புல்வெளிதேசம் 6,கன்பெரா

 
இந்தியாவின் மிகப்பழைய நகரங்களின் பெயர்களைச் சொல்லச்சொன்னால் பெரும்பாலானவர்கள் பாடலிபுத்திரம் என்று சொல்வார்கள். பிகாரின் தலைநகரமான இன்றைய பாட்னாதான் பழைய பாடலிபுத்திரம்– கொஞ்சம் இடம்மாறிவிட்டிருக்கிறது. அதைவிடப்பழைய நகரம் என்றால் பிகாரில் வங்காளத்தின் ஓரமாக இப்போது காட்டுக்குள் இடிபாடுகளாக மாறிக்கிடக்கும் ராஜகிருஹத்தைச் சிலர் சொல்லக்கூடும். எவருமே டெல்லியைச் சொல்ல மாட்டார்கள். ஆனால் டெல்லி இவற்றைவிடவும் பழைய நகரம். பாண்டவர்களின் தலைநகரமான இந்திரப்பிரஸ்தம்தான் அது. பாண்டவர்களுக்காக மயன் நிர்மாணித்த நகரம் அது என்பது மகாபாரதம் கூறும் ஐதீகம். ஆனால் ஒருநகரமாக நமக்கு எப்போது வரலாறு கிடைக்கிறதோ அப்போதே அது உருவாகிவிட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட மதுரையும் அதே அளவுக்குத் தொன்மை கொண்ட நகரம். உலகின் பலநாடுகளில் மிகத்தொன்மையான நகரங்கள் இன்றுமுள்ளன. ஆனால் அவற்றில் சிலதான் இன்றும் பெருமைகுறையாமல் இருக்கின்றன– ரோம் மாதிரி. டெல்லி பலமுறை அழிந்து பலமுறை கைவிடப்பட்டு மீண்டும் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது. அதற்குக் காரணம் அதன் அதீகத்தொன்மைதான். அதை ஆள்பவர் இந்தியாவை ஆள்கிறார் என்ற நம்பிக்கை அளிக்கும் அதிகாரம்தான். ஐதீகத்தொன்மை கொண்ட ஒரு நகரம் இன்றும் ஒரு நாட்டின் தலைநகரமாக இருப்பது ஆச்சரியமானது. ஆனால் உலகின் பலநாடுகளில் தலைநகரங்கள் மிகவும் சபீபகாலத்தில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டவை. அவ்வாறு உருவாக்கப்பட்ட ஒரு நகரம் கன்பரா.

ஏப்ரல் பதிநான்காம் தேதி காலை நான் மதுபாஷினி வீட்டில் தூங்கி எழுந்தேன். காலையில் அதற்கு முன்னரே எழுந்திருந்த அருண்மொழி பெரிய சன்னலை திரந்திருந்தமையால் கண்ணாடி வழியாக வெளியே விரிந்த காலையை படுத்துக்கொண்டே பார்க்க முடிந்தது. எங்கே படுத்திருந்தாலும் நாம் கண்விழிக்கும்போது ஒரு சில கணங்களுக்கு நம் ஊரில் நம் படுக்கையில்தான் இருக்கிறோம். இந்த இடம் எது என்ற பிரமிப்புடன் ஊர் நினைவுக்கு வந்தது. வெளிநாட்டில் இருக்கும்போது அவ்வப்போது அது ஓர் நம்பவேமுடியாத அனுபவமாக மனதுக்குத் தோன்றும். இந்திய மண்ணில் இருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தள்ளி இருக்கிறோம் என்ற நினைவே எழுவதில்லை. மனம் இந்தியாவில் எங்கோ இருப்பதாகவே மீண்டும் மீண்டும் புனைந்துகொள்கிறது. என் வளர்ப்பு நாய் ஹீரோவை ஆஸ்திரேலியாவுக்கு விமானத்தில் கொண்டுவந்து விட்டால் அங்கே இங்கே முகர்ந்துவிட்டு அந்த இடத்தை அப்படியே நாகர்கோயிலின் நீட்சியாகவே உள்வாங்கிக்கொள்ளும். மனிதனின் அகமும் விலங்குடையதுதான்

