தேவதேவனின் பித்து..

நவீன கவிதை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தாக வேண்டிய நிலை இன்று உருவாகியுள்ளது. தமிழ் நவீன கவிதையின் அழகியலை உருவாக்கிய நவீனத்துவ மதிப்பீடுகள் பல பற்பலவிதமாக மறுக்கப்பட்டு வருகின்றன. தனிமனிதனின் தருக்கப் பிரக்ஞை என்ற மையம் அசைக்க முடியாத உறுதியுடன் நவீனத்துவ கவிதையின் மையக் கோட்பாடாக உள்ளது. பிரபஞ்சமும், காலமும், சமூகமும், சகமனிதனும் அதன் மூலமே அளவிடப்பட்டன. மதிப்பிடப்பட்டன. அந்த மையம் சந்தர்ப்பம் சார்ந்த ஒரு புனைவு மட்டுமே என்ற இன்றைய சிந்தனை கவிஞனுக்குக் கூறுகிறது. அது நமது மரபான பார்வையும் கூட. அதை அவன் பரிசீலித்தேயாக வேண்டியுள்ளது. மரபின் வாலில் இருந்து துண்டித்து விழுந்து துடிப்பவனாக இருந்தான் நவீனத்துவக் கவிஞன் வாலும் ஒரு தலையாகி, தன்னையே விழுங்க முயன்று சுழலும் உயிராக நவீன கவிஞனை உருவகிக்கிறது இன்றைய சிந்தனை. தமிழின் இளைய தலைமுறை மூத்த தலைமுறையை எந்திரத்தனமாகப் பிரதியெடுக்க முயல்கிறது. அபூர்வமாக அதன் எல்லைகள் உடைந்து அது தன் கவிதையைக் கண்டடையவும் கூடும். ஆயினும் நமக்குத் தேவை பிரக்ஞையுள்ள சுய உடைப்பு. நாமோ பசுவய்யா, பிரமிள், ஞானக்கூத்தன் ஆகியோரின் நகல்களைக் கண்டு சலித்துப் போயிருக்கிறோம்.

தமிழில் இன்று கவிதை எழுதுபவர்களில் கணிசமானோர் கவிஞர்கள் அல்லர் என்பதே உண்மையான பிரச்சனை என்றால் மிகையில்லை. கட்டுரை எழுதுவதை விடவும் கதை எழுதுவதை விடவும் ஒப்புநோக்க எளிய விஷயம் கவிதை எழுதுதல் (பிரசுர நோக்கிலும்) என்பதே பலரின் உந்துதலாக உள்ளது. மொழி மீதான பித்து, அதாவது சொல்லிணைவுகள் மூலம் ஏற்படும் போதை, கவிஞனின் அடிப்படைக் குணாதிசயம். மனதில் ஏற்படும் இனம்புரியாத சலனத்தை மொழியினூடாக மீட்டுவதன் மூலமே கவிதைகள் சாத்தியமாகின்றன. இடையறாது மொழியின் ரீங்கரிப்பில் கட்டுப்பட்டிருப்பது கவிமனம். தமிழில் இன்று வெளிவரும் கவிதைகளில் மிகக் கணிசமானவை மலராது போன கவிதைக் கருக்கள். பலசமயம் விரிவு கொள்ளாத எளிய சிந்தனைத் துளிகளே இங்கு கவிதையென முன்வைக்கப்படுகின்றன.

