வணிக எழுத்து ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ,

இந்து நாளிதழில் வந்த கட்டுரையை வாசித்தேன். வாசித்த உடன் உதிர்த்த ஒரு ஐயம்.அதற்காகவே இக்கடிதம்.

வணிகம் சார்ந்த எழுத்துகளால் தான் மிகையான இன்றைய இளைய தலைமுறையை தீவிர இலக்கியம் நோக்கி கட்டியிழுக்க முடியுமென்பது மிக சத்தியமான வார்த்தை. இதற்கு நானே நேரடியான உதாரணம். படக்கதையில் துவங்கி, ராஜேஷ்குமார் நாவல்களில் மூழ்கி, மெல்ல ஆங்கிலத்தில் ஹாரிபாட்டர்/ பின்னர் Michael Crichton, Stephen King, Frederick Foresyth, Dan Brown என வாசித்து, நடு நடுவே நூலகங்களிலிருந்து கல்கி, சாண்டில்யன் போன்றோரை கற்று, மெல்ல சுஜாதாவிற்கும்/ இந்திரா சௌந்தரராஜனுக்கும் தாவி, நூலக உரிமையாளர் மூலமாகவே பின்னர் சுந்தர ராமசாமியை படிக்க நேர்ந்து , பின்னர் ஜெ.மோ, தி.ஜா என இப்போது வளர்ந்து வருகிறேன்.

என்னையும் தமிழில் சுண்டி இழுத்தது சுஜாதா போன்றோரின் வணிக ரக எழுத்துகளே. எடுத்தவுடன் “ஒரு புளியமரத்தின் கதை”யையோ, “காடு” போன்ற ஒரு நாவலையோ படிக்க நேர்ந்திருந்தால் அந்த கடின நடையை முன்னிட்டே நான் அப்புத்தகங்களை நிறுத்திவிட்டிருப்பேன். இப்போது என் சக தோழர்களுக்குமே “காடு” போன்றதொரு நாவலை படிக்க கொடுக்க எனக்கு பயமாக தான் உள்ளது. ஏற்கனவே புத்தக வாசிபென்பது சிறிது கசப்பது போல் இருக்கும் அவர்களுக்கு விறுவிறுப்பானதொரு நாவலகளை கொடுத்து சிறிது சிறிதாக தான் இழுக்க வேண்டியிருக்கிறது. அதனால் தான் சுஜாதாவின் ஆ’வும்/ கொலையுதிர் காலமும் என் வீட்டிலிருந்து அதிகமாக கடனாக போகின்றது.

தற்போது தமிழில் Dan Brown போல/ Stephen King போல வணிக எழுத்து இருப்பதில்லை, அவை கண்டிப்பாக வேண்டும் என்பது சரியே. ஆனால் அத்தகைய எழுத்துகளை வெளிகொண்டுவருவது உங்களை போன்ற முன்னனி எழுத்தாளர்களின் கடமை என்று நான் கருதுகிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். சமீபத்தில் நீங்கள் வலைதளத்தில் சிறுகதைகளை வெளியிட்டு கொண்டிருந்த போது ஒரு பதிவில் “நிறைய கதைகள் எனக்கு வருகின்றன. ஆனால் அவையனைத்தும் வணிகம் சார்ந்த எழுத்துகளாக உள்ளன. ஆதலினால் அவற்றை வெளியிடாமல் விட்டுவிட்டேன்” என்று கூறியிருந்தீர்கள். வாசிப்பது மிக குறைவாக உள்ள இந்த காலத்தில்/ தமிழில் எழுதும் பல எழுத்தாளர்கள் தினசரி, எழுத்துலகை பற்றியும், அதன் சரிவான போக்கை பற்றியும் விரிவாக விவாதங்கள் மேற்கொள்ளும் இந்த காலகட்டத்தில்; மிக அரிதான பூ போல ஆங்காங்கு பூக்கும் இளம் எழுத்தாளர்களின் எழுத்தும் புறக்கணிக்கபட்டால் -பூக்கள் அனைத்துமே வாடிவிடுமல்லவா??

அனைத்து வகை எழுத்துகளும் மதிக்க பட வேண்டுமென்பது என் கோரிக்கையல்ல. மதிக்க கூடிய வகையில் இருக்கும் வணிக ரக எழுத்துகளாவது தோற்காமல் இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம். தமிழில் வணிக எழுத்துகள்/ விறுவிறுப்பான, வித்தியாசமான கதையோட்டம் கொண்ட எழுத்துகள் வர வேண்டும், அத்தகைய எழுத்துகள் இன்றைய படிப்பாளிகள் மத்தியில் பரவலாக பேசபடவேண்டும்/ மீண்டும் சுஜாதா போன்றோரின் வீரியமிக்க (வாசிப்பவரை கதையில் மூழ்கியிருக்க செய்யும்) கதைகள் வரவேண்டும்/ வாசிக்கும் பழக்கம் மேலோங்க வேண்டும் என்பதே எனது ஆசை. அதற்கு உங்களை போன்ற GEM எழுத்தாளர்கள் துணை நிற்க வேண்டும் என்பதே எனது விருப்பம். கண்டிப்பாக உங்களுக்கு தினசரி வரும் கதைகளில்- அற்புதமான வணிக ரக எழுத்துகளை தேர்ந்தெடுத்து – அவற்றை பதிப்பகங்களிற்கு காட்டி அவை ஒரு நூலாக உருபெற்றிட முடிந்தால் அது ஒருவகை வெற்றியே அல்லவா?

