யானை- கடிதம்

அன்புள்ள ஜெ,

யானைகளுடன் பேசுபவன் – ”The Elephant Whisperer My Life with the herd in the African Wild” புத்தக அறிமுகம் சொல்வனத்தில் வாசிக்கக் கிடைத்தது. நீங்கள் முன்பே வாசித்திருக்கக்கூடும்.

நன்றி,
வள்ளியப்பன்
அன்புத் தோழர்களுக்கு

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் யானை டாக்டர் சிறுகதை (?) வாசித்ததும் ஏற்பட்ட தாக்கத்தில் சிலருக்குக் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தேன்.
விலங்குகள் நம்மைப் பற்றி எழுதவோ, பேசவோ செய்தால் நம்மால் நம்மைப் பற்றிய அதிர்ச்சியான அந்த விமர்சனத்தின் முதல் சொல்லையே கூடத் தாங்க முடியாது என்று எனக்கு மீண்டும் உணர்த்திய கதை.
எங்கே கிடைக்கும் என்ற கேள்வி வந்தது. அவரது இணையதளத்தில் வாசிக்கலாம் என்ற எனது பதில் அத்தனை சுவாரசியமாக எனக்கே படவில்லை.  எனவே இணையதள முகவரியைக் கொடுக்கலாம் என்று இன்று நுழையவிருந்தேன்.  அதற்குள் எனது சிறு பிரதிபலிப்பையும் அவர் தமது வலைத் தளத்தில் ஏற்றி இருப்பதாக, இந்தக் கதை பற்றி என்னை சில மாதங்களாகவே வாசிக்கத் தூண்டிக் கொண்டிருக்கும் உளவியல் மருத்துவர் டாக்டர் ராமானுஜம் அலைபேசியில் அழைத்துச் சொன்னார். எனக்கு அதைவிடவும் வியப்பு அங்கே காத்திருந்தது.
யானை டாக்டர் கதை என்றாலும், உண்மையாகவே வாழ்ந்து வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு மிகவும் குறிப்பாகக் காட்டு யானைகளுக்குப் பெருந்தொண்டாற்றி மறைந்த உன்னத மனிதர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பற்றிய கதைதான் அது. அவரது புகைப்படங்கள் சிலவற்றை ஜெயமோகன் தமது இணையதளத்தில் சேர்த்திருக்கிறார்.
பின் வரும் இணைப்பைக் கிளிக் செய்தால், யானை டாக்டர் என்ற இயற்கைச் சூழல், இதர உயிரிகள் குறித்தெல்லாம் மதிப்பும், அன்பும், தோழமையும் மலரச் செய்யும் அந்தக் கதையை நீங்கள் வாசிக்க, அது குறித்த கடிதங்களை வாசிக்க, கதையை நூலாகக் கொண்டுவந்திருப்போரின் மின்னஞ்சல் தொடர்பு அறிய….என சாத்தியங்களை உள்ளடக்கிய வீதியில் சென்று  சேர்வீர்கள். அங்கிருந்து காட்டுக்குள் தொலைந்து போகக் கடவது என்ற வாழ்த்துக்களோடு முடிக்கிறேன்.

எஸ் வி வேணுகோபாலன்
முந்தைய கட்டுரைஎலியட்-எம்டிஎம்-எதிர்வினை
அடுத்த கட்டுரைசித்பவானந்தர்-கடிதம்