சாதியை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கங்கள்  பல

உங்களின் பசும்பொன் படித்தேன். எனது சொந்த ஊர் பரமக்குடி மற்றும் இந்த தேவர் ஜெயந்தி சில வருடங்களாக இம்மானுவேல் நினைவு தினம் சென்ற மாதம் நடந்தது. இம்மானுவேல் நினைவு தினம் எங்கள் ஊரில் சில வருடங்களாக நடக்கிறது. (செப் 11).

கடந்த செப் 11 அன்றும் பள்ளிகள் விடுமுறை மற்றும் நீங்கள் கடந்த தேவர் ஜெயந்தி அன்று பார்த்த அதே கடை அடைப்பு அதே பீதி மக்கள் மனதில். உங்களுக்கு மேலும் ஒரு தகவல் இந்த வருடம் தேவர் ஜெயந்தி (oct 28,29,30) மூன்று நாள் பள்ளிகள் விடுமுறை. எங்கள் ஊரில் வாழும் மக்களின் மன நிலையை கொஞ்சம் நினைத்து பாருங்கள் அட, மக்களை விடுங்கள் எங்கள் ஊர் குழந்தைகளுக்கு இந்த நான்கு நாட்கள் பதிலாக நான்கு சனிக்கிழமை அன்று அவர்களுக்கு பள்ளி செயல்படும் .

 

 

இவற்றை எல்லாம் நிறுத்த நான் மற்றும் பாதிக்கபட்டவர்களை திரட்டி உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு போடும் அளவுக்கு எங்கள் மனம் கசந்து உள்ளது

இப்படிக்கு நண்பர்

சின்னப்பா

 

அன்புள்ள சின்னப்பா,

உங்கள் கடிதம் கண்டேன். பசும்பொன் சென்றது குறித்த என்னுடைய எண்ணங்களில் நான் சொல்ல விழைவதை மென்மையாகச் சொல்லியிருக்கிறேன் என்றே எண்ணுகிறேன். சமகால அரசியலை சுடச்சுட விமரிசனம் செய்வது மிக எளிது. அதைச்செய்ய ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். நீண்ட வரலாற்றுப்பக்கங்கள் வழியாக ஒட்டுமொத்தமாகப் பார்ப்பது அத்தனை எளிய விஷயமல்ல. அதை சொல்லிப்புரியவைப்பது கடினம். விளைவுகளைக் குறித்த புரிதலுடன் பொறுப்புடன் சொல்வது இன்னமும் கடினம். .

ஒற்றைவரியில் சாதி ஒழிப்பு பேசப்படும் காலகட்டம் கடந்த இருபது வருடங்களில் அபத்தமாக பின்னகர்ந்துவிட்டது. இன்று அத்தகைய குரல்கள் யதார்த்ததுடன் எந்தவகையான தொடர்பும் இல்லாமல் மேடையில் ஒலிக்கும் போலிக்குரல்களாக மட்டுமே உள்ளன. சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் கிளர்ந்தெழுந்து சாதியை ஒழிப்பது என்ற கனவே இன்று உண்மையில் எவரிடமும் இல்லை.

ஏனென்றால் சாதியடுக்குகளின் கீழ் கீழ் நிலைகளில் உள்ள மக்கள் அரசியலுக்கும் அதிகாரத்திற்கும் வரும்தோறும் அவர்கள் மேலும் மேலும் சாதியாக ஒருங்கிணைந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பதும், அவர்களால் சாதியை ஒருபோதும் விடமுடியாது என்பதும், அவர்கள் அதிகாரம் வழியாக அரசியல் சமூக தளங்களில் சாதியடையாளம் மேலும் மேலும் வலுவடைந்தே வருகிறது என்பதும், நிரூபணமாகியபடியே இருக்கிறது.

சாதி போன்ற சமூக அமைப்புகள் வரலாற்றின் அடித்தளத்தில் இருந்து தன்னிச்சையாக முளைத்துவந்தவை. அவற்றுக்கு நடைமுறைப்பயன் உள்ளவரை வெற்று இலட்சியவாதத்தால் அவற்றை ஒழித்துவிட முடியாது. இலட்சியவாதி தன்னை இலட்சியவாதியாக முன்வைக்க அந்த கோஷம் பயன்படுமே ஒழிய நடைமுறையில் ஒன்றும் நிகழாது.

