கனடிய இலக்கியத் தோட்ட விருதுகள்

கனடாவின் டொரொண்டோ நகரை மையமாகக் கொண்டு செயல்படும் கனடிய இலக்கியத் தோட்டம் அளிக்கும் இலக்கிய விருதுகள் இவ்வருடம் நாஞ்சில்நாடன் மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு வழங்கபப்டுகின்றன. நாஞ்சில்நாடன் அவரது கட்டுரை நூலான ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ என்ற நூலுக்காக பரிசு பெறுகிறார். ‘யாமம்’நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணன். கனடிய இலக்கியத் தோட்டம் அமைப்பு டொரொண்டோ பல்கலையுடன் இணைந்து ஏற்கனவே இயல் விருதை வழங்கிவருகிறது. ரூபாய் 500 கனடிய டாலர் மதிப்புள்ள விருதுகள் இவை.

கட்டுரைகள் அவரது புனைவிலக்கியத்துடன் இணைத்து வாசிக்கப்பட வேண்டியவை. அவரது புனைகதைகளில் ஒலிக்கும் சமூகக்கோபம் கொண்ட ஆசிரியனின் குரலே இக்கட்டுரைகளில் நேரடியாக ஒலிக்கிறது. மரபின் செழுமைகளை இழந்து நுகர்வு வெறியால் சூழலை அழித்துக் கொண்டு வணிகப்புத்தியால் உறவுகளைச் சிதைத்துக் கொண்டு அழியும் நம் தலைமுறையை நோக்கி ஒரு கலைஞன் கொள்ளும் கோபத்தின் கனலை நாம் அவரது கட்டுரைகளில் காணலாம். நாஞ்சில்நாடன் என்றாலே அவரது இயல்பான நகைச்சுவைதான் நம் நினைவுக்கு வரும். இக்கட்டுரைகளில் அது கரிய நகைச்சுவையாக நுரைத்துக் கொண்டே இருக்கிறது.

எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் புனைவை பிரித்து பிரித்து மறு அடுக்கு செய்து கற்பனைக்கும் யதார்த்ததுக்கும் நடுவே உலவும் புதுவகை நாவல். மனித இச்சையின் விளக்கமுடியாத ஒரு மர்மத்தை தொட்டு அதை விளக்காமலேயே நின்றுவிடும் அபூர்வமான இலக்கிய ஆக்கம் இது. [பார்க்க: ] இவ்விரு நூல்களும் எளிய வாசகர்களுக்கும் நேரடியான வாசிப்பின்பத்தை அளிப்பவை. கூர்ந்த வாசகர்களுக்கு மேலதிக தளங்களை திறந்து காட்டுபவை. இத்தகைய ஆக்கங்கள் கூட நம் சூழலில் இயல்பான வாசகக் கவனத்தை பெற முடியாத நிலை உள்ளது இன்று. இநதச் சூழலில்தான் இவ்வகை விருதுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இவ்விருதுகள் மூலம் இப்படைப்பாளிகள் பெறும் நன்மை என அதிகம் ஏதுமில்லை. இந்நூல்கள் வாசகர்நடுவே அதிகமாக அழுத்திக் கூறபப்டுகின்றன என்பதே முதல் நன்மை. நல்ல நூல்கள் உடனடிக் கவனம் பெறாத சூழலில் தங்கள் நூல்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைப்பதனால் படைப்பாளி எழுதிமுடித்து வெளியிட்டதும் அடையும் சோர்வு சற்றே விலகும். நாஞ்சில்நாடன், எஸ்.ராமகிருஷ்ணன் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

காமத்துக்கு ஆயிரம் உடைகள்:எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’

யாமம் :எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு

இயல்’ விருதின் மரணம்

இயல் விருது சில விவாதங்கள்

நாஞ்சில் நாடனின் கும்பமுனி

நாஞ்சில் 60 நிறைவு: நூல் வெளியீட்டுவிழா

ஒரு இலக்கிய நிகழ்ச்சியின் கதை

நாஞ்சில் நாடன் அறுபதாம் மணவிழா

தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)

 

முந்தைய கட்டுரைமதம்,ஆன்மீகம்,அவதூறு:ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைகடிதங்கள்