சீர்மை (2) – அரவிந்த்

[மூன்று]

[தொடர்ச்சி]

தட்டச்சுப் பொறியின் ஓசை சுவரரெங்கும் பட்டு எதிரொலித்தது. வலப்பக்கம் கண்ணாடி ஜன்னலுக்கு அப்பால் பசிபிக் பெருங்கடல் நுரைத்துப் பொங்கியது. தூரத்தில் ம்யூர் காடுகளின் வானுயர் மரங்கள் தங்கள் செந்நிற நிழலைக் கிளை பரப்பி மௌனித்திருந்தன. முதுகுக்குப் பின் அறையின் ஒருபக்க சுவரை மறைத்தபடி புத்தக அலமாரி. அதன் அருகே கடற்குழு ஒன்று எடுத்த நாட்டில்லஸின் ஆளுயரப் புகைப்படம். மேஜையின் நேரெதிரே இருபதடி தூரத்தில் தேக்கு மரத்திலான நிழற்குடையில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த அகல் விளக்கின் தீபம் அசையாது சுடர் விட்டெரிந்தது.

முதலில் ஆரம்பித்த போது மலைப்பாகத்தான் இருந்தது. இதெல்லாம் என்னால் முடியுமா, ஆகிற காரியமா என்ற சந்தேகம். பின்னர் மாதங்கள் கழித்து ஒருசில இணைப்புகள் மெல்ல தென்பட ஆரம்பித்தன. அவற்றை மனதுக்குள் தொகுத்தபடி இருந்தேன். ஆனால் நாளாக ஆக இணைப்புகள் சிக்கலாகியபடி சென்று கொண்டே இருந்தன. அவற்றையும் விடாமல் தொகுக்க முயன்றபோது ஒருகட்டத்தில் எப்படியோ மனம் சிதறி கிளை பிரிந்தது. பின்பு மீண்டும் மூச்சை இழுத்துப்பிடித்து மூளையின் இண்டு இடுக்குகளை துழாவி தொலைத்தவற்றை மெல்ல மீட்டெடுக்க முயன்றபோது எங்கோ ஒரு கணத்தில் கவனம் நழுவ மனம் சுவற்றில் மோதி சிதறியது. சோர்ந்து குறுகி மேஜையில் தலைகவிழ்த்து படுத்து உறங்கினேன்.

பிறகு ஒருநாள் ஏதோவொரு உந்துதலில் அந்த அகல்விளக்கை என் வாசிப்பு மேஜையின் நேரெதிரே ஏற்றி வைத்தேன். ஹஸ்டன்தான் அதை என் பிறந்தநாள் பரிசாக எப்போதோ அனுப்பி வைத்திருந்தார். நெடுநாட்கள் எங்கோவொரு மூலையில் கிடந்தது. கவனம் நழுவும் போதெல்லாம் தலையை உயர்த்தி தீபத்தின் கூர்முனையை உற்றுப் பார்த்தபடி இருப்பேன். கிளை பிரியும் மனம் மறுபடி ஒன்றுசேர்ந்து ஒன்றுசேர்ந்து விருட்சமாகும். அது ம்யூர் காடுகளின் செம்மரங்களைத்தாண்டி வளரும். அதன் மீது பறவைகள் பூத்து அமரும். அதன் வேர் காட்டை அளக்கும். அதன் பசுங்கொடி கானகத்தை பின்னி இணைக்கும்.

வாரம் ஒருமுறை வாசித்த அனைத்தையும் தொகுத்து அதை குறிப்புகளாக அதிவேகத்தில் தட்டச்சு செய்வேன். ஏதோ ஒருவகையில் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறேன் என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றும். கூடவே இன்னும் செய்து முடிக்க வேண்டிய பணிகள் மலைபோல என்ற எண்ணமும். மாலை வேளைகளில் கரையோரம் நடந்து கோல்டன் கேட் பாலத்தின் வளைவு தெரியும் வரை சென்று திரும்புவேன். ரோஜர்தான் என்னை இங்கு குடிவரச்  சொன்னான். வந்து கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகப்போகிறது என்பது ஆச்சரியம்தான். ஆனால் கல்லூரிக் காலத்தில் இப்பகுதிகளில் அலைந்தது என்னவோ வெகு தூரத்தில் நடந்தவை போல் இருந்தன.

தொலைபேசி மணி அடிக்க தட்டச்சு செய்வது தடைபட்டது. அவன்தான். “இன்னுமா கிளம்பவில்லை… எனக்கு பசியெடுக்கிறது… சீக்கிரம் வா” என்றான். இரவுணவுக்கு அவனது இல்லம். அதுவரை தட்டச்சு செய்ததை கோப்புகளில் எடுத்து வைத்து விட்டு, முகம் கழுவி, உடை மாற்றி கிளம்பிச் சென்றேன்.

“மாதம் ஒருமுறையாவது இங்கு வரக்கூடாதா?” என சொல்லியபடி ஃபிரான்சிஸ் அணைத்து வரவேற்றாள். நரம்பியல் பேராசிரியை. அங்கு அவளும் ரோஜரும் சேர்ந்து வசிக்கிறார்கள். வெளியே புல்வெளியில் மூன்று சாய்விருக்கைகள் போடப்பட்டு அதன் முன் சிறு மேஜையில் சலாட் மற்றும் மெக்ஸிக உணவு பரிமாறப்பட்டிருந்தது. மூவரும் சென்று அமர்ந்து பேசியபடி சாப்பிட ஆரம்பித்தோம்.

“பயங்கரக் காரம்…ஆனால் சுவையாக இருக்கிறது” என்றேன்.

“கிழவன் மாதிரி பேசக் கூடாது. காரம் உடம்பிற்கு நல்லது… மேலும் உன்னைப் போன்ற ஆட்களுக்கு அது தேவையும் கூட” என சொல்லி ரோஜர் சிரித்தான்.

“முப்பது வயதுக்கு மேல் காரத்தை குறைக்க வேண்டும் என்கிறார்கள்”.

“ஒரு டாக்டரிடமே கதை விட உன்னால்தான் முடியும்! மேலும் முப்பதெல்லாம் ஒரு வயதா? நேற்றைய இருபதுதான் இன்றைய முப்பது என்பதை சான் ஃபிரான்ஸிஸ்கோ தெருவில் இறங்கி எவனைக் கேட்டாலும் சொல்லுவான்”

“முப்பத்தி மூன்று”

“சரி முப்பத்தி மூன்று… பெரிய வித்தியாசம் பார்!!”

அடுத்து உரையாடல் எங்கு செல்லப் போகிறது என்பது ஒருவாறு புரிந்தது. திசை மாற்ற வேறெதோ சொல்ல ஆரம்பிப்பதற்குள் ரோஜர் இடைமறித்தான். “இவள் உன்னிடம் ஏதோ சொல்ல வேண்டுமாம்…” என்று ஃபிரான்சிஸ்ஸை நோக்கி கைகாட்டினான்.

