மேகமலை, கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் மேகமலை கட்டுரை அருமையாயிருந்தது. தாடிக்கொம்பு கோவில் பற்றி நீங்கள் எழுதியதைப் படித்ததும் உற்சாகமாகிவிட்டது. நான் 1999 முதல் 2001 வரை நான் தாடிக்கொம்பை அடுத்த சுக்காம்பட்டியில் தங்கிதான் வேலைபார்த்து வந்தேன். தினமும் நான் வணங்கி வந்தது சவுந்தரராஜப் பெருமாள்தான். எனக்குத்தெரிந்து இவ்வளவு கலைநயம்கொண்ட சிற்பங்களை தாடிக்கொம்பு கோவில் தவிர திண்டுக்கல் அல்லது மதுரை மாவட்டத்தில் வேறு எங்கும் கான இயலாது.

மேலும் அக்கோவிலில் விசேஷம் ஸ்வர்ன ஆகர்ஷன பைரவரே.. ஆஞ்சநேயர் இல்லை. ஆனால் இரண்டு சந்நிதிகளும் அருகருகே இருக்கும்.

அங்கே சக்கரத்தாழ்வார் சந்நிதி ஒன்றும் தனியாக இருக்கும். நந்தவனத்தைத் தாண்டிச் சென்றால் கானலாம்.

ஜெயக்குமார்

அன்புள்ள ஜெயக்குமார்
நான் பைரவர் பக்கமே போகவில்லை. கூட்டம். நமக்கு பொன் கொட்டவேண்டுமென்ற பிரார்த்தனையும் இல்லை.
தாடிக்கொம்பு கோயிலுக்குள் திருப்பணிகள் நேர்த்தியாகச் செய்திருக்கிறார்கள்.

ஜெ

888
அன்புள்ள ஜெயமோகன் அவர்kaளுக்கு
நன்றிகள் பல, தாடிக்கொம்பு, சின்னமனூர், மேகமலை பயணம் குறித்த பகிர்தலுக்கு.
தங்கள் கட்டுரை படிக்கும் போது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. எனக்கும் அந்த ஊர்களுக்கு எல்லாம் குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் செல்ல வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது, நான் போனது இல்லை இது வரை.

என் மனதை உறுத்திய ஒரு விஷயம், மாட்டு வண்டி பந்தயம். மனிதர்களாகிய நாம் சக உயிரான மாட்டை இப்படி வதைக்கலாம், போட்டி என்ற பெயரில். இது குறித்து தங்கள் கருத்து என்ன.

பொதுவாகவே போட்டி மனப்பான்மை குறித்து உங்கள் கருது என்ன.
தங்கள் வாசகன்
குப்பன்_யாஹூ

அன்புள்ள குப்பன்
நீங்கள் ராம்ஜியா குப்பனா?
உங்கள் கேள்வியை எளிமையாகப் பார்த்தால் ஜீவகாருண்ய அடிபப்டையில் அது தப்பு என்றே சொல்லிவிடலாம். ஆனால் வரலாற்று நோக்கில் அப்படிச் சொல்ல கொஞ்சம் யோசிக்கவேண்டும்.

மிருகங்களை பயன்படுத்த ஆரம்பித்த பின்னரே மானுடம் நாம் காணும் பண்பாட்டு வளார்ச்சியை ஆரம்பித்தது. ஆசியாவும் ஐரோப்பாவும்தான் அதிகமான மிருகங்களை பழக்கி பயன்படுத்தின. ஆஸ்திரேலியா, அமெரிக்கா ,ஆப்ரிக்கா கண்டங்களில் வளார்ப்புமிருகங்கள் அனேகமாக இல்லை. இதுவே ஆசியாவும் ஐரோப்பாவும் பண்பாட்டில் மேலாதிக்கம் பெறக் காரணம் என கூறுகிறார். மிருகங்கள் மனித உழைப்பை மிச்சப்படுத்தின. எளிய புரதத்தை அளித்தன.

