எலிகள்

 

அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். நீங்கள் எழுதும் கட்டுரைகளில் பல ‘உண்மைகளை’ பலர் ‘கண்டறிந்து’ முக நூலில் எழுதுவதை பார்க்கிறேன் . இதில் எழுத்தாளர்களும் உண்டு. உதாரணமாக ஒரு எழுத்தாளரையோ அல்லது சிந்தைனையாளரையோ நீங்கள் சுட்டினால் , உடனே அவர் அவ்வாறு சொல்லவில்லை, ஜெயமோகன் பொய் சொல்கிறார் என்று கிளம்பிவிடுகிறார்கள்.

என் புரிதலில் நீங்கள் முன் வைப்பது ஒரு எழுத்தாளர்க்கே உரிய அவதானிப்பு, ஒட்டு மொத்த சூழலையும் கணக்கில் கொண்டு. அதை உங்களாலே கூட முழுவதுமாக வெளிப்படுத்தி விட முடியாது இல்லையா? ஆனால் அது உங்கள் அசல் அவதானிப்பு என்பதாலே அதற்கு ஒரு இலக்கிய மதிப்பு இருப்பதாக நினைக்கிறன். உதாரணமாக கோவை ஞானி கட்டுரை. அது ஒரு ஒட்டு மொத்த காலகட்டத்தையே உங்கள் பார்வையில் முன் வைக்கிறது. அதை போல ஒரு கட்டுரை எழுதுபவர்கள் அந்த காலகட்டத்தின் தங்கள் அவதானிப்பை முன் வைக்கலாம். அதை விடுத்தது அதில் உள்ள சிறிய சிறிய நினைவு பிழைகளை சுட்டி ஜெயமோகன் பொய்யாக கட்டுரை எழுதி விட்டார் என்று எழுதுவது ஏன் என்று புரியவில்லை. ஒரு வாசகனான எனக்கு புரிந்தது ஏன் எழுத்தாளர் என்று சொல்வர்களுக்கு புரியவில்லை அல்லது நடிக்கிறார்களா ?

அன்புடன்
ஆ .கந்தசாமி
புனே

அன்புள்ள ஜெ
நான் புனைகதைகளைப் பற்றி எதைப் பேசப்போனாலும் ஒரு சிலர் ‘அது அப்டி இல்லை, அது தப்பு’ என்று ஏதாவது கூகிள் டேட்டாவுடன் வந்துவிடுகிறார்கள். கூகிள் இப்படி ஒரு அபத்தமான சூழலை உருவாக்கிவிட்டது. எதையுமே பேசமுடியாது. கருத்துக்களைப் பேசமுடியாது. கலைகளைப்பற்றிப் பேசமுடியாது. தகவல்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அவையும் 90 சதவீதம் தேவையற்ற தகவல்கள். எஞ்சிய பத்துசதவீத தகவல்களும் இவர்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டவை. இந்த சர்ச்சையிலேயே களைப்படைந்துவிடவேண்டியிருக்கிறது. இந்த தலைமுறையின் மிகப்பெரிய அறிவுச்சிக்கல் இது என நினைக்கிறேன். உங்கள் எண்ணங்கள் என்ன? தகவல்பிழைகளில் உழல்பவர்களின் உளவியல் என்ன?

எம்.ராகவேந்திரன்

 

Wolfgang Iser

அன்புள்ள கந்தசாமி, ராகவேந்திரன்,
உண்மையில் இப்படி எதையாவது சொல்லிக்கொண்டிருப்பவர்கள் மிகமிக எளிமையான ஆரம்பகட்ட வாசிப்பும், மொண்ணையான அறிவுத்திறனும் கொண்டவர்கள். பெரும்பாலும் அவர்கள் சுட்டிக்காட்டுவது மிக அடிப்படையான ஏதாவது தகவலாகவே இருக்கும். தங்கள் சில்லறை அறிவுக்குத்தெரிந்த ஓர் எளிய செய்தி எழுத்தாளனுக்கு தெரியாமலிருக்குமா என்றுகூட யோசிக்கத்தெரியாத அறிவின்மை கொண்டவர்கள்.