எந்த ஒரு சூழலிலும் அங்குள்ள ஆகச் சிறந்த படைப்புமனங்கள் கவிஞர்களுக்குத்தான் இருக்கும். மொழியறிவு, இலக்கியப் பாரம்பரியம் பற்றிய அறிவு ஆகியவற்றில் மட்டுமல்ல சமூக அமைப்பு, பழக்க வழக்கங்கள், வரலாற்றுப் பிரக்ஞை, இயற்கை பற்றிய ஞானம் முதலியவற்றிலும் கவிஞர்களுக்கு ஆழமான ஞானம் இருக்கும். தத்துவம், நுண்கலைகள் ஆகியவற்றில் கவிஞர்களுக்கு இருந்து வரும் ஈடுபாடும் பயிற்சியும் வரலாறெங்கும் காணலாம். இளங்கோவிற்கும், கம்பனுக்கும், திருத்தக்கதேவருக்கும், நம்மாழ்வாருக்கும் தத்துவம் நுண்கலைகள் இரண்டிலுமே ஆழ்ந்த பயிற்சி இருந்தது. அதாவது பெரும்கவிஞன் ஒரே சமயம் அறிஞனும் கலைஞனும் ஆவான். கவிதையின் ஓர் எல்லை தத்துவத்திலும் மறு எல்லை கலைகளிலும் உள்ளது. தமிழில் இன்று கவிதை எழுதுபவர்களில் ஒருசிலரைத் தவிரப் பிறரை அறிஞர் என்று கூறினால் எவரும் வாய்விட்டு சிரித்து விடுவார்கள். சமகால அறிவுத்துறை எதிலும் எளிய அறிமுகம் கூட இல்லாதவர்கள், மிக அடிப்படையான தத்துவப் பரிச்சயம் கூட இல்லாதவர்கள், எந்தக் கலையிலும் அறிமுகம் இல்லாதவர்கள்தான் துரதிருஷ்டவசமாக இன்று கவிதை எழுதுகிறார்கள். ஏன், தங்கள் மொழியின் இலக்கியப் பாரம்பரியம் குறித்தோ சமகால இலக்கியப் போக்குகள் குறித்தோ எளிய புரிதல் கூட இல்லாதவர்கள் இவர்கள். இவர்களில் பலர் கவிதை எழுத இவை ஏதும் தேவை இல்லை. அது சுத்த சுயம்பான ஒரு வெளிப்பாடு என்று நம்புகிறார்கள். இவர்களில் சிலர் அவ்வப்போது சிற்சில கவிதைகளை அடையவும் கூடும். அவை கூர்ந்து பார்த்தால் பழைய கவித்துவ வெற்றிகளின் தொலைதூரத்துப் பிரதிகள் மட்டுமே என்று தெரியவரும். கவிதை வாசிப்பில் தாட்சணியம் காட்டுவது ஆரோக்கியமான ரசனையின் அடையாளம் அல்ல. கவிதையில் செய்யும் சமரசம் பிற அனைத்துத் துறைகளின் அழகியலையும் பாதிக்கும். ஏனெனில் கவிதை ஒரு சமூகத்தின் அழகியல் வெளிப்பாட்டின் ஆகச் சிறந்த தருணம் ஆகும். கவிஞனிடம் எளிய அழகுகளைக் கூட நாம் எதிர்பார்க்கலாகாது. மொத்த கலாச்சாரத்தின் சாராம்சமான வெளிப்பாட்டையே எதிர்பார்க்க வேண்டும். நமது சமூகமனதின் ஆன்மீக சாரத்தின் ஆகச்சிறந்த கணங்களை அவன் அளிக்கும்போதே திருப்தி கொள்ள வேண்டும்.

