தொற்றிலக்கியவாதிகள் என்னும் இனம்

அவதூறுகள் குறித்து…

வசைகள்

வாசகனின் அலைக்கழிப்புகள்

விருதுகள்- ஆள்பிடித்தல், முன்வைத்தல்

அவதூறுகள் ஏன்?

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விழாவுக்கு வருவதற்கு முடிவெடுத்தபோது உருவான கெடுபிடிகள், மிரட்டல்கள், கெஞ்சல்கள் பற்றி இளங்கோவன் முத்தையா என்னும் எழுத்தாளர் எழுதியிருக்கிறார். அதில் அதேபோன்ற அனுபவங்களை அடைந்ததாக ஜா.தீபாவும் எழுதியிருக்கிறார்.

நடந்தது ஒர் இலக்கிய விழா. பொதுவான விழா. அனைவருக்கும் மதிப்புக்குரிய ஒரு கவிஞரை கௌரவிக்கும் விழா. அதற்கு ஏன் இந்த கெடுபிடிகள், இத்தனை பதற்றங்கள் எதற்காக? இவர்கள் என்னதான் பதற்றப்பட்டாலும் கெடுபிடிகள் செய்தாலும் விழா பெரிதாகிக்கொண்டேதான் செல்கிறது என்பது இவர்களுக்கு உண்மையிலேயே தெரியவில்லையா என்ன?

நான் விழாவுக்கு வந்திருந்தேன். கோவையில் என் நண்பரின் வீட்டில் தங்கியிருந்தேன். அவருக்கு இலக்கியமே தெரியாது. ஆனால் விழாவுக்கு வந்தவர் இரண்டுநாளும் முழுநேரமும் விழாவில் இருந்தார். “நல்ல ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி இருக்குப்பா. யாரையும் திட்டாம, கண்டிக்காம ஒரு கூட்டம் தமிழ்நாட்டிலே நடக்குதுன்னாலே நம்ப மாட்டாங்க” என்றார்.

ஒரே நாளில் அவருக்கு தமிழ் அறிவுலகில் என்ன நடக்கிறது என்று புரிந்தது. பாவண்ணனிடம் அவர் உரையாடினார். “பெரிய எழுத்தாளர் அப்டி தன்மையா இருப்பார்னு நினைக்கவே இல்லை” என்றார்.

ஆனால் ஊருக்கு வந்தபின் ஓர் இலக்கிய நண்பரைச் சந்தித்தேன். “விஷ்ணுபுரம் விழாவில் விக்ரமாதித்யனை அவமானப்படுத்திவிட்டார்கள்” என்று கொதித்தார்.

“என்ன நடந்தது?” என்று நான் கேட்டேன்.

“அங்கே எல்லாரும் ஜெயமோகனை கொண்டாடினார்கள். அவரைப்பற்றியே புகழ்ந்தார்கள். அவ்வளவு பெரிய கவிஞரை யாருமே பொருட்படுத்தவில்லை” என்றார்.

”நீங்கள் விழாவுக்குப் போய்ருந்தீர்களா?” என்று நான் கேட்டேன்.

“இல்லை, போய்விட்டு வந்தவர் சொல்லி வருத்தப்பட்டார்” என்றார்.

நான் சொன்னேன் “நான் விழாவுக்கு போயிருந்தேன். அங்கே ஜெயமோகன் பெரும்பாலும் கண்ணுக்கே தென்படவில்லை. அவரைப்பற்றி எவருமே பேசவில்லை. விழாவே விக்ரமாதித்யனை மட்டும் மையமாக்கித்தான் நடந்தது”

உடனே அவர் பேச்சை மாற்றினார். “அது கார்ப்பரேட் விழா. கார்ப்பரேட் பாணியில் நடத்துகிறார்கள்” என்றார்.

“கார்ப்பரேட் பாணியில் சகல ஏற்பாடுகளையும் நுணுக்கமாகச் செய்து பிழையே இல்லாமல் நடத்தும்போதுகூட நீங்கள் இப்படி குறை சொல்கிறீர்கள். உண்மையில் ஏதாவது குளறுபடி நடந்திருந்தால் விட்டுவைத்திருப்பீர்களா? பேசுவதற்கு குற்றம்குறை கிடைக்கவில்லை என்பதுதானே உங்களுடைய பிரச்சினை?” என்றேன்.

