புதியவர்களின் கதைகள் 4, தொலைதல்- ஹரன் பிரசன்னா

சிவபாஸ்கரன் திடீரென்று வந்து வாசலில் நின்றபோது அந்த வயதான அவ்வாவின் மனம் எப்படிப் பதறியிருக்கும் என்பதிலேயே என் யோசனை இருந்தது. லக்ஷ்மி அக்கா வாங்க வாங்க என்றதையோ, அவ்வா எங்களைப் பார்த்து எப்படி இருக்க என்றதையோ, சிவபாஸ்கரன் என்னைப் பார்த்துப் புன்னகை செய்ததையோ என்னால் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. லக்ஷ்மி அக்கா எனக்கு தூரத்து சொந்தம். நீண்ட நாள் கழித்து திடீரென்று அவ்வாவையும் லக்ஷ்மி அக்காவையும் பார்க்கலாம் என்று நானும் என் மனைவியும் போயிருந்தோம். லக்ஷ்மி அக்காவின் வீட்டில் சிவபாஸ்கரனும் இருப்பான் என எதிர்பார்த்திருக்கவில்லை. ஹலோ என்றான். நான் புன்னகை செய்தேன்.

நான் லக்ஷ்மி அக்கா வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் எப்படியோ பேச்சு சிவபாஸ்கரனைப் பற்றி வந்துவிடும். லக்ஷ்மி அக்காவின் கணவர் ராஜபாஸ்கரன் இந்தப் பேச்சைக் கேட்காதது போல், வாயில் வந்த ஏதோ ஒரு ஸ்லோகத்தை முணுமுணுத்துக்கொண்டு போய்விடுவார். அவ்வாவின் கண்கள் கலங்குவதை நான் கவனிப்பேன். தான் கலங்குவது தெரியக்கூடாது என்பதற்காகவே வேறு ஒரு பக்கமாகத் திரும்பிக்கொள்வாள் அவ்வா. அனிச்சையாக அவள் கைகள் தரையைத் தடவும். அதிலிருந்தே அவள் அழும் நிலையில் இருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டுவிடமுடியும். என் மனைவி, பெத்த வயிறுன்னா சும்மாவா என்று ஒவ்வொருமுறை லக்ஷ்மி அக்கா வீட்டுக்குப் போய்விட்டு வரும்போதெல்லாம் சொல்லுவாள்.

அவ்வாவின் சொந்த ஊர் விழுப்புரம் பக்கம். பதினோரு வயதில் கல்யாணம் செய்துகொண்டு வந்து ஏழு குழந்தைகளைப் பெற்று கணவனை இழந்து சென்னைக்கு வந்து இப்போது இரண்டு மாதத்துக்கு ஒரு பையன் வீட்டில் என்று தன் இரண்டு பையன்கள் வீட்டிலும் மாறி மாறி வசிக்கிறாள். சிவபாஸ்கரன் சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டு ஓடிப் போகாமல் இருந்திருந்தால் மூன்று பையன்கள் வீட்டிலும் வாழ்ந்திருக்கலாம்.

சிவபாஸ்கரன் ஏன் ஓடிப்போனான் என்று லக்ஷ்மி அக்கா அவ்வப்போது ஒரு கதை சொல்வாள். எல்லாக் கதைகளையும் சேர்த்துப் பார்த்தால், அவன் ஓடிப் போனது மட்டுமே புரியும். ஏன் ஓடிப்போனான் என்பது விளங்கவே விளங்காது. ஒருவேளை ஏன் ஓடிப்போனான் என்று யாருக்கும் விளங்கக்கூடாது என்பதற்காகவே, ராஜபாஸ்கரன் அண்ணாவும் லக்ஷ்மி அக்காவும் பேசி வைத்துக்கொண்டு இப்படிச் செய்கிறார்களோ என்னவோ.

என் அத்தை ஒரு காரணம் சொன்னாள். அதுதான் எனக்குப் பிடித்திருந்தது. சிவபாஸ்கரன் யாரோ ஒரு பெண்ணைக் காதலித்திருக்கிறான். அதை ஏற்றுக்கொள்ள ராஜபாஸ்கரனும் அவ்வாவும் மறுத்துவிட்டதால் சிவபாஸ்கரன் ஓடிப்போய்விட்டான். ஏன் தனியே ஓடவேண்டும்? அந்தப் பெண் இவனைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு, வேறொருவனைக் கல்யாணம் செய்துகொண்டு போய்விட்டாள். வழக்கம்போல சன்யாசி ஆனான் சிவபாஸ்கரன்.