ஒருகாலத்தில் சாதி என்ற அமைப்பை சற்றும் புரிந்துகொள்ளாமல் சில அன்னியரால் ‘ரூம்போட்டு யோசித்து’ உருவாக்கப்பட்ட சதி என்று நம்பிய சீர்திருத்தவாதிகள் இருந்தார்கள். அப்போதே சாதியின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் குறித்து ஆழமான ஆய்வுகளைச் செய்த ஆராய்ச்சியாளர்களும் இருந்தார்கள். எம்.என்.ராய், அம்பேத்கார், டி.டி.கோஸாம்பி போன்று பல தளங்களில் ஆராய்ச்சிகள் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றை ஒருங்கிணைத்து பொதுவிவாதத்துக்குக் கொண்டுவருவதற்கான அரசியல் செயல்பாடு இங்கே இருக்கவில்லை. மாறாக எளிய மேடை கூச்சல்களே போதும் என்ற முடிவுக்கு வந்தனர் நம் அரசியல்வாதிகள்.

சாதியமைப்பின் வேர்கள் நமது பழங்குடி மரபில் உள்ளன. இந்தியநிலப்பரப்பில் இருந்த பல்லாயிரம் பழங்குடிச் சமூகங்களே அடுத்த கட்டத்தில் சாதிகளாகப் பரிணாமம் கொண்டன. இந்தியப் பழங்குடிச் சமூகங்கள் நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டதன் விளைவே சாதியமைப்பு. நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் நிலமே ஏற்றதாழ்வை தீர்மானிக்கும் அளவுகோல். ஆகவே நில உடைமை சார்ந்து சாதிகள் மேலே கீழே என அமைக்கப்பட்டன. நிலம் இழந்த சாதிகள் கீழே செல்வதையும் நிலம் பெற்ற சாதிகள் மேலே வருவதையும் இந்திய வரலாற்றில் சாதாரணமாகக் காண்கிறோம். சிறந்த உதாரணம் தமிழகத்தில் உள்ள பள்ளர்கள் என்னும் தேவேந்திரகுல வேளாளர்கள். அவர்கள் நிலமிழந்து கீழே சென்றது சில நூற்றாண்டுகளுக்குள் நிகழ்ந்த விஷயம் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

சாதியமைப்பில் உள்ள அதிகார அடுக்கை உறுதியான ஆசாரமாக நிலைநிறுத்துவதற்கான கருத்தியல்கள் வைதீக மதத்தில் இருந்து எடுத்து விரிவாக்கம் செய்யப்பட்டன. இன்று நாம் பார்க்கும்போது ஏற்றத்தாழ்வை உருவாக்க அக்கருத்தியல்கள் உதவின என்று படும். ஆனால் அன்றைய நிலையில் பழங்குடிச்சமூகம் நிலப்பிரபுத்துவச் சமூகமாக ஆவதற்கான முற்போக்கான பங்களிப்பையே அவை ஆற்றின என்றே ஒரு மார்க்ஸிய ஆய்வாளர் கூறுவார். பழங்குடிச் சமூகங்களின் தீராத பரஸ்பர மோதல்களை இல்லாமலாக்கி உறுதியான கட்டுமானம் கொண்ட ஒற்றைச்சமூகமாக அதை ஆக்கவும், யாருக்கு பலமிருக்கிறதோ அவனை பிறர் அங்கீகரிக்கச்செய்து அதன்வழியாக அரசுகளையும் பேரரசுகளையும் உருவாக்கவும் அந்தக் கருத்தியல் பயன்பட்டது.

அதன் பின்னர் வந்த பௌத்த ,சமண மதங்கள் அடுத்தகட்ட பணியை ஆற்றின. அவை நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புக்குள் சீரான ஒத்திசைவையும் சமரசத்தையும் உருவாக்க முயன்றன. அதன் மூலம் வணிகத்தை வளர்த்தன. அதன் பின் உருவான பக்தி காலகட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட சைவ வைணவப் பெருமதங்கள் அனைத்து மக்களையும் ஒருங்கு திரட்டும் அமைப்புகளாக ஆகி மேலும் வலுவான பேரரசுகளுக்கு அடித்தளம் அமைத்தன.

ஆக, சாதி என்பது இந்த நாட்டில் உள்ள மக்களின் பழங்குடி வேர். அவர்களின் அடையாளமாக தொன்றுதொட்டு இருந்து வருவது. அந்த அடையாளங்கள் காலப்போக்கில் பலவகையான மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கலாம் என்றாலும் அந்த வேர்ப்பிடிப்பு எப்போதுமே மாறியதில்லை. ஆகவே இன்றும் இந்தியாவின் எந்த ஒரு சாதியப்படிநிலையில் இருப்பவருக்கும் அவரது சுய அடையாளம் சாதியைச் சார்ந்தே உள்ளது. அவர் தன்னை வகுத்துக்கொள்வதே அதன் வழியாகத்தான்.

