உலகம் யாவையும் [சிறுகதை] 2

பகுதி – 1

[ 2 ]

காரி டேவிஸைப்பற்றி வாசித்தபின்னர்தான் அன்று நான் அவரை மீண்டும் சந்திக்கச் சென்றேன். அவர் நியூயார்க் பிராட்வேயில் நடிகராக இருந்தார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவரது தெளிவான உச்சரிப்பும் துல்லியமாக முகபாவனைகள் மூலம் தொடர்புறுத்தும் தன்மையும் அங்கே பெற்ற பயிற்சியினால்தான் என்று அப்போது தோன்றியது. அவரது பயிற்சிகளே விதவிதமானவை. பாதிரியாருக்கான படிப்பில் பள்ளியிறுதி. அதன்பின் தொழில்நுட்பக் கல்வி. அதன்பின்னர் நடிகர். அதன்பின் விமானமோட்டி. மிகச்சிறந்த இளம் விமானிக்கான விருதுபெற்றிருக்கிறார்.

அவரது வாழ்க்கையில் எப்போதுமே ஏதோ ஒரு மீறல் இருந்துகொண்டே இருந்திருக்கிறது. பலமுறை வீட்டைவிட்டுச் சென்றிருக்கிறார். பலமுறை பல படிப்புகளை முயற்சிசெய்திருக்கிறார். அவருக்குள் இருந்த அடிப்படை வல்லமை வெளியே பீரிட வழிதேடி தவித்துக்கொண்டே இருந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போரில் விமானியாகச் சென்று ஜெர்மனிய ஆதிக்கத்தில் இருந்த நகரங்கள் மேல் குண்டு வீசினார். அவர் சென்ற பி 17 விமானத்தின் வால் எடுத்த படங்களை பின்னர் அவரே பார்க்க நேர்ந்தது

அபாயகரமாகக் கீழே இறங்கிச்சென்று குறிப்பாக குண்டு வீசி மீண்ட அவரது சேவையைப் பாராட்டுவதற்காக அவரது மேலதிகாரி அவரைத் தன் அறைக்கு அழைத்து அந்த படங்களைக் காட்டினார். மேஜைமேல் விரிந்துகிடந்த கருப்புவெள்ளைப் படங்களைக் கண்டதும் தன் நெஞ்சு மேல் கனத்த இரும்புக்குண்டு ஒன்று வந்து மோதியதாக உணர்ந்தார். மூச்சடைத்து விழப்போனவர் மேஜை விளிம்பை பற்றிக்கொண்டு நின்றார். எரியும் இல்லங்கள். சிதறி ஓடும் மக்கள். வானைநோக்கி நா நீட்டி எழும் தீ. நரகத்தை படமெடுத்ததுபோல தோன்றியது.

அன்றிரவெல்ல்லாம் தன்னுடன் தானே போராடினார் காரி. தன்னுள் உறங்கும் பழைய பாதிரிதான் தன்னை கோழையாக ஆக்குகிறாரா? ஆண்மை என்ற ஒற்றைச்சொல்லை வைத்து தன் வளர்ப்புடன் தன் மெல்லுணர்வுகளுடன் அதுநாள் வரை அவர் போராடி வென்று வந்திருக்கிறார். சாகசம் இல்லாமல், வெற்றி இல்லாமல் ஆண்மைக்கு ஏது பொருள்? ஆனால் இதில் என்ன சாகசம் இருக்கிறது? பூதம்போன்ற ஒரு பெரும் இயந்திரத்தின் ஒரு திருகாணியாக அதனுள் இருப்பதா வீரம்? ஆனால் அந்த இயந்திரத்துக்கு உள்ளம் இல்லை. அது செய்த அழிவுக்கு அது பொறுப்பில்லை. அதற்கு கருணையற்ற உள்ளத்தை அளித்தவர் அவர். அதன் வெற்றிக்கு அவர் பொறுப்பல்ல, பாவத்துக்கு மட்டுமே அவர் பொறுப்பு.

