எத்தனை கைகள்! -சாம்ராஜ்

விஷ்ணுபுரம் பெருங்கனவு. மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் ஒவ்வொரு காலத்திலும் அது உருவாகிறது. அழிகிறது. விஷ்ணுபுரம் ஒரு மகா சக்கரமெனில் காலமெனும் சக்கரத்தின் மீதே அது எப்போதும் சுழன்று கொண்டிருக்கிறது. பிங்கலனும், திருவடியும் ஒரே குஷ்டரோகியின் காலையே தரிசிக்கின்றனர். அதுவும் நாமத்தைப் போலவே விரிந்திருக்கிறது. விஷ்ணுபுரம் குறித்து சொல்லில் அடங்காத புனைவுகள் விஷ்ணுபுரம் நகரத்திலும், மற்ற உலகத்திலும் நிலவுகிறது. அப்புனைவுகள் வரலாறு ஆகின்றது. வரலாறு புனைவாகின்றது. ஒவ்வொரு முறையும் அது காவியங்களாலும், கற்களாலும் உருவாகின்றன. பின் அதுவே சொற்களாகவும், சிதைவுகளாகவும் நொறுங்குகின்றன. எல்லாக் காலத்திலும் விஷ்ணுபுரத்தில் கைவிடப்பட்ட பிரகாரங்களும், இருளும் இருக்கின்றன.

விஷ்ணுபுரத்தை நிர்மாணித்த பாரதவர்ஷ மகாஸ்தபதி வம்சத்தில் வந்த பீரசேனர் விஷ்ணுபுரம் என்பதே சிற்பிகளின் தந்திரம் என்கிறார். சோனா ஆற்றின் செந்நிறத்திற்கு இரும்புத்தாது கலந்த பாறைகளே காரணமென்கிறார். அங்கிருக்கும் விஷ்ணுவின் சிலை ஏதோ ஒரு பழங்குடிகள் வழிபட்ட மூதாதையின் வடிவம் என்கிறார்.

விஷ்ணுபுரம் எப்பொழுதும் தன்னைத் தானே நிறுவுவதாகவும், மறுப்பதாகவும் இருக்கின்றது. விஷ்ணுபுரம் மாத்திரமல்ல. அங்கிருக்கக்கூடிய மனிதர்களும். விஷ்ணுபுரத்தின் ராஜகோபுரம் மனிதர்களால் கட்டப்பட்டதே அல்ல என்கிறார் நாமதேவர்.

விஷ்ணுபுரம் நகரமும், நாவலும் நம்முன் ஆதாரமான கேள்விகளை முன் வைக்கிறது. வாழ்வின் சாரமென்ன? ஞானம் என்றால் என்ன? காமம் என்றால் என்ன? தியாகத்திற்குப் பொருளுண்டா? காலமென்பது எது துவக்கம் எது முடிவு என்று புரியாமல் சுழன்றபடி இருக்கும் சக்கரம்தானா?

