கல்குருத்து -கடிதங்கள் 11

கல்குருத்து- சிறுகதை

அன்புள்ள ஜெ

கேளாச்சங்கீதத்தின் இனிமை என்பது ஒரு வாசகர் சொன்னதுபோல அதிமதுரத்தின் இனிப்பு. கசந்து துப்புவோம். இனிப்பு கடுமையாக ஆகி கசப்பாக ஆகிவிடுவது அது. பெரும் தவிப்பு. ஆனால் இந்தக்கதையான கல்குருத்து மென்மையான இனிப்பு உள்ளது. சின்ன பூக்களில் கொஞ்சம் தேன் இருக்கும். அதனைப்போன்ற இனிப்பு. கேளாச்சங்கீதம் தரும் இன்பம் உலகம் சார்ந்தது அல்ல. புறவுலகில் அதற்கு இடமில்லை. அது ஒரு ஆன்மிகமான நிலை. ஆனால் கல்குருத்து முழுக்க முழுக்க உலகம்சார்ந்தது. வாழ்க்கை சார்ந்த இன்பம் இது. இந்த இன்பம் சிற்றின்பம், அது பேரின்பம் என்று வேண்டுமென்றால் சொல்லலாம். ஆனால் இதுவும் தெய்வக்கொடைதான்

சுவாமி

அன்பு ஜெ,

பள்ளியில் வேதியலில் கனிமச் சேர்மம் (inorganic chemistry) மிகவும் பிடிக்கும் எனக்கு. பொருள் (matter)  ஐ விரித்துக் கொண்டே உள் செல்லும் பயணம் எனக்கு வியப்பைத் தந்தது ஒரு காரணமாயிருக்கலாம். அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டக் கூடியளவு அதற்கு இருக்கும் வெளியைக் கண்டு பிரமித்திருக்கிறேன். அணுவில் நுழைந்து உள் செல்லச் செல்ல அதன் கருவில் உயிர்விசை அசைவாடுவது ஒரு திறப்பைத் தந்தது. நான் உயிரற்றது என்று கருதிய பொருள்களிலும் கூட அந்த உயிர்விசை இருந்திருக்கிறது. அசைந்தும் அசையாததும் யாவும் உயிர்விசையுடன் நிறைந்து ததும்பியிருப்பதாக எண்ணியிருக்கிறேன். தன்னில் தான் ஆழ்ந்து கிடக்கும் தனிமையைத் தவிர ஒரு போதும் தனிமையின் மீட்பு எனக்கில்லை என்றெண்ணியிருக்கிறேன்.

எங்கள் வீட்டின் முதல் அறையில் ஒரு துருப்பிடித்த இரும்பு மேசை உண்டு. என் மாமனிடம் அதை மாற்றிவிட்டு சில நாற்காலிகள் வாங்கிப்போட்டால் வீட்டுக்கு வருபவர்களுக்கு உட்கார வசதியாக இருக்கும் என்று பல முறை சொல்லியிருக்கேன். ‘அத எடுத்துட்டு தான் யாரும் உக்காரனும்னா அப்படியாரும் உக்காரவேணாம்’ என்பான். பைத்தியக்காரத்தனம் என்று நினைத்திருக்கிறேன். ‘சின்ன வயசுல இருந்தே கூட இருக்கு. அது இருக்கட்டுமே’ என்பான். காந்தியக் கலாச்சாரத்தின் மகத்துவம் தெரிவதற்கு முன் ‘பயன்படுத்து தூக்கியெறி கலாச்சாரம்’ மிக இளமையில் சுத்தமானதாக திறன்வாய்ந்தது என்று நினைத்தேன். இந்தியர்கள் பெரும்பாலும் பழைய பொருட்களுடன் உணர்வுப்பூர்வமாக தொடர்பிலிருக்கிறார்கள். பொருட்களும் மனிதர்களைப் போல உயிர்விசையுடன் இருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள் போலும்.

இயற்கையில் முற்றிலும் மூழ்கும் தருணத்தில்  அங்கிருக்கிருக்கும் மண்ணும் சிறு கல்லும் கூட அதிர்வதைப் போலேயிருக்கும். அதனுடன் உரையாடலாம். எந்தப் புது இடத்திற்குச் சென்றாலும் சிறு கல்லை எடுத்து வந்து சேமித்து வைக்கும் பழக்கம் எனக்கிருக்கிறது.