சிவபாஸ்கரனைப் பார்த்துக் கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஆகிறது. என்னைவிட ஒரு வயது சிறியவன். 26 வயதில் அழகான பையனாகப் பார்த்தது. இப்போது ஆம்பிளையாகத் திரும்பி வந்திருந்தான். இலக்கில்லாமல் எங்கோ பார்த்துச் சிரித்துவிட்டு, மீதிச் சிரிப்பை எங்கள் முகத்தில் பதித்தான். கை கால்களிலெல்லாம் என்னவோ படை படையாக வந்திருந்தது. சோரியாஸிசோ என்னவோ. பேசிக்கிட்டு இருங்க,மெயில் அனுப்பிட்டு வர்றேன் என்று சொல்லிவிட்டு உள்ளே போனான். என் மனைவி வீட்டில் ஒரு ஓரமாக உட்கார்ந்துகொண்டு, என் மகனை இழுத்துத் தன் மடியில் வைத்துக்கொண்டாள். சீக்கிரம் கிளம்பலாம் என்பது போல ஜாடை காட்டினாள். லக்ஷ்மி அக்கா அதைக் கவனித்துச் சொன்னாளா, அவளாகச் சொன்னாளா என்று தெரியவில்லை. ‘எல்லாம் இன்னைக்கு இருந்துட்டு நாளைக்குப் போகலாம்’ என்றாள். திடீரென்று வந்து சேர்ந்த சிவபாஸ்கரனுடன் என்னாலேயே சட்டென்று ஒட்ட முடியவில்லை.

இப்படி யாராவது வந்துவிட்டால் அனைவருக்கும் சாதத்தை உருண்டை பிடித்துத் தருவதுதான் அவ்வாவின் வேலை. அன்றும் அவ்வா சாதத்தை உருண்டை பிடித்துத் தரத் தயாரானாள். நான் கிளம்புகிறேன் என்று சொன்னதை யாரும் காது கொடுத்துக் கேட்டது போலத் தெரியவில்லை. எல்லாரும் சுற்றி வட்டமாக உட்கார்ந்துகொண்டார்கள். வேறு வழியின்றி நானும் அந்த வட்டத்தில் சேர்ந்துகொண்டேன். என் மனைவியும் மடியில் மகனோடு வட்டத்தில் வந்து சேர்ந்தாள்.

சிவபாஸ்கரன் அந்த வீட்டின் இன்னொரு சிறிய அறையில் கம்ப்யூட்டரில் என்னவோ பார்த்துக்கொண்டிருந்தான். அவ்வா ஒவ்வொரு பாத்திரமாகக் கொண்டு வந்து வைத்துக்கொண்டிருந்தாள். சாம்பார், பொறியல் என அடுக்கிக்கொண்டிருந்தபோது, சிவபாஸ்கரன் அங்கே இருந்து, ‘அம்மா, இங்க வந்து பாரு, இவர்தான்.. இவர்தான் எனக்கு எல்லாமே… இவர்தான் நிறைய சொல்லிக்கொடுத்தார்’ என்றான். அவ்வா தன் கை பத்து யாரு மேலும் பட்டுவிடாமல் இடுக்கிக்கொண்டு நடக்கமுடியாமல் கிட்டத்தட்ட தவழ்ந்து ‘முன்னால மாதிரி இப்பல்லாம் முடியலை’ என்று என்னைப் பார்த்துச் சொல்லிக்கொண்டே உள்ளே போய்ப் பார்த்தாள். கன்னத்திலும் போட்டுக்கொண்டு வெளியே வந்தாள்.

நான், ‘சிவபாஸ்கரன்…’ என்று கொஞ்சம் சத்தமாக அழைத்து, ‘சாப்பிட வரலையா’ என்றேன். ‘நைட் பழம் மட்டும்தான்’ என்று அங்கிருந்து பதில் கொடுத்தான். ‘கைத்துத்துன்னா அவனுக்கு ரொம்ப பிடிக்கும்’ என்று மெல்லிய குரலில் சொன்னாள் அவ்வா. ’இன்னைக்கு ஒருநாள் சாப்பிடலாம் வாங்க’ என்றேன். ராஜபாஸ்கரன் அண்ணா, ‘எங்க வரப்போறான், எல்லாம் சாம்ப்ளோர் படமா பார்த்துக்கிட்டு இருக்கான். ரொம்ப மாறிட்டான்’ என்றார். லக்ஷ்மி அக்காவைப் பார்த்து, ‘நீ கூப்பிடேன்’ என்றார். பின்பு அவரே, ‘சிவபாஸ்கர், அத்திய கூப்பிடறா பாரு’ என்றார். அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கரண்ட் கட்டாகியது. ‘நாம சாப்பிட உட்கார்ந்தாலே எப்படித்தான் இங்க கரண்ட் போகுதோ’ என்றாள் என் மனைவி. அறையிலிருந்து வெளியில் வந்தான் சிவபாஸ்கரன்.

