விசை [சிறுகதை]

கரடிக்காட்டு எஸ்டேட் அருகே டிராக்டரில் வரும்போது நேசையன் வண்டியை நிறுத்தி இறங்கி கீழே கிடந்த தென்னையோலைகளை எடுத்து வண்டிக்குள் போட்டான்.

“என்னண்ணாச்சி ஓலைய பெறுக்குதீக?”என்று சாமிக்கண் கேட்டான்.

“கெடக்கட்டும்லே, என்னத்துக்காம் வச்சுக்கலாம்.”

“இப்பம் ஆரு ஓலை முடையுதா? தெங்கோலை கூரையுள்ள வீடு இப்ப எங்க இருக்கு? ஓலைமுடையுயதுக்கும் ஆளில்லை.”

“வெறகு எரிக்கலாமே?” என்றான் நேசையன்.

“அங்க நம்ம வீட்டு தோட்டத்திலே மட்டையும் ஓலையும் கெடந்து செதலரிக்குது… இப்பம் ஆரு ஓலையை வச்சு வெறகெரிக்காவ? கேஸ் சிலிண்டரு கூவிக்கூவி குடுக்கான்…”

“நீ சும்மா வாடே”

”கை அரிக்குது, என்னண்ணே?”

“ஏலே சும்மா வாறியா இல்லியா?”

டிராக்டர் மீண்டும் ஓலைகள் அருகே சென்றது. இறங்கி எடுக்கலாமா என்று நேசையன் நினைத்தான். பிறகு வேண்டாம் என்று முடிவெடுத்தான். தென்னை ஓலைகளுக்கு இன்று விலையே இல்லை. விறகாகக்கூட. தேங்காய்நாருக்கே விலை இல்லை. தென்னந்தோப்புகளில் அவற்றை குழிவெட்டி மூடவேண்டியிருக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்புகூட தென்னைமட்டைக்கு அவ்வளவு தேவை இருந்தது. முடைந்த ஓலை ஒரு கீற்று பத்துரூபாய் போயிற்று. தேங்காய் ஒன்று ஆறுரூபாய்க்கு போனபோது தேங்காய்மட்டை இரண்டுரூபாய்க்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தேங்காய்ப்பட்டினம் சாயவுக்கள் வண்டிகளில் வந்து எண்ணி எடுத்துக்கொண்டு காசு கொடுத்தார்கள். தேங்காய்நாரால் கயிறு முறுக்கிக்கொண்டிருந்தவர்கள். நைலான் கயிறுகள் வந்த பிறகு  தேங்காய்நாரை அப்படியே மெத்தை கம்பெனிக்கு கொடுத்தார்கள். இப்போது அவர்களுக்கும் நார் வேண்டியதில்லை.

நேசையனின் அம்மை இருபது வருடம் முன்புதான் செத்தாள். ஓலைக்காரி என்றுதான் அவளை ஊரில் சொல்வார்கள். அவளுடைய முழுவாழ்க்கையே தென்னையோலையுடன் இணைந்தது. அவனுக்கே ஓலைக்காரிமகன் என்றுதான் நீண்டநாள் பெயர் இருந்தது. ஓலை என்று இப்போதுகூட சிலர் சொல்வதுண்டு.

சாவதற்கு முந்தைய நாள்வரை கிழவி கை ஓயாமல் வேலைசெய்துகொண்டிருந்தாள். அதைப்பற்றி ஊரில் பலரும் அவனிடம் பேசியதுண்டு. அவன் ரப்பர் கொட்டை வியாபாரம், ரப்பர் ஷீட் வியாபாரம் என்று ஒரு ஆளாக அறியப்பட்டுக்கொண்டிருந்தான். “ஏம்பிலே, உனக்க அம்மைய இனியெங்கிலும் வீடடங்கி கிடக்கச் சொல்லுலே… பாவம் அறுவது எளுவது வருசமா வேலைசெய்யுதாள்லா?”என்று தங்கையா டீக்கனார் ஒருமுறை சொன்னார்.

