சென்னை குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா

குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்

சென்னைக்கு ஏப்ரல், மே மாதங்களில் வந்தால் நான் வெளியே ஐந்துநிமிடம்கூட உடலை காட்டுவதில்லை. சென்னை ஒரு பாலைவனநகரம் என்னும் உளப்பதிவு என்னுள் உண்டு. டிசம்பரிலே கூட சென்னையை அவ்வளவாக நான் விரும்புவதில்லை. நான் இதுவரைச் சென்ற நகரங்களிலேயே மிகமிக அழுக்கான, குப்பையான, ஒழுங்கற்ற நகரம் என்றால் அது சென்னைதான். பிற நகரங்களில் சில பகுதிகளேனும் சற்று அழகாக இருக்கும். சென்னையில் எங்கும் அழகு என்பது எவ்வகையிலும் கண்ணுக்குப்படுவதில்லை. எத்தனை ஆடம்பர அடுக்குமாடிக் கட்டிடம் என்றாலும் அதன் பால்கனி என்பது பல ஆண்டுகளாகச் சேர்ந்த குப்பைகள் குவிக்கப்பட்டு வானில் நின்றிருக்கும். செங்குத்தாக எழுந்த குப்பைமலைகள் செறிந்த ஒரு பிரம்மாண்டமான ஒரு குப்பைக்கூடை..

 

அதிலும் வெளிநாடு சென்று திரும்பி சென்னை விமானநிலையத்திலிருந்து வெளியே வந்தால் கண்டபடி இடித்தும் சிதைத்தும் போடப்பட்டிருக்கும் கட்டுமானங்கள், பாதி முடிந்த கட்டுமானங்கள், எங்கு நோக்கினாலும் கட்டுமானக் குப்பைகள், துருப்பிடித்து புழுதிபடிந்த வண்டிகள், ஓலமிடும் பழைய வண்டிகள், கிழிந்த புதிய சுவரொட்டிகள் என  போரில் இடிந்து பரவிக்கிடக்கும் சிரியாவின் ஏதோ நகரம்போலவே தோன்றி துணுக்குறச்செய்யும். மழைக்காலத்தில் சகதி நிறைந்த சாலைகளும் தெருவில் ஓடும் சாக்கடைகளும், சுவர்ப் பாசிகள் நனைந்தமையால்  கருகியதுபோல் நிற்கும் கட்டிடங்களுமாக கண்களை மூடிக்கொண்டேதான் விடுதிவரைச் செல்லவேண்டும்.

இம்முறை சென்னை வெயிலுக்குள் நன்றாக மாட்டிக்கொள்ளும்படி ஆகிவிட்டது. குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு தக்கர்பாபா கூடத்தை பதிவுசெய்திருந்தோம். நிகழ்ச்சிக்கு இரண்டுமணிநேரம் முன்னால் மையக்குளிர்சாதன அமைப்பு பழுதடைந்துவிட்டது என்றார்கள். அதை நம்மால் சரிபார்க்கவே முடியாது.

 

பொதுவாக காந்திய அமைப்புக்கள் நிதிவசதி இன்றி கைவிடப்பட்டவையாக, மிகமிக மோசமாக நிர்வாகம் செய்யப்படுவனவாக, பொறுப்பேற்க எவரும் இல்லாதனவாக இருக்கும். தக்கர்பாபா கூடமும் அவ்வாறே. அழகுணர்வு எங்கும் தென்படவில்லை. எங்கும் புழுதிவேறு. பிளாஸ்டிக் நாற்காலிகள். ஏஸி இருந்திருந்தால் பரவாயில்லை. வேறுவழியே இல்லை. அங்கேயே நிகழ்ச்சியை நடத்தியாகவேண்டிய நிலை. ஆனால் இனி அந்தக்கூடத்தில் எந்த நிகழ்ச்சிக்கும் பார்வையாளராகக்கூடச் செல்ல மாட்டேன் என உறுதி எடுத்துக்கொண்டேன்.

