உருவரு

அன்புக்குரிய எழுத்தாளருக்கு,

வணக்கம் அண்ணா.கருத்து முரண்பாடுகள் சில இருந்தபோதும் உங்களை துபாயில் சந்தித்து உரையாடியது மிகுந்த மனநிறைவளிப்பதாக உள்ளது.இன்னும் பலமணிநேரங்கள்,பலநாள்கள் உரையாடவேண்டிய அளவிற்கு விடயங்கள் இருப்பினும் கிடைத்தவரைத் திருப்தியே.

செமிட்டிக் மதங்களுக்கும் இந்துமதத்திற்கும் இடையிலான முக்கிய முரண்பாடுகளில் ஒன்றாக பொதுவெளியில் வைக்கப்படும் கருத்து உருவ வழிபாடு பற்றியது.ஆயினும் செமிட்டிக் மதங்களின் மூலநூல்களில் நான் வாசித்தவரை இறைவனுக்கு உருவத்தை கூறுகின்ற வசனங்கள் காணப்படுகின்றன.அம்மதங்களின் கருத்தை சுருக்கமாக கூறுவதானால் இறைவன் தனது அரசில்(பௌதிகமாக) இருக்கிறார்.அவருக்குப்பதிலாக விக்கிரகங்களை வழிபடுவது குற்றமாகும்.

மறுபுறமாக இந்து மதத்தை பொறுத்தவரையில் இறைவன் உருவமற்றவன்.பிரபஞ்ச சக்தி. பிரபஞ்ச மர்மம்.ஆனால் அவனை விக்கிரகவடிவில் வழிபட முடியும். மாணிக்கவாசகர் சொல்வது போல் “ஒரு நாமம் ஒர் உருவம் ஒன்றுமில்லார்காயிரம் திருநாமம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ” என்பதுபோல் முற்றிலும் அருவமான இறைவனை பேசுகின்றது.

நான் உங்களிடம் கேட்பது இந்த முரண்பாடு பொதுவெளியில் எவ்வளவு தூரம் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது?இது பற்றிய உங்கள் மேலதிக விளக்கங்கள் என்ன?

ந.சிவேந்திரன்

ஞாபகப்படுத்தலுக்கான பின் குறிப்பு:நான் இலங்கைத் தீவுத் தமிழன்.

அன்புள்ள சிவேந்திரன்,

மிக நன்றாக நினைவிருக்கிறது. உங்களுடைய கோபமும் வேகமும்.

நீங்கள் கேட்டது சமீபத்தில் நான் எதிர்கொண்ட அற்புதமான கேள்விகளில் ஒன்று. மிக நுட்பமானது. நன்றி.

இப்படி ஒரு வினா இந்தியச்சூழலில் இருந்து சாதாரணமாக வருவதில்லை. அதற்கான காரணங்களில் முக்கியமாக எனக்குப்படுவது ஒன்றுதான். இங்கே இந்துக்களிடம் மதக்கல்வி என்பது அறவே இல்லை. மரபான ஞானமென எதுவுமே இங்கே இளமையிலிருந்து போதிக்கப்படுவதில்லை.

முற்காலத்தில் குடும்பத்திலேயே எவராவது மூத்தவர்கள் மதம்சார்ந்த சில அடிப்படைகளை குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதுண்டு. கதைகள், பாடல்கள், சடங்காசாரங்கள் போன்றவற்றை. சென்ற கால்நூற்றாண்டில் அந்த வழக்கம் முழுமையாக அழிந்துவிட்டது.

மதம் சார்ந்த கல்வியை அளிப்பதற்கான பொதுவான ஊடகங்களாக விளங்கியவை கோயில்கலைகள் மற்றும் நாட்டார் கலைகள். அவையும் முழுமையாகவே அழிந்துவிட்டன.

இச்சூழலில் இங்கே பிள்ளைகளுக்கு அவர்கள் மரபுசார் ஞானமாக கிடைப்பது எதுவுமே இல்லை. அவர்களுக்குக் கிடைக்கும் கல்வி இரண்டுதான். ஒன்று பள்ளியின் கொடுக்கப்படும் தொழில்நுட்பப் பயிற்சி. இரண்டு, ஊடகங்கள் வழியாக வரும் கேளிக்கைப்பயிற்சி.