எழுந்து சென்று மதுபாஷினிக்கும் ரகுபதிக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொன்னேன். ஊரில் இருந்திருந்தால் பலர் கூப்பிட்டிருப்பார்கள். பலரை நானும் கூப்பிட்டிருப்பேன். காபி சாப்பிட்டபின் கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். ரகுபதி வாசித்துக்கொண்டிருந்த வுடி ஆலனின் கட்டுரை-கதைகளின் முழுத்தொகுப்பை  வாசித்துக்கொண்டிருந்தேன். எனக்கு ஒரு காலத்தில் வுடி ஆலன் பிடித்தமான எழுத்தாளர். ஆங்காங்கே மேற்கோள்கூட காட்டியிருப்பேன். ஆனால் அப்போது அவரது எழுத்துக்களை வாசித்தபோது மிகமிக ஏமாற்றமாக இருந்தது. அபத்தமான, வலிந்த நகைச்சுவை என்று தோன்றியது.

எட்டு மணிக்கு நானும் அருண்மொழியும் ரகுபதியும் கன்பெரா நகரைப் பார்க்கக் கிளம்பினோம்.  கன்பரா ஆஸ்திரேலியக் கூட்டரசின் தலைநகரம். ஆஸ்திரேலியாவில் மக்கள் கிட்டத்த எழுபதாயிரம் வருடங்களுக்கு முன்னரே வாழ்ந்துவருகிறார்கள் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கை. ஆஸ்திரேலியாவின் வடக்குப்பாலைவனப்பகுதிகளில் தொல்மனிதனின் எச்சங்கள் கண்ண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. முங்கோ மனிதன் என்று சொல்லப்படும் புராதன மூதாதைமனிதனின் எச்சங்கள் இந்னும் ஆய்வாளர்களின் ஆய்வுக்கு உட்பட்டிருக்கின்றன.பனியுகத்தின்போது பூமியின் கடல்கள் பெரும் பனிப்பாளங்களால் மூடியிருந்தபோது ஆப்ரிக்க மையநிலத்தில் இருந்து அவர்கள் மெல்லமெல்ல நடந்தே வந்திருக்கலாம் என்பது ஓர் ஊகம். 

1788ல் வெள்ளையர் வந்து ஆஸ்திரேலியா கடற்கரையில் இறங்கியபோது அங்கே கிட்டத்தட்ட எட்டுலட்சம் பழங்குடிமக்கள் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இவர்கள் கிட்டத்த 250 தனி தேசியக் கட்டமைப்புகளாக சிதறி வாழ்ந்தார்கள். பல நாடுகள் ஒன்றுடன் ஒன்று கூட்டு கொண்டிருந்தன. ஒரு தேசமென்பது பல இனக்குழுக்கள் கூடி அமைந்த ஒன்று. இனக்குழுக்கள் என்பவை கிட்டத்தட்ட சாதிகள். இந்நாடுகள் நடுவே தொடர்ந்த போர்களும் நிகழ்ந்தன. கிடைக்கும் தகவல்களை வைத்துப் பார்த்தால் கிட்டத்தட்ட இது சங்ககாலப் பாடல்கள் குறிப்பிடும் தமிழ்நிலம்போல இருந்திருக்கலாம். அப்போது தமிழ்நிலத்தில் மூவேந்தர்கள் தவிர நூற்றுக்கும் அதிகமான மன்னர்கள் தனியதிகாரத்துடன் இருந்தார்கள். அம்மன்னர்களை வென்றோ தன்னுடன் இணைத்துக்கொண்டோ மூவேந்தர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றும் சித்திரத்தையே நாம் புறநாநூற்றுப்பாடல்களில் காண்கிறோம். அன்றைய தமிழ்நிலத்தில் வளராத பல சிறுமொழிகளும் இருந்திருக்கலாம் என்றாலும் தமிழே மையமாக விளங்கியது. ஆனால் ஆஸ்திரேலியா நிலத்தில் 250 தனி மொழிகள் இருந்திருக்கின்றன.