ஃபிரான்சிஸ்  தொண்டையை செருமியபடி ஆரம்பித்தாள். “கென், இப்போதெல்லாம் உன்னை பார்க்கவே முடிவதில்லை.. நீ வெளியே எங்கும் வருவதே இல்லை… வந்தாலும் திடீரென மௌனமாகி ஏதோவொரு யோசனைக்குள் புகுந்து விடுகிறாய்.. எங்களுக்கு பயமாக இருக்கிறது”

“மறுபடியும் ஆரம்பித்து விட்டாய்…”

“ஜெஃப்ரி எஸ்.எஃப்.கார்டியனில் உன்னைப் பற்றி எழுதியதைப் படித்திருப்பாய்..”

“அவன் கிடக்கிறான்….. வேண்டுமென்றால் இங்கு ஒரு குட்டிக்கரணம் அடித்து கைகால்களை சுழற்றி எல்விஸ் போல நடனம் ஆடிக் காண்பிக்கிறேன். அப்போதாவது பேசாமல் இருப்பாயா?”

“குறுக்கே பேசாதே. சொல்வதை முதலில் கேள்” என்றவள் என்னை நேராகப் பார்த்தபடி “கடைசியாக எப்போது நீ ஒரு பெண்ணோடு சேர்ந்து வெளியே போனாய்? குறைந்த பட்சம் உணவருந்தவாவது?” என்றாள்.

“இரு நிமிடங்களுக்கு முன் என நினைவு”

“ஹ்ஹா..பயங்கர நகைச்சுவை. வாயை மூடு. நிஜமாகத்தான் கேட்கிறேன். எப்போது?”

“ஃபிரான்சிஸ் இது பற்றி நிறைய பேசியாகிவிட்டது…. திரும்பவும் ஆரம்பத்தில் இருந்தா..?”

“போய்ப்பார்த்துப் பேசினால்தானே பிடிக்கும்? போகவே மாட்டேன் என்றால் எப்படி?”

“போன மாதம் கூட நீ சொல்லிய ஜூலியா ஜோன்ஸை போய் பார்த்தேனே?. இருவருக்குமே சுத்தமாக சரிவரவில்லை”

“அவளை விடு… அது ரோஜரின் தேர்வு…”

“பொய் பொய்” என்றான் ரோஜர். “அதற்கு முன் நீ சொன்ன கேத்தரின் மட்டும் எப்படியாம்”.

“ரோஜர் நீ பேசாமல் இரு…” என்று சொல்லி அவனை முறைத்துவிட்டு என்னிடம் திரும்பினாள் “கென், நான் சொல்வதை கேட்பாயா மாட்டாயா? இந்தத் தடவை மட்டும் எனக்காக போய் பார்… கண்டிப்பாக உனக்குப் பிடிக்கும். அவளுக்கும்தான்” என்றாள்.

“இதெல்லாம் சரிப்பட்டு வராது ஃபிரான்சிஸ். அது உனக்கே தெரியும். அறை ஓரத்தில் நாள் முழுக்க உட்கார்ந்தபடி போகும் மிகத்தனிமையான சாகசங்களற்ற வாழ்க்கைமுறை என்னுடையது… அது எத்தனை பேருக்குப் பிடிக்கும்? மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய ஒருத்தியின் வாழ்க்கையில் ஏன் விளையாடுகிறாய் என்பது மட்டும் எனக்குப் புரியவில்லை…”

“அதை முடிவெடுக்க வேண்டியது நீ அல்ல…. யாருக்கு என்ன பிடிக்கும் என்ற இம்மாதிரி ஊகத்தை எல்லாம் முதலில் விட்டு ஒழி” என்றாள் கோபமாக.

“சரி சரி… கோபப்படாதே” என்றேன். எதுவும் சொல்லாமல் உம்மென்று இருந்தாள். பிறகு மெல்ல “பெயரென்ன?” என்றேன்.

“ஆஹ்.. அப்படி வா வழிக்கு”

“போய் பார்க்கிறேன் என்றெல்லாம் இன்னும் நான் சொல்லவில்லையே…?”

“ஷ்ஷ்..வாயை மூடு” என்று சைகை செய்தாள். பின்னர் “த்ரேயா. அதுதான் அவள் பெயர். நீ தங்கியிருந்த கொலராடோவில் தான் பிறந்து வளர்ந்தவள். பேரழகி என்று சொன்னால் அது தேய்வழக்காகி விடுமா? இருந்தும் அதுதான் உண்மை. பொறாமைப்பட வைக்கும் பேரழகு” என்றாள்.

“யாரை?”

“ப்ச்….நீ திருந்தமாட்டாய். பார் ரோஜர், கடைசியில் இவன் என்னையே கிண்டல் செய்கிறான். இவனை ஏன் நீ அந்த விறகுக்கட்டையை எடுத்து இரண்டு அடி போடக் கூடாது?”

“எப்படித் தெரியும்?” என்றேன்.

“எங்கள் லடாக் பயணக் குழுவில் அவளும் வந்தாள். எல்லாருக்கும் அவளை பிடித்துப் போனது. அனைவருக்கும் விருப்பமானவளாக இருந்தாள். மலையேறியபடி அவளுடன் பேசிய பொழுதுகள் எல்லாம் எனக்குப் பெருமகிழ்ச்சியை அன்றி வேறெதையும் அளித்ததில்லை. அபாரமாகப் பனிச்சறுக்கு விளையாடுவாள். கொலராடோவில் ஜான் டென்வருடன் சேர்ந்து வின்ட்ஸ்டார் என்ற சூழலியல் பாதுகாப்பமைப்பை ஆரம்பித்து, அதை தனியாளாக நிர்வகித்தவள். இப்போது முதுகலை மேற்படிப்புக்காக சான் பிரான்ஸிஸ்கோவில்”

“ஆஹ்.. ஜான் டென்வர் எனக்கு மிகவும் பிடித்த பாடகன். வின்ட்ஸ்டார் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். ஏன் விட்டு விட்டாள்?”

”நிறுவனம் தனித்து இயங்கும் அளவு பெரிதாகிவிட்டது. அதனால். மேலும் இந்தக் கேள்விகளை எல்லாம் ஏன் நீ அவளிடமே நேராகப் பார்க்கும்போது கேட்கக் கூடாது?

“ஒரு ஆர்வத்தில் கேட்டேன். அதற்குள்…..”

“தனியாகப் பார்த்துப்பேச உனக்குக்கூச்சமென்றால் சொல்.. நாளை ஃபிலீப் டாபின் கொடுக்கும் விருந்துக்கு அவளும் வருகிறாள். உன்னையும் ஃபிலீப் அழைத்திருந்தான் தானே? அங்கு போய்ப்பார்…”

“கூச்சம் எல்லாம் இல்லை…” என்று இழுத்தேன்.

“அப்படி என்றால் போய்ப்பார். மறுபேச்சு எதுவும் கூடாது…” என்றாள்.

”சரி.. நாளை பார்க்கலாம்”.

“பார்க்கலாம் அல்ல. நீ மட்டும் போய்ப்பார். நாங்கள் விருந்துக்கு வரப்போவதில்லை. வந்தால் எங்களுடனேயே ஒட்டிக் கொண்டு இருப்பாய்” என்றாள். “மறக்காமல் போ. அவளிடமும் நான் சொல்லிவிடுகிறேன். வேலைக் களைப்பில் தூங்கி விட்டேன் என்றெல்லாம் காரணம் சொன்னால் உதை விழும்” என்று சொல்லி முட்டியை மடக்கி முகத்தில் குத்துவது போல் சைகை செய்தாள்.