அவ்வா சாம்பாரைப் போட்டு சாதத்தை அதில் கொட்டி நன்றாகப் பிறட்டி உருண்டை பிடித்துத் தரத் தொடங்கியிருந்தாள். லக்ஷ்மி அக்கா நான்கைந்து மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தாள். மஞ்சள் வெளிச்சம் எங்கும் பரவ சிவபாஸ்கரன் ஏதோ ஒரு பரவச மோன நிலையில் எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பது போல் இருந்தது. இரண்டு நாள் கழித்து என் மனைவி என்னிடம் ‘அவர் என்னையே பார்த்த மாதிரி இருந்ததுங்க’ என்று சொல்லிவிடுவாளோ என்று எனக்கு அச்சமாக இருந்தது. ‘என்ன சிவபாஸ்கரன் என்ன யோசனை’ என்றேன். இந்த ஒரு கேள்விதான் அந்த சூழ்நிலையையே ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டது என்று சொல்லவேண்டும்.

லக்ஷ்மி அக்காவின் வீடு நான்கு வீடுகள் கொண்ட ஒரு ஃப்ளாட்டில் இருந்தது. ஆனாலும், மதுரையில் இருப்பது போன்ற ஒரு காம்பவுண்ட் தோற்றம் இந்த ஃப்ளாட்டுக்கு உண்டு. ஒரு அடி சிமிண்ட் தரையில் நடந்துசென்று, சிறிய படிகள் நான்கைந்து ஏறி, இடது பக்கம் திரும்பினால், லக்ஷ்மி அக்காவின் வீடு. வெளியில் ராகவேந்திரர் ஸ்டிக்கர் ஒட்டி கன்னடத்தில் என்னவோ எழுதியிருக்கும். அன்று நான் கேட்ட கேள்வியைத் தொடர்ந்து சிவபாஸ்கரன் பேசிய பேச்செல்லாம் இந்த வீட்டை நிரப்பி, வெளியை நிரப்பி, தெருவையும் நிரப்பியிருக்கவேண்டும். அவ்வா அவள் பாட்டுக்கு அடுத்தடுத்துப் பிசைந்து பிசைந்து போட்டுக்கொண்டிருந்தாள். ராஜபாஸ்கரனும் லக்ஷ்மி அக்காவும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். என் மனைவியோ என் மகன் சிவபாஸ்கரனிடம் போய்விடக்கூடாது என்பதிலேயே குறியாய் இருந்தாள். என் கவனம் முழுதும் சிவபாஸ்கரன் பேச்சிலேயே இருந்தது. சிவபாஸ்கரனின் மனம் அவன் சொன்ன கதையில் லயித்தபோதெல்லாம், அவன் கரங்கள் அவனை அறியாமலேயே அவன் கால்களையும் கைகளையும் விடாமல் சொறிந்துகொண்டிருந்தன. என் மனைவி எனக்கு மட்டும் தெரிவதுபோல அடிக்கடி முகம் சுளித்துக்கொண்டாள்.

’என்ன கேட்டீங்க’ என்றான் சிவபாஸ்கரன். ’இல்லை, என்ன யோசனைனு கேட்டேன்’ என்றேன்.

’இப்ப நாம சாப்பிடறோம் இல்லையா, இதே மாதிரி வேற எங்கயோ சாப்பிட்டோம்னு நினைப்பு. அப்புறம் நிறைய தடவை சாப்பிட்ட மாதிரி ஒரு தோணல். என்னவோ எல்லாமே எழுதி வெச்ச மாதிரி… அல்லது இப்ப நாம உட்கார்ந்து இதை எழுதுற மாதிரி.. இல்ல?’ என்றான்.

’ஆனா நீங்க சாப்பிடலையே’ என்றான் என் மகன் மழலையில். ‘பழம்தான வேணும்னீங்க. எனக்கும் வாழப்பழம் வேணும்.’

