நெடுங்குருதி 3

3. மிதக்கும் புள்ளிகள்

வாழ்க்கைச் சித்திரம் என்றவகையில் ‘நெடுங்குருதி’ அளிக்கும் அனுபவம் என்ன? முதலில் குறிப்பிட வேண்டிய விஷயம் இது கொஞ்சம்கூட நாடகீயத்தன்மை இல்லாத ஆக்கம் என்பதே. இயல்புவாத நாவல்களுக்குரிய விரிவான தகவல்சார் விவரணைகளுடன், அறிக்கையிடும் தன்மை கொண்ட, ஒட்டாத நடையுடன் செல்கிறது இந்நாவல். அதே சமயம் கதைக்கூற்றில் எப்போதும் ஒரு உணர்ச்சிகரம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. நிகழ்ச்சிகளில் தீவிரமான உணர்ச்சிகள் வெளிப்படுகின்றன. ஆயினும் நாவல் ஒருவித விலகல்தன்மையை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

நெடுங்குருதி நாகுவின் கதையாகத் தொடங்குகிறது. முதலிரு பருவங்களான ‘கோடைகாலம்’ ‘காற்றடிக்காலம்’ இரண்டுமே நாகுவின் கதையைக் கொண்டவை. நாகு ஒரு சிறுகுழந்தையாக நாவலில் அறிமுகமாகிறான். கதைகள் வழியாகவே வாழ்க்கையை அவன் அறிகிறான். வேம்பலையின் மாற்று இல்லாத கோடையில் உலர்ந்து உலர்ந்து சருகாகி உதிர்ந்து மறையும் அவனுடைய குடும்பத்தின் சித்திரத்தில் நாகு வளரும் சித்திரமே நமது கற்பனையில் படிவதில்லை.

நாகுவின் அப்பா நிலைகொள்ளாதவராகவும் எங்கும் தனித்து நிற்க முடியாதவராகவும் இருக்கிறார். வேணி, நீலா என்ற இரண்டு அக்காக்களும் எல்லா ஈரத்தையும் உறிஞ்சிவிடும் வேம்பலையின் உக்கிர வெயிலில், வெயிலிலும் பூக்கும் கருவேல மரங்கள் போல வளர்ந்து பசுமை கொண்டு பூக்கிறார்கள். அவர்கள் நடுவே அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தும் அவர்களுடன் ஒட்டாமல் கனவுகளில் அலைந்தும் வளர்கிறான். நாகுவின் இந்த இளமைப்பருவச்சித்தரிப்பு இந்நாவலில் அழகுடனும் முழுமையுடனும் உள்ளது. அதற்குக்காரணம் அவளைச்சுற்றிப் புனையப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் பெரும்பாலும் துல்லியமாக உள்ளன என்பதுதான்.

நாகுவின் அப்பாவின் குணச்சித்திரம்தான் அதில் முதலாவது. இந்த நாவலின் மிகவும் குறிப்பிடத்தக்க கதாபாத்திரம் அதுவே. அவருடைய பிரச்சனை என்ன என்று நாவல் முழுக்க இழையோடும் அவரைப் பற்றிய குறிப்புகள் வழியாக ஊகித்துச் செல்லும்போது அவர் பெரிதாகியபடியே வருகிறார். குழந்தைகளையும் மனைவியையும் கைவிட்டு விட்டு அவர் கிளம்பிச் செல்கிறார். பின்னர் நெடுங்காலம் கழித்து எந்த விதமான பதிலும் விளக்கமும் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அவர் திரும்பி வருகிறார் .

அவர் போவதற்கு பெரிதாக காரணம் ஏதுமில்லை. மனைவியுடன் சிறு பூசல். பூசலுக்குப் பின்னால் உள்ள காரணம் வறுமையின் இயலாமை. திரும்பி வந்ததற்கு காரணமும்  வறுமையின்  இயக்லாமைதான். நாகு ஒரு நாள் வீடு வந்தபோது அப்பா திரும்பி வந்திருக்கிறார், இரவோடிரவாக காளான் முளைப்பது போல. அம்மா அவரை வசைபாடுகிறாள், சாபமிடுகிறாள். ஆனால் காமம் வெல்கிறது. கோழிக்குழம்பு வைக்கிறாள், மலர் சூடிக் கொள்கிறாள்.

அவர் போனதற்கும் வந்ததற்கும் காரணம் பொறுப்பின்மை என்ற சித்திரம் உருவாகும் போதே பக்கீர் என்ற அவரது நண்பர் தேடி வருவதன் சித்தரிப்பு ஆரம்பமாகி அவரை இன்னொரு வெளிச்சத்தில் காட்டுகிறது. ஈவிரக்கமற்ற ஒரு சுயநலமியாக அவரை நாம் ஊகிக்கிறோம். தன் இன்பம் தன் தங்கி வாழ்தல் தவிர பிற எதிலுமே ஆர்வம் இல்லாதவராக இருக்கிறார். பக்கீரின் மரணத்திற்கு அவர் காரணமாக இருக்கிறார் என்ற குறிப்பு நாவலில் வருகிறது. பக்கீரின் மனைவி அவனைத் தேடிவந்து பிழைப்பதற்காக வேம்பலைலேயே வேரூன்றும் போது குற்ற உணர்ச்சி கொள்கிறார்.அந்தக்குரூரத்திற்கும் காரணம் இயலாமையே

தன் இளைய மகள் நீலாவின் மரணத்திற்குப் பின்பு மீண்டும் அவர் சென்று விடுகிறார். நாகு அவரை பண்டாரங்களில் ஒருவராக பிச்சைச் சோற்றுக்கு இரந்து நிற்கும் இடத்தில் கண்டு கொள்கிறான். அவரை அவன் வலுக்கட்டாயமாகக் கூட்டிவருகிறான். ஒடுக்கம் கொண்டு குன்றிப் போன மனிதராக இருக்கிறார். வாழும் மண்ணிலும் விண்ணிலும் சாத்தியமான குறைந்தபட்ச இடத்தை மட்டுமே எடுத்துக்கொள்ள விரும்புகிறவர் போல, அதற்காக மன்னிப்பு கோருபவர் போல அவர் பதுங்கிக் கொள்கிறார். அவரை வெறுத்து துரத்தும் நாகுவின் தாத்தாவிடம் அவர் ‘தானாகச் சாவதற்கு தைரியமில்லாமல்தான் கிடந்து வதைபடுகிறேன்’ என்று சொல்லும் இடம் அவரை வாழ்வதையே வாழ்வின் விதியாகக் கொண்ட எளிய உயிராக அடையாளம் காட்டுகிறது.