மிருகங்களை பயன்படுத்தலாம் என்றால் அவற்றில் திறன் மிக்கவற்றை உருவாக்கியபடியே இருக்க வேண்டும். அதற்கு போட்டிகள் தேவையாகின்றன. போட்டிகள் என்பவை மனிதர்கல் தங்கள் திறன்களின் உச்ச்ம் நோக்கிச் செல்ல அவசியமானவை. தங்கள் எல்லைகளை தாங்களே விஸ்தரிப்பதற்கு உதவக்கூடியவை

ஜெ

8888888888

//சின்னமனூருக்கு வெளியே மையச்சாலையில் ரேக்ளா போட்டி நடந்துகொண்டிருந்தது. சாலையெங்கும் கூட்டம் கூட்டமாக கிராமத்து மனிதர்கள். நாங்கள் வண்டிகளை ஓரமாக நிறுத்திக்கொண்டு காத்திருந்தோம். ஏழெட்டு ரேக்ளா வண்டிகள் சாலையின் இறக்கத்தில் துள்ளிக்கொண்டு பாய்ந்து சென்றன. மாடுகளின் கால்கள் காற்றில் சுழன்றன. குளம்புகளின் ஒலி உருளைப்பாறைகள் மலைச்சரிவில் செல்வது போல கேட்டது.//

சின்னமனூருக்குச் சின்ன வயசில் போன நினைவுகளைத் தூண்டி விட்டுவிட்டது உங்கள் எழுத்து. வீரபாண்டி கோயில் திருவிழா நடக்கும் சமயம் நாங்க அந்த வழியாப் பேருந்திலே சின்னமனூருக்குக் கோடை விடுமுறையைக் கழிக்க மதுரையில் இருந்து போவோம். பேருந்து நிலையம் அருகே சொசைட்டி காலனி பகுதியில் ஒரு வீடும், அக்ரஹாரத்தில் ஒரு வீடும் சித்தப்பாவுக்கு இருந்தது. அங்கேயே பஜாரில் அவரோட க்ளினிக்கும் இருந்தது. இருபத்து மூன்று வருடங்களுக்கு  திடீரென ஒரே இரவில் ஒரே அட்டாக்கில் இறந்து போனார். பஞ்சாயத்துத் தலைவராகவும் இருந்திருக்கிறார். இந்த ரேக்ளா போட்டியைப் பார்க்கவும் நாங்க போயிருக்கோம். அருகேயே இருக்கும் மார்க்கையன் கோட்டை ஒரு காலத்தில் அரிசி உற்பத்திக்குப் பெயர் போனது. இப்போ தெரியலை. :(

//மதுரை பேருந்துநிலையம் போல ஒரு அராஜகம் ஏதுமில்லை. மொத்த இடத்தையும் வியாபாரிகள் கடைகளாக மாற்றி விட்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் பேருந்து நிலைய நடைபாதைகளும் முகப்பும் கடைகளாக ஆயின. அங்கெல்லாம் பெஞ்சுகள் போட்டு உணவு சமைத்துப் பரிமாறினார்கள். இப்போது பேருந்து காத்து நிற்கும் இடங்கள் முழுக்க கடைகள். சமையலும் அங்கேயே. நாற்காலி போட்டு உணவு சாப்பிடுகிறார்கள். மழைக்கு ஒதுங்கக்கூட இடமில்லாமல் பயணிகள் பேருந்து வந்து நிற்கும் இடங்களில் நிற்க வேண்டியிருக்கிறது. பயணிகளுக்கான இடத்தில் நின்றால் என்ன வேண்டும், சாப்பிடாவிட்டால் விலகிப்போ என்று விரட்டுகிறார்கள்.//

நூற்றுக்கு நூறு உண்மை. மீனாக்ஷி கோயிலிலும் இப்படிப்பட்ட அராஜகம் தான் நடக்கிறது, கடந்த பத்துவருடங்களாக. இரு வருடம் முன்னால் கோயிலுக்குப் போய் சிறப்புத் தரிசனக் கட்டணம் கட்டியும் அம்மனைப் பார்க்கமுடியாமல் திரும்பிவந்தோம். பிறந்து, வளர்ந்து , படித்து, திருமணமும் நடந்து எல்லாம் நடந்த ஊர், எங்க ஊர் என்ற பெருமையும் மிகுதியாய் இருக்கும் எனக்கு. இப்போ மதுரையின் முகமே வேறே. அதன் ஜீவனையும், கவிதைத் தன்மையையும், எழிலையும், மென்மையையும் இழந்துவிட்டது.

