தம்பி [சிறுகதை]

thmp

பெயர் எம். சரவணகுமார். எம் ஏ. ஆங்கில இலக்கியம். ஒரு தனியார்கல்லூரியில் வேலை. கரிய திடமான உடல். கன்னங்கரிய நறுக்கப்பட்ட மீசை. நான் மேஜைமீது முன்னால் சாய்ந்து அவனை உற்றுப்பார்த்தேன். அப்படிப் பார்க்கும்போது நோயாளிக்கு அது ஒரு ஆய்வுப்பார்வை என்று படக்கூடாது. ஆகவே மிகவும்பயின்று உருவாக்கிய ஒரு கனிவும்பரிவும் மிக்க சிரிப்பு என் முகத்தில் பதிக்கப்பட்டிருக்கச் செய்தேன். திடமான தோள்கள், திடமான கண்கள். அப்படிப்பட்ட மனிதர்களுக்கு உளச்சிக்கல் வருவது மிக மிக அபூர்வம், வந்தால் எளிதில் சமாளிக்கவும் முடியாது.

எளிமையாகச் சொல்லப்போனால் பிளவாளுமை [Schizophrenia ] . வழக்கமாக டாக்டர்கள் இதற்கு உடனே மூளையின் மின்ரசாயனச் செயல்பாடுகளைக் குறைக்கும் மாத்திரைகளை எழுதித்தந்துவிடுவார்கள். ஆறுமாதம் அல்லது ஒருவருடம். அதற்குள் நோயாளியின் மொத்த சிந்தனைவேகமே பத்திலொன்றாகக் குறைந்துவிடும். காய்கறிபோல ஆகிவிடுவான். இயல்பான சிந்தனைக்கே மூளைச்சக்தி போதாது என்றநிலையில் உபரியான பிளவாளுமைச்செயல்பாட்டுக்கு எதுவும் எஞ்சாது. முக்கியமாக நோயாளியால் வீட்டில் எவருக்கும் தொல்லை இருக்காது. நம் ஊரில் பேய்பிடித்தாலும்சரி மனம் தவறினாலும் சரி ஆட்டம்போட்டவேண்டும்.ஆட்டத்தை நிறுத்துபவன் வெற்றிபெற்றதாக எண்ணப்படுவான். ஆனால் நான் மாத்திரைகளை நம்புகிறவனல்ல. எனக்கு உளச்சிகிழ்ச்சையில் நம்பிக்கை இருந்தது.

 

” நீங்கள் உங்கள் பிரச்சினையை என்னிடம் தெளிவாகச் சொல்லலாம். நான் இவ்விஷயத்தில் முறையான படிப்பு படித்தவன். இருபதுவருடங்களாக இத்துறையில் இருக்கிறேன். இதுவரை ஆயிரம்பேரையாவது முழுமையாக சரிசெய்திருப்பேன். ஆகவே கண்டிப்பாக உங்களுக்கு என்னால் உதவ முடியும். ஆம், நான் உங்கள் ரட்சகன். இப்போது என்னைத்தவிர வேறு எவரும் உங்களுக்கு உதவ இயலாது. மேலும் நாம் இருவருமே படித்தவர்கள்…” என்றேன் .ஆங்கிலத்திலேயே பேச ஆரம்பித்தமைக்கு இரண்டு காரணங்கள். அவன் ஆங்கிலத்தில்பேசினால் உளறமாட்டான், அம்மொழி நாவுக்கு இன்னமும் சரியாக பழகாதகாரணத்தால் யோசித்து நிதானமாகத்தான் பேசுவான். மேலும் ஆங்கிலம் அறிவுபூர்வமாகப் பேசுவதான உணர்வையும் இந்தியச் சூழலில் அளிக்கிறது.

”ஆமாம் டாக்டர் . உங்களைப் பார்த்ததுமே எனக்கு முழுநம்பிக்கை வந்துவிட்டது” என்றான் சரவணன். ” உங்களிடம் நான் மனம்விட்டுப் பேசமுடியும் ” அவன் தலையை சிலமுறை கைகளால் வாரிக் கொண்டான். அது அவனுடைய பழக்கம்போலும். பொதுவாக சுறுசுறுப்பான லாகவமான அசைவுகள் கொண்ட இளைஞன்.

”ஆமாம். கண்டிப்பாக”

”டாக்டர் உங்களுக்குப் பேய் நம்பிக்கை இருக்கிறதா?”

”நாம் நம்புவது இப்போது பிரச்சினை அல்ல அல்லவா?”

”ஆமாம். சரியாகச் சொன்னீர்கள்.நாம் நம்புவது பிரச்சினையே அல்ல. இப்போது தொண்ணூற்றொன்பது சதவீதம் பேர் பேய்களை நம்புவது இல்லை. ஆனால் பேய்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. நானே பேய்களில் இம்மிகூட நம்பிக்கை இல்லாதவன்தான். ஷேக்ஸ்பியர் நாடகங்களில் ஆவிகள் வரும்போது நான் புன்னகை புரிவேன். மனிதனுக்கு ஆவிகள் தேவை. இல்லாவிட்டால் வாழ்க்கையிலிருந்து கட்டுக்கோப்பான கதைகளை உருவாக்க முடியாது என்று நினைப்பேன்… ”

நான் ஷேக்ஸ்பியர் என்று என் நோட்டில் குறித்துக் கொண்டேன்.

”ஆனால் என்னை ஆவி வந்து பற்றிக் கொண்டது. நன்னம்பிக்கையோ அவநம்பிக்கையோ அதற்கு ஒரு பொருட்டாகவே இல்லை.. ” அவன் முகம் மெல்ல மாற ஆரம்பித்தது…”

” முதலில் இது நடந்தது எப்போது ?”

” ஒன்றரைவருடம் முன்பு. போன டிசம்பர் இருபத்திரண்டாம் தேதி. அன்று நான் ஒரு சினிமா பார்க்கப்போனேன்….”

”என்ன சினிமா?”

அவன் லேசாகப் புன்னகைசெய்தான். ” நீங்கள் நினைப்பதுபோல பேய்சினிமா இல்லை. நல்ல படம். எ பியூட்டி·புல் மைண்ட். ”

”ஆமாம் நல்ல படம்தான்”

”இரவில் என் அறையை நானே திறந்து படுத்துக் கொள்வதுவழக்கம். நண்பர்களுடன் வெளியே சாப்பிடுவேன்”

”மது?”