நெடுங்குருதி நாவலின் நேர்நிலையான உச்சங்களில் ஒன்று அவர் நீலாவைப்புதைத்த இடத்தில் சேற்றில் குழையும் வெள்ளெலும்பைப் பார்க்கும் இடம். அவரது சொந்த மரணத்திற்கு இணையான மரணம் அது. சேற்றில் நெளியும் மண்புழு ஒன்றை அந்தச் சமாதியில் முளைத்த உயிராக எண்ணி அவர் விம்மிதம் அடைகிறார். ‘அதை எடுத்து தன்கைகளில் வைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தார். மண் உமிழும் நாவால் அவரது கையைத் தடவியபடி நெளிந்தது புழு’ மண்புழுவை தூக்கிகொண்டு தன் வீட்டுக்கு வருகிறார். தன் வீட்டின் தண்ணீர் தொட்டி அருகே அவர் மண் புழுவை விடுகிறார். அவர் தன் மகளிடம் பேசுவது போலச் சொன்னார் ‘வீட்டடிலேயே இருந்துக்கோ தாயி’ மண்புழு மெதுவாக ஈரமண்ணில் ஊர்ந்து போய் கொண்டிருந்தது’ இந்நாவலின் ஆகச்சிறந்த புனைவுச்சம் வெளிப்படும் இடம் இதுவே.

வாழ்வின் பெரும் கோடையால் கருக்கப்படும் உயிர்கள் சாத்தியமான அனைத்து திசைகளிலும் வேரையும் கிளைகளையும் பரப்பி வாழ முயல்கின்றன. அவற்றின் ஒவ்வொன்றின் வடிவமும் இயல்புகளும் அந்தப் போராட்டத்தின் விளைவுகள் மட்டுமே. நாகுவின் அப்பாவின் அனைத்து இயல்புகளும் ஒரே புள்ளியில் இருந்து ஊறுபவை. ‘தங்கிவாழ்’ என்ற பேரியற்கையின் ஆணை. அதுமட்டும்தான். அனைத்து உறவுகளையும் இழந்து வாழ்வதற்கான கடைசி நோக்கத்தையும் இழக்க நேர்ந்துவிட்ட பின்னர்கூட மனம் வாழ்வதற்கு ஒரு வழியைக் கண்டு கொள்ளும் தருணம்தான் அது. மண்ணில் இருந்து மீண்டும் ஓர் உறவின் நீட்சியை, இறந்த காலத்தில் சேற்றில் இருந்து ஒரு நினைவின் நெளிவை, அது கண்டு கொள்கிறது.

நாகுவின் இளமைப்பருவத்தின் வெம்மையை அவன் கனவுகள் வழியாக மீண்டும் மீண்டும் ஈரப்படுத்தியபடியே இருக்கிறான். அந்த வெறுமையை பல்ளவேறு நிகழ்ச்சிகள் வழியாகச் சொல்லிச் சொல்லும் இந்நாவல் அவனைச்சூழ்ந்து சுற்றிவரும் விதியையே பெரிதும் சித்தரிக்கிறது. நீலாவின் மரணத்துடன் முடியும் முதல் பகுதி முழுக்க நாகு அவனைச்சூழ்ந்து நடக்கும் இழப்புகளை, மரணங்களை, இடப்பெயர்வுகளை பல்வேறு கற்பனைகளின் உதவியினால் புரிந்து கொள்ள முயன்றபடியே இருக்கிறான். அவனுக்குமேல் அவனை மீறி வாழ்க்கை சென்றபடியே இருக்கிறது. நாகு சமூகத்தால் எதையும் பயிற்றுவிக்கப்படுவதாகத் தெரியவில்லை. வேம்பலையின் கிராமத்தில் அவன் வாழ்கிறான்; அவ்வளவுதான்.

இரண்டாவது பகுதியில் நாம் காணும் நாகு முற்றிலும் புதிய ஓர் ஆளுமையாக இருக்கிறான். முதல் பகுதியில் சிறுவனாக நாம் பார்த்த நாகுவின் குணச்சித்திரத்திற்கும் அவனுக்கும் தொடர்பே இல்லை. முதலில் நாம் கண்ட நாகு பலவீனமான உடல் கொண்டவன், வலிமையான கற்பனை கொண்டவன். இரண்டாம் பகுதியில் நாம் பார்க்கும் நாகு வலிமையான உடலும் பலவீனமான கற்பனையும் கொண்டவன். மொத்த நாவலிலும் நாகு பிற்பாடு எந்தவகையான கற்பனைச் சஞ்சாரத்திலும் ஈடுபடுவதில்லை. கனவுகள் அவனைக் கடந்து செல்கின்றன – குறிப்பாக அவன் நோயுறும்போது. ஆனால் நாகு மிகமிகச் சாதாரணமான யதார்த்தமான மனிதனாகவே இருக்கிறான். நுண்ணுணர்வுகள் சார்ந்து இயங்காமல் காமம், வன்முறை என்றும் ஆதார இயல்புகள் சார்ந்து இயங்கும் தூய மிருகமாகவே இருக்கிறான்.

இந்த மாற்றம் தர்க்கபூர்வமானதல்ல என்று தோன்றலாம். புனைவுகளில் பொதுவாக ஒரு வளர்சிதை மாற்றத்தை தர்க்கபூர்வமாகக் காட்டுவதே முறை. ஏனென்றால் உண்மையில் வாழ்க்கைக்கு இல்லாத ஓர் தர்க்க ஒழுங்கை உருவாக்கிக் காட்டுவதற்கே எப்போதும் இலக்கியம் முயல்கிறது. ஆனால் இயற்கையில், மனிதகுணத்தின் பரிணாமத்தில், வாழ்வின் தற்செயல்களில் உள்ள விளக்கமுடியாத பாய்ச்சல்களையும் தலைகீழ்மாற்றங்களையும் விளக்கங்களே இல்லாமல் முன்வைப்பதன் வழியாக புனைவிலக்கியம் தர்க்கத்தைவிட சிறந்த நம்பகத்தன்மையை உருவாக்க முடியும். முதன்மையான புனைவிலக்கியங்கள் அனைத்திலுமே நாம் இதைக் காணலாம்.