கீதா சாம்பசிவம்

அன்புள்ள கீதா சாம்பசிவம்

மதுரைதான் அதன் ஒழுங்கு அழகு அனைத்தையும் இழந்துவிட்டது. மதுரைகோயில் சூறையாடப்பாட்டுவிட்டது. அதன் கலையழகுமிக்க புதுமண்டபம் ஆக்ரமிக்கப்பட்டு அதை காலிசெய்வது அசாத்தியமானதாக ஆனபின்னரும்கூட ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ராஜன் செல்லப்பா என்பவரின் தலைமையில் உட்பிரகாரங்கள் கடைகளுக்கு விடப்பட்டன. ஒரு மாபெரும் கோயில் சீரழிக்கப்படுவது நகரம் சீரழிக்கப்படுவதன் தொடக்கம். மதுரையைப்போன்ற ஒரு மாபெரும் கோயில் இப்படி சீரழிக்கப்படுவதற்கு இணையாக எந்த கோயிலாவது எங்காவது அழிக்கப்படுகிறதா என்றே தெரியவில்லை.

மதுரையில் குப்பை அள்ளும் வழக்கமே இல்லை. மதுரைக்கே அழகுசேர்க்கும் வைகையை கூவமாக ஆக்கிவிட்டிருக்கிறார்கள். அதன் கரைகள் முழுக்க குப்பை மலைகள், மலக்கிடங்குகள். மதுரை எங்கும் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாத கடைகள் சாலை வணிகங்கள். கடைந்தெடுத்த குற்றவாளிகளால் நடத்தப்படுகிறது மதுரையின் நிர்வாகம் என்கிறார்கள்.

ஆனால் இன்னமும் சின்னமனூர் போன்ற உள்பகுதிகள் அழகாக இருக்கின்றன

ஜெ

888
அன்புள்ள ஜெயமோகன்

நலமா. நிறைய கட்டுரைகள். எழுத நினைப்பதற்குள் அடுத்த கட்டுரை என்று என்னை வாசிப்பில் மூழ்கடித்து விடுகிறீர்கள். சரி பேசும் பொழுது சொல்லிக் கொள்ளலாம் என்று எழுதுவதைத் தள்ளிப் போட்டு விடுகிறேன். இன்று மேகமலை கட்டுரையைப் படித்தவுடன் பொறாமையாக இருந்தது :) மேகமலை சுருளி அருவிக்கு மேலே இருப்பது. ஒரு முறை மேகமலைக்கும் பல முறைகள் அதன் பின்னால் உள்ள வெள்ளி மலைக்கும் சென்றிருக்கிறேன்.

ஒரு முறை ஹைவேவிஸ்ஸில் உள்ள ப்ரூக் பாண்ட் டீ எஸ்டேட் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது. இந்த மலையைப் பச்சகாமாச்சி மலை என்றும் அழைப்பார்கள். அடர்ந்த காடுகளும் யானைகளும் எப்பொழுதாவது கரடிகளும் அபூர்வமாக புலிகளும் காணக் கிடைக்கும் மலைக்காடு. நான் இந்த மலையின் அந்தப் புறச் சரிவில் உள்ள ஒரு பெரிய காஃபி எஸ்டேட்டுக்கு சில முறை சென்றிருக்கிறேன். அவர்களுக்கு காஃபி எஸ்டேட் மற்றும் காஃபி க்யூரிங் மேனேஜ்மெண்ட்டுக்கு ஒரு சாஃப்ட்வேர் எழுதுவதாகக் கணக்கு :))

வெள்ளி மலையில்தான் வையாறு உற்பத்தி ஆவதாக ஐதீகம்.  அற்புதமான எஸ்டேட் மலை அது. வழியெங்கும் யானைகளின் தடங்களைப் பார்க்கலாம். மலையுச்சியில் வெள்ளைக்காரர்கள் கட்டி விட்ட பங்களாக்களும், பட்லர்களின் அருமையான சாப்பாடுகளும் சேர்ந்து அங்கேயே செட்டிலாகி விடலாமா என்றிருந்தது.  அற்புதமான இடம்.

