கடிதங்கள்

அன்பு ஜெ,

 நாம் சந்தித்த போது விஷ்ணுபுரமே முழுக்க என்னை ஆக்கிரமித்துக் கிடந்தது. ஆறு வருடத்திற்குப் பிறகு போன வாரம் மீண்டும் ஒரு முறை பின் தொடரும் நிழலின் குரலை  வாசித்து முடித்தேன் . நாகம்மை, கெ.கெ.எம், அருணாசலம், கதிர்,  ஜோணி, ராமசாமி, கந்தசாமி ஆகியோர் வாழும் மனிதர்கள்.  வீரபத்திரப் பிள்ளையின் கைப்பிரதிகளை எழுதியியது நிச்சயம் ஒரு வீரபத்திரர் தான்.

 நாவலில் வருபவர்கள் எனக்கு மிகவும் பரிச்சயமானவர்களே. நான் அறிந்த வீரபத்திரர் சந்தையில் செத்துக் கிடக்கவில்லையே தவிர எல்லாவற்றையும் இழந்தவர். அருணாசலமாகிவிட வாய்ப்பு மிக அருகில் நழுவிப்போன ஒருவர் எனக்கு மிக நெருங்கிய நண்பர்.

வீரபத்திரர்களாகி, பெயரற்ற கிராமங்களின்  சாக்கடைகளில் செத்துக் கிடக்கும் முகம் தெரியாத இளைஞர்கள் எக்காலத்திலும் உண்டு போல.

பள்ளி, கல்லூரி நாட்களில் நானும் கம்யூனிசத்தில் அதீத நம்பிக்கை கொண்டவன் தான். யுனெஸ்கோ கூரியர் உள்பட தமிழில் கிடைத்த அனைத்து ருஷ்ய எழுத்துக்களையும் எழுத்து விடாமல் தீவிரமாக வாசித்த நாட்கள். நான் போக விரும்பிய ஒரே நாடு ருஷ்யா மட்டுமே. செல்ல முடிந்த போது விருப்பமில்லை.

கேரளா, மேற்கு வங்கம் எல்லாம் இந்தியாவில் லஞ்சம் மித மிஞ்சிய இடங்கள்.  நசுக்கப்படுவது சமான்ய மக்கள் தான். சீனாவிலும் அப்படியே. இன்று ஒரு இடத்தில் கூட கம்யூனிசம் வெற்றி பெற வில்லையே ஏன்?  சீனாவில் இருப்பது கம்யூனிசம் என்றும் நான் நம்பவில்லை.

தொழில் நுட்பம் (Technology), பொதுச் சந்தை (share market) ஆகியவற்றை மார்க்ஸ் அறிந்திருக்கவோ எதிர்பார்த்துக் கணிக்கவோ இல்லை தான். மானுட வரலாற்றின் போக்கை எவர் தான் சரியாகக் கணிக்க இயலும் என்ற தர்க்கம் ஒரு புறம் இருக்கட்டும். கம்யூனிஸம் சோசலிஷம் ஆகியவை எங்குமே என்றுமே நடைமுறைப்படுத்த முடியாத வெறும் கருத்தாக்கங்கள் தாமா?  மார்க்சிய/லெனினிய கருத்துக்களின் குறைபாடுகள் எவை?

 இதைப் பற்றி விரிவாக எழுதுவீர்களா?

 என் நண்பர்களுக்கும் இதே கேள்விகள் உண்டு.

 அன்புடன்,
வேணுகோபால் தயாநிதி

மினியாப்பொளிஸிலிருந்து

 

அன்புள்ள வேணு,

மன்னிக்கவும் கடிதம் தாமதமாகிவிட்டது. ஸ்பாம் கட்டுக்குள் சென்றுவிட்டது.

நான் மார்க்ஸியத்தைப் பற்றிய என்னுடைய நோக்கை விரிவாகவே பின் தொடரும் நிழலின் குரலில் முன்வைத்திருக்கிறேன். மார்க்ஸியத்தை மூன்றாக பிரிக்கலாம். ஒன்று அதன் மெய்யியல். அல்லது தத்துவ உள்ளடக்கம். வரலாற்று முரணியக்க பொருள்முதல்வாதம். அது வரலாற்றின் போக்குகளை ஆராய்வதற்கான மிகச்சிறந்த கருவியாகவே இன்றும் உள்ளது.

