மேகமலை

நண்பர் தனசேகரனின் வீடு சின்னமனூரில் இருக்கிறது. மேகமலை பக்கம்தான். ஒருமுறை வாருங்கள் என்று கூப்பிட்டுக்கொண்டே இருந்தார். ஆகவே ஒரு பயணத்திட்டம் போட்டோம். 26 -11-2009 அன்று சாயங்காலம் கிளம்பி சேலம் பேருந்தில் திண்டுக்கல் சென்றேன். திண்டுக்கல்லுக்கு சென்னை செந்தில் வந்துசேர்வதாக ஏற்பாடு. கல்பற்றா நாராயணனும் வசந்தகுமாரும் ஈரோடு வந்து ஈரோட்டில் இருந்து சிவா, கிருஷ்ணன், விஜயராகவன் ஆகியோருடன் கிளம்பி திண்டுக்கல் வருவதாக திட்டம்.

நான் பேருந்தில் ஏறியதுமே தூங்கிவிட்டேன். அது திண்டுக்கல் நகருக்குள் செல்லாது சந்தையருகே இறங்குங்கள் என்றார் நடத்துனர். சரி என்றேன். நல்லவேளையாக பேருந்தில் சினிமா போடவில்லை. பாட்டும்போடவில்லை. என் ராசி என்னவென்றால் எந்த பேருந்தில் ஏறினாலும் சிம்புபடம் போட்டுவிடுவார்கள் என்பதுதான். ‘மன்மதன்’ படத்தை நான் எட்டுமுறை பார்த்திருக்கிறேன். ஒருமுறை தாங்கமுடியாமல் படம்போட்டதுமே புறநகரில் ஒழுகிணசேரியில் இறங்கி அடுத்த பேருந்தை பிடித்தேன். அதில் ‘காளை’ போட்டார்கள்.

மேகமலை வழியில்…

மதுரை தாண்டியதுமே ஈரோட்டு நண்பர்கள் செல்பேசியில் அழைத்து விசாரித்தார்கள். நான் திண்டுக்கல் புறச்சாலையில் சந்தைச்சாலையில் நிற்கும்படிச் சொன்னதனால் அங்கே கொசுக்கடியுடன் காத்து நின்றார்கள். ஆனால் என்னுடைய பேருந்து திண்டுக்கல் தாண்டிச் செல்வதுபோல சந்தேகம் ஏற்பட்டது.

எழுந்து போய் நடத்துநரை தேடினேன். காணவில்லை. ஓட்டுநர் தவிர பேருந்தில் எவருமே விழித்திருக்கவில்லை. ஓட்டுநரிடம் ”திண்டுக்கல்லில்லே எறங்கணும்’ என்றேன். அவர் சாலையைவிட்டு கண்கலை விலக்கவில்லை, எந்த சலனமும் இல்லை. ”திண்டுக்கல்லு…திண்டுக்கல்லிலே ” என்றேன். ஆச்சரியம், நான் எத்தனை கத்தினாலும் நான் நிற்பதையோ பேசுவதையோ அவர் உணர்ந்ததாகவே தெரியவில்லை. ஏதோ பேய்பிடித்தவர் போல சாலையையே பார்த்து ஓட்டிக்கொண்டிருந்தார்.

நான் திரும்பிச்சென்று நடத்துநரைத்தேடினேன். அவர் ஒரு இருக்கையில் தூங்கிகொண்டிருந்தார். அவரை உலுக்கி எழுப்பி ”திண்டுக்கல்லிலே எறங்கணும்…” என்றேன். அவர் வாயைத்துடைத்தபடி ”திண்டுக்கல்லா?” என்றார் சேலமே வந்துவிட்டதோ என்று பீதி ஏற்பட்டது. வெளியே பார்த்துவிட்டு ”ஆ…இதான்…” என்றார். ”வெளியே மார்க்கட் ரோட்டுலே நிப்பாட்டுறதா சொன்னீங்க?” ”உள்ற வந்துட்டுது சார்… எறங்குங்க”