அந்தப் பகுதிக்குச் செல்ல வருச நாடு, கடமலைக் குண்டு, மயிலாடும்பாறை, அரசடி வழியாகச் செல்ல வேண்டும். ஒரு இடத்திற்குப் பின்னால் பொது மக்கள் போக முடியாத ப்ரைவேட் எஸ்டேட் சாலைகள் வந்து விடும். அப்படியே மேலே ஏறி அந்தப் பக்கம் இறங்கினால் ஸ்ரீவிலிபுத்தூர் வத்ராயிருப்பு, ஐயனார் கோவில், ராஜபாளையம் பகுதிகள் வந்து விடும், தொடர்ந்து மேற்காகப் போனால் ஐயப்பன் கோவிலுக்குப் போகும் ஒரு ட்ரெயில் இருக்கிறது என்றார்கள். தேனியில் இருந்து 90 கி மீ காட்டுப் பாதையில் போக வேண்டும்.

மேகமலை பெரும்பாலும் ப்ரூக்பாண்ட் எஸ்டேட்டின் கீழ் இருப்பதினால் அவ்வளவாக வணிகப் படுத்தப் படாமல் கூட்டம் இல்லாமல் இருக்கும் மலை. உங்கள் தயவில் இப்பொழுது பெரிய விளம்பரம் கிட்டி கொடைக்கானல் போல ஆகிவிடாமல் இருக்க வேண்டும் :)

இங்கிருந்து கொடைக்கானல் மலைத் தொடர்களையும் பார்க்கலாம். படத்தில் பார்க்கும் பொழுது காடுகள் ஓரளவுக்கு இன்னும் அழியாமல் இருப்பது போலத் தெரிகின்றது. ஏலம், டீ மற்றும் காஃபிக்கு உயரத்தில் அடர்ந்த காடுகள், ஷோலாஸ் தேவை. அதனால் அவற்றை எஸ்டேட் முதலாளிகள் வெட்டாமல் விட்டு வைத்திருக்கிறார்கள். அங்கு காடுகள் இருந்தால்தான் வணிகப் பயிர்களுக்குத் தேவையான மழையை மேகங்கள் கொண்டு வரும். அதற்காக காடுகளை விட்டு வைத்திருப்பதினால் அதன் அடர்த்தியில் யானைகளும் பிற மிருகங்களும் வாழ்கின்றன. தமிழ் நாட்டில் இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கும் காடுகள் இவை.

பெரும் ஆக்ரமிப்புக்கும் அழிவிற்கும் உள்ளாகி கொண்டிருக்கும் காடுகளில் இந்த வருசநாட்டுக் காடும் ஒன்று. இங்குள்ள இரு சில மலைக் கிராமங்களுக்கு தேர்தல் சமயங்களில் மட்டும் யானைகளைக் கடந்து அதிகாரிகள் சென்று மக்களை ஜனநாயகக் கடமையை ஆற்ற வைக்கிறார்கள். எம் ஜி ஆரின் தொகுதிக்குள் வந்தபடியால் முன்பு அரசடி என்னும் மலையடிக் கிராமம் வரை தார் ரோடு போட்டிருந்தார்கள்.இருந்தாலும் பஸ்ஸின் கூரை மேல்தான் எஸ்டேட் ஊழியர்கள் பயணம் இருக்கும். இப்பொழுது கூடுதலாக நக்சலைட்டுகளுக்கும் இன்ன பிற தீவீரவாதிகளுக்கும் இந்த வருசநாட்டுக் காடுகள் பிடித்துப் போனதாகக் கேள்வி.

நானும் சென்ற வாரம் இங்குள்ள பெரும் ரெட்வுட் ஃபாரஸ்டுகள் சிலவற்றிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். 1 நார்த் மலைக் கடல் பாதை வழியாக 200 மைல் சென்று அந்தக் கானகங்களுக்குள் சென்றோம். அதைக் காடு என்று அழைத்தால் மேகமலை கோபித்துக் கொள்ளும். எங்கு பார்த்தாலும் ஊசி ஊசியாக ஊசியிலைக் காடுகள். ஒரு புழு பூச்சி மிருகம் ஹும் ஒன்று கிடையாது.

மேகமலைக்குள் நீங்கள் நுழைந்த பொழுது எத்தனை விதமான பறவைகள் எத்தனை விதமான பூச்சிகள் எத்தனை விதமான மிருகங்கள் கண்டிருப்பீர்கள். காட்டெருமைகள். மான்கள். நரிகள், சிறுத்தைகள் என்று விதவிதமான மிருகங்கள் வாழும் காடுகள் அவை. இரவு முழுக்க ஜிவ் என்ற ரீங்காரம் இருக்குமே. ஒட்டு மொத்தமாக எழுந்து அடங்கும் ஓங்காரம் இருக்குமே. இங்கு காடுகளும் மலைகளும் அலையலையாக வருகின்றன

ஆனால் எந்தவொரு டைவர்ஸிட்டியும் இல்லாத அமெரிக்கா முழுவதும் உள்ள மெக்டானொலாட்ஸ் போல செய்து வைத்த ரெடிமேட் காடுகள் போல செயற்கையாக ஒரு ஜீவன் இன்றி உள்ளன. காடுகள் நடுவினில் ஹைவேக்கள் ஓடினால் அவை அப்புறம் என்ன காடு? அதில் என்ன சுவாரசியம்?

