எழுத்தாளர் முகங்கள்.

நண்பர் தளவாய் சுந்தரத்தின் இணையதளத்தில் நிறைய எழுத்தாளர்களின் புகைப்படங்களைப் பிரசுரித்திருக்கிறார்.தமிழின் எழுத்தாளர்களின் புகைப்படங்கள் எத்தனை அரிதானவை என்பது பலருக்கும் தெரியாது. உதாரணமாக ’இடைவெளி’ சம்பத்தின் ஒரு படத்தைக்கூட நான் பார்த்ததில்லை.ஆதவனின் ஒரேபடம்தான் சுற்றிவரும்.

எழுத்தாளர்களின் படங்கள் அவர்கள் குடும்பங்களில் இருக்கலாம். ஆனால் அவற்றை சேமித்து வைப்பதற்கு அவர்களின் குடும்பத்தினர் அக்கறை காட்டுவதில்லை, அவர்களின் பார்வையில் அவர் ஒரு முக்கியமானவராக இருப்பதில்லை. அந்தப் புகைப்படங்களை வாங்கிப் பிரசுரிக்க நம் இதழ்களும் முனைவதில்லை. அவர்களுக்கும் அவர்கள் முக்கியமானவர்களல்ல.

அதற்குமேல், இலக்கியச்சூழலுக்கே எழுத்தாளர்களின் படங்களை வெளியிடுவது சம்பந்தமாக ஒரு தயக்கம் இருந்தது. தமிழில் எழுத்தாளர்களை அட்டையில் பெரிய வண்ணப்படமாகப் போட்ட சிற்றிதழ் நாங்கள் நடத்திய சொல் புதிது. அப்போது அதற்குக் கடுமையான எதிர்வினைகள் வந்தன, எழுத்தாளர்களை நடிகர்களாக ஆக்கவேண்டாம் என்று.

பழைய எழுத்தாளர்களின் படங்கள் எந்த அளவுக்கு அபூர்வமானவையோ அந்த அளவுக்கே புதிய எழுத்தாளர்களின் படங்களும் கிடைத்தற்கு அரியவை. மாதிரிக்கு சிலமுகங்களை சேர்த்து வைக்கும் தளவாய் பாராட்டுக்குரியவர். ஆனால் எனக்குப் புரியாதது என்னவென்றால் அந்தப்பட்டியலில் உள்ள சில பெண்முகங்கள் நான் இதுவரை கேள்விப்படாதவை. ஜென்னிஃபர் , அழகுநிலா…இவர்களெல்லாம் ஏதாவது எழுதியிருக்கிறார்களா என்ன? எழுதியிருப்பார்கள். இல்லையென்றால் எழுத்தாளர்களாகக் கருதப்பட வாய்ப்பில்லை அல்லவா?

http://www.flickr.com/photos/dhalavaisundaram/

முந்தைய கட்டுரைஐன்ஸ்டீனின் கனவுகள்
அடுத்த கட்டுரைசார்பியல்-கடிதங்கள்