இந்தியாவில் சமானமான இயல்புள்ள சிறியசிறிய சாதிகள் இணைந்து பெரியசாதிகளாக ஆகும்போக்குதான் எப்போதும் காணக்கிடைக்கிறது. பெரியசாதிகள் ஒருபோதும் சிறிய சாதிகளாக பிரிவதில்லை. அதாவது மக்கள் சாதிகளாக பிரிக்கப்படவில்லை. சாதிகளாக தொகுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தொகுப்பு மூலமே அவர்கள் மக்கள்திரளாக ஆகி அதிகாரம் நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக மறவர்களில் உள்ள குலங்களான கொண்டையங்கோட்டையர், செம்புநாட்டார், ஆப்பநாட்டார் போன்றவர்கள் இன்றும்கூட பழக்கவழக்கம், ஆசாரம் அனைத்திலும் தனிச்சாதிகளாகவே இருக்கிறார்கள். தங்கள் தனியடையாளத்தை அவர்கள் விடுவதேயில்லை. ஆனால் மறவர் என்ற பொது அடையாளத்துக்குள் அவர்கள் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் வந்ததன் வழியாக அதிகாரத்தை நோக்கி நகர்ந்தார்கள். அதன்பின் வெள்ளையர் எடுத்த முதல் சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பில் தங்களை சமானமான பிறசாதியினருடன் இணைத்துக்கொண்டு முக்குலத்தோர் என அடையாளப்படுத்திக்கொண்டது வழியாக அடுத்தகட்ட ஜனநாயக அதிகாரம் நோக்கிச் சென்றார்கள்.

இதுதான் இங்கே எல்லா சாதிகளும் அதிகாரமும் சமூக இடமும் பெறும் வழியாக இருக்கிறது. ஆகவே சாதியை ‘ஒழிப்ப’தெல்லாம் சாத்தியமே அல்ல. கோடானுகோடி மக்களை அவர்களின் அடையாளத்தை விட்டுவிடும்படி கொள்கைப்பிரச்சாரம் செய்வதென்பது நடைமுறைச் சாத்தியமான ஒன்றல்ல. சாதிகள் தங்களைத் திரட்டிக்கொண்டு ஜனநாயக அதிகாரத்தை நோக்கிச் செல்லும் இன்றைய போட்டியை இயல்பான ஒன்றாக எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

தனிப்பட்ட முறையில் நான் சாதியை நம்பாதவன். சாதியடையாளத்தை துறந்தே தனிவாழ்க்கையை அமைத்துக்கொண்டவன். ஆனால் இன்றைய சூழலில் சாதியமைப்பு வலுவாகவே நீடிக்கும் என்றே நினைக்கிறேன். நானறிந்தவரை தமிழில் சாதியைப் பற்றிச் சொல்லும்போதே பாய்ந்து சாதிக்கு எதிராக கர்ஜனை செய்யும் எவருமே தனிவாழ்க்கையில் சாதியை விட்டு விலகாதவர்கள். சொல்லப்போனால் ஒருவர் சாதி ஒழிக என்று கூவினாலே அவர் சாதியவாதி என்றுதான் பொருள்.

இங்கே இன்று பிரபலமாக இருக்கும் இடதுசாரிக் கட்சிகள் திராவிடக்கட்சிகள் இரண்டுமே சாதியழிப்பை கொள்கையாகக் கொண்டவை. தமிழ்நாட்டு மேடைகளில் சாதியொழிப்பு பேசப்படாத நாளே இல்லை. அவர்களில் வெறும் ஒரு சதவீதம் பேர் சாதியை விட்டு விலகினாலே இங்கே பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்குமே?

ஆனால் சாதி அழியாததா? அழியப்படக்கூடாததா? இரண்டுக்குமே நான்  ‘அழியவேண்டியது, அழிக்கப்படகூடியது’  என்றே பதில்சொல்வேன். இன்றைய இந்திய சமூகம் வாலை நிலப்பிரபுத்துவத்திலும் தலையை முதலாளித்துவத்திலும் வைத்துக்கிடக்கிறது. நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளும் முதலாளித்துவ வாழ்க்கைமுறையுமாக இரட்டை வாழ்க்கை வாழ்கிறது. அதிநவீன ஹுண்டாய் காருக்கு திருஷ்டி பொம்மையை கட்டித்தொங்கவிடுபவர்கள் நாம். நாம் எதிர்காலத்தில் முழுமையாக நிலப்பிரபுத்துவத்தை முற்றிலும் விட்டுவிட்டு உயர்முதலாளித்துவ அமைப்புக்குள் செல்லும்போது சாதி இல்லாமலாகலாம். அதாவது வெறும் பெயர் அடையாளமாக நீடிக்கலாம். அது நெடுங்காலம் நிகழக்கூடிய ஒரு வளர்சிதைப்போக்கு. அது வரை அது அரசியல் மற்றும் சமூகக் குழுஅடையாளமாக, தனிமனிதனின் சுயமாக நீடிக்கும்.