இரண்டு, மார்க்ஸியத்தின் சமூக ஆய்வுமுறையும் அதை ஒட்டிய அரசியல் திட்டமும். அந்த சமூக ஆய்வுமுறை இன்றைய சூழலில் மிதமிஞ்சி எளிமைப்படுத்தப்பட்டது என்றே படுகிறது. உபரி என்ற எளிமையான பொருளியல் கருதுகோளைக் கொண்டு சமூகப்பரிணாமத்தின் விதிகளை விளக்கிவிடமுடியாது.

மார்க்ஸியத்தின் அரசியல் செயல்திட்டம் முழுமையாகவே தோற்றுவிட்டது என்றே நான் நினைக்கிறேன். அது பதினெட்டாம் நூற்றாண்டு அரசியல் யதார்த்தங்களில் இருந்து உருவானது. அதைத்தாண்டி காலம் வெகுவாக முன்னகர்ந்து விட்டது.  உழைப்பாளர்கள் மட்டும் அரசைக்கைப்பற்றி நடத்துவதெல்லாம் ஏதோ புராணகால கற்பனை போல உள்ளது.

மூன்று மார்க்ஸியத்தின் இலட்சியவாதம். அது ஒரு கனவு. எல்லாரும் எல்லாமும் பெறக்கூடிய, சமநீதி உருவாகக்கூடிய ஒரு பொன்னுலகுக்கான அறைகூவல். அது எப்போதும் இருக்கும். மீண்டும் மீண்டும் அது அரசுகளை சவாலுக்கிழுக்கும். மேலான சமூகத்துக்காக கோரிக்கை விடுக்கும். நீதிக்காக போர்க்குரல் எழுப்பும். அது அழியாது.

 ஜெ

 

கோட்டையூர்
செப்டம்பர் 20, 2009

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம்.  உங்களது ‘சிறுகதை, ஒரு சமையற் குறிப்பு”  மற்றும் ‘சிறுகதையில் என்ன நடக்கிறது’ படித்தேன்.  அற்புதம்!  இதைவிட எளிமையாக, தெளிவாக, விபரமாக யாரும் எழுதமுடியும் என்று தோன்றவில்லை.  நிறைய தெரியாத விஷயங்களைத்  தெரிந்து கொண்டேன்.  என்போன்றவர்களுக்கு மிக,  மிகப் பயனுள்ள கட்டுரைகள்.  மனமார்ந்த  நன்றிகள்.  அன்புடன்,  சூரி

அன்புள்ள சூரி

தாமதமான கடிதத்துக்கு மன்னிக்கவும். சிறுகதைகளைக் குறித்த அந்த வடிவ விவரணைகள் சிறுகதைகளை எழுதுவதற்கு மட்டுமல்லாமல் வாசிக்கவும் உதவக்கூடியவை என்று நினைக்கிரேன்.

ஜெ

 

மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, 

 சிறுகதை — ஒரு சமையல் குறிப்பு வாசித்தேன். மிக அருமையாக உள்ளது, வளர்ந்து வரும் என் போன்ற எழுத்தாளர்கள் கற்றுக் கொள்ள நிறைய விடயங்கள் அதில் இருக்கின்றன. 

உங்களுடைய நேரத்துக்கும் அந்தப் பணிக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி.

 அன்புடன் 

ஸ்ரீரஞ்சனி    

அன்புள்ள ஸ்ரீரஞ்சனி    

சிறுகதைகளைப்பற்றிய அந்தக் குறிப்பை பலர் வாசித்து பயனுள்ளது என்று சொல்கிறார்கள். சிறுகதைகளின் வடிவம் என்ன அடைந்தது என்பதே அதில் உள்ளது. என்ன அடைய முடியும் என்பது கலைஞனின் சவால்

ஜெ

ஜெயமோகன் சார்…

‘தன்மாத்ரா’ படத்தில் மோகன்லால் திருக்குறள்ள உதாரணம் சொல்றார், ‘சின்னஞ்சிறு கிளியே..’ பாடறார்… அதே படத்தில் ஜெகதி ஒரு தமிழ் வியாபாரியை ‘போடா..’ ன்னு விரட்டுறார்..
பொதுவா கேரளால தமிழகத்தைப்பத்தி என்னமாதிரி அப்பிப்ராயம் உண்டு. மலையாளம்ன்றது தமிழ்லருந்து பிரிஞ்சதுதானா..