வட்டப்பாறை

பாய்ந்து இறங்கிவிட்டு நண்பர்களுக்கு செல்பேசியில் தகவல் சொன்னேன். அதிகாலை நான்குமணி. பேருந்துநிலையவாசலில் நின்றேன். எல்லா கடைகளும் மூடிவிட்டிருந்தன. என்னருகே துப்புரவுத்தொழிலாளர்கள் மூவர் வேலைசெய்துகொண்டிருந்தார்கள். ஒருவர் பெண். சாதாரணமாக உரக்க உரையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் உச்சரிப்பு காரணமாக கொஞ்சம் கழிந்துதான் புரிந்தது. மிக அந்தரங்கமான உரையாடல்

”ஒருக்கா ரெண்டுவாட்டி ஆனாக்கூட போகட்டும்னு வைச்சுக்கலாம். தண்ணிய ஊத்திட்டுவந்து நாலுவாட்டி போட்டு கும்மிட்டு கெடந்தா என்ன செய்யிறது? என்னாது இரும்புலயா ஓட்டையப் போட்டு வச்சிருக்கு?” என்று பெண். ”சரி விடு…அவனுக்கு என்ன தவதாயமோ…” என்று கொஞ்சம் வயதான ஆண். ”அருவாமணையால நறுக்கணும்… கையெல்லாம் நகம் வேற பூச்சாணி கெணக்க…” ”செரி விடுடி…ஆம்புளைண்ணா அத்துட்டுதான் அலைவான்..” ”அதுக்காக?”. பேச்சு மீண்டும் மீண்டும் ஒரே புள்ளியில்தான். கணவனின் தீராத வெறி. அதேசமயம் ‘பொம்புளையாளுக்கு’ பயனும் ஒன்றும் இல்லை. உடம்புவலிதான் மிச்சம். என்னசெய்வாள், பாவம்.

மேகமலை விளிம்பிலே

‘ஆட்டோவா சார்?’ என்று எட்டுபேர் கேட்டார்கள் இந்த விடிகாலைக் குளிரில் சவாரிக்காக இப்படி அலைவதென்றால் அந்த பிழைப்பை எண்ணவே பரிதாபமாக இருந்தது. நேர் எதிரில் நகைக்கடை விளம்பர அழகிகள். பிளாஸ்டிக் அச்சு வந்தபின் பெண்படங்களை பெரிய அளவில் ரசிக்க முடிகிறது. ஆனால் இந்தமாதிரி தனிமை சிக்கவேண்டும்.

விஜயராகவனின் சிவப்பு குவாலிஸ் கார் வந்தது. உள்ளே எல்லாரும் இருந்தார்கள். ஏதோ பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள். என்ன என்றேன். நான் வழிசொல்வதைப்பற்றிய வேடிக்கை. தேவதேவன் இதில் எனக்கு அண்ணா. இந்த லட்சணத்தில் தேவதேவன் எனக்கு தடயம் சொன்ன ஒரு அனுபவம். நாகர்கோயில் வந்த தேவதேவன் பஸ் நிலையத்தில் ஸ்டேட் பேங் விளம்பரத்துக்கு அடியில் நிற்பதாகச் சொன்னார். தேடித்தேடி அலுத்து கடைசியில் அஜிதன் ஆளைக் கண்டுபிடித்தான். அவர் நின்ற இடம் விளம்பரத்துக்கு நே மறுபக்கம். ‘என்ன சார் இது?’ என்று கண்கலங்கியபோது குளுமையாக ‘இங்க நிண்ணா விளம்பரம் தெரியுதுல்ல?’ என்றார்

கல்பற்றா நாராயணன்

காரில் ஏறிக்கொண்டு ரயில்நிலையம் சென்றோம். செல்வதற்குள் ரயிலில் செந்தில் வந்து இறங்கியிருந்தார். புத்தம்புதிதாக இருந்தார். ஒரு கறுப்புக்கண்ணாடி மாட்டிவிட்டால் தெலுங்குப் பட கதாநாயகன் போல. விடியும் நேரம் உற்சாகமாகப் பேசிக்கொண்டு சென்றோம். நான் அமெரிக்கா சென்று மீண்டபின் நண்பர்களை நேரில்சந்திக்கிறேன். ஆகவே பெரும்பாலும் அமெரிக்க அனுபவங்கள்.