என் மனைவி அவன் வாயைப் பொத்தினாள். சிவபாஸ்கரன், ‘இதோ சாப்பிட்டுட்டேனே’ என்று சொல்லி, என் கையில் அவ்வா வைத்திருந்த கைத்துத்தில் இருந்து நான்கைந்து பருக்கைகளை வாயில் போட்டுக்கொண்டான். மனைவி மகனைத் தூக்கிக்கொண்டு கைகழுவப் போனாள். அவ்வா, ‘இன்னும் கொஞ்சம் வாங்கிக்கோ’ என்றது அவள் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. கை கழுவப் பின்னால் சென்றவள் உள்ளே வரவே இல்லை.

டியூஷன் முடித்துவிட்டு சுஜி உள்ளே வந்தாள். என்னைப் பார்த்துவிட்டு, ‘சித்தப்பா, சித்தியும் அந்த வாலும் எங்க’ என்று சொல்லிக்கொண்டே பின்னால் போய்விட்டாள்.

சுஜி வந்ததை சிவபாஸ்கரன் பார்த்தது போலவே தெரியவில்லை.

‘நமக்கு யாரும் இல்லைன்றதே தப்பு. இந்த உலகமே நமக்காகத்தான். எல்லாருமே நமக்காகத்தான். இந்த ஜாதி இனம் மொழி எல்லாமே.. என்ன சொல்ல.. வெறும் மாயை. ஒரு கூட்டுக்குள்ள இருக்கிற மாதிரி. இது எதுவுமே ஒரு தனிமனிதனைக் கட்டுப்படுத்தமுடியாதுன்றதுதான் உண்மை. நான் இங்க இருந்தப்ப இதெல்லாம் புரிஞ்சுக்கலை. எல்லாம் வேண்டாம்னு ஒரு வெறுப்புல ஓடினேன் பாருங்க, யெஸ், வெறுப்புதான். எல்லாத்து மேலயும் வெறுப்பு. அம்மா, அண்ணன், அத்திய எல்லார் மேலயும் வெறுப்பு…’

அவ்வா இடதுகையால் தரையைத் தேய்த்துக்கொண்டு, தன் முந்தானையை எடுத்து வேர்வையைத் துடைத்துக்கொண்டாள். ராஜபாஸ்கரன் அண்ணா எதுவும் பேசாமல் இன்னொரு ரசம் சாத உருண்டைக்காகக் கை காட்டினார். லக்ஷ்மி அக்கா என்னவோ சொல்ல வந்து ஒண்ணும் சொல்லாமல் அமைதியாகியது போலத் தோன்றியது.

‘எதுக்கு ஓடினேன்னு இப்ப நினைச்சுப் பார்த்தாலே ஆபாசமா இருக்கு. ஆனால் யோசிச்சுப் பார்த்தா ஒவ்வொண்ணும் நிமித்தம். எல்லா செயலுக்கும் காரணம் இருக்கு. கிருஷ்ணதீர்த்தர்னு ஒரு ஆச்சார். அடிக்கடி சொல்வார். நீயா எதுவும் செய்யலை. நீ செய்யற எதுவுமே சும்மா நடக்கலைன்னு. அந்த நேரத்துல என்னவோ உளர்றார்னுதான் தோணுச்சு. ஆனா இப்ப யோசிச்சுப் பார்த்தா…’ கண்கள் கலங்க விட்டத்தை நோக்கிக் கையைக் கூப்பி ‘கிருஷ்ணாச்சாரே நமஸ்காரா’ என்றான். எனக்குக் கொஞ்சம் பதற்றமாகியது. அவனை மெல்ல இயல்பு நிலைக்குக் கொண்டுவர நினைத்துக்கொண்டு, ‘நிறைய பெரிய மனுஷங்க. வேதம் படிச்சவங்க. நமக்குத்தான் ஒண்ணும் புரியலை. பாருங்க, சாம்பார், ரசம், கைத்துத்துண்ணு இருக்கோம்’ என்றேன் எனக்கு நானே சிரித்துக்கொண்டு.

