கன்னிநிலம் – நாவல் : 10

10

நாங்களிருவரும் சிறு குழந்தைகளாகி விட்டிருந்தோம். காடு எங்கள் விளையாட்டுப்பூங்காவாகியது. அதன் அடர்த்தி இருள் அனைத்தும் அழகாக மாறிற்று. அதன் உக்கிரமும் ஆபத்தும் விளையாட்டு ரகசியங்களாக மாறின. பாறைகளில் ஆர்ப்பரித்துகூவி ஏறி, புதர்களினூடாக வகுந்து சென்று, சிறு நீரோடைகளை சிரித்தபடி உருண்டைக்கற்களில் கால்வைத்து சமன்கொண்டு கடந்து சென்றபடியே இருந்தோம். அந்தக் களிவெறி அடங்கவேயில்லை. எங்கள் கைகளோ உடலோ ஒருவரோடொருவர் தொட்டால் அங்கேயே நின்று இறுகத்தழுவி முத்தமிட்டோம்.

காடு அவளுக்கு நன்குபயின்ற புத்தகம்போலிருந்தது. காய்களும் கனிகளும் மட்டுமில்லாமல் தளிர்களும் பூக்களும்கூட உணவாகுமென்று சொன்னாள். மணிப்பூர் போராளிகள் எப்போதும் மிகக் குறைந்த அளவுக்கே உலர் உணவு கையில் வைத்திருப்பார்கள் என்றாள். களைத்துச் சோர்ந்து மாலையில் ஒரு பெரிய மரத்தடியில் அமர்ந்தோம். நான் அப்படியே கைகளை தலைக்குவைத்து படுத்துவிட்டேன். மனம் இன்னும் இன்னும் என்று தாவியது. அவள் அந்த மரத்தை சுற்றி வந்து பார்த்தாள். ”இது தேக்குமரம். இந்த மாதம்தான் பூக்கவேண்டும். பூக்காமலேயே நிற்கிறது”என்றாள்.

“நீ அதை தொட்டால்போதும், அப்படியே பூத்துவிடும்”என்றேன்

”ஹாங் ” என்று சிணுங்கியபடி வந்து என்னருகே அமர்ந்தாள். நான் அவளை இழுத்து அணைத்துக் கொண்டேன். அவள் உதடுகளின் வெம்மை வழியாக அவளுள் ஓடு துடிப்பை உணர்ந்தேன்.பின்பு பெருமூச்சுடன் அவள் என் மார்பில் சாய்ந்தபடி ”வரும்போது எனக்கு ஏனோ அடிக்கடி சாவது பற்றிய நினைப்பாகவே இருந்தது ”என்றாள்

“ஏன்?”என்றேன்

“ஏன் என்று தெரியவில்லை. இனிமேல் சாவதுமட்டும்தான் மிச்சம் என்று பட்டது. வாழ்க்கையின் உச்ச கட்ட மகிழ்ச்சியை அனுபவித்த பிறகு ஏன் வாழவேண்டும்?”

“உளறாதே”

“இல்லை நெல். மனிதர்களுக்கு மகிழ்ச்சியே இல்லை. மகிழ்ச்சியாக இருக்க அவர்களுக்கு தெரியவில்லை. அடையாளங்களையும் துப்பாக்கிகளையும் வைத்திருப்பதுவரை எவருமே உண்மையான மகிழ்ச்சியுடன்  இருக்க முடியாது. மகிழ்ச்சியைதேடி அது இன்றைக்குவரும் நாளைக்கு வரும் என்று கனவுகண்டு அவர்கள் உயிர்வாழ்கிறார்கள். நாம் மகிழ்ச்சியை கண்டுவிட்டோம். அதை நிறைய அனுபவித்தபிறகு சாவதுதானே சரியாக இருக்கும்?”

”உனக்கு பிராக்டிகல் சிந்தனைகள் வந்துவிட்டன. அதைத்தான் இப்படி ரொமாண்டிக்காக மாற்றிக் கொள்கிறாய்”என்றேன்

அவள் என்னை ஏறிட்டுப்பார்த்தாள்

“மதூகச் சமவெளிக்குப்போன பிறகு என்ன செய்வது என்று நினைக்கிறாயா?”