–          அன்புடன் சஞ்சய்.

 

இதற்கு மலையாளா நாட்டில் சென்று பார்ப்பதுதான் ஒரே வழி. பொதுவாக ஒரு நாட்டில் ஒரு விஷயத்தை எப்படி எண்ணுகிறார்கள் என பொதுவாகச் சொல்லிவிடமுடியுமா என்ன?

 1. மலையாளம் தமிழில் இருந்து பிரிந்தது அல்ல. மலையாளப்பகுதியில் இருந்த வளராத தமிழின் உபமொழிகளில் இருந்து உருவானது

 2. கேரளத்தில் தமிழர்களைப்பற்றிய மதிப்பு உண்டு என்பதே நான் அறிந்தது. அதேசமயம் எல்லை தாண்டிய காழ்ப்பை வளர்த்துக்கொள்வது கீழ்த்தர மக்களின் வழக்கம்

ஜெ

 

அன்புள்ள ஜயமோகன்

நீங்கள் `கூட்டுச்சொற்றொடர்களை குழப்பம் இல்லாது அமைப்பது இன்னமும் கடினமானதாகவே இருக்கிறது.` என்பது சரி.

இதை நிவர்த்திக்க ஒரு எளிய வழி உள்ளது.-  கூட்டு சொற்களை பிரித்து எழுதுவது. கூட்டு சொல் தொல் தமிழில் இருந்து வரும் பழக்கம். தற்கால பயன்களுக்கு அது உபாதை செய்தால், அப்பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக , நீங்கள் `கூட்டுச்சொற்றொடர்களை` கூட்டு சொல் தொடர்களை என எழுதினால் படிப்பவருக்கு எளிதாக இருக்கும்.

தொல் தமிழ் காலத்தில், பாறைகளின் மீது எழுதுவது கடினமாதலால், முடியும் வரை சொல் தொடர்கள் வைத்து, எழுத்துகளை குறைத்தனர். அதனால் சொல் தொடர் பழக்கம் உண்மையாகவே `கல் காலத்தில்` இருந்து வருகின்றது. இப்போது அந்த நிர்பந்தம் இல்லை.

மதிப்புடன்

வன்பாக்கம் விஜயராகவன்

 அன்புள்ள விஜயராகவன்

 நீங்கள் சொல்வது நடந்துகொண்டுதான் உள்ளது. ஆனால் அது தமிழில் அவ்வளவு எளிதல்ல. இயந்திரத்தனமாக பிரித்தால் அர்த்தமும் தொனியும் அழியும். ‘நடந்து கொண்டு தான் ‘  என்று எழுதினால் அர்த்தமே மாறிப்போகும் அல்லவா?

 இத்தகைய மார்றங்கள் படைப்புகள் மூலமே வர முடியும், இலக்கண மாற்றங்கள் மூலம் அல்ல

ஜெ

அன்பான சகோதரர் ஜெயமோகன் சார் !

வணக்கம் சார் !

இன்று குங்குமம் (26.10.09) இதழில் தங்கள் மனவிலாசம் படித்தேன். சில காலத்திற்கு பிறகு உங்கள் எண்ணங்களை வணிக இதழில் படிக்கிறேன்.

“சினிமா:  நான் எழுத்தாளனாக வாழ வேண்டும் என்றால் எனக்கு சினிமா தேவைப்படுகிறது.  இல்லை என்றால் குமாஸ்தாவாக வாழ வேன்டி இருக்கிறது.  அவ்வளவுதான்.”

சினிமா பற்றி சில வரிகளில் மட்டுமே பதிவு செய்துள்ளீர்கள். புரியவில்லை சார்.  இது பற்றி உங்கள் இணைய பத்திகளில் விரிவாக எழுதுங்கள் சார் !

தமிழில் உங்கள் உரையாடல்களோடு வர இருக்கும் ‘பழஸிராஜா’ திரைப்படம் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். என்னைக் கவர்ந்த இரு முக்கிய ஆளுமைகளான இசைஞானி + ஜெமோ இணைந்துள்ள இப்படத்தை மிகவும் எதிர்பார்த்திருக்கிறேன். 