சுருளி ஆற்றுக்குப் போய் குளிக்கலாம் என்று ஒரு திட்டம். வசந்தகுமார் வீரபாண்டி ஆற்றில் குளிக்கலாம் என்றார். ஆனால் விடியற்காலையில் கொஞ்சம் காட்டுப்பகுதியைப் பார்க்கலாம் என்ற ஆசையால் கடைசியில் சுருளியாற்றுக்கே சென்றோம். அருவிக்குச் செல்ல ரொம்பவே போகவேண்டும். ஆகவே வழியிலேயே குளிக்கலாமென திட்டம்.

கல்பற்றா நாராயணனுடன்

இருமருங்கும் மாமரத்தோட்டங்களில் பறவைகள் விழித்துக்கொண்டு விட்டன. தூரத்தில் மலைகள் மீது சாம்பல்நிறமான பனி மெல்ல வெளுத்து விலகிக் கொண்டிருந்தது. நல்ல குளிர். சாலையோரமாகவே ஆறு சில்லிட்ட நீருடன் மெல்லிய ஆவி எழ ஒடிக்கொண்டிருந்தது. அதில் குளிக்கலாம் என்றார் சிவா. ”ரொம்பக் குளிரும்போலிருக்கே…”என்று வசந்தகுமார் தயங்கினார்.

ஆனால் அதற்குள் சிவாவும் செந்திலும் சட்டையைக் கழற்றிவிட்டு இறங்கிவிட்டிருந்தார்கள். தண்ணீர் நடுங்கச்செய்தது. ஆனால் குளிர்நீரில் சட்டென்று மூழ்கினால் உள்ளிருந்து ஒரு சூடு வந்து புறக்குளிரை சந்திப்பது தெரியும். இளமார்புகளில் மெல்லிய சேலை வழிவதுபோல பாறைகளை தழுவிவிரிந்த தூய நீர். தமிழ்நாட்டில் மலைப்பகுதிதவிர எங்குமே பொதுநீர்நிலைகள் அல்லது ஓடைகளில் தூயநீரைப் பார்க்க முடியாது என்பதனால் அந்த நீரில் குளிப்பது அப்படி ஓர் ஆனந்தமாக இருந்தது.

மீண்டும் கிளம்பி தேனி சென்று ஓரு சாலையோர உணவகத்தில் சாப்பிட்டோம். நான் பொங்கல் வாங்கினேன். பொங்கலில் பருப்பு போடும் பழக்கம் அங்கெல்லாம் இல்லை போல. தாளித்த சோறுதான் அது. இட்லி பரவாயில்லை என்றார்கள், ஆனால் சட்டினி கடலைமாவை காய்ச்சியது போல் இருந்தது. ஆனாலும் காலையில் குளித்தால் வரும் உக்கிரமான பசியில் எல்லாருமே நன்றாகச் சாப்பிட்டார்கள்.

எட்டு மணிக்கு சின்னமனூர் சென்றோம். அங்கே சாலையோரமாக தனசேகர் வந்து நின்றார். நினைத்திருந்ததை விடவும் வயதில் இளையவர் என்று நினைத்தேன். இந்த கணிப்பொறியாளர்கள் பெரும்பாலானவர்களைச் சந்திக்கும்போது அந்த எண்ணம்தான் வருகிறது. சின்னமனூரில் தனசேகரின் வீட்டுக்குச் சென்றோம். அவரது அப்பாவும் அண்ணாவும் அங்கே வாழைக்காய் மொத்த வியாபாரம் செய்கிறார்கள். சின்னமனூரின் பொருளாதாரமே பச்சைவாழைப்பழத்தை நம்பித்தான்.

தனசேகர் காபி போட்டுக்கொடுத்தார். நன்றாகவே போட்டார். அவரது அப்பாவைப் பார்த்ததுமே இவர் திராவிட இயக்கத்தவராக இருக்க வாய்ப்பு என எண்ணிக்கொண்டேன். துண்டு போட்டு சிறிய மீசை வைத்திருந்தார். அன்பாகக் கைகூப்பினார். ஓரிரு சொற்கள் பேசிக்கொண்டிருந்தோம். அவர் திராவிடர் கழகத்தில் இருந்தார் என்று பின்பு தனசேகர் சொன்னார்.