தோரணவாயிலைக் கடைசிவரை லட்சுமி பார்க்கவேயில்லை. சிறகிருந்தால் பறக்கலாமென்று சொன்ன அநிருத்தன் பிரகாரத்தில் சிதறுகிறான். சங்கர்ஷன் புகைபோல் மறைகிறான். அவனது காவியம் அவனற்ற புனைவாகிறது. கோபிலர் அவனை விட சிறந்த கவிஞன் என நிறுவப்படுகிறார். சித்திரையின் மரணம் பெரும் தொன்மமாகிறது. வீர்வல்லாளனின் வம்சமான அரையன்மாதவன் வணிகச் செட்டியிடம் தோற்கிறான். லலிதாங்கியோடு ஒரு சிறிய கணம் நடந்த திருவடி தன் வாழ்வை இழக்கிறான். சேரி மக்களின் பாடல்களில் வாழ்கிறான். அவனது மாமா பிதாம்பரம் அவனை நிறுவனமயமாக்குகிறார். மடம் பெருகுகிறது. அத்திரியின் அதட்டலுக்கு அத்தனை பேரும் வழிவிட பிங்கலன் பெண் உதடுகளோடு நடந்து கொண்டிருக்கிறான். சோமனுக்கு தாசி சாருவின் உபதேசம் போதுமானதாக இருக்கிறது. பெருந்தச்சன் தனது இறுதி நாளைக் குழந்தைகளோடும் சீடர்களோடேயே கழிக்க விரும்புகிறான். பிங்கலன் அறிய முடியாத உண்மைகளை சாரு அறிகிறாள். எனக்கு இடுப்பு மிகவும் வலிக்கிறது என்பதை மாத்திரமே ஆழ்வார் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரைக் கிள்ளிக் கிள்ளி விழிக்க வைக்கிறான் சீடன். குதிரையோடு கானாமல் போன ஆழ்வார் மிகக் கவனமாக தெய்வமாக்கப்படுகிறார். விஷ்ணுபுரத்திற்கு வெளியேவே வாழ்கிறார் கவி திரிவிக்கிரமன். தாங்களே விஷ்ணுபுரத்தின் பூர்வ குடிகளென்கிறார் ஸ்ரீ பாதமார்க்கி காளமுககுரு. சங்கர்ஷனின் காவியத்தை பத்மாவே பாதுகாக்கிறாள். சிற்பி சின்னசாத்தனின் கரங்கள் கங்காளர்களின் கட்டுப்பாட்டுக்குப் போகிறது. வெட்டப்பட்டுப் புழுதியில் துடிக்கின்றது அவனது விரல்கள்.

”விஷ்ணுபுரத்தின் எல்லா விதிவிலக்குகளுக்கும் முன்னுதாரணங்கள் உண்டு. இங்கு எதுவும் புதிய விஷயமல்ல. எல்லாமே ஐதீகமாக்கப்படும்” என்கிறார் நரசிங்கர். விஷ்ணுவிடமிருந்து சற்றே தள்ளி நிஷாத குழுப் பெண்களின் உக்கிர நிர்வாண பூஜை நடக்கிறது. மகா காசியபர் சிற்பியிடம் ராஜகோபுரத்தின் மகா எந்திரத்தை அவிழ்க்கச் சொல்கிறார். எங்கிருந்தோ விஷ்ணுபுரத்தை மகா காசியபர் பார்த்துக் கொண்டேயிருப்பதாக சூரியதத்தர் சொல்கிறார். ராஜகோபுரமாவது சரிவதாவது என்கிறார் பத்மபாதர். இந்த நகரம் மாற்றங்களை வெறுக்கிறது. எல்லா மாற்றங்களையும் அது பழமையில் இணைத்துவிடுகிறது என்கிறார் சூரியதத்தர். விஷ்ணுபுரம் மகா வைதீகனுக்குப் புத்திர சோகமும் பாரம்பரிய சொத்துதான் என்கிறார்.

நிஷாதக தலைவியின் கால்மாட்டில் அமர்ந்திருக்கின்றனர் பாண்டியனும் சூரியதத்தனும். சதியின்றி ஆள முடியாதென்கிறான் பாண்டியன். தனது காவியம் விஷ்ணுபுரத்தின் மகத்தான பொய்களின் ஒரு பகுதியாகிவிட்டது என்கிறான் சங்கர்ஷன். பிங்கலனைத் தன்னால் தொடர முடியவில்லை என்று துக்கிக்கிறார் சிரவண மகாபிரபு.

எனக்கெல்லாம் விஷ்ணு மல்லாக்கப் படுத்த தாசிதான் என்கிறான் பிரஜை ஒருவன். காசியபர் சிற்பியின் கனவில் வந்து ராஜகோபுர எந்திரத்தை அவிழ்க்க நினைவுபடுத்துகிறார். கோபுரத்திலிருந்து கீழே விழுந்து மரிக்கிறார் சிற்பி.

