நாடகக்காதல்

இரண்டுநாட்கள் சென்னையில் விடுதியில் இருந்தேன். இரவில் தொலைக்காட்சி பார்த்தபோது பத்ரி சேஷாத்ரி ‘புதிய தலைமுறை’யில் இளவரசன் மரணம் பற்றிப்பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். நான் இத்தகைய விவாதங்கள் மீது மிகுந்த அவநம்பிக்கை கொண்டவன். ஆங்கிலத் தொலைக்காட்சிகளை விட மலையாளத் தொலைக்காட்சிகள் விவாதத்தின் தரத்தில் மேலானவை. ஆனால் அவையே வெறுமே பொழுதை வீணடிக்கும் குப்பைகள் மட்டுமே. தமிழில் ஒரு விவாதம் நிகழமுடியும் என்ற நம்பிக்கையே எனக்கில்லை.

இருந்தாலும் பத்ரி என்ன சொல்கிறார் என்று பார்த்தேன். நான் எப்போதுமே கவனிக்கும் மனிதர் அவர். நிதானமான தர்க்கபூர்வ அணுகுமுறை கொண்டவர். தனிப்பட்ட காழ்ப்புகள் இல்லாமல் யோசிக்கக்கூடியவர்.

ஆனால் பத்துநிமிடம் கேட்பதற்குள் பத்ரி சொதப்புகிறார் என்று பட்டது. இவ்வளவுக்கும் பத்ரிக்கும் தொடர்ச்சியாக நிறைய நேரம் அளிக்கப்பட்டது. தொலைக்காட்சியை மாற்றி நான் விரும்பிப் பார்க்கும் முரசு தொலைக்காட்சிக்குச் சென்றுவிட்டேன். ஆனால் பின்னர் நினைத்துக்கொண்டிருந்தேன். பத்ரி என்ன தவறு செய்தார்?

பத்ரி நிதானமாக, சமநிலையாகக் கருத்துச் சொல்லவேண்டும் என முயற்சி செய்தார். அவரது நெஞ்சுக்கும் மூளைக்கும் தெரிந்த உண்மையை வலுவாகச் சொல்லாமல் மென்மையாகச் சொல்ல முயன்றார். பலதருணங்களில் அது நல்ல வழிமுறை என்றாலும் அந்தத் தருணத்தில் மிக அபத்தமான ஒன்றாக அது மாறிவிட்டது.

அத்தகைய நிகழ்ச்சிகளில் எதிரில் இருப்பவரிடமல்ல, அந்நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பொதுமக்களின் சராசரியிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற பிரக்ஞை தேவை. அவர்கள் அப்பேச்சில் இருந்து என்ன பெறுவார்கள் என்ற ஊகம் தேவை. பத்ரி அன்று பேசியது என்ன வகையில் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் என அவர் உணர்ந்தது போலத் தெரியவில்லை.

அன்று பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஏதோ ஓர் ஆசாமி பேசிக்கொண்டிருந்தார். பெயர் தெரிந்துகொள்ளுமளவுக்கு முக்கியமானவராகத் தெரியவில்லை. ஏனென்றால் இத்தகைய சந்தர்ப்பத்தில் அப்படிப் பெயருள்ள ஒருவரை அவர்கள் தொலைக்காட்சிக்கு அனுப்பமாட்டார்கள். அவர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி இளைஞர்களைத் ‘தயாரித்து’ அனுப்பி வன்னியப் பெண்களை ‘கவர்ந்து’ செல்கிறது என்றார்.நாடகத்திருமணம் என்ற ஒரு வார்த்தையைச் சொல்லிக்கொண்டிருந்தார்.

பத்ரி ‘இது கடுமையான குற்றச்சாட்டு. இதற்கு விடுதலைச்சிறுத்தைகள் பதில் சொல்லவேண்டும்’ என்று சுழற்றிச் சுழற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். அது இரண்டு தொனிகளை மட்டுமே அளித்தது. ஒன்று, இப்படி ஒரு குற்றச்சாட்டு எழக்கூடிய சூழல் இருக்க வாய்ப்புள்ளது. இரண்டு, விடுதலைச்சிறுத்தைகள் தங்கள் நிரபராதித்துவத்தை நிரூபிக்கவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். நாடெங்கும் அதைப்பார்த்தவர்கள் அப்படித்தான் புரிந்துகொண்டிருப்பார்கள்.

உண்மையில் ஒட்டுமொத்த தொலைக்காட்சி விவாதங்களும் அந்தப் புள்ளியை நோக்கியே சென்றன. நான் பேசியவரை தலித் அல்லாத மக்கள் பெரும்பாலும் அப்படித்தான் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

விடுதலைச்சிறுத்தைகள் என்ன பதில் சொல்லிவிடமுடியும்? நாங்கள் அப்படியெல்லாம் ஒன்றும் செய்யவில்லை என்பதைத்தவிர? எப்படி அவர்கள் ‘நிரூபிக்க’ முடியும்?  என்ன கேள்வி அது?