பன்னிரண்டு மணிக்கு மேகமலைக்கு இரு கார்களில் கிளம்பினோம். தனசேகர் ஒரு டாட்டா சுமோ வண்டி ஏற்பாடு செய்திருந்தார். மேகமலைச் சாலை சமீபத்திய மழையால் மிகவும் சிதிலமாகிக் கிடந்தது. ‘காலையில் உட்கார்ந்தே உடற்பயிற்சி செய்வது இதுதான் முதல்முறை’ என்றார் கல்பற்றா நாராயணன்.

சிறிய சாலை. இருமருங்கும் காடுகள். ஐம்பதுவருடம் முன்பு கோடைக்கானல் சாலை எப்படி இருந்திருக்குமோ அதுபோல இருந்தது மேகமலை. செல்லும் வழியில் சில இடங்களில் நிறுத்தி காட்டைப் பார்த்தபடிச் சென்றோம். சாலை எங்கும் யானைப்பிண்டம் கிடந்தது. ஒரு வளைவு திரும்பும்போது சிவா ‘யானை!” என்றார்

பக்கத்து மலைச்சரிவில் மூன்று யானைகள் சென்று கொண்டிருந்தன. எங்கள் வாசனை அவற்றுக்குக் கிடைத்திருக்க வேண்டும். நிதானமான அசைவுகளுடன் மரங்களை ஒடித்து தின்றபடிச் சென்றன. காட்டுக்குள் யானையைப் பார்ப்பது எப்போதுமே பரவசமான ஓர் அனுபவம். அது யானையா பாறையா என்று பிரக்ஞை மயங்கிக்கொண்டே இருக்கும். காட்டு யானை உடலில் உள்ள சுதந்திரத்தின் திமிர் பேரழகு கொண்டது.

மேகமலைக்குச் சென்று சேர்ந்தபோது மூன்றரை மணி ஆகிவிட்டிருந்தது. மேகமலை கொடைக்கானல் அளவுக்கே உயரமானது. குளிரானது. ஆனால் கொடைக்கானலின் எந்த ஆடம்பரமும் இங்கே இல்லை. சுற்றுலாப்பயணிகள் அனேகமாக வருவதே இல்லை. விடுதிகள் உணவகங்கள் ஏதும் இல்லை. ஹைவேவிஸ் ஊராட்சியின் தங்கும் விடுதி ஒன்று மட்டுமே உள்ளது. அதனருகே ஒரு சிறிய டீக்கடை. விடுதியில் தங்கவும் ஓட்டலில் சாப்பிடவும் முன்னரே சொல்லி ஏற்பாடு செய்திருந்தார் தனசேகர். வனக்காவலர் ஒருவரும் கூடவே வந்தார்.

விடுதியில் மூன்று அறைகளில் அறைக்கு மூவர் வீதம் தங்கினோம். நடுத்தர வசதிகொண்ட அறைகள். நானும் கல்பற்றா நாராயணனும் கிருஷ்ணனும் ஓர் அறையில். உள்ளே சென்று பெட்டிகளை வைத்துவிட்டு வந்து சாப்பிட்டோம். எதிர்பாராதபடி மிகச்சிறந்த சாப்பாடு. எல்லாருமே இரவு கண்விழித்து வந்தவர்கள். படுத்து ஐந்து மணிவரை தூங்கினோம்.

மேகமலை நாலைந்து மலைச்சிகரங்கள் நடுவே உள்ள ஒரு பள்ளத்தாக்கு. மேகமலைதான் தமிழ்நாட்டில் உள்ள மலைவாச தலங்களில் சிறந்த பெயர் கொண்டது என்றார் கல்பற்ற நாராயணன். ”ஒரு நாவலுக்கு தலைப்பாக வைக்கலாம்” அங்கே மூன்று அணைகளைக் கட்டி நடுவே உள்ள பகுதியில் நீரைத்தேக்கி ஒரு பெரிய ஏரியை உருவாக்கியிருக்கிறார்கள்.

நீலநீர் தேங்கி மெல்ல அலையடித்த ஏரிக்கரையில் ஏரியைப் பார்த்தபடி இருந்தது எங்கள் விடுதி. விடுதி முற்றத்தில் அமர்ந்து ஏரியின் அலைகளைப் பார்த்துக்கொண்டிருப்பது இனிய அனுபவமாக இருந்தது. தன்னிச்சையாக ‘வசந்தகால நதிகளிலே வைர மணி நீரலைகள்!’ என்ற பாட்டு ஞாபகம் வந்தது. எந்தபடம் என்று கேட்டேன். சிவா ‘மூன்றுமுடிச்சு’ என்றார். ‘வைரமணி நீரலைகள்’ என்ற சொல்லாட்சி சிறப்பானது என்று எண்ணிக்கொண்டேன். ஏரியைப்பார்க்கப் பார்க்க அந்த சொல்லிணைவு நாவில் வந்தபடியே இருந்தது.