உங்களின் அடுத்த படைப்பான ஆன்மீக தேடலுடன் கூடிய பகவத் கீதைக்கு முழுமையான உரை” ஒரு புதிய நோக்கில், வேறொரு பரிமாணத்தில் இளைய தலைமுறைக்கு சென்றடையும். நீண்ட காலதாமதம் இல்லாமல் உடனே புத்தக வடிவில் படிக்க விருப்பம் கொண்டிருக்கிறேன். கீதையை அதன் ‘சாரம்’ தோய்ந்த உங்கள் வரிகள், எண்ணங்கள் எப்படி இருக்கும் என்று எண்ணியபடியே இந்த மின் மடலை எழுதுகிறேன். 2010-ல் புத்தக வடிவில் வெளி வருமா சார்?

வெளிநாட்டுப் பயணங்கள் முடித்து எழுத்துப் பணியில் மூழ்கி இருப்பீர்கள். விரைவில் சிறுகதை, குறுநாவல்  தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

நன்றி சார் !


பேரன்புடன் இரா. அனந்த்  

 

 

அன்புள்ள ஆனந்த்

 பழசி ராஜா வரும் நவம்பர் 13 ல் வருமென நினைக்கிறேன்

 கீதையை அடுத்த வருடம் எழுதிமுடிக்கவேண்டுமென திட்டமிட்டிருக்கிறேன். பார்ப்போம்

ஜெ

  

எம்.ஏ.சுசீலா,
புதுதில்லி
அன்பு ஜெ.எம்.குருவணக்கம்.கிறித்துவம், இந்து மரபு குறித்த பதிவைக்கண்டேன்.
குறிப்பாக,
” ஒரு தமிழர் கிறித்தவர் என்பதனால் கம்பனையும் ஆண்டாளையும் வாசிக்கும் மனநிலை அமைவதில்லை, புதுமைப்பித்தனின் கயிற்றரவு அல்லது கபாடபுரத்தை அவரால் வாசித்துணர  முடியவில்லை என்றால் தமிழிலக்கியத்துடன் அவரது உறவு என்னவாக இருக்கும்? இன்றைய கிறித்தவர்களில் பெரும்பாலானவர்கள் அவ்வாறுதான் இருக்கிறார்கள்.”
என்ற வரிகள் எனது பணிக்காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தின.

கம்பனைப் பாடம் சொன்ன ஒரு பேராசிரியை அந்தப்பணியைகொஞ்சம் கூடச் சரியாக ஆற்றவில்லை என்ற குற்றச்சாட்டு,ஒரு முறை எங்கள் கல்லூரி முதல்வர் முன் வைக்கப்பட அந்த ஆசிரியை அழைத்து விசாரிக்கப்பட்டார்.

இந்திரஜித்தன் வரும் காட்சியை நடத்திக்கொண்டிருந்த அந்த ஆசிரியை அவன் யார் என்பதைக்கூட மாணவியர்க்குத் தெளிவுபடுத்தியிருக்கவில்லை.அது பற்றிக்கேட்கப்பட்டபோது அவர் முன் வைத்த ஆவேசமான பதில் என்ன தெரியுமா?
’’நான் ஒரு கிறிஸ்துவள்.எனக்கு ஏன் ராமாயணம் தெரிந்திருக்கவேண்டும்?’’என்பதுதான் அவர் வைத்த மறுமொழி.
அதே அறையில் அதைக்கேட்டபடி இருந்த எனக்குத் தமிழ்க்கல்வி,தமிழாசிரியர் நிலை பற்றிச் சிரிப்பதா அழுவதா என்றே விளங்கவில்லை.
முதுகலை,நிறைநிலைஎனத் தமிழ் இலக்கியத்தில் பெயருக்குப்பட்டம் வாங்கிக் கொண்டு கை நிறைய ஊதியம் பெற்றபடி இளம் நெஞ்சங்களில் மதவாத அழுக்குகளை அல்லது தங்கள் அறியாமையைப்பதிய வைக்கும் இப்படிப்பட்டவர்கள் இருப்பதால்தானோ என்னவோ உங்களைப் போன்ற எழுத்தாளர்கள்,படிப்பாளிகளுக்குத் தமிழ்ப்பேராசிரியர்கள் பெரும்பாலோர் மீது நல்ல அபிப்பிராயம் இருப்பதில்லை.
கம்பனையும்,ஆண்டாளையும்,தேவாரத்தையும் தேர்வுக்காகப் படிக்காமலா அவர்கள் முதுகலைப்பட்டம் பெற்றிருப்பார்கள்.
தமிழிலக்கியத்தோடு அவருக்குள்ள உறவு ஒருபுறம் இருக்கட்டும்;ஆசிரியர் என்ற நிலையில் அவரது நடத்தை எத்தனை கேவலமானது.நினைக்கவே கூசுகிறது.
(குறிப்பிட்ட நபர் பெந்தகோஸ்த் பின்னணி கொண்டவர்.கத்தோலிக்கர்களிடம் இந்த அளவு வெறுப்புணர்வும்,திணிப்பும் இல்லையென்பதையும் நான் பணியாற்றிய கத்தோலிக்கக் கல்லுரி எனக்குப் புரிய வைத்திருக்கிறது)
நன்றி.