இந்தக் காடுகள் பார்ப்பதற்கு மட்டும் அழகாக உள்ளன அவ்வளவுதான். நம் வெப்பக் காடுகளில் இருக்கும் ஒரு மர்மம், ஒரு கவர்ச்சி இந்த அழகிய பைன் மர காடுகளில் கிடையாது. அடர்ந்த ரெட்வுட் காட்டினுள் கிட்டத்தட்ட ஆறு  மணி நேரம் பயணம் செய்தோம், ஒரு சில சிறிய பறவைகள் தவிர வேறு எந்த ஜீவராசியும் கண்ணில் படவில்லை காதில் விழவில்லை.

காடுகளின் ஊடாக  சொல்லி வைத்த ஒழுங்கில் ஓடிய சில ஆறுகளும், பசிஃபிக்கின் பிருமாண்டமும், கடலை ஓட்டி ஓடும் மலைச்சாலைகளும் காணச் சலிப்பதில்லை. ஆனால் இங்குள்ள காடுகள் படு போர். கொஞ்ச நேரத்தில் அலுப்பும், சலிப்புமாகி என்ன காடுடா இது என்றாகி போரடித்துப் போய் மறுநாள் திரும்பி வந்து விட்டோம் :)) இங்கு நாங்கள்  யானை பார்க்க வேண்டும் என்றால் மானரே பேக்குப் போய் கடல் யானைகளைத்தான் பார்க்க வேண்டும் :) நிறைய கரையில் வந்து ஒதுங்கியிருப்பதாகச் சொன்னார்கள். வார இறுதியில் பேசுகிறேன்.

அன்புடன்
ச.திருமலைராஜன்

அன்புள்ள ராஜன்

மேகமலையில் உள்ள தேயிலைத்தோட்டங்கள் நூறுவருட குத்தகைக்கு கொடுக்கப்பட்டவை என்றும் இன்னும் சில வருடங்களில் குத்தகை முடிந்து தேயிலைத்தோட்டங்கள் அரசுக்கு அளிக்கப்படும் என்றும் சொன்னார்கள். அரசு அவற்றை ‘வளர்ச்சி’ பணிகளுக்கு பயன்படுத்தாமல் மீண்டும் காடாகவே ஆக்கிவிட்டால் மேகமலை தமிழ்நாட்டில் எஞ்சியிருக்கும் ஒரே வனப்பகுதியாக இருக்கும். அரசியல் எஜமான்கள் கருணை காட்டவேண்டும்

தமிழ்நாட்டை அழிப்பதில் குமுதம் சுற்றுலாக்குறிப்புகளே போதுமான பணியாற்றுகின்றன. மேகமலை குறித்து எழுதும் நிருபர் ‘வசதிகள்’ போதவில்லை என்று எழுதி அரசின் கவனத்தைக் கோருவார்.  கான்கிரீட் கட்டிடங்கள் வேண்டும் என்பார். ஏஸி வேண்டும் என்பார். மேகமலையை சிந்தாதிரிப்பேட்டையாக ஆக்கும் வரை தமிழ் ரசனை ஓயாது, இல்லையா?

உயிர்பயமே தமிழக காடுகளை காடுகளாக ஆக்குகிறது. நாம் நம் ஆதிநிலைக்கு திரும்புவதுபோல. புலன்கள் உச்சம் கொள்ளும் நிலை அது. காட்டில் ஒரு சுள்ளி ஒடியும் ஒலி எப்படி கேட்கும் தெரியுமா? அப்படியே பிடரி புல்லரித்துவிடும் அனுபவம் அது. யானை! அதுதானே காட்டின் அரசன்![குட்டப்பன் சொன்னதுமாதிரி] காடு ஓர் அரச சபை.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்

வாஸ்தவம்தான். அங்குள்ள வனப் பகுதிகளை பிரிட்டிஷ்காரர்கள் அழித்து காஃபி, டீ, ஏலம் எஸ்டேட்டுகளாக மாற்றினார்கள். அதன் பின் தமிழ் நாட்டுப் பணக்காரர்கள் கையில் வந்தது. அப்படியே குத்தகை முடிந்து விட்டாலும் அரசாங்கம் எடுத்துக் கொண்டு தேயிலை, காப்பித் தோட்டங்களை அழித்து மீண்டும் அடர் வனமாக்குவது எல்லாம் நம்ம ஊரில் நடக்காது.

