தமிழினி ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

நலந்தானே? அஜிதனின் தேர்வு வெற்றிக்கு என் வாழ்த்துக்கள். இந்த இனிய வெற்றித் துவக்கம் மேலும் பல வெற்றிகளுக்கு அடிக்கோலிட்டிருக்கிறது என்று நம்புகிறேன். ஆரம்ப வெற்றிகள் எப்பொழுதுமே மிக முக்கியமானவை. மேற்கொண்டு என்ன பாடம் படிக்கப் போகிறான்? 

கடந்த இரண்டு மாதங்களாக வேலை நெருக்கடிகளுக்கிடையில் வலைப்பதிவுகள் பக்கம் திரும்பமுடியாமற் போய்விட்டது. தமிழினி ஐந்தாம் இதழ் குறித்து நீங்கள் எழுதியிருப்பதை இந்த வார இறுதியில்தான் வாசித்தேன். நட்பு மற்றும் புரிதல் காரணமாக என் வலைப்பதிவுகளிலிருந்து அவராகவே தமிழினி இதழுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வசந்தகுமாருக்குச் சொல்லியிருக்கிறேன். கூடுமானவரை எதைப் பிரசூரிக்கப் போகிறேன் என்று சொன்னால் திருத்தித் தரவும் ஏதுவாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறேன். தமிழினி இதழ்கள் இன்னும் வாசிக்கக் கிடைக்கவில்லை. நீங்கள் விமர்சித்திருக்கும் கட்டுரையைப் பதிவில் எழுதியபொழுதே ஒழுக்கும் சொற்பிரயோகமும் திருப்தி தரவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன்.  மேலும் உரையாடலுக்கு என்று எழுதப்பட்ட அந்தக் கருப்பொருள் கட்டுரை வடிவிற்கு மாற்றப்படவில்லை.  இருப்பினும் உங்கள் விமர்சனம் குறித்த சில வார்த்தைகள்;

>வெங்கட் ரமணனின் வலைப்பதிவுகள் செயல்படும் விதம் மூலம் பல புதிய செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது. வலைப்பதிவுகள் மூலம் அவற்றை அறிய முடியாது.

இதில் என்ன சொல்ல வருகிறிர்கள் என்று தெரியவில்லை.  வலைப்பதிவில்தான் அதை முதலில் எழுதினேன்.

>லத்தீன் அமெரிக்க இலக்கியம் பற்றி நுண்மாண்நுழைபுலம் கண்டு கட்டுரை எழுதுபவர்கள் ஏன் கணிப்பொறி நுட்பங்களை கற்க முடியாது, கொழுப்புதானே என்கிறார். வெங்கடரமணனைப்போன்ற ஆசிரியர்கள்தான் பள்ளிகளில் ‘தமிழ்ல எம்பது கணக்கில ·பெயிலா, திமிர்தானே’ என்று என்னை நோக்கி பிரம்பைச் சொடுக்கினார்கள்.

நான் சொல்லவருவதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.  நான் ஒன்றும் கணிநுட்ப உலகில் உச்சங்களைத் தொட்டேயாகவேண்டும் என்று யாரையும் வற்புறுத்தவில்லை. சரிக்குச் சரி என்று ஒப்பிட்டால் அதற்கு இணையாக வலைச்சேவை வழங்கி நடத்துவது, (administering web server),  கணினி மேலாண்மை (system administration) என்று பலவற்றைச் சொல்லலாம். வலைப்பதிவு நடத்துவது என்பது கிட்டத்தட்ட அரிச்சுவடி சமாச்சாரம். அதிநுட்பங்களைக் கற்றேயாக வேண்டும் என்று என் கட்டுரையில் எழுதவில்லை; இதற்குத் தேவையான புரிதல் மிகவும் எளிதானது. இங்கே தேவைப்படும் புரிதல் கிட்டத்தட்ட தயிர்க்கணக்கு விஷயம்தான்.