“அது ஜெயமோகனின் அடிப்பொடிகளின் கூட்டம்” என்றார்.

“அங்கே தமிழில் இன்று காத்திரமாக எழுதும் பெரும்பாலும் அத்தனை படைப்பாளிகளும் வந்திருந்தனர். அனைவருமே ஜெயமோகனின் அடிப்பொடிகள் என்றால் நீங்கள் தமிழிலக்கியம் பற்றி சொல்லவருவது என்ன?” என்றேன்.

அதன்பின் அவருக்கு கட்டுப்பாடு போய்விட்டது. கண்டபடி வசை. ஒரு மணிநேரம். நான் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அவருடைய பிரச்சினைதான் என்ன?  இவ்வளவு சிறப்பாக நிகழும் ஓர் இலக்கிய கொண்டாட்டத்தை இத்தனை வெறுக்கச் செய்வது எது? என்னால் இவர்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

 

ஜி.கார்த்திக் ராம்

 

அன்புள்ள கார்த்திக்,

இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்தவர்களில் ஏறத்தாழ 120 பேர் இதுவரை எங்கள் பதிவுகளில் இல்லாதவர்கள். பெரும்பாலும் அனைவருமே முப்பது வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்.

ஆரம்பத்தில் எங்களுக்கு கொஞ்சம் குழப்பமெல்லாம் இருந்தது. இந்தப் புதியவர்கள் உண்மையான இலக்கிய வாசகர்களா, அல்லது ஜெய்ராம் ரமேஷ் வருவதனால் ஆதரித்தும் எதிர்த்தும் வரும் அரசியல்கும்பலா? அவர்கள்மேல் எங்களுக்குக் கட்டுப்பாடு இருக்குமா? ஆகவே சில சிறப்பு ஏற்பாடுகளும் செய்திருந்தோம். ஆனால் வந்தவர்கள் அனைவருமே இலக்கிய வாசகர்கள். அவர்களின் பங்களிப்பு பிரமிப்பூட்டும்படி இருந்தது.

அத்துடன் அவர்களில் அனேகமாக எவருமே சமூகவலைத்தளங்களில் இல்லை. சமூகவலைத்தளங்களில் புழங்கி அதையே கருத்துலகமென்று நம்பியிருக்கும் சற்று மூத்த படைப்பாளிகள் பலர் அதிர்ச்சி அடைந்தது தெரிந்தது. ஒருவர் என்னிடம் சொன்னார். “இவனுங்க எங்க இருந்தாங்க? கண்ணிலேயே படலியே”

ஓர் இளைஞரிடம் நான் கேட்டேன். “நீங்க ஃபேஸ்புக்ல இல்லியா?”

அவர் “ஃபேஸ்புக்கா? அதெல்லாம் அங்கிள்ஸோட ஏரியா சார்” என்றார்.

வேடிக்கையாக இருந்தது. நீங்கள் சொல்லும் இந்த விவாதங்கள், அரசியல்கள் எல்லாம் சம்பந்தமே இல்லாத ஒரு சிறு வட்டத்திற்குள் நிகழ்கிறது. இன்று இலக்கியத்தை வாசிப்பவர்கள் வேறு திசையில் இருக்கிறார்கள். விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்திருந்தால் எவரும் அதை கண்கூடாகவே பார்க்கமுடியும்.

நீங்கள் சொல்லும் அந்த சின்னக்குழு ஒரே இடத்தில் சுற்றிச்சுற்றி வருவது. முகநூலின் செயல்முறை என்பது நம்மைச்சார்ந்தவர்களை மட்டுமே நமக்கு காட்டுவது. அதுவே உலகம் என நாம் எண்ண ஆரம்பிக்கிறோம். முகநூலில் புழங்கும் கசப்புகள், காழ்ப்புகள், வம்புகள், சில்லறை அரசியல் ஆகியவை அதை கொஞ்சம் வயது முதிர்ந்தவர்களுக்கான மடமாக ஆக்குகின்றன என நினைக்கிறேன். அதை பொருட்படுத்த வேண்டியதில்லை.