‘இல்லை நரேன். இது வெறும் சாப்பாடு இல்லை. இதுதான் நீங்க. இதை விட்டுட்டு வர்றது ஒரு கலை. இதையே சாப்பிட்டுக்கிட்டு இருக்கிறதும் இன்னொரு கலை. எதுவுமே கேவலம் இல்லை, எதுவுமே உயர்வு இல்லை. இன்னொரு ஆச்சார் இருக்கார், விஷ்ணுவர்த்தன்னு பேரு. அவர் சொல்வார், சன்யாசிகள் வேற, நாம வேற. நமக்கு வேதம் தெரியும். ஆனா சன்யாசிகள் இல்லைன்னு. அப்படிப் பார்த்தா நீங்களோ நானோ சன்யாசி இல்லை. பழத்தைவிட முடியலையே என்னால. இது எல்லாமேதான் நாமன்னு நினைக்கிறேன்.’ அவன் சொல்வது எனக்குக் குழப்புவது போல இருந்தது. எங்கே இதையெல்லாம் பேசக் கற்றான் என்று தலை சுற்றியது. சம்ஸ்கிருதம் படிக்கும்போதே இப்படிக் குழப்பவும் கற்றுக்கொடுத்துவிடுவார்களோ என்னவோ. எனக்குத் தெரிந்த அத்தனை ஓடிப்போன சன்யாசிகளும், சிவபாஸ்கரன் போன்ற சன்யாசிகளல்லாத மனிதர்களும் இப்படித்தான் பேசுகிறார்கள். இதுதான் வேதாந்தமா என்றாலும் இல்லை என்பார்கள். அதற்கும் ஒரு விளக்கம் வரும். விளக்கம், விளக்கம், அதை விளக்க இன்னொரு விளக்கம்.

‘என்ன நான் குழப்புறேன்னு நினைக்குறீங்களா? இல்லை. நீங்க நினைக்கிற மாதிரி சாப்பாட்டை நேசிக்கிறது தப்பில்லை. அதைவிட்டுட்டு இருக்கமுடியாதுன்னு தெரிஞ்சவங்க அதோட இருக்கிறதே நல்லது. என்னால சில நினைப்பைவிட முடியலை. ஓடினேன். அதுவும் என்கூடத்தான் ஓடி வரும்னு எனக்கு அப்போ புரியலை. இப்ப புரியுது. இன்னும் சொல்றேன் கேளுங்க. தேவுடு ஆச்சார்னு ஒருத்தர். எல்லா யாத்திரைகளுக்கும் எங்ககூட வருவார். எங்கெல்லாமோ போவோம்.’

சிவபாஸ்கரன் எங்கே ஓடிப்போய் யாரோடு எப்படிச் சேர்ந்தான் என்பதே எனக்குப் புரியவில்லை. அதையெல்லாம் கேட்கவும் ஆசைதான். ஆனால் என்னவோ ஒரு பயம் வந்து ஒட்டிக்கொண்டது. சரி, அவன் சொல்லும் கதைகளே போதும் என்றாகிவிட்டது.

‘எங்க போனோம் தெரியுமா? ஹரித்துவார். போயிருக்கீங்களா? சாதாரணமா போறதே கஷ்டம். அங்க ஹரி வாயு ஸ்துதிக்குப் போனோம். 80 பேர். அங்க இருக்கிறது போதும்னு நினைச்சா, தேவுடு ஆச்சார், இங்கேர்ந்தே ஒரு சமையல்காரனைக் கூட்டிக்கிட்டுப் போகணும், அங்க இருக்கிற 4 நாள் எப்படி உலிக்கூட்டு சாப்பிடாம இருக்கிறதுன்னு ஒரே அடம். நம்ப முடியுதா உங்களால? இப்படிக் கேட்டுட்டதால தேவுடு ஆச்சார்னு சீப்புன்னு நினைச்சுடாதீங்க. சம்ஸ்கிருதத்துல விற்பன்னர். கன்னடத்துல அப்படியே அருவியா கொட்டுவார். அநேகம் பாடல்கள் எழுதியிருக்கிறார். பல கன்னடப் பாடல்களை அப்படியே ராகத்தோட சம்ஸ்கிருதத்துக்கு மாத்திப் பாடுவார். எங்களுக்கெல்லாம் புல்லரிக்கும். சத்தியவந்தன். தபஸ்வின்னுதான் சொல்லணும். ஆனால் அவருக்கு உலிக்கூட்டுக்கு ஆள் வேண்டியிருக்கு’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.

அவ்வா பாத்திரங்களையெல்லாம் உள்ளே எடுத்து வைக்கத் தொடங்கினாள். நான் கை கழுவிக்கொள்ள பின்னால் சென்றேன். என் மனைவியும் மகனும் சுஜியும் அங்கே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நான் கை கழுவும்போது கரண்ட் வந்தது. ‘கரண்ட் வந்தாச்சு, வாங்க வீட்டுக்கு போகலாம்’ என்றாள் மனைவி. ‘இருங்க சித்தி, நாளைக்குப் போகலாம்’ என்றாள் சுஜி. என் மகனும் நாளைக்குப் போகலாம் என்றான். சரி என்று சொல்லிவிட்டு உள்ளே வந்தேன்.