”இல்லை. எனக்கு அப்படி எந்த பழக்கமும் இல்லை”

”ரொம்ப நல்லது”

”நான் வீட்டை நெருங்கும்போது எங்கள் காம்பவுண்டுக்கு வெளியே ஒரு ஆள் இருட்டில் என்னைக் காத்து நிற்பது போல இருந்தது. யாராக இருக்கும் என்று நினைத்தபடியே அருகே சென்றேன். சற்று கூனலான ஆள். மிக அருகே செல்வதுவரை அது ஆள்மாதிரித்தான் இருந்தது. நெருங்கிப் பார்த்தால் அது நிழல். என் வீட்டுமுன் நின்ற குரோட்டன்ஸ் செடியின் நிழல் சுவரில் விழுந்துகிடந்ததுதான் அது. நிழல் அப்படி துல்லியமான வடிவமாகத் தெரிந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மனதின் படபடப்பு குறைய வெகுநேரமாயிற்று. கதவைத்திறந்து அறைக்குள் நுழைந்து மின்விளக்கைப் போட்டேன். அப்போது வாசலில் நிழலாடியது. அந்த ஆள். அப்போதுதான் மனம் அசைந்துவிட்டது. யார் என்று குழறியபடி எட்டிப்பார்த்தேன். அது நிழல்தான். என் அறை ஒளியில் நிழல் இடம் மாறியிருந்தது. சற்று ஆசுவாசம் கொண்டாலும்கூட மனம் படபடவென்றுதான் இருந்தது.கதவைச் சாத்தினேன். திரும்பினால் என் அறைமூலையில் அதே ஆள்…ஆ என்று அலறிவிட்டேன். வெளியே அப்பா என்ன குமார் என்று கேட்டார். ஒன்றுமில்லை என்று சொன்னேன். அது கொடியில் மாட்டிய என் சட்டையின் நிழல்தான் என்று தெரிந்தது….”

”அந்த ஆளின் உருவத்தை அதற்குமுன் பார்த்திருக்கிறீர்களா?”

”இல்லை.”

‘அன்று நீங்கள் நண்பர்களுடன் இதைப்பற்றி ஏதேனும் பேசினீர்களா ? இதைப்போன்ற விஷயங்கள் ?”

”இல்லை. நான் உறுதியாகச் சொல்ல முடியும். காரணம் நானே இக்கேள்வியைப் பலமுறைகேட்டு யோசித்திருக்கிறேன்”

”சரி சொல்லுங்கள்”

”நான் அன்று தூங்கிக் கொண்டிருந்தபோது விழிப்புவந்தது. நள்ளிரவு தாண்டியிருக்கும். வழக்கமான இரவின் ஒலிகள். ·பேன் சுற்றும் ஒலிகள். மனம் மெல்ல மிதந்து மேலே வருமே அந்த நேரம். என் அருகே ஒருவன் உட்கார்ந்திருப்பதை உணர்ந்தேன். கண்ணுக்குத்தெரிய யாருமில்லை. ஆனால் அந்த உணர்வு தெளிவாக இருந்தது . இப்போது நீங்கள் என்னருகே உட்கார்ந்திருப்பதை என் மனம் உணர்ந்தபடியே இருக்கிறதே அதுபோல. ”

”பயந்தீர்களா?”

”ரொம்பநேரம் எனக்கு அது ஒரு கனவு போலத்தான் இருந்தது. பிறகு பாய்ந்து எழுந்து விளக்கைப் போட்டேன். அறை காலி. உள்ளே பூட்டிய அறை. இருந்தாலும் இண்டு இடுக்கெல்லாம் சோதனை போட்டேன். யாருமே இல்லை. அவ்வுணர்வை விரட்ட எல்லா முயற்சிகளையும் எடுத்தேன். ஆனால் என் மனம் அவன் இருப்பதைத் தெளிவாக உணர்ந்தது. என் மனம் கலங்கிவிட்டது. வெளியே போய்த் திண்ணையில் படுத்தேன். அங்கே அந்த உணர்வு இல்லை. அரைமணிநேரம் அந்த உணர்வு என்ன என்று சிந்தித்தபடி படுத்திருந்தேன். பிறகு மீண்டும் என் அறைக்கு வந்தேன். உள்ளே காலெடுத்து வைத்தபோதே தெரிந்துவிட்டது அவன் உள்ளே இருக்கிறான் என்று. ”

”பிறகு ?”

”அன்றிரவு திண்ணையிலேயே படுத்திருந்தேன். விடிகாலையில் தூங்கிவிட்டேன். காலையில் எழுந்தால் எல்லாம் கனவாகத் தோன்றியது. சிரிப்புக் கூட வந்தது. அறைக்குள் போனேன். அங்கே எந்த உணர்வும் இல்லை. மனம் செய்யும் மாயங்களை எண்ணி ஆச்சரியப்பட்டேன். ஆனால் அன்றிரவு நான் சாப்பிட்டுவிட்டு என் அறைக்குப் போய் அமர்ந்ததுமே அந்த அருகாமை உணர்ச்சியை அடைந்தேன். அவன் என் மிக அருகே இருந்தான். என்னை அவன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். முதல்நாள் அறைக்குள்தான் அவனது இருப்புணர்வு இருந்தது. இப்போது மேலும் துல்லியமாக அவன் இருக்கும் இடம் தெரிந்தது. அதற்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தால் முதுகில் அவனது பார்வை உணர்ச்சியை உணர முடிந்தது.

….இந்தமுறை எனக்கு ஒரு பிடிவாதம் ஏற்பட்டது. அந்த உணர்ச்சியைத் தெளிவாக ஆராய்ந்துவிடவேண்டும் என்ற எண்ணம். பலவிதமாக சோதனை செய்து பார்த்தேன். ஒரு மனிதனின் உடல் அங்கே இல்லை , அவ்வளவுதான். வேறு எல்லா உணர்ச்சிகளும் அப்படியே தான் இருந்தன. நான் அவன் இருந்த இடம் வழியாக நடந்து போனேன். அவனைத் தாண்டும்போது அவன் எனக்கு விலகி இடம் கொடுப்பதை உணர்ந்தேன். எல்லாம் பிரமை எல்லாம் பிரமை என்று நானே என் மனதுக்குள் மந்திரம்போல சொல்லிக் கொள்ள ஆரம்பித்தேன். அதற்கு ஓரளவு பயனும் இருந்தது. அதையே மேலும் உக்கிரமாகச் செய்தேன். கண்களை மூடிக் கொண்டு தியானம் போல அவ்வரியைச் சொன்னேன். அன்று இரவு அவன் அறைக்குள் இல்லை என்ற உணர்வை அடைந்தேன். அப்பாடா என்ற ஆறுதலும் , மீண்டுவிட்டேன் என்று தெரிந்ததுமே எத்தனை அபத்தமான கற்பனை என்ற சிரிப்பும் ஏற்பட்டது…

………இரவில் ஒன்றுமில்லை. மறுநாள்கூட ஒன்றுமில்லை. மூன்றாவது நாள் நான் அவ்வறைக்குள் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். பிடிவாதமாக அந்த அறைக்குள்ளேயே இருந்து பார்த்தேன். அப்படித்தான் அந்த வேண்டாத உணார்ச்சியை ஒழிக்கமுடியும். பேனா எடுத்து புத்தகத்தில் அடையாளம் வைக்க எண்ணிக் கைநீட்டினேன். பேனா தூரத்தில் இருந்தது. அப்படியே விட்டுவிட்டு அவ்வரியை மீண்டும் படித்தேன். பேனாவை எடுக்க எண்ணிப் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு எழப்போனவன் அப்படியே குளிர்ந்து அமர்ந்துவிட்டேன்.பேனா என் கையருகே இருந்தது…. இருங்கள் நீங்கள் சொல்லவருவதைப் புரிந்துகொள்கிறேன். அது பிரமையாக இருக்கலாம்தான். நானே அறியாமல் எடுத்து அருகே வைத்திருக்கலாம். ஆனால் அதே சோதனையை நான் மீண்டும் நடத்தினேன். குறிப்புப்புத்தகத்தை எடுக்கக் கைநீட்டினேன். பிறகு வேண்டுமென்றே கண்களைத் திருப்பினேன். மீண்டும் பார்த்தபோது அது என்னருகே இருந்தது.