கதவுகள் திறந்தே இருந்தன. மின்விசிறிகள் இருந்தன. ஆனாலும் அனல் பெய்துகொண்டிருந்தது. மூச்சுவாங்கியது. பலமுறை மயங்கிவிழுந்துவிடுவேனோ என்றே ஐயம் ஏற்பட்டது. மதியம் இரண்டு மணிக்கு சிறுகதைக் கருத்தரங்கு. ஏசி இல்லாததனால் அரைமணிநேரம் கழித்து தொடங்கினோம்.  அந்த அனல்சூளையில் இலக்கியத்தின்பொருட்டு நூறுபேர் வந்து அமர்ந்து, ஒருவர்கூட எழுந்துசெல்லாமல் மூன்றுமணிநேரம் கருத்தரங்கு நடந்தது என்பதெல்லாம் வரலாற்றில் பொறிக்கப்படவேண்டியவை. வந்த ஒவ்வொருவரிடமும் காலைத் தொட்டு நான்தான் மன்னிப்பு கோரவேண்டும்.

 

சிறுகதைக் கருத்தரங்கில் சுனீல்கிருஷ்ணன், விஷால்ராஜா, காளிப்பிரசாத் ஆகிய மூவரும் பேசினார்கள். சுனீல்கிருஷ்ணன் அனோஜன் பாலகிருஷ்ணைன் சிறுகதைகளைப்பற்றி பொதுவாகப் பேசினார். காளிப்பிரசாத் சிவா கிருஷ்ணமூர்த்தியின் வெளிச்சமும் வெயிலும் தொகுதி குறித்தும் விஷால்ராஜா எஸ்.சுரேஷின் பாகேஸ்ரீ தொகுதி பற்றியும் பேசினர். மூவருமே சிறப்பாக தயாரித்துக்கொண்டு வந்திருந்தார்கள். சுனீல்கிருஷ்ணனும் விஷால்ராஜாவும் விரிவாகவும் செறிவாகவும் விமர்சனத்தை முன்வைத்து அதைத்தொடர்ந்த விவாதங்களில் வாசகர்களின் எல்லா வினாக்களையும் மிகச்சிறப்பாக எதிர்கொண்டார்கள்.

சுனில் கிருஷ்ணனுக்கு நினைவுப்பரிசு

 

இத்தகைய நிகழ்ச்சிகளில் உரைகளில் எப்போதும் உள்ள ஒரு குறைபாடு அவை வழக்கமாக தொய்வான தன்மதிப்பீடுகளால் ஆனவையாக இருக்கும். சரியாக அமையும்போதுகூட புதிதாக நாம் எண்ணிப்பார்க்க எதுவும் சொல்லப்பட்டிருக்காது. மாறாக விஷால்ராஜா, சுனீல் கிருஷ்ணன் இருவருமே அதுவரை பேசப்படாத புதிய சில அவதானிப்புகளை அந்த ஆசிரியர் குறித்தும் பொதுவாக இலக்கியம் குறித்தும் முன்வைத்தனர். அவை வாசகர்களால் ஏற்கப்படலாம் அல்லது மறுக்கப்படலாம். ஆனால் ஓர் இலக்கியக்கூட்டத்திற்கு வந்து மீளும்போது நாம் அவற்றைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தோம் என்றாலே வந்தமைக்கான பயன் அமைந்துவிடுகிறது.

 

உதாரணமாக அனோஜனின் கதைகளைப் பற்றி பேசிய சுனில் கிருஷ்ணன் ஒரு கருத்தைச் சொன்னார். அனோஜனின் முதல்தொகுதியில் முதிராஇளமைக்கான கருக்களும் முதிராகதைவடிவும் உள்ளன. அடுத்த தொகுதியான ’பச்சைநரம்பி’ல் கதைவடிவம் மிகக்கச்சிதமாக அமைந்துள்ளது. ஆனால் கதைக்கருக்கள் அந்த இளமைக்குரிய வழக்கமானவையாகவும் ,கண்டடைதல்களும் நவீனக்கதைகளில் எப்போதும் வெளிப்படுவவாகவும் உள்ளன. அத்தொகுதிக்குப் பின்னர் எழுதப்பட்ட கதைகள் புதிய தரிசனங்களை நோக்கிச் செல்வனவாகவும் அதேசமயம் வடிவச்சிதைவு கொண்டவையாகவும் உள்ளன.