ஆகவே தேவர் சாதியினர் தங்களை திரட்டிக்கொள்வதை நான் எதிர்மறையானதாகப் பார்க்கவில்லை. அவர்கள் தங்களை ஜனநாயக அமைப்புக்குள் முன்னேற்றிக்கொள்ள இன்று சாத்தியமான ஒரு வழி என்றே அதை காண்கிறேன். இன்று அவர்களின் சமூகத்திற்குள் இருக்கும் பல்வேறு எதிர்மறைக்கூறுகளை அதன் மூலம் அவர்கள் களைந்துகொள்ள முடியும். உள்முரண்களை தீர்த்துக்கொள்ள முடியும். அதன்மூலம் அவர்கள் பொருளியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னேற முடியும். அது அவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் நல்லதே.

ஆனால் இதற்குச் சில வழிமுறைகள் உள்ளன. ஜனநாயகம் அந்தவழிகளை மட்டுமே வழங்குகிறது. அந்த கரைகளை மீறுவார்கள் என்றால் அதன் அழிவுகள் அவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்ச்சமூகத்திற்கேதான் என்றுதான் நான் நினைக்கிறேன். பலவகையிலும் தேவர்சமூகத்திற்குச் சமானமானது நாயர் சமூகம். தேவரையும் வேளாளர்களையும் இணைத்தால் உருவாகும் சமூகம் என அதைச் சொல்லலாம். அதாவது போர்த்தொழிலும் அதற்கான மனநிலைகளும் பண்பாடும் உண்டு. அதேசமயம் வேளாளர்களைப்போல நில உடைமையும் ஆட்சியதிகாரமும் மத அதிகாரமும் கல்வியும் உண்டு.

 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாயர் சமூகம் இன்றைய தேவர் சமூகம் எதிர்கொள்ளும் பெரும்பாலும் எல்லா வகையான சிக்கல்களையும் சந்தித்துக் கொண்டிருந்தது. ஒன்று, மிதமிஞ்சிய சுயபெருமிதம். ஆட்சியாளர்களே தாங்கள்தான் என்ற எண்ணம். இரண்டு, ஏராளமான உட்பிரிவுகளும் அவர்களுக்குள் மோதலும். மூன்று, இயல்பாகவே ரத்தத்தில் இருந்த வன்முறைப்போக்கும் அதன் விளைவான வெட்டிச்சண்டைகளும் வம்பு வழக்குகளும்.

1920களில் கூட கேரளநாயர் குடும்பங்கள் ஒருவருக்கொருவர் குடிப்பகை என்ற விஷயத்தைப் பேணி வந்தார்கள். ஒருகுடும்பத்தில் ஒருவரை பிறிதொரு குடும்பத்தினர் கொன்றுவிட்டால் அதற்கு இவர்கள் இருவரை கொலை செய்வார்கள். இந்தக் கணக்கு தலைமுறை தலைமுறையாக நீண்டு செல்லும். நடுக்கேரளத்தில் ஒரு பிரபலமான குடிப்பகை எட்டு நூற்றாண்டு வரலாறு கொண்டது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது! இன்றும்கூட கேரள திரைப்படங்களில் இந்த விஷயத்தைக் காணலாம்.

சுயபெருமிதம் காரணமாக வெட்டி ஆடம்பரங்களில் அழிந்துகொண்டிருந்தது நாயர் சாதி. திருமணங்கள் சாவு விருந்துகள் எல்லாம் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படவேண்டும். பெரும்பாலும் சொத்துக்களை விற்றுத்தான் இவை செய்யப்படும். ஒரு விருந்தில் எத்தனை பாயாசம் என்பதே அந்த குடும்பத்தை அளக்கும் அளவுகோலாக இருந்தது. பதிநான்கு பாயசத்துடன் விருந்து போட்டால் அந்தக்குடும்பம் ரொம்ப உசத்தி.