அடுத்த நாள் விருந்துக்குச் சென்றேன். புல்வெளியில் நியான் விளக்குகளின் வெளிச்சத்தில் எங்கும் பரவியிருந்த நிழல்களின் ஆட்டத்தின் ஊடே முதல் முறை த்ரேயாவை சந்தித்தேன். அடர் ஊதா நிறத்தில் சாட்டின் கவுனும், மெல்லியதொரு வெள்ளி செயினும் அணிந்திருந்தாள். அதன் முடிவில் கோபால்ட் நீலத்தில் முக்கோணவடிவிலான சஃபயர் கல்லின் கூர்நுனி  மார்பின் பிளவுகளில் படிந்திருந்தது. அது அவளது வெண்ணிறத்தை மேன்மேலும் கோடிட்டுக் காட்டியது. கன்னக் குழிகள் எழ சிரிக்கும் அந்த கணத்தில் கழுத்தின் பச்சை நரம்பு ஒன்று தோன்றி மறைந்தது.

ஆரம்பத்தில் ஒருவர் குறுக்கே ஒருவர் நடந்தபடியும், வேண்டுமென்றே வேறு யாரோ ஒருத்தரிடம் பேசியபடியும், ஓரக்கண்ணால் அலட்சியத்தை மாறி மாறிப் பொழிந்தபடியும் இருந்தோம். பிறகு ஃபிலீப் கிட்டார் வாசிப்பதைக் கேட்க அனைவரும் வீட்டிற்குள் சென்றபோது த்ரேயா சோபாவின் ஓரத்தில் உட்கார, நான் அவள் அருகில் அமர்ந்து கொண்டேன். மேலும் இருவர் சோபாவில் என் அருகே நெருக்கி உட்காரவே, நான் மிக இயல்பாக எனது வலது கையை அவளது தோளைச் சுற்றி மெல்ல வைத்தேன். சில நொடிகளுக்குப் பிறகு அவளும். அப்படி அந்த முதல் தொடுகையில் ஆரம்பித்தது எங்கள் உறவு.

மறுநாள் மீண்டும் சந்தித்தோம். அதற்கு மறுநாளும். ஏதேதோ பேசினோம். பெரும்பாலும் உதிரி நிகழ்வுகள், அதுவரை பயணித்திருந்த பாதைகள், அடைந்த சில களைப்புகள், கண்நுனிகளில் மீதம் இருக்கும் கனவுகள்….

முன்பு சில காதல்கள் எனக்கு இருந்ததுண்டு. அவற்றில் சில அபூர்வமாக உறவுகளானதும் உண்டு. ஆனால் எதுவும் அதிக நாட்கள் தொடர்ந்ததில்லை. பெரிதாக சண்டை எல்லாம் ஒன்றும் கிடையாது. இருந்தும் எங்கோ ஒரு தருணத்தில் எப்படியோ ஒரு விலகல். ஒருகட்டத்தில் புரிந்தது. சாகசங்களின் ஊடே நானும் ஒரு சாகசமாக ஆகிக்கொண்டிருக்கும் விந்தையை. ஆம், அவர்களின் சாகசத்தின் ஒரு அங்கம், அவ்வளவுதான் நான் என. விசித்திரமான ஆள் என முதலில் ஏற்படும் குறுகுறுப்பும், ஆர்வமும் வடிந்த பிறகு உறவுகளும் மெல்ல தளர்ந்தன. பரஸ்பரம் மெதுவாக விலகிக் கொள்வோம்.

ஆனால் த்ரேயா வேறு மாதிரி என்பது பேசிய சில நொடிகளிலேயே தெரிந்தது. இளமையில் சாகசங்களால் செதுக்கப்பட்டு இப்போது அவற்றைத் தாண்டி வேறொரு உலகத்தில் இருப்பவள். எழும் மூச்சுக் காற்றில் பயமோ, படபடப்போ துளிகூட இல்லை. பேச்சு உள்ளார்ந்த அமைதியை எதிரொலித்தது. மகிழ்வென்னும் கணம் அவள் உடலாக ஜொலித்தது.

அடுத்த நாள் புத்தக மீள்பிரசுர வேலை ஒன்றுக்குக்காக ஒருவாரம் நியூயார்க் செல்ல வேண்டி இருந்தது. மிகவும் தர்க்கபூர்வமானவன் என என் மீது அதுநாள் வரை வைத்திருந்த நம்பிக்கை அப்போது தகர்ந்தது. நாளும் பொழுதும் அவளது பிம்பங்களின் நினைவுகள்…. உதட்டசைவில், கழுத்தின் அந்த மெல்லிய மீட்டலில், புருவங்களில் படர்ந்த நளினத்தில், புன்சிரிப்பில்… திரும்பி வந்தவுடன் நேராக அவளைச் சந்தித்து என் காதலை சொன்னேன். கட்டி அணைத்து முத்தமிட்டோம். அதுவரை எஞ்சியிருந்த தடைகள் மறைந்தன.

மெல்ல சகஜமானோம். “ஸ்டார் வார்ஸ்: ரிட்டர்ன் ஆஃப் தி ஜெடெய்” படத்தை திரையரங்கில் சேர்ந்து பார்த்தோம். வரும் வழியில் ஒருவரை மாற்றி ஒருவர் கிண்டல் செய்தபடி இருந்தோம். “ஜெடெய்க்கு வட்ட மூக்குக்கண்ணாடி போட்டால் உன்னைப் போலவே இருக்கும்… தத்துவம் எல்லாம் கூட பயங்கரமாக உன்னை மாதிரியே பேசுகிறது, என்ன கொஞ்சம் குள்ளம், அவ்வளவுதான். அது பரவாயில்லை” “பிரின்சஸ் லேயா போல் அழகிய காதுகள் உனக்கு என சொல்லலாம் என நினைத்தேன்… சரி விடு”.  அர்த்தமற்ற பேச்சுகள். சிரிப்பொலிகள். அனிச்சையாக காரை என் வீட்டின் திசையில் செலுத்தினேன். சிறு மறுப்பு கூட இன்றி வந்தாள். நுழைந்த மறுகணம் கன்னத்தில், கழுத்தில், மார்புகளில் மாறி மாறி முத்தங்களைப் பொழிந்தோம். அனல் காற்றின் வெப்பத்தில் நீராவி எழுந்தது. இதழ்கள் சேர்ந்த தருணத்தில் எரிமலைகள் கனிந்தன. ஆற்றில் இறங்கிய யானைகள் குளிர்நீர் அள்ளித் தெளித்தன. அதன் பிளிறல்கள் வளி எங்கும் ஒலித்தன. பிறகு எங்கும் நிறைந்தது அலையோசை. அலைமீட்டல் நடுவே எழுந்தது பெரு மௌனம்.