“என் உடைகளை கழற்றிவீசுவேன், நீங்கள் ஆயுதங்களை வீசியதுபோல. ஏவாள் ஆகிவிடுவேன். அதுதான் ஏதன் தோட்டம்” அவள் கையை விரித்தாள் ”நெல் நான் பெண் என்று உணர்ந்தபின் ஒவ்வொரு கணமும் உடைகளைப்பற்றிய கவனத்துடனேயே வாழ்கிறேன் தெரியுமா? உடைதான் என் விலங்கு…”

நான் சிரித்தபடி அவளை அணைத்துக் கொண்டேன். ”உன்னிடம் எனக்கு பிடித்ததே இதுதான் தெரியுமா? முன்பு மனிப்பூர் தேசியவாதம் பேசிக்கொண்டிருந்தபோதும் சரி, இப்போதும் சரி ,நீ மண்ணிலேயே கால் வைப்பதில்லை. எல்லாம் கனவு. எல்லாம் உச்சகட்ட வேகம்…”

”நான் எப்போதுமே அப்படித்தான்”என்று என் மார்பில் முகம் புதைத்தாள்”எனக்கு இங்கே ஒன்றுமே பிடிக்கவில்லை நெல்.எல்லாமே கட்டுப்பாடுகள். எல்லாமே சிக்கல்.படிப்பு போர் எல்லாமே அபத்தமாக இருக்கிறது”

”என் அம்மா பிறந்ததிலிருந்து இதுவரை சமையற்கட்டிலேயேதான் அதிகமும் வாழ்கிறார்கள். தோசை இட்டிலி சாம்பார் சோறுகுழம்பு இதேதான் வாழ்க்கை. அவளிடம்  போனதடவை கேட்டேன், இதெல்லாம் சலிக்கவில்லையா என்று….”

”என்ன சொன்னார்கள்?”

“அவளுக்கு புரியவில்லை. ஏன் சலிக்கவேண்டும்? என் குழந்தைகளுக்காகத்தானே எல்லாம் செய்கிறேன் என்றாள்” நான் அவள் கண்களைப் பார்த்துச் சொன்னேன் ”அன்பு இருந்தால் எல்லாமே இனிமையாக மாறிவிடும். அன்பு மட்டும்தான் பூமியில் ஒரே அர்த்தம் வாழ்க்கைக்கு”

“காதல்?”என்றாள் குறும்புடன்.

“அன்பை காமத்தில் கலந்து நன்றாக கொதிக்கவைத்தால் அதுதான் காதல்”

அவள் சிரித்து என் மார்பில் குத்தினாள்.

”கான்ஹாங் வேலியிலிருந்து அப்படியே நாம் பூட்டான் போய்விடுவோம்.”என்றேன். ”அங்கே எனக்குத்தெரிந்த ஒருவர் இருக்கிறார். பூட்டானில் நாம் பெயரையும் அடையாளத்தையும் மாற்றிக் கொள்வது ரொம்ப எளிது…. எனக்கு எங்கும் ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கும் வேலைகிடைக்கும்.”

”பூட்டான் போகும் வழி எனக்குத்தெரியும்… நான்குமுறை போயிருக்கிறோம்”என்றாள்

”பூட்டானில் நாம் வசித்தாலும் நாம் எந்த நாட்டுக்கும் சொந்தக்காரர்களாக இருக்கக் கூடாது. அங்கிருந்து வேறு எங்காவது போகவேண்டும். ஐரோப்பா. அமெரிக்கா.. எங்காவது….”
 
“அடிக்கடி நோ மேன்ஸ் லேண்டுக்கு வரவேண்டும்”

“பிள்ளைகளையும் அழைத்து வருவோம்..”

அவள் சிரித்தபடி என் மார்பில் முகத்தை புதைத்தாள்.