சிவபாஸ்கரன் எனக்கு ஒரு சேரை எடுத்துப் போட்டுவிட்டு, தானும் ஒரு சேரில் உட்கார்ந்திருந்தான். நான் வரவும் தொடங்கினான்.

‘அது ஒரு அட்டகாசமான கதை. நினைச்சாலே புல்லரிக்குது’ என்று சொல்லிவிட்டு, ‘அண்ணா, அண்ணா…’ என்று சத்தம்போட்டு ராஜபாஸ்கரன் அண்ணாவை அழைத்து, ’சீனிவாசன் தெரியுமா? அவன்தான் தேவுடு ஆச்சாரோட ஹரித்துவார் வந்தான்’ என்றான். ராஜபாஸ்கரன் வேட்டியை சரி செய்துகொண்டே, ‘இப்ப ஒரு மாசம் முன்னாடி செத்தானே அவனா’ என்று ஆச்சரியத்துடன் வந்து எங்களுக்குக் கீழே உட்கார்ந்துகொண்டார். லக்ஷ்மி அக்காவும் ஆச்சரியத்துடன் வந்து ‘பாவம், மூணு பொண்ணுங்க. சட்டுன்னு போயிட்டான், ஹரித்துவார்ல சாவு, யாருக்குக் கிடைக்கும்’ என்றாள். அவ்வா தலை மட்டும் எங்களுக்குத் தெரியுமாறு உள்ளறையில் கால் நீட்டிப் படுத்துக்கொண்டாள்.

‘சாவா? அது சாவில்லை. ஐக்கியம். கடவுளோட ஐக்கியம் அது. அங்க வந்து பிரமாதமா சமைச்சுப் போட்டான். ஒரே ஆளு, எம்பது பேருக்குச் சமைச்சான். அவன் பேய்னுதான் தேவுடு ஆச்சார் சொல்லுவார். அப்படி ஒரு ஓட்டம். இதுவரை அவன் இவ்ளோ டேஸ்ட்டா சமைச்சதில்லைனுதான் சொல்லுவேன். அப்படி ஒரு டேஸ்ட். எல்லாம் சமைச்சுட்டு, ராத்திரியில காலார வெளிய போய்ட்டு வருவான். கங்கை நதிகூட அவன் போகலை, அவன்கூட கங்கை வருதுன்னு அவனுக்கு ஒரு நினைப்புன்னு தேவுடு ஆச்சார்கூட கிண்டல் பண்ணுவார். ஒரு ராத்திரி தவறாம போவான். அவன் செத்துப் போறதுக்கு முதல் நாள் அப்படிப் போனவன் படபடப்போட திரும்பி வந்தான். என்னைக் கூப்பிட்டுச் சொன்னான். ’நினைக்கவே புல்லரிக்குது. இப்பகூட பாருங்க…’ன்னு சொல்லிக் கையைக் காட்டினான். சப்த கன்னியர்களைப் பார்த்தானாம். வானத்துலேர்ந்து கங்கைக்கு இறங்கி வந்ததையும், திரும்ப அவங்க மேலே போனதையும் பார்த்திருக்கான். அதோட சரி. வேற எதுவுமே அவனுக்கு பேச வரலை. திரும்ப திரும்ப அதையே சொல்றான். நைட்டுக்கு கோதுமை ரவை உப்புமா செய்டாங்கறார் தேவுடு ஆச்சார். என்னவோ கெக்க பிக்கேன்னு சிரிச்சுட்டு தலையை ஆட்டிட்டுப் போய்ட்டான். அப்பவே தேவுடு ஆச்சார், இவன் ஆத்மா அந்த சப்த கன்னியகளைத் தாங்குமா, ராகவேந்திரான்னார். அன்னைக்கு நைட்டு அவன் பண்ண உப்புமா, அது உப்புமா இல்லை, அதை என்னன்னு சொல்றது? சொல்றதுக்கே வார்த்தை இல்லை. தேவுடு ஆச்சார் கை நடுங்க நடுங்கத்தான் அதை சாப்பிட்டார். சீனிவாசன் ஒரே ஒரு வாய் எடுத்து வாய்ல போட்டான். அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்னு ஒரு வார்த்தை சொன்னான். மறுநாள் காலேல அவனை அவன் ரூம்ல பொணமாத்தான் பார்த்தோம்.’

