கல்வி -இன்னொருகடிதம்

டியர் சார்,

நலம் நலமே விழைக, தம்மம்பட்டியிலிருந்து ராகவேந்திரன்.நீண்ட நாட்களாயிற்று தங்களுடன் உரையாடி,மற்றும் கடிதம் எழுதி.வேலைப்பளு மற்றும் கடிதம் எழுதாமலே நம் இருவருக்கும் இடையே உள்ள நட்பு நிலையை நிலைநாட்டவும், மேலும் வீட்டில் அனைவரையும் கேட்டதாகக் கூறவும், ஈரோட்டில் வாசிப்பு இயக்கம் சார்பாக நடைபெற்ற அரவிந்தன் நீலகண்டன் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். அருமையாக இருந்தது அரவிந்தன் நீலகண்டனின் உரையைத் தங்கள் இணைய தள லிங்க் மூலமாக தான் அறிந்து சென்றேன், அதற்கும் நன்றி,

நிற்க, ஒரு ஆசிரியரின் கடிதம் எதிர்வினை பொங்கி எழுதியிருந்தார் நம் ஆசிரிய நண்பர் மகேஷ் ,நாமக்கல்.அவருக்கு வந்தனம்.நான் இருக்கும் தம்மம்பட்டி பகுதிக்கும் அவருக்கும் ஒரு 60 கிலோ மீட்டர் தூரம் தான் இடைவெளி, தம்மம்பட்டி அரசுப் பள்ளியில் தான் நான் +2 வரை படித்தேன். அவரை அந்த பள்ளிக்கு ஒரு முறையேனும் விசிட் வரச் சொல்லுங்கள், எங்கள் பகுதி ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் லட்சணங்களைப் பார்க்கச் சொல்லுங்கள், நீங்களாவது அவர்களை மானுட மிருகங்கள் என்று மட்டும் குறிப்பிட்டு இருந்தீர்கள். எனக்கு இருக்கும் கோபத்திற்கு அவர்களை எல்லாம் அரபிக் கடலுக்குக் கூட்டிச் சென்று கடலில் தள்ளியே விடுவேன். அவ்வளவு கோபம் அவர்கள் மீது உள்ளது.

ஒரு ஆசிரியர் கூட மருந்துக்கு நேர்மையாளர் கிடையாது, சொந்தமாக பிஸினஸ் செய்யாத ஆசாமி கிடையாது. ஒவ்வொருவரின் பெயர் எழுதி அவர்கள் செய்யும் பிஸினஸ் , அதிலிருந்து அவர்கள் மாதம் வாரியாக சம்பாதிக்கும் பெருந்தொகை முதற்கொண்டு ஆசிரியர்கள் வாரியாகக் கூட என்னால் நேரடியாக எங்கு வேண்டுமானாலும் தைரியமாகக் கூற இயலும் , எனது பிளாக்ஸ்பாட்டிலே வெளியிடச் செய்யவா என்று மகேஷ் அவர்களை நெஞ்சைத் தொட்டுச் சொல்லச் சொல்லுங்கள்,

ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு குறுநில மன்னர் போல எங்கள் ஏரியாவில் கோலோச்சி வருகிறார்கள். ஒரே ஒரு உதாரணம் , எங்கள் ஏரியா ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வாங்கும் சம்பளத்தைக் கூட முறையாக எண்ணத் தெரியாது.வேண்டும் என்றால் அவர்கள் வாங்கும் சம்பளத்தை 1 ரூபாய் காயினாக மாற்றித் தாருங்கள் தவறாகத்தான் எண்ணுவார்கள். முறையாக ஒரு விண்ணப்பம் கூடப் பூர்த்தி செய்யத் தெரியாது, பேங்க் சலான் பூர்த்தி செய்யத் தெரியாது, ஒரு ஆறாம் வகுப்பு மாணவனைத் தமிழில் வாயால் உச்சரிப்பதைப் பிழையின்றி ஒரு வெள்ளைத் தாளில் எழுதச் சொல்லுங்கள் , ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் சாயம் முழுவதும் வெளுத்து விடும்,

இவ்ர்கள் தான் இவ்வாறு என்றால் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். பையன் எந்த ஒரு சந்தேகமும் கேட்காமல் அன்றைய தினத்தைக் கழித்து விட்டாலே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கும்.  ஆசிரியர்கள் அவர்கள் செய்யும் சைடு பிஸினஸ் மட்டும் தான் அவர்கள் செய்யும் நித்திய பணி (பிரைமரி பணி) என்றும், ஆசிரியப் பணி என்பது அவர்களுக்கு செகண்டரி பணி யாகவும், ஏதோ அரசாங்கம் அவர்களுக்கு மன்னர் மான்யம் போல இலவசமாக சம்பளம் தருகிறது என்ற நிலையிலேயே அவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். கடை கடை யாக ஏறி இறங்கிக் கந்து வட்டி வசூலிக்கும் ஆசிரியரைக் காண்பிக்கவா, எங்கள் பகுதியில் , வரச் சொல்லுங்கள் மகேஷ் சாரினை, அவர் கூறியது போல நல்லவர்கள் மருந்துக்கு ஏரியாவிற்கு ஒன்றாகத்தான் உள்ளார்களே தவிர 90 சதவிகித ஆசிரியர்கள் புரையோடி உளுத்துப்போன காயலான் கடை வாசிகள்.