எம்.ஏ.சுசீலா,புது தில்லி
(தமிழ்ப்பேராசிரியர்-ஓய்வு,பாத்திமாக்கல்லூரி,மதுரை)
D II 208 KIDWAI NAGAR WEST,NEW DELHI110023
http://www.masusila.blogspot.com

அன்புள்ள சுசீலா,

 உண்மை என்னவென்றால் மனிதர்களுக்கு மனதைச் சுருக்கிக் கொள்ள ஏதேனும் ஒரு சாக்கு தேவைபப்டுகிறது. மதம், சாதி, குடும்பம்…

 கிறித்தவம் சமீபகாலமாக ஒருவகையான ஒட்டுமொத்த மூடநம்பிக்கையாக இந்த குறுங்குழுக்களால் மாற்றபப்ட்டு வருகிறது. கத்தோலிக்கர்கள்தான் ஏதேனும் செய்ய வேண்டும்

 ஜெ

 அன்புள்ள ஜே,

ஸ்ரீ பரமஹம்ஸ நித்யானந்தர் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவரை குறித்து நீங்கள் ஏன் எதுவும் எழுதுவதில்லை? உங்களிடம் இருக்கும் மொபைல் போன் வகை என்ன? எனக்கு ஐஃபோன் வேண்டுமென்று ஆசை.கிடைக்குமா?

ராம்.

அன்புள்ள ராம்

 அவரைப்பார்த்தால் நல்ல நகைச்சுவை உணர்வுள்ளவர் போல தோன்றுகிறது…வேறன்ன சொல்ல? [ஏதோ ஒன்றுகிடக்க ஒன்று ஆகிவிடப்போகிறது, பார்த்து]

ஜெ

//தினம் பத்து பிராமணர்கள் கடிதத்தில் கோபம் வருத்தம் எல்லாவற்றையும் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். சென்ற காலங்களில் படித்த பிராமணர்கள் இத்தனை சாதி உணர்ச்சியுடன் இருக்கவில்லை//

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். 1. இடஒதுக்கீட்டு முறை பிராமணர்களை இந்தியா முழுதும் பலம் குன்றச் செய்துவிட்டது. ஜெயகாந்தன் காலம் வரை அனைத்து கல்விசார் துறைகளும் பிராமணர் கையிலேயே இருந்தது. இப்போது அப்படியல்ல. தம்முடைய ஆதிக்கம் பறிபோகும் நிலையில் யாருக்கும் இருக்கும் கோபம், வன்மம் இப்படி வெளிப்படும்.

2. தமிழக அளவில் நிலைமை இன்னும் மோசம். திராவிட இயக்கம் அவர்களை அனைத்து வகையிலும் அந்நியப் படுத்திவிட்டது. பெரியார் காலத்திற்குப் பிறகு அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்க யாரும் இல்லை. (உ.வே.சா சிலை மட்டும் போதாது.)

மேலும் இன்று BC(பிற்படுத்தப்பட்டோர்) மார்க்குகள் FC மார்க்குகளுக்கு இணையாக உள்ளன (தமிழ்நாட்டில் மட்டுமே இந்த நிலை என்பதை நீங்கள் கவனித்துப் பரிசீலிக்க இறைஞ்சுகிறேன்.) FC கோட்டாவில் பல BCக்கள் நுழைய ஆரம்பித்துவிட்டார்கள். பண்டித இசை தவிர்த்து அனனத்து துறைகளும் பிராமணரல்லார் கையில். இதுவும் ஒரு காரணம்.தேசிய பல்கலையில் தங்கிப் பார்த்தால் மட்டுமே பிராமணரல்லா தமிழர்களை பிற இந்திய பிராமணர்கள் எப்படி வெறுக்கிறார்கள் என்று உணர முடியும்.