அன்புடன்,
கிருஷ்ணகுமார்

அன்புள்ள கிருஷ்ணகுமார்

நான் எனக்கு வந்தவை தரமான வணிகக் கதைகள் என்று சொல்லவில்லை. அவை வார இதழ்களின் வணிகக்கதைகளை மட்டுமே வாசித்த அனுபவத்தின் அடிப்படையில் அவற்றை நகல் செய்து எழுதப்பட்டவை. பெரும்பாலானவை மிக எளிமையான ஒரு கருத்தை அல்லது அறிவுரையைச் சொல்லும்பொருட்டு சில நிகழ்ச்சிகளைச் சொல்லி முடிப்பவை. அவைதான் இன்று வந்துகுவிகின்றனவே. அவற்றை ஏன் நானும் பிரசுரிக்கவேண்டும்?

தரமான வணிக எழுத்து எப்போதும் நல்ல வாசகரால், இலக்கிய அறிமுகமும் பரந்த பொதுவாசிப்பும் கொண்டவரால் மட்டுமே உருவாக்கப்படமுடியும். கல்கி முதல் சுஜாதா வரை அனைவருமே அப்படிப்பட்டவர்களே. பலரும் இலக்கியமுக்கியத்துவம் கொண்ட ஆக்கங்களையும் எழுதியவர்களும்கூட. எதையுமே வாசிக்காதவர்கள் சரளமான நடையையோ புதிய கதைக்கருக்களையோ விரிவான கதைக்களனையோ உருவாக்கமுடியாது.

கடைசியாக, நான் வணிக எழுத்தை வளர்த்தெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட நேரமோ மனமோ இல்லாதவன். கூடுமானவரை இலக்கியத்திலேயே ஏதாவது செய்யலாமென நினைப்பவன். அதிலேயே நிறைய செய்வதற்கிருக்கிறது

ஜெ

அன்புள்ள ஜெ அவர்களே,

தங்களுடைய “நமக்குத் தேவை டான் பிரவுன்கள்” படித்தேன். தங்கள் எழுத்துக்களை சமீப காலங்களில் படித்தப் பிறகு தான் தீவிர இலக்கியம் என்று ஒன்று உண்டு என்ரென்பதே எனக்கு தெரிய வந்தது. அதுவரை கல்கி புத்தகங்கள் மட்டுமே படித்து வந்தேன். அடுத்து சுஜாதாவின் புத்தகங்கள் படிக்க இருந்தேன். அறத்திக்கு பிறகு உங்களுடைய ‘இவர்கள் இருந்தர்கள்’ என்ற கட்டுரை தொகுப்பினை படித்தேன். அதில் குறிப்பிட்ட பலரின் வாழ்க்கை என்னிடம் பல நல் கொள்கைகளை உண்டாகிற்று. அந்த புத்தகம் இல்லை என்றால் அவர்களை பற்றி எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பு மிக குறைவே. அதில் நீங்கள் குறிப்பிட்ட சில புத்தகங்களை சென்ற வாரம் புதுச்சேரியில் நடைப் பெற்ற புத்தக கண்காட்சியில் வாங்கினேன்.

குறிப்பு: தங்களின் பின் தொடரும் நிழலின் குரல்
​புதினம்
தன்னை பல பதிப்பகங்களில் (காலச்சுவடு, உயிர்மை, நற்றினை, கிழக்கு மற்றும் பதிப்பகம் அல்லா புத்தக கடைகள்) தேடினேன். கிடைக்கவில்லை. வலையுலக அங்காடிகளிலும் கிடைக்கவில்லை. எந்தப் பதிப்பகத்தில் இப்பொது பின் தொடரும் நிழலின் பதிவில் உள்ளது என்பதை கேட்டுக்கொள்கிறேன்.

நமக்குத் தேவை டான் பிரவுன்கள் – எமது கருத்து
இதற்கு பள்ளிகளிலேயே வாசிப்புப் பழக்கத்தை உண்டாக்க வேண்டும். உதாரணமாக நான் மெட்ரிக் படிக்கும்ப் போது ஆறாவதில் இருந்தே ஒரு ஆங்கில குறு நோவல் இரண்டாம் தாளுக்கு உண்டு. ஆனால் தமிழில் அப்படி ஒன்றும் இல்லை. எமது உறவினர் மகள் யு.ஸ்-இல் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். அவள் இங்கு விடுமுறைக்கு வந்தப்போது ஒரு புத்தகத்தை படித்துகொண்டு இருந்தாள். என்ன என்று கேட்டேன். இது இந்த விடுமுறையில் கட்டாயமாய் படிக்கவேண்டிய கதை புத்தகம் என்றாள். நமது அரசும் தமிழ்த்தாய் சிலைக்கு 100-கோடி ருபாய் என்று வீண் செலவு செய்யாமல் ஆக்கப்பூர்வமாக எதாவது செய்யவேண்டும். தமிழ் நாட்டில் தமிழ் புத்தகம் என்ன புத்தகம் படிக்கும் பழக்கமே மிக மிக குறைவு (அதில் நானும் ஒருவனாய் 25 ஆண்டு காலம் இருந்தேன்). நடிகர்கள், இயக்குனர்கள் கூட அதிகம் பேர் புத்தகம் படிப்பதல்ல ஆதலால தான் சராசரி விஷயங்களையே படம் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

தங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி.



​அன்புடன்
,
Rajesh
http://rajeshbalaa.blogspot.in/

அன்புள்ள ராஜேஷ்

பின் தொடரும் நிழலின் குரல் அச்சில் இல்லை. அடுத்த பதிப்பு வெளிவந்தால்தான் உண்டு. வெளிவருமென நினைக்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைபுறப்பாடு-கடிதங்கள் 5
அடுத்த கட்டுரைகுமரி உலா – 5