சத்யம் சிவம் சுந்தரம்

அன்புள்ள ஜெயமோகன்,

நலமா?

தங்களின் தல்ஸ்தோயின் கலைநோக்கு பதிவில் சத்யம் சிவம் சுந்தரம் என்ற தரிசனத்தைப் பற்றி கூறியுள்ளீர்கள். “உண்மை ஒழுங்கு அழகு மூன்றுமே ஒன்றின் மூன்று பக்கங்கள்தான். ஒன்றை பிறிதொன்றிலிருந்து பிரிக்க முடியாது” என்கிறீர்கள்.

இதை என்னால் சரியாக உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. உண்மையையும் ஒழுங்கையும் ஓரளவுக்கு புறவயமாக விளக்க முடியும். அனால் அழகை அப்படிக் கூறமுடியாதுதானே? அழகை உணர்தல் என்பது முற்றிலும் அகவயமானது அல்லவா? அப்படியானால் ஒன்றை அழகு என உணரும்போது ஒழுங்கும் உண்மையும் அதில் உள்ளடங்கி உள்ளதா? இல்லை ஒழுங்கையும் உண்மையையும் மனம் அறிந்த பின்பே ஒன்றின் அழகை உணர்கிறோமா? முன்னதை விடப் பின்னதே சரியாக இருக்கமுடியுமென நினைக்கிறேன். அதற்குக் காரணம் அழகு என நாம் உணரும் உணர்வின் நிலையின்மைதான். மனித மனம் முதிரும் தோறும் அழகின் அளவுகோல்கள் மாறிக்கொண்டே இருக்கிறது.

என்னுடைய கேள்விகள் இவைதான். நம் சிந்தனை மரபில் அழகு என்பது எப்படி வகுக்கப்பட்டிருக்கிறது? மேலும் “சத்யம்-சிவம்-சுந்தரம்” என்ற சொல்லாட்சி. ஏன் ஒழுங்கிற்கு சிவம் எனக் கூறப்பட்டிருக்கிறது? இத்தரிசனத்தின் உருவாக்கம் பற்றியும் அதன் வளர்ச்சி நிலைகள் பற்றியும் சற்று விரிவாக விளக்கமுடியுமா?

தங்களின் நேரத்திற்கு மிக்க நன்றி!!!

அன்புடன்,
பாலாஜி
கோவை

அன்புள்ள பாலாஜி,

இந்த உருவகம் பெரிதும் வேதாந்தம் சம்பந்தப்பட்டது. வேதாந்தத்தின் மையத்தரிசனம் சார்ந்த தர்க்கம் மூலமே இதை விளக்கிக்கொள்ள முடியும். அன்றாட அனுபவ தர்க்கம் கைகொடுக்காது.

வேதாந்தம் பேசும் விஷயங்கள் விசேஷ நிலையிலேயே செல்லுபடியாகும். அதாவது தத்துவார்த்தமாக மட்டுமே அணுகக்கூடிய absolute [முழுமுதல்] நிலைகளில்.  நாம் பேசும் விஷயங்கள் பல சாமானிய தளத்தைச் சேர்ந்தவை.

அதாவது நான் வீட்டைவிட்டு வெளியே சென்று ஓர் அழகான பொருளைப் பார்க்கிறேன், அது உண்மையானதாகவும் நல்லதாகவும் இருந்தாகவேண்டும் என்று உண்டா என்று கேட்டால் இல்லை என்றே பொருள்.

ஆனால் வேதாந்தத்தின் தளத்தில் நாம் காணும் பிரபஞ்சம் என்பது முழுமையாகவே நம்முடைய பிரக்ஞையால் நாம் உருவாக்கிக்கொள்வது மட்டும்தான். அதற்கு நம்முடைய பிரக்ஞைக்கு அப்பால் தனித்தன்மையோ அடையாளமோ கிடையாது.