மக்கள் மிகப்பரவலாக வாழ்ந்திருக்கிறார்கள். மக்கள் நெருக்கம் மிகமிகக் குறைவு. முர்ரே ஆற்றுப்படுகையில்தான் ஓரளவு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியா பழங்குடிகளின் பண்பாடு குறித்து இப்போது தரவுகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவர்கள் ஒரு காட்டுமிராண்டி மக்கள்த்தொகை அல்ல என்பதை இப்போது எல்லாருமே ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். வீடுகள், படகுகள், தேர்கள் செய்வதில் அவர்களுக்கு தேர்ச்சி இருந்திருக்கிறது. மிகச்சிறந்த சமூகக் கட்டமைப்பும், உறவுநெறிகளும், ஆசாரமரியாதைகளும் இருந்திருக்கின்றன. குலமூத்தார் அதிகாரத்தை வழிநடத்துபவர்களாக இருந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் பண்டைய சான்றோர் அவைகளைப்போல. மிகப்பண்பட்ட இறையியல்தத்துவமும் விரிவான ஒரு குறியீட்டமைப்பும் அவர்களுக்கு இருந்திருக்கிறது.

இப்பழங்குடிகளின் வேட்டைச்சட்டங்களைப்பற்றி நிறையவே இப்போது பேசப்படுகிறது. கிட்டத்தட்ட அரைப்பாலைவனமாகிய ஆஸ்திரேலியாவில் வேட்டைமிருகங்கள் கண்டபடி கொல்லப்பட்டால் அது இயற்கைச்சமநிலையை அழிக்கும் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே மிருகங்களின் எண்ணிக்கை மற்றும் பருவநிலை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு  குலத்தலைவர்கள் கூடித்திட்டமிட்டு வேட்டைநியதிகளை உருவாக்கி எல்லா குலக்குழுக்களும் அதை கடைப்பிடித்து வந்திருந்தார்கள். ஐரோப்பியரின் வருகைக்குப்பின்னர்தான் ஆஸ்திரேலியாவின் இயற்கைச் சமநிலை சீரழிந்தது என்பது வரலாறு.

ஆஸ்திரேலியாவைக் ‘கண்டுபிடித்தது’ யார் என்ற கேள்விக்கு கேப்டன் குக் என்று பதிலெழுதி எட்டாம் வகுப்பில் மதிப்பெண் பெற்றிருப்போம். வாஸ்கோ ட காமா இந்தியாவைக் கண்டுபிடித்தார் என்பது போன்ற ஒரு கூற்றுதான் அது. ஆஸ்திரேலியாவின் வாழ்க்கையும் பண்பாடும் மிகத்தொன்மையானவை. அவர்களுக்கு அருகாமையில் இருந்த சிறு தீவுகளுடன் வணிகத்தொடர்பு இருந்திருக்கிறது. மாபெரும் கடலோடிகளான சீனர்கள் மெக்சிகோ வரை சென்று வணிகம்செய்த வரலாறு கொண்டவர்கள். அவர்கள் ஆஸ்திரேலியக் கண்டத்தைப்பற்றி அறிந்திருந்தார்கள் என்று இப்போது விரிவான ஆதாரங்களுடன் நிறுவப்பட்டிருக்கிறது. தொல்தமிழர்களுக்குக் கூட ஆச்திரேலியநிலம் குறித்த அறிதல் இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.பிரபல நிலவியலாளரான சு.கி.ஜெயகரன் தமிழுக்கும் ஆஸ்திரேலிய பழங்குடி மொழிகளுக்கும் இடையேயான பொதுச்சொற்களைப்பற்றி எழுதியிருக்கிறார்.