இந்த நிலை மாறும். நாங்களெல்லாம் எதற்கு இருக்கிறோம். :) எனக்கு சித்பவானந்தர்,பெரியசாமி தூரன்,சி.எஸ், ஆகியோரைவிட பல மடங்கு கபிலர்,உ.வே.சா. போன்றோர் முக்கியமானவர்கள். (ஆனாலும் முத்துசாமி திக்ஷிதர் மட்டும் பாதிப் பாடல்களாவது தமிழில் பாடியிருந்தால் இந்திய அளவில் தமிழ் ஜெர்மன் மொழிபோல இருந்திருக்கும் என்ற ஆதங்கம் அடங்கமறுக்கிறது. வரம் கொடுத்தானே ஒரு “தமிழ்க் கடவுள்” முருகன் அவன் தலையில் குட்டவேண்டும்!)

வெங்கடேஷ்

 

அன்புள்ள வெங்கடேஷ்

 ஒன்று, பிராமணர்கள் இன்று புறக்கணிக்கபப்ட்ட நிலையில் ஒன்றும் இல்லை. அது அவர்களே உருவாக்கிக் கொள்ளும் ஒரு பாவனை மட்டுமே.  அவர்கள் மட்டுமா இட ஒதுகீட்டால் பாதிக்கப்படுகிறார்கள்? என் சாதிக்கும் கூடத்தான் எந்த ஒதுக்கீடும் இல்லை. நாயர்கள் என்ன புலம்பிக்கொண்டா இருக்கிறார்கள்? தனியார்துறைகளில் பிராமணர்கள் ஏராளமாக இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதே உண்மை.

 இரண்டு, சமீப காலமாக தொடர்புவசதிகளால் நவீன பிராமணர்கள் பிராமணரல்லாதவர்களிடம் தொடர்பே இல்லாமல் வாழபழகிவிட்டிருக்கிறார்கள்.   இதுதான் காரணம்

 ஜெ

 அன்புள்ள ஜெயன்

விரிவான பதிலுக்கு நன்றி. தேவர் பற்றின நம்பகமான நூல்கள் எவை? நீங்கள் படித்துள்ளவை பற்றியும் சொல்லுங்கள்.

 அபிலாஷ்.

 அன்புள்ள அபிலாஷ்

 தேவரைப்பற்றி மட்டுமல்ல எந்த ஒரு தமிழகத்தலைவரைப்பற்றியும் நம்பகமான ஒரு வரலாற்று நூல்கூட இல்லை. நீங்களே தேடித்தேடி வாசித்து ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டியதுதான். நாம் புராணங்களையே எழுதுகிறோம். சில்சமயம் அதில் சம்பந்தபப்ட்டவர் தேவன் சிலசமயம் அரக்கன்

 ஜெ

 அன்பு ஜெமோ,
   தங்கள் இலக்கிய விமர்சனம் தொடர்பான நூல்கள் அனைத்தும் எனக்கு கிடைக்கவில்லை. குறிப்பாக, “நவீனத்துவத்துக்குப் பின் தமிழ் கவிதை- தேவதேவனை முன்வைத்து” மற்றும்இலக்கிய முன்னோடிகள் வரிசை”-யின் ஏழு நூல்கள் இவை தற்போது கிடைக்கின்றனவா?

நான் தமிழ்நாட்டிற்க்கு வெளியே வசிப்பவன். பெரும்பாலும், இணையத்தில் நூல்களை வாங்குபவன். இணையம் மூலமாக என்னால் இந்த புத்தகங்களை பெற முடியவில்லை. பதிப்பகத்தாரை தொடர்பு கொள்ளும் வழியும் நான் அறியவில்லை. ஆகையால் உங்களிடமே கேட்டுவிடலாம் என்று எண்ணினேன்.