அந்த தன்னம்பிக்கையும் தோரணையும் பலசமயம் சிரிப்பை, அரிதாக எரிச்சலை ஊட்டுகிறது. பெரும்பாலும் நான் அவர்களைப் பொருட்படுத்துவதில்லை. அவர்களுக்கு அறிவுச்சூழலில் இருப்பு இல்லை. சமூகவலைத்தளம் என்னும் ஊடகம் இருப்பதால்தான் அவர்கள் தங்கள் ஓசையை வெளிக்காட்டவே முடிகிறது.

இதில் ஆர்வமூட்டும் ஒன்று உண்டு, எழுத்தாளன் சற்று தன்னம்பிக்கையுடன் ஏதாவது பேசிவிட்டால் அவனிடம் ‘எழுத்தாளர்கள் அடக்கமாக இருக்கவேண்டும்’ என்று பேச ஆரம்பிப்பவர்கள் எவரும் இந்த மொண்ணைகள் எந்த அடிப்படையில் இத்தனை தன்னம்பிக்கையுடன் இருக்கின்றன, இவர்கள் பொருட்படுத்தும்படி நான்கு வரி எழுதிவிட்டு இந்த தன்னம்பிக்கையை அடையலாமே என்று சொல்வதில்லை.

ஏனென்றால் அப்படி எழுத்தாளனிடம் சொல்லும் அவர்களே பாமரர்கள்தான். அவர்களுக்கு இன்னொரு பாமரனுடன் மட்டுமே அடையாளப்படுத்திக்கொள்ள முடிகிறது. அந்த பாமர வெளிப்பாட்டை ஏற்று அவர்களின் உள்ளம் மகிழ்கிறது. அவர்களை விட எவ்வகையிலேனும் மேலான ஒருவரை அவர்கள் அஞ்சுகிறார்கள். ஆகவே ஒவ்வாமை கொண்டிருக்கிறார்கள். ஆகவே எழுத்தாளனின் தன்னம்பிக்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. இந்தப் பாமரர்கள் எழுத்தாளர்களை அபத்தமாக கண்டிக்கும்போதோ ஏளனம் செய்யும்போதோ இவர்கள் இயல்பாக உடன் சேர்ந்துகொள்கிறார்கள்.

நான் கட்டுரைகளாக எழுதுவது சிந்தனைகளின் இடையே நிகழும் உரையாடலை. புனைவுக்கு பின்னணியாக இருக்கும் சமூகச்சூழலை. அதை சிந்தனையிலும் கலையிலும் ஆர்வம் கொண்டவர்கள் மிக எளிதாக உணரமுடியும். ஆகவேதான் அவற்றுக்கு மதிப்பு உருவாகிறது. என் கட்டுரைகள் வந்ததுமே உருவாகும் சில்லறைச் சலசலப்புகள் மறைந்தபின் அந்நூல் காலப்பதிவாக நிலைகொள்கிறது. உதாரணம், சுரா நினைவின் நதியில். இன்று அதை ‘கிளாசிக்’ என்றே வாசகர்கள் மதிப்பிடுகிறார்கள்.

Stuart Hall

*

புனைவில் வரும் செய்திகளைப் பற்றிய பலநுண்ணுணர்வுகள் எழுத்தாளர்கள் – வாசகர்களுக்கு உண்டு. செய்திகள் புனைவில் நேரடியாக வரும், உருமாறி வரும், திரிந்தும் தவறாகவும் வரும். அது எழுத்தாளனை மீறி வந்துவிட்டது என்றால் அதை ‘திருத்தும்’ உரிமை எழுத்தாளனுக்கு இல்லை. புனைவில் எதை திருத்தவேண்டும், எதை திருத்தக்கூடாது என்று எழுத்தாளன் அறிந்திருக்கவேண்டும்.

