அண்ணா ஹசாரே- இன்னொரு கடிதம்

நான் என் ஐயங்களை அண்ணாவின் முதல் போராட்டத்தின் பொழுது சொன்னது வாஸ்தவம்தான். இன்னும் அவரைச் சுற்றி உள்ளவர்கள் மீதான என் சந்தேகங்கள் எல்லாமே அப்படியேதான் உள்ளன. ஆனால் இப்பொழுது நான் அண்ணாவின் போராட்டத்தினைத் தீவிரமாக ஆதரிக்கிறேன்.

1. அண்ணாவின் போராட்டத்தை ஒரு வேளை இங்கு நாம் அனைவருமே சந்தேகிப்பது போல காங்கிரஸோ, அமெரிக்காவோ, சோவியத்தோ, ஆர் எஸ் எஸ்ஸோ நடத்துவதாக இப்பொழுது நடை பெறும் தாக்குதல்களைப் பார்த்தால் தெரியவில்லை. காங்கிரஸுக்கு அண்ணாவின் கோரிக்கைகளை ஏற்கவும் முடியாது, ஏற்றால் மன்மோகன், சோனியா முதல் நம்ம ஊர் சிதம்பரம் வரை அனைவரும் ஆயுள் தண்டனை பெற வேண்டி வரும். ஆகவே அவர்களுடன் அண்ணாவுக்கு ஏதேனும் உடன்படிக்கை இருக்கும் என்று நம்ப முடியவில்லை. அண்ணா கொஞ்சம் கூட இருப்பவர்களின் ஆலோசனைகளுக்குச் செவி சாய்க்கிறார். அதன் பேரில் பாரதமாதா படத்தை எடுத்தார்.நாளைக்கே முஸ்லீம்களை அரவணைப்பதற்காக வந்தே மாதரம் சொல்லக் கூடாது என்று சொன்னாலும் நான் ஆச்சரியப் பட மாட்டேன். தங்களது செக்குலார் பிம்பத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் வளர்த்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்த்தத்திற்கு அண்ணா தள்ளப்பட்டு அவ்வப் பொழுது சமரசங்கள் செய்து கொள்கிறார். காங்கிரஸுக்கு எப்படியும் பி ஜே பியும் அண்ணாவின் ஜன் லோக்பாலை ஏற்றுக் கொள்ளாது என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆகவே நமது பெயர் மட்டும் கெடப் போவதில்லை கூடவே பி ஜே பி யின் இமேஜும் கெடும் என்ற நம்பிக்கையில் காலம் கடத்துகிறார்கள். பி ஜே பி யினருக்கோ அண்ணாவின் ஜன் லோக்பால் நம்மையே பூமராங் போலத் தாக்கி விடுமோ என்ற அச்சம் உள்ளூர இருக்கிறது. சிவன் வரம் கொடுக்கும் அரக்கர்கள் போல நம் மீது திரும்பி விடுமோ என்ற அச்சத்தில் கூடிய மட்டும் இதை மக்கள் காங்கிரஸுக்கு எதிரான கோபமாக திரும்பட்டும் என்ற எண்ணத்தில் அமைதி காக்கிறார்கள். பலமான லோக்பால் சட்டம் வேண்டும் என்று சொல்லும் பி ஜே பி தலைவர்கள் எவருமே அண்ணாவின் லோக்பாலை ஆதரிக்கிறோம் அல்லது எதிர்க்கிறோம் என்று இது வரை சொல்லாததையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு விதக் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். ஆனால் என்னைப் போன்ற பி ஜே பி யின் மென் ஆதரவாளர்களோ, தீவிர ஆதரவாளர்களோ பலரும் இந்தத் தருணத்தைப் பயன் படுத்தி ஒரு கடுமையான சட்டம் கொண்டு வர பி ஜே பி தன் அச்சங்களை ஒத்தி வைத்து விட்டு முயல வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறோம்.