மாலையில் காரில் ஏரியைச் சுற்றி இருந்த சாலைவழியாகச் சென்றொ ஓர் அணைக்கட்டை அடைந்தோம். எப்போதோ ஏதோ ஒரு நாகரீகத்தால் கட்டப்பட்டு கைவிடப்பட்ட கட்டுமானம் போல ஆளே இல்லாமல் காட்டுக்குள் கிடந்தது அணை. காட்டுக்கே அர்ப்பணிக்கப்பட்டது போல. ஏரியைச் சூழ தேயிலைத்தோட்டங்கள். ஏரிக்குள் தேயிலைத்தோட்டங்கள் இறங்கி மூழ்கியிருந்தன. ஏரியில் மலைகள் பச்சைஅலைகளாக பிரதிபலித்து நெளிந்தாடின.

 

புகைப்படம் எடுக்கும் சிவா

அணையைச் சுற்றி ஒரு ஓடை வழியாக காட்டுக்குள் இறங்கினோம். காட்டோடையில் பாய்ந்த உக்கிரமான நீர்பெருக்கு பாறைகளை உடைத்துச் சரித்திருந்தது. அதன்வழியாக இறங்கி மலைவிளிம்பில் அமர்ந்து அஸ்தமனத்தைப் பார்த்தோம். மெல்லிய சிவப்புடன் வளைவாக பிரம்மாண்டமான ஒரு வெங்காயத்தோல் போல இருந்தது வானம். கீழே நில விளிம்புக்கு மேல் சிவப்பாக சூரியன். மங்கலான நியான் விளக்குபோல. பள்ளத்தாக்கு முழுக்க பாலிதீன் உறை போல சாம்பல்நிறமான பனி மூடியிருந்தது

காலை இளவெயிலில்…

வழக்கமாக அத்தகைய இடங்களில் இருபது நிமிடங்கள் ஏதும் பேசாமல் அமைதியாக இருப்பது எங்கள் வழக்கம். கண்முன் தெரியும் வெளியை கூர்ந்து நோக்கி அதிலேயே மனதை நிலைக்க விட்டு அமர்ந்திருக்க வேண்டும். அது ஒருவகை தியானம். கிருஷ்ணன் ‘அமைதியா இருப்போம்’ என்றார். இருபது நிமிடம் இருந்தோம்

காவலர்களில் ஒருவர் ஏதோ சைகை காட்டினார். எழுந்து மேலேவந்து அணைக்கட்டு மீது ஏறியபோது சுட்டிக் காட்டினார். அணைக்கு அப்பால் யானைகள் மெல்லச் சென்றுகொண்டிருந்தன. மூன்று யானைகள், கூட ஒரு குட்டி. நாங்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு மிக அருகே. கிளைகளை ஒடித்து உண்ணும்போது துதிக்கை சுழல்வது தெரிந்தது. அந்தியின் மங்கலில் பாறைகள் விளிம்பிட்ட மலைச்சரிவுக்கோட்டில் யானைகள் அசையும் பாறைகள் போல நின்றன.

கிருஷ்ணன் செந்திலுடன்

”அப்பவே யானைக்கெச்சை அடிச்சுது” என்றார் காவலர். ”ஒண்ணும் பண்ணாது. ஆனா குட்டி இருக்கு பாருங்க…அதான்” இருட்டில் யானை காட்டுப்பாறைகளுக்குள் ஒன்றாக மறைவது வரை பார்த்து நின்றோம். அந்தி ஒருவகை ஏக்கத்தை மனதில் உருவாக்குகிறது. அதிலும் இயற்கையை நிறைத்து மூழ்கடிக்கும் அந்தி ஒரு பெரிய பிரபஞ்ச நிகழ்வு. ”இங்கேயே கூடாரம்போட்டு தங்கணும் சார்” என்றார் செந்தில். அது ஒரு பிரமைதான். கூடரம் போட்டு தங்கினாலும் நாம் காட்டின் பகுதியாக ஆவதில்லை. யானை போல அந்தியின் காட்டுக்குள் கரைந்து மூழ்கப்போவதுமில்லை.

