பெருவலி: கடிதங்கள் 2

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

‘பெருவலி’ சிறுகதை, உங்கள் மனவலி, கோமலின் மரணவலி இணைந்த வாழ்வுடேயான யதார்த்தம், அழகியல் கலந்த வாழ்வுவெளி. திருடிவிட்ட ஒருவனை அதை எடுக்க எவ்வளவு உழைத்திருப்பான் என்று ஜாலியாக பேசுவது அவர் மனிதன் மீது வைத்திருந்த அன்பையே காட்டுகிறது. ஒழுகும் குழாயின் நீர் அதன் கீழ் இருக்கும் பாத்திரத்தை நாம் பார்க்காத வேளையில் நிரப்பிவிடுவதைபோல்’ நோயால் மரணம் அறிவித்த ஒருவன் மனதுக்கத்தால் தனது சுற்றத்தாரை துக்கப்படுத்துகிறான். அதன்மூலமாக மரணத்தை தன்னிடம் சீக்கிரம் அழைத்துக்கொள்கிறான். கலைஞனை மரணம் நெருங்கும் ஒவ்வொரு நாளையும் தோழியின் தோளை இறுக்கி நடப்பதுபோல் பாவிக்கிறான். ஒரு நாள் வாழ்வில் நுற்றாண்டுக்கான யதார்த்த நடைமுறையை வைக்க முயல்கிறான்.

கோமல் உதிர்க்கும் வார்த்தைகள் அப்படியானதாகத்தான் இருக்கிறது. வலி எப்படியிருக்கிறது. என்று கேட்கும்போது ‘ஒரு கைக்குழந்தை மாதிரி ஆயிட்டுது. எப்பா பாத்தாலும் மூக்கு ஒழுகிண்டு நை நையிண்டு அழுதுண்டு இடுப்பிலே ஒக்காந்திருக்கு’. இதை சாமான்யனால் சொல்ல முடியுமா? மேலும் இமயமலை கைலாயத்தின் அழகை வாசிப்பாளனும் சென்று தரிசித்த உணர்வை ஏற்படுத்துகிறது. ஒருகட்டத்தில் ‘நல்லா இருக்கிறிங்களா’ என்று கோமலை கேட்கும்போது, வாசகத்தை கண்டு அதிர்ச்சியடைந்தேன். என்னடா இது கோமல் சார் அவ்வளவு வேதனை அடைந்து போராடிக்கொண்டு இருக்கிறார் இந்த நேரத்தில் போய் இப்படி கேட்கிறாரே என்று. ஒருவேளை அவர் படுகின்ற அவஸ்த்தையை பார்த்தவுடன் என்ன பேசுவதென்றே புரியாத நிலைமை இவருக்கு ஏற்பட்டு இருக்குமோ? என்று ஒரு நிமிடம் கதையை படிக்காமல் நிறுத்திவிட்டேன். ஒருவழியாக தேற்றிக்கொண்டு அடுத்த பாராவில் அபத்தமான கேள்வியா இல்லை குரூரமா? என்று வாசிக்கும்போதுதான் நிம்மதியானது. அது ஒருவேளை பாடம் எடுப்பதில் திறமை மிக்க ஆசிரியர் என்ற மனநிறைவுடன் இருக்கும் மாணவன், அவர் உடல் மொழியிலிருந்து ஏதோ ஒரு சுட்டு பெயர் வைக்க முயற்சிப்பது போல் கூட இருக்கலாம். சார், இது கொஞ்சலில் குழந்தையின் கன்னத்தை தடம் பதியாமல் கடித்தது. மனதை பாரமாக்கிய கதை.
நன்றி.

ஜெ.டேனியல் ஜேம்ஸ்

அன்புள்ள டேனியல் ஜேம்ஸ்,

உண்மையில் ஒரு மரணப்படுக்கை நோயாளி முன் நாம் எதைச் சொன்னாலும் எதைக்கேட்டாலும் அபத்தமாக, பொருந்தாமல்தான் இருக்கும். அந்த இடத்தில் எதைத்தான் சொல்லமுடியும்? உண்மையான பிரியத்தை அந்த நிலையில் அவர்களின் கண்களால் அவர்கள் உணர முடியும். அதைத்தவிர எல்லாமே பயனற்றவைதான்.

வலி ஞானத்தின் வாசல் என உணர்ந்தவர் பலர் உண்டு. நான் ஓர் அந்தரங்க ஈடுபாட்டுடன் அதை கவனித்து வருகிறேன். வலியின் தேவதை

நன்றி

ஜெ

===============================

அன்புள்ள ஜெயமோகன்,

பெருவலி… கதையாக எடுத்துக்கொண்டால் நூறு மதிப்பெண்கள் உங்களுக்குத் தான்.

மரணபயம் தான் கடவுளைத் தேடச் சொல்கிறதா?

பெருவலியிலும் மனம் தேடாத கடவுள்,

மரணத்தை உணரும் போது மட்டும் எப்படி நாம் தேட விழைகிறோம்?… எல்லா நாத்திகம் பேசும் மனிதனும் இறப்பின் போது இறைவனை தேடுகிறான். என் அனுபவமும் உங்கள் எழுதும் உண்மை.

இமயமலையின் அந்த தெய்வீகத்தை நானும் வாழ்வில் ஒருநாள் உணர வேண்டும் என்பது உங்கள் எழுத்துக்களால் தூண்டப்படுகிறது.