தமிழை எடுத்துக் கொண்டால் பாரதி முதல் இன்று வரை எவரையெல்லாம் குறிப்பிடத்தக் கவிஞர்களாகக் கொள்ளலாமோ அவர்கள் அனைவருமே ஒருபக்கம் அறிஞர்களாகவும் மறுபக்கம் கலைஞர்களாகவுமே இருந்து வந்துள்ளனர். பாரதிக்கு இசையிலும் வேதாந்த மரபிலும் உலக இலக்கியத்திலும் உள்ள பயிற்சி அனைவரும் அறிந்தது. ந.பிச்சமூர்த்தி, பிரமிள், நகுலன், பசுவய்யா முதலியவர்களுடைய கலையீடுபாடும் படிப்பறிவும் குறைத்து மதிப்பிடக் கூடியவையல்ல. ஆனால் இந்த அம்சம் தொடர்ந்து சரிந்தபடியே வருவதைக் காண்கிறோம். அதற்கு ஒருவகையில் சிற்றிதழ்கள் காரணமோ என்றும் படுகிறது. சிற்றிதழ்களை மட்டும் படித்து, அதற்குள்ளாகவே புழங்கி, அதில் எழுதி, அதிலேயே நிறைவு பெறும் ஒரு வகைக் கவிஞர்கள் உருவாகிவிட்டனர். இவர்களில் பலர் எளிய குமாஸ்தாக்கள். மத்தியவர்க்க பிறவிகள். தங்கள் உப்புசப்பற்ற வாழ்விலிருந்து முளைக்கும் பயங்களையும் தனிமையையும் எளிய சந்தோஷங்களையும் முன்வைப்பதற்கான ஓர் ஊடகமாகக் கவிதையை இவர்கள் மாற்றி விட்டனர். நவீனத்துவம் இவர்களுக்குப் பொருத்தமான அழகிய அடிப்படையையும் அளித்தது. இதன் மறுபக்கமாகப் போலியான புரட்சி மற்றும் கலகத் தோரணைகளில் ஈடுபடுபவர்களும் உண்டு. அவர்களைப் பொருட்படுத்தக் கூட வேண்டியதில்லை. கவிஞன், வாழ்வு தன்மீது சுமத்தும் நிபந்தனைகளைத் தன் கவித்துவத்தின் தீவிரம் மூலம் வெல்பவன். பாரதியும் மத்திய வர்க்கத்தினன் தான். ஆனால் அவர் கவிதைகள் அவரை அப்படி நமக்குக் காட்டவில்லை. பிரமிளிலும் தேவதேவனிலும் நாம் காண்பது அவர்களுடைய புறவயவாழ்வின் குறுகலை அல்ல. அவர்களுடைய மீறலின் தீவிரத்தையே.

கவிதையைப் பித்துப்பிடிக்க வைப்பது எப்படி என்று யோசிக்கும் தருணத்தில் நாம் இன்று நிற்கிறோம். ஆடும் பித்தனின் உடுக்கின் முதல் தாளத்தைப் பிரமிளின் கவிதைகளில் காண்கிறோம். தூக்கும் இடது அடியையும் நெளியும் நாகத்தையும் உயர எழும் ஊழிச் சுடரையும் தேவதேவனில். இடதுபாதம் வானில் தூக்க, விரிசடை திசைமறைத்து பறக்க, துடி கடுந்தாளமாக உச்சத்தில் முழங்க, அரவின் விஷம் பீறிட, ஊழி நெருப்பு உயர்ந்து தழல் விரிக்க, ஊர்த்துவ தாண்டவமாக நம் கவிதை மாற வேண்டுமென்ற கனவு இத்தருணத்தில் நம்மில் ஊறவேண்டும். தருக்கத்தில் கவிதையைக் கட்டிப்போட்ட பாசங்கள் உடைந்தன. பித்தின் மெய்மையன்றி எந்த ஞானமும் இனி அதைக் கட்டுப்படுத்த வேண்டியதில்லை. இது பொங்கிச்சிதறும் வெறும் கூத்தல்ல. அனைத்து நியதிகளும் சிதறப் பெருநியதி ஒன்றுமட்டும் எஞ்சும் நிருத்தியம். அது நம் கனவாக இருக்கும்போதுதான் நம் மொழியும் வடிவமும் மாறுபடும்.

’மலை உருகிப் பெருக்கெடுத்த நதி
மடியுமோ நிரந்தரமாய்?
அவ்வளவு பெரிய கனலை
வெளிப்படுத்த வல்லதோ
ஒரு சிறு சொல்?’

(மலை)

முந்தைய கட்டுரைவயிறு- கடிதம்
அடுத்த கட்டுரைதேவதேவனின் கவிமொழி -கடிதங்கள்