இந்த இலக்கிய நிகழ்வின்மேல் காழ்ப்பு பெருக்குபவர்கள் எவர் என கேட்கிறீர்கள். அவர்கள் வேறெந்த இலக்கிய நிகழ்வின் மேல் பற்று காட்டியிருக்கிறார்கள்? எந்த இலக்கியவாதியை பாராட்டியிருக்கிறார்கள்? அவர்கள் கொண்டிருப்பது ஒட்டுமொத்தமாக இலக்கியம் மீதான ஒவ்வாமை. அறிவுச்செயல்பாடுகள் மீதான கசப்பு. இன்று அதை ஒளிப்பதே இல்லை அவர்கள். வெளிப்படையாகவே எல்லாவகை அறிவுச்செயல்பாடுகளையும் பழித்து எழுதுகிறார்கள்.

கவனியுங்கள், ஒரு சின்ன விஷயம் போதும், ஒட்டுமொத்த அறிவுசார் செயல்பாடுகளையும் கீழ்மை செய்து கெக்கலித்து எழுதுவார்கள். அதற்கு அவர்கள் ஒரு பாவனையை மேற்கொள்வார்கள். அதாவது ’அறிவியக்கச் செயல்பாடுகொண்டவர்கள் சூழ்ச்சியும் தன்னலமும் கொண்ட கயவர்கள், நாங்கள் எளிய, கள்ளமற்ற மக்களுடன் நின்றிருக்கும் நேர்மையாளர்கள்’

இவர்கள் மூன்று வகையினர். ஆழமான அரசியல், சாதி, மதப்பற்றுகொண்டவர்கள் முதல்வகை. உண்மையில் மூன்றும் ஒன்றுதான். இங்கே ஒருவருடைய அரசியலை அவருடைய சாதியும் மதமும் மட்டும்தான் தீர்மானிக்கிறது. இவர்களுடையது நேர்நிலையான பற்று அல்ல. சவலைப்பிள்ளை அம்மா முந்தானையைப் பிடித்துக்கொண்டிருப்பதுபோல எதையாவது பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். எதிர்மனநிலையே இவர்களின் இயல்பு. காழ்ப்பின் வழியாகவே அவர்கள் தங்கள் பற்றை வெளிப்படுத்திக்கொள்ள முடியும்.

இரண்டாம் வகையினர் வெற்றுப்பாமரர். அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் அவர்களின் எளிய உலகியல் அன்றாடத்திற்கு அப்பாலுள்ள அனைத்தின்மேலும் அச்சமும் அதன் விளைவான காழ்ப்பும் இருக்கும். அதை கிடைத்த இடத்தில் கக்கி வைப்பார்கள். மீம்களுக்கு இளிப்பார்கள்.

ஆனால் இவ்விரு கோஷ்டியும் இலக்கியத்திற்கு வெளியே இருப்பது. இலக்கியச்சூழலுக்குள் ஒரு சாரார் உண்டு. எல்லா சூழலிலும் இலக்கியச் செயல்பாடுகளுக்கு முதன்மை எதிரிகள் ’தொற்றிலக்கியவாதிகள்’ என்னும் ஒரு வகையினர்தான். இலக்கியத்தின்மேல் வளரும் பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள் இவர்கள்.

இவர்கள் இளமையில் கொஞ்சம் படிப்பார்கள். இலக்கியச்சூழல், அறிவியக்கம் பற்றி தோராயமாகத் தெரிந்து வைத்திருப்பார்கள். பெயர்களையும் நூல்களையும் சொல்ல முடியும். ஒரு கட்டத்தில் எழுத ஆரம்பிப்பார்கள். சிற்றிதழ நடத்துவார்கள். இலக்கியக்கூட்டம் நடத்துவார்கள். புத்தகம் போடுவார்கள்.

ஆனால் இலக்கியப்பங்களிப்பு என்பது அத்தனை எளிதல்ல. ஈடுபடும் அனைவருக்கும் அதில் வெற்றி அமைவதில்லை. இலக்கியச்சூழலில் இடமும் கிடைப்பதில்லை. அதற்கு உண்மையான ஒப்பளிப்பும் நீடித்த உழைப்பும் தேவை. வெறுமே  தொட்டுச்செல்பவர்களுக்குரியது அல்ல இலக்கியம்.

