உனக்கும் அயோத்திதாசருக்கும் என்ன சம்பந்தம்?

திரு செயமோகன்,

அயோத்திதாசரைப் பற்றி நீ மதுரையிலே பேசப்போவதாக செய்தி வாசித்தேன். அதைப்பற்றித்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நேரடியாகவே கேட்கிறேன். அதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது? நீ யார்? உனக்கும் அயோத்திதாசருக்கும் என்ன சம்பந்தம்? நீ ஒரு இந்துத்துவ வெறியன். இந்துமதத்தின் ஆறு தரிசனங்கள் என்ற பார்ப்பனியப் பிரச்சார நூலை எழுதியவன். விஷ்ணுபுரம் என்ற பார்ப்பனிய நாவலை எழுதியவன். நீ எப்படி அவரைப்பற்றிப் பேசலாம்?  இந்தமேடையை நீ எதற்காகப் பயன்படுத்துவாய் என்று எங்களுக்கெல்லாம் நன்றாகவே தெரியும். அயோத்திதாசர் பெரிய இவர், பெரியாருக்கு ஒன்றும் தெரியாது, பெரியார் அயோத்திதாசரை மறைத்துவிட்டார் என்று பேசுவாய். வேறென்ன பேசமுடியும்? உன்னுடைய நோக்கம் இதுதான். நன்றிகெட்ட தலித்துக்களில் சிலர் பெரியாரை அவதூறு செய்வதற்காக இப்படி உனக்கு மேடை போட்டுத் தருகிறார்கள். உன்னுடைய சதி நடக்காது. மக்களுக்கு உண்மை தெரியும். மக்களுக்கு சேவை புரிந்தவர்கள் யார் என்பது மக்களுக்கே தெரியும். உன்னுடைய வாலைச்சுருட்டிக்கொள்ளாவிட்டால் விளைவுகளை நீதான் அனுபவிப்பாய்.

ரத்தினவேல் குருசாமி

 

அன்புள்ள ரத்தினவேல்,

உங்கள் கடிதத்தைச் சுருக்கியிருக்கிறேன். இதே மாதிரி வந்த இருபது முப்பது கடிதங்களில் ஒன்றை மட்டும் என் பதிலுக்காகக் கொடுக்கிறேன். ஒப்புநோக்க நாகரீகமான கடிதம் இது. நன்றி.

அயோத்திதாசர் ஆய்வு நடுவம் என்பது நெடுங்காலமாகச் செயல்பட்டுவரும் அமைப்பு. அதன் அமைப்பாளர்களான பாரி செழியன், அலெக்ஸ் இருவரும் என்னுடைய நண்பர்கள். அவர்களுடைய அழைப்பின் பேரிலேயே இந்தக் கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.  உங்கள் குரலைப்போலவே வந்த பல்வேறு கடுமையான எதிர்வினைகளுக்குப் பாரி அவரது ஃபேஸ்புக்கில் பதில் சொல்லியிருக்கிறார் என்றார்கள்.

அயோத்திதாசர் ஒரு தமிழ்ச்சிந்தனையாளர். இந்திய, தமிழ்ப்பண்பாட்டைப்பற்றி ஆராய்ச்சிகள் செய்தவர். அவரது ஆராய்ச்சிகள் எவருக்கும் சொந்தமில்லை. நான் என்னுடைய ஆய்வுக்கு அவரது கருத்துக்களை அவ்வப்போது பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். அதை வாசித்துவிட்டு அதைப்பற்றிப் பேசும்படி என்னிடம் கேட்டார்கள்.

அயோத்திதாசரைப்பற்றி ‘நீங்கள்’ இதுவரை என்ன பேசியிருக்கிறீர்கள் என்றுதான் பாரி கேட்பார் என நினைக்கிறேன். உங்களுடைய இந்தப் பதற்றத்துக்கான காரணம் தெரியவில்லை. இருந்தாலும் நான் பேசப்போவதைப் பேசிவிடுகிறேன். அதைக்கேட்டபின் உங்கள் வழக்கமான பல்லவிகளைப் பாடுவதுதானே முறை?

மீண்டும் பொறுமையாக பணிவாகச் சொல்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட நூல்களை வாசித்துப்பாருங்கள்.  ‘இந்துஞான மரபின் ஆறு தரிசனங்கள்’ இந்து சிந்தனை மரபில் உள்ள  அவைதிக, நாத்திக,உலகியல்வாத சிந்தனைகளை விரிவாக விளக்கும் நூல். விஷ்ணுபுரம் பௌத்தஞானமரபையும் தாந்த்ரீக ஞானத்தையும் பழங்குடிஞானத்தையும் முக்கியமாக முன்வைக்கும் நாவல்.

 

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைராமாயணத்தை விடத் தொன்மையானதா இலியட்?
அடுத்த கட்டுரைமனமே தினமும்…