நாகுவின் அந்தப் பரிணாமம் எதிர்பாராதது என்றாலும் வியப்பூட்டுவது அல்ல. அது நிகழ்வதற்கான முகாந்தரங்கள் நாவலின் முற்பகுதியில் உள்ளன. எந்தவகையான பண்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படாமலேயே நாகுவின் குழந்தைப்பருவம் கழிகிறது. அவனுடைய இளமைப்பருவமே உக்கிரமான கோடையில் காய்வதாகத்தான் உள்ளது. கோடைக்குப்பின் உருவாகி விடும் நாகு உலர்ந்த, வைரம்பாய்ந்த மனிதனாக இருக்கிறான்.

இந்த பரிணாமத் தாவலுடன் ஒப்புத்தக்க ஒரு நிகழ்ச்சி கிளைக்கதைகளில் ஒன்றாக வருகிறது அது சிங்கியின் துணைவியாக இருந்த பண்டார மகளின் கதை. களங்கமின்மையும் அன்பும் கொண்ட தூய ஆளுமையாக இருக்கிறாள் அவள். காயமடைந்து அவளுடைய கரங்களில் சென்றுவிழும் சிங்கியை அவள்தான் மரணவாயிலிருந்து மீட்கிறாள், உயிர்தருகிறாள். அந்த உயிரை அவருக்கே அடிமையாக்குகிறான் சிங்கி. ஆனால் சட்டென்று ஒரு மாற்றம். ஒருமுறை காமாலை கண்டு எழுபவள் முற்றிலும் இன்னொருத்தியாக ஆகிறாள் அவளில் இருந்த தேவதைத்தன்மை முழுக்க மறைந்து போக அவனுடைய ஆத்மாவின் இருளில் இருந்து ஒரு பிசாசு வெளிப்பட்டது போல. விளக்கங்கள் இன்றி முன்வைக்கப்படும் இந்த பரிணாமம் அசாதாரணமான நம்பகத்தன்மையுடன் இருக்கிறது.

நாகுவின் இரண்டாம் கட்ட வாழ்க்கையை அவனுடைய அலைதலாகவே காட்டியிருக்கிறார் ராமகிருஷ்ணன். நாகு பசியாலும் காமத்தாலும் மட்டுமே வாழ்வில் இயங்கச் செய்யபடுகிறான். காமத்தை பசியைப்போலவே உணர்வுகலப்பு இன்றி அவன் அனுபவிக்கிறான்.  ரத்னாவதிக்கும் நாகுவுக்குமான உறவு மிக இயல்பாக நிகழ்கிறது. விபச்சாரத்திற்கு ஆள்பிடிக்கும் இடத்தில் அவள் அவனை ஈர்க்கிறாள் அவளைக் காணும்போது பாலியல் எழுச்சி ஏற்படுகிறது என்பதனாலேயே அவன் அவளுடன் சென்று பள்ளி ஒன்றின் இருளில் அவளுடன் கூடுகிறான். அந்த உறவிலும் சரி, பிறகும் சரி, ரத்னாவதியுடன் நாகு கொள்ளும் உறவில் எந்த வகையான உணர்ச்சி வெளிப்பாடும் இல்லை. நேரடியான அப்பட்டமான உடல்சார் உறவு அது. ஆனால் அவளிடம் அவனுக்கு தனிப்பட்ட ஓர் ஈர்ப்பு இருக்கிறது. ஆகவேதான் மீண்டும் மீண்டும் அவன் அவளைத்தேடி வருகிறான்.

நாகு மல்லிகாவை திருமணம் செய்து கொள்கிறான். வழக்கமான ஒரு சமூக ஏற்பாடாக அந்தத் திருமணம் நடக்கிறது. அவன் அவளைத் திருமணம் செய்யும்போது அம்மாவையே நினைத்துக் கொண்டிருக்கிறான். அவளுடைய திருமணத்தைப்பற்றி எப்போதும் கேலி பேசிக் கொண்டிருந்தவள் அம்மா. திருமணம் நடந்து முடிந்ததும் வேணியக்கா அருகே வந்து அவன் பட்டுவேட்டியில் பிரிந்திருந்த நூலை சரி செய்தபடியே கேட்டாள் ‘பொண்ணைப் பாத்தியா யார் மாதிரியிருக்கா சொல்லு? ‘ அவனுக்கு யார் நினைவும் வரவில்லை வேணியக்கா அவன் முகத்தைக் கவனித்தவள் போல சொன்னாள் ‘ஒரு சாடையில நம்ம ஆதிலட்சுமி மாதிரி இருக்கா’ ஆனால் நாகுவுக்கு மல்லிகாவின் கைகளைப் பற்றிக் கொண்டு நடக்கும்போது ரத்னாவதியின் ஞாபகம்தான் வருகிறது. அவள் விரல்கள் இதைவிடவும் நீளமானவை என்று நினைத்துக் கொல்கிறான்.

அம்மாவைத்தவிர நாகுவின் வாழ்வின் மூன்று பெண்கள். ஆதிலட்சுமி, ரத்னாவதி, மல்லிகா. இந்த இடத்தில்தான் ஆதிலட்சுமி நாகுவின் மனதின் ஆழத்தில் ஒரு பெண்ணாகத்தான் இருக்கிறாள் என்பதற்காக தடயம் இருக்கிறது. மிக நுட்பமான ஓர் இடம் அது. சிறுவனாகிய நாகுவுக்கு இளமையின் மாயங்களைச் சொல்லிக் கொடுத்த மூத்த தோழி. ஆனால் நாகுவின் சிறுவனுக்குள் வாழ்ந்த ஆண்மனம் அவளை தொட்டுவிட்டிருந்தது. அதனால் தான் வளர்ந்து வேம்பலையிலிருந்து வந்து விட்ட பிறகு நாகு மீண்டும் ஆதிலட்சுமியைச் சந்திக்கும்போது விசித்திரமான தடுமாற்றத்திற்கு ஆளாகிறான். அவளை நேருக்கு நேர் பார்த்துப் பேச அவனால் முடியவில்லை. ஆனால் இளமைப்பருவம் போலவே அவள் தரையில் இருந்து ஒரு கூழங்கல்லை எடுத்து கையில் உரசி மணம் பார்க்கச் சொல்லும் போது இளமையில் உணர்ந்த அதே மாம்பழ வாசநை மீண்டு வருகிறது. நாகுவின் உள்ளில் இருந்து எழும் அந்த வாசனை ஒருபோதும் அழியாதது.