சமீபத்தில் தேர்வு குறித்த கட்டுரையில் பெருவெற்றியைத் தொடர்ந்து, ஆசிரியர், பள்ளிக்கூடம் போன்ற வார்த்தைகளைக் கிட்டத்தட்ட கெட்ட வார்த்தைகள் அளவுக்கு உயர்த்திவிட்டிருக்கிறீர்கள். (அந்தக் கட்டுரையை நானும் இரசித்துப் படித்தேன்).  உங்கள் கட்டுரைக்கு வந்த மறுவினைகள் கிட்டத்தட்ட உணர்ச்சியின் விளிம்பில் நின்று இன்றைய அமைப்பையே தமது தோல்விகளுக்கு ஒற்றைக் காரணமாகச் சொல்லியிருப்பது புன்னகையை வரவழைக்கிறது. இப்பொழுது என்னை “ஆசிரியர்” என்று சொன்னாலே போதும் படிப்பவர்கள் தேவையானதை நிரப்பிக் கொள்வார்கள். :)

மற்றபடி நவீன அறிவியல், நவீன மருத்துவம் போன்றவற்றைப் பற்றி நீங்கள் வலைப்பதிவு தொடங்கி நாள் குறித்து எழுதி வருவனவற்றைப் பின்னர் ஒரு முறை நேரில் காணும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது விரிவாக விவாதிக்க ஆசை.

அன்புடன்
வெங்கட்


V. Venkataramanan
Oakville, Ontario. Canada
http://domesticatedonion.net/tamil
http://domesticatedonion.net/eng

அன்புள்ள வெங்கட்ரமணன்,

என்னுடைய எதிர்வினை ஓரளவு நையாண்டித்தன்மையுடன் எழுதப்ப்பட்டது. இருந்தாலும் சில விளக்கங்கள்.

1.நீங்கள் உங்கள் கட்டுரையில் இணைய எழுத்தின் வசதிகள் சிறப்புகள் பற்றியெல்லாம் நிறையவே சொல்கிறீர்கள். நீங்கள் எழுதியதை வைத்துத்தான் அடாடா அபப்டியெல்லாமா உள்ளது என்று தோன்றுகிறது. நானே பல வருடங்களாக இதே எழுத்துக்களை படித்தும் இப்படி எதுவும் தோன்றியது இல்லை. அச்சு எழுத்துக்களில் உள்ள குறைகள் மேலும் பலமடங்கு வலிமைப்பட்ட ஒரு அபத்த உலகம் என்றுதான் இணைய வெளி தோன்றியது.இணைய எழுத்தை நீங்கள் அனாவசியமாக ‘கிளாமரைஸ்’ செய்கிறீர்கள் என்று பட்டது

2.கணிப்பொறி உச்சங்களை தொடுவதைப் பற்றி நானும் பேசவில்லை. ஆனால் அடிபப்டைகளே சிலருக்கு கஷ்டமாக இருக்கும். அது ரசனை , மனநிலை போன்றவை சார்ந்தது. நான் கணிப்பொறியில் தட்டச்சு செய்ய கற்றுக் கொன்டிருக்கிறேன். வேதசகாயகுமார் கணிப்பொறி வாங்கி 12 வருடங்களாகிறது. நாஞ்சில்நாடன் 6 வருடங்கள். இப்போதுதான் தாஙளாகவே மின்னஞ்சல் பார்க்கிறார்கள். ஒரு துறையில் படைப்பூக்கம் உடையவர்கள் அந்த காரணத்தினாலேயே இன்னொரு துறையில் அடிப்படையறிதல்கள் கூட இல்லாமல் இருக்கலாம் என்றுதான் நான் எழுதினேன்.

3. என் தேர்வு கட்டுரைக்கு எதிர்வினை ஆற்றியவர்களில் அனேகமாக அனைவருமே ‘வெற்றி’ பெற்றவரகளே. எவருமே ‘தோல்விக்கு’ காரணமாக அமைப்பை சுட்டவில்லை. வெற்றிக்குப் பின்னும் எஞ்சும் வடுக்களைப் பற்றி மட்டுமே எழுதினார்கள்

ஜெயமோகன்

அன்புள்ள ஜெயமோகன்,

இவ்வளவு விரைவாக ஒரு பதிலா? மிக்க நன்றி.

பதிவின் மொத்தத் தொனியும் நையாண்டியாகத் தோன்றாததால்தான் நான் அப்படி எழுதினேன். நீங்கள் என்னைப் பற்றி நையாண்டி எழுதினீர்கள் என்றால் அதை இரசிக்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.

நான் கிளாமரைஸ் செய்ததாக நினைக்கவில்லை. அப்படிப் பலருக்கும் தோன்றக் காரணம் இதன் சாத்தியங்களைப் பற்றி அதிகம் தெரியாமையே. (தமிழில் இன்னும் இந்தச் சாத்தியங்கள் தொடப்படவில்லை என்பது நான் உன்னதப்படுத்துவதாகத் தோற்றமளிக்க முக்கிய காரணம்).  எந்த ஒரு ஜனநாயக அமைப்பிலும் இருக்கும் அபத்தங்கள் கட்டாயம் இணையத்திலும் உண்டு; தவிர்க்க முடியாததும் கூட.  அப்படியொரு மனநிலையில் இதை அநுகும் யாருக்கும் இதில் தங்களுக்கு வேண்டியதைக் கண்டெடுக்க முடியும்.  இதன் ஜனநாயகச் சுதந்திரத்தைச் சிலாகிக்க முடியும்; இதன் வளர்போக்கை அடையாளம் காணமுடியும்.