சிகரெட் பிடித்துக்கொண்டு, மது அருந்திக்கொண்டு, முகாமெங்கும் இருளில் அலைந்துகொண்டு அந்த இரவைக் கழித்தார். காலையில் எல்லாம் சமநிலைகொண்டு எல்லாம் நியாயப்படுத்தப்பட்டு சரியாக இருக்கும். மெல்லிய குதுகுதுப்பாக ஒரு சிறு சஞ்சலம் மட்டும் உள்ளே எங்கோ எலிபோல கரம்பி சத்தமெழுப்பிக் கொண்டிருக்கும். இரவில் இருளில் அவர் தனிமையில் படுத்ததும் அக்கணம் வரை இருந்த அவரது எல்லா உறுதிகளும் குலையும். தனக்குள் ஓடும் எண்ணங்களின் வதை தாங்காமல் தன் தலையைத் தானே கைகளால் அறைந்துகொள்வார். மூர்க்கமாக குடித்து, குடல் அதிர, உடம்பு குழைய, தன்னுணர்வு மூழ்கி மூழ்கி மிதக்க, இரவெல்லாம் கிடப்பார்.

ஒருமாதம் கழித்து மீண்டும் குண்டு வீசும் வேலைக்கு அனுப்பப்பட்டார். இல்லை என்னால் முடியாது என்று தனக்குள் ஆக்ரோஷமாக அலறிக்கொண்டார். இல்லை, முடியாது இனிமேல் சகமனிதர்களைக்கொல்லமாட்டேன் என்று தன் மூத்த அதிகாரிகளிடம் சொல்வதை மீண்டும் மீண்டும் பலநூறு நாடகக்காட்சிகளாக மனதுக்குள் நிகழ்த்திக்கொண்டார். தனிமையில் அந்த சொற்களை உள்ளூரச் சொல்லிக்கொண்டு அந்த தீவிர உணர்ச்சிகள் நெளியும் முகத்துடன் நடக்கும் அவரைக்கண்டு நண்பர்கள் குழம்பினார்கள். கடைசியில் ஒரு கணம் தோன்றியது ‘இது கோழைத்தனம். கோழைத்தனத்தை நியாய உணர்ச்சியாக எனக்கு நானே விளக்கிக்கொள்கிறேன்’

அந்த வீராப்புடன், தனக்குத்தானே ஒரு காயத்தை உருவாக்கிக்கொள்ளும் மனநிலையுடன், விமானத்தில் ஏறினார். விமானம் மேலே சென்றதும் மண்ணில் இருந்து எல்லா தொடர்புகளும் இல்லாமலாயின. அப்போது ஓர் எண்ணம் வந்தது. அப்படியே பறந்து காணாமலாகிவிடவேண்டும். வேறேதாவது மண்ணில் சென்று இறங்கவேண்டும் என்றல்ல, காற்றில் அப்படியே கரைந்து மறைந்துவிடவேண்டும் என்று. வேகம் அதிகரிக்க அதிகரிக்க அப்படி கரையும் உணர்வு அதிகரித்தது. உச்சகட்டவேகத்தில் வானில் குட்டிக்கரணமடித்தார்.

ஜெர்மானிய நிலம் மீது பறந்தபோது கீழிருந்து அவரை நோக்கி குண்டுகள் வெடித்தன. தன் இருபக்கமும் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்களில் பூப்பூவாக மலர்ந்து கருகி அணையும் ஷெல்களை கண்டபடி அங்கே பறந்தபோது அளப்பரிய ஆனந்தம் ஒன்றை உணர்ந்தார். அந்த குண்டுகளில் ஒன்று தன் மேல் படவேண்டுமென விரும்பினார். ஆனால் அது தன்னை தேர்ந்தெடுக்கவேண்டும். தன்னை அது வென்று வீழ்த்தவேண்டும். மிகமிக அபாயகரமான பறத்தல். ஆனால் ஆச்சரியமாக ஒன்றும் நிகழவில்லை. அவர்மேல் ஒரு குண்டுகூட படவில்லை