மிகத்தீவிரமாகச் செயல்பட்டாலும்கூட இயற்கையிலேயே நுண்ணுணர்வும் கற்பனையும் இல்லாதவர்கள் புனைவிலக்கியத்தில் பெரிதாக ஒன்றும் எழுதமுடியாது. இயல்பிலேயே கற்பனை அற்றவர்களுக்கு பயிற்சியால் பெரிய அளவில் திறன் உருவாவதும் இல்லை. இது கொஞ்சம் வருத்தம் தரும் உண்மைதான். அறிவுத்திறன் குறைந்தவர்கள் இலக்கியத்தில் எளிய கருத்தாளர்களாகக்கூட நீடிக்க முடியாது.

தேவையான அறிவு மற்றும் சிறப்புத் தகுதிகள் இல்லாதவர்கள் தோல்வியடைவது எல்லா துறைகளுக்கும் உள்ளதுதான். ஆனால் இலக்கியத்தில் மட்டும் தோல்வியடைபவர்கள் அத்துறையை குற்றம்சாட்டுவார்கள். அதிலேயே பூஞ்சைக்காளான்களாக ஒட்டிக்கொண்டு நீடிப்பார்கள்.

ஏனென்றால் மற்ற துறைகளில் சாதனைகள் என்பவை புறவயமானவை, திட்டவட்டமானவை. இலக்கியத்தில் சாதனை என்பது அகவயமாக முடிவுசெய்யப்படுகிறது. டெண்டுல்கரை விட தான் பெரிய கிரிக்கெட் வீரர் என ஓர் உள்ளூர்க்காரர் சொல்லிக்கொள்ள முடியாது. தல்ஸ்தோயைவிட தன் எழுத்து மேல் என எவரும் சொல்லிக்கொள்ளலாம். இலக்கியத்தில் புறவயமான அளவுகோல் இல்லை. எதையும் ஐயமின்றி நிரூபிக்கவும் முடியாது. புறவயமாக இருப்பது சூழலில் உள்ள பொதுவான ஏற்பு மட்டுமே. அந்த ஏற்பு சூழலில் உள்ள சதிகளால் தனக்குக் கிடைக்கவில்லை, காலம் மாறும்போது கிடைக்கும் என சொல்லிக்கொண்டால் அப்பிரச்சினையையும் கடந்துவிடலாம்.

[அனைத்தையும் விட இன்னொன்று உண்டு, மிக இளமையிலேயே ஏதேனும் ஒரு கொள்கைக்கோ கோட்பாட்டுக்கோ அடிமையாகி பார்வை முழுக்க அதனூடாக நிகழும்படி ஆகிவிட்டவர்கள் அரிதாகவே அதில் இருந்து மீளமுடியும். அந்த கொள்கை,கோட்பாடு வழியாக அவர்கள் பார்த்து எழுதுவதற்கு எந்த மதிப்பும் இருக்காது. அந்தக் கொள்கைக்கும் கோட்பாட்டுக்கும் பெருமதிப்பு இருந்தாலும்கூட. ஏனென்றால் இவர்கள் ஒரு பெரிய ராணுவத்தின் ஒரு சிறு படைவீரர்கள் போலத்தான்]

தொற்றிலக்கியவாதிகள் எழுத ஆரம்பித்து தோல்வி அடைந்தவர்கள். தங்களுக்கென இடம் இல்லாதவர்கள் ஆனவர்கள். அதை உருவாக்கிக்கொள்ள முடியும் என்னும் நம்பிக்கையையும் இழக்கிறார்கள். அதுதான் இவர்களை காழ்ப்பும் கசப்பும் கொண்டவர்களாக ஆக்குகிறது.

இவர்கள் உள்ளூர தங்கள் தரம் என்ன என்றும், தாங்கள் செல்லக்கூடிய அதிகபட்ச தூரம் என்ன என்றும் தெரிந்திருக்கும். அது உருவாக்கும் சிறுமையுணர்வுதான் இவர்களின் நரகம். அது இவர்களின் உள்ளத்தை இருளச் செய்கிறது அங்கீகரிக்கப்படும் எதன்மேலும் கடும் எரிச்சல் கொள்கிறார்கள். வெற்றிபெறுபவர்களின் நிரந்தர விரோதிகள் ஆகிறார்கள். அவர்களையே எண்ணி எண்ணி எரிந்து எரிந்து வாழ்கிறார்கள். அவர்களைப் பற்றி எங்கே எவர் பேசினாலும் இவர்கள் அங்கிருப்பார்கள். அங்கே கசப்பை துப்பி வைப்பார்கள். அவதூறுகள் வசைகள் பொழிவார்கள்.