……..வியர்த்தபடி வெளியே ஓடினேன். கால்போனபடி சுற்றினேன்.வெகுநேரம் எனக்கு எதுவுமே புரியவில்லை. மெல்லமெல்ல தர்க்கமனம் திரும்பிவந்தபோது எல்லாம் என் கற்பனை என்று தோன்றியது. மாலையில்தான் திரும்பிவந்தேன். அறைக்குள் போகவே பயமாக இருந்தது. திண்ணையிலேயே படுத்துக் கொண்டேன். எங்கள் தெரு அகலமானது. நல்ல காற்றும் வரும். களைத்திருந்ததனால் தூங்கிவிட்டேன். எதிர்வீட்டு நாய் என்னருகே கீழே படுத்திருந்தது. இரவில் என்னருகே யாரோ நிற்பதை உணர்ந்து கண்விழித்தேன். எழுந்து அமர்ந்தேன். அவன்தான். அவன் நிற்கும் உணர்வு. அவன் என்னருகே அமரும் உணர்வு . என் மார்பின் மீது பெரிய எடையை வைத்ததுபோல உணர்ந்தபடி அப்படியே அசையாமல் படுத்திருந்தேன்.

……அப்போது கீழே கிடந்த நாய் கனவுகண்டதுபோல எழுந்தது. அதன் உடல் அப்படியே நடுங்கி வளைந்தது. தலையையும் கண்களையும் தாழ்த்திக் காதுகளை மடித்து வாலைக் காலுக்கு நடுவே அடக்கி முனகியது. என்னருகே வெற்றிடத்தைப் பார்த்து மெல்லிதாக ஊளையிட்டது. அப்படியே அழுதபடி ஓடிவிட்டது . சிறிதுநேரத்தில் மொத்தத் தெருவிலும் நாய்கள் ஊளையிட ஆரம்பித்தன. அதைக்கேட்டுப் பக்கத்துத் தெரு நாய்களும் ஊளையிட்டன. ஊளைச்சத்தம் கேட்டு அப்பாகூட எழுந்து என்னடா என்று கேட்டார். நான் அசையாமல் படுத்திருந்தேன். ஏனோ கண்ணீர் மட்டும் கொட்டிக் கொண்டே இருந்தது.

….. மறுநாள் நான் அப்பாவிடம் சொல்லிக் கொண்டு என் நண்பனின் அறைக்குச் சென்று தங்கினேன். அவனிடம் ஒன்றும் சொல்லவில்லை. அப்பாவிடம் சண்டை என்று அவன் நினைத்திருக்கலாம். மூன்றுநாள் அங்கே சந்தோஷமாக இருந்தேன். சினிமாவுக்குப் போனோம். சினிமாபற்றி அரட்டை அடித்தோம். நான்காம்நாள் நான் காலையில் தூங்கிக் கொண்டிருந்தேன். என் பெயரைச்சொல்லி யாரோ அழைத்தார்கள். ஆனால் குரலை நான் கேட்கவில்லை. கதவைத்திறந்தால் என் மார்பு அடைத்தது. அவன்தான். உருவமில்லாத இருப்பாக நின்று கொண்டிருந்தான். நான் கதவை மூட முயன்றேன். ஆனால் கைகள் செயலற்றிருந்தன. பிறகு மூச்சைத் திரட்டி மூடுவதற்குள் உள்ளே வந்துவிட்டான். உரிமையாளரைப் பிரிந்து மீண்டும் சந்தித்தால் நாய்கள் கூத்தாடுமே அதுபோல என்னைச்சுற்றி அவன் தாவினான். நான் கால்கள் நடுங்க நாற்காலியில் அமர்ந்தேன்.அப்போது முதல் முறையாக அவனது விரல்களை என் கைகளில் உணர்ந்தேன். குளிர்ந்த விரல்கள். குளிர்பதனம் செய்யப்பட்ட மீன்கள் போல வழுவழுப்பான சில்லிட்ட கைவிரல்கள். அவை என் கால்களையும் கைகளையும் மாறி மாறித் தொட்டன. பாமரேனியன் நாய் மூக்கைவைத்துத் தீண்டுவதுபோல. அவனது மூச்சுக்காற்றை என்மீது மிகத்துல்லியமாக உணரமுடிந்தது.

…. நண்பன் எழுந்து என்ன ஆயிற்று என்று கேட்டான். நான் ஒன்றும் சொல்லவில்லை. எல்லாம் பிரமை, எல்லாம் பிரமை, என் மனநிலையில் ஏதோ சிக்கல் , இன்றே நல்ல உளவியலாளரைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டேன். அப்போது நண்பன் கொட்டாவிவிட்டபடி சாதாரணமாகக் கேட்டான். ‘யார் வந்தது ? ‘ என்று. ‘யாருமில்லையே… ஏன் கேட்கிறாய் ?’ என்றேன் பதறிப்போய். அவனுக்கு ஆச்சரியம். நான் ஏதோ மறைக்கிறேன் என்று அவனுக்கு நினைப்பு. ‘ இல்லையே நான் பார்த்தேனே ? என்றான் அவன். ‘என்ன பார்த்தாய்?’ என்றேன். ” நீ கதவைத் திறப்பதும் வெளியே யாரோ நிற்பதும் தெரிந்தது. யார் என்று தெரியவில்லை, ஒரு அசைவு. நான் சரியாகக் கவனிக்கவில்லை. அப்படியே தூங்கிவிட்டேன் ” அதன் பிறகு நான் எதுவும் கேட்கவில்லை.

…. அதன் பிறகு இவன் என்னை விடவேயில்லை. நான் இவனிடமிருந்து தப்பமுடியவில்லை. என்கூடவே மௌனமாக வருவான். என் தலைமயிரைக் கோதுவான். கைகளைத் தொடுவான். பல அனுபவங்கள். ஒருமுறை நான் பிரமைபிடித்து சாலையைக் கடக்கும்போது ஒரு லாரியில் அடிபடப் பார்த்தேன். என் கையைப்பிடித்து இழுத்து சாலையோரம் போட்டான் இவன். அதன்பிறகு மிகுந்த உணர்ச்சிப்பரவசத்தோடு என்னை முத்தமிட ஆரம்பித்தான். அழுகிறான் என்று பட்டது. அவனை என்னால் தவிர்க்கவே முடியவில்லை. அவனை நான் வெறுத்தேன், அருவருத்தேன். அவனை துரத்துவதற்கு நான் சாவது மட்டுமே வழி என்று நினைத்து மேம்பாலத்தின் விளிம்புவரை கூடப் போய்விட்டேன். அவனை என்னால் தாங்கவே முடியவில்லை.. பல டாக்டர்களிடம் போய்விட்டேன். அவர்கள் எனக்கு பிளவாளுமைச் சிக்கல் என்று மருந்து தருகிறார்கள். மாத்திரைகளைச் சாப்பிட்டால் அவனும் நானும் அசையாமல் நாள்கணக்காக சேர்ந்தே உட்காந்திருப்போம் அவ்வளவுதான்.”