”இதோபார் ஏய்”என்று அவளை பிய்த்து எடுத்தேன். அவள் தலை நிமிரவேயில்லை. ” கற்பனைசெய்து பார்….. மங்கோலியக் கண்களும் மூக்கும் முடியும் கொண்ட ஒரு  தமிழ்க் கறுப்புக் குழந்தை… ம்ம்ம் தங்கோலிய இனம்…. ” நான் என் முகத்தை கண்களை இடுக்கி கன்னங்களை உப்பி மங்கோலியத்தனமாக மாற்றி காட்டினேன் ”எப்படி இருக்கிறது? ”

”அய்யோ!”என்றாள் அப்படியே முகத்தைப்பொத்தி குனிந்து அமர்ந்தாள். சிரிப்பில் உடல் குலுங்கியது. நான் அவள் முகத்தை பிடித்து தூக்கி கண்களைப் பார்த்தேன்.என்னை கைகளால் செல்லமாக  மாறி மாறி அடிக்க ஆரம்பித்தா¡ள். நான் அவள் கைகளைப் பிடித்தேன். திமிறினாள். இருவரும் ஒருவர்மேல் ஒருவர் விழுந்து சிரித்தோம். சிரிப்பு பற்றிக் கொண்டுவிட்டது. சிரித்துசிரித்து ஓய்ந்து மீண்டும் நினைத்துக் கொண்டு சிரித்தோம். அவள் கண்ணீருடன் ஓயும்போது நான் மங்கோலிய முகம்போல கண்களை இடுக்கிக் காட்டி ” எக்ஸ்க்யூஸ் மி, ஐ யாம் எ தங்கோலியன். மேட் இன் கான்ஹாங்”என்றேன். மீண்டும் வயிற்றைப்பற்றிக்கொண்டு சிரித்தாள். பிறகு ”ப்ளிஸ் வேண்டாம் ப்ளிஸ்”என்றாள்

இருவரும் மீண்டும் எழுந்து நடந்தபோது அவள் சோர்ந்து தலைகுனிந்து பெருமூச்சுவிட்டாள்.

“ஏன் ஒருமாதிரி இருக்கிறாய்?”

“ஒன்றுமில்லை”

“என்ன திடீரென்று?”

“நெல், நாம் மிக அதிகமாக சந்தோஷப்படுகிறோம். ரொம்பச் சிரித்தால் ரொம்ப அழுவோம் என்று பாட்டி சொல்வாள்”

”எல்லா ஊரிலும்தான் அதைச் சொல்கிறார்கள். மனிதர்களுக்கு சந்தோஷமாக இருப்பதற்குப் பயம்”

”இல்லை நெல், மனிதர்கள் இத்தனை சந்தோஷம் இருக்க இயற்கை அனுமதிக்காது”

“ஸோ ?”

“எனக்கு பயமாக இருகிறது”

“என்ன?”

“ஒன்றுமில்லை. ஆனால் எனக்கு இதுவே போதும். நான் பிறந்ததே இதற்காகத்தான்….”

”பின்னே என்ன செய்வது அழலாமா கொஞ்சநேரம்?”

”உண்மையிலேயே  கொஞ்சநேரம் அழுதால்தான் மனம் சமநிலை அடையும்போலிருக்கிறது”

“உளறாதே”

”உளறவில்லை…. இவ்வளவு இனிமை இவ்வளவு உத்வேகம்… என்னாள் தாளமுடியவில்லை. சிலசமயம் நல்ல பாட்டுகளைக் கேட்கும்போது கொஞ்சநேரம் மனம் நெகிழும். கண்ணீர் வரும். அதிகம் போனால் ஐந்து நிமிடம். அவ்வளவுதான்…..ஆனால் இப்போது ஒரு இரவும் ஒரு பகலும் அதே மனநிலையில் இருந்திருக்கிரோம்…. இது ஒரு மனிதப்பிறவிக்கு ரொம்ப அதிகம்…”

”சரியான உளறல்…. சக்கரைமிட்டாய் ரொமாண்டிசிசம் என்று இதற்கு பெயர்”