நன்றி

வெங்கட்

 

அன்புள்ள வெங்கட்

 என்ன சிக்கல் என்றால் இப்போது தமிழில் உள்ள இணையதள புத்தகசாலைகள் சரியாக வேலைசெய்யவில்லை. எனி இன்டியன் கிட்டத்தட்ட முடங்கிவிட்டிருக்கிறது. நீங்கள் உடுமலை டாட் காமில் முயன்றுபார்க்கலாம்

 என் விமரிசன நூல்கள் இப்போது அச்சில் இல்லை என நினைக்கிரேன். ஒன்றிரண்டு இருக்கக் கூடும். மறுபதிப்பு எப்போது வருமென தெரியவில்லை

 Contact  <[email protected]>,

 ஜெ

 

//மரணம் எழுத்தாளருக்கு ஒரு தொடக்கம் என்பார்கள். கிருத்திகா மறு கண்டுபிடிப்பு செய்யப்பட்டால் அது ஒரு சிறந்த விஷயமாக அமையும். கிருத்திகாவின் மகளுக்கும் அவர்களின் மாபெரும் அமைப்புக்கும் தமிழின் மீது பெரிய மதிப்பு இல்லாத காரணத்தால் அவர்கள் கிருத்திகாவை ஒரு தமிழ் எழுத்தாளராக முன்னிறுத்தவில்லை. ஆகவே அவரது நூல்கள் இன்று கிடைப்பதே இல்லை. எவராவது ஆர்வம் எடுத்து அவற்றை வெளியிடலாம்.//

சரியான விமரிசனம்.  இப்போதைய வாசகர்களுக்குப் புரிஞ்சுக்கவும் முடியுமா?? தெரியலை.  “வாசவேச்வரம்” முதல் முதல் வாசகர் வட்டம் வெளியீடாக வந்தது என நம்புகிறேன். அவருடைய மற்றச் சில நாவல்களும் வாசகர் வட்டம் வெளியிட்டிருக்கலாம். வாசவேச்வரம் மட்டும் படிச்சிருக்கேன், ஆனால் என்னுடைய பதினைந்து வயதில். அப்போதைய புரிதலுக்கும், இப்போதைய புரிதலுக்கும் வேறுபாடுகள் உண்டே. புரிஞ்சதுனு சொல்லவும் முடியாது.  மறுபடி படிக்கணும்னு ஆவலாய் இருக்கு. :(

கீதா சாம்பசிவம்.

 அன்புள்ள கீதா சாம்பசிவம்

 கிருத்திகா அவரது நாவல்களில் மகாபாரதத்தை பின்புலமாகக் கொன்டு சமகால டெல்லி அரசியலை நையாண்டியாக சித்தரித்திருக்கிறார். அவை ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. அவற்றின் பாதிப்பே சஷி தரூரின் தி கிரேட் இன்டியன் நாவல்.

 அந்நாவல்களை முழுமையாக வாசிக்க நம் மரபின் மீதான ஒரு பயிர்சியும் கொஞ்சம் அரசியல் பழக்கமும் தேவை. ஆகவே இன்றைய வாசிப்பில் அவை மேலெழக்கூடும்.

 ஜெ

 அன்புள்ள ஜெ,

 சனிப்பெயர்ச்சியைப் பெயர்க்கப் பார்க்கிறீர்கள் – இது சரியான அணுகுமுறையன்று. சனிப்பெயர்ச்சியன்று  ஒன்றுமே சொன்னபடி நடைபெறாவிட்டால் நாத்திகர்களுக்கன்றோ நல்லது?

 அதைவிடுத்து, நாசா தன் கணினியில் ஜாதக ஆராய்ச்சியை நிறுவி, புதன்/ சனி பார்வைகளை சற்றே திருத்திக்கொள்ள ஏற்பாடு செய்யவேண்டும், அஃதே சனாதனம் தழைத்திடவும் வழி, நற்பலன் நடந்திடவும் வழி.

 ஆனால் நாசா நாத்திகர்களுக்கன்றோ மோனை ரீதியில் ஆதரவானது? செய்வார்களா?

 அன்புடன்

 சுரேஷ்.

 அன்புள்ள சுரேஷ்

 நாசாவே ஒரு சம்ஸ்கிருதச் சொல் தானே? நாசம் என்பதன் மரூ..அது சனியின் பெயர்

 ஜெ

 உயர்திரு ஜெயமோகன் சார் அவர்களுக்கு,

 வணக்கம்.