இவர்கள் கொள்ளும் பல பாவனைகள் உண்டு. அதிலொன்று ‘தோற்றுப்போன கலைஞன்’ என்பது. மேதைகள் அங்கீகரிக்கப்படாத சூழல் சில இடங்களில் உண்டு. ஆகவே அங்கீகரிக்கப்படாத அனைவரும் மேதைகள் அல்ல. தோற்றுப்போன பலரும் புறக்கணிக்கப்பட்ட மேதை என்னும் பாவனையையே இயல்பாகச் சென்றடைகிறார்கள். அந்தப்பாவனைக்குரிய மேற்கோள்கள் முதல் புலம்பல்கள் வரை இங்கே அடிக்கடி காணக்கிடைக்கிறது. அந்தப்பாவனைகொண்ட புகைப்படங்கள்கூட.

‘அப்படி என்ன நீ எழுதிவிட்டாய், காட்டு’ என இவர்களிடம் எவரும் கேட்பதில்லை. ஏனென்றால் இவர்கள் எழுதியவற்றை வாசித்து மதிப்பிடும் பொறுமையோ வாசிப்புத்தகுதியோ ரசனையோ பெரும்பாலானவர்களிடம் இல்லை. அவர்கள் அனுதாபத்துடன் ‘ஆமாம், திறமைக்கு மதிப்பில்லை’ என தட்டிக்கொடுத்துவிட்டுச் செல்வார்கள். இவர்கள் அந்த தன்னிரக்கத்தைப் பேணி வளர்த்து அதில் திளைப்பார்கள். அதிலிருந்து மேலும் காழ்ப்பை உருவாக்கிக் கொள்வார்கள்.

இன்னொரு பாவனை, ’அனைத்துத் தகுதிகள் இருந்தும் குடத்திலிட்ட விளக்காக இருந்துவிட்டுச் செல்பன் நான். நானாகவே விரும்பி இப்படி இருந்து கொண்டிருக்கிறேன்’ என்பது. அந்த தகுதிகள் என்ன என கேட்கும் சூழலில் இவர்கள் தலைகாட்டவே மாட்டார்கள்.

மூன்றாவது பாவனை, ‘சமரசமில்லாமல் விமர்சனம் செய்வதனால் எனக்கு எவரும் துணையில்லை’ என்பது. சமரசமில்லாமல் விமர்சனம் செய்தவர்கள் எவரும் முழுமையாக தனிமைப்பட்டதில்லை. அந்த விமர்சனத்திற்குப் பின்னால் உள்ளது ஒரு விழுமியம் என்றால் அவ்விழுமியமே அதற்குரிய ஒரு வட்டத்தை உருவாக்கி அளிக்கும். க.நா.சுவுக்கு இருந்த வட்டம் அவரால் விமர்சிக்கப்பட்டவர்களுக்கு அமையவில்லை.

இந்த ‘தொற்றிலக்கியவாதிகள்’தான் பெரும்பாலும் சூழலில் எதிர்மறைத் தன்மையை நிறைப்பவர்கள். எங்கும் தங்கள் சிறுமையைக் கொட்டி வைப்பவர்கள். இவர்களின் நிரந்தரமான கூற்று ‘இங்கே எல்லாமே சதிதான். குழுக்களாலும் காக்காய்பிடிப்பதாலும்தான் எல்லாம் தீர்மானமாகிறது….’

இந்தப்பாவனையை பொதுவாக பாமர உள்ளங்கள் உடனே ஏற்றுக்கொள்ளும். ‘நான் யோக்கியன், சூழல் கெட்டது’ என்பதே பாமரன் எப்போதும் கைக்கொள்ளும் நடிப்பு. ஒரு சாமானியனிடம் பேசுங்கள், ஐந்து நிமிடங்களில் இந்த பாவனை வெளிப்படும். அதற்கு மிக அணுக்கமானது மேலே சொன்ன தொற்றிலக்கியவாதிகளின் கூற்று. ஆகவே அந்தப் பாமரர்களும் ‘ஆமாங்க, ஒண்ணும் சரியில்ல. நல்லதுக்கு ஏதுங்க காலம்’ என்று உச் உச் கொட்டுவார்கள்.