இப்பொழுது காப்பி அவ்வளவாக லாபம் இல்லாத பயிராக போய் விட்டாலும் கூட அப்படி எளிதில் முதலாளிகள் விட்டு விட மாட்டார்கள். அங்குள்ள எஸ்டேட் தொழிலாளர்களைக் காரணம் காட்டியும் அரசாங்கத்திற்கு காப்பி ஏற்றுமதி இழப்பின் மூலம் வரும் நஷ்டத்தையும் காரணமாகச் சொல்லி எப்படியும் இன்னுமொரு நூறு ஆண்டு குத்தகையை ரினீவ் செய்து விடுவார்கள்.

காப்பித் தோட்டங்களுக்காகவும், தேயிலைத் தோட்டங்களுக்காகவும் மட்டுமே நூற்றுக்கணக்கான சதுர கி மீட்டர்கள் அளவுக்கு கானகம் அழிக்கப் பட்டு பணப் பயிர் தோட்டங்களாக மாற்றப் பட்டுள்ளன. நீங்கள் இன்னும் பின்னால் சென்றிருந்தீர்கள் என்றால் ஒரு பாலைவனப் பிரதேசமே தென்பட்டிருக்கும்.  அந்த ரோடுகள் இன்னும் மோசமாகப் போனால் நான் மிகவும் மகிழ்வேன். கார் போகா விட்டால் ஆள் போக மாட்டார்கள். இப்படியே இருப்பதோ அல்லது இன்னும் மோசமாக இருப்பதுவோதான் நல்லது.

ஆனால் இப்பொழுதே அங்குள்ளவர்களுக்கு அதை பெரிய டூரிஸ் ரிசார்ட்டாக ஆக்கி விடும் ஆசையிருக்கிறது. இப்பொழுது மேகமலையில் இருக்கும் ஒரு ரிசார்ட்டில் ஒரு இரவுக்கு 6000 ரூபாய் வசூலிக்கிறார்கள். அங்குள்ள எல்லா எஸ்டேட்டிலும் அது போல ஒரு பங்களா இருக்கும். எல்லாவற்றையும் ரிசார்ட்டாக மாற்றி விட்டால் அந்த மிச்ச மீதம் இருக்கும் யானைகள் எங்கு போகும்?

காப்பி வருமானம், தேயிலை வருமானம் குறித்துக் கவலைப் படாமல் அங்குள்ள தொழிலாளர்களுக்கு மாற்று ஏற்பாட்டு வேலைகள் செய்து விட்டு அரசாங்கம் அதை முழு வனமாக மாற்றினால் நன்றாக இருக்கும். ஓரளவு வரைக்கும் நிஜமாகவே மலையேறி இயற்கையை அனுபவிக்க விரும்பும் இயற்கை விரும்பிகளை மட்டும் கடுமையான கட்டுப்பாட்டில் இயற்கையுடன் சில நாட்கள் வாழ அனுப்பி வைக்கலாம். உங்கள் காடு நாவலில் காண்பித்துள்ள கரும் வனம் வெகுவாக அருகி வருகிறது.

யானை இல்லாத காடு என்ன காடு? குட்டப்பன் சொல்வது போல யானைதான் காட்டின் நிஜ அரசன். அமெரிக்கர்களுக்கு ஆயிரம் இருந்து வசதிகள் இருந்தும் ஒரு யானை கூட இல்லையே :) நீங்கள் அடுத்த முறை முடிந்தால் தேக்கடிக்கு உள்ளே நடந்து சென்று பாருங்கள். அங்கு ஒரு சில இடங்களில் சிறு சிறு தண்ணீர் குளங்களை ஒட்டி வாட்ச் டவர்கள் இருக்கின்றன இரவு தங்கிக் கொள்ளலாம். அற்புதமான அனுபவமாக இருக்கும்.