ஏனென்றால், ஆழுளம் வெளிப்பாடு கொண்ட இடங்களை பிரக்ஞையால் மூடிவைப்பது பெரும்பிழை. பலசமயம் அத்தகைய ‘பிழைகள்’ வழியாக வாசகன் புனைவின் ஆழத்துக்கு நெடுந்தொலைவு செல்லமுடியும். மானுட உள்ளத்தை அறிந்த இலக்கிய வாசகன் இதை உணரலாம். உளவியலில் ஃப்ராய்டிய வழு [freudian slip] என்று ஒன்று உண்டு. அவை உளவியலில் உண்மையான மதிப்புள்ளவையா என்று தெரியாது. புனைவில் மிக முக்கியமானவை. ஒரு கதாபாத்திரத்தை வாசகனுக்கு ‘காட்டிக்கொடுக்கும்’ ரகசிய வழிப்பாதைகள் அவை.

எழுத்தாளர் கதாபாத்திரத்தின் ஆழத்தை காட்டிக்கொடுக்கும் ஃப்ராய்டிய வழுக்களை அனுமதிக்கவேண்டும், அதேசமயம் தன்னுடைய ஆழத்தை காட்டிக்கொடுக்கும் வழுக்களை கவனமாக அடைத்துவிடவேண்டும் என்று ஒரு பொதுக்கொள்கை எழுத்தாளர்களிடையே உண்டு, பெரும்பாலானவர்கள் அதைச் செய்வார்கள். அதையும் செய்யக்கூடாது என்பதே என் எண்ணம்.

எழுத்தாளன் அதன் வழியாக ஒருவேளை பிற்போக்குவாதியாக, கயவனாக, பிறழ்வுகொண்டவனாக வாசகன் முன் வெளிப்பட்டுவிடக்கூடும்.இருந்துவிட்டுப் போகட்டுமே. புனைவு என்பது அவ்வண்ணம் வெளிப்படுவதற்காகத்தானே? அதை ஏன் பிரக்ஞையால் போர்த்திவைக்கவேண்டும்? ஏன் வாசகன் முன் எண்ணி எண்ணிச் சொல்லெடுக்கவேண்டும்? இவ்வுலகில் வேறெவர் முன் எழுத்தாளன் ஆடையின்றி நிற்கமுடியும்? நிர்வாணமாக நின்றபடியே எல்லா மகத்தான பிரார்த்தனைகளும் செய்யப்படுகின்றன. எழுத்தும் அவ்வண்ணம் ஒரு பிரார்த்தனைதான்.

எதை சரிசெய்வது, எதை விட்டுவிடுவது என்னும் தெளிவு எழுத்தாளனுக்கு இருந்தாகவேண்டும். உதாரணமாக நாகர்கோயிலில் இருந்து நெடுமங்காடு மிக அருகே, அரைமணிநேரத்தில் போய்விடலாம் என்று ஒரு கதாபாத்திரம் சொல்வதாக நான் எழுதியிருந்தேன். மீண்டும் கதையை வாசிக்கும்போது தெரிந்தது அது பிழை, நெடுமங்காடு செல்ல மூன்று மணிநேரம் ஆகும். ஆனால் அப்படி அக்கதாபாத்திரத்துக்கு தோன்ற அக்கதைக்குள் உணர்வுசார்ந்த காரணம் உண்டு. அது அவன் உள்ளமயக்கம். அவன் அகம் வெளிப்படும் இடம். அதை திருத்தலாகாது.

அது ஏன் அப்படி உள்ளது என அக்கதையின் உண்மையான வாசகனுக்கு தெரியும். முதிரா வாசகன் என்றால் அதை சுட்டிக்காட்டினால் புரிந்துகொள்வான். கதை பிரசுரமானபோது இரண்டுபேர் அந்த பிழையைச் சுட்டிக்காட்டி எனக்கு எழுதியிருந்தனர். அந்த ‘பிழையை’ எப்படி புரிந்துகொள்ளவேண்டும் என்று ஒரு கடிதம் அனுப்பியிருந்தேன். ஒருவர் அது ஒரு புதிய வெளிச்சம் என்றும், அதுவரை வாசித்த பல படைப்புக்களை புதியவெளிச்சத்தில் பார்க்கவைக்கிறது என்றும் எழுதியிருந்தார்.