திருவடி ஆழ்வாரின் சீடராகிறார் தண்டிக்கப்பட்ட பெருந்தச்சன். பட்டரிடம் ஏடுகளைக் கொடுத்து விட்டு மரித்துப் போகிறார் திரிவிக்கிரமன். சாருகேசியைப் போய்ச் சேர்கிறது அந்த ஏடுகள். நான்கு தலைமுறை பாண்டிய மன்னர்கள் ஹடயோகிகளை விஷ்ணுபுரத்தை நோக்கி அனுப்பியபடி இருக்கின்றார்கள். விஷ்ணுபுரத்துக்கு வரும் வழியெங்கும் விஷம் பரவியிருக்கிறது. விஷ்ணுபுரத்துக்குப் போகும் பாதையைக் கண்டுபிடிக்கவே இவ்வளவு காலமாகிவிட்டது என்கிறான் அந்த முதிய பிட்சு. அவர்களையும் கடந்து போகிறது அந்தக் கரிய நாய்.

மகாகாளனோடு சிறுவன் காஷியபன் ஞானசபைக்குப் போகிறான். அஜித மகாபாதர் ஞான சபையை வெல்கிறான். அவனது மாணவனாகிறான் சந்திரகீர்த்தி. ஞானசபையின் பக்கவாட்டில் சாப்பாட்டிற்கு அடித்துக் கொள்கிறார்கள் பிராமணர்கள். ஞானசபையின் இருக்கைகள் மேலும் கீழும் இயங்குவது கூட தங்கள் மூதாதையரின் வேலையாக இருக்கலாம் என்கிறார் சிற்பி. தேவதத்தனின் தந்தை சித்தன் என்கிறார் பவதத்தர். ராஜகோபுரத்தில் ஏறியே அவன் தந்தை சித்தன் ஆனான் என்கிறார் பவதத்தர். அஜீதன் வெல்வதற்கு சபையில்லாமல் கண்ணீர் விடுவான் என்கிறான் சித்தன். ஆலயத்தின் பாதாளத்தில் இருக்கும் குளத்தில் விஷ்ணுபுரத்தின் அத்தனை காட்சிகளும் தலைகீழாகத் தெரிகின்றன. சந்திரகீர்த்தி அதிகாரத்தை எடுத்துக் கொள்கின்றான். எனக்கு அதிருப்தியே மிஞ்சுகிறது என்கிறான் அஜிதன். மக்களை நோக்கி எல்லாவற்றையும் திருப்புவோம் என்கிறான் சந்திரகீர்த்தி. பெரும் வணிகர்கள் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்கள். சந்திரகீர்த்தியின் ஆளுகையின் கீழ் வருகிறான் அஜீதன். நரோபாவுக்குத் தன் பயணக்குறிப்பு மாத்திரமே உண்மையென தோன்றுகிறது.

மறுபடியும் பெரும் நிறுவனமாகிறது விஷ்ணுபுரம். எட்டு மாதமாகியும் அஜீதனை சந்திக்க முடியவில்லை நரோபாவால். பெரும் அதிகாரம் கொண்டவனாக மாறியிருக்கிறான் சந்திரகீர்த்தி. நரோபாவின் முன்னே நிராதரவாக மரிக்கிறான் அஜீதன். இளம்பிட்சு உடனடியாக அந்த இடத்தை விட்டு அவனை அகலச் சொல்கிறான். மரித்த பின்னும் சந்திரகிரியின் கட்டளைக்காகக் காத்திருக்கிறான் அஜீதன் மகாபாதர்.

தொழிலும் வருமானமும் அற்றுப் போய்க் கொண்டிருக்கின்றன விஷ்ணுபுரத்தில். பட்டர்களின் கனவு மதுரையாய் இருக்கிறது. காட்டின் நடுவே யானையின் சடலத்தைப் போல சிதைந்து கிடக்கிறது கோவில். அஜீதர் பெரும் புனைவாகிறார். நிஷாதர்கள் பிரளயம் வருவதை முன்கூட்டியே யூகித்து மலைக்கு அந்தப் பக்கமான சேரநாட்டுக்கு விரைகின்றார்கள்.