தமிழில் கதைகளை பொதுவாக கச்சிதமான வடிவத்தைக்கொண்டு மதிப்பிடும்வழக்கம் உள்ளது. ஆனால் அவ்வாறு கச்சிதமாக அடையப்பட்ட வடிவம் என்பது பெரும்பாலும் ஏற்கனவே முந்தைய சிறந்தபடைப்பாளிகள் அடைந்த வடிவ வெற்றியை தான் சென்றடைவதாகவே இருக்கும். ஆகவே அது முக்கியமல்ல. தன் சொந்த தரிசனத்தை நோக்கிச்செல்லும் எழுத்தாளன் தனக்கு முன்பிருந்தவர்களிடமிருந்து பெற்ற வடிவத்தை சிதைத்துக்கொண்டே அங்கே செல்லவேண்டியிருக்கும். அந்தச் சிதைவு படைப்பூக்கம் கொண்டது. ஆகவே வடிவக்கச்சிதத்தைவிட இலக்கு நோக்கியபயணத்தில் அடையப்படும் குலைவு மேலானது.

 

சுனிலின் இக்கருத்து எனக்கு மேலும் யோசிக்கத்தக்கதாக தோன்றியது. தமிழில் க.நா.சு, சுந்தரராமசாமி தலைமுறை படைப்பை வடிவக்கச்சிதம் என்னும் அளவுகோலைக்கொண்டே அளந்தது. ஒரு படைப்பில் புறவயமாக மதிப்பிடத்தக்கது வடிவம் மட்டுமே என அவர்கள் எண்ணினர். ஆனால் வடிவத்திற்காக முயலும் எழுத்தாளன் வெற்றுக்கட்டுமானத்தையே சென்றடைவான். தன்னைக் கண்டடையவும் வெளிப்படுத்தவும் முயல்பவனே தனக்குரிய வடிவத்தை காலப்போக்கில் சென்றடைவான். அது ஏற்கனவே இருந்த வடிவங்களை கலைப்பதனூடாகச் செல்லும் பயணம்.வடிவப்பிழைகளின் பாதை.

காளிப்பிரசாத்

விஷால்ராஜா பேசும்போது நாவல் ஒரு முழுமையை காட்டுவது, சிறுகதை வாழ்க்கையின் ஒருதருணத்தை மட்டும் காட்டுவது, வாழ்க்கைநோக்கிய ஒரு சாளரம் என்று சொல்லப்படுகிறது ஆனால் அந்த வரையறையைச் சிறுகதை கடந்துவிட்டது. சிறுகதைக்குள்ளேயே வாழ்க்கையின் முழுமை எப்படி வெளிப்படுகிறது என்பது இன்றைய கேள்வி என்றார். இந்தவகையான புதிய கருத்துக்கள் இன்றைய இலக்கியமேடையில் முன்வைக்கப்படுவது மிக அரிது. இத்தகைய தரத்தில் பேசுவதற்குச் சிலரே இன்றிருக்கிறார்கள்.

 

காளிப்பிரசாத் வெளிப்பாட்டில் தயக்கமும் பயிற்சியின்மையும் கொண்டிருந்தார். பேச்சுநடுவே குறிப்புகளைப் புரட்டுவது மேடையில் கருத்துக்கள் வெளிப்படுவதன் ஒழுக்கை மிகமிகச் சிதறடிப்பது. அதேபோல உருவகங்களைக்கொண்டு விமர்சனக்கருத்துக்களை முன்வைக்கையில் அவ்வுருவகங்கள் அந்தரங்கத்தன்மை கொண்வையாக, ஒரு சிறுவட்டத்திற்குள் பேசிக்கொள்ளும் குழூக்குறிகளாக இருக்கலாகாது. அவற்றுக்கு பொதுத்தன்மையும் பேசப்பேச விரியும் குறியீட்டுத்தன்மையும் இருக்கவேண்டும்.

அருணாச்சலம் மகாராஜன்

 

இரு நிகழ்ச்சிகளுக்கும் நடுவே ஒருமணிநேர இடைவெளி. அதில் வசந்தபாலனுடனும் பிறநண்பர்களுடனும் பேசமுடிந்தது. டிஸ்கவரி பதிப்பகம் வேடியப்பன் வெளியிடும் இதழை வசந்தபாலன் எனக்கு அளிக்க பெற்றுக்கொண்டேன். கவிதா சொர்ணவல்லி, கிருபா முனுசாமி ஆகியோருடன் பேசினேன். கிருபா லண்டனில் அனைத்துலகச்சட்டப் படிப்பில் ஆய்வுக்காகச் சென்றிருக்கிறார் இப்போது.