”சரவணகுமார், இரண்டு கேள்விகள். ஒன்று ஏன் அதை அவன் என்று சொல்கிறீர்கள்? ”

அவன் தயங்கி பெருமூச்சுவிட்டான். ” அவன் என்னை நெருங்கியபோதே அது எனக்குத் தெரிந்தது. ஆனால் சிலநாட்கள் கழித்துதான் உண்மையில் அதை நானே தெளிவாக உணர்ந்தேன். அது என் அண்ணாதான்….”

” இறந்துவிட்டானா?”

“ஆமாம்.சின்னவயதிலேயே. எனக்கு எட்டுவயது அப்போது. அவனுக்கு பன்னிரண்டு. அவன் ஒரு மூளைவளராத மனிதன்…. மங்கலாய்டு.. ”

‘அவன் மீது பிரியம் வைத்திருந்தீர்களா?”

அவன் முகம் அப்படி விகாரமாகியதைக் கண்டு நானே அதிர்ச்சி அடைந்தேன். ” இல்லை, நான் அவனை வெறுத்தேன். வெறுப்பு என்றால் சாதாரண வெறுப்பல்ல. இரவும் பகலும் அவனைப் பற்றி வெறுப்புடன் நினைத்தபடியே இருப்பேன். என் உடம்பெல்லாம் வெறுப்பில் எரியும்.”

”ஆரோக்கியமானவனா?”

”ஆமாம். அவன் நன்றாக நடப்பான், ஓடுவான். பலசாலி. அவனுக்கு வெறிவந்தால் இரண்டுபேர் சேர்ந்தால்தான் பிடித்து நிறுத்த முடியும். மிக மிகக் குரூபியானவன். மண்டை ஒருபக்கமாக சப்பி ஒரு கண் வெளியே பிதுங்கி இருக்கும். தடித்த உதடுகளில் இருந்து எப்போதும் எச்சில் வழியும். கண்களில் பீளை. வாயில் பெரிய மஞ்சள்நிறப்பற்கள். அதைவிட அவனிடம் ஒரு நாற்றம் உண்டு. மோசமான நாற்றம். அழுகிய புண்போல. செத்தமிருகத்தின் ஊன்போல. ஒரு குமட்டும் நாற்றம்… ”

”பேசுவானா?”

”சில சொற்கள். அம்மா அப்பா மீனு சோறு இந்தமாதிரி . பிறகு அடிக்கடி ஒரு விசித்திரமான முனகலை எழுப்புவான். அதைவிட அசிங்கமான ஒரு சிரிப்பு உண்டு. இப்போதுகூட அந்தச் சிரிப்பை என்னால் கேட்க முடிகிறது. உலகிலேயே அசிங்கமான ஒலி அதுதான்.

”சரவணகுமார் , ஏன் நீங்கள் அவனை வெறுத்தீர்கள் ?

”தெரியவில்லை. அவனை வைத்து என்னைப் பிற சிறுவர்கள் ஏளனம் செய்தார்கள். அது காரணமாக இருக்கலாம். அம்மா அவன் மீது உயிரையே வைத்திருந்தாள். அவன் இறந்த மறுமாதமே அவளும் இறந்தாள். இரவும் பகலும் அம்மா அவன் நினைப்பாகவே இருப்பாள். அதனால்கூட இருக்கலாம் . ஆனால் எத்தனை வெறுத்தாலும் அவனை என்னால் தவிர்க்க முடியாது. அம்மா அவனை நான் விளையாடக் கூட்டிக் கொண்டுபோகவேண்டும் என்று கட்டாயப்படுத்துவாள். அவனும் என்னைவிட்டு நீங்க மாட்டான். அவனிடமிருந்து தப்பிக்க நான் ஓடுவேன். மரத்தில் ஏறுவேன். விடவே மாட்டான்.”

”அவனுக்கு உங்களைப் பிடிக்குமா?”

அவன் தலை தணிந்தது. பெருமூச்சுடன் ” ஆமாம். ரொம்ப ரொம்பப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் அவன் என்னை விடாமல் கூடவே இருக்கிறான். என்னை ‘ம்ம்ம்பி ‘ என்று கூப்பிடுவான். அப்போது முகமெல்லாம் சிரிப்பாக இருக்கும். அவனுக்கு எதுகிடைத்தாலும் எனக்குக் கொடுப்பான். நான் அவன் தொட்டதைத் தின்ன மாட்டேன். ஆனாலும் நேராக என்னிடம் கொண்டுவந்துவிடுவான். நான் அவனைப் போட்டு அடிப்பேன். மண்ணைவாரி வீசுவேன். தள்ளிவிடுவேன். என்ன செய்தாலும் ஒரு சிரிப்பு . ம்ம்ம்பி என்று ஒரு குரல். ” அவன் தன் தலையை அறைந்தான். ” பெரியசித்திரவதை. அவனுக்கு சமயங்களில் வெறி ஏறும். பிடித்துவைத்துக் கொண்டு குமார் ஓடிவா என்று என்னைக் கூப்பிடுவார்கள். நான் போக மாட்டேன். இழுத்துப் போவார்கள். நான் போய் ‘ டேய் செந்தில் நிப்பாட்டுடா ‘ என்றால் அப்படியே சாதாரணமாகிவிடுவான். சிரித்தபடி ‘ ம்ம்ம்பி ‘ என்பான். ”

‘அவனை அப்படி வெறுத்தது பற்றிய குற்ற உணர்ச்சி இருக்கிறதா உங்களுக்கு ?”

”நீங்கள் சொல்லவருவது புரிகிறது. அதனால் எனக்கு இந்தப் பிளவாளுமை உருவாகியிருக்கலாம் என்று. அப்படியல்ல. அவனை நான் தெளிவாக உணர்கிறேன்”

”சரவணகுமார் ஏன் இது பிளவாளுமையாக இருக்கக்கூடாது ?”

”அப்படி இருந்தால் நான் மட்டும்தானே இதை உணரவேண்டும் ? ஆனால் என்னருகே இருக்கும் பிறருக்கும் அவனை உணர முடிகிறது. நான் ஒருநாள் ஒரு ஓட்டலுக்குப் போய்க் குடும்ப அறைக்குள் உட்கார்ந்தேன். சர்வர் இரு தட்டுகளைக் கொண்டு வைத்தான். எனக்குப் புரியவில்லை. தோசை சொன்னேன்.’ இரண்டுபேருக்குமே தோசையா ?’ என்றான். ‘ நான் ஒரு ஆள்தான் ‘ என்றேன். ‘ அப்படியானால் கைகழுவப்போனவர் ? ‘ என்றான். ‘யாருமில்லையே’ என்றேன். ‘நீங்கள் இரண்டுபேராக வருவதுபோல இருந்ததே?’ என்றான். கைகழுவுமிடத்தைப் போய்ப் பார்த்துவிட்டுக் குழப்பமாகப் போனான்… அதைவிட –”

”அதைவிட?”