அவ்வப்போது பொருட்படுத்தத்தக்க சிலரும் இப்படி உளறி வைப்பதுண்டு. அவ்வாறு சொன்ன ஒருவரிடம் நான் கேட்டேன். ‘தேவதேவன் குழு விளையாட்டு விளையாடுவார், அல்லது காக்காய் பிடிப்பார் என நினைக்கிறீர்களா?’ அவர் இல்லை என்றார். “சரி, தேவதச்சன்? விக்ரமாதித்யன்? அபி? பாவண்ணன்? இசை? இளங்கோ கிருஷ்ணன்?” அவர் விழித்தார். “சொல்லுங்கள், அதையெல்லாம் செய்து நவீத்தமிழ் இலக்கியத்தில் மேலே போனவர் யார்?” அவரால் பதில் சொல்லமுடியவில்லை.  அது தொற்றிலக்கியவாதி என்னும் அற்பனின் வரி. அதை இலக்கியமறிந்தோர் சொல்லக்கூடாது.

இங்கே இலக்கிய வாசகர்களின் உலகம் ஒன்று உண்டு. கண்ணுக்குத்  துலக்கமாகத் தெரியாவிட்டாலும் அதற்கு ஒரு தனித்த இயக்கம் உண்டு. அது எவரை ஏற்கிறது, எவரை மறுக்கிறது என்பதற்கு அதற்கே உரிய நெறிகளும் போக்குகளும் உண்டு. எவரும் சதி செய்தோ, கூச்சலிட்டோ, கூட்டம் கூட்டியோ அதை வென்றுவிடமுடியாது. அது அரிதாகச் சிலரை கண்டுகொள்ளாமல் கடந்துசெல்லும். இதுவரையிலான தமிழிலக்கியத்தில் அவ்வண்ணம் கடந்துசெல்லப்பட்ட ஒரே இலக்கிய ஆசிரியர் ப.சிங்காரம் மட்டுமே. ஆனால் கால்நூற்றாண்டுக்குள் அவர் தன் இடத்தை அடைந்தார்.

மற்றபடி இங்கே இலக்கியம் என எழுதிக்கொண்டிருப்பவர்கள் பல்லாயிரம்பேர். அனைவருக்கும் வாசகர்கள் இலக்கிய அங்கீகாரத்தை அளிக்கப்போவதில்லை. எப்படி விரிவாக இடமளித்தாலும் ஒரு தலைமுறைக்கு நூறுபேருக்குமேல் இலக்கியவாதி என அறியப்படுவது இயல்வதல்ல. எஞ்சியவர்களில் சிலர்தான் இப்படி தொற்றிலக்கியவாதியாக ஆகி வெறிகொண்டு பல்லும் நகமும் நீட்டி அலைகிறார்கள்.

இவர்கள் எந்த இலக்கியவிழாக்களையும் தவறவிடுவதில்லை என்பதைக் காணலாம். ஏனென்றால் அங்கேதான் அவர்கள் வெளிப்பட முடியும். முன்பு இவர்களின் கூச்சல்களுக்கு இலக்கியவிழாக்களின் டீக்கடைகளில்தான் இடம். இவர்கள் இன்று முகநூலில் கூச்சலிடுகிறார்கள். வம்பு வளர்க்கிறார்கள். காழ்ப்பைப் பரப்புகிறார்கள்.

இவர்களை பொருட்படுத்துபவர்கள் இலக்கிய வாசிப்பே இல்லாமல் வெறும் வம்புகளாகவே இலக்கியத்தை அறிந்து வைத்திருப்பவர்கள் மட்டுமே. இலக்கிய வாசகர்களுக்கு இவர்களால் பெரிய இழப்பு ஏதுமில்லை. ஆனால் இளம்வாசகர்களுக்கு தொடக்கத்தில் சில திசைதிருப்புதல்களை உருவாக்குகிறார்கள். அந்த வாசகர்கள் இலக்கியநூல்களை வாசிக்க வாசிக்க இவர்களின் தரம் தெரியவந்து தாங்களே முடிவெடுக்கக்கும் தகுதி கைகூடியவர்களாக ஆகிவிடுவார்கள். இவர்களுக்கு அடுத்த தலைமுறை இரைகள் வந்துசேரும்.

