தஸ்தயேவ்ஸ்கி-கடிதம்

சுகம் தன்னேயல்லே..?

ஒரு எழுத்தாளரால் உருவான மன உளைச்சலை மனதுக்கு நெருக்கமான எழுத்தாளரிடம் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன்..

இலக்கிய கர்த்தா தஸ்தாயெவ்ஸ்கியின் சிறுகதைகள் படித்து பிரமித்து, எழுத்தாளர் பெரும்படவம் எழுதிய ”ஒரு சங்கீர்த்தனம் போலே” நாவல் வாங்கிப் படித்துக் கொண்டிருந்தேன். தஸ்தாயெவ்ஸ்கியும் அன்னாவும் பழகிய நாட்களும் “சூதாடி”யின் கதையை எழுத அன்னா உதவியதும் கண் முன்னே விரிந்தது. பிறகு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் தளத்தில் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி தேடி இந்தச் சுட்டியைக் கண்டடைந்து http://www.sramakrishnan.com/?p=689 அதிர்ச்சியடைந்தேன். 1981ல் வெளிவந்த Twenty Six Days From the Life of Dostoyevsky திரைப்படத்தை (Dostovesky at the roulette. Novel from the life of great writer என்ற நாவலை)அப்பட்டமாக நகலெடுத்தது போல இருக்கிறது பெரும்படவத்தின் நாவல் (அதிலிருந்து ஒரு காட்சித் துண்டு : http://www.youtube.com/watch?v=jT3j8oDCz-I ) – நாவல் வெளிவந்த வருடம் 1993. இந்த நாவலைப் பற்றியோ திரைப்படத்தைப் பற்றியோ பெரும்படவம் எங்கும் குறிப்பிடவில்லை. இன்னும் சில அத்தியாயங்கள் மீதமிருக்கையில் பெரும்படவத்தின் நாவலை என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. ஏனோ நானே ஏமாற்றப்பட்டது போல் உணர்கிறேன். சமீபகால மலையாள/தமிழ்த் திரைப்படங்களில் தொடர்ந்து காணப்படும் கதைத் திருட்டு அல்லது அன்றாட வாழ்வில் நான் காணும் அறிவுத் திருட்டு (எ.கா: கணிணி பொறியாளர்களின் cut n paste code திருட்டு) கூடக் காரணமோ எனத் தெரியவில்லை.

ஒரு நன்றியாவது சொல்லியிருக்கலாம் பெரும்படவம். வேறு என்ன சொல்ல?
ஆதங்கத்துடன்,
ரா.சு.

பி.கு: நீங்கள் பெரும்படவம் ஸ்ரீதரன் அவர்களை வாசித்திருக்கிறீர்களா? வயலார் விருது வாங்கிய நாவலிது.
https://www.youtube.com/watch?v=jT3j8oDCz-I&feature=player_embedded#at=36

அன்புள்ள ரா சுப்பு

பெரும்படவம் ஸ்ரீதரன் மலையாளத்தில் தரமான இலக்கியவாதியாகக் கருதப்பட்டவர் அல்ல. ஒரு பொழுதுபோக்கு எழுத்தாளர். இந்நாவல் வயலார் விருது பெற்றாலும்கூட முக்கியமானதாக விமர்சகர்களால் கொள்ளப்படவில்லை. இதன் மூலமாக அமைந்தவை தஸ்தயெவ்ஸ்கி பற்றிய வாழ்க்கை வரலாறுகள். அந்த வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டே நாவலை எழுதியதாக அவர் சொல்கிறார். சினிமாவும் அந்த வாழ்க்கைவரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கலாம். வாழ்க்கைவரலாறு பொதுவானது அல்லவா?

நான் இந்நாவலை வாசிக்கவில்லை. நான் எப்போதுமே பெரும்படவம் ஸ்ரீதரனை ஒரு நாவலாசிரியராகப் பொருட்படுத்தியதில்லை

முந்தைய கட்டுரைமாநில உணர்வுகள்
அடுத்த கட்டுரைஆர்.கே.நாராயணன், மீண்டும்