கண்ணெதிரே பிற சாதிகள் மேலெழுந்து வரக்கண்டு பொறாமையும் காழ்ப்பும் கொண்டு அவர்களுக்கு எதிராகப் போராடினார்கள் நாயர்கள். ஈழவர்களின் எழுச்சியை ஆரம்ப கட்டத்தில் வன்முறை மூலம் தடுத்தார்கள். ஈழவர்களின் குடுமிகளை அறுத்தார்கள். நாடார்களின் வளர்ச்சிக்கு எதிராக நின்று அவர்களின் மேலாடைகளை கிழித்தார்கள். அக்காலத்தைய பிரபலமான கருத்துப்படம் ஒன்றில் ஒரு நாயர் பெரிய மழையை சிறிய ஒரு கோவர்த்தன கிரியை தூக்கிக்கொண்டு தடுப்பதைக் காணலாம். கீழே கொஞ்ச நாயர்கள் படுத்து ஓய்வெடுக்கிறார்கள்

ஆனால் நாற்பதுகளில் பாதிப்பங்கு நாயர் குடும்பங்கள் சண்டைகளில் வழக்குகளில் சிதிலமாயின. சொத்துக்கள் பறிபோயின, கௌரம் மட்டும் மிஞ்சியது. முருங்கைக்கீரையும் வாழைத்தண்டும் வேகவைத்து தின்றுகொண்டு வெளியே தெரியாமல் பட்டினி கிடக்கும் நிலைக்கு வந்தார்கள். வாய்ச்சவடால் மட்டுமே துணை. ஊரில் வேலைசெய்யமுடியாது, கௌரவம் தடுக்கும். நாயர் ஆயுதமேந்தலாமெ ஒழிய கலப்பை பிடிக்கக்கூடாது. பட்டினி கிடந்து குழந்தைகள் சாகாமலிருக்கவேண்டுமென்றால் ஊரைவிட்டே செல்லவேண்டுமென்ற நிலை. உங்களூருக்கு காதில் வெறும் பீடியுடன் வந்து இறங்கி சாலையோரம் டீக்கடை போட்ட நாயர் அதனால்தான் அப்படி வந்திருப்பார்.

இந்த இக்கட்டில் இருந்து நாயர் சாதியைக் காப்பாற்றியவர் மன்னத்து பத்மநாபன் என்ற தலைவர். 1878ல் பிறந்த பத்மநாபன் சுதந்திரப்போராளியாகவும் சமூகசீதிருத்தவாதியாகவும் இருந்தவர். 1914ல் நாயர் சர்வீஸ் சொசைட்டி [NSS] என்ற அமைப்பை நிறுவினார். 1970ல் அவர் இறக்கும் வரை என்.எஸ்.எஸ் அமைப்பின் செயலர் பொறுப்பில் இருந்தார். அந்த அமைப்பை கேரளத்தின் எல்லா சின்னஞ்சிறு மூலைக்கும் கொண்டு சென்றார். கரையோகம் என்று சொல்லப்படும் ஊர்க்கிளைகளை அமைத்து அதன்கீழ் ஒரு கிராமத்தைச் சேர்ந்த எல்லா நாயர்களையும் இணைப்பது அந்த இயக்கத்தின் வழிமுறை. ஒப்புநோக்க அது எளிதாகவே இருந்தது. ஏனென்றால் ஏற்கனவே பெரும்பாலான கிராமங்களில் நாயர்களின் மரபான கிராமசபைகள் இருந்தன. அவற்றையே கரையோகங்களாக மாற்றிக் கொண்டார்.

மன்னத்து பத்மநாபனின் பங்களிப்பு என்ன? முதல் சாதனை, சமூக மாற்றத்துக்கு எதிரான திமிர்பிடித்த சக்தியாக இருந்த நாயர் சாதியை அந்த மூர்க்கத்தில் இருந்து விலக்கினார். கேரளத்தில் பிராமணர்களான நம்பூதிரிகள் மொத்தம் ஐம்பதாயிரம்பேர்தான். அடுத்தகட்ட உயர்சாதியான நாயர்கள் சாதியையும் ஆசாரங்களையும் பேணிச்சுமக்கும் பொறுப்பை தாங்களே எடுத்துக்கொண்டு காலக்கடிகாரத்தை பின்னால் திருப்ப முயன்று மொத்த சக்தியையும் வீணடித்துக்கொண்டிருந்தனர். நாயர் சாதியை நிகழ்ந்துகொண்டிருந்த முற்போக்கான சமூக மாற்றங்களுடன் ஒத்துப்போகிறவர்களாக ஆக்கியதே மன்னத்து பத்மநாபனின் பெரும் சாதனை.

1924ல் குருவாயூர், வைக்கம் ஆலயங்களில் தலித்துக்கள் நுழைவதற்கான போராட்டங்களில் என்.எஸ்.எஸ் அமைப்பை காங்கிரஸின் ஆதரவுச் சக்தியாக பங்கேற்கச் செய்தார் மன்னத்து பத்மநாபன். இந்தியச் சுதந்திரப்போராட்டத்திற்கு என்.எஸ்.எஸ்ஸை கொண்டுவந்தார். நாராயணகுருவின் இயக்கத்துடன் நல்லுறவைப் பேணி அவர்களுடன் சேர்ந்து போராடினார். அதாவது நாயர்களுக்கு கீழே இருந்த சாதிகள் நடத்திய உரிமைப்போராட்டங்கள் அனைத்தையும் அவரும் ஆதரித்தார். அவர்களுடன் சேர்ந்து போராடவும் முன்வந்தார். எந்தச் சாதியின் முன்னேற்றமும் நாயரின் முன்னேற்றமாகவே ஆகும் என்பதே அவரது கோஷமாக இருந்தது.