மெதுவாக எழுந்து வரவேற்பறைக்கு வந்தோம். பசியெடுத்தது. தக்காளிச் சாறோடு, குறுமிளகாயும், பாலாடைக்கட்டியும் சேர்த்து பாஸ்தா செய்தேன். பீங்கான் கிண்ணத்தில் ஆவி பறக்க அதை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தோம். மறு கையில் கண்ணாடிக் கோப்பையில் சிவப்பு வைன். நிலவொளியில் பசிபிக் பெருங்கடல் தளும்பிக் கொண்டிருந்தது. கடல் காற்று எங்கெங்கும் நிறைந்திருந்தது. எதுவுமே பேசாமல் வாசற் படிக்கட்டுகளில் சாய்ந்து உட்கார்ந்து கரைமோதும் அலைகளைப் பார்த்தபடி வைன் அருந்தினோம். பாஸ்தாவை முள்கரண்டியால் குத்தி சாப்பிட்டோம். சாப்பிட்டு முடித்தவுடன் கண்நோக்கி புன்னகைத்தாள். பின்னர் மறுபக்கம் வேறெங்கோ பார்த்தபடி மெதுவாக மிகமெதுவாக என்மீது சாய்ந்தாள். அப்போது அவளது மார்பு என் தோளில் மெல்ல அழுந்தியது. இனி தனிமை இல்லை என சொல்லியபடி மனம் உள்ளுக்குள் விம்மித் துடித்தது.

முதல் சந்திப்பில் இருந்து நாற்பதாவது நாளில் எங்கள் திருமணம் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவின் விளிம்பில் நடந்தேறியது. அல்கட்ராஸ் தீவு எங்கள் முதுகுக்குப் பின் சிறு புள்ளியென மிதந்திருக்க, அதுவரை மேகங்களுள் மறைந்திருந்த சூரியன் மெல்ல தன் ஒளிக்கற்றைகளைப் பொழிந்தான். மூடுபனி வழிவிட்டது, கோல்டன் கேட் பாலம் எங்கள் கண்முன்னே பொன்நிறத்தில் ஜொலித்தது. சிவப்பும் கருமையுங்கலந்த மோனார்க் பட்டாம்பூச்சி ஒன்று எங்களை சுற்றிச் சுற்றி வந்தது.

இரவின் வெம்மையில் மீண்டும் முயங்கி நெகிழ்ந்தோம். தணியாத அந்தத் தாபம் தீர அள்ளி அள்ளிப் பருகினோம். அருவியில் நனைந்தோம். மழைக்காடுகளில் மிதந்து அலைந்தோம். உருட்டிய பகடைகளில் எண்கள் அழிந்து தூய வெண்நிறம் குடிகொண்டது. வெளிர் நீலத்தில் அதன் அத்தனை மௌனத்துடன் பொழுது மெதுவாகப் புலர்ந்தது.

தேனிலவுக்காக ஹவாய் தீவுக்கு இரு வாரங்கள் கழித்து செல்லலாம் என முடிவெடுத்து விமான முன்பதிவு செய்தோம். அப்போதுதான் அங்கு நல்ல இளவெயில் அடிக்கும். மேலும் த்ரேயாவுக்கு செமஸ்டரின் கடைசி சில வகுப்புகளும் ஒரு பரீட்சையும் இருந்தது. ஆக, மணமான சில நாட்களிலேயே மீண்டும் தினசரி வாழ்க்கைக்கு திரும்பினோம். த்ரேயா கல்லூரிக்குச் சென்றாள். நான் வழக்கம் போல் படித்தும் எழுதியும் வந்தேன். புதியதொரு வேகமும் உற்சாகமும் என்னுள் எழுந்தது. எவ்வித எத்தனிப்பும் இன்றி கவனம் எளிதாகக் குவிந்தது. நரம்பியல் கண்டுபிடிப்புகளை நிகழ்வியலோடு இணைக்கும் மிகச் சிக்கலான தொகுப்புக்களை மின்னல் வெட்டிச் செல்வது போல் மனம் அதிவேகத்தில் செய்து முடித்தது. அடுத்த  ஓரிருவருடங்கள் இதே வேகத்தில் உழைத்தால் மனிதச் சிந்தனையின் அவனது இதுநாள் வரையிலான அகத்தேடலின் ஒட்டுமொத்தத்தையும் தொகுத்து, அதன் அதிமதுரத்தை, மிகச் சிறந்த பக்கங்களை இணைத்து, மனதோரத்தில் மங்கிய நிழல் போல் படிந்திருக்கும் அந்த உருவரையை உருவாக்கி விடலாம். ஆம், மனிதத் தேடல் எனும் வலையில் பின்னப்பட்ட பரிபூரண சீர்மை! இதுவரை மனித சமூகம் படைத்ததின் அதிகபட்ச சாத்தியம்!

அந்த வார இறுதியில் ரோஜரும் பிரான்சிஸும் அவர்களது இல்லத்தில் எங்களுக்காக ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். காலை எழுந்து குளித்து முடித்தவுடன் த்ரேயா அவளது நெஞ்சில் மெல்லியதொரு வலி எழுவதாகச் சொன்னாள். திருமண தொடர் அலைச்சல்களின் காரணமாக இருக்கலாம் என நினைத்து விட்டுவிட்டோம். மாலை விருந்துக்கு பழைய நண்பர்கள் நிறைய பேர் அவர்களுடைய மனைவி குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். பார்த்து பல வருடங்கள் ஆகியிருந்தன.  பார்க்கரும் வந்திருந்தான். தோற்றமும் நீள்முடியும் அப்படியேதான் இருந்தது. கட்டியணைத்தபடி “மெஸ்கலைன் வாழ்க” என்றான். “ஆம், அதுதான் எனக்கு இந்த வேலையை வாங்கித் தந்தது” எனச் சொல்லி சிரித்தான். கம்யூனில் சில காலம் இருந்துவிட்டு பின்னர் போர்ட்லாண்ட் ரீட் கல்லூரியில் சேர்ந்து கலிகிராஃபி படித்ததாகவும், அப்போது அங்கு கஞ்சாவும் மெஸ்கலைனும் அடிக்கும் குழுவில் இருந்த ஒருவன் ஆரம்பித்த நிறுவனத்திலேயே இணைந்து, சிலிக்கன் பள்ளத்தாக்குக்கு வந்து விட்டதாகவும் சொன்னான். அணிந்திருந்த சட்டையில் உள்ள கணிப்பொறி புகைப்படத்தைக் காட்டி “இவள் பெயர் லீசா, சூறாவளி போல் உலகத்தையே கலங்கடிக்கப் போகிறாள் பார்” என்றான். நெப்ராஸ்கா மற்றும் கம்யூன் நினைவுகளை மீட்டபடி சிரித்து பேசிக் கொண்டு இருந்தோம். அல்டமாண்ட் இசை நிகழ்ச்சி குறித்து மட்டும் ஏனோ இருவரும் பேசவில்லை.