“நான் சொன்னா கேக்கமாட்டா… கெட்டிப்போடவா முடியும்?”என்று நேசையன் சொன்னான்.

“நயமா சொல்லணும்” என்றார் டீக்கனார். “ஆனா நீ சொல்லுகது உண்மையாக்கும். சோலிசெய்த கையாலே சும்மா இருக்க முடியாது”

ஆனால் பெண்கள் அப்படி புரிந்துகொள்வதில்லை. நயமாக ஊசி இறக்குவார்கள். “என்னவே நேசையன் பெருவட்டரே… உமக்கு ரெண்டு வருமானம்லா… அங்க அம்மையும் கை நிறைய சம்பாரிக்குதாள்லா?”

அவன் ஒன்றும் சொல்லமாட்டான். ஆனால் கண்கள் கோத்துக்கொண்டபின் இன்னொரு கிழவி “அது பின்னே அப்டியாக்குமே. அரைபைசாவா இருந்தாலும் அரசனாக்குமே” என்பாள்.

அவன் ஆரம்பத்தில்  அம்மையிடம் சொல்லிப்பாத்தான். “அம்மை வீட்டிலே கிடக்கணும்… இனி என்னத்துக்கு கஷ்டப்படுதது? நான் சம்பாரிக்குதேன்லா?”

ஆனால் அம்மை அவனிடம் பேசுவது குறைவு. அவன் ஏதாவது சொன்னால் அவள் வேறெங்காவது பார்த்துக்கொண்டிருப்பாள்.

“நல்லா சொல்லுங்க… வயசான காலத்திலே நானாக்கும் வேலைக்கு விடுதேன்னு ஊரிலே போக்கத்தவளுக சொல்லுதாளுக” என்றாள் மேரி.

“நீ சும்மா கெட… நான் சொல்லுதேன்”என்றான் நேசையன். “இஞ்சேருங்க… வீட்டிலே இருந்து என்னமாம் செய்யுங்க. எருமை நிக்குது. பனையோலை கொண்டுவந்து தாறேன். பெட்டி செய்யுங்க. கையை சும்மா வைச்சிருக்க முடியாது. அதுக்குண்டானத செய்யுங்க… காலம்பற எந்திரிச்சு காட்டுக்குப் போகவேண்டாம்… ஊருக்கு ஆயிரம் நாக்காக்கும்”

ஆனால் அம்மை அதையெல்லாம் கேட்டதாகவே தெரியவில்லை. அவன் சொல்லச்சொல்ல அவள் எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்தாள். பின்னர் ஒன்றுமே தெரியாதவளாக எழுந்து போனாள். அவனுக்கு தெரிந்துவிட்டது, அவளிடம் ஒன்றும் சொல்லமுடியாது. அவள் செவியில்லாதவளாக ஆகி நெடுங்காலம் ஆகிவிட்டிருந்தது. அவள் பேசி சிரித்து அவன் பார்த்ததே இல்லை. அவளால் சிரிக்கமுடியுமா என்றே அவனுக்கு சந்தேகம்.

அவளுக்கு எப்போதுமே இடுப்பில் ஓர் அழுக்கு வேட்டி, மேலே இறுக்கிக்கட்டிய இன்னொரு அழுக்கு வேட்டி. ஒரு வேட்டி வாங்கி பாதிப்பாதியாக கிழித்துக்கொள்வாள். அதையே பகலிலும் இரவிலும் அணிந்திருப்பாள். பலநாட்களுக்கு ஒருமுறைதான் குளியல். அன்றைக்குத்தான் ஆடைமாற்றிக்கொள்வாள். அவள் எப்போது சாப்பிடுகிறாள் என்பதே தெரியாது. கூடவே இருந்து பார்த்துக்கொண்டிருந்தால் தெரியும் அவள் ருசியோ அளவோ பார்க்காமல் கையில் இருப்பதை நாலைந்து கவளமாக விழுங்கிவிடுவாள். “முதலை விளுங்குத மாதிரி திங்குதா” என்று அணைக்கரை ஆத்தா அவளைப்பற்றி சொல்வதுண்டு.