தொற்றிலக்கியவாதிகளில் பலர் முன்பு நம்முடன் அணுக்கமானவர்களாக இருந்திருப்பார்கள். அப்போது மெய்யான இலக்கிய ஆர்வமும் முயற்சியும் கொண்டவர்களாக இருந்திருப்பார்கள். அவர்கள் காழ்ப்பு கொண்டவர்களாக ஆகும்போது அவர்களின் அந்த பழையகாலத் தொடர்புகளும் பதிவுகளும் அவர்களுக்கு ஓர் அடையாளத்தை அளித்துவிடுகின்றன. அவர்கள் சொல்லும் திரிபுகளுக்கு சான்றுகளாகவும் ஆகிவிடுகின்றன. அந்தச் சிறிய அடையாளத்துடன் அவர்கள் சமூகவலைத்தளச் சூழலில் உலவி கசப்புகளையும் காழ்ப்புகளையும் அவதூறுகளையும் பெருக்குகிறார்கள்.

இந்த அளவுக்கு உளத்திரிபு எப்படி அமைகிறது? இலக்கியம் மனிதனை பண்படுத்தும் என்கிறார்கள். அதற்குக் கண்கூடான உதாரணங்கள் உண்டு. எனில் இவர்கள் ஏன் இப்படி ஆகிறார்கள்?

இது இலக்கியம் தோன்றிய நாள் முதல் இருந்து வருவதுதான். இலக்கியம் விளக்கென்றால் அதற்கு அடியில் தோன்றும் நிழல் இது என பழைய இலக்கிய மேற்கோள் சொல்கிறது. விளக்கால் உலகுக்கெல்லாம் வெளிச்சம் அளிக்க முடியும். இந்த நிழலை நீக்கிக்கொள்ள முடியாது.

இதைப்பற்றி  வாசகர் ஒவ்வொருவரும் கவனமாக இருக்கவேண்டும். வாசகர் அனைவரும் எழுத்தாளரோ விமர்சகரோ சிந்தனையாளரோ ஆகவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் வாசிப்பினூடாக அறிந்து தெளிந்தவற்றை தங்கள் துறைகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். தங்கள் ஆளுமையை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்துக்கும் மேலாக அன்றாட உலகியல் வாழ்க்கையின் சலிப்பூட்டும் அர்த்தமின்மையை கடந்துசெல்வதற்கான ஓர் அந்தரங்கமான பாதையாக வாசிப்பை மேற்கொள்ளலாம். வாசிப்பது என்பது எழுதுவதற்கான பயிற்சி மட்டும் அல்ல. அது ஆளுமைக்கான பயிற்சி.

அதற்கும் மேல் ஒருவருக்கு எழுதவேண்டும் என்று தோன்றினால் எழுதலாம்.  எழுதுவது நம்மை நாமே தொகுத்துக்கொள்ள உதவுகிறது. எழுதும் கணங்களின் ஆழ்ந்த நிலை நம்மில் இருந்து நாமறியா ஆழம் வெளிப்பட வகை செய்கிறது. ஆகவே அது மாபெரும் தன்னறிதல். ஒருவகை ஊழ்கம். இப்புவியின் எல்லா அல்லல்களில் இருந்தும் நாம் அதன் வழியாக மீண்டு மேலெழமுடியும். ஆகவே எவரும் எழுதலாம்.

எழுதும் எவரும் இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும் அறிவியக்கம் என்னும் மாபெரும் கூட்டுச்செயல்பாட்டில் தங்கள் கொடை என ஒரு துளியை அளிக்கிறார்கள். ஆகவே எதுவும் பயனற்றது அல்ல. ஒரு சிற்றூரில் எவரென்றே அறியாத ஒரு கவிஞர் ஒரு தொகுப்பை வெளியிடுகிறார் என்றால்கூட அவர் இந்த மாபெரும் பெருக்கில் இணைந்துகொள்கிறார் என்றே பொருள்.