நம்முள் பார்வையாளனாக இருப்பது எதுவோ அதுவே வெளியே பார்க்கப்படுவதாகவும் உள்ளது. பார்வையனுபவமாகவும் அறிவாகவும் இருப்பதும் அதுவே என்கிறது வேதாந்தம். அதாவது அனைத்தும் ஒன்றே. அது தன்னைத்தானே நிகழ்த்திக்கொள்வதுதான் அனைத்தும்.

அந்நிலையில் உண்மை, ஒழுங்கு, அழகு மூன்றுமே ஒன்றின் மூன்று பக்கங்களே. ஒன்றின் மூன்று வகை அறிதல்களே. நாம் எதை உண்மை என அறிகிறோமோ அதையே ஒழுங்கு என்றும் அதையே அழகு என்றும் எண்ணிக்கொள்கிறோம்.

உண்மையையும் ஒழுங்கையும் புறவயமாக விளக்கிக்கொள்ளமுடியும் என்று நீங்கள் சொல்வது நடைமுறைநோக்கு. தத்துவார்த்தமாகப் பார்த்தால் அவற்றுக்கும் புறவயத்தன்மை ஏதுமில்லை. இந்தக் களத்தில் இந்தக் காலகட்டத்தில் இந்த விதிகளின்படி இது உண்மை என்றல்லாமல் எந்த உண்மையையும் நாம் புறவயமாகச் சொல்லிவிடமுடியாது. நாம் அறியும் உண்மைகள் எல்லாமே துண்டுபட்ட உண்மைகள், நிபந்தனைக்குட்பட்ட உண்மைகள். ஒழுங்கும் அப்படித்தான். ஆகவே அழகும் அப்படித்தான்.

நம்மைச்சுற்றி நமக்கான பிரபஞ்சத்தைக் கட்டமைக்கும் நம் பிரக்ஞையின் மூன்று அறிதல் நிலைகள் என அம்மூன்றையும் சொல்லலாம். நாம் அறியும் ஒன்றை நிலையானது என உணர்ந்தால் அதை நாம் உண்மை எனச் சொல்கிறோம். சீரானது என உணர்ந்தால் ஒழுங்கு என்கிறோம். இனிது என்று உணர்ந்தால் அழகு என்கிறோம்.

இந்தக் கருதுகோள் வேதாந்தத்தில் இருந்து வளர்ந்து அடுத்தகட்ட பக்திமரபுகளுக்கு வந்தபோது இன்னும் பெரியதாகியது. ஒன்று உண்மையாகவும் சீராகவும் அழகாகவும் இருப்பதென்பது பிரம்மத்தின் தோற்றமேதான் என விளக்கிக் கொண்டார்கள். அது இறைவடிவம் என்று கொண்டார்கள்.

சிவம் என்பது ஒழுங்கு என்று இங்கே பொருள்படுகிறது. சக்தி என்னும் அளவிலா ஆற்றல்வெளியில் நிகழும் ஒரு கருத்துநிலையே சிவம். அது தன்னை ஒரு கருத்தாக அல்லது ஓர் ஒழுங்காக அல்லது சீரமைவாக மட்டுமே வெளிப்படுத்திக்கொள்ளமுடியும்.அதாவது ஓர் ஒழுங்குக்குள் அமைக்கப்பட்ட சக்தியையே நாம் பிரபஞ்சம் என்கிறோம். காலமும், வெளியும், பருப்பொருளும் அதுவே.

சத்யம் சிவம் சுந்தரம் என்பது வேதாந்த சிந்தனை மரபில் பிறந்து பக்திமரபு வழியாக வளர்ந்த பெரிய ஒரு தத்துவசிந்தனை. அதைத் தொடர்ந்து கற்றும் விவாதித்தும்தான் புரிந்துகொள்ளமுடியும். அதைப் புரிந்துகொள்ளுதல் என்பது ஒரு பெரிய தொடக்கம்.

ஜெ

முந்தைய கட்டுரைஅறமும் வாசகர்களும்
அடுத்த கட்டுரைபுறப்பாடு II – 11, தோன்றல்