கண்ணதாசன் சொல்வதைப் போல் இந்து மதம் மட்டுமே நிம்மதியை போதிக்கிறது. ஆனால் கோவிலில் குடிகொண்ட சிலை கடவுள்கள் எத்தனை பேருக்கு “ஏன் கண்ணீர்? துக்கமா துக்கம் வழிஞ்சு போன ஆனந்தமா” என்ற அனுபவத்தை கொடுத்து இருக்கும்?

திருப்பதி,பழநி,திருச்செந்தூர் என்று நம் கருங்கல் கடவுள் ஆகட்டும், ராமன் கிருஷ்ணன் என்று வடக்கு பளிங்குக்கல் கடவுள் ஆகட்டும், பல மணி நேரம் வரிசையில் நின்று,வியர்வையில் நனைந்து ‘முடியலடா சாமி’ என்று கருவறையில் ஒற்றை தீபத்தில் ஒளிரும் முகத்தை விநாடி கூட பார்க்க விடாமல் கழுத்தைப் பிடித்து தள்ளும் இறைவன். நீங்கள் எத்தனை முறை சென்றாலும் இதே மரியாதை தான். இதை சவாலாக எடுத்துக்கொண்டு பணம் காசு உள்ள பணக்காரனாக ஆகி ஆயிரம் கொடுத்தால் காணகிடைக்கும் கடவுள்.

எங்கள் ஊர் மாரியம்மனுக்கும் காளியம்மனுக்கும் அடிக்கும் பம்பையில் சிலிர்க்கும் உடம்பு வேறு எங்கும் சிலிர்ப்பதில்லை.கைலாயத்தில் சிலிர்க்கலாம்!

கோமல் அவர்களுக்கு நடந்ததுபோல் எல்லோருக்கும் நடக்க சாத்தியமன்று. ஆனால் அந்த அனுபவம் வாழ்வின் முடிவிலவாது எல்லோருக்கும் வாய்க்க வேண்டும்.

அவர் அனுபவத்தை கதையாய் பகிர்ந்ததிற்க்கு நன்றி!

நீங்கள் கேட்டு இருக்கலாம் படித்தும் இருக்கலாம், இருந்தாலும் கண்ணதாசன் குரலில் “அர்த்தமுள்ள இந்து மதம்” இங்கே கிடைக்கிறது http://www.mediafire.com/?wa8w76lusjpqb

என்றும் அன்புடன்,

சி.கார்த்திக்

அன்புள்ள கார்த்திக்,

உண்மையில் இவையெல்லாம் குறியீடுகள். எப்படி கைலாய மலை அந்த மன எழுச்சியை, அந்த முடிவில்லாத அர்த்தங்களை அளிக்கிறது? அது ஒரு குறியீடு என்பதனால்தான். இயற்கையை மகத்தான பிரபஞ்ச சக்தியின் ஒரு சிறு வடிவமாக எண்ணிக்கொள்வதென்பது நம் மரபில் உள்ளது. கபிலன், கம்பன் முதல பாரதி வரை நமக்கு அதை கற்பித்திருக்கிறார்கள்.

மேலும் ஐரோப்பாவில் பதினேழாம் நூற்றாண்டு முதல் உருவான இயற்கைவழிபாட்டு இலக்கியம் நமக்கு அந்த மனநிலையின் நவீன வடிவை பயிற்றுவித்திருக்கிறது. நாம் பள்ளிகளிலேயே வேர்ட்ஸ்வர்த்தை வாசித்துவிடுகிறோம். அவற்றை முன்னுதாரணமாகக் கொண்ட நூற்றுக்கணக்கான இலக்கியப்படைப்புகளால் நம் அகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. விபூதிபூஷண் பந்த்யோபாத்யாயவும் ஜானகிராமனும் நம்மை வழிநடத்துகிறார்கள்

இவற்றின் ஒட்டுமொத்தமாகவே கையாலயம் நம் கண் முன்னால் கடவுள் வடிவம்போல ஒளிகொண்டு நிற்கிறது. ஆனால் இந்த மனநிலைக்கு வெளியே நிற்கும் ஒருவருக்கு அது வெறும் கற்பாறையாக தெரியலாம். அதன் பொருள்வயமான தகவல்கள் மட்டும் அவருடைய கண்ணுக்குப் படலாம்

இதையே நம் ஆலயங்களின் மூலஸ்தான தெய்வங்களைப்பற்றியும் சொல்ல வேண்டும். அவை தலைமுறைதலைமுறையாக கட்டமைக்கப்பட்ட குறியீடுகள். இதோ தெய்வம் என சுட்டிக்காட்டப்பட்டு நம் உள்ளே உறைந்தவை. விக்ரகம் , பிம்பம் என்றாலே குறியீடு என்றுதான் பொருள். அப்படி அக்குறியீடுகளை உள்ளே ஏற்றுக்கொண்ட ஒருவருக்கு அவை தெய்வங்களேதான். அவன் அங்கே காண்பது ஒரு பெரும் தரிசனம்

அந்த குறியீடு உள்ளே உறையாத ஒருவருக்கு அது கல் மட்டும்தான் . ‘தெய்வம் என்றால் அது தெய்வம். சிலையென்றால் வெறும் சிலைதான்’

மலைக்கும் அதே விதிதான்

ஜெ

கதைகள்

பெருவலி

மெல்லிய நூல்

ஓலைச்சிலுவை

நூறுநாற்காலிகள்

மயில்கழுத்து

யானைடாக்டர்

தாயார் பாதம்

வணங்கான்


மத்துறு தயிர்

சோற்றுக்கணக்கு

அறம்

முந்தைய கட்டுரைசாமர்வெல் ஓர் விவாதம்
அடுத்த கட்டுரைகோட்டி [சிறுகதை] 1