சராசரி இந்துவைப்பொறுத்தவரை இந்துமதத்தின் அடிப்படையான விஷயங்களில் அறிமுகம் உடையவர்கள் மிகமிகக் குறைவு. ராமாயணம் அல்லது மகாபாரத கதையை ஒரு பதினைந்து நிமிடம் சொல்லக்கூடிய இளைஞர்கள் மிக அபூர்வம். இந்நிலையில் மத தத்துவங்களைப்பற்றி கேட்கவே வேண்டாம்

ஆனால் மதம் இல்லாமலும் ஆகவில்லை. மதத்தை சோதிடமும் ஆசாரங்களும் தாங்கி நிற்கின்றன. சராசரி இந்துவின் மதநம்பிக்கை என்பது பிரச்சினைகள் என வரும்போது சோதிடர்களின் பேச்சைக்கேட்டு கோயில்களுக்குச் செல்வது மட்டுமே.

இதற்கு எதிர்வினையாக ஒரு அசட்டுப்பகுத்தறிவுவாதம். பகுத்தறிவு என்பது அடிப்படையில் ஓர் அறிவு என்பதே இவர்களுக்குத் தெரிவதில்லை. எதையும் அறிய ஆர்வமும் முயற்சியும் இல்லாமல் எல்லாவற்றைப்பற்றியும் முரட்டு அபிப்பிராயங்களை மட்டுமே சொல்வதே இங்கே பகுத்தறிவென எண்ணப்படுகிறது.

இலங்கையைச் சேர்ந்த கணிசமான இளைஞர்களிடம் மதம் மற்றும் மரபு சார்ந்த ஓர் அடிப்படைப்புரிதல் இருப்பதை கவனித்திருக்கிறேன். அதற்குக் காரணம் அங்குள்ள கல்விமுறையில் மதக்கல்வி உட்படுத்தப்பட்டிருப்பதே. குறிப்பாக சைவ சித்தாந்தம் கற்பிக்கப்படுவதனால் மதத்தின் தத்துவார்த்தமான சாரத்தை தொடுவதற்கான பயிற்சியும் மனநிலையும் அவர்களுக்கு வாய்த்துவிடுகிறது.

உங்கள் வினாவிலேயே தெளிவாக விடையும் உள்ளது. செமிட்டிக் மதங்கள் இறைவனின் உருவத்தை திட்டவட்டமாக வகுத்துவிட்டிருக்கின்றன. ‘கடவுள் தன்னுடைய உருவில் மனிதனைப்படைத்தார்’ என்ற வரையறையே இதுவரை கடவுளின் உருவம் பற்றி எந்த மதமும் அளித்த விளக்கங்களில் மிகமிக திட்டவட்டமானது.

இஸ்லாமிய, கிறித்தவ மதங்களின் கடவுள் என்பவர் ஓர் ஆளுமை [Personality]. அவர் எப்போதும் ஆண்பாலாகவே குறிப்பிடப்படுகிறார். யூதர்களுக்கு கடவுள் என்பவர் ஒரு முழுமுதல் தந்தை. எல்லாவற்றையும் படைத்து காத்து நிர்வகிப்பவர். கோபம் கொண்ட கண்டிப்பான அதிகாரி.அந்த உருவகத்தின் நீட்சியும் வளர்ச்சியுமே மற்ற செமிட்டிக் மதங்களில் உள்ளது

இம்மதங்களில் கடவுள் உணர்ச்சிகள் கொண்டவராக காட்டப்படுகிறார். செயலாற்றுபவராகவும் எதிர்வினையாற்றுபவராகவும் சித்தரிக்கப்படுகிறார். கடவுளை நேரில் காண்பதும் அவர் குரலைக் கேட்பதும் எல்லாம் சாத்தியமானதாக இருக்கிறது. இவையெல்லாம் உருவகங்களாகச் சொல்லப்படவில்லை, நேரடியாக வரையறுத்துச் சொல்லப்படுகின்றன.அம்மதத்தைச் சேர்ந்தவர்கள் அவற்றை அப்படியே நம்பவும் செய்கிறார்கள்.