நாயர்களை நிலப்பிரபுத்துவ மனநிலையில் இருந்து வெளியே கொண்டுவந்ததே மன்னத்து பத்மனாபனின் முக்கியமான இரண்டாவது பங்களிப்பு. என்.எஸ்.எஸ் அமைப்பு கேரளம் முழுக்க நூற்றுக்கணக்கான பள்ளிகளையும் கல்லூரிகளையும் ஆரம்பித்தது. இந்தியாவில் மிக அதிகமாக கல்வி நிறுவனங்களை நடத்தும் சாதியமைப்பு என்.எஸ்.எஸ் தான்.

நாயர்கள் அனைவரும் கண்டிப்பாக உயர்கல்வி வரை சென்றாக வேண்டும் என்ற உக்கிரமான பிரச்சாரத்தை அவர் முன்னெடுத்தார். கிறித்தவ மிஷனரிகளின் கல்விச்சேவையை நாயர்கள் முழுக்கமுழுக்க பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று சொன்ன மன்னத்து பத்மநாபன் அவர்களை நட்புசக்திகளாகவே அணுகினார். இன்றுவரை நாயர் சமூகத்தின் வெற்றிக்கும் செல்வத்திற்கும் காரணமாக அமைந்திருப்பது கல்வியே. குறிப்பாக பெண்கள் பட்டப்படிப்பு படித்தாகவேண்டும் என்ற பிரச்சாரத்தை அவர் தொடர்ந்து செய்தார். சின்னஞ்சிறு குமரிமாவட்டத்தில் என்.எஸ்.எஸ் மூன்று கல்லூரிகளை தொடங்கி அரைநூற்றாண்டாக நடத்திவருகிறது. மூன்றுமே பெண்கள் கல்லூரிகள்!

நிலப்பிரபுத்துவ ஆசாரங்களுக்கு எதிரான சீர்திருத்தங்களும் குறிப்பிடத்தக்கவை. கெட்டுகல்யாணம் போன்ற பல ஆசாரங்களை என்.எஸ்.எஸ் தடைசெய்தது. திருமணச் சீர்திருத்தங்கள் என்.எஸ்.எஸ் இயக்கத்தின் முக்கியமான சாதனைகள். ஆடம்பரமான திருமணங்கள் முழுக்கமுழுக்க தடைசெய்யப்பட்டன. ஒரு திருமணத்துக்கு அதிகபட்சம் இத்தனைபேரை மட்டுமே அழைக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஒரு கரையோகத்துக்கு வெளியே யாரையுமே கூப்பிடக்கூடாது. திருமணங்களில் மொய், அன்பளிப்பு போன்ற நிதியுதவிகள் செய்யப்படக்கூடாது.

திருமணத்துக்குப் பிராமணப் புரோகிதர் வருவதை என்.எஸ்.எஸ் தடைசெய்தது. ஹோமங்கள் போன்ற எதுவுமே கூடாது. பத்தே நிமிடத்தில் திருமணம் முடியும். அதாவது திருமணத்துக்கு வந்துவிட்டு கல்விச்சாலைகளுக்கோ வேலைகளுக்கோ போகமுடியவேண்டும். திருமணத்துக்கான பாத்திரங்கள் போன்றவற்றை என்.எஸ்.எஸ் கரையோகமே வைத்திருக்கும். அவை குறைந்த செலவில் வாடகைக்குக் கொடுக்கப்படும். கரையோகம் இளைஞர்கள் வந்து எளிமையாக திருமணத்தை நடத்தித் தருவார்கள். மரணச்சடங்கு இன்னமும் எளிமையானதாக ஆக்கப்பட்டது.

நாயர்களுக்குள் உள்ள அடிதடிச்சண்டைகளை தீர்க்கவும் சிவில் வழக்குகளை முடிக்கவும் கூட்டுச் சமரசமுறையை என்.எஸ்.எஸ் மேற்கொண்டது. நாயர்கள் பெரும்பாலும் கோயில் மரியாதைகளைச் சொல்லி வெட்டுகுத்தில் ஈடுபட்டுவந்தனர் –தேவர்களைப்போலவே. சமரசம் மூலமும் கடுமையான சமூக தண்டனைகள் மூலமும் இந்த வழக்கம் ஐம்பதுகளிலேயே முற்றாக ஒழிக்கப்பட்டது.