1788ல் ஜனவரி 26 அன்று நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் இன்றைய சிட்னி அருகே பிரிட்டிஷார் அவர்களின் முதல் காலனியை நிறுவினார்கள். இன்று இந்த தினம்தாம் ஆஸ்திரேலியாவின் தேசியதினமாக கொண்டாடப்படுகிறது. 1829ல் இப்பகுதிகள் நேரடியாகவே பிரிட்டிஷ் அரசின் நிலப்பகுதியாக அறிவிக்கப்பட்டன. 1835ல் அதிகாரபூர்வமான ஆஸ்திரேலியா காலனி அரசு உருவாக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் குடியேறிய வெள்ளையர் அங்கே வாழ்ந்த மக்களின் அரசுகளுடன் அவ்வப்போதுசெய்துகொண்ட எல்லா ஒப்பந்தங்களும் ரத்துசெய்யப்பட்டன. அந்த நிலம் முழுக்க பிரிட்டிஷ்  அரசிக்குச் சொந்தமானதாக  அறிவிக்கபப்ட்டது. அந்நிலத்துக்குரிய பழக்குடிகள் மீது அதிகாரபூர்வமான நிரந்தரப்போர் தொடங்கியது. அந்நாட்டில் பிரிட்டிஷ் அரசின் அனுமதி இல்லாமல் நுழைவது குற்றமாக அறிவிக்கபப்ட்டது.

ஆஸ்திரேலியா ஒற்றைக் காலனி நாடாக இருக்கவில்லை. நியூசவுத்வேல்ஸில் இருந்து பல சிறு காலனி  மாகாணங்கள் பிரிக்கப்பட்டு கிட்டத்தட்ட தனிநாடுகள்போலவே நிர்வாகம் செய்யபப்ட்டன.  மெல்பர்ன் அமைந்திருக்கும் விக்டோரியா 1851ல்தான்  அமைந்தது. இப்பகுதிகளில் நிலத்தை ஆக்ரமித்துக்கொண்ட வெள்ளையர்களுக்கு கூலிவேலைக்குக் கடுமையான பஞ்சம் நிலவியது. பழங்குடிகளை ‘பழக்கி’ வேலைக்கு வைத்துக்கொள்வது நடக்கவில்லை. சீனர்களை அவர்கள் அஞ்சினார்கள். ஆகவே பிரிட்டனில் இருந்து குற்றவாளிகளை நாடுகடத்தி ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டுவந்தார்கள். அவ்வாறாக ஆஸ்திரேலியா ஒரு குற்றவாளிகளின் நிலமாக உருமாற ஆரம்பித்தது. கிட்டத்தட்ட இதே காரியம் தென்னமேரிக்க நாடுகளில் ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளால் நிகழ்த்தப்பட்டது.

இந்தக்குற்றவாளிகளால் உருவாக்கப்பட்ட தேசம் ஆஸ்திரேலியா.  அவர்கள் ஆஸ்திரேலியா நிலத்தை வேளாண் நிலமாகவும் மேய்ச்சல்நிலமாகவும் மாற்றினார்கள். அந்நாட்டின் ஆதிகுடிமக்களை கொன்றே ஒழித்தார்கள். மூன்றுவகையில் இனச்சுத்திக்கரிப்பு நிகழ்ந்தது. ஒன்று, நேரடியான போர். 1788 முதல் 1930 வரை இந்தப்போர் தொடர்ந்து நடந்தது. இனப்படுகொலை என்ற சொல்லுக்குச் சரியான உதாரணம் அதுதான். ஓர் ஆஸ்திரேலியா பழங்குடியினரை கண்டதுமே சுடுவதற்கு பல மாகாணங்களில் அனுமதி இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட அரைலட்சம்பேர் கொன்றொழிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். இரண்டு, கடுமையான செயற்கைப் பஞ்சங்கள். விளைநிலங்களில் இருந்தும் நீராதாரங்களில் இருந்தும் துரத்தப்பட்ட பழங்குடிகள் பெரும் பஞ்சங்களில் செத்தார்கள் மூன்று, நோய்கள். ஆஸ்திரேலியா தனித்தீவாக இருந்த நிலமாகையால் அங்குள்ள மக்களுக்கு பல நோய்களுக்கு எதிர்ப்புசக்தியே இருக்கவில்லை. வெள்ளையர் கொண்டுவந்த நோய்கள் அவர்களை கூட்டம் கூட்டமாகக் கொன்றொழித்தன. பலசமயம் நோய்கள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டன.

