இந்தியக்கவிதை- மணிகண்டன்

பழக்கப்படுத்துதல்

நேற்று நடுப்பகலில்
நரம்புகள் நொறுங்கி
அடிமுடி அலறிக்கொண்டு
தெருவிலிறங்கி ஓடினேன் நான்

பெய்துகொண்டிருக்கும்போதே
பட்டென்று நின்றது
பெருமழை.

மண்ணில் பதிந்த
நீர்க்கம்பிகளுக்கிடையில்
சிக்கினேன் நான்.

மழையின்
மழையில்
சோர்ந்த மூங்கில்போல
ஒளிர்ந்தபோது
மழை கேட்டது
எல்லாம் மறப்பாயா?
அணைத்து உன்னை
வானத்தில் கொண்டுபோவேன்.
மேகமாகவேண்டுமா?
தாரகையாகவேண்டுமா நித்ய நர்த்தகி?
காற்றின் கைபிடிக்கும் பாடகி?
இரவில்
உலகநேயமாகும் அமைதியாகவேண்டுமா?

குதிக்கும் மழையின் இடையே தொலைவில்
மரங்களைப் பார்த்து நான்
புலம்பினேன்.

என் வீடு –
என் குழந்தை –
என் நண்பன் –
(வேறெதையும் சொல்லவேயில்லை)
கரைந்தது மழை
நனைந்தவிழ்ந்து
அழுதுகொண்டே
வீட்டுக்கு
நடந்து போனேன் நான்.

சோறு

ஒரு பகல் வெக்கையில்
ஒரு மேஜையில்
நாம் சேர்ந்துண்ணும்
இந்த சோற்றில்
ஒவ்வொரு பருக்கைக்கு உள்ளேயும்
எத்தனையோ நெல்வயல்கள்.

வயல்களில்
வாய்க்காலில்
துள்ளி மறையும் மீன்கள்.

ஏதோ
தூரத்து ஊரிலிருந்து
வந்திறங்கும் கிளிகள்.
பசுமையை
நிறுத்தாமல் சிரிக்கவைக்கும்
மழலைக் காற்றுகள்.

குழந்தைகள்
கைகள் விரித்து
விழாமல் ஓடும் வரப்புகள்.

இரவில்
வயல் நீரில்
அசையும் வெளிச்சம் கண்டு
உறங்காமலிருக்கும்
வயற்கரை வீடுகள்

வீடுகளுக்குள்ளே
மனிதர்களின் உறக்கத்துக்குள்ளே
விழித்தால் நினைவுக்கு வராத கனவுகள்

உண்டுமுடித்து
மெளனமாக நாம்
வீடிறங்கி
ஸ்கூட்டர் ஒட்டி
நகரத்தெருக்களில் விலகிப்போனாலும்

நெல்வயல்களின் கிராமத்துக்கு மேல்
ஒளிர்ந்துகொண்டிருக்கும்
ஓர் அழகுச் சூரியன்

நமது
மண்டையைப் பொசுக்கி
நிழல்களை குறுக்கி வற்றச் செய்யும்
அதே சூரியன்.

– அனிதா தம்பி

(மலையாளத்திலிருந்து தமிழில் சுகுமாரன் )

முந்தைய கட்டுரைசில உலகக்கவிதைகள்-க.மோகனரங்கன்
அடுத்த கட்டுரைஏற்காடு – வேழவனம் சுரேஷ்