ஆதிலட்சுமியும் ரத்னாவதியும் கலந்த கலவையாக இருக்கிறாள் மல்லிகா. ‘நாகு மல்லிகாவை வெறித்துப் பார்த்தபடி இருந்தான். ஆதிலட்சுமியை வேணியக்கா ஏன் ஞாபகப்படுத்தி விட்டாள் என்று நினைத்துக் கொண்டிருந்தான். மிகுந்த தயக்கத்தோடு மல்லிகா நாகுவை முத்தமிட்டான். கைக்குள் அடங்கிப் போய்விடுவது போலிருந்த அவளை அணைத்தபடி மெதுவாக முத்தினான். கண்களை மூடியபோது ஏனோ வேம்பலையின் தெருக்களும்  வீடும் கண்களைக் கூசச் செய்யும் வெயிலும் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தன. அவள் புரண்டு படுத்துக்கொண்டபோது கேசம் விலகிய முதுகு ரத்னாவதியைப் போலவே இருந்தது. சட்டென மூர்க்கமாகி அவளைக் கட்டிக் கொண்டு கூடத் தொடங்கினாள் நாகு’ என்ற சித்தரிப்பு மிக நுண்மையானது. ஒரு மனித உடலில் தோன்றி மறையும் இரு ஆளுமைகள். புத்தகப் பக்கத்தைப் புரட்டுவது போல உடலைப்புரட்டி இன்னொரு மனிதரை எடுப்பது!.

நாகுவின் வாழ்வின் மிக அந்தரங்கமான இடம் ஆதிலட்சுமிக்கு. மிகப் புறவயமான இடம் ரத்னாவதிக்கு. முன்னவள் காமமற்ற ஓர் இடத்தில் இருக்கிறாள் பின்னவள் காமமேயாக இருக்கிறாள். மல்லிகா இரண்டுக்கும் நடுவே ஒரு இணைப்பு போல, கலவை போல இருக்கிறாள். இன்னொரு இடத்தில் மேலும் நுண்ணிய குறிப்பு ஒன்று வருகிறது. நாகு இறந்து போன பிறகு நாகுவின் குழந்தையுடன் மல்லிகா பஸ் ஏறப் போகும் போது பக்கீரின் மனைவி மல்லிகா ஒரு சாடையில் இறந்துபோன நாகுவின் அம்மாவை மாதிரி இருப்பதாக எண்ணிக் கொள்கிறாள்.

பொதுவாக ஒரு நாவலை வாசித்ததுமே நாம் அதை ஒரு கதையாக ஆக்க ஆரம்பித்து விடுகிறோம். கட்டுக்கோப்பான, மையச்சரடுள்ள நிகழ்வுகளையே நாம் கதை என்கிறோம். நவீன நாவல்களில் பொதுவாக அப்படி ஒரு கதை அப்படைப்பில் இருப்பதில்லை. ஆனால் கதையாக ஆவதற்கான எல்லா கூறுகளும் அவற்றில் இருக்கும். கதையாக ஆக்கும் சவாலை வாசகர்களுக்கே விட்டுவிடுகின்றன. நெருங்குருதி நாவலும் அத்தகையதே. ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒழுகிச் செல்லும் நிகழ்ச்சிகளின் ஒரு பிரவாகமாக உள்ளது இந்த நாவல். அந்நிகழ்ச்சிகளை வாசகன் இந்நாவலில் அவன் அடையும் உணர்வெழுச்சிகளின் அடிப்படையில் தொகுத்து வடிவம் தந்து கதையோட்டமாக கதைக் கட்டுமானமாக ஆக்கிக் கொள்ளலாம்.

அவ்வகையான வாசிப்பில் எனக்கு இந்நிகழ்வுகள் இரு புள்ளிகள் சார்ந்தே மையம் கொண்டன ஒன்று மரணம். இந்நாவல் தொடர்ச்சியான மரணங்களின் கதை என்றால் அது மிகையல்ல. மரணங்கள் வழியாகவே இந்நாவலில் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்குச் செல்கிறது என்பது நாவலின் ஆதார இயல்புகளில் ஒன்றாக உள்ளது என்று படுகிறது. இரண்டாவதாக கதைமாந்தரின் குணச்சித்திரங்களில் காலம் ஏற்படுத்தும் மாற்றம். பெரும்பாலான கதாபாத்திரங்கள் இந்நாவலில் பிறிதொன்றாக ஆனபடியே இருக்கிறார்கள். மரணம் அந்த மாற்றத்துக்குக் காரணமாக அமைகிறது. இவ்விரு அம்சங்களையும் பின்னிப் பின்னித்தான் இதன் நிகழ்வுகள் முன்னேறுகின்றன.

விதவிதமான மரணங்களை இந்நாவலின் விவரிப்பில் பார்த்துக் செல்கிறோம். வெல்சி துரையின் விசித்திரமான மர்மம் கலந்த மரணம் இந்நாவலுக்குள் வரலாறு ஒரு தொன்மமாக மாறி உள்ளே நுழைவதன் ஆதாரமாகும். துரை தன்னுடைய அந்தரங்கத்தின் உள்ளே வேம்பர்களில் ஒருவனைக் குடியேற்றிக் கொண்டுதான் செல்கிறான். தன் மரணத்தையே அவன் வேம்பலையில் இருந்து தன்னுடன் மொண்டு செல்கிறான். பண்டார மகளின் மரணமும் அவனுடன் கூடவே வளர்ந்த ஒன்றே. மஞ்சள் காமாலையில் அவளுக்குள் மரணம் குடியேறுகிறது. அந்த மரணத்திற்குத்தான் அவள் உணவூட்டுகிறாள். அதனுடன் உறங்குகிறாள். மரண வடிவமே ஆகி நீண்டநாட்கள் வாழ்ந்த பிறகு இறந்து போகிறாள்.