நான்காவது ஒருவகை இன ஒழிப்பும் நடந்தது. ஏராளமான பழங்குடியினர் சிரைப்பிடிக்கப்பட்டு பாதிரிமார்களின் கண்காணிப்பில் கிறித்தவ மதத்துக்கு மாற்றப்பட்டு ‘சீர்திருத்த’ த்துக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அவர்கள் கூட்டம் கூட்டமாக இடப்பெயர்வுக்கு ஆளாக்கப்பட்டு மடிந்தார்கள். அவர்களின் குழந்தைகள் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டு கண்காணா முகாம்களுக்கு அனுப்பபப்ட்டு சித்திரவதை செய்யபப்ட்டு ‘மாற்றியமைக்கப்பட்டார்கள்’  அவர்களை இன்று திருடப்பட்ட தலைமுறை என்கிறார்கள். சமீபத்தில் வெளியான ஆஸ்திரேலியா திரைப்படமான ‘ராபிட் புரூ·ப் ·பென்ஸ்’ [முயல்வேலி] அவ்வாறு முகாம்களில் அடைக்கப்பட்ட இரு பெண்குழந்தைகள் தப்பித்து தங்கள் பெற்றோரைத்தேடி ஆயிரத்தி ஐநூறு கிலோமீட்டர் தனியாக பாலைவனத்தில் பயணம்செய்வதை காட்டுகிறது.ராபிட் புரூ·ப் ·பென்ஸ் டோரிஸ் பில்கிங்டன் கரிமாரா என்னும் ஆஸ்திரேலிய பழங்குடியின எழுத்தாளரால் எழுதப்பட்ட நாவலை  ஒட்டி எடுக்கபப்ட்ட படம் இது. இது அவரது முத்தொடர் நாவலில் இரண்டாவது. இது அவரது  சொந்த அன்னையின் கதை.
1855ல் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் முறையான அரசாங்கம் அமைந்தது. விக்டோரியா டாஸ்மேனியா தென் ஆஸ்திரேலியா குயீன்ஸ்லாந்து மேற்குஆஸ்திரேலியா போன்ற மாகாணங்களில் பின்னர் அரச அமைப்புகள் உருவாயின.  ஆஸ்திரேலிய மாகாணங்கள் தனித்தனியாக நேரடியான பிரிட்டிஷ் அரசாட்சியில் இருந்து விடுதலைபெற்றன.  பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்கள் மூலம் அவை மெல்லமெல்ல அவை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் டொமினிகன் அந்தஸ்துபெற்ற  ஒரே நாடாக இணைந்தன. ஆஸ்திரேலியா கூட்டமைப்பின் தலைநகரமாக சிட்னி முதலில் இருந்தது. மெல்பர்ன் 1901 முதல் 1927 வரை கூட்டமைப்பின் தலைநகரமாக இருந்தது. பின்னர் கன்பெரா ஆஸ்திரேலிய கூட்டரசின் தலைநகரமாக அங்கீகாரம் பெற்றது.

பல்லாயிரம் வருடங்களாக ங்குன்னவால் மக்கள் கன்பெரா பகுதியை தங்கள் பொதுவான கூடுமிடமாக வைத்திருந்திருக்கிறார்கள். 1824ல்தான் இங்கே வெள்ளையர் வந்து குடியேறினார்கள்.  ஜோஷ¤வா மூர் என்பவர் அருகே உள்ள பிளாக் மௌண்டேன் என்னும் இடத்தில் நிலம் வாங்கி ஒரு மேய்ச்சல் மந்தையை ஆரம்பித்தார். அந்த மந்தையைச்சுற்றி ஒரு ஊர் மெல்ல உருவாகிவந்தது. 1901ல் ஆச்திரேலிய மாகாணங்கள் ஒன்றுகூடி ஒரு கூட்டமைப்பாக ஆனது முதலே ஒரு தலைநகரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் ஆரம்பித்தன. சிட்னியும் மெல்பர்னும் அந்த தலைநகர் பதவிக்காகப் போட்டியிட்டன. அவை இரு பகைமாகாணங்களின் தலைநகர்கள். 1908 ல் கன்பெராவை தலைநகரமாக ஆக்கலாமென்ற எண்ணம் எழுந்தது. பழங்குடிகளின் சந்திப்பிடமாக இது இருந்தமையான் கூடுமிடம் என்னும் பொருளில் கான்பெரா என்னும் பெயர் சூட்டப்பட்டது. இந்த நகரம் சிட்னிக்கும் மெல்பர்னுக்கும் நடுவே இருப்பது முக்கியமான வசதியாக அமைந்தது.

