நகைச்சுவை-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

அலுவலகத்தில் இருந்து பேருந்தில் வீட்டிற்குச் செல்கையில் எப்போதும் என்னுடைய கைபேசியில் உங்களுடைய இணையதளத்தைப் படிப்பதுண்டு. அது மாதிரியான ஒரு நாளில்தான் தங்கள் “வழி” படித்தேன். பீறிட்டுக் கிளம்பிய சிரிப்பை அடக்க பெரும் பாடு பட வேண்டியதாயிற்று.

பேருந்தில் இருப்பவர்கள் என்னை “ஒரு மாதிரியாக” ப் பார்க்க ஆரம்பித்தார்கள். சிரிப்பை அடக்குவதும் வெளியே வேடிக்கை பார்ப்பதுமாக வந்தேன்.ஒரு கட்டத்தில், தாங்கமுடியாமல் கைபேசியை அணைத்து விட்டேன். வீட்டிற்கு வந்துதான் மீதியைப் படிக்க முடிந்தது.ஆனால், மறுமுறை அந்தக் கட்டுரையைப் படிக்கும் போதுதான் , வேறு ஒரு கோணம் தென்பட்டது. வழி தெரியாமலும்,வழியைவிளக்கினாலும் புரிந்து கொள்ள முடியாத அந்தப் பாட்டாவின் நிலைமை ஒரு மூன்றாம் மனிதனின் கோணத்தில் உண்மையில் நகைச்சுவைதான். ஆனால், அந்தப் பாட்டாவின் நிலைமையில் இருந்து யோசிக்கும்போது அது எத்தனை பெரிய பிரச்சனை.புரிந்து கொள்ள முடியாத குழப்பம் அல்லவா?

விடுமுறை முடிந்து ஊரில் இருந்து சிங்கப்பூர் திரும்பும் போதெல்லாம், சென்னை விமான நிலையத்தில், முதல் முறையாக விமானப் பயணம் செய்யும் படிக்காத பெரியவர்களையும், படித்திருந்தும் படபடப்புடனும் பயத்துடனும் இருக்கும் சில பெண்களையும் காண நேர்ந்ததுண்டு. “Immigration form ” பூர்த்தி செய்ய முடியாமல் அவர்கள் தத்தளிப்பதைப் பார்க்கையில சங்கடமாக இருக்கும்.அது மாதிரியான சந்தர்ப்பங்களில் என்னால் முடிந்த உதவியைச் செய்வதுண்டு. உங்கள் “வழி” அதனுடைய அங்கதத்தையும் தாண்டிஇது போல அறியாமையில் இருக்கும் சிலருக்கு உதவிகள் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியது.

மிக்க அன்புடன்,
கணேஷ் பாபு.
சிங்கப்பூர்.

அன்புள்ள கணேஷ்பாபு

நானே உலகின் பல விமானநிலையங்களில் அப்படித் தடுமாறியிருக்கிறேன். சென்னை சர்வதேச விமானநிலையம் எனக்கு இப்போதும் பெரிய புதிர். உண்மையில் அதிலிருந்து என்னை எவரேனும் அழைத்துக்கொண்டுவந்தால் மட்டுமே வெளியே செல்லமுடியும்

ஜெ

அன்பின் ஜெ எம்.,

எங்கும் குறள் வாசித்தேன்

அண்மையில் எனக்கு நான்காம்தரமான தொலைக்காட்சி நாடக வடிவத்தில் அமைந்திருந்த ’சத்தியத்தைத் தேடி’என்னும் ஒரு குறுந்தகடு அனுப்பப்பட்டது.ஒரு ஆசாரமான பிராமண வைணவக் குடும்பம்-அதிலும் சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்த அந்தக் குடும்பத் தலைவர் எப்படி கிறித்தவ மதத்துக்கு மாறித் தன் குடும்பத்தையும் அந்த வலைக்குள் சிக்க வைக்கிறார் என்பதே அதன் கதைக்கரு.

அந்தக் குறுந்தகடு முழுவதும் திருக்குறள் தொடங்கி உபநிஷதம்,வேதம் எனச் சகட்டு மேனிக்கு எல்லாவற்றிலும் கை வைத்துத் திரித்து மனம் போன போக்கில் வியாக்கியானம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

உங்கள் திருக்குறள் நகைச்சுவை படித்தபோது அதில் திருக்குறள் பற்றி அதில் வரும் ஒருஅபத்தமான நகைச்சுவையைப் பகிரத் தோன்றியது.‘’பொறிவாயில் ஐந்தவித்தான் பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார் நீடு வாழ்வார்’’ என்னும் குறளுக்கு அவர்கள் தரும் விளக்கம் இதுதான்!

பொறி என்பது சிலுவை.அதன் வாயில் அகப்பட்டவர் ஏசு.அங்கே ஐம்புலன்களால் ஆகிய தன் உடலை அவித்தார் அவர்.அவரது நெறி நின்றார் நீடு வாழ்வார்…இவ்வளவுதான் அந்தக் குறள்….

எத்தனை எளிய விளக்கம்…! ஆனால்….எத்தனை கொடுமை இது..?

எம்.ஏ.சுசீலா

அன்புள்ள சுசீலா,

குமரிமாவட்டத்தில் இது சர்வ சாதாரணம். திருவாசகம் கிறித்தவநூல் என்றும் அதன் உரைகள் மூலம் திரிக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு சிறுநூலைப் பேருந்திலே கொடுத்தார்கள். ஜாலியாக இருந்தது வாசிக்க

ஜெ

முந்தைய கட்டுரைஅந்தக்கைகள்
அடுத்த கட்டுரைநடன மகளுக்கு: அர்விந்த் கருணாகரன்