அவனுடைய அப்பன் அவனுக்கு மூன்றுவயதாக இருக்கும்போது பனையிலிருந்து விழுந்து இறந்தார். அவனுக்கு அது மங்கலாகத்தான் ஞாபகம். யாரோ ஏதோ ஓடிவந்து சொல்ல அம்மை நெஞ்சிலும் தலையிலும் அடித்துக்கொண்டு ஓடினாள். அவனை அணைக்கரை ஆத்தா வந்து அப்படியே கட்டிப்பிடித்து கூட்டிக்கொண்டு போய்விட்டாள். அவன் திரும்பி வந்தபோது வீட்டில் அப்பன் இல்லை. அம்மை மட்டும்தான் இருந்தாள். வெறித்த கண்களுடன் எதுகேட்டாலும் பதில் சொல்லாதவளாக இருந்தாள். அவன் அவளை அடித்து உதைத்து கூச்சலிட்டு சோறு கேட்டான்.

அதன்பிறகுதான் அம்மை அப்படி ஆகிவிட்டாள். அவனும் அதை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொண்டான். அவன் வீட்டுக்கு வருவதே சாப்பிடுவதற்காகத்தான். பள்ளிக்கூடம் அவனுக்கு சரிவரவில்லை. எட்டுவயதிலேயே ரப்பர் தோட்டத்துக்கு வேலைக்குச் சென்றுவிட்டான். பதினாறுவயது முதல் ரப்பர் பால் வெட்டினான். அதனுடன் இணைந்து ஒட்டுகறையும் ரப்பர் கொட்டையும் வாங்கி விற்க ஆரம்பித்தான்.

கையில் பணம் வந்தபோது அவன் அம்மைக்கு நல்ல சேலை வாங்கிக்கொண்டுவந்து கொடுத்தான். அவள் அதை தொட்டே பார்க்கவில்லை. வீட்டில் அரிசியும் மளிகையும் வாங்கி நிறைத்து வைத்தான். அவளுக்கு சமையலே தெரியவில்லை. அவளுக்கு தெரிந்ததெல்லாம் சோறுபொங்கி தேங்காய் அரைத்து துவையல் செய்வது மட்டும்தான். தேங்காய்த்துவையலை சோற்றில் போட்டு பிசைந்து தின்றுதான் அவன் வளர்ந்தான். அவன் நல்ல சோறு தின்றதெல்லாம் ஓட்டல்களில்தான்.

மேரியை அவன் திருமணம் செய்த அன்று அம்மைக்கு நல்ல வெள்ளை துணி அணிவித்தான். அணைக்கரை ஆத்தா வந்து அவளே சொல்லி வெள்ளை உடுக்கவைத்தாள். அம்மை அந்த கோலத்தில் சர்ச்சுக்கும் வந்தாள். அவனும் மேரியும் வந்து ஆசீர்வாதம் கோரியபோது மேரியின் தலையை சும்மா தொட்டாள்.

“இப்பவெங்கிலும் முகத்திலே ஒரு சிரிப்பு வந்தா நல்லாருக்குமே” என்று யாரோ சொன்னார்கள். ஆனால் அம்மை வழக்கம்போல அதையும் கேட்டதாக தெரியவில்லை.