”– என்னருகே அவனது குரலைப் பிறர் கேட்டிருக்கிறார்கள். நான் அவன் குரலைக் கேட்க ஆரம்பித்து ஒருவருடம் ஆகிறது. உளச்சிக்கல் உள்ளவர்கள் குரல்களைக் கேட்பது சாதாரணம்தான். ம்ம்ம்பி என்று ஓயாமல் கூப்பிடுவான். சிரிப்பான். ஆனால் என்னருகே வந்த என் அப்பா நண்பர்கள் எல்லாம் அக்குரலைக் கேட்டு அரண்டிருக்கிறார்கள்.”

”நீங்களே அப்படிப் பேசியியிருக்கலாம் இல்லையா?”

”என் வாய் அசையவில்லை. நானே அக்குரலைக் கேட்டு நடுங்கிப் போய் இருப்பேன் அப்போது.”

*****

” சிக்கலான விஷ்யம்தான் ” என்றார் டாக்டர் சிவசண்முகம் டேப்பை நிறுத்தியபடி. ‘ஆனால் கண்டிப்பாகப் பிளவாளுமைதான்… நோயாளி அதிபுத்திசாலி. கற்பனை மிக்கவன்.ஆகவே பிரச்சினையும் மிகச்சிக்கலாக உள்ளது ”.

”நீங்கள் உங்கள் விளக்கங்களைச் சொல்லியபடி வாருங்கள் டாக்டர் .என் அணுகுமுறை சரியா என்று பார்க்கிறேன் ”

” மங்கலாய்டுகுழந்தை அது பிறந்த குடும்பங்களில் ஆழமான உளச்சிக்கல்களை உருவாக்குகிறது ” என்றார் சிவசண்முகம். ” குறிப்பாக நம் குடும்பங்கள் உக்கிரமான உணர்ச்சிகளினால் ஆனவை. குழந்தையின் அம்மா மிகநீண்டகாலம் அதை ஒரு கைக்குழந்தைபோலவே பராமரிக்கிறாள். ஆகவே அவளது உளச்சக்திமுழுக்க அதற்காகச் செலவிடப்படுகிறது. காலப்போக்கில் அவள் வேறு எதையுமே அறியாதவளாக ஆகிறாள். குடும்பமே அக்குழந்தையை சுற்றி விருப்பும் வெறுப்புமாகக் கட்டப்படுகிறது. மங்கலாய்டுகள் ஹார்மோன் மாற்றங்களின்போது நரம்புஅதிர்ச்சிகளுக்கு ஆளாகின்றன. ஆகவே அவை அபூர்வமாகவே முப்பது வயதைத் தாண்டுகின்றன. அவற்றின் மரணம் பலவகையான அதிர்ச்சிகளைக் குடும்பத்தில் உருவாக்குகிறது. வெற்றிடம், குற்ற உணர்ச்சி .

……..இங்கே அந்த அம்மா செந்தில் அல்லாமல் வேறு உலகமே இல்லாமல் வாழ்ந்திருக்கிறாள் .ஆகவே சரவணன் கோபமும் வெறுப்பும் கொண்டிருக்கிறான். செந்தில் இறந்தபோது அம்மாவும் சேர்ந்து இறக்கவே சரவணன் அதிர்ச்சி அடைந்திருக்கிறான். குற்ற உணர்ச்சி அவனை வதைத்திருக்கிறது. அடக்கி வைக்கப்பட்ட அவ்வுணர்ச்சி ஒருநாள் நிழலைப் பார்த்து பயந்தபோது வெடித்துவிட்டது. சரவணனின் ஆழ்மனம் இரண்டாகப் பிளந்துவிட்டது. ஒன்று சரவணன் இன்னொன்று செந்தில் . செந்தில் செய்கிற அனைத்தையும் செய்பவன் சரவணன்தான். ஆனால் சரவணன் அதை அறிவது இல்லை. நடப்பதைக் கண்டு அது அஞ்சுகிறது ”

”சரி முதல் விஷயம், நாய்..”

” நாய்கள் மனிதர்களின் உடல்மொழியை மிகமிகக் கூர்ந்து கவனிப்பவை. சரவணனின் உடலசைவுகளைக் கண்டு நாய் குழம்பிப்போய்விட்டது. அவன் வேறுயாரோ என அது எண்ணியிருக்கலாம். அவன் பார்க்கும் இடத்தில் யாருமே இல்லை என்பதைக் கண்டு அது அஞ்சியிருக்கலாம். அவனது நண்பர்கள் ஓட்டல் செர்வர் அனைவருமே இப்படி அவனது உடல்மொழியைக் கண்டு குழம்பியவர்கள்தான். அந்த உடல்மொழி அத்தனை தத்ரூபமாக இருக்கும். காரணம் அது நடிப்பல்ல. மனைதின் இயல்பான வெளிப்பாடு.”

”சரி , குரல்..”

” இங்குதான் இந்த விஷயம் சிக்கலாகிறது. பிளவாளுமைநோயாளி எப்போதுமே புத்திசாலியாகத்தான் இருப்பான். அத்துடன் அவன் அந்த மற்ற ஆளுமையை நம்பவும் பிறருக்கு நம்பவைக்கவும் அவனை அறியாமலேயே விரும்பி உக்கிரமாக முயல்கிறான். அவனது ஆழ்மனம் அப்போது அதற்குச் சாத்தியமான எல்லாத் திறன்களையும் கையாள்கிறது. அக்குரல்கள் கண்டிப்பாக சரவணகுமாரின் தொண்டை உருவாக்குபவை. ஆனால் அவனது உதடுகள் அசைந்திருக்காது. உதடு அசையாமல் பேசும்கலை வென்ட்ரிலோகிசம் என்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சிறுவயதில் எப்போதோ சரவணன் அக்கலைநிகழ்ச்சி ஒன்றைக் கண்டிருக்கலாம். அவன் அதைக் கற்காவிட்டாலும் அவன் ஆழ்மனம் அதை உள்வாங்கியிருக்கலாம். இப்போது அது கைகொடுக்கிறது. தெரியுமா என் நோயாளி ஒருவர் சாதாரணக் கூலித்தொழிலாளி. ஆனால் பிளவாளுமை ஏற்பட்டபோது மற்ற மனம் சரளமாக உயர்தர ஆங்கிலம் பேசியது. அந்த ஆங்கிலத்தை சிறுவயதில் ஏதோ அமெரிக்கப்பாதிரி பேசி அவர் சிலநாள் கேட்டிருக்கிறார்…மனதின் திறன்கள் கடல் போன்றவை… ”

நான் பெருமூச்சுடன் ”ஆம்.” என்றேன். ”என் ஊகங்களும் இதேபோன்றவைதான்”

”அவனுக்குத் தொடர்ச்சியாக உரையாடல்சிகிழ்ச்சை கொடுக்கவேண்டும்…”

”இல்லை. அது ஆளுமைப்பிளவு என்பதை அவனை நம்பவைக்க முடியாது. காரணம் அதற்கு எதிரான எல்லா நியாயங்களும் அவனிடம் இருக்கின்றன. ஆளுமைப்பிளவுபற்றிக் குறைந்தது இரு நூல்களை அவன் படித்திருக்கலாம் . அதை ஆவி என்றே எடுத்துக் கொண்டு சிகிழ்ச்சை செய்வதே நல்லது. ” என்றேன்

***

நான் சரவணகுமாரின் அறையை நெருங்கியபோது நர்ஸ் பீதி அடைந்த முகத்துடன் வெளியே நின்றிருந்தாள்.