நகர வடிவமைப்புக்காக ஒரு சர்வதேசப்போட்டி அறிவிக்கப்பட்டது அமெரிக்க நகரசிற்பி வால்ட்ர் பர்லி கிரி·பின் அதில் வென்றார். 1927ல் கன்பெரா தலைநகரமாக அறிவிக்கபப்ட்டது. ஆனால் மெல்லமெல்லத்தான் கன்பெரா முழுமையான நகரமாக உருவாகியது. 1957ல் அப்போதிருந்த அரசு நகரத்தை முழுமையாக உருவாக்குவதற்கான முயற்சிகளை முடுக்கி விட்டது. பெரும் செலவில் நானய அச்சகம், தேசிய நூலகம், வனப்பூங்கா போன்றவை உருவாக்கப்பட்டன. நகரின் தாழ்வான பகுதியில் ஒரு ஏரி கற்பனைசெய்யப்பட்டு பாலங்களும் விளிம்புகளும் கட்டப்பட்டபின் அந்த ஏரியில் தண்ணீர் நிறைக்கப்பட்டது. கான்பெரா வணிகமோ தொழிலோ உள்ள ஒரு நகரமல்ல. அது முழுக்கமுழுக்க தலைநகர நிர்வாகத்தைச் சார்ந்த அலுவல்களுக்கான நகரம்.

சாலைவழியாகச் சென்றுகொண்டிருந்தபோது அந்நகரம் நான் பார்த்தவற்றிலேயே மனதுக்குப் பிடித்த நகரமாக இருப்பதை உணர்ந்தேன். அதற்கு முக்கியமான காரணம் அதன் ‘கைக்கடக்கமான’ தன்மைதான். சிறிய கட்டிடங்கள். ஏராளமான புல்வெளிகள் நடுவே அவை பணிவுடன் நின்றன. பெரிய சாலைகளில் மேப்பிள்கள் காலை ஒளியில் குலுங்க அவசரமில்லாத கார்கள் பளபளத்து நகர்ந்தன. அவசரமில்லாத பெண்கள் புன்னகையுடன் கைகாட்டி சாலையைக் கடந்தார்கள். ஓர் இளம்பெண் அந்நேரத்தில் டிராக் சூட்டுடன் சாலையைக் கடப்பதற்காக காத்து நின்றாள். வட்டமான முகம் கொண்ட சீனப்பெண்கள் நீலச்சீருடை அணிந்து சிரித்துபேசியபடிச் சென்றார்கள். சாலையோரக் கட்டிடம் ஒன்றைக் காட்டி இதுதான் பணம் அச்சிடும் இடம் என்றார் ரகுபதி. எனக்கு இருபது வருடங்களுக்கு முன்னர் நான் பார்த்த சண்டிகர் ஓரளவுக்கு கன்பராவுடன் ஒப்பிடத்தக்க நகரம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்போது அது சீரான புதிய நகரமாக இருந்தது. ஆனால் இப்போது கண்டபடி கட்டி கட்டிடக்குவியலாக, வாகனக்குப்பைக்கிடங்காக ஆகியிருப்பார்கள். இந்திய நகரங்கள் மக்கள்தொகைப்பெருக்கத்தால் திணறிக்கொண்டிருக்கின்றன.