“ஏப்… நீ சரியான ஏப்…”’

”என்ன ?” என்றேன்

“ஏப். நீ கொரில்லா குரங்கு போல கருப்பாக இருக்கிறாயல்லவா? அதனால்தான்”

“சீ நாயே அடிப்பேன்”என்று கையை ஓங்கினேன். அவள் தள்ளிப்போனாள்.  உரக்கசிரித்தாப்டி ”ஏப். கறுப்பு நிறம் பெரிய பல்…ஏப்”

நான் இடுப்பில் கைவைத்து நின்றபடி ”உனக்கு என்னபெயர் போடுவது? ம்ம்…புஸ்ஸி..”

“என்ன?”

“புஸ்ஸிகேட். நீ சயாமீஸ் பூனைக்குட்டி போல இருக்கிறாய்”

”பூனை பிராண்டும்” அவள் கை நகங்களை நீட்டியபடி சீறி பற்களைக் காட்டி என்னை நோக்கி ஓடிவந்தாள். நான் சிரித்தபடி விலகி ஓடி அவளை அலைக்கழித்து ஒரு சரிந்த மரத்தில் ஏறி கொரில்லா போல மார்பில் அடித்து தலையைத்தூக்கி ஓஒ என ஒலியெழுப்பினேன்.

அவள் சிரித்து சிரித்து உட்கார்ந்து ”அச்சு அசல்…குரங்கேதான்”என்றாள்

”சும்மாவா? ஆதியில் குரங்கு மனிதனாக மாறியதே எங்கள் பகுதியில் வைத்துத்தான்”

”அப்படியா?” என்றாள் நக்கலாக

”மணிப்பூரில் மனிதர்கள் குரங்காக மாறுகிறார்கள்”

”யூ”என்று என்னை அடிக்க வந்தாள். நான் அவளைப் பிடித்து தட்டாமாலை சுற்றி நிறுத்தினேன்

“தலை சுற்றுகிறது” என்றாள்

”என்மீது சாய்ந்துகொள்”

“அப்போது உலகமே சுற்றும்”

“ஜ்வாலா…உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?”

“என்ன?”

“புஸ்ஸி என்றால் இன்னொரு அர்த்தம் உண்டு”

“ம்?”

நான் அவள் காதில் சொன்னேன். அவள் நிஜமாகவே சீறி கோபவெறியுடன் என்னை அடிக்க நான் ஓடினேன். தரையிலிருந்து கற்களை எடுத்து வீசினாள். நான் துள்ள அவை எதுவும் படவில்லை. தரையில் கால் உதைத்து மெல்ல அழுதாள்.

“புஸ்ஸி”

”நான் போகிறேன்.நான் என் அப்பாவிடமே போகிறேன். உன் கூட வரமாட்டேன்” அவள் திரும்பி சென்றாள்

”ஏய் …இதோபார்”என்று நான் பின்னால் ஓடினேன்.அவள் தோளை பற்றினேன்

”என்னைத் தொடாதே”

”ஸாரி”

”ஐ ஹேட் யூ. நீ என்னை தொடாதே”

”சரி தொடவில்லை” என்றேன் ”வா..”

”ஐ ஹேட் யூ…ஐ ஹேட் யூ”

“சரி.” என்றேன் . ” ஐ லவ் யூ …ஐ லவ் யூ”

“நீ என்னை அப்படி கூப்பிடக்கூடாது”

“இல்லை”

“சத்தியமாக?”

“சத்தியமாக”

“இந்தக் காடுமேல் சத்தியமாக?”

“காடுமேல் சத்தியமாக. போதுமா. வா”

அவள் என்னுடன் திரும்பி நடந்தாள்.

‘ஜ்வாலா உன்னை என்ன சொல்லி கூப்பிடக்கூடாது?புஸ்சி என்றுதானே?”

“யூ ”என்று சீறி கால்களை உதைத்து சிணுங்கி நின்றாள்

”அடாடா இதற்கெல்லாம் அழுவாயா? சரி இனிமேல் சொல்ல மாட்டேன்”

“கடவுள்மீது சத்தியமாக?”