விருந்தின்போது த்ரேயா அவளது நெஞ்சில் வலி தொடர்வதாகச் சொன்னாள். ஆனால் ஃபிரான்சிஸ்ஸிடம் சொல்ல முனைந்தபோது தடுத்து விட்டாள். வீட்டிற்குப் போய்ப்பார்த்துக் கொள்ளலாம் என்றாள். இரவு வீடு வந்ததும் களைப்பில் தூங்கி விட்டோம். மறுநாள் காலை பரிசோதித்த போது அவளது வலது மார்பின் கீழ்ப்பகுதியில் நீர்க்கட்டி போல சிறியதொரு அசைவு தெரிந்தது. வெறும் கட்டிதான், உஷ்ணத்தால் ஏற்பட்டிருக்கும் என எங்களுக்குள் சொல்லிக் கொண்ட போதும் டாக்டர் ரிச்சர்ட்ஸிடம் போய்க் காண்பித்தோம். பரிசோதித்துப் பார்த்தார். வலது கை முட்டியை மடக்கியபடி கையைத் தூக்கச் சொன்னார். வலி இருக்கிறதா எனக் கேட்டார். “நீர்க்கட்டி போலத்தான் தெரிகிறது. அசைவு இருக்கிறது. அதனால் ஒன்றும் கவலைப்படத் தேவையில்லை” என்றார். “எதற்கும் மீண்டும் ஒருமுறை பார்த்து விடலாம். புதன்கிழமை காலை ஒன்பதரைக்கு வர முடியுமா?” எனக் கேட்டார். “சரி” என்றோம்.

”வெறும் கட்டியாகத் தான் இருக்கும்” என வரும் வழி முழுக்க விதவிதமாக சொல்லியபடி வந்தோம். வீடு வந்ததும் ஃபிரான்சிஸ்  மற்றும் ரோஜரைக் கூப்பிட்டுச் சொன்னேன். “கட்டியாகத்தான் இருக்கும்” “வேறெதுவும் இல்லை, நீர்க்கட்டிதான்” “ஆம், வெறும் கட்டிதான்” எனும் பதில்களையே எதிர்பார்த்து அவை கிடைக்கப் பெற்றதும் நிம்மதி அடைந்தேன். த்ரேயாவின் அம்மா மட்டும் மிகவும் கவலைப்பட்டாள்.

புதன் அன்று மருத்துவமனை சென்றோம். டாக்டர் ரிச்சர்ட்ஸ் மீண்டும் பரிசோதித்துப் பார்த்தார். “வளர்ச்சி எதுவும் தெரியவில்லை. அப்படியேதான் இருக்கிறது. அதனால் பயமில்லை.  ஆனால் வலி இன்னும் இருக்கிறது போலிருக்கிறதே?” எனக் கேட்டார். “ஆமாம், கொஞ்சமாக..” என்றாள் த்ரேயா. சிறிது நேர யோசனைக்குப் பின் டாக்டர் “கவலை எதுவும் இல்லை. கட்டியை நாளை நீக்கிவிடலாம். நீர்க்கட்டி என்பதால் ஊசி வைத்து உடைத்து வெளிவரும் நீரை உறிந்துவிட்டாலே போதும். வலி எதுவும் இருக்காது. இதனால் உங்கள் தேனிலவு ஒன்றும் தடைபடப் போவதில்லை” என்றவர் த்ரேயாவைப் பார்த்து “உன்னுடைய வயதிற்கு இதெல்லாம் எந்தப் பிரச்சினையையும் உண்டு பண்ணாது. முப்பத்தைந்திற்குள் மார்பகப் புற்றுநோய் வரும் சாத்தியம் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவு” என்றார்.

அதுவரை கேட்காது மனதிற்குள் தேக்கி வைத்திருந்த கேள்விக்கு பதில் வந்ததால் ஆசுவாசமடைந்தோம். அனுபவம் மிக்க டாக்டர்,  நம்பிக்கையானவர் என சொல்லியபடி திரும்பினோம்.

வந்து சேர்ந்த ஒருமணி நேரத்தில் டாக்டர் ரிச்சர்ட்ஸ் தொலைபேசியில் அழைத்தார். “எதற்கும் நாளை ஒரு டெஸ்ட் எடுத்துவிடலாம். மரின் ஜெனரலில் என் நண்பன் எண்டோக்ரோனாலஜிஸ்ட் ஒருவன் இருக்கிறான். காலை எட்டரைக்கு அங்கு செல்லுங்கள். டெஸ்ட் எடுத்துவிட்டு பிறகு அங்கிருந்து என் மருத்துவமனைக்குச் செல்வோம்” என்றார்.

மறுநாள் நேரத்தில் எழுந்து காலை உணவு சாப்பிட்டுவிட்டு மரின் ஜெனரல் சென்றோம். டாக்டர் ரிச்சர்ட்ஸ் ஏற்கனவே தயராக இருந்தார். அருகில் இருந்தவரை “டாக்டர். கேரல்” என அறிமுகப்படுத்தினார். “நான் வெளியில் போய் காத்திருக்கிறேன் டாக்டர்” என்றேன். “பரவாயில்லை, இங்கேயே உட்கார்” என நாற்காலியை சுட்டிக் காட்டினார். டாக்டர் கேரல் அவர் எடுத்து வந்திருந்த தாளில் இருந்த கேள்விகள் அனைத்தையும் த்ரேயாவிடம் கேட்ட பின் பரிசோதனைகளை ஒன்றன் பின் ஒன்றாக ஆரம்பித்தார். பிறகு ஊசியை வலது மார்பில் மெல்ல வைத்து வலி இருக்கிறதா என பரிசோதித்தார். டாக்டர் கேரலும் ரிச்சர்ட்ஸும் தங்களுக்குள் பேசிக் கொண்டபடி கட்டியை உடைத்து விடலாம் என சைகை செய்தார்கள். “முப்பது வினாடிகள்தான். வலி அதிகம் இருக்காது. இருந்தாலும் கொஞ்சம் லோக்கல் அனஸ்தீசியா கொடுத்திருக்கிறோம். அசையாமல் அப்படியே இரு” என்றார் த்ரேயாவிடம்.

இரு நிமிடங்கள் கழிந்த பிறகும் எந்தவொரு சலனமும் இல்லை. டாக்டர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருந்தார்கள். “ஊசி கட்டியை உடைக்க முடியாமல் முட்டி நிற்கிறது, வெளியே எடுத்து விடுவதுதான் நல்லது” என்றார்கள். நானும் த்ரேயாவும் புரியாது ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தோம்.

“நீர்க்கட்டி இல்லை, வேறேதோ திண்மப் பொருள் போல இருக்கிறது. ஆனால் வளராது அப்படியே உள்ளது. கார்சினோமாவாக இருக்க வாய்ப்பு குறைவு. சிறியதொரு சர்ஜரி செய்து நீக்கிவிடலாம். கவலையில்லை. அடுத்த வாரமே செய்து விடலாம். அல்லது நீங்கள் தேனிலவுக்குப் போய்விட்டு வந்த பிறகும்.. ஒன்றும் பிரச்சினை இல்லை” என்றார் டாக்டர் ரிச்சர்ட்ஸ்.