மிகத்தாழ்வாக பறந்து கீழே நகரத்தை, பாம்புச்சட்டை போன்ற ஓடைகளை, பெண்களின் கைப்பைக் கண்ணாடிபோன்ற குட்டைகளை, மரங்களின் பச்சை அலைகளை, மலைக்குவைகளைக் கண்டார். அவர் கையருகே இருந்தது குண்டு வீசும் விசை. ஆனால் அவரால் தன் கையை அங்கே கொண்டுசெல்ல முடியவில்லை. நாலைந்துமுறை முழு உளச்சக்தியாலும் கையை அங்கே கொண்டுசெல்ல முயன்றார். ஆனால் கை கனத்து இறுகி இரும்பாக இருந்தது. பின் அதை விட்டுவிட்டு கீழே பார்த்து ரசிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் மனம் முழுக்க களிவெறி நிறைந்தது. அது ஓர் உற்சாக விளையாட்டாக ஆகியது. வேண்டுமென்றே அவர்களைச் சீண்டும்படி பறந்தார். அவர்களின் குண்டுகள் நடுவே சீறிப்பாய்ந்தபோது ‘ஹே’ என்று கத்தினார். கீழே இறங்கிச் சென்று அவர்களிடம் கைதூக்கி வெற்றிக்குறி காட்டவேண்டும் என்று தோன்றியது

எரிபொருள் தீர்ந்தபோது ஒரு குண்டுகூட சுடப்படாமல் மீண்டு முகாமுக்கு வந்தார். அங்கே ஏற்கனவே அவரைப்பற்றி செய்தி சென்றிருந்தது. அவரை உடனடியாக கூட்டிச்சென்று விசாரணை செய்தார்கள். காரி அதே உற்சாக மனநிலையில் இருந்தார். உடம்பெங்கும் ஒவ்வொரு மயிர்க்காலிலும் உற்சாகம் பரபரத்தது. ‘இப்போதுதான் எனக்கு தெரிந்தது. இது ஓர் அற்புதமான விளையாட்டு. இன்னும் தாமதித்துவிடவில்லை. வாஷிங்டனுக்கு உடனே தகவல் சொல்லுங்கள்..நாம் போரை அப்படியே விளையாட்டாக மாற்றிக்கொள்வோம். அதில் மரணமிருந்தாலும் துன்பம் இருக்காது. வாழ்க்கை என்ற விளையாட்டுக்குள் நாம் இன்னும் அற்புதமான ஒரு விளையாட்டை உருவாக்கி பிதாவைத் தோற்கடிப்போம். வாருங்கள்’ என்றார். விசாரணை அதிகாரியை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். நடுவே காபி கொண்டுவந்த உதவியாளரை கட்டிக்கொண்டு நடனமிட்டார்

விளைவாக நேராக அவரை மனநோய் சிகிழ்ச்சைக்கும் அங்கிருந்து சிறைக்கும் கொண்டு சென்றார்கள். கட்டாய உழைப்புக்கும் வதைக்கும் ஆளானார். அதற்குள் போர் முடிந்தது. ராணுவத்தில் இருந்து விடுதலையானதும் காரி சட்டென்று ஒரு வெறுமையை உணர்ந்தார். ராணுவத்திலும் சிறையிலும் வாழ்க்கையின் உச்சங்கள் வழியாக வாழ்ந்துவிட்டு அர்த்தமில்லாத அன்றாடச் செயல்களின் வெறும்தரைக்கு வந்து நிற்பதுபோலிருந்தது. அதை வெல்ல பயணங்கள் மேற்கொண்டார். தோளில் ஒரு சிறு பையுடன் நினைத்த போது கிளம்பி நினைத்த இடங்கள் வழியாகச் சென்றார். சுற்றுலாத்தலங்கள் அவரை கவரவில்லை. மலைகள் மேல் பெரிய மோகம் இருந்தது. ஆனால் ஒருசில மாதங்களிலேயே மலை ஏறுவது சலித்தது. எளிய அடித்தட்டு மக்களுடன் நகர்ப்புறச் சேரிகளில் வாழ்வது மட்டுமே ஆர்வமூட்டுவதாக இருந்தது

திடீரென்று ஓர் எண்ணம் எழுந்து ஜெர்மனிக்குச் சென்றார். ஜெர்மனியின் வறுமையையும் அம்மக்கள் அடைந்திருந்த அவமான உணர்வையும் கண்டார். அத்தனை பெரிய அழிவின் நடுவில், பிள்ளைகள் பட்டினியில் துடிக்கையில் அந்த குற்றவுணர்வை அம்மக்கள் அடைவதே அவர்களின் ஆன்மவல்லமைக்குச் சான்றல்லவா என்றுதான் அவருக்குத்தோன்றியது. அதற்கிணையான பேரழிவை அமெரிக்கா ஜப்பானுக்கு இழைத்திருந்தாலும் அமெரிக்காவில் அதுபற்றிய குற்றவுணர்ச்சியே இல்லை என்பதுதான் அவர் எண்ணமாக இருந்தது. அந்த பேரழிவையே உலக அமைதிக்காக நிகழ்த்திக்கொண்ட இன்றியமையாத செயல் என்றுதான் அவர்கள் நினைத்தார்கள். அந்த அரசும் தேசியவாதிகளும் அப்படி நம்பும் இடத்துக்கு அவர்களை கொண்டு சென்றிருந்தார்கள். ஒருவேளை ஜெர்மனி போரில் வென்றிருந்தால் படுகொலை முகாம்கள் உலக அமைதிக்கானவை என இந்த நேர்மையான நியாய உணர்வுள்ள மக்கள் நம்பவைக்கப்பட்டிருப்பார்கள்.