”சத்தியமாக”

“என் மீது சத்தியமாக”

‘சரி ”

நான் அவளை பற்றி இருகைகளையும் பிடித்து முன்னால் நிறுத்தி ”இந்த அழகான காட்டில்வைத்து உன்னை சுத்தமான கவிதையால் வர்ணிக்கவேண்டும் போலிருக்கிறது தெரியுமா?” என்றேன் .”உன் அழகைச்சொல்ல ஒரே ஒரு வார்த்தைப்போதும். கவித்துவமான வார்த்தை”

“ம்?”

”புஸ்ஸி ! ”என்றேன். அவள் சீறி என்னை அடித்து பிராண்டி பிறகு ஒரு கணத்தில் வெடித்துச் சிரித்தாள்.

சட்டென்று அவள் செவி கூர்ந்தாள்.

”என்ன?”என்றேன்

அப்பால் ஒரு குரல் கேட்டது ” லெ·ப்டினெண்ட் சர்!”

இன்னொரு குரல் ”பிள்ளைவாள்!”

”நாயர்!”என்றேன்.

”யார்?”

“என் செகன்ட் லெ·ப்டினெண்ட்” என்றேன் .அவளை இழுத்தபடி ”வா”என்றேன்.

இருவரும் புதர்களில் ஒளிந்து ஓடினோம். மூச்சிரைக்க ஓடி நின்று திரும்பிப்பார்த்தோம். நான் ஒரு சிறுமரத்தில் ஏறி பார்த்தேன்

நாயர் முழுச்சீருடையில் கையில் எம்16 ரை·பிளுடன் முன்னால் வர அவன் பின் எட்டுபேர்கொண்ட இந்திய ராணுவக்குழு ரை·பிள்களுடன் வந்து கொண்டிருந்தது.

நான் இறங்கி ”என்னைத்தேடிவருகிறார்கள்.” என்றேன்.

அவள் பீதியுடன் ” சுடுவார்களா?”என்றாள்.

“கண்டிப்பாக. ஜ்வாலா நாம் இப்போது இருதரப்புக்கும் பொதுவான எதிரிகள்… நமக்கு நாடு இல்லை. நம்மை யார் பார்த்தாலும் சுடுவார்கள்…”

நாங்கள் காடு வழியாக குனிந்தும் தாவிக்குதித்தும் தப்பி ஓடினோம்.

சட்டென்று எதிரே ஒரு பாறைமீது நாயர் தோன்றினான்.

”ஹாண்ட்ஸ் அப்…” என்றான். கையில் கார்பைனுடன் முன்னால் நகர்ந்தபப்டி ” லெ·ப்டினெண்ட் நெல்லையப்பன், யூ ஆர் அண்டர் அரெஸ்ட்”

“நாயர் நான்…”

“ஆயுதங்களை கீழே போடுங்கள் லெப்டினெண்ட் .”

“என்னிடம் ஆயுதம் ஏதுமில்லை”

“பிஸ்டல்”

“எதுவுமில்லை”

“சரி. கைகளை தலைக்குமேல் வைத்துக் கொண்டு அப்படியே நில்லுங்கள். சார்ஜெண்ட் அவருக்கு விலங்கிடுங்கள்”

ஒரு ஹவல்தார் மேஜர் ரை·பிள் ஒருகையில் இருக்க என்னை அணுகினான்.

நான்” இதோ பார் நாயர்…” என்றேன்

” ஸாரி லெப்டினெண்ட் சர்,  சமாதானங்கள் வேண்டாம்….நீங்கள் இந்தப்பெண்ணுடன் தப்பி ஓடினீர்கள். நானே பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால் நானே பார்த்தேன் . நீங்கள் மியான்மார் எல்லைக்குத்தான் ஓடுகிறீர்கள் என்று ஊகித்து இங்கே வந்தேன்” நாயர் இறுகிய முகமும் இடுங்கிய கண்களுமாக என்னைப்பார்த்தான்.