மரணப்படுக்கையில் பண்டாரமகள் தெய்வானையின் இடது கை மூடியிருக்கிறது. திறக்கவே முடிவதில்லை. சிங்கியிடம் அதைத் திறந்து பார்க்கும்படிச் சொல்கிறார்கள். ‘யண்ணே தேவானை இடதுகை மூடிக்கிட்டிருக்கு. திறக்கவே முடியவில்லை. எதை நினைச்சுக்கிட்டு மூடினாலோ, கை மூடிட்டிருக்கு. நீ பிரிச்சுப் பாருண்ணே’ என்கிறாள் ஒருபெண். சிங்க்ஜி தெய்வானையை கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டு வேம்பலைக்குச் சென்றபின் ஒருமுறைகூட அவனை திரும்பிப்பார்க்கவோ பொருட்படுத்தவோ செய்யாத அவளுடைய மூர்க்கம் அந்த பிடியில் இருக்கிறது.  வேண்டாம் என்பதாக சிங்கி நினைக்கிறான். ஆனால்  இடது கையை பிரிக்க முயல்கிறான். கை இறுக்கமாக மூடியிருந்தது.

‘சிங்கி  மூடியிருந்த கைப்பெருவிரலுக்குள் தன் விரல்களை கொடுத்து நெம்பி திறந்தான். பூட்டு திறப்பது போல முறிச்சத்தத்துடன் கை பிரிந்து விட்டது. உள்ளங்கையை தடவிப் பார்த்தபோது ஏதோ சித்திரம் பச்சை குத்தப்பட்டது போலிருந்தது. ஒரு பெண் ஆச்சரியமாக அதைப் பார்த்துவிட்டு ”இவ என்ன உள்ளங்கையிலே தேளைப் பச்சைகுத்தி வச்சிருக்கா” என்றாள். சிங்கி அந்த தேள்பச்சையை தடவி விட்டான். கொடுக்கைத் தூக்கிக் கொண்டு கட்டுகட்டாக இருந்தது அந்தத்தேள். தன் கையை அவள் கையோடு சேர்ந்து மூடினான். அவள்கையில் இருந்த தேள்ப் பச்சை மெதுவாக ஊர்ந்து அவன் உடலில் ஏறிக்கொண்டது” என்று விநோதமான ஒரு படிமத்திற்குச் செல்கிறது நாவல். பண்டாரமகளில் குடியிருந்த அது சிங்கிக்கு கைமாற்றம் செய்யப்பட்டுவிட்டது.

திடீரென்று தோன்றிய மரணம் என்பது நீலாவிற்கு நேர்ந்தது தான். இலந்தைப் பழங்கள் பறிக்க புதருக்குள் கையைவிடும் போது பாம்பு கடித்து இறக்கிறாள். எந்த ஒரு விளக்கமும் இல்லாத, அர்த்தமோ அலங்காரமோ இல்லாத, மரணம் மட்டுமேயான மரணம் அது. அது அந்தக் குடும்பத்தையே சிதைத்து விடுகிறது. அவர்கள் வேம்பலையை விட்டு கிளம்புவதற்கும் காரணமாக அமைகிறது. நீலாவையும் இளமையில் இறந்த அவள் அண்ணனையும் புதைத்த நிலத்தை விட்டு அவர்கள் கிளம்புகிறார்கள்.

விபூதிபூஷண் பந்த்யோபாத்யாயவின் ‘பாதேர் பாஞ்சாலி’ நாவலில் வரும் துர்க்காவின் மரணத்தையும் அதன்பின் அக்குடும்பம் ஊரை உதறி செல்வதையும் நினைவூட்டுகிறது இந்த நிகழ்ச்சி.  எஸ்.எல் .பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலில் நஞ்சம்மாவின் மரணத்துக்குப் பின்னர் கதைநாயகன் ஊரைவிட்டு நீங்கும் காட்சியின் அழுத்தம் இதில் உள்ளது. மரணமும் இடம்பெயர்தலும் சென்றகாலத்தில் கொடிய நோய்களும் பஞ்சங்களும் ஆட்கொண்டிருந்த இந்திய வாழ்க்கையின்  ஒரு பகுதியாகவே இருந்துள்ளன. அந்த நினைவுகள் நம்முடைய குடும்பகதைகளில் எப்போதும் உள்ளன.

நீலாவின் மரணத்தில் இருந்து நாகுவின் அம்மா மீள்வதில்லை. பித்து பிடித்தவள்போல இருக்கிறாள் அவள் அருகே எப்போதுமே மரணம் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது போல. அப்பா வேணியின் திருமணம் முடிந்ததுமே தேசாந்திரியாக கிளம்பிவிடுகிறார். நாகு அனாதையாகிறான். நாகுவின் அம்மாவின் வாழ்க்கை கைவிடப்படுதல் மரணம் என்னும் இரு வல்லமைகளால் அலைக்கழிக்கப்படுவதாக உள்ளது.

நாகுவின் மரணம் மிகச் சாதாரணமாக நிகழ்கிறது. வேம்பலையில் ஒரு வேம்பனின் மரணம் என்பது இலையுதிர்தல் போல அத்தனை சாதாரணமானது, இயல்பானது. ‘நாகு சாயக்காரர்களின் தெருவைக் கடந்து ஓடமுயன்றபோது சந்திற்குள் இருந்து யாரோ வருவது தெரிந்தது. தான் சந்திற்குள் கண்டது ஒரு போலீஸ்காரனை என்று தெரிந்தது. திரும்பிப் பார்ப்பதற்குக் கூட அவகாசமில்லாமல் அவன் இருளுக்குள் ஓடினான். துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டது. நாகு தன் அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு விழுந்தான்’