காலம் மகாகோபிலரையும் சூரியதத்தரையும் அறிஞர்களாகவும் மகாபிங்கலரையும் திருவடியாழ்வாரையும் எள்ளலுக்கு உள்ளாகுகிறது. இவர்கள் எல்லோரையும் கடந்து போகிறது அந்தக் கரிய நாய். வல்லாளனின் வம்சமான அரையன் மாதவன் குடும்பம் ஊரை விட்டுப் போகலாமெனத் தீர்மானிக்கிறது. திருவடியாழ்வார் மடத்தின் அறுபதாம் தம்புரான் பாததாச சுவாமிகள் குச்சியை ஊன்றியபடி மதுரைக்குப் புறப்படுகிறது. . விஷ்ணுபுரத்தின் தலைமை வைதீகர்கள் அனைவரும் நிராதரவாகவே மரிக்கிறார்கள். யோகவிரதர் தான் தேடி வந்தது என்னவென்று அறியாமல் தவிக்கிறார். அகங்காரமே என் வாழ்வின் சாரம். எல்லாமே வீண் என்கிறார் பிரளயத்தில் செம்பர் குலப் பெண்கள் மாத்திரம் கொஞ்சப் பேர் தப்புகின்றார்கள். சிகரத்தின் உச்சியில் இருந்து அழியும் விஷ்ணுபுரத்தைப் பார்க்கின்றார்கள் செம்பர் குலப் பெண்கள்.

நானொரு தீவிர இடதுசாரி நம்பிக்கை கொண்டவன். உபரி என்ற சொல்லாடல் மார்க்சிய தளத்தில் செல்வாக்காகப் புழங்கி வருவது. இது குறித்துக் கோட்பாடாக டி.டி.கோசம்பி, கைலாசபதி, கோ.கேசவன், நா.வானமாமலை, அ.மார்க்ஸ் போன்றோர் நிறைய எழுதியிருக்கிறார்கள். இலக்கியமாக உபரி உருவாவது குறித்தும் மதம் நிறுவன மயமாவது குறித்தும் எளிமையாகத் தோன்றிய ஒன்று வலிமையான நிறுவனமயமாவது குறித்தும் யாதொரு பிரதியும் தமிழ் இடது சாரி இலக்கியத்தில் இல்லை. உதாரணத்திற்கு சே.கணேசலிங்கனின் படைப்புகளுக்கும் தகழி சிவசங்கரன் பிள்ளையின் ஏணிப்படிகளுக்கும் உள்ள பாரிய வேறுபாடுதான் அது. விஷ்ணுபுரம் தமிழில் உபரி குறித்தும் நிறுவன மயமாவது குறித்தும் எழுதப்பட்டிருக்கும் ஆகச் சிறந்த ஆக்கம்.

இந்தப் புத்தகம் வெளிவந்த 1997 முதல் இது குறித்தான எதிர்மறை விமர்சனங்களை மட்டுமே நான் கேட்டு வந்திருக்கிறேன். இது ஒரு இந்துத்துவா பிரதி என்றும் விஜயபாரதக்காரர்கள் இதை விற்கிறார்கள் என்பது வரை. இது குறித்து நேர்மறையாகப் பேசக்கூடிய ஒரு நபரைக் கூட நான் சந்திக்க வில்லை. ஏற்கனவே ஒரு முறை வாசித்திருக்கிறேன். இப்போதும், இரண்டாம் முறை வாசிக்கும்போதும், நீண்டகால இலக்கிய வாசகன் என்ற அடிப்படையிலும் இந்த ஆக்கம் எனக்குப் பெரும் நிறைவையும் வாசிப்பின், வாழ்வின், தேடுதலின் நுட்பமான கதவுகளைத் திறக்கிறது.