“நான் சொல்வதைக்கேள்… நாயர்….” ஹவல்தார் மேஜர் என் கைகளை பின்னால் கட்டி விலங்கிட்டான். இன்னொரு லான்ஸ் நாயக் அவளைப் பிடித்து முன்பக்கமாகவே கைகளை வைத்து விலங்கிட்டான்.

”நாயர்….”

“ஷட் அப் யூ பிளடி பாஸ்டர்ட் ”என்று நாயர் வெடித்தான் ” நீ தேசத்துரோகி. நட்புத் துரோகி. யூ….” தன்னிலை இழந்து தன் எம்4 கார்பைன்  சிலிண்டரை ஓங்கி என்னை அடிக்க வந்தான். அடக்கிக் கொண்டு நின்று குமுறினான். பற்களைக் கிட்டித்து நின்று பின் திரும்பி ”டேக் ஹிம்”என்றபடி நடந்தான்

எங்களை நடுவே விட்டு அவர்கள் சூழ்ந்து கொண்டார்கள். பயனெட் சூடிய எம்16 ரை·பிள்கள் சூழ்ந்து வர நாங்கள் மௌனமாக நடந்தோம்.

நாயர் மீண்டும் திரும்பினான்,” பிள்ளைவாள்… எதுக்காக இப்டி செஞ்சீங்க? எதுக்காக கம்பெனியையே காட்டிக் கொடுத்தீங்க?சொல்லுங்க” குரல் உடைய” நம்மாட்கள் அம்பத்திமுணுபேர் செத்துப் போனாங்க பிள்ளைவாள். ”என்றான் .உடைந்த குரலில் ”எல்லாரும் உங்ககூட பேசி பாடி சிரிச்சு சொந்த ரத்தம் போல வாழ்ந்தவங்க….. உங்க குடும்பம் பிள்ளைவாள்… ” குரல் வெறிகொண்டது”…..சொல்லுங்க இத்தனைபேரை கொன்னுட்டு உங்களுக்கு அப்டி என்ன கிடைக்குது பர்மாவில?”

நான் சொல்லிழந்து நின்றேன்

”என்ன குடுக்கிறாங்க ?பொண்ணா பணமா?என்ன ,சொல்லுங்க பிள்ளைவாள்”

“நாயர்…நான்..நீ நினைக்கிற மாதிரி”

“சீ வாய மூடுடா நாயே… இதுக்குமேலயும் பசப்புறியா? இங்கேயே சுட்டுத்தள்ளிருவேன் ரெண்டுபேரையும்….. நம்ம கம்பெனியை காட்டிக்குடுத்ததே நீதான் …. ” கலங்கிய கண்களுடன் நாயர் பைத்தியம் போலிருந்தான் .” இல்லாட்டா ஏன் பர்மிய எல்லைக்கு ஓடினே? எங்கடா உன்னோட பாட்ஜும் ஸ்டாரும்…?”

நான் ஒன்றும் சொல்லவில்லை

”பொறந்த ஊருக்கே நாத்தத்த கொண்டுவந்திட்டியே நெல்லையப்பா… துரோகி  துரோகீ ”சட்டென்று நாயர் திரும்பி என் முகத்தில் துப்பினான். வெறியுடன் என்னை மாறி மாறி அடித்தான்.

‘நோ நோ நோ” என்று அவள் வீரிட்டாள்” அவர் ஒன்றும் செய்யவில்லை நான்தான்..ப்ளிஸ்”

“ஷட் அப்! யூ பிளடி பிச்” என்றான் லான்ஸ் நாயக்.