இரவில் டீக்கடையில் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டோம். எல்லாருக்குமே பயணக்களைப்பு. நல்ல குளிர் இருந்தது. இரவில் எப்போதோ விழித்துக்கொண்டபோது கடும் குளிரில் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. வெளியே விதவிதமான விலங்கொலிகள். தூரத்தில் யானையின் மெல்லிய உறுமல் ஒலி. அருகே கிருஷ்ணனின் குரட்டை. வழக்கறிஞர்களின் குரட்டையும் மற்றவர்களின் குரட்டைபோல ஒருவித தர்க்க ஒழுங்கும் இல்லாமல்தான் இருக்கும்போலும்.

காலை ஐந்தரை மணிக்கே எழுந்துவிடவேண்டும் என்றார் தனசேகர். வழக்கம்போல குழுத்தலைவரான கிருஷ்ணன்தான் எழுந்து எங்களை எழுப்ப வேண்டும் என்று விதி. அவரும் எழுந்து ஒவ்வொருவரையாக எழுப்ப அவர்கள் அவர் ஏதோ தன் சொந்தவேலையாக தங்களை தொந்தரவுசெய்கிறார் என்ற பாவனையில் சலித்துக்கொண்டு எழுந்தார்கள். வெந்நீர் இருந்ததனால் சிலர் குளித்தார்கள். நான் பல்தேய்த்து கைகால்முகம் மட்டும் கழுவிக்கொண்டேன்.

அரை இருளில் குளிரில் காரில் ஏரியைச் சுற்றிக்கொண்டு சென்றோம். மேகமலை அத்தனை குளிராக இருக்குமென எவரும் எதிர்பார்க்கவில்லை. உண்மையில் மேகமலை கொடைக்கானல் அளவுக்கே உயரமானது. சில்லிட்ட ஏரி வேறு. குளிர்காற்று கண்ணில் படும்போது கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.

விஜயராகவன்,செந்தில்..

தேயிலைத்தோட்டங்கள் சிலசமயம் பெரும் புல்வெளிகள் போல பிரமைக்காட்சி அளித்தன. தேயிலைச்செடிகள் நடுவே காரை நிறுத்திவிட்டு இறங்கி காட்டுக்குள் சென்றோம். குளிர்ந்த காற்று காட்டின் சுவாசம்போல ஓடிக்கொண்டிருந்தது. ஈரமான ஒற்றையடிப்பாதை முழுக்க வேர்கள் நரம்புகள் போல புடைத்திருந்தன. வயதான பாட்டி ஒருத்தியின் கைகள் வழியாக எறும்புகள் போல ஏறிச் செல்வதாக உணர்ந்தேன்.

காட்டுக்கு நடுவே ஒரு பெரிய பாறை வெளி. வட்டப்பாறை என்று அதற்குப் பெயர். பாறை நடுவே இரு ஓடைகள் சுனையூற்றுகளால் நீர் சேர்க்கபப்ட்டு பளபளத்து வழிந்து கீழே சென்று காட்டுக்குள் மறைந்தன. ஓடையைக் கடந்துசெல்லும்போது காட்டெருதுகளைப் பார்த்தோம். ஆறு காட்டெருதுகள் மேய்ந்துகொண்டிருந்தன. எங்கள் அசைவுகளைக் கண்டதும் திடுக்கிட்டு கனத்த திமில்கள் அதிர குதித்து மறுபக்கம் புதர்களுக்குள் சென்றன.

விரிந்த கனத்த கொம்புகள் நடுவே வெண்ணிறம். மாந்தளிர் நிற உடல். பருத்த முன்னங்கால்கள். ஆச்சரியத்துடன் தலைதூக்கி எங்களைப் பார்த்தபடி தலைவன் மட்டும் அசையாமல் நின்றது. புதர்களுக்குள் நின்ற பிற காட்டெருதுகள் ஆங்காங்கே காதுகள் அசைய பார்த்தன. பின்பு தலைவன் காதுகளை பின்னால் சரித்து புதர்களுக்குள் செல்ல அனைத்தும் நீரில் மூழ்குவதுபோல பசிய காட்டுக்குள் சென்று மறைந்தன. காடு மீன்கள் நிறைந்த கடல்போல பசுமையாக அலையடித்தது.