எந்தவித உயர்நுட்பமும் சமூகத்தால் மிக எளிதாக உள்வாங்கப்படும் என்பது என் நம்பிக்கை. இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நான் சொல்வது, செயற்கைமுறை கருத்தரிப்பு.  ஆரம்பத்தில் ஐயோ! கடவுளுக்கு எதிரானது, அபச்சாரம் என்றெல்லாம் கூச்சலிட்டார்கள். கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக, ஜனத்தொகை மிகுந்த இந்தியாவில் ஆசாரக் குடும்பத்தில்கூட ‘புள்ள இல்லாதவளுக்குப் புள்ள கொடுத்த மகராசி’ என்று கைதொழுது நிற்கிறார்கள். படைத்தலின் ஆதாரத்தில் வரும் மாற்றத்தையே சமூகங்களால் உள்வாங்க முடியும் என்றால் எந்த நுட்பமும் எளிதில் சீரணிக்கப்படும் என்பதுதான் உண்மை.  (அப்படி உள்வாங்கப்படவில்லை என்றால் அது தனிப்பட்ட ஒரு கண்டுபிடிப்பின் குறைபாடுதான்). சமூகத்தில் எந்த ஒரு பயன்பாடும் பதிலிடப்பட முடியாததல்ல.  அச்சிட்ட புத்தகங்கள் உட்பட. இப்பொழுது இருக்கும் திரைகள் ஏற்றனவாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாளையே தரமான நெகிழ்திரைகள் (Flexible displays) கண்டுபிடிக்கப்பட்டால் அச்சிடும் தொழில் கொஞ்சம் ஆட்டம் காணும் என்றுதான் தோன்றுகிறது.  இதில் கிளாமரைஸ் செய்ய எதுவுமே இல்லை.  சொல்லப்போனால் பதிலிடமுடியாததென வாதிடுபவர்கள்தான் கிளாமரைஸ் செய்கிறார்கள் எனத் தோன்றுகிறது.

தேர்வு குறித்து : கொஞ்சம் மாற்றிச் சொல்லலாம்; வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் தங்கள் வெற்றி ஆசிரியர்களால் அல்ல என்று மார்தட்டிக் கொள்கிறார்கள். அதே அமைப்பில் வந்தவன் (நான் எம்.எஸ்.ஸி வரை படித்தது அரசாங்கக் கல்லூரி) என்ற முறையிலும், மேலைநாடுகளின் கல்வியமைப்புடன் இன்றையத் தொடர்பு உள்ளவன் (என் பையன்கள் தொடக்கப்பள்ளியில் படிக்கிறார்கள். நான் பல்கலைக்கழகத்தில் வேலை செய்கிறேன்), என் தந்தை ஓய்வுபெற்ற அரசாங்கத் துவக்கப்பள்ளி ஆசிரியர் என்ற தொடர்புகளின் அடிப்படையில் பயிற்றுவித்தல், பள்ளி நிர்வாகம் போன்றவற்றை தனிப்பட்ட கல்வி அமைப்பின் குறைபாடுகளாக என்னால் ஒருபொழுதும் காணமுடியாது, இது நம் சமூகத்தின் மொத்த நிலையின் பிரதிபலிப்புதான்.  இருப்பினும் இந்த விமர்சனம் மிகவும் தேவையானதுதான். கூடவே மாற்றங்களுக்கான தேவையையும் அதன் சாத்தியங்களையும் விவாதிப்பதும் முக்கியம். உங்கள் கட்டுரை அதுபோன்ற வாதங்களை முன்னெடுத்துச் செல்லாதது வருத்தமான விஷயம்.

மீண்டும், உங்கள் பதிலுக்கு நன்றிகள்.

அன்புடன்
வெங்கட்

தமிழினி ஐந்தாமிதழ்

தேர்வு:சில கடிதங்கள்

தேர்வு:மேலும் சில கடிதங்கள்

முந்தைய கட்டுரைஇரண்டு அறிவியல் செய்திகள்.
அடுத்த கட்டுரைகம்பனும் காமமும் :ஒருகடிதம்