அவர் வானிலிருந்து குண்டுவீசிய நிலப்பகுதிகளுக்குச் சென்றார். அந்த இடங்களில் புதிய தாவரங்கள் முளைத்து, இடிபாடுகளையும் இரும்புக்குப்பைகளையும் மூடி புதிய உயிர்துடிப்பை நிறைத்திருந்தன. மக்கள் அழிவை மறந்து மீண்டும் வாழ்க்கையை உருவாக்க ஆரம்பித்திருந்தார்கள். வெளிறிய கன்னங்களுடன் சீருடை அணிந்த குழந்தைகள் உற்சாகமாக கூவிப்பேசியபடி பள்ளிக்குச் சென்றார்கள். சாலையோரங்களில் புதியபழங்களும் காய்கறிகளும் நிறைந்த கூடைகளுடன் பெண்கள் அமர்ந்து விற்றார்கள். எங்கும் வாழ்க்கை, வாழ்க்கை மட்டும்தான் இருந்தது. அங்கே மரணத்தை நிறைக்க ஒருநாள் கொலையந்திரத்தில் வந்த அவரை அந்த வாழ்க்கை பொருட்டாகவே நினைக்கவில்லை. அவர் உயிருள்ள சதையால் சீழ்கட்டிப் பொருக்காக்கி வெளியேதள்ளப்பட்ட முள் போல அன்னியமாக அங்கே நின்றிருந்தார்

‘நான் உங்கள் அனைவரையும் கொல்ல வந்தவன் தெரியுமா?’ தன்னுள் பெருங்குரலில் காரி டேவிஸ் கூவினார். ’என்னை நீங்கள் கல்லால் அடிக்கலாம். சிலுவையில் அறையலாம். ஏனென்றால் எந்தவிதமான பகையும் இல்லாமல், நீங்கள் யாரென்றே தெரியாமல், உங்களை கூண்டோடு அழிக்கவந்தவன் நான்’ . ஆனால் அவருக்கு வெளியே கொப்பளித்த வாழ்க்கை அதைக் கேட்கவில்லை. பொன்னிறப்பூக்கள் பூத்து நிறைந்து கிளைகனத்து நின்ற மரங்களால் பொன்வெளியாக ஆகி விரிந்திருந்த சாலையோர பூங்காவில் சிமிண்ட் பெஞ்சியில் தன்னருகே அமர்ந்திருந்தவரிடம் காரி சொன்னார் ‘சகோதரா, நான் இந்த நிலத்தையும் மக்களையும் அழிக்க முற்பட்டவன்’ அவர் சரியாக கேட்டாரா என்றே தெரியவில்லை. இனிய புன்னகையுடன் ‘வந்தனம். ஏசுவின் பெயர் உங்களுடன் இருக்கட்டும்’ என்றார்

அந்த நகரில் அத்தனை பேரையும் நிறுத்தி ‘நான் உங்களை அழிக்கவந்த கொலைக்காரன்’ என்று கூவ வேண்டும் போலிருந்தது. ஆனால் ஒருவராவது அதை பொருட்படுத்துவார்கள் என்று அவருக்குத் தோன்றவில்லை. ஆமாம் இரண்டுவருடம் முன்பு உலகின் நேர்பாதி மக்கள் மீதி பேரை கொன்றொழிக்க வெறிகொண்டு கிளம்பினார்கள். உலக மக்கள்தொகையில் கணிசமான பகுதியை அழித்தார்கள். அதில் ஈடுபட்ட எவருமே கொலைகாரர்கள் அல்ல. எவருக்கும் எவர்மேலும் கோபம் இல்லை. அவர்களுக்கு அது தங்கள் கடமை என்று சொல்லப்பட்டது, அவர்கள் அதை நம்பினார்கள் அவ்வளவுதான். இப்போது அதை சொல்லிக்கொடுத்தவர்கள் கைகுலுக்கிக் கொண்டாயிற்று. இனிமேல் அவர்கள் கொல்லவேண்டியதில்லை. கொன்றவர்களும் செத்தவர்களும் ஒன்றுமறியாதவர்கள். அவர்கள் நடுவே என்ன பகை? என்ன பழி?