பொதுவாக தமிழக விவாதங்களில் ஒற்றைப்படையான அதிரடிக்கூச்சல், உணர்ச்சிப்பொங்குதல் மட்டுமே நிகழும். விரிவான ஒரு வரலாற்றுப்பார்வையுடன் ஒரு விஷயத்தைப்பற்றி ஒருவர் பேசுவார் என்பதையே எதிர்பார்க்கமுடியாது. அங்கே வரும்வரை அந்த விஷயம் பற்றி ஏதேனும் சிந்தித்திருப்பவர்கள்கூட மிக அபூர்வம். ஆகவேதான் பத்ரியிடமிருந்து எதிர்பார்த்தேன்.

*

இந்த நாடகத்திருமணம் என்ற பேச்சின் பின்னணி என்ன?

உலகம் முழுக்க பழங்குடிகள் பெண்களை தங்கள் இனக்குழுவின் செல்வமாகவே நினைக்கிறார்கள். மிருகங்களின் குழுக்களும் அப்படி நினைக்கின்றன. ஆகவே பெண்களைக் கவர்வதும், காத்துக்கொள்வதும் பழங்குடி மனநிலைகளில் வேரூன்றியிருக்கின்றன. காலப்போக்கில் அது கதைகளாக, நம்பிக்கைகளாக, ஆழ்படிமங்களாக மாறி அவர்களின் கூட்டு மனதில் வேரோடி இருக்கிறது.

வரலாறு முழுக்க பெண்ணைக்கவரும் போர்கள் நிகழ்ந்துள்ளன. தமிழக தெலுங்குச்சாதிகளின் வாய்மொழி வரலாற்றில் பெண்களைக் காத்துக்கொள்ளவே அவர்கள் புலம்பெயர்ந்து வந்தார்கள் என்ற பொதுவான கதை இருப்பதைக் காணலாம். இன்றும்கூடப் படித்த இளைஞர்கள்கூட ‘நம்மூர்ப் பொண்ண அவன் எப்டிடா டாவடிக்கலாம்?’ என்றவகையில் பேசுவதைக் கேட்கமுடியும். இது நேற்றைய பழங்குடி-நிலப்பிரபுத்துவக் காலகட்டம் நமக்களித்துள்ள பொதுவான ஒரு ஃபோபியா என்றால் மிகையல்ல.

இந்த மனச்சிக்கல் தமிழகத்தில் எல்லாரிடமும் அழுத்தமாக உள்ளது. பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக்கொன்றை நாவலில் ஈவேராவின் இயக்கம் பரவலாக எழுந்தபோது பிராமணர்களில் ஒரு சாரார் ‘நம்ம பொண்ணுகள நாம காபந்து பண்ணிக்கணும்’ என்று பேச ஆரம்பித்ததை அவர் பகடி செய்கிறார்.

மிகச்சமீபமாக இஸ்லாமியர் இதேபோல இளைஞர்களைத் தயாரித்து இந்துப்பெண்களைக் கவர்வதாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டின. அதற்கு லவ் ஜிகாத் என்று பெயரிட்டன.

தமிழகத்தில் பெண்கல்வி பற்றிய பேச்சுக்கள் எழுந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதற்கு எதிராக இருந்த பெரும் எதிர்ப்புக்குச் சொல்லப்பட்ட காரணம் வீட்டைவிட்டு வெளியே செல்லும் பெண்கள் ‘திருட்டு’ போய்விடுவார்கள் என்பதுதான். தமிழகத்தில் பெண்கல்வியின் தொடக்கத்தை அமைத்த தியாசஃபிகல் சொசைட்டி போன்ற முன்னோடி இயக்கங்கள் அதற்காக வசைபாடப்பட்டுள்ளன.

படிப்படியாக பெண்ணுக்குக் கல்வி இன்றியமையாத தேவை என்று நிறுவப்பட்டது.  பிரம்மசமாஜம் போன்ற இந்து சீர்திருத்த அமைப்புகளால் விதவை மறுமணம் போன்றவை முன்வைக்கப்பட்டன. காந்திய இயக்கம் பெண்களைப் பொது அரசியலுக்கும் போராட்டக்களத்துக்கும் கொண்டு வந்தது. அப்போதும் பெரும் எதிர்ப்பு பெண்களை காபந்து செய்யவேண்டும் என நினைப்பவர்களால்தான் முன்வைக்கப்பட்டது. காந்தியின் அழைப்பை ஏற்றுப் பொதுச்சேவைக்குச் சென்ற எல்லா பெண்களும் ‘அன்னியச்சாதி’ கலப்புள்ளவர்கள் என வசைபாடப்பட்டார்கள்.