மறுவாரமே அறுவைசிகிச்சை செய்து விடலாம் என்றேன். த்ரேயா முடியவே முடியாது, தேனிலவுக்குப் போய்விட்டு வந்த பிறகு செய்யலாம் என டாக்டரே சொல்லிவிட்ட பிறகு நீ எதற்கு அவரசப்படுத்துகிறாய் என்றாள். த்ரேயாவின் அம்மாதான் அடம்பிடித்து அவளை டாக்டர் அன்டர்சனிடம் மாற்றாலோசனை கேட்க ஒத்துக்கொள்ள வைத்தாள். ஆன்காலஜிஸ்ட். பரிசோதித்த சில நிமிடங்களிலேயே “கொஞ்சம் சாம்பிள் எடுத்து அதை உடனடியாக லேபில் வைத்து பார்க்க வேண்டும்” என்றார். “நாளை காலையே எஸ்.எஃப் ஜென்ரல் வந்து விடுங்கள். வெறும் வயிற்றில்”.

கண்முன் எல்லாம் வெகு வேகாக நடப்பது போல எனக்குப் பட்டது. ஆனால் த்ரேயா தைரியமாக இருந்தாள். தேனிலவுக்காக பெட்டியில் பொருட்களை அடுக்கியபடி “ஒன்றும் இருக்காது, டாக்டர் அன்டர்சன் அமைதியாகத்தானே இருந்தார்? முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும்” என்றாள். காலை எஸ்.எஃப் ஜென்ரலுக்குச் சென்றோம். வெளியே நான் காத்து உட்கார்ந்திருக்க, உள்ளே பரிசோதனை போய்க் கொண்டிருந்தது. டாக்டர் அன்டர்சன் வெளியே வர நான் எழுந்து நின்றேன். “முடிந்து விட்டது. சாம்பிளை பெதாலஜிஸ்டிடம் கொடுத்திருக்கிறோம். ஒரு மணி நேரத்தில் முடிவு வரும். இருவரும் போய் கீழே சாப்பிட்டு விட்டு வாருங்கள்” என்றார்.

முதல் சில நிமிடங்களில் மௌனமாக அமர்ந்து எங்கள் சாண்ட்விச்சுகளை சாப்பிட்டபடி இருந்தோம். பிறகு இருவரின் கல்லூரி கால கதைகளை வேடிக்கையாகப் பேசிக் கொண்டும், அவ்வப்போது ஜன்னலுக்கு வெளியே சென்று கொண்டிருந்த வாகனங்களைப் பார்த்தபடியும் இருந்தோம். மின்உயர்த்தியில் மீண்டும் மௌனம் சூழ எட்டாவது மாடிக்குச் சென்ற போது “டாக்டர் அன்டர்சன் பெதாலஜிஸ்ட்டைப் பார்த்துவிட்டு சிறிது நேரத்தில் வந்துவிடுவார். உள்ளே போய்க் காத்திருங்கள்” என்றாள் வரவேற்பறையில் இருந்த பெண்.

குளிர் சாதனப்பெட்டியின் மெல்லிய இரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. த்ரேயா அவளது வெள்ளிச் செயினை விரல்நுனியில் துழாவியபடி இருந்தாள். தூரத்தில் பேச்சுக் குரல்கள் கேட்டன. சப்பாத்துகளின் ஒலி அதிகரித்தபடி இருந்தது. டாக்டர் அன்டர்சன் கதவைத் திறந்து அறையினுள் நுழைந்தார். நுழைந்த மறுகணம் அவரது உடல் மொழியில், கண் அசைவுகளில், அதன் சுருக்கங்களில் ஏதாவது தெரிகிறதா என்று தேடியபடி இருந்தேன்.

“ரிப்போர்ட் இப்போதுதான் வந்தது…சாரி, மெலிக்னெண்ட் ட்யூமர். ஸ்டேஜ் 2, கிரேட் 4” என்றார் அவரது மெல்லிய குரலில். உறைந்த சில நிழற்படங்கள் என் முன்னே மிகமெதுவாக நகர்ந்தன. காதில் மெழுகை உருக்கி ஊற்றியது போலொரு சத்தம்… த்ரேயா அதிர்ந்து பேச்சற்று அமர்ந்திருந்தாள். கண்ணோரத்தில் முத்து போல் ஒருதுளி நீர் நின்றிருந்தது.

ஒருகணம் இறந்து மறுகணம் மீண்டெழுந்தேன். தூரத்து அசைவு கேட்டு சிலிர்த்தெழும் மானின் காதுகள் போல் என் மனம் விழித்துக் கொண்டது. கவனம். ஆம், கவனம். கவனம் கவனம் கவனம் என மனம் சொல்லியபடி இருந்தது. அச்சொல்லே என் உடலாக ஆனது. உடல் தீப்பிழம்புகளை எதிர்கொள்ளும் கவசம் போல் இறுகியது. டாக்டரின் குரல்வளை மெல்ல இறங்கி எழும்புவது, அவரது உதட்டோர பனிவெடிப்புகளின் மீது நாக்கின் ஈரம் படிந்திருப்பது எல்லாம் மிக நுட்பமாகத் தெரிந்தன.

“எங்களுக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.. தெரியவில்லை, இந்த வயதில் ரொம்ப அபூர்வம் இது… கட்டியின் அளவு அவ்வளவு ஒன்றும் பெரிதாக இல்லை… ஸ்டேஜ் 2 தான். ஆனால் கான்சர் செல்களை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. வீரியமும் ஜாஸ்தி. கிரேட் 4. இதுவரை பரவாமல் அதே பகுதியில் மட்டும் இருக்கிறது என்பது நல்ல விஷயம். அதனால் மாஸ்டெக்டமி செய்யத் தேவையில்லை…. ஆனால் அப்படியே விட்டுவிடவும் முடியாது. வலது மார்பின் கீழ்ப்பகுதியில் உள்ள லிம்ப் நோட்ஸ் சிலவற்றை அப்புறப்படுத்த வேண்டும். பிறகு ஆறு வாரம் ரேடியேஷன். கீமோதெரபி ஒன்றும் தேவையிருக்காது” என்றார். “கீழே இரண்டாம் மாடியில்தான் சர்ஜரி. அருகிலேயே தொலைபேசியும் உண்டு. யாரையாவது கூப்பிட்டு இங்கு உதவிக்கு வரச் சொல்ல வேண்டும் என்றால் சொல்லிவிடுங்கள்”.

டாக்டர் அன்டர்சன் வெளியே சென்ற பிறகு மெல்ல த்ரேயாவின் திசையில் திரும்பினேன். அருகில் சென்றமர்ந்து மெதுவாக அவளை அணைத்துத் தலைகோதி “ஒன்றுமில்லை” என்றேன்.  அடிவயிற்றில் எழுந்த அழுகையொலி மடை உடைத்து எங்கும் வெள்ளமாகப் பெருகிற்று. தழுவி நெற்றியில் காதுமடல்களில் முத்தமிட்டேன்.

கை விரல்களை இறுகக் கோர்த்தபடி நடந்தோம். மருத்துவமனையின் தாழ்வாரங்கள் நீண்டு கொண்டே சென்றன. மின்உயர்த்தி சத்தமெழுப்பியபடி கீழே சென்றது. இரண்டாம் மாடியின் பரபரப்புக்கு தொடர்பே இல்லாமல் எங்கள் கை இணைப்புகளில் உருவானதோர் உலகத்தில் இருந்தோம்.