அன்றிரவில் குளிரில் அந்த பூங்காவில் தனிமையில் அமர்ந்து காரி டேவிஸ் அழுதார். அங்கே அவருக்கு தெரிந்தது, ஏன் ஏசு அப்படி கத்தினார் என்று. ’பிதாவே என்னை ஏன் கைவிட்டீர்’ என கூவியவர் ஒரு ஏசு. அவர் மனிதர்களின் பிரதிநிதி. பிதாவால் கைவிடப்பட்ட கோடானுகோடிகளில் ஒருவர். ’பிதாவே இவர்களை மன்னியுங்கள்’ என்று பிதாவிடம் கெஞ்சியவர் கடவுளின் ஒரு துளி. இந்த இரண்டு வரிகளால் ஆனதுதானா எல்லா ஞானிகளின் அகமும்? இவ்விரு வரிகளின் நடுவே ஊசலாடுவதுதானா அவர்களின் வாழ்க்கை?

அந்த வசந்தகாலத்தில் காரி பாரீஸுக்குச் சென்றார். அங்கே நடந்துகொண்டிருந்த ஓர் உலக சம்மேளனத்தில் தன்னுடைய அமெரிக்கக் குடியுரிமையை துறப்பதாக அறிவித்தபின் பொது இடத்தில் தன்னுடைய பாஸ்போர்ட்டை எரித்தார். ’ என் மேல்தோலை உரித்து இழுத்து கழற்றி வீசி வெறும் சதையுடன் தெருவில் நின்றேன். அங்கே நான் புதியதாக பிறந்து வந்தேன்’ அதற்காக அவர் கைதானார். அவரது பேட்டியும் அவரைப்பற்றிய கட்டுரைகளும் பாரீஸையே அவரைப்பற்றி பேசவைத்தன. ஆந்த்ரே ழீடும் அல்பேர்காம்யூவும் உட்பட பாரீஸின் அறிவுலகமே அவரை ஆதரித்தது. பிரான்ஸ் அவரை நாடுகடத்தியது

பாரீஸில் இருந்து ஜெனிவா சென்ற காரி டேவிஸ் ஐநா சபையின் பொதுக்குழு கூட்டத்தில் பார்வையாளராகச் சென்று அமர்ந்து கொண்டு உரியதருணத்தில் எழுந்து துண்டுப்பிரசுரங்களை வீசியபடி கோஷமிட்டார். ‘உலகை பங்குபோடுவதை நிறுத்துங்கள். நாடு என்பது கொள்ளைக்காரர்கள் வகுத்த எல்லை அடையாளம். மனிதர்களை சேர்ந்து வாழ அனுமதியுங்கள். ஒரே உலகம், ஒரே மக்கள்! ’ .அவரை கவாலர்கள் வெளியேற்றினார்கள். ஆனால் சபை உறுப்பினர்களில் கணிசமானவர்கள் அதைக்கேட்டு கைதட்டி ஆதரவளித்தார்கள்.

அதன்பின் காரியின் வாழ்க்கை ஒரு நீண்ட போராட்டம். மறு வருடமே உலகக்குடிமகன்களுக்கான உலகப் பதிவகத்தை ஆரம்பித்துத் தனக்கான பாஸ்போர்ட்டை தானே உருவாக்கிக் கொண்டார். அந்த பாஸ்போர்ட்டை உலகம் அங்கீகரிக்கச்செய்ய நாடுகள் தோறும் பயணம்செய்தார். உலகின் நூற்றைம்பது நாடுகளிலாக இருநூறுமுறை சிறை சென்றிருக்கிறார். 1954ல் அந்த பாஸ்போர்ட்டுடன் இந்தியாவுக்கு வந்தார். இந்திய காவலர்களால் சிறையில் தள்ளப்பட்ட அவரை காக்க அவரது நண்பரான நடராஜ குரு அரசுக்கும் அறிவுஜீவிகளுக்கும் கடிதங்கள் எழுதினார். ஆர்.கெ.லட்சுமணனும், முல்க் ராஜ் ஆனந்தும் எல்லாம் அவருக்கு ஆதரவாக திரண்டனர். ஜவகர்லால் நேரு அவரை அங்கீகரித்து விடுதலைசெய்தார்

