சாதி ,நூறுநாற்காலிகள்

அன்புள்ள ஜெ,

இது தங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம்.
தங்களின் கன்னியாகுமாரி, காடு, பின் தொடரும் நிழலின் குரல் நாவல்களிலும் பல சிறுகதைகளிலும், கட்டுரைகளிலும், விமர்சனங்களிலும் உங்களைச் சில காலமாகவே தொடர்ந்து வந்துள்ளேன்.

நூறு நாற்காலிகளில் வாழ்ந்தவர்கள் மனதுக்குள் ஏதோ ஒரு தாக்கத்தையும், சொல்ல முடியாத சமூகச் சுரண்டல்களையும் காதோரம் கிசுகிசுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு தாயின் பாசமும், ஒரு மகனின் பாசமும் இரு வேறு கோணங்களில் இயல்பாகவும், யதார்த்தமாகவும் பின்னப்பட்டு, சமூகப் பாய்ச்சலிலிருந்து மீள முடியாதத் தன்மையைச் சுட்டுகிறது.

சோழர் காலம் முதல், இன்றைய 21ஆம் நூற்றாண்டு வரை, அம்பேத்கர், பெரியார் போன்றோரின் சீரிய சமுதாயக் கருத்துகள் முன் வைக்கப்பட்டிருந்தாலும், இன்றளவும் நவீனக் காலத்தில் கூட சாதியை விட்டொழிக்க முடியவில்லையே….

அன்புடன்,
பூச்சோங் எம்.சேகர்

அன்புள்ள பூச்சோங் சேகர்

பூச்சேங் என்பது ஊர் பெயரா? மலேசியாவா?

சாதி என்பது அடையாளம். உலகில் எந்த மனித இனமும் அடையாளங்களை விட்டதில்லை. அவை என்றும் இருக்கும். ஆனால் இழிவின் அடையாளமாக அல்லது சமூக ஒடுக்குமுறைக்கான காரணமாக இருக்காது. எல்லா சாதிகளும் பெருமித வரலாறுகளை உருவாக்கும். எல்லா சாதிகளும் சாதியடையாளங்களை பெருமிதச்சின்னங்களாக ஆக்கிக் கொள்ளும்.

இந்தியாவில் வரலாறு முழுக்க சாதி இருந்தது. ஆனால் சாதி எப்போதும் ஒரே மாதிரி இருந்தது இல்லை. இன்று நாம் அதைப்பற்றி கொள்ளும் ஒற்றைப்படையான சித்திரம் அல்ல உண்மையான வரலாறு. அந்த தெளிவு வேண்டும்.

ரத்தினச்சுருக்கமாக இப்படிச் சொல்கிறேன். பழங்குடிச் சமூகங்களில் சிறிய இனக்குழுக்கள் உண்டு. இப்போதும். அந்த இனக்குழுக்களே பிற்பாடு சாதிகளாக ஆயின.

பின்னர் நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் எந்த இனக்குழு பிற இனக்குழுக்கள் மேல் மேலாதிக்கம் கொள்கிறதோ அது மேல் சாதி ஆகியது. நிலப்பிரபுத்துவ கட்டம் நில அடிமைகள் இல்லாமல் நீடிக்க முடியாதாகையால் கீழே உள்ள சாதிகளை அடிமைகளாக்கி அவர்களின் உழைப்பைச் சுரண்டின. அதற்கான நம்பிக்கைகளை, அச்சங்களை, கருத்துக்களை காலப்போக்கில் உருவாக்கிக்கொண்டன

சாதி என்ற அமைப்புக்கு எதிரான போராட்டம் என்பது நிலப்பிரபுத்துவ அமைப்பில் சாத்தியம் அல்ல. ஏனென்றால் அதுதான் அந்த அமைப்பின் உற்பத்திமுறை. சமத்துவத்துக்கு குரல் கொடுத்தவர்களே இருந்தார்கள். புத்தர் போல.