அடிப்படையில் அந்த எளிய கவிஞருக்கும் ஷேக்ஸ்பியருக்கும் பெரிய வேறுபாடொன்றும் இல்லை. ஷேக்ஸ்பியர் கொஞ்சம் பெரிய துளி, அவ்வளவுதான். ஒருவர் உண்மையிலேயே பொருட்படுத்தத்தக்க ஏதாவது படைப்பை எழுதிவிட்டாரென்றால் ஆழமாக தோன்றுவது இந்த எண்ணம்தான். ‘நான் ஒரு சிறுதுளி, துளி மட்டுமே, ஆனால் இப்பெருக்கில் நானும் உண்டு’ .

இந்த தன்னுணர்வை திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுதப்படும் எந்த இலக்கியமும் வீண் அல்ல. எதுவும் ஏளனத்துக்கோ முழுநிராகரிப்புக்கோ உரியது அல்ல. அதை எழுதும் ஒவ்வொருவரும் உணர்ந்தாகவேண்டும்.

எழுதுபவர் கொள்ளவேண்டிய தன்னுணர்வு ஒன்று உண்டு. அதை ஓரு வஞ்சினமாகவே கொள்ளவேண்டும். எழுதுவதன் முதன்மையான இன்பமும் நிறைவும் எழுதும்போதே அடையப்படுகிறது. அங்கேயே எழுத்தாளனின் முழுமை நிகழ்ந்தாகவேண்டும். வாசிக்கப்படுவது, அங்கீகரிக்கப்படுவது நிகழ்ந்தால் நன்று. நிகழவில்லை என்றால்கூட எழுதும் இன்பமும் நிறைவும் குறைவுபடுவதில்லை.

வாசகனிடம் எழுத்தைக் கொண்டு சேர்க்க எழுத்தாளன் முயல்வதில் பிழையில்லை. ஒருவகையில் அவனுடைய கடமையும்கூட. ஆனால் எழுத்தாளன் தன் இடத்தை தானே வகுத்துக்கொள்ளவேண்டும். தன் தகுதியைக்கொண்டு, தன் பங்களிப்பைக் கொண்டு. அதற்கப்பால் வெளியே தேடலாகாது. தனக்கு அளிக்கப்படும் அங்கீகாரங்களை கணக்கிட ஆரம்பித்தால் வந்தமையும் மாபெரும் மனச்சோர்வொன்று உண்டு. அது எழுதுபவனின் நரகம்.

அந்த கசப்பு பொருட்படுத்தும்படி எழுதினோம் என உணர்பவனை தன்னிரக்கத்துக்கு கொண்டு செல்கிறது. பொருட்படுத்தும்படி எழுதவில்லை, எழுதவும் முடியாது என உணர்பவனை தொற்றிலக்கியவாதி ஆக்குகிறது. இலக்கியத்தில் ஒரு பூஞ்சைக்காளானாக படிந்திருப்பதே இலக்கியம் வாசிக்க ஆரம்பிக்கும் ஒருவன் சென்றடையும் ஆகக்கீழ்நிலை. ஒருபோதும் அங்கே நாம் சென்றுவிடலாகாது என வாசிப்பவர் ஒவ்வொருவரும் உறுதிகொள்ளவேண்டும். இன்றைய முகநூலின் வம்புச்சூழல் நம்மை நாமறியாமலேயே அப்படி ஆக்கிவிடும். அப்படி நாம் இருப்பதை நாமே உணரமுடியாமல் எல்லாவகையான ‘அறச்சீற்ற’ ‘அழகியல்நுட்ப’ பாவனைகளையும் நமக்கு அளித்துவிடும். அதை எண்ணி மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

எழுத்து- வாசிப்பு என்பது இப்புவியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மிகமிக வியப்புக்குரிய ஒரு பெருநிகழ்வு. அதன் பகுதியாக இருப்பதன் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் நாம் அடைந்தால் நம் அகம் நிறைவுகொள்ளும். நம்மை உந்தி உந்தி முன்னால்வைப்பது, பிறரை நோக்கி எரிவது, காழ்ப்புகளையும் கசப்புகளையும் உருவாக்கிக் கொள்வது எல்லாம் மாபெரும் கீழ்மைகள். இத்தனை பெரிய நிகழ்வில் இருந்து இத்தனை சிறுமையை நாம் அள்ளிக்கொள்கிறோம் என்றால் எவ்வளவு பெரிய வீழ்ச்சி!

ஜெ

முந்தைய கட்டுரைராதாமாதவம்- சுபஸ்ரீ
அடுத்த கட்டுரையானைடாக்டர் – கடிதம்