விவாதங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? -கடிதம்

உங்களைப்பற்றிய விமரிசனங்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? அவை உங்களை பாதிக்கின்றனவா? அவற்றை வாசித்துப் பார்ப்பீர்களா? அல்லது just ignore செய்வீர்கள

allwantspace

அன்புள்ள நண்பருக்கு,

நான் எப்போதுமே இத்தகைய விமரிசனங்களையும் விவாதங்களையும் சற்றும்பொருட்படுத்தியதில்லை. பொருட்படுத்தியிருந்தால் இத்தனை எழுதியிருக்க முடியாது. ஒரு காலத்தில் வாசித்திருந்தேன், பதினைந்துவருடம் முன்பு. இவற்றில் பெரும்பகுதி நல்லெண்ணம் அற்ற மனக்கசப்புகள். அவர்களில் கணிசமானவர்கள் ஓர் எழுத்தாளனாக என்னை அறிந்திருக்கவே மாட்டார்கள் என்று கண்டேன். அன்றுமுதல் நான் இவற்றை வாசிப்பதேயில்லை. நான் பொருட்படுத்தலாமென என் நம்பிக்கைக்குரிய வாசகர்கள் சொன்னால் மட்டுமே அவற்றை வாசிக்கிறேன்- அவை மிகமிக அபூர்வம். நான் மட்டுமல்ல பொதுவாகவே தீவிரமாக எழுதும் எழுத்தாளர்கள் அனைவருமே செய்வது இதுதான்.இல்லையேல் எந்த வேலையும் செய்ய முடியாது.

இங்கே எனக்கு வாசிக்க நூல்கள் வந்து குவிகின்றன. அவற்றை நேரம் உருவாக்கி வாசித்துக் கொண்டிருக்கிறேன். தினம் ஒரு நூல். அவற்றைப்பற்றி எழுதுகிறேன். என் இணைய தளத்திலேயே காணலாம். ஆதிமூலம் பற்றிய அஞ்சலிநூல் மூன்றுதினம் முன் வெளியிடப்பட்டது. திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் நூல் வெளிவந்து சிலதினங்களே ஆகின்றன. வாசகர்களின் தொடர்ந்த உரையாடல் எப்போதும் உள்ளது. பொதுவான வாசகர்முன் வைக்கலாமென்று படுவதை பிரசுரிக்கிறோம்.

என் கவனத்தை இந்தச் சில்லறை விவாதங்கள் சிறு அளவுக்குமேல் எடுத்துக்கொள்ள நான் அனுமதிப்பதில்லை. என் உலகம் வெளியே உள்ளதைவிட பெரியது,ஆழமானது. இந்த விவாதங்களை எழுதுபவர்கள் யார்? அவர்களுக்கு என்ன முகம் உள்ளது? என்ன எழுதியிருக்கிறார்கள்? என்ன படித்திருக்கிறார்கள்?தங்க¨ளையே வெட்கி கூசிச்சுருங்கும் சிற்றுயிர்கள்.

யார் ஏற்றாலும் இல்லையாயினும் நான் தமிழ் வரலாற்றில் என்றும் இடம்பெறும் ஆளுமை. என்னுடன் உரையாடவும் என்னைப்பற்றி பொருட்படுத்தும்படி எதையாவது எழுதவும்கூட ஒருவருக்கு அதற்கான தகுதி வேண்டும்.

முந்தைய கட்டுரைவிகடனை எண்ணும்போது…
அடுத்த கட்டுரைகீதை இடைச்செருகலா? மூலநூலா?- கடிதம்