ஒக்கலை ஏறிய உலகளந்தோன்

சங்க இலக்கியத்திற்கும் பக்தி காலகட்ட இலக்கியங்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு பின்னதில் பயின்றுவரும் பல அன்றாட வழக்குச் சொற்கள். சங்க இலக்கியச் சொல்லாட்சி நம்மிடமிருந்து விலகி தொலைதூரத்தில் நிற்கும்போது தேவார திருவாசக பிரபந்தப் பாடல்களின் சொல்லாட்சிகள் நமக்கு மிக அண்மையவாய் உள்ளன. நாம் செல்லமாகவும், மழலையாகவும், கடுமையாகவும், நுட்பமான பொருளில் பயன்படுத்தும் வட்டாரச் சொற்களை அப்பாடல்களில் காணும்போது ஒருவகை உவகை ஊற்றெடுக்கிறது.

பல தஞ்சை வட்டார வழக்குச் சொற்களைக் கேட்டு நான் உவகை கொண்டதுண்டு. அதில் ஒன்று ‘ஒக்கில’ என்பது. குழந்தையை இடுப்பில் பக்கவாட்டில் வைத்துக்கொள்வதை அப்படிச் சொல்கிறார்கள். ‘ஒக்கில ஒக்காச்சுக்கோ’ என்று சொன்னால் குழந்தை மடிப்பு விழுந்த குட்டித்தொடைகளை ஆட்டி கைவீசி சிரித்து எம்பி எம்பித்  துடிக்கிறது. அதென்ன ஒக்கு?

ஒக்க என்றால் இணையாக என்று பொருள். இணைந்து என்றும் வரும்.ஒக்கடித்தல் என்றால் சேர்ந்து தாளமிடுதல் என்று வையாபுரிப்பிள்ளையின் அகராதி சொல்கிறது. ஒக்க நோக்குதல் என்றால் சமமாக பாவித்தல். ‘ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்’ என்று தேவாரம்.

 

ஒக்கல் என்றால் சுற்றத்தார் ‘தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஐம்புலத்தார் ஓம்பல் தலை’ என்று வள்ளுவர். மூதாதையர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தினர், தான் என்று ஐந்து பேரையும் பேணுவது கடமை. ஒக்கலித்தல் என்றால் பேணுதல் என்ற பொருள் இதிலிருந்து வந்திருக்கலாம்.

பேச்சுவழக்கில் ஒக்கல் என்றும் ஒக்கலை என்றும் வழங்கும் சொல்லுக்கு இடை என்ற பொருள் உள்ளது. இடை அல்ல, பக்கவாட்டு இடுப்புக்கு மட்டும்தான் ஒக்கலை என்று பெயர். இணையான, ஓரமான என்ற முந்தைய பொருளே நீட்சி பெற்றதாக இருக்கலாம். இன்று குடத்தையும் குழந்தையையும் பெண்கள் இடுப்பில் ஏந்திக்கொள்வதை மட்டுமே குறிக்கும் ஒரு சொல்லாக அது நாட்டுவழக்கில் உள்ளது

நம்மாழ்வாரின் திருவாய்மொழி படித்துக்கொண்டிருக்கும்போது அச்சொல் பொன்னிடை மணியென சுடருடன் தெரிந்தது.

உடன் அமர் காதல் மகளிர்
திருமகள், மண்மகள், ஆயர்
மடமகள் என்றிவர் மூவர்.
ஆளும் உலகமும் மூன்றே.
உடன் அவை ஒக்க விழுங்கி
ஆலிலை சேர்ந்தவன் எம்மான்.
கடல்மலி மாயப்பெருமான்
கண்ணன் என் ஒக்கலையானே!

பெருமாளுடன் அமரும் காதல் மகளிர் மூவர். சீதேவி பூதேவி மற்றும் ஆயர் மடமகளாகிய ராதை.விண், மண், ஆழம் என அவன் ஆளும் உலகங்களும் மூன்று. ஊழிப்பெருவெள்ளத்தில் அவற்றையெல்லாம் விழுங்கி தன்னிலாக்கி ஆலிலைமேல் கைக்குழந்தையாக துயில்பவனும் அவனே. எல்லையில்லாத விண்ணகப் பாற்கடலின் மாயப்பெருமான் அவன். இதோ கண்ணனாக அவன் என் ஒக்கலில் இருக்கிறான்!

நம்மாழ்வார் கவிதையை ‘பறக்கும் யானை’ என்று முன்பு சொல்லியிருந்தேன். உயர்தத்துவமும்  உணர்ச்சிகரமான அதிதூய பித்துநிலையும் பிசிறிலாது முயங்கும் ஒரு மொழிவெளி அது. பெருமாளை உருவகம் செய்ய இப்பாடல் அளிக்கும் விவரணைகளில் நம்மாழ்வார் என்ற தத்துவஞானி தெரிகிறார். அவன் பரவிய மூன்று வெளிகளை அவர் சுட்டும் விதம் விரிவான வேதாந்த நோக்கில் மேலும் மேலும் நுணுகி ஆராயத்தக்கது.

பெருமாளை பிரபஞ்சரூபனாக, பிரபஞ்சத்தை ஆளும் வல்லமையாக, அலகிலாதவனாக அவர் மனம் காண்கிறது. அவனுடன் அமரும் காதல் மகளிர் மூவர். முதலில் பிரபஞ்சத்தை ஆளும் ‘சைதன்யம்’ [உயிரொளி] ஆன திருமகள். அவன் மார்பில் அவனே ஆக மாறி உறைபவள். பிரபஞ்ச சாரமேயான ஆற்றல். அடுத்து மண்மகள். இந்த பூமியாக மாறி முடிவில்லாத தோற்றம் கொண்டு விளையாடும் பருப்பொருள்.