முதலில் போர்நினைவிடத்தைப் பார்க்கச்சென்றோம். ஆஸ்திரேலியா ஒரு பிரிட்டிஷ் காலனிநாடாக இரு உலகப்போர்களிலும் பங்கெடுத்துக்கொள்ளும்படிச் செய்யப்பட்டிருக்கிறது. அப்போர்களில் பல்லாயிரம் ஆஸ்திரேலிய வீரர்கள் உயிர்துறந்திருக்கிறார்கள். அவர்களின் நினைவுக்காக உருவாக்கப்பட்ட நினைவிடம் இது. ப வடிவிலான ஆங்கிலோ சாக்ஸன் பாணி கற்கட்டிடம். அந்தக்காலையில் சில்லென்று குளிர்ந்து ஓங்கி நின்றது. அங்கே வருகை தந்தவர்கள்கூட ஆழமானதோர் மௌனத்துடன் வந்தது போல் இருந்தது. உள்ளே சென்றோம். என் பதின்வயதுகளில் நான் பள்ளியில் உலகப்போர் குறித்த ஒரு பெரிய நூலை வாசித்தேன். ஏராளமான புகைப்படங்கள் கொண்ட அந்த நூல்தான் எனக்கு உலகப்போர்களின் புனைவுலகுக்குள் செல்வதற்கான பெரிய வாசலாக இருந்தது. அதன் பின் நெடுநாட்கள் போர்நாவல்களாக வாசித்துத் தள்ளிக்கொண்டிருந்தேன்.லென் டைட்டனின் ஒரு சிறு நாவல்தான் நான் அவ்வகையில் வாசித்த முதல் படைப்பு. ஆர்டர் ஆ·ப் வார் என்று எண்ணுகிறேன்.  நான் வாசித்த நாவலாசிரியர்களில் [பிரிகேடியர்] கார்னீலியஸ் ரயான்தான் மிகச்சிறந்த போர்நாவலாசிரியர். அவரது ‘த பிரிட்ஜ் டூ ·பார்’ என்ற நாவலை வாசித்து நானே ஒரு போர் நிபுணன் ஆனதுபோல கற்பனையில் திளைத்திருக்கிறேன். அந்த அளவுக்கு மிக விரிவான தகவல்களால் ஆன நாவல் அது. பாரச்சூட் வழியாக ஒரு ராணுவத்தைக் கொண்டு சென்று கொட்டி ஒரு பாலத்தை கைப்பற்றுவதைப்பற்றிய நாவல். உண்மைச்சம்பவத்தை ஒட்டியது என்று எண்ணுகிறேன்.

அந்த பெரிய கூடத்தில் நடக்கும்போது வாசித்த போர்நாவல்கள் எல்லாம் நினைவில் முட்டி மோதின. பலவகையான துப்பாக்கிகள். உபஇயந்திரத்துப்பாக்கிகள். தோள்பீரங்கிகள். மென் இயந்திரத்துப்பாக்கிகள். அவை ஒரு காலத்தில் நெருப்பைக் கக்கி மனித உயிர்களை அழித்திருக்கும். அவற்றை இயக்கியவர்களும் செத்துப்போயிருக்கக் கூடும். அவை மட்டும்  அந்த மரண தினங்களின் நிரந்தர நினைவுகளாக கரிய உலோகப்பளபளப்புடன் கண்ணாடியறைக்குள் அமர்ந்திருந்தன. இந்தியர்களாகிய நாம் ஒரு போரை ஊகிக்கவே முடியாது. நாம் உண்மையில் வன்முறை என்றால் என்னவென்றே அறியாதவர்கள். சென்ற இரு நூற்றாண்டுகளை உலுக்கிய அழிவுகளில் நம்முடைய நேரடிப்பங்களிப்பு என ஏதுமில்லை. ஆகவே நாம் இன்னும் போர் குறித்தும் வீரம் குறித்தும் அபத்தமான மிகைக்கற்பனைகளை வளர்த்துக்கோண்டிருக்கிறோம். நம்முடைய அரைவேக்காட்டு அரசியல்வாதிகள் கட்டைமீசையுடன் மேடைகள் ரத்த ஆறு ஓடும் என்றெல்லாம் பேசக்கேட்டு முட்டாள்தனமாக கைதட்டிக்கொண்டிருக்கிறோம். அந்த துப்பாக்கிகள் வழியாகச் சென்றபோது கூண்டுக்குள் புலியைப்பார்ப்பது போல என்று எண்ணிக்கொண்டேன். கூண்டுக்குள் நாம் பார்க்கும் புலி புலியே அல்ல என்று எப்போதாவது காட்டில் புலியைப் பார்த்தால்தான் உணர முடியும். காட்டுப்புலியின் நிமிர்வும் கம்பீரமும் நம் முதுகெலும்பில் அச்சத்தை செலுத்தும்போதே நம் மொத்தப்பிரக்ஞையையும் அதன் மீது நிறுத்தி வைத்திருக்கும். கூண்டுப்புலி கொஞ்சம் பெரிய பூனைதான். இந்தத் துப்பாக்கிகளும் கொஞ்சம் பெரிய பொம்மைகள்.