அவ்வளவுதான். அவனுடைய இறுதி எண்ணங்கள் மனநிலைகள் எதுவும் சொல்லப்படுவதில்லை. மிருகம் போல உயிர்தப்ப முயல்கிறான். கடைசிக் கணம்வரை எழ முயல்கிறான். உயிர் விடுகிறான். ‘விடிகாலையில் மூத்திரம் பெய்வதற்காகச் சென்ற பெண் நாகு சாணத்தில் ஊறிக்கிடப்பதைக்கண்டு கூப்பாடு போட்டாள். முதல் அழுகைச் சத்தம் தொடங்கியபோது நாகு இறந்து பலமணி நேரம் ஆகிவிட்டிருந்தது’

நாகுவின் மரணத்திற்குள் சென்று ஒரு கேள்வி கேட்டுக் கொள்ளலாம். அத்தனை எளிதாக அவன் எப்படி இறக்கிறான்? ஏற்கனவே இருமுறை அவன் குத்து பட்டிருக்கிறான். ஆனால் இருமுறையும் தன் உடல் வலிமையாலும் வேகத்தினாலும் தப்பிவிட அவனால் முடிகிறது. கையில் ஆயுதமில்லாதபோதே கத்தியுடன் தாக்க வரும் சின்னுவை தடுத்து மாட்டுவண்டியின் கடையாணியால் குத்தி விடுகிறான்.  ஆனால் இங்கே அவனுடைய வேகம் அர்த்தமில்லாததாக ஆகிறது. ஏனென்றால் இது துப்பாக்கி. நாகு அதன் வேகத்தையும் தீவிரத்தையும் அறியமாட்டான்.

ஆம், நாகுவின் உலகிற்கு  வந்து ஊடுருவும் நவீனத்துவத்தின் விஷப்பல் அது. எது அரசாங்கமாக, சட்டமாக, நீதிமன்றமாக, போலீஸாக, வரிவசூலாக வந்த அவர்கள் மேல் கவிகிறதோ அதுவேதான் நாகுவைக் கொன்றது. அந்தப் புத்துலகில் வேகத்தின் முன் அவனால் ஈடுகொடுக்க முடியாது. பிற வேம்பர்களைப் போல அவனும் படிப்படியாக அழியப்படவேண்டியவன் மட்டுமே.

மரணம் நிகழ்ந்தபடியே இருக்கும் வேம்பலையில் சென்னம்மா மட்டும் மரணமே இல்லாதவளாக இருந்துகொண்டிருக்கிறாள். காலத்தில் அவள் கரைவதில்லை. குறுகி குறுகிச் சென்று குலுக்கையில் அடைபடுகிறாள். பிறகு ஒரு கருத்து மட்டுமாக ஒரு தொன்மமாக, நிரந்தரமாக, வாழ்கிறாள். இந்த முரண்பாடு நாவலுக்கு ஒரு வசீகரமான மர்மத்தை அளிக்கிறது.

மரணம் குறித்த குறிப்பிடத்தக்க இடம் இரு பண்டாரங்கள் வேம்பலை நோக்கி வரும் இரண்டாவது தருணம். நாவலின் தொடக்கத்தில் வெயிலில் காய்ந்து வரண்டு அழிவின் விளிம்பில் இருக்கும் வேம்பலைக்கு இரு பரதேசிகள் துந்தனா இசைத்தபடி வருகிறார்கள். அவர்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. அவர்களுக்கு ஒன்றும் கொடுக்க முடியாத பரிதாப நிலையில் தாங்கள் வாழ்வதைப் பற்றிய குற்ற உணர்ச்சியை வேம்பலை மக்களுக்கு உருவாக்கிவிட்டு அழுதபடி அவர்கள் திரும்பிச் செல்கிறார்கள்.

‘ஊர் எல்லையைத் தாண்டும்வரை அவர்கள் இருவரும் வாயில் கைகைக் கொடுத்து அடக்கியபடி வெளியேறி நடந்து செல்கிறார்கள். புஊர் எல்லையைத் தாண்டும்போது ஒருவன் தன்னை மீறி பீறிட்டு அழத் தொடங்கினான். மிகவும் சப்தமாகவும் பசியின் ஓலமாகவும் இருந்த அக்குரல் நீண்டதூரம் கேட்டுக் கொண்டிருந்தது’ என்கிறது நாவல்.

வெகு காலத்திற்கு பிறகு இரு பரதேசிகள் துந்தனா இசைத்தபடி நடந்து மீண்டும் வேம்பலைக்கு வருகிறார்கள். அவர்களை ஒரு நாய் பின்னால் தொடர்ந்து வருகிறது. ஆனால் அதை ஒருவன் மட்டுமே பார்க்கிறான். அந்தப் பாதையில் இருந்த மரங்கள் எதையும் காணவில்லை. ஊர் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இதைப் போன்ற ஓர் ஊரை இதற்குமுன் கண்டதில்லையே என்று நினைக்கிறார்கள். ஆடுமேய்ப்பவர்கள் கிடைபோட்டிருப்பதுபோல இருட்டினுள் சிலர் சலனமில்லாமல் உட்கார்ந்திருந்தார்கள். அது இன்னொரு வேம்பலை.

இறந்தவர்கள் மட்டும் வாழும் ஊர் அது. இறந்தவர்களுக்கும் ஊர் தேவைப்படுகிறது. இந்த மாயம் கலந்த சித்தரிப்பு  யுவான் ருல்போ எழுதிய பெட்ரோ பரோமோ [ Pedro Paramo , Juan Rulfo]  என்ற புகழ்பெற்ற இலத்தீனமேரிக்க நாவலின் சாயல்கொண்டதாக உள்ளது. வாழும் மனிதனுக்கு நிழலிருப்பதுபோல கிராமத்திற்கும் ஒரு நிழலிருப்பது விசித்திரமான கற்பனைதான். கிராமத்தில் வாழ்ந்தவர்கள் நீலாவும் சிங்கியும் நாகுவும் எல்லாம் அங்கு எப்படி இருப்பார்கள் என்ற எண்ண ஓட்டத்தை உருவாக்குகிறது இது.