மூன்றாவதாக ஆயர் மடமகள். கூடலும்  ஊடலும் பிரிவுமாக காதலின் எழில்வடிவமாக ஆனவள். உறவுகளின் மாயவிளையாட்டின் சின்னம். மாயை! பிரபஞ்சத்தின் பேரழகுகளையெல்லாம் தன் அணிகலன்களாகக் கொண்டது மாயை என்று வேதாந்தம் சொல்கிறது. மாயையை தீமையாக  அது காண்பதில்லை. அதுவும் அலகிலாத பிரபஞ்ச ரூபனின் ‘அருகமர் ஆற்றல்’ தான். அவன் அணியும் அணிகலன்தான். அவன் சிறுவிரல் மோதிரம். அது பொய்யல்ல, மெய்யே ஆனவனின் மாயத்தோற்றம் மட்டுமே.

ஆளும் உலகமும் மூன்றே என்ற சொல்லாட்சியினூடாக அந்த தரிசனத்தை மேலும் வலுப்படுத்துகிறார் நம்மாழ்வார். விண்ணும் மண்ணும் பாதாளமும் தானே ஆனவன். ஒளியும் நிழலும் இருளுமாக ஆனவன். இருத்தலின் மூன்று சாத்தியங்களும் தானே ஆனவன்.

அவ்வாறு ஒரு விசிறியை விரிப்பது போல பெருமாள் என்னும் தரிசனத்தை விரித்தபின் உடனே அதை சுருக்கி அந்த தரிசனத்தின் மறுபக்கத்தைக் காட்டி அதுவும் அவனே என்று சொல்கிறது கவிதை. அனைத்தும் ஆனபின் அவையனைத்தையும் விழுங்கி அழித்து உண்டு தானே ஆகி தானன்றி ஏதுமில்லா நிலையில் ஊழிப்பெருவெள்ளத்தில் ஆலிலை மேல் துயிலும் கல்கியும் அவனே என்கிறார்.

அப்போதும் எஞ்சும் ஒன்று உண்டு, அவன் துயின்ற அந்த ஆழிவெள்ளம். அதுவும் அவனே.கடலேயானவன். கடல்மலி கடவுள். ஆழியன்.அவனை மாயன், மாயப்பெருமான் என்று அல்லாமல் வேறு எப்படிச் சொல்லமுடியும்?

அந்த மாயத்தின் உச்சமல்லவா அவன் குட்டித்தொப்பையும், மணிமார்பும், மயில்பீலியும், வேய்ங்குழலும், கிண்கிணியும், ஐம்படைத்தாலியும், மலர்விழிகளும், குமிண்சிரிப்புமாக; கார்வண்ணமேனிக் கண்ணனாக வந்து ஆயர்குலத்து அன்னையின் இடையில் அமர்ந்தது?

அந்த  அன்னையின் நிலையில் தன்னை உணர்ந்து, அதுவரைச் சொல்லிச் சொல்லி சொல்லமுடியாமை வழியாக உணர்த்திய பெருமாள் என்னும் பேரனுபவத்தை முழுமையாக மறுதலித்து, தாய்மையின் பெரும் பேதைத்தனத்தின் சிகரமேறி நின்று, ஆழ்வார் சொல்கிறார் , அக்கண்ணன் இதோ என் ஒக்கலில் இருக்கிறான் என்று.

ஒக்கல் என்ற சொல் அங்கே எத்தனை சொகுசாக அமர்ந்திருக்கிறது, அன்னையின் ஒக்கலில் பிள்ளை போல. கண்ணன் என் கையில் இருக்கிறான், தோளில் இருக்கிறான், மார்பில் இருக்கிறான் , மடியில் இருக்கிறான் என்று எப்படிச் சொன்னாலும் வராத நுண்பொருள் ஒக்கல் என்னும் சொல் வழியாக கைகூடுகிறது.

ஆம், அது பெண்மையைக் குறிக்கிறது. அக்கணத்தில் கவிஞன் அங்கே பெண்ணாகி பூத்து தாயாகிக் கனிந்து நிற்கிறான். அவன் உடல் மென்மையில் குழைந்திருக்கலாம். தாய்மையில் பாலூறியிருக்கலாம். அடுத்தப் பாடலின் முதல்வரியில் நாம் அதைக் காண்கிறோம். ‘ஒக்கலை வைத்து முலைப்பால் உண்ணென்று…’

விண்ணிலிருந்து மண்வரை ஆடும் ஒரு பெரும் ஊஞ்சல். உயர்த்தத்துவமும் ஞானப்பேதமையும் ஆரத்தழுவும் ஒரு விளையாட்டுக்கணம். அதை நிகழ்த்திக்கொண்டே செல்கின்றன நம்மாழ்வாரின் பாடல்கள்.

 

சுஜாதாவுக்காக ஓர் இரவு

http://balaji_ammu.blogspot.com/2006/09/ii.html

http://tamil.webdunia.com/religion/religion/article/0705/21/1070521017_1.htm

 

http://groups.google.com/group/muththamiz/browse_thread/thread/c13cbd6c2117b4b7?fwc=2

[மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2009]

முந்தைய கட்டுரைஇமயச்சாரல் – 13
அடுத்த கட்டுரைஇமயச்சாரல் – 14