அப்படியென்றால் அவர்கள் ஏன் உருவ வழிபாட்டை நிராகரிக்கிறார்கள்? அவர்களின் மதங்களின் சாரமாக உள்ளது அவர்களின் மதநிறுவனர் முன்வைக்கும் இறையுருவகம். அதுவே உண்மை பிறிதெல்லாம் பொய் என்ற இறுக்கமே அவர்களின் நம்பிக்கையின் ஆதாரம். ஆகவே இப்பூமியில் விதவிதமாக இறையனுபவத்தை அடைந்து, அதை பற்பல வடிவிலும் பற்பல கோணங்களிலும் உருவகம் செய்துள்ள அனைத்தையும் அவர்கள் நிராகரிக்கவேண்டியிருக்கிறது.

அந்த நிராகரிப்புக்காகவே அவர்கள் உருவவழிபாட்டை நிராகரிக்கிறார்கள். தங்களுடைய உருவகத்தைத் தவிர உள்ள பிற உருவகங்களை எல்லாம் நிராகரிக்கும் அணுகுமுறைதான் அது.

இதை மிக எளிதில் புரிந்துகொள்ள சில கேள்விகளைக் கேட்டால் போதும். இவர்கள் உருவவழிபாட்டை நிராகரிக்கிறார்கள் என்றால் முற்றிலும் உருவ வழிபாட்டை ஏற்காத ஒரு அத்வைதியை அல்லது தேரவாத பௌத்தரை இவர்கள் ஏற்பார்களா? மாட்டார்கள். அத்வைதிக்கும் தேரவாதிக்கும் இந்த மதத்தவர் கூறும் இறையுருவகமே ஏற்புடையதல்ல. இறையாற்றலுக்கு இவர்கள் அளிக்கும் வரையறைகளை அறியாமை என்றே அவர்கள் நினைப்பார்கள். ஆகவே இந்த மதத்தவர்களால் அவர்கள் மதநிந்தனையாளர்களாக கருதப்பட்டு கழுவில் ஏற்றப்படுவார்கள். ஆக பிரச்சினை என்பது உருவவழிபாடல்ல. இவர்கள் சொல்லும் அந்தக் குறிப்பிட்ட உருவத்தையும் உருவகத்தையும் மற்றவர் ஏற்றுக்கொள்வது மட்டுமே

இந்திய மதங்களின் சாராம்சமாக இருக்கும் கடவுள் உருவகம் முற்றிலும் அருவமானது. வேதங்கள் முன்வைக்கும் பிரம்மம் என்பது எந்தவகையிலும் விளக்கவோ, காட்டவோ, வரையறுக்கவோ முடியாதது. பிரம்மத்தின் குணங்கள் என்று சொல்லப்படுவன எல்லாமே இந்த கடந்த தன்மையைச் சுட்டிக்காட்டும் எதிர்மறைப்பண்புகள்தான். சொல்லமுடியாதது, காணமுடியாதது, விளக்கமுடியாதது என்றே கூறப்பட்டுள்ளது.

பிரம்மம் ‘அது’ என்றே குறிப்பிடப்படுகிறது. ஆண்பாலாகவோ பெண்பாலாகவோ அல்ல. அதற்கு மானுடம் சார்ந்த எந்தப்பண்பும் ஏற்றப்படவில்லை. அது ஓர் ஆளுமை அல்ல [Personality] அது ஓர் இருப்போ [entity] இருத்தலோ [ existence] அல்ல. அது ஓர் நுண்ணுணர்வாக நம்மை அடையும் ஒரு பிரம்மாண்டம் மட்டுமே.

வேதங்கள் அடைந்த பிரம்மம் என்ற தரிசனத்தை உபநிடதங்கள் தர்க்கமொழியிலும் கவித்துவமொழியிலும் சொல்லமுயல்கின்றன. அவை எந்த வகையான உருவத்தையும் அடையாளத்தையும் அளிக்காமல் அதை விவரிக்க முயல்கின்றன. பிரம்மம் என நாமறிவது ஒரு நுண்ணிய தன்னுணர்வு. [ பிரக்ஞானம் பிரம்மம்] பிரம்மாண்டமான சூழல் உணர்வு [ஈஸோவாஸ்யம் இதம் சர்வம்] எல்லையற்ற பிரபஞ்ச உணர்வு [அஹம் பிரம்மாஸ்மி]

இந்த அதுநுண்ணிய இறையுருவகத்தை நாம் பௌத்த மரபிலும் காணலாம். அவர்களின் கடவுள் இந்த பிரபஞ்ச முடிவிலியின் அடிப்படையான நெறியே. அதை அவர்கள் மகாதர்மம் என்கிறார்கள்.