நர்ஸ் வந்து த்ரேயாவிடம் மங்கிய நீலநிறத்தில் வேறு துணி கொடுத்து மாற்றி வரச் சொன்னாள். நான் தொலைபேசியில் கூப்பிட்டு பலருக்கு செய்தி சொன்னேன். ஃபிரான்சிஸ்ஸும் ரோஜரும் உடனே கிளம்பி வருவதாக சொன்னார்கள். உடை மாற்றிக்கொண்டு த்ரேயா வெளியே வந்தாள். குழப்பமும் பயமும் தெளிந்து அவளது கண்களில் திடீரென ஒருவித உறுதி தெரிந்தது. என் நெற்றியில் முத்தமிட்டு “பயப்படாதே” என்று சொல்லிவிட்டு அறுவைசிகிச்சை அறைக்குள் சென்றாள்.

சிகிச்சை நல்லபடியாக நடந்தது. அடுத்த ஒருவாரம் மருத்துவமனையிலேயே இருந்தோம். அப்படி எங்கள் தேனிலவு சான் பிரான்சிஸ்கோ பொது மருத்துவமனையில் அறை எண் 203-இல் கழிந்தது. மீண்டும் வீட்டிற்கு வந்தபோது பெற்றோரும் நண்பர்களும் உறவினரும் எல்லாம் குழுமியிருந்தார்கள். இரவு எல்லோரும் கிளம்பிச்சென்ற பிறகு களைத்து படுத்துறங்கினோம்.

அடுத்த ஆறு வாரம் நடந்த கதிரியக்க சிகிச்சை மேலும் கடினமாக இருந்தது. உடல் வெறும் எலும்பைக் கொண்டு ஆன்மாவை உடைத்துப் போடும் தருணம். தினமும் சிகிச்சை முடித்து வீடு வரும்போது தளர்ந்து போய் இருப்பாள். வந்ததும் உடல்குறுக்கிக் கைகட்டி அப்படியே தூங்கிவிடுவாள். நான் அவள் முகத்தையே பார்த்தபடி படுக்கை அருகில் உட்கார்ந்திருப்பேன். வலியால் தூக்கத்தில் அவள் எழுப்பும் மெல்லியதொரு அனத்தல் எனது முதுகுத்தண்டில் பாயும். எரிந்தெரிந்து அணைவேன். தீப்பிழம்புகளை கையில் எடுத்து அலைவேன்.

ஆனால் அவள் துளிகூட கலங்கவில்லை. வலி அவளை உடைக்கவில்லை. நம்பமுடியாத ஒரு தீவிரம் அவளில் குடிகொண்டது. அது நாளும் பொழுதும் அதிகரித்தபடியே சென்றது.

ஒருவழியாக பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் சிகிச்சை முடிந்தது. டாக்டர் அன்டர்சன் கடைசியாகப் பரிசோதித்துப் பார்த்த பின் “இனி பிரச்சினையில்லை. முழுவதும் நீக்கியாகிவிட்டது.. ரெக்கரன்ஸ் எதுவும் இதுவரை தென்படவில்லை. அதனால் எந்தக் கவலையும் இல்லை. ஆனால் எதற்கும் இருமாதத்திற்கு ஒருமுறை இங்கு வந்து பரிசோதனை செய்து கொள்வது நல்லது” என்றார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தோம். கொடுங்கனவு ஒன்றில் இருந்து விழித்தெழுந்தது போல் இருந்தது. கடல் சூழ்ந்த  பசிபிக் நெடுஞ்சாலையில் மஸ்டேங்க்  கார் ஒன்றில் காற்றை கிழித்துக்கொண்டு செல்லும் போது திடீரென வந்து மறையும் இருட்டுச் சுரங்கம் போல். முதலில் பெருமூச்சை விட்டபடியும், பின்னர் மெல்ல சிரித்துப் பேசியபடியும் வந்தோம். யூனியன் தெருவில் கால்போன போக்கில் நடந்தோம். புதுத் துணிகள் எடுத்தோம். கிரார்டெலியில் க்ரீம் ப்ரூலே வாங்கிக் குடித்தோம். காரில் கோல்டன் கேட் பாலத்தை சுற்றி வந்தோம். தூரத்தில் அல்கட்ராஸ் தீவு விளக்கொளியில் நகர்ந்து விலகிச் செல்லும் கப்பல் போல் ஒருகணமும், நெருங்கி வரும் கப்பல் போல மறுகணமும் தெரிந்தது.

இந்த நிகழ்வு எங்களை மேலும் நெருங்கி வரச் செய்தது. அவளது அடுத்த அசைவை, எண்ணங்களை நான் பின்தொடர்வேன். நான் பேச ஆரம்பிக்கும் வாக்கியத்தை அவள் முடித்து வைப்பாள். மெல்ல நாங்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பினோம். த்ரேயா விட்டுப் போன பrரீட்சைகளை எழுதினாள். நான் முடிக்காது வைத்திருந்த பல்வேறு கட்டுரை மட்டும் ஆய்விதழ் வேலைகளை ஒவ்றொன்றாக செய்து முடித்தேன். அந்த அக்டோபர் மாதம் ஹவாய் செல்ல முடிவெடுத்தோம். மணமாகிக் கிட்டத்தட்ட ஒருவருடம் கழித்து எங்கள் தேனிலவு!

ஓஹு தீவில் தங்கினோம். முதல் நாள் பகல் முழுக்க கடலில் மிதந்தோம். கூஹியோ கடற்கரையில் இளவெயில் பட சாய்வுநாற்காலியில் படுத்திருந்தோம். அடுத்த நாள் மூச்சிரைக்க மலையேறி கோ’ஒலவ் எரிமலையின் வாயிலுக்குச் சென்றோம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செயலற்றுப் போயிருந்த எரிமலை என்ற போதும் திகிலாகத்தான் இருந்தது. இறுக்க கைபற்றியபடி எரிமலையை சுற்றி வந்தோம். அதன் தீக்குழம்புகள் பட்டு உருவான பெரும் பள்ளங்கள், கூம்பு வடிவ குழிகள் எல்லாம் கீழே தூரத்தில் தெரிந்தன.

மூன்றாம் நாள் காலை மலையேறிய களைப்பில் நன்கு தூங்கிக் கொண்டிருந்தபோது த்ரேயா என்னை எழுப்பினாள். அப்போதுதான் குளித்து முடித்து ஈரத்தலையோடு இருந்தாள். சோம்பல் முறித்தபடி எழுந்து “என்ன?” என்றேன். அவளது கண்கள் கலங்கிப்போய் இருந்ததை அப்போதுதான் கவனித்தேன். என் கைவிரல்களை எடுத்து அவளது வலது மார்பில் மெல்ல வைத்தாள். எறும்புக்கடி போல் மூன்று சிறு கொப்பளங்கள். அடிவயிற்றில் இருந்து எழுந்த அமிலம் மூளையின் உள்ளறைகளில் பட்டுத் தெறித்தது. பூச்சிக்கடிதான் என்ற வார்த்தை அனிச்சையாக வந்து விழுந்த மறுகணம் துணுக்குற்று தலையில் கைவைத்து அமர்ந்தேன்.