காலை ஏழு மணி. வட்டப்பாறை மீது மட்டும் மரங்கள் இல்லை. சுற்றிலும் அடந்த காடு. காடே சருமமாக எழுந்த மலைகள். மலையுச்சிகள் மீது ஒளி பிசிறாக எழுந்து வானை நிரப்பிக்கொண்டிருந்தது. கண்களை உறுத்தாத மென்னொளி. இதை ‘மணிவெளிச்சம்’ என்று எங்களூரில் சொல்வார்கள். வைரத்திற்குள் பரவும் ஒளி! அதாவது ஒருபொருள் இன்னொன்றை ஒளிரச்செய்யும் அக ஒளி அது.

காலையின் இளவெயிலில் தனிந்த்து நீராடும் சிறிய மரங்களில் தெரியும் பரவசம் உயிர் அதன் அதி தூய நிலையில் இயற்கையின் உள்ளாற்றலைக் கொன்டாடுவது என்று தோன்றும். ஒளி எத்தனை மகத்தானது. அத்தனை உயிர்களுக்குள்ளும் அதுதான் வேறு வடிவில் குடிகொள்கிறது என்று புராதன மனங்கள் உணர்ந்தது அபாரமான கவித்துவக்கணத்தில்தான் போலும்

பாறை மீது அமர்ந்துகொண்டு காட்டைப் பார்த்தோம். காட்டில் ஒரு நீண்டதூர நடைக்குப் பின்னர் அமர்ந்திருக்கும்போது களைப்பும் பரவசமும் கலந்த ஒரு திளைப்பு ஏற்படும். காற்றில் ஒளி பரவி வெட்டவெளியில் அலையடித்தது. அடர்காட்டுக்கே உரிய பச்சை ஒளி. காலமின்மையில் எவருமே கண்ணால் தீண்டாத தூய்மையில் ஓங்கி நின்ற மௌன்மலைச்சிகரங்கள்.

தலையில் துண்டுடன் வசந்தகுமார், ஓரமாக தனசேகர்

இடப் பக்கத்துக்காட்டில் ஒரு கச்சேரி போலவே ஏதோ பறவை பலவகையான சுவரஸ்தானங்களில் பாடிக்கொண்டிருந்தது. சிவாவும் செந்திலும் பாறை இறங்கி காட்டுக்குள் சென்றார்கள். கொஞ்சநேரம் கழித்து ‘வழியே இல்ல சார்…ஒரு சின்ன வழி இருக்கு..அது மான்போற வழீன்னு நெனைக்கிறேன்” என்று மீண்டார்கள்.

அந்த பாறை முழுக்க யானைபிண்டங்கள் கிடந்தன. யானைகள் அடிக்கடி வரும் இடம்தான் போல. காட்டுக்கு நடுவே ஒரு அபாரமான மைதானம். காட்டுவிலங்குகளின் விளையாட்டரங்கு என்று எண்ண சுவாரசியமாக இருந்தது. ஈரமிருந்ததனால் ஓரளவுக்கு அட்டைகள் இருந்தன. ஆனால் அக்காமலையின் அட்டைகளைப் பார்த்த கண்களுக்கு அவை சிறு புழுக்களாகவே பட்டன. வசந்தகுமாரின் கால்களில் மட்டும் ஒன்று கடித்து குருதிவழிய விட்டிருந்தது.

<br/><a href=

 

தனசேகருடன்

காட்டுக்குள் இருக்கையில் நம்முள் உள்ள ஏதோ ஒன்று சட்டென்று விடுதலை கொள்கிறது. அதை வகுத்துரைப்பது எளிதல்ல. அறைகளாக வீடாக ஊராக நாடாக நாம் வகுத்துக்கொண்ட ஏதோ ஒன்று எல்லைகளை இழந்து முயங்குகிறது. கண்முன்னால் ஒரு பெரும் ஆனந்தவெளியாக விரிகிறது அது

[மேலும்]

முந்தைய கட்டுரைபடைப்புகள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாந்தியின் பிள்ளைகள் கடிதங்கள்