கடைசியாக, மிக முற்போக்கான விஷயம் ஒன்று நடந்தது.நாயர்களின் உபசாதிகள் மெல்ல மெல்ல ஒழிக்கப்பட்டு ஒரே சாதியாக அது ஆக்கப்பட்டது. இன்று உபசாதி அடையாளமே அனேகமாக இல்லை. திருமணங்களில்கூட பார்க்கப்படுவதில்லை. மேலும் சமானமான சாதிகளையும் என்.எஸ்.எஸ் உள்ளிழுத்துக்கொண்டது. கேரளத்தில் நூறாண்டுகளுக்கு முன்னால்வரை ஏராளமான தமிழக வேளாளர் இருந்தார்கள். திருவிதாங்கூர் மன்னர்களாலும் அதற்கு முன்னர் சோழர்களாலும் குடியேற்றப்பட்டவர்கள். பெரும்பாலும் ஊர்க்கணக்குப்பிள்ளைகள். அவர்கள் என்.எஸ்.எஸ்ஸில் உறுப்பினராகலாம், அவர்களும் நாயர்களே என என்.எஸ்.எஸ் அறிவித்தது.

இப்போது அரை நூற்றாண்டுக்காலம் கழித்து அவர்கள் அனேகமாக அனைவருமே நாயர்சாதிக்குள் இணைந்து மறைந்துவிட்டிருக்கிறார்கள். பல குடும்பங்களில் கேட்டுப்போனால் பாட்டி தாத்தாக்கள்தான் வேளாளர்களாக இருப்பார்கள். அதேபோல ரெட்டியார்களும் கணிசமானவர்கள் நாயர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள்.

எப்படிப்பார்த்தாலும் நாயர்களுக்கு ஈழவர்கள்தான் போட்டிச்சமூகம். எண்ணிக்கையிலும் சமூக நிலையிலும் எல்லாம். அந்தப்போட்டி எப்போதும் உள்ளது. அரசியலில், இலக்கியத்தில் எங்கும். ஆனால் எப்போதுமே என்.எஸ்.எஸ் ஈழவர்களின் அமைப்புடன் நட்புறவைப் பேணி வருகிறது. என்.எஸ்.எஸ் உருவான பின்னர் கடந்த அரைநூற்றாண்டில் எங்குமே நாயர்- ஈழவர் கலகம் நிகழ்ந்ததில்லை. ஈழவர்களின் மாநாடுகளில் என்.எஸ்.எஸ் தலைவர்கள் பேசுவது சாதாரணம். அய்யன்காளி உருவாக்கிய புலையர் மகாசபையின் நிகழ்ச்சிகளிலும் என்.எஸ்.எஸ் தலைவர்கள் சாதாரணமாகப் பங்குகொள்கிறார்கள்.

ஆனால் என்ன சொன்னாலும் என்.எஸ்.எஸ் ஒரு வலதுசாரி அமைப்புதான். அது எப்போதும் இடதுசாரி இயக்கங்களுக்கு எதிராகவே இருந்துவந்துள்ளது. அது ஒரு ‘பண்ணையார்’ அமைப்பும்கூட. அதன் தலைமை எப்போதுமே உயர்குடும்பங்களுக்குரியதுதான். சாதி என்பது நிலப்பிரபுத்துவம் சார்ந்தது. அதில் வேர்கொண்ட ஓர் அமைப்பில் ஜனநாயகம் இருக்க முடியாது. அதாவது அது ஒரு முற்போக்கு அமைப்பு அல்ல. அது நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் உள்ள முற்போக்குத்தன்மை கொண்ட ஓரு நகர்வு எனலாம். நிலப்பிரபுத்துவத்தில் இருந்து ஒரு சமூகத்தை அது முதலாளித்துவத்திற்குக் கொண்டுவந்தது, அவ்வளவுதான்.

இன்று கேரளத்தில் என்.எஸ்.எஸ் அமைப்பு அதன் நேரடிப்பங்களிப்பு பெரிதும் குறைந்து ஒரு நிர்வாக அமைப்பாக மட்டும் எஞ்சியிருக்கிறது. இன்றைய நாயர்களுக்கு அந்த அமைப்பின் வழிகாட்டல் தேவை இல்லை. அவர்கள் புதுமுதலாளித்துவத்தில் வாழ்கிறார்கள். சாதியை விட பணமே இன்று அவர்களுக்கு முக்கியமான அடையாளமாக உள்ளது.