” ஏன் இங்க நிக்கிறே ? அவன் கூடவே உள்ள இருக்கணும்னுதானே உங்கிட்ட சொன்னேன்?” என்றேன் கோபத்துடன். சரவணகுமார் அன்றுகாலைதான் சிக்கல் சற்று அதிகமாகி அனுமதிக்கப்பட்டிருந்தான்.

“இல்ல டாக்டர்…” என்றாள் அவள் நடுங்கியபடி

நான் அப்போதுதான் அக்குரலைக் கேட்டேன் . ‘ம்ம்ம்ம்பி…. ம்ம்ம்பி பா …. ஓடி பா …” . ஒருகணம் என் நடுமுதுகே சிலிர்த்துவிட்டது. அக்குரல் முற்றிலும் புதியகுரல். மிக மந்தமான ஒரு மூளையால் எழுப்பப்படும் குரல். கேவல் ஒலிகள்.

“உள்ள யாருமே இல்ல டாக்டர்” என்றாள் நர்ஸ் பீதியுடன்

உள்ளே நுழைந்தேன். குரல் நின்றது. சரவணகுமார் நல்ல ஆழமான தூக்கத்தில் இருந்தான். அருகேபோய் அவனைப் பார்த்தேன். பெருமூச்சுடன் ரிப்போர்ட்டுகளைப் பார்த்தேன்.

திரும்பும்போது அச்சிரிப்பொலி கேட்டது. மந்தபுத்திகள் மட்டுமே எழுப்பக்கூடிய ஒலி. சட்டென்று திரும்பிப் பார்த்தேன். சரவணகுமார் நன்றாகத்தூங்கிக் கொண்டிருந்தான். அவனையே உற்றுப் பார்த்தேன்.

சட்டென்று ” ம்மா… ப்பா…ம்ம்ம்பி…மம்மூ பேணும்..” என்ற மழலைக்குரல் கேட்டது. சரவணகுமாரிடமிருந்துதான். ஆனால் அவனது வாய் அசையவில்லை. உலர்ந்து ஒட்டியிருந்த உதடுகள் பிரியவில்லை. தூக்கமூச்சு தாளம் தவறவுமில்லை. ஆனால் தொண்டை அசைந்தது. வெண்ட்ரிலோகிஸ்டுகள் வித்தை காட்டும்போது குரல்வளை அப்படி அசைவதைக் கண்டிருக்கிறேன்.

நர்ஸிடம் ” நீ இங்கேயே இரு… ” என்றேன். அவள் அழப்போனாள். ” துணைக்கு ராஜனை வரச்சொல்றேன் ” என்றேன்

***

சரவணகுமார் என் கைகளை எட்டிப் பற்றினான். ” டாக்டர் என்னால முடியல்ல…ப்ளீஸ் …என்னை இதிலேர்ந்து மீட்டிருங்க…எந்நேரமும் அவன் என்கூட இருந்திட்டே இருக்கான். தடவுறான், முத்தம் குடுக்கிறான், மூச்சுவிடுறான். ப்ளீஸ் டாக்டர்… என்னால அவனைத் தாங்கவே முடியல்ல..” குரல் கம்மி விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தான்.

அவன் அழுது முடிக்க நான் காத்திருந்தேன். பிறகு ” சரவணன் நான் சொல்றத நீங்க நல்லா கேக்கணும். செந்திலோட பிரச்சினை என்னான்னு…”

‘அப்பன்னா இது ஸ்கிசோ·ப்ரினியா இல்லியா?”

” இல்ல. உங்க கூட இருக்கிறது செந்தில்தான். நான் டாக்டர்களிட்ட பேசியாச்சு. ”

சரவணகுமார் பெருமூச்சுவிட்டான்.

நான் ஆங்கிலத்தில் தொடர்ந்தேன். ” அவனுடைய பிரச்சினை என்னவென்று நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் சரவணன். அவன் உங்களை உயிர்போல நேசித்தவன். அவனைமாதிரிப் பிறவிகள் அன்பைக் காட்டினால் அது முழு அன்பாகத்தான் இருக்கும். சுயலநலமோ பயமோ இருக்காது. அவன் உங்கள் கூடவே இருந்தான். நீங்கள் அவன் மேல அன்பு காட்டவில்லை. …

”அவனை நான் வெறுக்கிறேன். வெறுக்கிறேன். அவனை நினைத்தாலே அருவருப்பில் உடம்பு கூசுகிறது. அவன் என்னைத் தொடுவதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை…”

”பார்த்தீர்களா? திரும்பக் கிடைக்காத பிரியம்தான் செந்திலின் பிரச்சினை. அதற்காகத்தான் அவன் உங்கள்கூடவே இருந்தான்.அடிவாங்கினான். அப்படியெல்லாம் செய்தால் நீங்கள் அன்பாக இருக்கலாம் என்று நினைத்தான். இப்போது அவன் உங்கள்கூடவே இருக்கிறான். உங்களுக்குக் குற்றேவல் செய்கிறான். அவனது தவிப்பை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.”

”நான் என்ன செய்யவேண்டும்”

”நீங்கள் அவனை நேசிக்கவேண்டும். ”

”முடியாது …” என்று சரவணன் வீரிட்டான். வேகத்தில் அப்படியே எழுந்து பிறகு அமர்ந்தான். ” இல்லை அது மட்டும் என்னால் முடியாது கண்டிப்பாக முடியாது. அவனை நான் வெறுக்கிறேன். அருவருப்பான அந்தப் பிறவி… அவனது குமட்டும் நாற்றம்… ” இருமுறை வாந்திபோல உலுக்கிக் கண்கலங்கி ”இல்லை முடியாது” என்றான்

”யோசித்துப் பாருங்கள் சரவணன். அவன் செய்த தப்பு என்ன….”

”வேண்டாம்.அவனை என்னால் நேசிக்க முடியாது.நான் செத்தாலும் சரி”

”நீங்கள் சாகத்தான் வேண்டியிருக்கும்”

”டாக்டர்! ”

”ஆமாம் அது உண்மை. அவன் பொறுமை இழந்தால் உங்களை என்னவேண்டுமானாலும் செய்யலாம். நீங்கள் அவன் கையில் இருக்கிறீர்கள். உங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை”

சரவனகுமார் பயந்துவிட்டான். ”நான் என்ன செய்வது?”

” அவனை நேசியுங்கள்.அவனிடம் அன்பாகப் பேசுங்கள். அவனை அண்ணா என்று கூப்பிடுங்கள். அவன் உங்களைத் தொடும்போது அருவருப்பும் கோபமும் கொள்ளாதீர்கள். முடிந்தால் அவனைத் திருப்பித்தொட முயலுங்கள். நீங்கள் அவன்மீது அன்பாக இருப்பதை அவன் உணரட்டும்…..”