மூன்று பதிப்பகங்கள் தங்கள் நூல்களை விற்பனைக் காட்சிக்கு வைத்திருந்தன. தேநீர் இடைவேளையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். பிற ஊர்களில் வாசகர்களுடனான சந்திப்புகள் நிகழ்வதனால் பலரை விரிவாகவே அறிவேன். சென்னையில் வெறும் முகங்களாகவே அறிகிறேன். சென்னையில் முறையான இலக்கிய உரையாடல் அரங்குகளை நடத்தியதில்லை.

 

விழாவுக்கு இருநூறுபேருக்குமேல் வந்திருந்தனர். அரங்கு நிறைய நிறைய பதற்றம்தான் ஏற்பட்டது, இரு ஏர்கூலர்கள் ஏற்பாடு செய்தோம். ஆனாலும் போதவில்லை. பொதுவாகச் சென்னையில் ஒர் இலக்கியக்கூட்டத்திற்கு இன்னொரு தரப்பினர் செல்வதில்லை. எங்கள் விழாக்களுக்கு எல்லா தரப்பினரும் வரவேண்டும் என்பது என் எண்ணம். ஆகவே நான் எழுத்தாளர்கள் எல்லாரையுமே தனிப்பட்டமுறையில் அழைப்பதுண்டு. மிகமிகச் சிலரே வருவார்கள். ஒருசிலர் மட்டும் ஏதேனும் காரணம் சொல்லி மின்னஞ்சல் அனுப்புவார்கள். பெரும்பாலானவர்கள் பேசாமலிருந்துவிடுவார்கள்.

 

பங்கேற்பாளர்களாக வருபவர்கள் அனேகமாக அனைவருமே என் வாசகர்கள் மட்டுமே. தொண்ணூறு சதவீதம் எனக்கு நேரில் தெரிந்தவர்கள். நேர்மாறாக பிறர் நிகழ்த்தும் கூட்டங்களில் அரங்கில் பாதிப்பேர் என் நண்பர்கள் என்பதையும் கண்டிருக்கிறேன். நான் முக்கியம் என நினைக்கும் கூட்டங்களுக்கு திரள் இல்லாமல் ஆகிவிடக்கூடாது என்று எண்ணி நானே பலரிடம்  செல்லும்படிச் சொல்வதுமுண்டு. இந்த குழுஅரசியல் எனக்குத்தெரிந்தாலும் நான் அழைக்கத் தவறுவதில்லை.ஒருவேளை அவர்களுக்கு ஏதேனும் தயக்கமிருந்தால் அழைப்பால் அதுபோகட்டுமே என்பதே என் எண்ணம்.

மனுஷ்யபுத்திரன்
கிருபா முனுசாமி, கவிதா சொர்ணவல்லி

 

இயக்குநர் எழுத்தாளர் சந்திரா
அமிர்தம் சூர்யா

அதேபோல எங்கள் நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகளை நாளிதழ்கள் பகிர்வதில்லை. முகநூலில் எவரும் பகிர்வதில்லை. தங்கள் நிகழ்ச்சிகளின் செய்திகளை எனக்கு அனுப்பி என் இணையதளத்தில் போடச்சொல்பவர்கள்கூட எங்கள் நிகழ்ச்சிகளைப் பகிர்வதோ நிகழ்ச்சிக்கு வருவதோ இல்லை. அவர்களின் பிறநண்பர்களின் அழுத்தம்தான் காரணம் என நினைக்கிறேன்.இங்கே அது மிகப்பெரிய ஒரு மிரட்டல்சக்தி. ஆனால் அந்த ’பிறநண்பர்கள்’ பெரும்பாலும் இலக்கிய அறிமுகமே அற்றவர்கள், அரசியல் மட்டுமே கொண்டவர்கள்.