காலகாலமாக மதம் நிறுவன மயமாகும்போது நிகழும் அதிகாரக் குவிப்பும் அராஜகங்களுமே இந்த விஷ்ணுபுரம் வீதிகளெங்கும் சிதறிக்கிடக்கின்றன. பஞ்சைப்பராரிகள் சோற்றுக்கு அலைகிறார்கள், குடிக்கிறார்கள், தெருவில் கிடக்கிறார்கள், பெரும் கலைஞர்கள் மாயமாய் மறைகின்றார்கள். போலிகள் கல்வெட்டில் இடம் பெறுகிறார்கள் .ஞானம் தேடி வந்தவர்கள் அதிகார பீடத்தில் அமர்கின்றார்கள். அதிகார பீடம் விடாது சதி செய்கிறது. பெரும் தனிமையில் உழல்கிறது. மனம் பிறழ்கிறது. புதிய தெய்வங்களை உற்பத்தி செய்கிறது. ஞானசபையில் இருக்கைகள் தந்திரமாக இறக்குகிறது

வஞ்சிக்கப்பட்ட இனக்குழுக்களோடு வழிபாடுகளின் வழி சமாதனப்படுத்தப்படுகின்றன. தாசித் தெருக்களிலேயே ஞானம் பிறக்கிறது. பூர்வகுடிகள் எல்லைகளில் ஆங்காரமாய் ஆடிக்கொண்டிருக்கின்றார்கள். காஷ்யபனும் காளமுகர்களும் மலையிலிருந்து விஷ்ணுபுரத்தை அழிக்க இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். வெட்டப்பட்ட சிற்பியின் விரல்கள் விஷ்ணுபுரத்தின் வரலாற்றை எழுதுகிறது. ஒரு மந்தபுத்தியின் விரல்களில் விஷ்ணுபுரத்தின் ஞான மோதிரம் மாட்டப்படுகிறது. எவையுமே ஒன்றுமில்லை என்கிறான் சித்தன். விஷ்ணுபுரத்தில் எப்பொழுதும் புராணிகமான அதன் தோற்றம் குறித்தும், பிரளயத்தில் அதன் அழிவைக் குறித்தும் உரையாடல்கள் நிகழ்ந்த வண்ணமிருக்கின்றன.

விஷ்ணுபுரம் கனவில் மட்டுமே வாழ்கிறது. அரையன்மாதவன் மறுபடியும் வீரவல்லாளனாக ஆகலாம். மலைதாண்டிப் போன நீலிகள் திரும்ப வரக்கூடும். சித்திரைகள் உயிர்த்தெழலாம். சோனா நதியில் வரலாறும், புனைவும் பிரித்தறிய முடியாதபடி கலந்தோடிக் கொண்டிருக்கின்றது. காலத்தின் கனவு சுழற்சியில் எல்லாமே சாத்தியம்தான். சாராம்சத்தில் விஷ்ணுபுரமே ஒரு கனவுதானே.

தமிழில் எழுதப்பட்ட ஆகப்பெரிய ஆக்கம். இது என்னை ஆகர்ஷிக்கிறது.

ஆரியதத்தர் பெருமூச்சுடன் சொல்கிறான் ”கதைகளாக இருக்கலாம். ஆனால் எவ்வளவு அற்புதமான கதைகள். மனித மனம்தான் எவ்வளவு தூரம் மேலெழுந்திருக்கிறது. எவ்வளவு உன்னதங்களை நோக்கி அது கைநீட்டியிருக்கிறது.” இது விஷ்ணுபுரத்திற்கு மாத்திரமல்ல. இந்த நாவலுக்கும் பொருந்தும். நன்றி,

முந்தைய கட்டுரைபாண்டிச்சேரி மொண்ணையும் இணைய மொண்ணைகளும்
அடுத்த கட்டுரைபக்தி ஞானம்-கடிதம்