அம்மையின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. அவள் அதிகாலையிலேயே எழுந்து இருட்டுக்குள் நடந்து தோட்டக்காட்டுக்கு போய்விடுவாள். யாருடைய தோட்டமானாலும் சாலையிலும் ஆற்றங்கரை மணலிலும் விழுந்துகிடக்கும் ஓலைமட்டைகள் பொதுச்சொத்து என்பது கணக்கு. அவள் ஊர் எல்லைக்கு அப்பால் காடு வரை போவாள். அயக்காட்டு எஸ்டேட்டில் ஆற்றுக்குள் ஐம்பது ஓலைகளாவது விழாமலிருக்காது. அவற்றை எடுத்து சேர்த்துக் கட்டி ஆற்றில் போட்டு நீரொழுக்கு வழியாக கொண்டுவருவாள். கரையில் இழுத்து எடுத்து கீறி உலரப்போட்டபின்புதான் சுடுகாப்பி குடிக்க வருவாள். அப்போதுதான் அவன் எழுந்து டிராக்டரை உறுமவைத்துக்கொண்டிருப்பான்.

அம்மைக்கு வந்த மாற்றம் என்றால் காப்பி குடிப்பதுதான். முன்பெல்லாம் காலையில் பழங்கஞ்சியில் உப்பு போட்டு குடிப்பாள். மேரி வந்தபின் ஒருநாள் காபி கொடுத்தது பிடித்திருந்தது. அதன்பின் காபி கேட்டு வாங்கினாள். அவளுக்கென ஒரு பெரிய சருவம். அது நிறைய கொதிக்கும் கடுங்காப்பி வேண்டும். கருப்பட்டி போட்டு காபித்தூளுடன் கொதிக்கவைத்த கருப்பான திரவம். அப்படியே கொதிக்கக்கொதிக்க சருவத்திலிருந்து வாய்க்குள் விட்டுக்கொள்வாள். பல்லில்லாத வாயிலிருந்து புகை கிளம்பும். டிராக்டரின் ரேடியேட்டர் மாதிரி.

“தீதின்னி… தீ தின்னிக்கெளவி…” என்று மேரி சொல்வாள். “அப்டியே வெந்து போவும் உள்ள”

“அவளுக்குள்ள எல்லாம் எப்பமோ வெந்து அடங்கியாச்சு பிள்ளே” என்றாள் வேலைக்காரி குருசம்மை.

காப்பிக்குப் பின் நேராக ஆற்றுக்குப்போய் முந்தையநாள் ஊறப்போட்ட  ஓலைக்கீற்றுகளை எடுத்துவந்து முடைய ஆரம்பிப்பாள். முடைந்த ஓலைகளை வெயிலில் போட்டு காயவைத்து அடுக்கி சுருட்டி கட்டி சிப்பங்களாக்கி கொட்டகையில் அடுக்குவாள். அது முடிய சாயங்காலம் ஆகிவிடும். அதன்பின் இடுப்பில் அரிவாளுடன் மீண்டும் ஒருமுறை ஓலைபொறுக்கச் சென்று அந்தி இருண்டபிறகுதான் திரும்பிவருவாள்.

இருட்டில் அவள் திரும்பி வரும்போது அவன் திண்ணையில்தான் இருப்பான். கிழவி மெலிந்து சிறுத்து ஒரு சிறுமியைப்போல ஆகிவிட்டிருந்தாள். அமர்ந்து அமர்ந்து கூன்விழுந்து இடுப்பும் ஒடிந்துவிட்டது. இடுப்பை ஒருகையால் தாங்கிக்கொண்டு இன்னொருகையை தொங்கவிட்டு மூன்றாம்கால் போல வீசி வீசி வருவாள். சருகு காற்றில் ஏற்றி எற்றி வருவதுபோலிருக்கும். அருகே வந்து உடலை உந்தி எழுந்து அவனை ஒருமுறை பார்ப்பாள். ஒன்றும் சொல்வதில்லை. அப்படியே வீட்டை வளைத்துக்கொண்டு கொல்லைப்பக்கம் போய்விடுவாள்.