இவ்வாறு முற்றிலும் அருவமாக இறைவனை உணர்ந்த அதே மெய்ஞானம்தான் எல்லா உருவத்திலும் இறைவனைக் காணலாம் என வகுத்தது. உருவங்களெல்லாமே உருவமற்ற அதன் உருவங்களே. பெயர்களெல்லாமே பெயரற்ற அதன் பெயர்களே.

இந்து மெய்ஞானத்தை உருவ வழிபாடு என்று சொல்வதைப்போல அறியாமை ஏதும் இல்லை. உருவ வழிபாடு என்பது ஒரு சில உருவங்களை அல்லது அடையாளங்களை மட்டும் புனிதமானதாக அல்லது கடவுள் வடிவமாக வழிபடுவதாகும். இந்து மெய்ஞானம் எல்லா உருவங்களையும் எல்லா அடையாளங்களையும் இறைவடிவமாக எண்ணுகிறது. எதை வழிபட்டாலும் இறைவழிபாடே என எண்ணுகிறது. இது உருவ வழிபாடு அல்ல, முழுமை வழிபாடு. வேண்டுமென்றால் பிரபஞ்ச வழிபாடு எனலாம்

இந்த முரணியக்கம் பற்றி நான் முன்னரே எழுதியிருக்கிறேன். எந்த ஒரு இந்து தோத்திரத்தை எடுத்துக்கொண்டாலும் ஒருவரி அருவமான முடிவிலியாக, அறியவே முடியாத கடந்தநிலையாக இறையை உருவகம் செய்யும். அடுத்த வரி உருவமாக, அறியக்கூடியதாக உருவகம் செய்யும். அப்படிப்பட்ட அதை நான் இப்படி வணங்குகிறேன் என்பதே அதன் பொருள்.

அதாவது இந்து மெய்ஞான மரபு இறைக்கு அளிக்கும் அடையாளங்கள் இறையின் எல்லைகளில் இருந்து உருவாகவில்லை,நம் அறிதலின் எல்லைகளில் இருந்து உருவாகின்றன. மானும் மழுவும் அரவும் சடையும் நீறும் புலித்தோலும் அல்ல சிவம் என எந்த சைவ சித்தாந்திக்கும் தெரியும். அவன் ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரிய’ ஒன்றாகவே அதை அறிவான். அலகிலா ஆற்றலின் லீலைவடிவமாகிய இப்புடவியின் சாரமாக நிகழும் நித்தியமான ஒரு நடனம் அது என்று அவன் சொல்வான்

ஆனால் தன் வீட்டு பூசையறையில் தன் ஊர் நடுவே கற்கோயில் கருவறையில் அது தன் கண்ணையும் கருத்தையும் நிறைத்து ஆட்கொள்ளும் பொன்னார்மேனியுடன் இடதுபாதம் தூக்கி ஆடவேண்டும் என அவன் நினைக்கிறான். அருவத்தைக்கூட உருவம் வழியாகவே எண்ணவும் தியானிக்கவும் கூடியது மனிதப்பிரக்ஞை என்பதனால்தான் அது தேவையாகிறது.

ஆம், அந்த உருவம் அவனுடைய கண்ணாலும் கருத்தாலும் உருவாக்கப்பட்டதுதான். ஆனால் அப்படி உருவாக்கும் பிரக்ஞையும் அதுவே என்பதனால் அவனைப்பொறுத்தவரை அந்த உருவமும் அருவத்தின் ஆடல்தான்.

May 28, 2012 முதற்பிரசுரம்

 

 

முந்தைய கட்டுரைகள்

இந்துமதம் நாத்திகம் ஆத்திகம்


மதங்களின் தொகுப்புத்தன்மை

கடவுள்நம்பிக்கை உண்டா?

 

உருவம்

 

உலகெலாம்

 

மலரில் இருந்து மணத்துக்கு

 

ஒக்கலை ஏறிய உலகளந்தோன்

இருபுரிசாலை

 

முந்தைய கட்டுரைஞானியாரடிகள்
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி: மலேசியக் கலைக்களஞ்சியம் அறிமுக விழா