நடராஜகுருவும் காரி டேவிஸும் ஊட்டி குருகுலத்தின் தகரக்கொட்டகையில் மண்ணெண்ணை சிமினி விளக்கின் ஒளியில் அமர்ந்துகொண்டு ஓருலகம் என்ற பெரும் கனவை முன்வைப்பதற்கான திட்டங்களை தீட்டினார்கள். இருவரின் அகமும் பொங்கி எழுந்துகொண்டிருந்த காலகட்டம் அது. உலகநாடுகள் தங்கள் பொருளியல் நலன்களை விட்டுக்கொடுக்காமல் மெல்லமெல்ல ஒரே உலகமாக இணைவதற்கான ஒரு பெருந்திட்டத்தை நடராஜ குரு உருவாக்கினார். கல்வியில் பண்பாட்டில் மதநம்பிக்கையில் தனித்தன்மைகளை தக்கவைத்துக்கொண்டே உலகை ஒற்றை மானுடவெளியாக ஆக்கும் முன்வரைவை காரி டேவிஸ் உருவாக்கினார்

அந்த அறிக்கைகளை மேலும் மூன்று வருடம் கழித்து பாரீஸ் சார்போன் பல்கலையில் அவர்கள் வெளியிட்டார்கள். அந்த முன்வரைவுடன் காரி உலகமெங்கும் சென்று பல லட்சம்பேரை தன் அமைப்பில் உறுப்பினராக ஆக்கினார். ‘என்றோ ஒருநாள் நாம் உலகமாக ஆகத்தான் போகிறோம், அதை இன்றே தொடங்குவோம்’ என்ற அவரது அறைகூவலுக்கு அன்று உலகமெங்கும் வரவேற்பிருந்தது. உலகப்போரின் வடுக்கள் உலராத காலகட்டம். போரில் முளைத்த ஒரு தலைமுறை ஹிப்பி யுகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தருணம். சார்லி சாப்ளினும் , பாப் மார்லியும் உலகை நோக்கி பேசிக்கொண்டிருந்த காலகட்டம்.

காரிக்கு இந்திய வேதாந்தம் மீதும் காந்தி மீதும் நம்பிக்கை இருந்தது. அகிம்சைப்போராட்டங்கள் மக்களின் எண்ணங்களை மாற்றி மாபெரும் சமூக மாற்றங்களை உருவாக்கமுடியும் என்பதற்கு காந்தி வாழும் உதாரணம் என அவர் நம்பினார். இந்திய வேதாந்தம் மீது பெரும் ஈடுபாடிருந்தது. ‘வசுதைவ குடும்பகம்’ என்ற சொல்லை ஒரு மந்திரமாக அவர் நெஞ்சில் நிறைத்திருந்தார். அவரது வேதாந்தம் அந்த வரியில் இருந்து ஆரம்பித்தது.நடராஜ குரு பெங்களூர் சோமனஹள்ளியில் ஜான் ஸ்பியர்ஸின் உதவியுடன் மேலை-கீழை சிந்தனைகளை இணைக்கும்பொருட்டு ஆரம்பித்த ’ஈஸ்ட் வெஸ்ட் யூனிவர்ஸிட்டி’ யின் வகுப்பில் சேர்ந்து வேதாந்தத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

காரி நடராஜகுரு இருந்தபோது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையேனும் இந்தியா வந்துகொண்டிருந்தார். பின்னர் அவரது உலகப்பயணங்களும் சிறைவாசமும் பெருகி அவர் வருவது குறைந்தது. பலவருட இடைவெளிக்குப்பின் மீண்டும் குருகுலம் வந்திருந்தார்.

[மேலும்]

முந்தைய கட்டுரைஉலகம் யாவையும் [சிறுகதை] 1
அடுத்த கட்டுரைஉலகம் யாவையும் [சிறுகதை] 3