அவன் இரவில் எப்போதாவது கொல்லைப்பக்கம் போவான். உரல் அருகே அவளே பழைய சாக்கை இழுத்துப்போட்டு ஓர் இடம் செய்துவைத்திருந்தாள். பழைய சாக்காலான ஒரு போர்வை. அதை போர்த்திக்கொண்டு லாடம்போல ஆகி தூங்கிக்கொண்டிருப்பாள். குறட்டை ஓசை சற்று விசில்கலந்து கேட்கும். அவன் அவளுக்கு கட்டில் மெத்தை எல்லாம் போட்டுக்கொடுத்து பார்த்தான். அது அவள் அந்த வீடு குடிசையாக இருந்தபோது படுத்திருந்த அதே இடம், அவள் அங்கிருந்து வரவில்லை.

அவன் சிலசமயம் நின்று அவளை பார்த்துக்கொண்டிருப்பான். அவளை அவன் அப்பன்  பேச்சிப்பாறையிலிருந்து கூட்டிவந்ததாக சொல்வார்கள். அங்கே ஒரு எஸ்டேட்டில் அடிமைவேலை செய்தவள். நாநூறுரூபாய் பணம் கட்டி அவளை மீட்டார். அவர் நல்ல பனையேறி. ஆனால் எந்த பனையேறிக்கும் அடிசறுக்கும். பனை தனக்கான உள்ளம் கொண்டது.

அப்பன் இருந்தபோதே அவள் தென்னையோலை திரட்டி முடைந்து விற்க ஆரம்பித்திருந்தாள். அது அவள் கைச்செலவுப் பணமாக இருந்தது. அதன்பிறகு அதுவேதான் அரிசியும் உப்புமாக ஆகியது.

அம்மை ஆண்டுக்கு பத்துப்பதினைந்தாயிரம் ரூபாய்க்கு முடைந்த ஓலைக்கீற்றுகளை விற்றுவிடுவாள். அந்நாளில் அவளுடைய ஓலைக்கீற்றுகளுக்கு தனிப்பெயர் இருந்தது. ”நல்ல மரப்பலகை மாதிரி இறுக்கமாட்டு இருக்கும்டே. கிளவி ஜீவனைக்குடுத்து இளுத்து வலிச்சுல்லா முடையுதா” என்று அனந்தன் நாடார் சொல்வார்.

உண்மைதான். அம்மை ஓலைமுடைவதை தொலைவிலிருந்து அவன் பார்ப்பான். அவள் வாயை இறுக்கி பல்லைக்கடித்திருப்பாள். கழுத்துத் தசைகள் இறுகி தலை நாணிழுக்கப்பட்ட பறை போலிருக்கும். ஓலையை சொடுக்கிச் சொடுக்கி இழுப்பாள். முடிச்சை இறுக்கி மீண்டும் இறுக்கி ஒருமுறை மூச்சுப்பிடித்து மீண்டும் இறுக்குவாள். அவள் முடைந்த ஓலைக்கீற்றுக்களை நிற்கவைத்து பார்த்தால் ஊசிப்பொட்டு வடிவாகக்கூட மறுபக்க வெளிச்சம் தெரியாது.

“இந்த மட்டுக்கு வலிச்சு முடையுதாளே, இதேமாதிரி பனம்பாயோ பெட்டியோ முடைஞ்சா நல்லா பைசா நிக்கும்லா?” என்று ஒருமுறை அனந்தன் நாடார் சொன்னார். அவன் அம்மையிடம் அதை சொன்னான். அம்மை அதை செவியில் வாங்கவேயில்லை. பிறகு அவனே கண்டுகொண்டான். அம்மைக்கு எந்த தொழில்தேர்ச்சியும் இல்லை. அவளுக்கு கையில் கவனமும் இல்லை. அவளிடமிருந்தது ஒரு விசை மட்டும்தான். ஓலை முடைவது மிக எளிமையான ஒரு செயல். திரும்பத்திரும்ப ஒன்றையே அம்மை செய்தாள். உயிரைக்கொடுத்து ஓலையை இழுத்து முடி போட்டு செருகிக்கொண்டே இருந்தாள்.