பின்னர் பெண்கள் வேலைக்குப் போயாகவேண்டும் என்ற நிலை மெல்ல மெல்ல உருவானது. அதற்கு எதிராக பழமைவாதிகள் சொன்ன கருத்து வேலைக்குச் செல்லும் பெண்கள் திருட்டுப்போய்விடுவார்கள் என்பதுதான். இந்த ஒட்டுமொத்த மனநிலையின் வேராக சில எண்ணங்கள் உள்ளன.

1.பெண்கள் பலமற்றவர்கள். சுயமான சிந்தனையோ முடிவெடுக்கும் திறனோ அவர்களுக்கு இருப்பதில்லை. மேலோட்டமான விஷயங்களைக் கண்டு மயங்கிவிடுபவர்கள். சஞ்சலபுத்தி கொண்டவர்கள்.

2. பெண்களின் கருப்பை என்பது சாதி மத அடையாளங்களைப் பேணிக்கொண்டு செல்வதற்கான கருவி. அது அவளுக்குச் சொந்தமில்லை, அந்த சாதிக்கோ மதத்துக்கோதான் சொந்தம்.

3. அவர்கள் ஆண்களாலான பொதுச்சமூகத்தின் சொத்துக்கள். ஆகவே பெண்களின் வாழ்க்கையை பெண்கள் முடிவெடுக்க விடக்கூடாது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழகத்தில் பெண்களின் விடுதலை என்பது அவர்களைப் ‘பாதுகாக்கும்’ பிரக்ஞைக்கு எதிரான போராட்டம் என்று சொல்லலாம். பெண்களைக் குடும்பத்தின், சாதியின் சொத்துக்களாகப் பார்க்கும் பார்வை ஒரு பக்கம் – அவர்களை ஆன்மீகமான, அறிவார்ந்த தனித்துவம் கொண்ட தனிமனிதர்களாகப் பார்க்கும் பார்வை ஒருபக்கம் என ஒரு இருநூறாண்டுக்காலப் போர் இங்கே நிகழ்ந்து வருகிறது.

தமிழகத்தின் வேறெந்தப் போர்களின் அளவுக்கே இங்கும் குருதி கொட்டிக்கொண்டிருக்கிறது. இளவரசன் கதை ஊடகங்களால் நம் பொதுமனசாட்சிக்கு முன் நிறுத்தப்பட்டது. ஆகவே நாம் கொஞ்சம் சங்கடப்படுகிறோம். எத்தனையோ கதைகள் ஒருநாள் செய்தியைத் தாண்டுவதில்லை. [ஊடகங்கள் இப்படி முன்னிறுத்துவதுதான் தவறு என ஓர் அசடு இணையத்தில் எழுதியிருந்ததைப் பார்த்தேன். சாதிவெறிக்குத்தான் எத்தனை சால்ஜாப்புகள்!]

உதாரணமாக, சென்ற ஒரு வருடத்தில் மட்டும் குமரிமாவட்டத்தில் நிகழ்ந்தவை இரு நிகழ்ச்சிகள். ஒரு தம்பதி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தது. சாதிக்கலப்புத் திருமணம் செய்துகொண்டு பாறசாலை அருகே ஒரு ஊரில் குடியேறி மிக ரகசியமாக ஒன்றரை வருடம் வாழ்ந்திருக்கிறார்கள். அந்தப்பெண் தன் தோழிக்குப் பேசிய செல்பேசிவழியாக அவள் இருப்பதை அறிந்து தேடிவந்தார்கள் அவளுடைய சகோதரர்கள். அந்தப்பையன் ரேஷன் வாங்க பாறசாலைக்கு வந்தபோது நடுத்தெருவில் வெட்டிப்போட்டார்கள்.

இரண்டாம்நிகழ்வு நாகர்கோயிலில். தம்பதியினர் சேலத்தைச் சேர்ந்தவர்கள். அந்தப்பெண் இருக்குமிடத்தை எட்டு மாதம் கழித்து தெரிந்துகொண்டு அவளிடம் அன்பாகப்பேசி கண்டு பிடித்து தேடிவந்தார்கள். அவள் தன் சகோதரர்களுக்கு விருந்து சமைத்துப் பரிமாறினாள். அதை சாப்பிட்டுவிட்டு அவள் கணவனையும் கணவனின் தந்தையையும் கொன்றுவிட்டுச்சென்றார்கள்.

இரு நிகழ்ச்சிகளிலும் அந்த சகோதரகளின் நண்பர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். காரணம் பெண் தன் சாதியின் செல்வம் என்னும் மனநிலை. இன்று ஊடகங்களில் மீண்டும் மீண்டும் ‘நம்ம பொண்ணு நல்லா இருக்கணும்னுதான் எதுக்கறோம். அவன்லாம் ஏமாத்திருவான்’ என்று சொல்கிறார்கள். இந்த இரு நிகழ்ச்சிகளிலும் மிக அன்பாக வாழ்ந்த குடும்பங்களை அழித்திருக்கிறார்கள்.