எனக்கு உங்கள் காடு படித்ததில் இருந்து எனக்குக் காடு தலைக்கேறிக் கிடக்கிறது :) மேற்குத் தொடர்ச்சி மலைக்குப் போக வேண்டும் என்று மனம் ஏங்குகிறது. களக்காடும் அருமையான காடு என்கிறார்கள் நான் சென்றதில்லை. உலகின் அத்தனை பல்லுயிர் வளம் பொருந்திய காடுகள் காண்பதறிது.

உலகத்தில் எந்த நாட்டினருக்கும் கிடைக்காத செல்வங்கள் இந்தியாவுக்குக் கிட்டியுள்ளன. அதன் அருமை பெருமை தெரிந்து போற்றிப் பாதுகாக்கத்தான் ஆளில்லாமல் போய் விட்டது.  அரிதான பருவமழைக் காடுகளின் அருமை தெரியாத நாம் அவைகளை அழித்து ரப்பரும், காப்பியும், டீயும் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். சென்ற வாரம் கலிஃபோர்னியாவின் ரெட்வுட் காடுகளுக்குள்ச சென்ற பொழுதுதான் நமது காடுகளின் அருமைகளைப் பெரிதும் உணர்ந்தேன்.

அன்புடன்
ச.திருமலை

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் மேகமலை கட்டுரை அருமையாயிருந்தது. தாடிக்கொம்பு கோவில் பற்றி நீங்கள் எழுதியதைப் படித்ததும் உற்சாகமாகிவிட்டது. நான் 1999 முதல் 2001 வரை நான் தாடிக்கொம்பை அடுத்த சுக்காம்பட்டியில் தங்கிதான் வேலைபார்த்து வந்தேன். தினமும் நான் வணங்கி வந்தது சவுந்தரராஜப் பெருமாள்தான். எனக்குத்தெரிந்து இவ்வளவு கலைநயம்கொண்ட சிற்பங்களை தாடிக்கொம்பு கோவில் தவிர திண்டுக்கல் அல்லது மதுரை மாவட்டத்தில் வேறு எங்கும் கான இயலாது.

மேலும் அக்கோவிலில் விசேஷம் ஸ்வர்ன ஆகர்ஷன பைரவரே.. ஆஞ்சநேயர் இல்லை. ஆனால் இரண்டு சந்நிதிகளும் அருகருகே இருக்கும்.

அங்கே சக்கரத்தாழ்வார் சந்நிதி ஒன்றும் தனியாக இருக்கும். நந்தவனத்தைத் தாண்டிச் சென்றால் கானலாம்.

ஜெயக்குமார்

அன்புள்ள ஜெயக்குமார்
நான் பைரவர் பக்கமே போகவில்லை. கூட்டம். நமக்கு பொன் கொட்டவேண்டுமென்ற பிரார்த்தனையும் இல்லை.

தாடிக்கொம்பு கோயிலுக்குள் திருப்பணிகள் நேர்த்தியாகச் செய்திருக்கிறார்கள்.

ஜெ
மேகமலை என்ன, பரங்கிமலை ஏறும் வாய்ப்புகள் கூட எங்களுக்கு  குறைவுதான். இப்படி நினைத்த போதெல்லாம், ஊர் சுற்ற ஆண்களால் தான் முடியும். உங்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. ஆனால் துறவு என்னவோ சித்தார்த்தர்களுக்கே லபிக்கிறது.  பாவப்பட்ட யசோதரை களுக்கல்ல அவர்களுக்கு தான் ராகுலன்கள் இருக்கின்றனரே.

சித்ரா

அன்புள்ள சித்ரா

அருண்மொழி எனக்கு மின்னஞ்சல் செய்தது போல உள்ளது உங்கள் வரிகள்.

உண்மையில் அவளை வெளிநாடுகள் உட்பட பல இடங்களுக்குக் கொண்டு சென்றிருக்கிறேன். வருடம் தோறும் பயணம்செய்துகொண்டே இருக்கிறாள். ஆனாலும் வருத்தம்

என்ன செய்வது? அத்து அலைவது என்பது இப்போதைக்கு ஆண்களுக்கு மட்டுமே…

ஜெ

முந்தைய கட்டுரைஅப்பம்,கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇணையத்தில் விவாதம்…