நாயர் ஓய்ந்து மூச்சிரைத்தான். ”உன்னை எப்டி நினைச்சேன். உனக்காக சாகறதுக்குத்தயரா இருந்தேன்…. சீ ”  நாயர் திரும்பி முன்னால் நடந்தான். சட்டென்று தன் ரை·பிள் சிலிண்டரால் தன் நெற்றியையே ஓங்கி அடித்தான். அவன் முதுகு அதிர்வதைக் கண்டேன்

”சார்’என்றான் ஹவல்தார் மேஜர்

”கமான்.குயிக்”

நாங்கள் குன்றைத்தாண்டினோம். சரிவிறங்கும்போது அப்பாலிருந்து முதல் குண்டு விசிலுடன் பறந்துவந்தது. அது லான்ஸ் நாயக்கை தொட்டுச்சென்றது.

” ஆர்டர்! டவுன் !”என்றபடி நாயர் விழுந்து பதுங்கினான். நான் ஜ்வாலாவை பாய்ந்து அமுக்கி படுக்கவைத்தேன். படுத்தபடி தவழ்ந்தோம்.

நாயர் தன் கார்பைனை எடுத்துக் கொண்டு மெல்ல எழுந்தான். அவன் தலை தெரிந்ததும் குண்டுகள் சீறி வந்து மரப்பட்டைகளை சிதறடித்தன. தலைக்குமேல் பறவைகளின் ஓலம் எழுந்தது. நாயர் குண்டுவந்த திசை நோக்கி சுட்டான். ஒரு அலறல் கேட்டது. குண்டுகள் நிலைத்தன. மறுகணம் பிற ஜவான்களும் எழுந்து அதே திசை நோக்கி சரசரவென சுட்டார்கள்.

”மோவ் வைல் ஷ¥ட்” என்றான் நாயர்.

சுட்டபடியே அவர்கள் எங்களுடன் நகர்ந்தார்கள். ஒரு கிரனெட் வந்து அருகே விழுந்து வெடித்தது. எதிரே வந்த பாறையின் இடுக்கில் ஏறும்போது குண்டுபட்டு லான்ஸ் நாயக் அலறியபடி சரிந்து சறுக்கிச்சென்று விழுந்தான்.

நாயர் போரின்போது அவனில் கைகூடும் ஆழ்ந்த அமைதியுடன் ஒளிரும் கண்களுடன் இருந்தான். வயலார் ராமவர்மாவின் மலையாள காதல்பாடல்களை உருகி உருகிப்பாடும் நாயராக அப்போது அவன் இல்லை.

நாயர் இலக்கு தவறாது இன்னொரு முறை சுட்டுவிட்டான். அங்கே அலறல் கேட்டது.

பாறையை நாங்கள் கடந்து இறங்கும்போது பக்கவாட்டில் இருந்து குண்டுகள் வந்தன. பாறையில் கிணிங் கிணிங் என்று சிதறின. ஒரு ஜவான் குண்டுவாங்கி குப்புற விழுந்தான். மீதி ஏழுபேரும் சுட்டபடியே தவழ்ந்தார்கள்.

பாறைக்கு அப்பால் புதர் சரிவு. அங்கே சென்றால் குண்டுகளிலிருந்து சற்று பாதுகாப்பு. அவர்கள் நிறையபேர் இருக்கக் கூடும். சுற்றிவளைத்தபடியே இருக்கிறார்கள். முழந்தாளிட்டு நகர்ந்து புதர்களை அணுகினோம். இன்னும் இரு குண்டுகள் இரு ஜவான்களை வீழ்த்தின.

நாயர் துணிந்து முடிவெடுத்தான். திரும்பி பாறைமீது பாய்ந்தோடினான்.அவன் காலடியில் சிதறும் கூண்டுகளின் தீப்பொறிகள் பறந்தன. பாறை மீதிருந்து சடசடவென சுட்டான். மூன்று அலறல்களைக் கேட்க முடிந்தது. ஒரு கிரனைட் வந்து அருகே விழுந்து வெடிக்க செம்மண் புகை அடங்கிய போது உடலெல்லாம் செம்மண்ணுடன் ஓடிவந்த நாயர் மீண்டும் சுட்டான். இன்னுமொரு அலறல் ஒலித்தது.