ஆனால் இன்னொருவர் “நீங்கள் சொல்வது உங்கள் கருத்து. ஆனால் உங்க்ள் வாசகன் உங்களை நம்பி நாகர்கோயிலில் இருந்து நெடுமங்காடு செல்வதற்கு அரைமணிநேரம்தான் ஆகும் என்று நினைத்து கிளம்பிவிடுவான் அல்லவா?” என்று எழுதியிருந்தார். “நன்றி, நாம் உரையாடவேண்டியவர்கள் அல்ல. மேற்கொண்டு நாம் அன்புடன் மட்டும் இருப்போம், பேச்சுவேண்டாமே” என்று கடிதம் எழுதினேன்.

இலக்கியம் என்பது வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையே நிகழும் நுண்மையான ஒரு உளப்பரிமாற்றம். அதில் எழுத்தாளனை வாசகன் ‘பிடித்துவிடும்’ பல இடங்கள் உண்டு. பெரும்பாலும் புனைவில் அது மூன்று வகை வழூக்கள். அ.காலப்பிழை, கதைமாந்தர் காலகட்டங்களை குழப்பிக்கொள்வது. ஆ.அடையாளப்பிழை. கதைமாந்தர் ஒருவரை இன்னொருவராக எண்ணிக்கொள்வது. இ.செய்திப்பிழை. புறவுலகு சார்ந்த செய்திகள் பிழையாக கூறப்படுவது.

எந்த மானுடரும் பிரக்ஞையால் ஆழத்தை கட்டி அரணிட்டு வைத்திருக்கிறார்கள். பிரக்ஞை என்னும் கலத்தில் உள்ளது நனவிலி. இந்த பிழைகள் பிரக்ஞையில் விழும் துளைகள், விரிசல்கள். அதனூடாக நனவிலி ஆழம் சொட்டுகிறது. அது மிகமுக்கியமான ஒரு தடையம். கதைமாந்தரை அப்பிழைகள் வழியாக இன்னொரு கோணத்தில் புரிந்துகொள்ள முடியும்.

இதே பிழைகளை ஆசிரியன் விட்டிருந்தால்கூட அவனை நோக்கிச் செல்ல, புனைவில் அவனுடைய நோக்கம் அல்லது வெளிப்பாட்டில் அவனுடைய தடுமாற்றம் நோக்கிச் செல்ல முக்கியமான தடையங்கள் அவை. அவ்வண்ணம் பல பிழைகளை பேரிலக்கியங்களில் காணலாம்.

இன்னொரு சுவாரசியமும் உண்டு, குற்றவாளிகள் சில தடையங்களை விட்டுவிட்டு துப்பறிபவன் அதை கண்டுபிடிக்கிறானா என பதைப்புடன் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்னும் கொள்கை உண்டு. ஒரு தடையத்தை குற்றவாளி வேண்டுமென்றே விட்டுவைப்பான், அது அவனுடைய ஆணவம் சார்ந்தது, அவனால் அதை தடுக்கவே முடியாது என ஷெர்லக் ஹோம்ஸ் ஓர் இடத்தில் சொல்கிறார். அவ்வண்ணம் ஆசிரியன் விட்டுவைக்கும் விஷயங்களும் உண்டு.

இவ்வண்ணம் படைப்பின் ஆழத்தை, ஆசிரியனின் ஆழத்தை சென்றடைய உதவும் விரிசல்கள் ‘இடைவெளி’கள் எனப்படுகின்றன. புனைவில் இடைவெளிகள் இருவகை. வாசகனுக்காக ஆசிரியன் உருவாக்கும் இடைவெளிகள், ஆசிரியனை மீறி உருவாகும் இடைவெளிகள்.  அவ்விடைவெளிகளை வாசகன் தன் கற்பனையால் நிரப்புவதே உண்மையில் இலக்கியவாசிப்பு.