அவள் வாயை இறுக்கி வைத்திருப்பதை அவன் பலநாட்கள் தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருப்பான். அவள் ஏதோ சொல்லவந்து அதை உதடுகளில் நிறுத்தி வைத்திருப்பதுபோலிருக்கும். எந்தக் கணத்திலும் ஆவேசமாக அதை கூவிவிடுவாள் என்று தோன்றும். அது ஒரு கெட்டவார்த்தையாகவே இருக்கும் என அவன் எண்ணியதுண்டு. அவனை நோக்கி அதை சொல்லலாம். அல்லது இங்கே உள்ள எவரைநோக்கியும் அதை சொல்லலாம்.

அம்மை இரவில் தூங்கும்போதுகூட அவள் வாய் அப்படித்தான் இறுக்கமாக இருந்தது. எந்நேரமும் ஏதோ வடத்தைப் பற்றி இழுப்பவள்போல. மிகப்பெரிய எடையை பாதி தூக்கியிருப்பதுபோல. குழந்தைகளை பார்க்கும்போதாவது அந்த வாய்முடிச்சு நெகிழ்கிறதா என்று பார்ப்பான். அம்மை குழந்தைகளை பார்ப்பதே இல்லை. ஒருமுறை ஒரு நாய்க்குட்டி போய் அம்மையின் ஆடைநுனியை கவ்வி இழுத்து விளையாடியது. அவள் தன் முகத்தில் அந்தக் கடுமையான முடிச்சு அப்படியே இருக்க வேட்டியை இழுத்து நாயை தூக்கி அப்பால் விட்டாள்.

அம்மை செத்தபோது ‘எலிசாம்மாள் [ஓலைக்காரி] வயது 82, கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்’ என்றுதான் போஸ்டர் அடித்து ஊரில் ஒட்டினான். அவனை காலையில் எழுப்பிய மேரிதான் “இஞ்சேருங்க, வந்து பாருங்க. என்னமோன்னு கிடக்குது கிளவி” என்றாள். அப்போதே அவனுக்கு தெரிந்துவிட்டது. அவன் போய் பார்த்தபோது அம்மை அதே அரைச்சுருளாக இறுக்கிக்கொண்டு கிடந்தாள். முகம் சுருங்கி உதடுகள் இறுக்கமாக முடிச்சிட்டிருந்தன. கைவிரல்கள் ஓலைநாரை இழுப்பதுபோல இறுக்கமாக விரலைச் சுருட்டிப் பிடித்திருந்தன.

அனந்தன் நாடாரிடம் அம்மை கணக்கில் பதினெட்டாயிரம் ரூபாய் இருந்தது. போஸ்டாபீஸில் மூன்று லட்சம் போட்டு வைத்திருந்தாள். ஆகவே மோட்சச் சடங்குகளெல்லாம் மிகப்பெரிதாகவே நடந்தன. சொர்க்கஜெபம் செய்த அன்றைக்கு நாநூறுபேருக்கு கறிசோறு. மிஞ்சிய பணத்தை சர்ச்சிலேயே ஒரு வைப்பு நிதியாக வைத்து ஏழைப்பிள்ளைகளுக்கு படிப்புத்தேவைக்கு கொடுப்பதாக ஏற்பாடு செய்தான். ஓலைக்காரிப் பணம் இன்றைக்குக் கூட ஆண்டுக்காண்டு ஏழைகளுக்கு கொடுக்கப்படுகிறது. ’ஓலைக்காரி பண்டு’ என்றால் தெரியாதவர்கள் இல்லை. ஆண்டுதோறும் அவள் போஸ்டர் அடித்து ஒரு கூட்டுஜெபமும் நடத்துகிறான்.

அம்மை செத்தபோது அவளை எடுத்துப் படுக்கவைக்க பாய் தேடினார்கள். அனந்தன் நாடார்தான் “லேய் என்னத்துக்கு பாய்? கிளவி பின்னின ஓலை இருக்கே.. தட்டி மாதிரி இருக்கும்” என்றார்.