2. ஆக வலது, இடது. நடு என்று எந்தக் கட்சிகளுக்கும் இந்தச் சட்டம் வருவதில் ஒப்புதல் இல்லை. ஆனால் மேடை அரசியலுக்காக வலுவான சட்டம் வேண்டும் என்று பேசிக் கொள்கிறார்கள். மாயாவதி கூட அண்ணாவை ஆதரித்து வாய்ஸ் விடுகிறார். இடதுசாரிகள் போராட்டம் நடத்தப் போகிறார்களாம் (ஆட்சியில் இல்லாத தைரியம்தான் ) கொஞ்சம் நெருக்கி முகத்துக்கு நேராக நாளைக்கே ஜன் லோக்பால் மசோதா ஓட்டுக்கு வந்தால் ஓட்டுப் போடுவீர்களா மாட்டீர்களா என்று கேட்டால் பதில் சொல்லாமல் அனைவரும் காணாமல் போய் விடுவார்கள் என்பதே உண்மை. இதில் பி ஜே பி துணிந்து ஒரு முடிவு எடுத்து அண்ணாவிடம் பேசியபின் ஜன் லோக்பாலை சில மாறுதல்களுடன் ஒரு மசோதாவை நாங்களே கொண்டு வருகிறோம் அதை ஆதரிக்கிறோம் என்று சொல்வார்களேயாயின் அவர்களுக்கு அடுத்த தேர்தலில் அபரிதமான லாபம் இருக்கும். இந்த ஆதாயம் தெரிந்தும் கூட வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாமல் மழுப்பியே வருகிறார்கள்.

3. காங்கிரஸுக்கு பி ஜே பி ஆதரவு தராது என்ற நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும் கூட தன் அடியாட்களான கிறிஸ்துவ சர்ச்சுகள், புகாரி போன்ற அடிப்படைவாத இஸ்லாமியத் தலைவர்கள், மறைமுகமாக ஆதரவு அளிக்கும் அருந்ததிராய் போன்றவர்கள், கரண் தப்பார், சர்தேசாய், பரக்காதத் போன்ற கூலிக்கு மாரடிக்கும் ப்ரோக்கர்கள் ஆகியோரை முழு மூச்சுடன் ஏவி விட்டிருப்பது அவர்களின் அச்சத்தையும்,விரக்தியையும் அவசர உணர்வையுமே காட்டுகிறது. நாளுக்கு நாள் அண்ணாவின் மீதான கூர்மையான திட்டமிட்டு நடத்தப் படும் தாக்குதல்களைக் கவனிக்கும் பொழுது அண்ணாவுக்கு வேறு எவருடனும் உள்கூட்டு இருக்க முடியாது என்பது புலனாகிறது. இது ஒன்றே அண்ணாவை ஒட்டு மொத்தமாக அனைவரும் ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறது

4. சரி காங்கிரஸுக்கு இதனால் நஷ்டமே, பி ஜே பிக்கும் இதில் முழு ஒப்புதல் இல்லை, அச்சம் உண்டு. மீதமுள்ள இடது, உதிரிகளுக்கு எல்லாம் இதில் விருப்பம் கிடையாது. ஆக இந்த சட்டம் அப்படி ஒரு வேளை வந்து விட்டால் அதில் சாதாரண நடுத்தர மக்கள் நேரடியாகவும், நடுத்தரத்துக்குக் கீழேயுள்ள ஏழை எளிய மக்கள் மறைமுகமாகவுமே பயன் படப் போகிறார்கள். ஆகவே ஜாதி, மத, கட்சி வேறுபாடுகளை மறந்து தங்கள் நலனுக்காக இந்திய மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்தப் போராட்டத்தினை ஆதரிக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. என் சந்தேகங்கள் அச்சங்கள் எல்லாம் ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு இதை நான் உரக்கவே சொல்கிறேன்.