“அப்படியானால் அவன் திரும்பச் செல்வானா?”

“ஆமாம். அவனது ஆசை நிறைவேறும்போது அவன் திரும்பித்தானே ஆகவேண்டும்? அதுதானே இயற்கையின் விதி ?”

“என்னால்முடியாது டாக்டர். நான் அவனை அந்த அளவுக்கு வெறுக்கிறேன்… ஒரு கணம்கூட நான் அவனை மனிதனாக எண்ணியது இல்லை”

“முயலுங்கள்… வேறுவழியே இல்லை….மேலும் இது ஒரு பிராயச்சித்தம்கூட…”

அவன் அதிர்ந்து எழுந்து, “பிராயச்சித்தமா எதற்கு ?” என்றான்

“நீங்கள் அவனைக் கிணற்றில் தள்ளிவிட்டதற்கு…”.

வலிப்புவந்தவன்போல உடல் உதற அவன் நாற்காலியில் விழுந்துவிட்டான்

“நான் எல்லாவற்றையும் தோண்டித் துருவி அறிந்துகொண்டேன். உங்கள் அம்மாவுக்கு இது தெரியும். அவர்களுக்குத் தெரியுமென்பதும் உங்களுக்குத் தெரியும்.”

சரவணன் திடீரென்று பெரும் கதறலுடன் அழ ஆரம்பித்தான். வெகுநேரம் அழுது மெல்ல விசும்பி ஓய்ந்தான்.

“நான் ஏன் அப்படிச் செய்தேன் என்று தெரியவில்லை. அவன் கிணற்றில் எட்டிப்பார்த்தான். ஒரு நிமிஷம் என் சமநிலை போய்விட்டது. காலைத்தூக்கித் தள்ளிவிட்டு ஓடிவந்துவிட்டேன்.” ஆழமான அமைதியுடன் சரவணன் சொன்னான். ”அவனது பிணம் வீட்டுக்கு வந்தபோது நான் சுவரோடு சாய்ந்து நின்று நடுங்கினேன். என்னால் அழவே முடியவில்லை. பலரும் என்னை சமாதானம் செய்தார்கள். மாமா ஒருவர் எனக்கு விஸ்கி தந்து தூங்க வைத்தார். அம்மா அதன் பிறகு படுக்கைவிட்டு எழவோ பேசவோ இல்லை. பலநாள் தயங்கிய பிறகு ஒரு நாள் அவள் அருகே போனேன். என்னை அவள் பார்த்ததுமே தெரிந்துவிட்டது அவளுக்கு எல்லாம் தெரியும் என்று….”

“நீங்கள் செந்திலை நேசியுங்கள். உங்கள் அம்மாவுக்கும் அது பிடிக்கும்”

“ஆம் “என்றான் சரவணன் பெருமூச்சுடன்

**

அடுத்த ஒருவாரம் நான் சரவணன் கூட இருந்தேன். அவன் அடைந்த உக்கிரமான வதையை உடனிருந்து கவனித்தேன். அவனால் செந்திலை நேசிப்பதற்கு முடியவில்லை. ‘மலம் தின்னப் பழகிக் கொள்வதுபோல இருக்கிறது’ என்று அவன் சொன்னபோது நானே அயர்ந்துபோனேன். ஆனால் மனித மனத்தை எதற்கும் பழகச்செய்யமுடியும். மெல்ல மெல்ல சரவணன் செந்திலை நெருங்க ஆரம்பித்தான்.

தனிமையில் இருக்கையில் ‘ அண்ணா நீ என் செல்லம், என் தங்கம்’ என்று மீண்டும் மீண்டும் கொஞ்சச் சொன்னேன். செயற்கையாகக் கொஞ்சினால்கூட மெல்லமெல்ல மனம் அதை பற்றிக்கொள்ள ஆரம்பித்துவிடும். ஆனால் முன்னகர்வது மிகவும் சிரமமானதாகவே இருந்தது. இரண்டுநாள் அதைச் செய்யும் சரவணன் மூன்றாம்நாள் என்னால் முடியவில்லை என்று கதறுவான். மீண்டும் அதைச் செய்யச் சொல்வேன்.

செந்தில் சரவணனில் இருக்கும்போது நான் அவனருகே அமர்ந்து பேசுவேன். ‘ செந்தில் சரவணனுக்கு உன் மேல் பிரியம். உன்னை அவன் செல்லமே என்கிறான். நீ நல்ல குழந்தை . சரவணனுக்கு உன்னை பிடித்திருக்கிறது. சரவணன் உனக்கு முத்தம் கொடுப்பான். ‘ அந்த மழலைக்குரலையும் குழறல்சிரிப்பையும் கேட்கையில் எனக்கே என் சொற்களை நான் செந்திலிடம்தான் சொல்கிறேன் என்று படும்.

மெல்லமெல்ல மாறுதல்கள் தென்பட ஆரம்பித்தன. சரவணனின் முகத்தில் தெளிவு ஏற்பட்டது. செந்தில்கூடவேதான் இருக்கிறான்.ஆனால் அவனை அந்த அளவுக்கு வெறுக்காததனால் அது இப்போது தாங்கவே முடியாத நரகமாக இல்லை என்று சரவணன் சொன்னான். அவனது நாற்றம் மட்டும்தான் சிறிய அருவருப்பை அளிக்கிறது. ஆனால் அதுவும் முன்போல இல்லை.

பழகுங்கள். செந்தில் மெல்ல உங்கள் மீது சலிப்பு கொள்வான். உங்கள்பிரியம் உறுதியான பிறகு அவனுக்கு வேறு விஷயங்களில் ஆர்வம் திரும்பிவிடும் என்றேன். ‘அண்ணா அண்ணா ‘ என்று மீண்டும் மீண்டும் அவனை கூப்பிடச்சொல்லி அதற்குப் பயிற்சியளித்தேன். இரவில் தனிமையில் சரவணன் மீண்டும் மீண்டும் அப்படி அழைப்பதை நான் ரகசியமாகப் போய்ப்பார்த்துவந்தேன்.

**

எட்டுவாரங்களில் ஏற்பட்ட மாறுதல் எனக்கே ஆச்சரியமளித்தது. டாக்டர் சிவசண்முகம் அது ஒரு சாதனை என்றார். சரவணனின் முகமும் உடலும் நன்றாகப் பொலிவுகொண்டன. தீராத தயக்கமும் துக்கமும் போயிற்று. செந்தில் தன்னுடன் இல்லை என்பதை நன்றாக உணர முடிகிறது என்றான். அவன் இல்லையா என்பதை உறுதிசெய்துகொள்ள மீண்டும் மீண்டும் முயன்றதாகவும் அவனை உணரமுடியவில்லை என்றும் சொன்னான். ஒருநாள் இரவில் தனியாக வெளியே போய் வந்தான். இருட்டிலும் தனிமையிலும் செந்தில் கூடவே இருக்கும் உணர்வு வருகிறதா என்று பார்த்ததாகவும் இல்லை என்றும் சொன்னான்.