நெடுங்குருதி நாவலின் புனைவு முறையின் தனித்தன்மையை இங்கும் நாம் அடையாளம் காணலாம். முதல்தளத்தில் மரணங்கள் யதார்த்தமாக விவரிக்கப்படுகின்றன. அவை மரணங்கள் மட்டுமே. மரணம் என்பது வாழ்வால் அடையாளப்படுத்தப்படுகிறது. ஆகையால் அவை வாழ்வின் மூலமே புனைவு கொள்கின்றன. ஆனால் அடுத்த கணத்தில் இந்நாவல் மரணத்தை வாழ்வில் இருந்து பிரிந்து மிதக்கும் மாயம் மூலம் மீண்டும் புனைகிறது. இந்நாவல் முழுக்க ஊடாடிச் செல்லும் மையப்படிமங்களை நாம் இந்த படிமங்களுடன் இணைத்து மேலும் மேலும் விரிவாக்கம் செய்ய வாய்ப்பிருக்கிறது.

உதாரணமாக நெடுங்குருதி நாவலின் மையப்படிமமாக வெயில்; எரிக்கும், உயிர் உறிஞ்சும் வெயில் இந்த இருண்ட மௌனமான வேம்பலையில் அடிக்க வாய்ப்பில்லை. வெயிலில் எரியும் வேம்பலைக்கு மாற்றாக அது இருளிலேயே உருவாகி வரும் வேம்பலை. மிக மிக மௌனமானது. அந்த மௌனத்தைத்தான் ஊமை வேம்பு தானும் கொண்டிருக்கிறதா என்ன?

வாழ்வின் மாறுதல்களை எப்போதும் வியக்கச் செய்யும் ஒரு தற்செயல்தன்மையுடன் சொல்கிறது நெடுங்குருதி. பெரும்பாலான கதாபாத்திரங்கள் படிப்படியான ஒரு சரிவையே வாழ்வின் மூலம் ஈட்டுகிறார்கள். இந்த பரிணாமத்தின் சிறந்த உதாரணம் என்று ரத்னாவதியின் கதையைக் கூறலாம். வாழ்க்கையின் துயரமான படிகள் வழியாக இறங்கி விபச்சாரியாக ஆகிய ரத்னாவதியைத்தான் நாம் பார்க்கிறோம். அந்த வாழ்வின் குரூரங்கள் துயரங்கள் நடுவே அவள் கண்டடைந்த இனிய உறவாக இருக்கிறது நாகுவுடனான உறவு. அது வழியாக அவள் காதலின் தாய்மையின் உலகுக்கு மீண்டு வருகிறாள்.

ஆனால் நாகுவின் மரணத்துக்குப் பின்பு தாய்மையின் நிறைவிருந்தபோதிலும்கூட ஒரு கட்டத்தில் அவளை காமம் மீண்டும் பிடித்துக் கொள்கிறது. பூபாலனை மணக்கிறாள். அவனுடைய மரணம் அவளுக்குள் இருந்த பலவற்றை முறித்து விடுகிறது. வாழ்வின் இலக்கு குறித்த நம்பிக்கைகளை, வாழ்வின் சாராம்சம் குறித்த உறுதியை அவள் இழக்கிறாள் என்று கூறலாம்.

ரத்னாவதியின் இந்த மாற்றம் ஒரு வகையில் ‘ஆத்ம மரணம்’. முதலில் விபச்சாரியாக அவள் இருந்தபோது நல்லியல்புகள் மேல் நாட்டம் கொண்டவளாக இருந்தாள். அதுதான் நாகுவைக் கண்டடையச் செய்தது. ஆனால் மீண்டும் விபச்சாரியாக ஆகும் போது அந்தக் கீழ்மையில் திளைக்கிறாள். அந்தக் கசப்பே சுவையாக ஆகிவிடுகிறது. நெடுங்குருதி நாவலில் நாகுவின் அப்பா அளவுக்கே முக்கியமான கதாபாத்திரம் ரத்னாவதி. இருவருமே தங்கள் கதாபாத்திரத்தை தாங்களே உருவாக்கி அழித்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ்வதனூடாகவே உருமாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை வகுத்துக் கொள்ள முயலும் ஒரு வாசகன் வாழ்வைப்பற்றி வெகுதூரம் சிந்தித்துச் செல்ல வாய்ப்பிருக்கிறது.

நெடுங்குருதி நாவலில் அழுத்தமான உணர்வெழுச்சிகளை அளித்து நிகழும் மரணம் என்பது ரத்னாவதியின் தற்கொலைதான். பெரும்பாலான தற்கொலைகள் ஒருவகையான அறுபடல்கள். நியாயப்படுத்த முடியாத செயல்கள் அவை. ஆனால் இயல்பானதாக ஆகும் ஒரு தற்கொலை போல கொடியது என எதுவும் இல்லை. ரத்னாவதியின் தற்கொலை அத்தகையது. அவளுடைய அல்லல் நிறைந்த வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களை எல்லாம் அந்த தற்கொலைதான் ஓர் இயல்பான ஒத்திசைக்குக் கொண்டு வருகிறது. தற்கொலையன்றி வேறு வழியே இலலததுபோன்ற ஒரு மரணம், சாவதற்குள்ளாகவே அவள் ஆளுமை இறந்துவிட்டிருக்கிறது.

நோயுற்ற மிருகம் குகைக்குத்திரும்பிவருவது போல அவள் ஜெயராணியைத் தேடிவரும் இடம் இந்நாவலின் மிக நுட்பமான பகுதிகளில் ஒன்று. ஜெயராணியின் குணச்சித்திரத்தின சான்றும் கூட அது. தன் வாழ்நாள் முழுக்க ரத்னாவதி தேடி அலைந்த ஏதோ ஒன்றின் கூறு ஜெயராணியிடம் இருக்கிறது. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ரத்னாவதியை வெறுப்பதற்கான வாய்ப்பே இல்லாதவள் ஜெயராணிதான். அந்த உறுதிப்பாட்டை நோக்கித்தான் மருத்துவமனை வழியாக, அனாதை விடுதி வழியாக, அவள் வந்து சேர்கிறாள். அந்த உறுதிப்பாடு அவளுக்கு சொந்த மகனாகிய திருமாலிடம் இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

