விமரிசன வடை

அன்பின் ஜெ,
அதிகமும் பேசிய விஷயம்தான். ஆனாலும் தொடர் நிகழ்வு. அச்சு ஊடகங்கள் இருந்தபோது ஒரு விமரிசனத்திற்கு அதை எழுதுபவர் யார் என்ற மதிப்பீடு இருந்ததாகவே நினைக்கிறேன். ஒரு குறைந்த பட்ச நிரூபணமாவது இருக்கும் ஒருவரே விமரிசனம் எழுத இயலுமாய் இருந்தது. ஆனால் இணையம் வந்த பின் அந்த இடம் பொதுவெளி ஆகிவிட்டிருக்கிறது. அதனால் இதைப் போன்ற “கவையாகி, கொம்பாகி காட்டகத்தே ” நிற்கும் அறிவில் வல்லார் பலரும் கருத்து சொல்ல வந்துவிட்டனர். இவர்களுக்காவே இன்றைய எனது இலக்கிய சமையல் குறிப்பு .

விமர்சன வடை [செய்முறை]

முற்போக்கு ஒரு கால் கிலோ எடுத்து நல்லா சுத்தம் பண்ணி, ஏற்கனவே ஊற வச்சிருக்கற மார்க்சியத்தோட கலந்து ( இது ரெடி மேடா கிடைக்கும்) நல்லா பிசைஞ்சிக்கணும். பிசையும்போது சாதி எதிர்ப்பு ஊத்தி பிசயணும். வெண்ணை பதத்துல வரும்போது நல்லா கொதிச்சிட்டுருக்கற (இந்து) மத எண்ணையில உருண்டை உருண்டையா உருட்டி போடணும். இத சூடா பரிமாறணும். தொட்டுக்க “பார்ப்பன எதிர்ப்பு” (கொஞ்சம் புளிப்பா இருந்தாலும்) சட்னி ரொம்ப பொருத்தமா இருக்கும். ரொம்ப விரிவா, ஆழமா, படிச்சு பார்த்து, கொஞ்சம் உழைப்பை செலுத்தி விமரிசன விருந்து தயார் செய்ய முடியாதப்ப இந்த “விமரிசன வடை” சட்டென கை கொடுக்கும். ரொம்ப குறிப்பா ஜெயமோகன், நாஞ்சில் நாடன், அசோகமித்திரன், யுவன், வெ.சா இப்படி ஆட்களெல்லாம் வரும்போது இந்த வடை சட்டுன்னு கை கொடுக்கும்.

பரிமாறும் முறை

மேற்படி ஆட்களெல்லாம் விமரிசன விருந்தை எதிர்பார்ப்பவர்கள் என்பதாலும், அவர்களே நல்ல முறையில் அவ்விருந்தை தயாரிக்க முடிந்தவர்கள் என்ற (சாதி திமிர்தான் .. வேறென்ன?) காரணத்தாலும் இந்த வடையை நேரடியாக அவர்களுக்கு கொடுக்கலாகாது. ஏதாவது விழாவில் (அது எவ்வகையிலும் விருந்துக்கு சம்பந்தப்படாவிட்டாலும்) திடீரெனவும், கூட்டமில்லாத இணைய பக்கங்களிலும் (கூட்டம் சேர்வது உறுதி) சட்டென எதிர்பாரா வேகத்தில் பரிமாறிவிட வேண்டும். குறிப்பாக ஊற வைத்த மார்க்சியத்தை முழுமையாக அரைக்காமல் கிள்ளிப் போடப்பட்ட கறிவேப்பிலை போல அங்கொன்றும், இங்கொன்றுமாக வாயில் நெருடும்படி இருந்தால் பல “வடை வாசகர்களும்” (இவர்கள் முழு நேரமும் வடை சாப்பிடுபவர்கள் என அறிக; எந்த பதார்த்தம் கொடுக்கப்பட்டாலும் அதை உடனே வடையாக மாற்றும் திறன் படைத்தவர்கள்)விரும்பி நம்முடன் சேர்வார்கள்.

விமரிசன வடை நன்மைகள்

இதனை செய்ய முடிந்தால் வேறெந்த சமையல் தெரியாவிட்டாலும் நம்மையும் விமரிசன சமையல்காரராக வடை வாசகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

தொடந்து இந்த வடையை சுட்டு தள்ளுவதன் மூலம் நாமும் “எழுத்தாளர் ” என ஒரு கட்டத்தில் வடை வாசகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு கட்டத்தில் “புரட்சி வடை” சுட வாய்ப்பும் உண்டு.
முக்கியமான நன்மையாக நாம் விமரிசன வடை தவிர வேறு எந்த சமையலும் செய்யாவிடினும் வெறும் வடையைக் கொண்டே காலத்தை ஊட்டி விடலாம்.

எவ்வகை விமரிசனத்திற்கும் அந்த படைப்பையோ, அது சம்பந்தமான அறிவியக்கத்தையோ, படித்திருக்கத் தேவையில்லை. அந்த சமையலுக்கான அதே பொருட்களை வெகு கொஞ்சமாக (சாம்பாரில் பெருங்காயம் அளவு) சேர்த்துக் கொண்டு மேற்சொன்ன முறையில் “விமரிசன வடை” தட்டி விடலாம்.

முற்போக்குவாதி, பெண்ணியவாதி, மார்க்சியவாதி, பகுத்தறிவுவாதி … போன்ற இன்னும் பல பட்டங்களும் நமக்கு “வடைவாதிகளால் ” கேட்காமலே வழங்கப்படும்.
ஆகவே நாம் எல்லோரும் நாவிற்கு சுவையான (வயிற்றை கெடுக்கும்) விமரிசன வடையை ருசித்து ஜீரணமாகாவிட்டால் அதே எழுத்தாளர்களின் தரப்பு பதிலையும் , மறுபடி “விமரிசன வடையாளர்களின்” பதிலையும் மாறி மாறி படித்தால் போதும்.
மேற்கொண்டு சமையல் குறிப்பு வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்.

ராஜகோபாலன்.ஜா, சென்னை

முந்தைய கட்டுரைஓர் இடம்
அடுத்த கட்டுரைஉள்ளுணர்வு, ஒருகடிதம்