எனக்குப் பதற்றமாக இருந்தது. ராஜபாஸ்கரன் அண்ணா கன்னத்தில் போட்டுக்கொண்டே, ‘ஏழு பேரைப் பார்த்தப்புறம் அவனுக்கு நேரா சொர்க்கம்தாண்டா’ என்றார். உணர்ச்சிப் பெருக்கினூடே அவரது முகம் எனக்கு சிவபாஸ்கரனின் முகமாகவே தெரிந்தது. அவ்வாவின் கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டு இருந்தது. லக்ஷ்மி அக்கா உடையும் குரலில் ‘சாகறதுக்கு முன்னாடி பொண்டாட்டியை நினைச்சிருக்கான் பாரு’ என்றாள். தொடர்ந்து, ‘நீ என்னமோ எங்கயோ கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன்னு நினைச்சு நாங்கள்லாம் இங்க அழுதுக்கிட்டு இருக்கோம். அம்மாவுக்காவது ஒரு ஃபோன் பண்ணிருக்கலாம்’ என்றாள். என்னைப் பார்த்து, ‘எத்தனை எத்தனை அனுபவம். நரேன், இதையெல்லாம் நெட்ல எழுதுடா.’

சிவபாஸ்கரன், ‘ஃபோன் பண்ணக்கூடாதுன்னு இல்லை அத்திய. இப்ப இங்க இருக்கிறேன். அத்திய, அண்ணா, சுஜின்னு ஒரு நினைப்பு ஓடுது. அங்க அப்படி இல்லை. என்னென்னவோ நினைப்பு. எதையும் சொல்லமுடியாது. அதனால எதுவுமில்ல, வேண்டாம்னு ஆயிடுச்சுன்னும் அர்த்தம் கிடையாது.’

‘சரிடா, ஒரு தடவையாவது வாஹினியை நினைச்சியா இல்லையா?’

சட்டென ஒரு இறுக்கம் அங்கே வந்து சேர்ந்துகொண்டது. அவ்வா அந்தப் பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டாள். ராஜ பாஸ்கரன் அண்ணா கடும் கோபமாகி லக்ஷ்மி அக்காவை முறைத்தார். தான் கேட்டது அத்தனை பெரிய பிழையா என்பதுபோல் என்னைப் பார்த்தாள் லக்ஷ்மி அக்கா. எனக்கு அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது. உண்மையில் அவன் காதலித்துவிட்டுக் காதல் தோல்வியால்தான் ஓடினான். அதனை மறைக்கவே இத்தனை கதைகளைச் சொல்கிறான் என்பது எனக்கும் தோன்றாமலில்லை. லக்ஷ்மி அக்கா போட்டு உடைத்துவிட்டாள். உண்மையான காரணம் அதுவாகவே இருந்தாலும், தான் எப்படி இருக்கவேண்டும் என்று விரும்பும் ஒரு சிவபாஸ்கரனையே நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது ராஜபாஸ்கரன் அண்ணாவின் எண்ணமாக இருக்கவேண்டும்.

‘சரி, ஒரு தடவை உங்களுக்கு உடம்பு சரியில்லை, அது இதுன்னு ஒரு ஃபோன் வந்தது. அது வந்து ஏழெட்டு வருஷம் இருக்கும். என்னவோ ஃப்ளைட்ல மயங்கி விழுந்துட்டீங்கன்னும், உடனே உங்களை இறக்கிவிட்டுட்டுப் போயிட்டாங்கன்னும் சொன்னாங்க. ரொம்ப பயந்துட்டோம், என்னாச்சு’ என்று பேச்சை மாற்றினேன்.

சிவபாஸ்கரன் பதிலே பேசவில்லை. எதையோ யோசித்துகொண்டிருந்தான். அவன் கை விரல்கள் கால்களைச் சொறிந்துகொண்டிருந்தன. அவன் வாயில் சில சம்ஸ்கிருத வார்த்தைகள் வந்தது போலிருந்தது. அவ்வா அந்தப் பக்கம் திரும்பி தன் கண்ணீரைத் தரையில் தடவிக்கொண்டிருந்தாள். சிவபாஸ்கரன் அவன் நிலையில் இல்லை என்பது புரிந்தது. சுஜி வந்து, ‘கம்ப்யூட்ட்ரை ஆஃப் பண்ணட்டுமா’ என்று கேட்டபோது, ‘இல்லை, எனக்கு வேண்டும்’ என்று சொல்லி, அவ்வாவைத் தாண்டி உள்ளே போனான். அவன் போனதும், ‘நான் ஒண்ணும் தப்பா கேக்கலையே’ என்றாள் லக்ஷ்மி அக்கா ராஜ பாஸ்கரன் அண்ணாவிடம்.