நெடுங்குருதி நாவலின் இரண்டாம் தலைமுறையின் கதை முதல் தலைமுறையின் அளவுக்கு அழுத்தம் இல்லாதது என்று படுகிறது. முக்கியமான காரணம் இங்கு ‘கோடை’ இல்லாமல் ஆகிவிட்டிருக்கிறது. உயிரை உறிஞ்சும் வெயில் மட்டுப்பட்டிருக்கிறது. ஆயினும் அவர்களின் வாழ்க்கை என்பது ‘திரிந்து உருமாறுதல்’ ஆகவே உள்ளது. ஐவகை நிலமும் பாலையாக ஆவதன் பரிணாமச்சித்திரத்தையே நெடுங்குருதி அதன் பெரும்பாலும் எல்லா கதாபாத்திரங்களுக்கும் வகுத்தளிக்கிறது. நாகுவின் வம்ச பரம்பரையில் இரு கண்களான திருமால், வசந்தா. வசந்தாவின் வாழ்க்கை வெயில்பட்டுத் திரிந்து போகிறது. அவள் வேம்பலைக்குத் திரும்ப வருகிறாள் அவ்வாறன்றி கோடையில் இருந்து தப்பித்துக் கொண்ட திருமால் அந்த நிலத்தில் இருந்தே நிரந்தரமாக வெளியேறுகிறான்.

வசந்தா தன் கணவன் சேதுவுடன் மீண்டும் வேம்பலைக்கு வருவதில் முடிகிறது நாவல். கூர்ந்த வாசிப்பில் நுட்பமான பல அர்த்தங்கள் தொனிக்கும் ஒரு திரும்பி வருதல் அது. அவள் கணவன் சேது அப்போதுதான் ஒரு தேசாந்தரம் சென்றுவிட்டு அவன் அண்ணனால் பிடித்து வரப்பட்டிருக்கிறான். அண்ணன் மனைவியுடனான உறவு அதற்குக் காரணம். திரிபுற்று நோயடர்ந்த பழைய வாழ்விலிருந்து ஒரு புதிய வாழ்க்கையை நோக்கி செல்லவே வேம்பலைக்கு வருகிறார்கள்.

”வேம்பலை விரிந்த உள்ளங்கை ரேகைகள் போல தன் சுபாவம்  அழியாமல் அப்படியே இருந்தது. கொக்குகள் நிசப்தமாக வானில் இருந்து வேம்பலையில் இறங்கிக் கொண்டிருந்தன’ வசந்தாவின் கணவன் சேதுவின் குணத்தில் உறைந்திருப்பது நாகுவின் அப்பாவின் அதே குணங்கள் தான்.

அதேபோல இளவயதில் நாகு உடல்நலமில்லாமல் இருக்கும் போது அவன் தன் உடலில் சிறகடித்ததாக உணர்ந்த அதே பறவைகளை வசந்தாவும் உணர்கிறாள். அவள் தன் அப்பாவின் மண் மிச்சமிருக்கும் வேம்பலைக்கு திரும்பி வருவதற்கு முடிவெடுத்ததற்கு அதுவும் காரணமாக இருக்கலாம். தன் கணவனின் அண்ணன் மனைவியில் தன் கணவனுக்குப் பிறந்த குழந்தைக்கு நாகு என்று பெயரிட முடிவெடுக்கிறாள். ‘அதை கூட்டிட்டு வந்திருங்க நம்ம பிள்ளை எதுக்கு அன்னியர் வீட்டில் வளரணும்?’ என்கிறாள் அங்கே நாகு மீண்டும் பிறக்கிறான். நாகுவின் உதிரமே இல்லாத அதே நாகு.

குமிழ்பாசிகள் மிதக்கும் நீர்ப்பரப்பு போல் இருக்கிறது நெடுங்குருதியின் கதைவெளி. எந்த குமிழியும் ஒன்றுடன் ஒன்று நிரந்தரமான உறவுடன் இல்லை. எந்தக்குமிழியும் இருந்த இடத்தில் இல்லை. ஆனால் அது ஒற்றைப்பெரும்பரப்பாகவும் தெரிகிறது. நாம் நீரின் அலையடிப்பை குமிழ்பாசிகளின் அலைகளாகவே பார்த்துக் கொண்டிருக்கிறோம். வாழ்வில் மிதக்கும் நெடுங்குருதியின் கதபாத்திரங்கள் ஒன்றை ஒன்று ‘சும்மா’ தொட்டு விலகிச் செல்கின்றன அவ்வளவுதான். அவை ஒன்றில் இருந்து ஒன்றாக உயிர் கொண்டவை என்பது கூட அவற்றுக்கு இடையேயான உறவை தீர்மானிக்கவில்லை.

மையக்கதாபாத்திரமான நாகு வேம்பலையில் பிறந்து வேம்பலையில் இறந்தவன். ஆனால் வேம்பலையுடன் அவன் உறவு வந்து வந்து தொட்டு விட்டு மீள்வதாக மட்டுமே இருக்கிறது. அவன் மகன் திருமாலுக்கு தாயுடனும் தன் வேருடனுமான உறவும் வந்து தொட்டுச் செல்வது மட்டுமே தன் ஊரை விட்டுச் செல்லும் திருமால் நெடுங்காலம் கழித்து இன்னொரு மனிதனாக வேம்பலைக்கு திரும்ப வரக்கூடும். அங்கிருந்து புதிய ஒரு நாவல் தொடங்கக்கூடும். வேம்பலைக்குச் செல்லும் வசந்தா விரைவிலேயே வேம்பலையை விட்டு விலகிச் செல்லவும் கூடும். இப்படித்தான் நெடுங்குருதி வாழ்க்கையை உருவகித்திருக்கிறது.

நெடுங்குருதியின் தரிசனம் என்பது இதுதான். வாழ்க்கையை அது ஓட்டமாக, தேக்கமாக பார்ப்பதில்லை. ஓயாத அலைபாய்தலாக மட்டுமே பார்க்கிறது. அர்த்தமில்லாத அலைபாய்தல். நம் கண்ணெதிரே அலைபாயும் ஒரு குளத்தின் அலைகளுக்கும் அக்குளத்திற்கும் ஏதாவது தொடர்புண்டா என்ன? அது காற்றினால் தட்பவெப்ப மாறுதல்களின் உலகளாவிய ஆட்டங்களினால் கட்டுப்படுத்தப்படுவது.

 

 

[மேலும்]

முந்தைய கட்டுரைஇருகவிஞர்கள்
அடுத்த கட்டுரைநெடுங்குருதி 4