நாயர் எங்களை முன்னேற சைகை செய்துவிட்டு முன்னேறினான். அனேகமாக கிரனெட் லாஞ்சர் வைத்திருந்தவனைச் சுட்டுவிட்டான். புதர்கள் வழியாக தவழ்ந்து இறங்கி சென்றபோது எதிர்தரப்பில் தாக்குதல் நின்றிருந்தது. சிதறி ஓடியவர்கள் மீண்டும் ஒருங்கிணைய நேரமெடுக்கும்.

கீழே ஆற்றில் இந்திய ராணுவத்தின் படகு நின்றது. அதில் ஸ்டாண்டில் எம்கெ 19-3 கிரெனெட் மெஷின் கன் காட்டை நோக்கி சிறிய இருண்ட வாய்திறந்து நிற்க பத்து ஜவான்கள் கைகளில் எம் 249 ஸ்க்வாட்  ஆட்டமாட்டிக் லைட் மெஷின் கன்களுடன் நின்றார்கள்.

நாயர் அவர்களுக்கு செய்தியனுப்பினான். அவர்கள் சுட்டபடி நீரில் குதித்து கரையில் ஏறி வந்தார்கள். அவர்கள் சுட்ட கூண்டுகள் வீண்தான்.ஆனால் அவை அவர்கள் வருவதை தெரிவித்தன.

அடுத்த ஜவானும் குண்டடி பட்டு வீழ்ந்தான். மீதிப்பேர் மனம் தளர்ந்துவிட்டனர்.

நாயர்” ஆர்டர் மோவ் டுவேர்ட்ஸ் த ரிவர்”என்று ஆணையிட்டான்.சரசரவென ஒரு மரத்தில் ஏறினான். கொடிகள் மூடிய அதன் தடியுடன் கலந்து மறைந்திருந்தான். ”சுட்டபடியே செல்லுங்கள்!”என்றான்

நாங்கள் முன்னேறியபோது எங்களுக்குப் பின்னால் கிரைனைட் விழுந்து வெடித்தது. கீழே விழுந்து மட்கிக் கொண்டிருந்த மரங்களில் குண்டுகள் சிம்புகள் சிதறச் சிதற பாய்ந்தன. சட்டென்று மரத்தின் மீதிருந்த நாயர் சுட ஆரம்பித்தான். சரியான குறி. அவன் குண்டுபட்டு மூன்றுபேர் அலறி விழுவதைக் கேட்டேன்.

எங்களை கீழிருந்த ராணுவ வீரர்கள் கண்டு விட்டனர். எங்களை நோக்கி ஓடிவந்தனர். நாயரின் குண்டுகள் பின்னால்வந்தவர்கள நிறுத்திவிட்டன

ஜவான்கள் எங்களை அணுகினார்கள். என்னை இழுத்து வந்த ஜவானின் காலில் குண்டுபாய்ந்திருந்தது. வந்தவர்களில் முன்னால் நின்றவர் காப்டன் சிவ்நாராயண். என்னை அவர் அடையாளம் கண்டதாகக் காட்டவில்லை.

காப்டன் அங்கேயே பதுங்கி பின்னால் சுட பிறர் என்னையும் அவளையும் இழுத்துச் சென்றார்கள். காயமடைந்தவரை தூக்கினர். படகுக்குள் எங்கள ஏற்றும் வரை காப்டனும் குழுவும் நின்று சுட எதிர்தாக்குதல் மெல்ல ஓய்ந்தது.

காப்டன் படகில் ஏறும்போது நாயர் புதர்கள் நடுவே எவ்விக்குதித்தபடி ஓடிவந்தான். அவனும் ஏறிக் கொண்டதும் படகு நீரில் நகர்ந்தது.

பாறைமீது ஒரு அங்கமி வீரனின் தலை தெரிந்தது. சுடு எல்லைக்கு அப்பால் . மேலும் சில தலைகள். பிறகு அவர்களின் கமாண்டரின் தலை. 

 

[மேலும்]

முந்தைய கட்டுரைகிளி சொன்ன கதை: கடிதங்கள் மேலும்
அடுத்த கட்டுரைசினிமா, கடிதங்கள்