அம்மை முடைந்த ஓலைக்கீற்றுகள் இரண்டை அடுக்கி அதன்மேல்தான் அவளை படுக்கவைத்தனர். வெள்ளை வேட்டி போர்த்தி கண்மூடி படுத்திருந்தாள். அந்த வார்த்தை அவள் உதடுகளில் இறுக்கமாக இருந்தது. சவப்பெட்டி வந்து அதில் அவளை தூக்கி வைத்து கொண்டு சென்றபோது ஓலைகளைத் தூக்கி கொல்லைப்பக்கம் போட்டார்கள்.

மூன்றாம் நாள் மேரி அவனிடம் “கிளவிக்க ஒரு பெட்டியும் நாலஞ்சு பளைய வேட்டியும் இருக்கு. அதை தோட்டத்திலே குளியிலே போட்டு எரிச்சிருங்க” என்றாள்.

அந்த வேட்டிக்கிழிசல்கள் அழுக்கும் கறையும் படிந்திருந்தன. பனைநார்ப்பெட்டியில் வேறு ஒன்றுமே இல்லை. ஒரு வெற்றிலைப்பெட்டிகூட. அவன் தோட்டத்தில் குப்பை ஏரிக்கும் குழியில் அவற்றை எடுத்து வைத்தான்.

”இந்த ஓலைகளையும் வையுங்க… கிளவியை கிடத்தியிருந்த ஓலை “ என்றாள் மேரி.

அவன் ஓலைகளையும் வைத்து தீவைத்தான். கொழுந்து எழுந்து நின்றாடுவதை பார்த்துக்கொண்டிருந்தான். அதிலிருந்து சட்டென்று கிழவி தோன்றிவிடுவாள் என்று ஒரு கணம் தோன்றியது. அதற்குமேல் அங்கே நிற்க முடியவில்லை.

மறுநாள் அவன் சாம்பல் குழிக்கு அருகே போனபோது அந்த ஓலைகள் எரியாமல் அப்படியே இருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். வேறு ஓலைகளை மேரி வைத்திருப்பாளோ என மறுகணம் நினைத்தான். அதன்பிறகுதான் அவை ஓலைகள் அல்ல, கரி என்று தெரிந்தது.

அந்த ஓலைகள் எரிந்து கரியாகியபிறகும் ஓலைவடிவம் அழியாமல் அப்படியே இருந்தது. அவன் ஒரு கழியால் மெல்ல தட்டினான். அப்போதுகூட அவை அந்த பின்னல் வடிவத்துடனேயே உடைந்து விழுந்தன

மேரி அருகே வந்து இடையில் கைவைத்து நின்று “அப்பிடி இளுத்து இளுத்து முடைஞ்சிருக்கா கிளவி… அப்டி என்னதான் இளுத்தாளோ” என்றாள்.

”நீ போடி…” என்றான் நேசையன்.

“ஓலைய எதுக்கு கொண்டு போறிய?” என்றார் எதிரில் சைக்கிளில் வந்த தங்கையா நாடார்.

”கெடக்கட்டு டீக்கனாரே, நான் ஓலைக்காரிக்க மகன்லா?”என்றான் நேசையன்.


 

13. இழை [சிறுகதை]

12. ஆமென்பது[ சிறுகதை]

11.விருந்து [சிறுகதை]

10.ஏழாம்கடல் [சிறுகதை]

9. தீற்றல் [சிறுகதை]

8. படையல் [சிறுகதை]

7.கூர் [சிறுகதை]

6. யட்சன் [சிறுகதை]

5. கந்தர்வன் [சிறுகதை]

4.குமிழிகள் [சிறுகதை]

3.வலம் இடம் [சிறுகதை]

2.கொதி[ சிறுகதை]

1.எண்ணும்பொழுது [சிறுகதை]

முந்தைய கட்டுரைஆமென்பது,ஏழாம்கடல் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுதிய வாசகர் சந்திப்பு – கோவை