இந்தக்கோணம் இலக்கியவிமர்சனத்தின் வாசக ஏற்புக் கோட்பாடு [Reception theory] எனப்படுகிறது. பண்பாட்டு ஆய்வாளர் ஸ்டுவர்ட் ஹால் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது இது. வாசக எதிர்வினை கோட்ப்பாட்டில் ’வாசக இடைவெளிகள்’ முக்கியமானவை. வொல்ஃப்காங் இசெர் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது இது. [Gap Analysis]

அதை மிகச்சுருக்கமாக இப்படி விளக்கலாம். ஒரு படைப்பின் வடிவ ஒருமை, தர்க்கபூர்வ ஒத்திசைவு ஆகியவை அந்தப்படைப்பில் ஆசிரியரால் உருவாக்கப்படுவன அல்ல. அவை வாசகனால் அப்படைப்பின் செய்திகளை, மொழியைக்கொண்டு உருவாக்கப்படுபவை. வாசிக்கையில் வாசகன் தொடர்ச்சியாக முயல்வது அந்த ஒருமையையும் ஒத்திசைவையும் கண்டடைந்து கோர்த்துக்கொள்வதற்காகவே.

அப்போது அவனால் கோர்த்துக்கொள்ள முடியாத சிலவற்றை அவன் காண்கிறான். அவையே இடைவெளிகள். அவை அவனை நிலைகுலையச் செய்கின்றன. அவை பிழைகள், விடுபடல்கள், போதாமைகள் என்றெல்லாம் அவன் நினைக்கலாம். ஆனால் அந்த இடைவெளியை நிரப்பிக்கொள்ள அவன் முயல்கிறான். அதனூடாகவே அவன் அப்படைப்பின் முதல்தளத்திற்கு அப்பால் செல்கிறான்.

ஒரு ஆக்கத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களை வாசகன் உருவாக்கிக் கொள்கையிலே அப்படைப்பு ஆழம் பெறுகிறது. ஆனால் வழக்கமாக வாசகன் அவனுக்கு நன்குபழகிய, சூழலில் பொதுவாக இருக்கும் ஒரு வடிவத்தையே படைப்பிலிருந்து தனக்காக உருவாக்கிக் கொள்கிறான். அது ஓர் இயந்திரத்தனமான நிகழ்வாகக்கூட இருக்கும். இடைவெளி அந்த பழகிய செயல்பாட்டில் ஒரு நிலைகுலைவை உருவாக்குகிறது. அவனை வழக்கமான வடிவில் நிறைவுகொள்ள விடாமல் செய்கிறது.

ஆனால் இவ்வண்ணம் இடைவெளிகளை ‘நிரப்புவது’ என்பது ஒரு விளையாட்டு அல்ல. ஒளிந்துவிளையாடுவதும் பிடிப்பதும் அல்ல. ஓர் ஓவியத்தை ஒருவர் விட்டதை இன்னொருவர் நிரப்ப முயலும் ஒரு கூட்டு படைப்பாக்க முயற்சி என புரிந்துகொள்ளவேண்டும்.

இந்தக் கோட்பாடுகளைப் பின்தொடர்வதிலுள்ள சிக்கல்களையும் சொல்லிவிடுகிறேன், இதை எப்போதுமே நான் சொல்வது வழக்கம். இச்சிந்தனைகளில் உண்மையில் சாராம்சமாகச் சொல்லப்படுவதென்ன என்று மட்டும்தான் இலக்கியவாசகன் தெரிந்துகொள்ளவேண்டும், அதற்கு அப்பால் விரிவாகவும் நுட்பமாகவும் தெரிந்துகொள்ள முயலக்கூடாது. அவ்வண்ணம் சென்றால் அவனுடைய இயல்பான இலக்கியவாசிப்பு பழுதடையும். அவன் இழப்பது மிகுதி.

ஏனென்றால் அவனிடமிருப்பது இந்தக் கோட்பாட்டுவிமர்சனங்களை விடவும் கூர்மையான அழகியல்பார்வை, வாழ்க்கைப்பார்வை. அதை அவன் கோட்பாட்டு ஆய்வுக்குள் சிக்கினால் இழந்துவிடுவான். கோட்பாட்டு விமர்சனம் அக்கோட்பாட்டுக்கே விசுவாசமாக இருக்கும், இலக்கியப்படைப்பும் வாழ்க்கையும் அதற்கு ஒரு பொருட்டே அல்ல.