’சரி, எல்லாரும் படுத்துக்கலாம். நரேன், நீயும் அவளும் உன் பிள்ளையோட பக்கத்து வீட்டுல படுத்துக்கோங்க. அங்க மொட்டைப் பாட்டி தனியாத்தான் இருக்கா. நாங்க இங்க படுத்துக்கறோம்’ என்றாள் லக்ஷ்மி அக்கா. ’சுஜி, தண்ணி கொண்டுவா’ என்றாள் லக்ஷ்மி அக்கா. நானும் என் மனைவியும் மகனைத் தூக்கிக்கொண்டு பக்கத்து வீட்டுக்குப் போனோம். மொடைப் பாட்டி வாங்கோ வாங்கோ என்றாள். உள்ளே நுழையவும், ‘கதை கதையா பேசிருப்பானே, படுபாவி, பெத்தவளைத் தவிக்க விட்டுட்டு சம்ஸ்கிருதமாம் ஹரித்துவாராம் தூ’ என்றாள். என் மனைவி அந்த மொட்டைப் பாட்டியிடம் ‘மெல்ல மெல்ல’ என்பதுபோல் சைகை காட்டினாள். ‘நேக்கு என்னடி பயம். அவன் பாத்ததைவிட நான் பாத்துருக்கேன் ஆயிரம். கண்டவ கூட படுத்துட்டு ஒடம்பெல்லாம் ரோகம். வாயெல்லாம் தோரணம்’ என்றாள். மொட்டைப் பாட்டி வராண்டாவில் படுத்துக்கொள்ள, உள்ளே நாங்கள் படுத்துக்கொண்டோம்.

காலையில் மொட்டைப்பாட்டிதான் எழுப்பினாள். என்னிடம், ‘உங்கக்கா ஆத்துப் போங்கோ. என்னான்னு சொல்றது, படவா திரும்ப ஓடிட்டான் போல்ருக்கு’ என்றாள். நான் அவசரம் அவசரமாக எழுந்து ஓடினேன். வெளியில் அவ்வா திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் காலை மடக்கி வழிவிட்டாள். என்னவ்வா என்றேன். இரண்டு கைகளையும் வானத்தை நோக்கிக் காட்டினாள். ‘மருந்து எடுத்துக்கிட்டுப் போனானான்னு தெரியலை’ என்றாள். நான் உள்ளே சென்றாள். சுஜி அழுதுகொண்டிருந்தாள். ராஜ பாஸ்கரன் அண்ணா ஒரு சேரில் உட்கார்ந்து ஹிந்து பேப்பரைக் கையில் வைத்திருந்தார். லக்ஷ்மி அக்கா முகத்தில் அருளே இல்லை. காப்பி சாப்பிடறியா என்றாள். என்னக்கா என்றேன். ‘போகட்டும், போறது போகட்டும், சுஜியோட தோடைக் காணோம்டா’ என்றாள். சுஜி அழுதுகொண்டே, ‘அவ்வாதான் கழட்டி பூஜை ரூம்ல வைக்க சொன்னாங்க’ என்றாள். ‘அவங்க தோடையும் கழட்டி வெச்சாங்க, ரெண்டையுமே காணோம்’ என்றாள். ராஜ பாஸ்கரன் அண்ணா, ‘வேற வாங்கிக்கலாம், இப்ப என்ன, தோடுதான’ என்றார். என் மனைவி அவ்வாவைத் தாண்டி உள்ளே வந்து, ஏன் அவ்வா மூளியாட்டம் வெளிய உட்கார்ந்து அழுதுக்கிட்டு இருக்காங்க என்றாள். ‘என்ன இருந்தாலும் பெத்த வயிறு இல்லியா’ என்று கொஞ்சம் அழுகையும் கொஞ்சம் நக்கலுமாகச் சொன்னாள் லக்ஷ்மி அக்கா.

முந்தைய கட்டுரைகாகிதக்கப்பல்-சுரேந்திரகுமார்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைகள் கடிதங்கள்