கலிபோலி போர் குறித்த ஒரு தனிப்பகுதியே அங்கே உருவாக்கப்பட்டிருந்தது. ஆஸ்திரேலிய வரலாற்றில் அழியா இடம்பெற்ற போர் அது. கலிபோலி என்பது துருக்கியில் உள்ள ஓர் ஊர். முதல் உலகப்போரில் 1915 ஏப்ரல் முதல் 1916 ஜனவரி வரை அங்கே பிரிட்டன் தலைமையிலான நேசநாட்டுப்படைகளுக்கும் துருக்கி தலைமை வகித்த அச்சுநாட்டு படைகளுக்கும் இடையே பெரும்போர் மூண்டது. அந்தப்போர் நேசநாட்டுப்படைகளுக்கு பெரிய அடியாக அமைந்தது. இஸ்தான்புல் என்றும் கான்ஸ்டாண்டிநோபில் என்றும் அழைக்கப்பட்ட துருக்கியின் தலைநகரத்தைக் கைப்பற்றினால் கடல் வழியாகக் கொண்டுவரப்படும் பெரும் ராணுவத்தை அதனூடாக ருஷ்யாவுக்குள் அனுப்பிவிடமுடியும் என்பது நேசநாடுகளின் திட்டமாக இருந்தது.  அந்த முயற்சி தோல்வியடைந்தது மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான நேசநாட்டுபப்டையினர் மரணமடையவும் காரணமாக அமைந்தது. அதில் ஏராளமானவர்கள் ஆஸ்திரேலியர்கள்.

துருக்கியர்களால் இந்தப்போர் ஒரு தேசிய வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது. துருக்கி பின்னர் போரில் தோற்று அதன் பெருமையை இழந்தது என்றாலும்கூட அந்தவெற்றி அதன் தேசியபெருமிதத்தைக் காத்தது. அந்தப்போரில் ஒரு படைத்தலைவராக இருந்த முஸ்தபா கமால் பாஷா பெரும்புகழ்பெற்று பின்னர் துருக்கியின் சர்வாதிகாரியாகவும்ந் அவீன துருக்கியை உருவாக்கிய சீர்திருத்தவாதியாகவும் ஆனார். ஆனால் ஆஸ்திரேலியாவைப்பொறுத்தவரை அது பேரிழப்பின் நாள். ஆஸ்திரேலிய-நியுசிலாந்து படைகள் இணைந்து உருவான அமைப்பான [ANZAC]  மெல்லமெல்ல ஆஸ்திரேலிய தேசியக்கூட்டமைப்பு உருவாவதற்கான மனநிலையை உருவாக்கியது. ஏப்ரல் 25 அம்தேதி, ஏராளமான ஆஸ்திரேலியர்கள் கொல்லப்பட்ட நாள் இது, ஆன்சாக் நாள் என்று இன்றும் கொண்டாடப்படுகிறது. முன்னாள் போர்வீரர்கள் அந்த நாளில் கௌரவிக்கப்படுகிறார்கள்.

கலிப்போலி போர்க்களக் காட்சிகளை மிக விரிவான தத்ரூபச்சிலைகளாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். மேலே அகன்ற வானத்தையும் கீழே சேற்றுநிலத்தில் போராடும் வீரர்களையும் வானிலும் மண்ணிலும் வெடிக்கும் குண்டுகளையும் கண்ணாடிப்பேழைக்கு மிக அருகே நின்று பார்க்கும்போது அந்தக் களத்துக்குள் சென்றுவிட்ட உணர்வு உருவானது.

போர்நினைவிடம் ,கன்பெரா

 

 

 

 

 

ரகுபதியுடன்

 

முந்தைய கட்டுரைபுல்வெளிதேசம்- 5, வீடு,சாலை,வெளி
அடுத்த கட்டுரைமத்தகம்,ஊமைச்செந்நாய், கடிதங்கள்