அந்தச் சகோதரர்களின் மனநிலையை நாம் ஆராயவேண்டும். மூடிமறைப்பதும் சமரசம் பேசுவதும் அல்ல இன்றைய தேவை. அவர்களின் சிக்கல் என்ன? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்முள் ஊறிய பெண்ணை உடைமையாக்கும் மனநிலைதான். நாம் இப்போது போராடியாகவேண்டியது அதனுடன்தான். இதைப்போன்றவை அதைப்பற்றி நாம் வெளிப்படையாக பேசுவதற்கான தருணங்கள். இது பாட்டாளி மக்கள் கட்சிக்கும் விடுதலைச்சிறுத்தைகளுக்கும் நடுவே உள்ள தாவா அல்ல.

மேலே சொன்ன இரு நிகழ்ச்சிகளில் முதல் நிகழ்ச்சி தேவர் சாதி சம்பந்தப்பட்டது. இரண்டாம் நிகழ்ச்சி வன்னியர் சாதி. ஆனால் இப்படி கொலை வரை வரத்துணியாத சாதியினரிடம் இருப்பதும் இதே மனநிலைதான். பெண்களை கண்காணித்து கண்டித்து பொத்திப்பொத்தி வளர்க்கும் குடும்பங்களே இங்கே அதிகம்.

தமிழகத்தில் பல கல்லூரிகளில் ஆண்களும் பெண்களும் பேச அனுமதி இல்லை. பெண்கள் மட்டுமே படிக்கும் பல கல்லூரிகள் உள்ளன. ஏன், பெண்கள் கெட்டுப்போகக்கூடாது என்பதற்காகப் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களைக்கூட அவர்களுக்குக் கற்பிக்காத கல்லூரிகள் உள்ளன. மதுரை பாத்திமா கல்லூரியில் நான் கி.ராஜநாராயணனின் கதைபற்றிப் பேசியபோது ஒரு பேராசிரியை நாங்கள் பெண்களைப் பொத்திப்பொத்தி வளர்க்கிறோம், நீங்கள் கதைசொல்லி அவர்களைக்கெடுக்கிறீர்கள் என எனக்கு எழுதியதை நினைவுகூர்கிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சி இங்கே அனைத்துச் சாதியினரிடமும் இருக்கும் பொதுவான மனக்கோளாறை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது என்பது வெளிப்படையான உண்மை. தமிழக வரலாற்றில் எல்லாப் பழமைவாதச் சக்திகளும் தொடர்ந்து பயன்படுத்திய மனச்சிக்கல்தான் அது.

அதை வெளிப்படையாகச் சொல்லி கண்டிப்பதுதான் அவசியமே ஒழிய அக்குற்றச்சாட்டு உண்மையா என்று ஆராய்வது அல்ல. மறுதரப்பு தன்னை நிரூபிக்கச் சொல்லி கோருவது அல்ல. அப்படி அப்பட்டமான, நேரடியான கண்டனம் இல்லாமல் இவ்விஷயங்கள் விவாதிக்கப்படுவதே கூட இந்த மனச்சிக்கல் பரவத்தான் வழிவகுக்கும்.

இங்கே உள்ள கேள்வி பெண்களைக் கவர்ந்துகொண்டு செல்கிறார்களா என்பது அல்ல. தன் வாழ்க்கையைத் தானே தீர்மானிக்க பெண்ணுக்கு உரிமை உண்டா என்பதுதான். பெண் ஒரு தனிமனிதரா இல்லையா என்பதுதான். ஒரு பெண் மீது இத்தனை வன்முறையைச் செலுத்த சமூகத்துக்கும் குடும்பத்துக்கும் என்ன உரிமை என்பதுதான்.

நேற்று பெண்ணை வீட்டைவிட்டு வெளியேற விடாமல் தடுத்தவர்கள், அவள் படிக்கக்கூடாது என்றவர்கள், வேலைக்குச் செல்லக்கூடாது என்றவர்கள்தான் இன்று இதையும் சொல்கிறார்கள் என்று அடையாளம் காட்டுவதைத்தவிர இவ்விஷயத்தில் விவாதிப்பதற்கான ஒரு வரி கூட இல்லை. இந்தத் தொல்மனநிலையை உடைப்பதற்கான அறைகூவலைத்தவிர பேசப்படும் எந்தச்சொல்லும் வீண்சொல்லே.

முந்தைய கட்டுரைவீட்டின் அருகே மிகப்பெரும் நீர்ப்பரப்பு-ரேமண்ட் கார்வெர்
அடுத்த கட்டுரைகௌரவக்கொலை