அதிலும் அளவிற்கு அரிய உண்மையைக் கண்டு பிடித்து டிஆர்பி தேர்வில் மோசடி நடைபெறவில்லை என்று கூறியுள்ளார். இதற்கு ஒரு எளிய உதாணரம் எனது மனைவி. சென்ற முறை டிஆர்பி தேர்வு எழுதி 3 முறை மறு மதிப்பீடு செய்தும் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார். இதற்குக் காரணம் அந்தத் தேர்வில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் தான். சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டும், இணையத்தில் ஆன்சர்கீ வெளியிட்டும், உயர்நீதிமன்றம் கேவலமான முறையில் திட்டியும் இரவோடு இரவாக அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கொடுத்த உத்தமர்கள் நமது கல்வி அதிகாரிகள். அவரை நன்கு விசாரிக்க சொல்லுங்கள் அல்லது எனது மெயில் முகவரிக்குத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள் நான் கோர்ட் ஆர்டர் மற்றும் எனது ஏனைய அனைத்து விண்ணப்பங்களின் நகல்களையும் தருகிறேன். ஒரு விடைத்தாளிற்கு 3 முறை 3 விதமான மதிப்பெண் தந்த அதி புத்திசாலியான அமைப்புத்தான் ஆசிரியர் தேர்வு வாரியம் என்னும் அமைப்பு, அதிலும் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் கோர்ட்டில் தந்த விளக்கம் அற்புதம், 2ஆம் முறை ஆன்சர்கீ தந்த போது இந்த முறை ஆசிரியர் தேர்வு வாரியம் திறமையான ஆசிரியர் குழு மூலம் திருத்தி உள்ளது என்றனர். முதல் முறை அவர்கள் அலுவலகப் பியூன் திருத்தினாரோ என்னவோ தெரியாது,

தயவு செய்து நடைமுறை உண்மையைப் புரிந்து கொள்ளச் சொல்லுங்கள், முந்தைய ஆசிரியர்களுக்கு சமுதாயத்தில் என்னவிதமான மதிப்பு மரியாதை இருந்தது, தற்போது உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சமுதாயத்தில் என்ன மரியாதை இருக்கிறது என்று மனசாட்சியைத் தொட்டு உணரச் சொல்லுங்கள். எங்கேயுமே நன்றாகச் சொல்லிக் கொடுக்கப்படும் ஆசிரியர் நிச்சயமாக மதிக்கப்படுவார் என்பது எனது 40 வயதில் நான் கண்ட அதி சத்தியமான உண்மை ,

ஆசிரியப் பெருமக்களைத் திருத்த அதிகம் ஒன்றும் செய்ய வேண்டாம்.எளிய வழிமுறைகள் சிலவற்றை அரசாங்கம் செய்தால் போதுமானது, ஆனால் அதைச் செய்ய எந்த அரசாங்கத்திற்கும் திராணி கிடையாது,

ஏதோ என்னால் ஆன சில எளிய ஆலோசனைகள்.

1) அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைச் செல்வங்களை நிச்சயம் அரசுப் பள்ளியில் சேர்க்கவேண்டும்.

2) 3 ஆண்டுக்குஒரு முறை கண்டிப்பாகப் பொது மாறுதல் செய் வேண்டும். அதிலும் மாவட்டம் விட்டு மாவட்டம்.

3) கணவன் மனைவி இரண்டு பேரும் ஆசிரியர் பணி செய்தால் கண்டிப்பாக ஒரே பள்ளியில் இருக்கக் கூடாது,

4) ஒவ்வொரு பெற்றோரிடமும் மாதம் தோறும் ஒரு ஆசிரியரின் பணி பற்றிய ஒரு விரிவான விவரணை அறிக்கை அதாவது அவர் பாடம் நடத்தியது பற்றி

5) தேர்ச்சி சதவிகிதத்திற்குத் தகுந்தாற் போல் ஊதிய உயர்வு விகிதம்

மகேஸ் சாரிடம் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கள்

கடைசியாக ஒன்று மட்டும் கூறிக் கொள்கிறேன் பாரதி கூறிய வரிகள் தான், படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் அய்யோ என்று போவான்

-ராகவேந்திரன், தம்மம்பட்டி.

 

அன்புள்ள ராகவேந்திரன்

தனிப்பட்ட முறையில் இதிலுள்ள விவாதத்தைத் தொடர வேண்டாமென நினைக்கிறேன். நானும் நீங்களும் மகேஷும் அவரவர் அனுபவங்களைக் கொண்டு இவ்விஷயத்தைப் பார்க்கிறோம். அனுபவங்கள் மாறுபடலாம்

இந்த விஷயத்தைக் கீறிவெளியே போட்டு விவாதிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதே பனைமரத்துப்பட்டி சீனிவாசனின் மரணம் காட்டும் சுவரெழுத்து. அந்த விவாதம் நேர்மையாக நடந்தாலே போதும்

ஜெ

 

முந்தைய கட்டுரைஓர் ஆசிரியரின் கடிதம்
அடுத்த கட்டுரைவசைகளும் வன்முறையும்