அன்று மாலையே சான் பிரான்சிஸ்கோ திரும்பினோம். த்ரேயா விமானம் முழுக்க எதுவுமே பேசாமல் ஜன்னலில் தலைவைத்து வெளியே பார்த்தபடி வந்தாள். நான் இருக்கையில் உட்கார முடியாமல் அமைதியற்று இருந்தேன். வந்த அன்றே அன்டர்சனிடம் போய் காண்பித்தோம். மீண்டும் பல பரிசோதனைகள். நோய்க்குறியறிதல்கள்.

பரிசோதனை முடிவு வந்தவுடன் டாக்டரின் முகம் சுருங்கியது. அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடியும் நகத்தை கடித்துத் துப்பியபடியும் இருந்தார்.

“இப்படி நடக்க வாய்ப்பே இல்லை… போன சர்ஜரியிலேயே முழுவதும் நீக்கியாகிவிட்டது… ஒருவேளை அந்த டிஸ்சார்ஜ் ட்யூப் நுனியில் சில துளிகள் படிந்து அது மீண்டும் மார்பினுள் நுழைந்திருக்கலாம். ஆனால் ரேடியஷனில் அதுவும் போயிருக்க வேண்டும். இது போன்ற ரெக்கரன்ஸ்களை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை. வேகமாகப் பரவிக் கொண்டு வேறு இருக்கிறது…” என்றவர் சில நிமிட மௌனத்திற்குப் பிறகு தொடர்ந்தார் “சீக்கிரம் யோசித்து முடிவெடுக்க வேண்டும். தெரிவுகளும் உங்கள் முன் அதிகம் இல்லை. மீண்டும் பழைய சர்ஜரியையே செய்யலாம். அல்லது டிஸ்சார்ஜ் ட்யூப் போன இடத்தை மட்டும் வெட்டி எடுக்கலாம். ஆனால் ரெக்கரன்ஸ் இருக்காது என என்னால் உறுதியாக சொல்ல முடியாது. உடலின் எதிர்ப்பு சக்தி குறையும். உயிர் ஆபத்தும் அதிகம். இப்போது இது ஸ்டேஜ் 3, கிரேட் 4 கேன்சர் ஆகிவிட்டது….” எனச் சொல்லி பெருமூச்சை எழுப்பியபடி எங்களைப் பார்த்தார் “வேறு வழியில்லை.. மாஸ்டெக்டமிதான் பண்ண வேண்டும்.. வலது மார்ப்பை முழுக்க வெட்டி எடுக்க வேண்டும்”

கோபம் அழுகை வெறி என எதுவும் இந்தமுறை எனக்கு எழவில்லை. வெறும் மரத்துப் போனதொரு உணர்வு. “ஏன்” என்ற கேள்வி மறைந்து “அடுத்து என்ன” என்ற கேள்வி மட்டுமே எஞ்சியது. அடுத்து ஹூஸ்டனில் உள்ள புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கலாம். அடுத்து மாற்றாலோசனைக்காக டாக்டர் கால்வினிடம் போகலாம். அடுத்து மாற்று மருத்துவ முறைகளை முயற்சி செய்து பார்க்கலாம். அடுத்து லிவிங்க்ஸ்டன் – வீலர் சிகிச்சையை முயன்று பார்க்கலாம். அடுத்து இம்யூனோதெரபி செய்து பார்க்கலாம். அடுத்து அடுத்து அடுத்து….

ஆனால் இம்முறை த்ரேயா மனமுடைந்து போனாள். நாளை வருவதாகச் சொல்லி டாக்டரிடம் விடைபெற்றுக் கொண்டு மௌனமாக சுண்டுவிரலை பற்றியபடி வீடு திரும்பி கதவடைத்த மறுநொடி வீறிட்டு அழுதாள். குரல் உள்ளுக்குள் உள்ளுக்குள் சென்றபடி இருந்தது. வார்த்தைகள் வெளியேற வழியில்லாமல் நெஞ்சடைப்பு ஏற்பட்டுவிடும் போல தெரிந்தது.

அவளிடம் ஏதேதோ சொல்ல நினைத்தேன். ஒன்றும் மாறப்போவதில்லை என. சதைதான், வெறும் சதைதான் என. ஆனால் மௌனத்தின் கோட்டைகள் இறுகிக் கொண்டே சென்றன. திடீரென வெறிகொண்டு என்னை அள்ளி அணைத்தாள். அவள் மார்பில் என் முகம் புதைக்க வைத்தாள். முத்தங்களை உடலெங்கும் பொழிந்தாள். பின்னர் ஒருகணம் என் குரல்வளையை இறுகப் பற்றி மறுகணம் விடுவித்தாள்.

அன்றிரவே அவளை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாக இருந்தது. மார்பைன் கொடுத்து தூங்க வைத்தோம். த்ரேயாவின் அம்மாவும், ஃபிரான்சிஸும் ஒருவாரம் கூடவே இருந்தார்கள். பாதி நேரம் மயக்கத்திலேயே இருந்தாள். முழித்திருக்கும்போது என்னிடம் ஏதோ சொல்ல நினைப்பாள். ஆனால் வார்த்தைகள் எழாது. கைகளைப் பற்றியபடி மௌனமாக உட்கார்ந்திருப்போம்.

இனிமேலும் தாமதித்தால் ஆபத்து என்று டாக்டர்கள் அறுவை சிகிச்சைக்கு தேதி குறித்தார்கள். அதிகாலை அவள் அறைக்குச் சென்று நெடுநேரம் தலைமாட்டின் அருகே அவளை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். செல்வதற்கு முன் கடைசியாக அவள் தலை திருப்பி பார்த்தபோது அதில் இருந்த தவிப்பும் ஏக்கமும் என் நெஞ்சை முள் போல குத்தியது.

அன்று அவளது வலது மார்பு அகற்றப்பட்டது. ஒருமாதம் மருத்துவமனையில் பலவித சிகிச்சைகளின் ஊடே கழிந்த பிறகு வீட்டிற்குத் திரும்பினோம். அவளது கால் எலும்புகள் வலுவற்றுப் போயிருந்தன. கைத் தாங்கலாக மெல்ல அவளை அழைத்து வந்தேன். புதியதொரு இடத்தை பார்ப்பது போல் வீட்டை சுற்றிமுற்றி பிரமிப்புடன் பார்த்தோம்.

பசியெடுத்தது. இரவுணவு செய்து எடுத்துக்கொண்டு வெளியே வந்தோம். நிலவொளியில் பசிபிக் பெருங்கடல் தளும்பிக் கொண்டிருந்தது. சுற்றி எங்கெங்கும் இரவு நிறைந்திருந்தது. வாசற் படிக்கட்டுகளில் சாய்ந்து உட்கார்ந்து கரைமோதும் அலைசத்தத்தை கேட்டுக்கொண்டு மௌனமாக சாப்பிட்டோம். சாப்பிட்டு முடித்தவுடன் மறுபக்கம் வேறெங்கோ பார்த்தபடி மெதுவாக மிகமெதுவாக என்மீது சாய்ந்தாள். அப்போது உப்புக்காற்று எங்களை ஊடுருவியபடி வீட்டினுள் புகுந்தது.

(மேலும்)

முந்தைய கட்டுரை‘சீர்மை ஒரு கிளாஸிக்’ – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇரு விருதுகள்