அவனை டிஸ்சார்ஜ் செய்வதைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். ஆறுமாதம் அவன் தொடர்ந்து அவதானிப்பில் இருக்கவேண்டும். மாத்திரைகளை சாப்பிடவேண்டும். அவனிடம் அதுபற்றி பேசிக் கொண்டிருக்கும்போது செந்திலை அவனால் அப்போது நேசிக்கமுடிகிறதா என்றேன்.

ஆழமான அமைதிக்குப் பிறகு சரவணன் ” சொல்ல முடியவில்லை டாக்டர். எனக்கு இப்போது அவன்மீது கோபமோ அருவருப்போ வருத்தமோ இல்லை. அவனை நினைக்கும்போது அப்பாடா இனிமேல் ஒன்றுமில்லை , போய்விட்டான் என்றுதான் தோன்றுகிறது அவ்வளவுதான். அன்பு… அன்பு இல்லை என்றுதான் நினைக்கிறேன். என்னால் முடியவில்லை ” என்றான். பிறகு ” ஒரு மங்கலாய்டு நமக்கு மகனாகப் பிறக்கலாம். நம் அப்பாவாக இருக்கலாம். நம் சகோதரனாக இருக்கக் கூடாது….” என்றான்

” ஏன் ?”

” எப்படி அதைச் சொல்லுவேன்… அவன் குரூபி. என்னையும் அவனையும் ஒப்பிடவே முடியாது. ஆனால் எனக்கு உள்ளூரத்தெரியும் அவனும் நானும் ஒன்று என்று”

” புரியவில்லை ”

” நான் ஒரு படம் என்று வைத்துக் கொள்வோம். அதே படத்தை நன்றாகக் கசக்கி விரித்தது போலத்தான் அவன். அவனது குரூபத்தோற்றத்துக்கு உள்ளே என்னுடைய முகமும் உடலும் ஒளிந்திருந்தது. அவன் பேசும்போது நடக்கும்போதும் என்னை ஏளனம் செய்வதுபோல இருந்தது. என்னை அவமதிப்பதுபோல. இருங்கள், அவமதிப்பது அவனல்ல, வேறு யாரோ. அல்லது எதுவோ. கடவுள் அல்லது இயற்கை….”

நான் மெல்ல ” ஆம் , அத்துடன் அவனது களங்கமற்ற பிரியம். அதுவும் உங்களை அவமதிப்பதுபோலத்தான் ” என்றேன்.

அவன் சற்று அயர்ந்துவிட்டான். மெல்ல சமனமடைந்து ” உண்மை. அவனது இயல்பு என்னை மோசமான தந்திரக்காரனாகவும் குரூரமானவனாகவும் எனக்குக் காட்டியது ” என்றான். பெருமூச்சுவிட்டபடி ” டாக்டர் நேற்றுமுழுக்க இதைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஏன் இப்படிப்பட்ட பிறவிகள் பிறந்து நம் மீது இப்படி கனக்கவேண்டும்? இதற்கெல்லாம் என்ன பொருள் ?”

“மனித வாழ்க்கைக்கே என்ன பொருள் ?” என்றேன்

சிரித்தபடி ‘சரிதான்’ என்றான்.

**

அன்றிரவு நர்ஸ் என்னை ·போனில் கூப்பிட்டாள். பாதி அலறலாக ” டாக்டர்……சரவணன் …. சீக்கிரம் ஓடி வாங்க” என்றாள்.

நான் சரவணன் அறையை அடைந்தபோது உள்ளே உக்கிரமாக உறுமிக் குழறும் செந்திலின் குரல் கேட்டது. அத்தனை கோபமாக அக்குரலை நான் கேட்டதேயில்லை. ” நீ க்க்கெட்ட ம்ம்ம்பீ … நீ க்க்க்கெட்ட ம்ம்ம்ம்பீ ” என்று அது வீரிட்டது.

அறைக்குள் சரவணன் பற்களைக் கிட்டித்தபடி நெளிந்துகொண்டிருந்தான்.கைகால்கள் வலிப்புபோல முறுகிநின்றன

நான் அவனைத் தட்டி உசுப்பினேன். ”சரவணன் சரவணன் இங்க பாருங்க சரவணன்”

அவன் அறுபட்டு விழுவது போல விழித்தெழுந்தான். என்னை சிவந்த கண்களால் உற்றுப் பார்த்தான். சட்டென்று என் கைகளைத் தாவிப்பற்றி “டாக்டர்… டாக்டர் என்னை காப்பாத்துங்க…செந்தில் ..’ என்றான்

”என்ன ஆச்சு? ”

”செந்தில் செந்தில் என்னை…”

”அண்ணாண்ணு சொல்லுங்க… அன்பா பேசுங்க…”

சட்டென்று சரவணனின் முகத்தில் வந்த உக்கிரமான வெறுப்பை நான் என்றுமே மறக்கமாட்டேன். ”அன்பாவா? அவன்கிட்டயா? ” எஅன அவன் ஆவேசமாக எழுந்தான் ” நான் அவன வெறுக்கிறேன். இனிமே என்னால நடிக்க முடியாது அவன நான் வெறுக்கிறேன். அவனை நெனைச்சாலே அருவருப்பா இருக்கு… வெறுக்கிறேன் வெறுக்கிறேன்….. ”

விலுக்கென்று உடம்பு உதற பின்னால் சரிந்து விழுந்து உடலை ஒருமுறை உலுக்கி அப்படியே தளர்ந்தான்.

”சிஸ்டர் ஆக்ஸிஜன் …சீக்கிரம்” என்றேன்

சரவணன் வாயோரம் சிறிதளவு ரத்தம் . கண்கள் வெறித்திருந்தன. ஸ்டெதஸ்கோப்பை மார்பில் வைத்தேன். இறந்திருந்தான்.

நம்ப முடியாமல் மீண்டும் நாடியையும் இதயத்தையும் பார்த்தேன். ஆம் , மார்பு நின்று விட்டது. உளநோயாளிகளில் அபூர்வமாகச் சிலர் உச்சகட்ட மன உக்கிரத்தில் இதயம் நின்று இறக்கக்கூடும்.

பெருமூச்சுடன் அவன் கண்களை மூடிவிட்டு எழுந்தேன். ” சிஸ்டர், அவன் அப்பாவுக்குச் சொல்லிடு. ஆறுமுகத்தை வரச்சொல்லு’ என்று நர்ஸிடம் சொன்னேன். அவள் பீதியுடன் தலையாட்டிவிட்டு வெளியேறினாள். நான் அறையின் கழுவுதொட்டியில் கைகளைக் கழுவிவிட்டு முகம் துடைக்கும்போது என் உடலைக் குலுங்கி உதறச்செய்தபடி எழுந்த செந்திலின் மந்தச் சிரிப்பொலியை ஒருகணம் கேட்டேன்.

[கிழக்கு வெளியிடான பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் நூலில் இருந்து]

முந்தைய கட்டுரைராஜா-ஒருகடிதம்
அடுத்த கட்டுரைஒழிமுறி-டிவிடி