வேறு சூழலுக்கு அறிமுகமாகி தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டால் ஒழிய. அதுவும் பெண்களுக்கே அது சாத்தியம். ஆண்கள் நம் சூழலில் அத்தனை எளிதாக மறு வார்ப்பு பெறுவதில்லை.

ஆகவே கோயில்களை, சடங்குகளை, விழாக்களை, மதஇலக்கியங்களை, தத்துவங்களை, கலைகளை, இசையை குழந்தைகளுக்கு அளியுங்கள். அவற்றின் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கைகள் மறுப்புகள் ஐயங்களுடனேயே அளியுங்கள். அவர்களை மரபின் வளமான மண்ணில் ஊன்றி வையுங்கள். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வளரட்டும். ஆத்திகரானாலும் நாத்திகரானாலும் அவர்கள் இந்தியப்பண்பாட்டுக்குள்ளேயே இருப்பார்கள். இரண்டுமே இங்கு நிகரான இடமுள்ளவையே. அந்த வேர்நிலம் அவர்களை அசலான ஆளுமையும் சிந்தனையும் கொண்டவர்களாக ஆக்கும்.

ஜெயமோகன்

முதற்பிரசுரம் ஜனவரி 2009 மறுபிரசுரம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 68
அடுத்த கட்டுரைமேகி நாடகம், இரு கடிதங்கள்- பாலா