சென்ற வருடம் கலைஞர் விஜய் பிச்சுமணி அவர்களின் இம்பாசிபிலிட்டிஸ் (impossibilities) என்ற கலை அரங்கிற்குச் சென்றிருந்தேன். அவருடைய ஆற்றலின் கோடுகள் நுணுக்கமானவை. இந்தப் பிரபஞ்சத்தில் உயிரற்றதோ உயிரில்லாததோ யாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் ஆற்றலின் கோடுகளைத் தன் படைப்புகளில் தவழ விடுபவர். அதில் ‘மிகச் சிறிய கல்லைப் பிளந்த மெல்லிய விரிசலில் தவழ்ந்து கொண்டிருக்கும் காற்று’ அதை உற்று நோக்கும் அந்த கலையின் பார்வை மிகப் பிடித்திருந்தது எனக்கு.

“இது வித்து, உள்ள அவரு கருவடிவா கண்ணுறங்குதாரு” என்று சாத்தப்பன் ஆசாரி ஆகாயம் சிறுகதையில் சொன்னபோது அறிவியலையும் விஜய் பிச்சுமணியின் கலைப்படைப்புகளையும் அதனோடு இணைத்துக் கொண்டேன்.

கல்குருத்து சிறுகதையில் இவை யாவற்றையும் கோர்த்துக் கொண்டேன். “இந்தக்கல்லு இப்டி இந்த ரூபத்திலே இங்கிண இருக்கத்தொடங்கி ஆயிரம் லெச்சம் வருசமாகியிருக்கும். அதிலே காலமறியாம குடியிருக்குத தெய்வங்கள் உண்டு. இப்ப அதை நாம ரூபம் மாத்துறோம். அதுக்குமேலே காலதேவனுக்க கண்ணு விளப்போகுது… அதுக்கு நாம கல்லுக்க தெய்வங்கள் கிட்ட மன்னிப்பு கேக்கணும்லா?” என்ற கல்லாசாரியின் வரி நுண்ணிய உணர்ச்சிகளுடையது.

பார்ப்பதற்கு கல்லாயிருக்கும் எத்தனை மனிதர்கள். அவர்களையெல்லாம் கண்ணப்பன் வழி கண்டேன். யாவருக்குள்ளும் ஒரு வித்து உறங்குகிறது. இனிமையோ கடுமையோ நிரம்பிய வித்து. இரவில் கைகளைப் பிடித்துவிடும் வித்து, கருப்பட்டியை விரும்பிச் சுவைக்கும் பாட்டா பாட்டியின் வித்து.

இந்த நிலையில் வெண்முரசின் இளைய யாதவரை நினைத்தேன். கர்ணன் காணும் இளைய யாதவனின் புன்னகையின் ஆழம் அளப்பறியது. “இல்லாமலிருக்கக் கற்றவன் என்று எண்ணம் தோன்றியதுமே சித்தம் பல்லாயிரம் காதம், பல்லாயிரம் ஆண்டுக்காலம் கடந்து பின்னால் விரைந்தோடி அந்த விழிச்சந்திப்பை மீண்டும் அடைந்து திகைத்து நின்றது. யாதவனின் விழிகளின் ஆழத்தில் ஒரு புன்னகை இருந்தது. இருண்ட குளிர்ச்சுனையின் அடியில் கிடக்கும் நாணயம்போல.” ஒரு வகையில் மனிதர்களின் மனதை மறைத்திருக்கும் அனைத்துத் திரைகளையும் கலைந்து உடுருவிப் பார்த்து கனிந்து புன்னகைப்பவனாய்  இருக்கிறான். கல்லுக்குள் இருக்கும் குருத்தை அறிந்தவன் எனலாம்.

அழகம்மையைப் போல கல்லிலிருந்து எழுந்து வந்த குருத்தை உணர்வுப்பூர்வமாக பார்த்துக் கொண்டிருந்தேன். “கல்குருத்து” என்ற வார்த்தைக்காகவும் அதன் வித்துக் காணித்ததற்காகவும் நன்றி ஜெ.

பிரேமையுடன்

இரம்யா.

 

இணைப்பு: விஜய் பிச்சுமணியின் படைப்பு.

கல்குருத்து- கடிதம் -1
கல்குருத்து -கடிதம்-2
கல்குருத்து -கடிதம்- 3

கல்குருத்து -கடிதம்- 4

கல்குருத்து- கடிதம்-5

கல்குருத்து- கடிதம்- 6

கல்குருத்து கடிதம்- 7

கல்குருத்து- கடிதம் -8

கல்குருத்து -கடிதம் -9

கல்குருத்து கடிதம் 10

முந்தைய கட்டுரைவிட்டல்ராவ் கருத்தரங்கம் , சேலம்
அடுத்த கட்டுரைமதக்காழ்ப்புகள், கடிதங்கள்