நானறிந்தவரையில் தமிழ்ச்சூழலில் இலக்கியக்கோட்பாடுகளை தெளிவாகக் கற்றவர், கற்பிப்பவர் நண்பர் அனீஷ்கிருஷ்ணன் நாயர். ஆனால் தேவையானபோது அவற்றை கைவிடவும் முயல்பவர். கோட்பாடுகள் பருவடிவமானவை, ஆகவே கற்க எளிதானவை என்று அவர் சொல்வதுண்டு. அழகியல்பார்வைக்கு புறவயமான சட்டகமே இல்லை. அது ஓர் நுண்ணுணர்வு. அதை அடைவதே கடினம் என்பார்.

நம்மில் இந்த கோட்பாடுகளை எளியநூல்கள் வழியாக கற்றுக்கொண்டு பேசும் பேராசிரியர்கள் உண்டு. எந்த மேடையிலும் தன்னம்பிக்கையுடன் சில கலைச்சொற்களுடன், சில மேற்கோள்களுடன் வந்துவிடுவார்கள். ஆனால் அவற்றுக்கு அடியில் அவர்களின் வாசிப்பு என்பது மிகமிக ஆரம்பகட்டத்தில், மொண்ணையான பொருள்கொள்ளலாகவே இருக்கும். இதை பலமுறை வாசகர்கள் கண்டிருப்பார்கள்.

இங்கே விமர்சகர்கள், எழுத்தாளர்கள் என்பவர்கள் அறிவுஜீவிகள் என நீங்களே நினைத்துக்கொள்கிறீர்கள். மிகப்பெரும்பாலானவர்கள் மிக ஆரம்பகட்ட வாசிப்புக்குப் பின் எதையுமே வாசிக்காதவர்கள். செவிவழிச்செய்திகள் வம்புகளில் உழல்பவர்கள். வாசித்துத் தள்ளும் பலருக்கு அடிப்படையான எளியவிஷயங்களே புரியாது.

அவர்கள் வேறு எங்கேனும் ஏதேனும் சிந்தனைகளைப்பற்றி அசலாக ஒருவரியேனும் சொல்லியிருக்கிறார்களா என்று பாருங்கள். சிந்தனையின், கலையின் உலகமே அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் வேண்டுமென்றே இப்படி சில்லறைப்பிழைகளை கண்டுபிடித்து உழலவில்லை. அவர்களுக்குத் தெரிந்ததே அவ்வளவுதான்.

உண்மையில் இலக்கியத் தளத்தில் ஒரு பொருட்படுத்தத்தக்க தகவலைச் சொல்லவே ஓர் அடிப்படை நுண்ணுணர்வும் அறிவும் வேண்டும். இவர்களில் அப்படிக்கூட எவரையும் நான் பார்த்ததில்லை. கவனத்திற்குரிய பிழைகள் எப்படியும் பொருட்படுத்த தக்கவர்களிடமிருந்து சுட்டிக்காட்டப்படும். அப்படி மிக அரிதாகவே சுட்டிக்காட்டப்படுகிறது. மற்றதெல்லாம் வெற்றொலிகள்.

இலக்கியத்தின் சிந்தனையின் உலகில் அவர்கள் இல்லை. ஆகவே வாசகர்களால் பொருட்படுத்தப்படவேண்டியவர்களும் அல்ல. எலிகளைப்போல வேறொரு இருண்ட புதைந்த உலகில் வாழ்கிறார்கள். அவ்வப்போது நம் காதில் கிச்கிச் ஒலிகள் இவை.

ஜெ

பிழை [சிறுகதை] 1

பிழை [சிறுகதை] -2

பிழையின் படைப்பூக்கம்

முந்தைய கட்டுரைபாலும் தெளி தேனும் – இசைக்கோவை
அடுத்த கட்டுரைவெண்முரசு வடிவம்