 இலக்கியத்தை நோக்கிய தங்களுடைய தன்னெழுச்சியான பங்களிப்பு என்னை வியக்க வைக்கிறது.

 எங்கள் தளம் பற்றிய அறிவிப்பை உங்கள் தளத்தில் இடம்பெறச் செய்திருக்கிறீர்கள்

 உங்கள் தளத்தில் இன்னொரு தளத்தின் தகவல் இடம்பெறுவது சாதாரண விஷயம் அன்று.

 அந்த ஒரு தினத்தில் சில ஆயிரம் பார்வையாளர்கள் உங்கள் தளத்தில் இருந்து வந்து சேர்வதை நான் வடக்கு வாசல் இணைய தளத்தில் பார்த்திருக்கிறேன்.

 பலருக்கு இதை செய்வதில் யோசனை இருக்கிறது.  மனதில் கணக்கு அரசியல் பயம் பொறாமை எல்லாம் உண்டாகிறது.

 நீங்கள் இதை உடனடியாகச் செய்கிறீர்கள்.

 இத்தனைக்கும் நாங்கள் யார் என்று கூட உங்களுக்குத் தெரியாது.

 உங்களின் இந்த ஆதரவை வணங்குகிறேன்.

 எங்கள் தளம் வளர தங்களுடைய ஆலோசனைகளும் வேண்டும். இன்னும் இந்தத் தளத்தின் என்னென்ன செய்யலாம் என்று நீங்கள் எழுதினால் அதை உடனடியாகச் செய்யத் தயாராக இருக்கிறோம்.

 மிக்க நன்றி

 அன்புடன்

யோகராஜ்

தள நிர்வாகி

தமிழ் கவிதைகள்.காம்

  

அன்புள்ள யோகராஜ்

கவிதைகள் சிறப்பாக அமைய ஒரே வழி நல்ல கவிதைகளை மட்டுமே பிரசுரிப்பதுதான். அதை மட்டுமே நான் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் திண்ணை போன்ற இணைய தளங்கள் எல்லா கவிதைகளையும்  பதிவேற்றுகின்றன. விளைவாக அவற்றை எவருமே வாசிப்பதில்லை

நல்ல மொழியாக்கங்களுடன் நல்ல கவிதைகளை மட்டுமே வெளியிடுங்கள்.

 ஜெ

 வணக்கம் குரு.,

“மருத்துவ ஆலோசனை சொல்லும் அளவுக்கு எனக்கு மருத்துவமேதும் தெரியாது”.

அப்படி என்றால் “இம்பிட்டு சுக்கு எடுத்து”….,,, என்று உங்களுக்குள் உள்ள மருத்துவரை வெளிப்படுத்தியது ஏன்? (இளம் பிராயத்தில்)

இருந்தபோதிலும், ஆஸ்துமா பற்றி தங்களின் அவதானிப்பு சரியான ஒன்று.,
அதிலும் பிராணாயமத்தை பற்றி எளிதாக குறிப்பிட்டது பலருக்கும் உதவக்கூடும்.,

தியானத்துடன் ஓரளவு தொடர்புபடுத்தி,பிரமாண்டத்துடன் பேசும் “பிராணாயாமம்” பற்றி இவ்வளவு எளிதாக விளக்கியதற்க்கு நன்றிகள்.,

பணிவன்புடன் மகிழவன்.
 

 அன்புள்ள மகிழவன்,

 மருத்துவம் தெரியாத எவரும் இருக்க முடியாது, ஏனென்றால் தன் உடலை கவனிக்காத எவருமே இல்லை. கொஞ்சம் தொடர்ச்சியாக கவனித்தால் எவ்வளவோ சொல்ல முடியும்

 ஜெ

 

 

 

காந்திய மருத்துவம்

மார்க்ஸ்,ஹெகல்,முஜீப்

ஆன்டனி டிமெல்லோ,கிறித்தவ,இந்து உரையாடல்

பசும்பொன்: கடிதங்கள்

பசும்பொன்

விக்கி- தமிழ் தாலிபானியம்

பின் தொடரும் நிழலின்குரல் -அருணகிரி

முந்தைய கட்டுரைபழசிராஜா முன்னோட்டம்
அடுத்த கட்டுரைநெடுங்குருதி -2