நான் தேவர்பூஜைக்குச் சென்றபோது கண்டது என்.எஸ்.எஸ் போன்ற ஓர் அமைப்பின் தேவையையே. முத்துராமலிங்கத்தேவர் அப்படி ஒரு அமைப்பை உருவாக்கியிருக்க வேண்டும். அவரால் முடியவில்லை. மூன்று முக்கியமான குறைபாடுகளைக் கண்டேன். ஒன்று தேவர்களின் உட்பிரிவுகளுக்கு இடையே இன்றும்கூட சரியான புரிந்துணர்வு இல்லை. இரண்டு, அந்தச் சாதி இன்னமும் ஓர் அமைப்பாக திரளவில்லை. ஆகவே எந்தவகையான கட்டுப்பாடும் இல்லை. ஒவ்வொரு பண்ணையாரும் ஒரு கும்பலை திரட்டி வருகிறார்கள். அவர் அழைக்கிறார் இவர் அழைக்கிறார் என விதவிதமான போஸ்டர்களை மட்டுமே எங்கும் காண நேர்ந்தது.

மூன்றாவதாக, அவர்களுக்கு எந்த இலக்கும் இல்லை. எந்த அரசியல் கனவும், எந்த சமூகத்திட்டமும், எந்த பொருளியல் இலக்கும் இல்லை. தன்னிச்சையாகக் கிளம்பி வந்த ஒரு மக்கள்திரளாகவே இருந்தார்கள். ஆகவேதான் எளிதில் எதிர்மறை உணர்ச்சிகள் ஓங்குகின்றன. பிறசாதிகளுக்கெதிராக அவர்கள் எழுப்பிய கோஷமும் அவர்களில் தெரிந்த வெறுப்பும் அவர்களுடைய சொந்த முன்னேற்றத்துக்கே எதிரானவை.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் வாழ்க்கையை நாம் பலவகையில் இன்று பார்க்க முடிகிறது. அவரது ஆரம்பகட்டத்தி தேசவிடுதலையில் பங்கெடுத்துச் சிறைசென்றவராக, சமூகசீர்திருத்தவாதியாக, தொழிற்சங்கவாதியாகக் காண்கிறோம். இரண்டாம் கட்டத்தில் அவர் காந்தியின் அகிம்சையில் நம்பிக்கை இழந்து காங்கிரஸில் இருந்து வெளியேறி, அரசியலில் தனிமைப்பட்டு, கசப்படைந்த சாதித்தலைவராக இருந்தார். அக்காலகட்டத்தில்தான் இம்மானுவேல் சேகரன் கொலைவழக்கில் அவர் சம்பந்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஒரு நண்பர் இமானுவேல் சேகரன் கொலைவழக்கில் பக்தவல்சலம் அளித்த சட்டச்சபை அறிக்கையின் நகலை அனுப்பியிருந்தார். அந்த ஆவணங்களை மட்டுமல்ல பல தனிப்பட்ட கடிதங்களையும் அக்காலகட்ட பல வெறுப்பூட்டும் துண்டுப்பிரசுரங்களையும் நான் மறைந்த தாணுலிங்கநாடார் அவர்களின் சொந்த சேகரிப்பில் 1981ல் அவரது கோரிக்கைப்படி அவரது காகிதங்களை நான் சீராக்கியபோது வாசித்திருக்கிறேன். தெரிந்தே அந்த வரலாற்றுக்குள் இன்று நான் செல்லவிரும்பவில்லை. எப்படியானாலும் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் இன்று அச்சாதியின் முத்திரை. அவரது ஒளிமிக்க ஆளுமைப்பக்கத்தை வைத்து அவரைக் கட்டமைத்துக்கொள்வதே அச்சாதிக்கு நல்லது.

தேவர்கள் தங்களை உறுதியான இலக்குள்ள அமைப்பாக ஆக்கிக்கொண்டு, சகசாதிகளுடன் இயல்பாக இணைந்துபோய், தங்களுடைய கல்வி மற்றும் தொழில் நலன்களுக்காக சீராக போராடுவார்கள் என்றால் இந்தச் சாதியடையாளம் அவர்களுக்கு ஓர் எல்லை வரை நன்மைபயக்கக் கூடும். இன்றைய கட்டற்ற போக்கையும் சகஜாதிகள் மேல் வெறுப்பையும் அவர்கள் முன்னெடுத்தால் இழப்பு அவர்களுக்கே. தேவர்கள் அல்ல, எவர் நினைத்தாலும் சமூக மாற்றத்தை தடுத்து நிறுத்திவிடமுடியாது. அது காலவெள்ளம்.

தேங்கியவர்கள் பின்னுக்குத்தள்ளப்படுவார்கள் என்பதே சமூக இயங்கியலின் விதியாகும்.

ஜெ

முந்தைய கட்டுரைதாந்த்ரீகமும் மேலைநாடுகளும்:கடிதம்
அடுத்த கட்டுரைவந்தேமாதரம் கடிதங்கள்