சாதிகள் ஒன்றுடன் ஒன்று முண்டியடித்து மேலே எழுவதற்கு முயன்றபடியே இருந்தன. அது தான் அக்காலச் சமூகத்தின் செயல்முறை. யாருக்கு போர்த்திறன் இருக்கிறதோ, யாருக்கு வணிகத்திறன் இருக்கிறதோ, யாருக்கு நில உரிமை இருக்கிறதோ அவர்கள் ஆதிக்க சாதி.

இந்தியாவில் உள்ள சாதியமைப்பு தொடர்ந்து உருவம் மாறிக்கொண்டே இருந்தது என்பதை டி டி கோஸாம்பிக்குப் பின் வந்த ஆய்வாளர்கள் விரிவாகவே நிரூபித்திருக்கிறார்கள்.

இந்திய வரலாற்றில் பல தாழ்ந்த நிலைச் சாதிகள் ஒருங்குதிரண்டு பேரரசுகளையே உருவாக்கிய வரலாறு உள்ளது. கடைசியாக நிகழ்ந்த நாயக்கப்பேரரசு கூட இடையச்சாதிகளின் எழுச்சிதான். ஆனால் அப்படி ஒரு சாதி மேலே எழும்போது அதற்கு அடிமைவேலை செய்ய வேறுசில சாதிகள் கீழே செல்லும்.

இந்தியாவில் உள்ள பிராமணர்களே அவ்வாறு பல்வேறு மக்கள் காலப்போக்கில் பிராமணச்சாதியாக உருவம் பெற்று உருவானவர்களே. மிகச்சமீபத்தில்கூட பசவண்ணரும் ராமானுஜரும் சைவர்களாகவும் வைணவர்களாகவும் ஆக்கிய பிற சாதினாரில் ஒருசாரார் பிராமணர்களாக ஆன வரலாறு உள்ளது.

முதலாளித்துவம் வந்தபோது இயந்திரங்கள் வந்தன. அடிமைமுறை தேவை இல்லை என்றாயிற்று. உழைப்பு வேறுவகையில் சுரண்டப்பட வழி பிறந்தது. சாதிமுறை இல்லாமலாயிற்று. ஆனால் புதிய பொருளியல் சாதிகள் உருவாகின.

அக்ரஹாரமும் சேரியும் எப்படி வேறு வேறு உலகில் இருந்தனவோ அப்படித்தான் இன்றைய நகரத்து குப்பங்களும் நகர்மையங்களும் இல்லையா? நாயாடிகளுக்கு நிகரான மனிதர்கள் சென்னை கூவம் அருகே குப்பங்களில் பல்லாயிரக்கணக்கில் இன்றும் வாழ்கிறார்களே. மலேசியாவிலேயே வானுயர்ந்த நகரில் பரிதாபகரமான சேரிகளைப் பார்த்தேன். அவற்றில் தமிழர்களும் இந்தோனேசியர்களும் வாழ்ந்ததைக் கண்டேன். புதிய தலித்துக்கள்.

உலகம் முழுக்க இந்த நிலைதான். சீனாவானாலும் ஐரோப்பாவானாலும் 18 ஆம் நூற்றாண்டு வரைக்கூட பிறப்பு அடிப்படையிலான அடிமைமுறை, சுரண்டல் முறை இருந்தது. பின் அவை பொருளியல் சுரண்டலுக்கு வழி விட்டன

முதலாளித்துவ முறை ஒருபடி மேல். இங்கே உரிமைகளுக்காக போராடமுடியும். பேரம் பேச முடியும். திறனிருந்தால் மேலே செல்ல முடியும்

நாளை இன்னும் மேலான சமூக அமைப்புகள் வரலாம். சுரண்டலற்றவை

ஜெ

ஈவேரா: கடிதம்

அறம் என்பது…

பெரியார்-அறிவழகன் கடிதம்


சாதிபற்றி மீண்டும்


சாதியுடன் புழங்குதல்


சாதி பேசலாமா

 

சாதியை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

விளிம்புக்கும் கீழே சில குரல்கள்

முந்தைய கட்டுரைBob Parsons, a vain insect
அடுத்த கட்டுரைஇரவு நாவல் -கடிதம்