5. அண்ணாவின் ஜன் லோக்பால் ஜனநாயக முறைப்படி இல்லை என்பது மற்றொரு குற்றசாட்டு. அப்படி என்றால் நம் பாராளுமன்றமும் நாட்டை ஆளும் காங்கிரஸ் கட்சியும் கூடத்தான் ஜனநாயகப்படி நடப்பதில்லை என்பேன். வெறும் 20 சதம் ஓட்டு வாங்கிக் கொண்டு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் இன்று நாட்டையே கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. எந்த அமைப்புதான் ஜனநாயக முறைப்படி இயங்குகிறது? ஏற்கனவே நம்மிடம் சி ஏ ஜி, தேர்தல் கமிஷன் போன்ற தன்னிச்சையான பல அமைப்புகள் வெற்றிகரமாக இது வரை இயங்கி வருகின்றன. அவற்றோடு ஜன் லோக்பாலும் மற்றொன்றாக இருக்கட்டுமே. காலப் போக்கில் அதில் குற்றம் குறை இருந்தால் சீர்திருத்திக் கொள்ள வேண்டியதுதானே? பிள்ளையே பிறக்கவில்லை அதற்குப் பெண் பார்க்கும் கவலை எதற்கு? பிறந்து வளரட்டுமே. சி பி ஐ அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்கிறார்கள். சரி அப்படியானால் அதன் ஊழல் தடுப்புப் பிரிவு மட்டும் லோக்பாலுக்குக் கீழே போகட்டும் அதற்கு இன்னொரு பெயர் வைத்துக் கொள்ளுங்கள் மற்றபடி ஓமணக் குட்டியோட கொலைக் கேசுகளை விசாரிக்கும் சேதுராமையர் எல்லாம் ஒரிஜினல் சிபிஐக்குள்ளேயே இருந்து விட்டுப் போகட்டுமே. இதைப் போன்ற பிரச்சினைகளையெல்லாம் அண்ணாவுடன் பேசித் தீர்த்துக் கொண்டு பி ஜே பியே அண்ணாவின் மசோதாவைச் சமர்ப்பித்தார்கள் என்றால் அவர்களுக்கு நிச்சயம் நல்ல அறுவடை காத்திருக்கிறது, ஆனால் பி ஜே பி தன் தலையில் மண்ணைப் போட்டுக் கொள்வதிலும், காமிரா முன்னால் தப்பு செய்வதிலுமே ஆர்வமாக உள்ளார்கள்.

சமீபத்தில் அரசு அலுவலகங்களில் நடக்கும் லஞ்சங்களை நேரடியாக அனுபவபூர்வமாக உணர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன் இது நடுத்தர மக்களாகிய நமக்கு நல்லது. நமக்கு ஒரு நல்லது நடக்க வேண்டும் என்றால் வேறு எவரும் வந்து உதவ மாட்டார்கள். நாம் தான் போராட வேண்டும். நாம் அடிப்படையில் சுயநலமிகள். நம் சுயநலத்தை எல்லாம் இந்தப் போராட்டத்தில் காட்டுவோமே? சாதிப்போமே? நாளைக்கே வீடு கட்ட பெர்மிட் வாங்கவும், பட்டா வாங்கவும், ரேஷன் கார்டு வாங்கவும், பத்திரம் பதிவு செய்யவும் காசு கொடுக்க்காமல் வேலை நடந்தால் நமக்கு நாலு காசு மிச்சம்தானே? கூட நாலு மூடை சிமெண்டோ, ஒரு கிரவுண்டு நிலமோ, நாலு பவுன் தங்கமோ, அல்லது வாங்க வேண்டிய புத்தகங்களோ வாங்கிப் போடலாம்தானே, போக விரும்பும் இடங்களுக்குப் போகலாம்தானே. ஆகவே கட்சிகளைப் பற்றிக் கவலைப் படாமல் நமக்கு இதில் நன்மை உண்டு என்ற சுயநலம் கருதி வாருங்கள் அண்ணாவின் பின் போராடுவோம் இது நமக்காக நாம் போராட வேண்டிய விஷயம். ராகுலும், அத்வானியும், கருணாநிதியும் நமக்காகப் போராடப் போவதில்லை. அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும். முன்னால் நின்று அழ ஒரு பெரியவர் முன் வந்திருக்கிறார். கூட்டமாகப் போய் அழுது காரியத்தைச் சாதிப்போம்.

அன்புடன்
ராஜன்

அண்ணா ஹசாரே இணையதளம்

அண்ணா கட்டுரைகள் ஆங்கில மொழியாக்கம்

அண்ணா ஹசாரே ஜனநாயகக் கேள்விகள்

அண்ணா வெல்வாரா?

அண்ணா ஹசாரேவின் அரசியல்

அண்ணா ஹசாரே மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?

அண்ணா எதிர்வினைகள்

அண்ணா ஹசாரே,ஞாநி,சோ

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2

அண்ணா ஹசாரே கடிதங்கள்..

அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…

அண்ணா ஹசாரே,வசைகள்

அண்ணா ஹசாரே-2

அண்ணா ஹசாரே-1

முந்தைய கட்டுரைஅண்ணா-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅண்ணா ஹசாரே மீண்டும் ஒரு கடிதம்