விதிசமைப்பவர்கள், அறம்

அன்புள்ள ஜெ..
விதி சமைப்பவர்கள் பற்றிய முதல் குறிப்பையும், ஏனைய குறிப்புகளையும் வாசித்து உள்ளேன்.

விதி சமைத்தவர்கள், சமைப்பவர்கள், எனவே சமைக்கப் போகிறவர்கள் – சமுதாயத்தில் ஒரு சிலரே – என்கிற சுருக்கம் அதிகமாகவே சீண்டுகிறது.

சாய் முனை (tipping point), இமைக்கும் தருணம் (Blink) என்கிற நான்-பிக்‌ஷன் புத்தகங்கள்  எழுதிய மால்கம் க்லாடுவெல் (Malcom Gladwell) சமீபத்தில் – அவுட்லையர்ஸ் (outliers)  என்கிற புத்தகமும் எழுதியுள்ளார். வெற்றிகரமாகப் பிரகாசித்துள்ள நிபுணர்களை உருவாக்கிய சூழலை, பின்புலத்தை, அவர்கள் முன்னோடியை, அவர்கள் தம் முயற்சியை எனப் பல வேறு காரணிகளின் தொகுப்பு. (Beatles, Bill Gates, Robert Oppenheimer, Chris Langan (இவர் சரிதத்தில் ஒரு சோகக் கதை உண்டு), மற்றும் அரிசி சாப்பிடுபவர்கள் கணிதத்தில் தேர்ச்சி உடையவரா? – என்று பல நூதன கேள்விகள் – )

‘நம்மனைவரினுள்ளே  இருக்கும் நிபுணன்’ – (The genius in all of us) – என்கிற புத்தகமும் சற்று வித்தியாசமானது. இசை, கணிதம், மற்றும் விளையாட்டுத் திறன் பெரும்பாலும் ஜீன்ஸ் (genes) அடிப்படையில் திறமைகளைக் கைக் கொள்ளலாம் என்பதற்கு மாற்றாக வேறு சில காரணிகளை முன் வைக்கிறது. இரண்டு பாகமுள்ள புத்தகம் – 1 வாதம் (Argument) – 2. Evidence  என்று பிரிகிறது – தமிழில் மற்ற பகுதிகளை எண்ணிப் பார்த்த போது.. சற்று பிரச்சாரம் போலிருந்தது. எனவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

மூன்றவதாக – குழுவின் ஞானம் – (Wisdom of the crowd) by James Surowiecki – கூட்டமாக சிந்திக்க இயலுமா? அறிவார்ந்த குழு எப்படி இருக்கும்? எப்பொழுது வேலை செய்யும்? எப்பொழுது வேலை செய்யாது – என. வணிகம், கணிதம், பொருளாதாரம், psychology என பல துறைகள் பயனடைந்துள்ளது. இங்கே ஒரு தனி நபரைக் காட்டிலும் ஒரு குழு, வினையைச் சமைத்துள்ளது.

இவை மூன்றும் – விதி சமைப்பவர்கள் வாதத்தில் மாற்று அணுகுமுறையாக இருக்குமென எண்ணுகிறேன்.

இந்தத் தலைப்பில் விவாதம் நடக்க வேண்டுமென நினைக்கிறேன். சீண்டினாலும் சரிதான்.

அன்புடன் முரளி

அன்புள்ள முரளி

ஆம், நீங்கள் சொல்வது உண்மை. பல அடிப்படை விஷயங்களை இதைச் சார்ந்து யோசிக்கலாம்.  முக்கியமாக மூன்று

1. ஒருவரை விதி சமைப்பவராக ஆக்குவதில் அச்சூழலுக்கு இருக்கும் பங்களிப்பு

2. குடும்பப் பாரம்பரியத்தின் பங்களிப்பு.

3. தற்செயலின் பங்களிப்பு

ஜெ

அன்புள்ள ஜெ,

கொஞ்சம் சாவதானமாக நேரம் கிடைத்ததால் தங்கள் தளத்தில் ‘அறம்‘ படிக்க முடிந்தது. ஆரம்பத்தில் சாதாரண உரையாடலாகத் துவங்கிப் பின் எரிமலையின் சீற்றத்தில் முடிந்த ‘அற’த்தின்அனுபவம் புதிதாக இருந்தது.

//‘ஆமா அறம்தான். ஆனா அது அவகிட்ட இல்ல இருந்தது…’ என்றார்// அற்புதம்.

எனக்கு ஒரு சந்தேகம், ‘அறம்’ பாடினால் அதைக் கேட்கும் அரசர்கள் மாண்டு போவார்கள் என்று படித்திருக்கிறேன். அதாவது பலிக்கும். கிட்டத்தட்ட சாபம். (உதாரணமாக விளங்காமல் போவாய்.. என்று சபிப்பதாய்க் கொள்வோம்). சாபம் என்பதே ஒரு மனிதனின் மனதில் அவன் செய்த பிழையைச் சுட்டி அவன் என்ன கதிக்கு ஆளாவான் என்பதை அவனது மனதில் ஆழப் பதியும் வகையில் உடல் மொழியாலும், உரத்த சொல்லாலும், வேகமான உணர்ச்சியாலும் பதிந்து விடுதல் தானே. அவ்வாறு பதியப் பட்ட வார்த்தைகள் அதைச் சொன்னவனின் உணர்ச்சியுடனும், உடல் மொழியுடனும் மீண்டும் மீண்டும் கேட்டவன் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும். பின் மூளை அதனை ஒரு கட்டளையாக எடுத்துக் கொண்டு நேரம் கிடைக்கும் போது அதனைச் செயல் படுத்தி விடுகிறது. சாபம் இப்படித்தான் பலிக்கிறது என்பது எனது அபிப்பிராயம்.

இப்போது சந்தேகம் என்னவெனில், நேரடியாக ஒருவரைச் சபிக்க மனமில்லாத அல்லது தைரியம் இல்லாதவர்கள் அந்த நபர் இல்லாத நேரத்தில் அவர்களை மனதிற்குள்ளேயே சபிப்பார்கள். ஒருவரது ஆழ்மனதைத் தொடாத, ஏன் தெரிவிக்கப் படாத இந்த ஊமைச் சாபம் பலிக்கும் சாத்தியம் உண்டா?

ஒருவேளை ‘அறம்’ என்பதும் நான் கேட்கும் சாபம் என்பதும் வேறு என்று நீங்கள் கருதினால் அதனை விளக்கலாம். அடிப்படையைப் புரிந்து கொள்ள உதவும்.

தங்கள் பணி சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.

அன்புடன்,

ராம்

அன்புள்ள ராம்

நேரடியாகச் சபிக்க மனமில்லாத நிலை என்பது சாதாரணமான ஒன்றுதான். அத்தகைய அச்சங்கள், தயக்கங்கள் எல்லாவற்றையும் தாண்டிக் கட்டற்றுப் பீறிடும் ஆதாரமான அற உணர்ச்சிக்கு மட்டுமே ‘அறம்’ ஆகும் வல்லமை உண்டோ என்னவோ?

கண்ணகி,தன்னை ஒரு பெண்ணாக, குலமகளாக, நினைத்துத் தயங்கியிருந்தால் மதுரை எரிந்திருக்காது.

ஜெ

முந்தைய கட்டுரைசி என் டவர்
அடுத்த கட்டுரைஅவதாரம்,குருகு கடிதங்கள்