 

ஆனால் எங்கள் நிகழ்ச்சிகளுக்கு வருமளவுக்கு தரமான வாசகர்களின் கூட்டம் பிறநிகழ்ச்சிகளுக்கு அமைவதில்லை என்பதையும் காண்கிறேன். சரியான நேரக்கணக்கும், சம்பிரதாயப்பேச்சுக்கள் முற்றாக இல்லாமல் பயனுள்ளவை மட்டுமே பேசப்படுவதும்தான் அதற்குக் காரணம். அதை கறாராகவே கடைப்பிடிக்கிறோம். ஆகவே இந்நிகழ்ச்சிக்கு வருபவர்கள் எங்களுக்கு எதையும் அளிப்பதில்லை. அவர்கள்தான் சென்னையில் நிகழும் மிகத்தரமான இலக்கியநிகழ்ச்சிகளைத் தவறவிடுகிறார்கள்.

 

 

ஆறுமணிக்கு விருதுவிழா.கவிதா வரவேற்புரை வழங்கினார். மாரிராஜ் அரங்க அறிமுகம். வழக்கம்போல ராஜகோபாலன் சிரித்தமுகத்துடன் மேடையிலிருப்பவர்களையே மென்மையாக கிண்டலடித்து நிகழ்ச்சியை தொடங்கி தொகுத்துரைத்தார்.

 

பி.ராமனின் உரைதான் அரங்கில் தலைமைநிகழ்வு. தமிழின் சங்கக் கவிதைகள் முதல் நவீனக்கவிதைகள் வரை மேற்கோள்காட்டி தமிழ்ப்புதுக்கவிதை மலையாளக்கவிதைக்கு அளிப்பதென்ன, சங்ககால கவிதைப்பரப்பை மலையாளப் புதுக்கவிதை எப்படி தனக்குரிய தொல்மரபாக,வேர்நிலமாகக் கண்டடைந்தது என விரிவாக விளக்கிப் பேசினார். மலையாளக்கவிதையின் கற்பனாவாத மரபு சம்ஸ்கிருதக் கவிப்பரப்பையே தன் முன்னோடியாக எண்ணியது. அதிலிருந்து நிகழ்ந்துள்ள இந்த மாற்றம் ஆற்றூர் ரவிவர்மா மொழியாக்கம் செய்த தமிழ்க்கவிதைகளாலும், நான் குற்றாலத்திலும் ஊட்டியிலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நடத்திய தமிழ்- மலையாளக் கவிதை அரங்குகளாலும் நிகழ்ந்தது என்றார். அது ஒரு சாதனைதான் என்னும் எண்ணம் அப்போது எனக்கு உருவானது.

பி.ராமனின் பேச்சு கவிதைகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு மிக அணுக்கமானதாகவும் புதியவற்றைக் கூறுவதாகவும் இருந்தது. ஒரு மலையாளக் கவிஞன் தமிழின் கவிதைகளில் தன் நிலத்தையும் பண்பாட்டையும் மீள்கண்டுபிடிப்பு செய்வதைப்பற்றி பேசினார். இந்த அளவுக்கு தமிழ்க்கவிதைகளை தமிழ்க்கவிஞர்கள் வாசித்திருப்பதாகத் தெரியவில்லை என ஒரு நண்பர் சொன்னார்.

 

பி.ராமனின் உரையிலும் முற்றிலும் புதிய ஒரு கருத்து, மேலெடுத்து எண்ணிச்சூழத்தக்க ஒன்று, உருவாகிவந்தது. தமிழ் உரைநடை இறுக்கமானது, செறிவானது என்றார் ராமன். ஆங்கிலம்போலவே. ஆகவே புதுக்கவிதைக்கு தமிழ் உரைநடை ஒத்துவருகிறது. மலையாளம் சற்றே காலத்தால் பிந்தைய மொழி, மக்கள்மொழி. ஆகவே சற்று தளர்வான உரைநடையே அதில் இயல்வது. ஆகவே கவிமொழியை இறுக்கமாக்குவதற்காக அங்கே யாப்பை, ஓசையை இன்னமும் கையாள்கிறார்கள். தமிழில் யாப்பு இல்லாமலாகிவிட்டது. மலையாளத்தில் இன்னமும் யாப்பு இருப்பதற்கான காரணம் இந்தத் தேவைதான்.

மலையாளக்கவிதையை பாடுகிறார்கள் என தமிழ் வாசகர்கள் சொல்வதுண்டு. அது யாப்பு உருவாக்கும் ஓசைமுறையே ஒழிய இசைத்தன்மை அல்ல என்று ராமன் சொன்னார். மலையாளக்கவிஞர்கள் கவிதையை ’பாடு’வதில்லை, ’சொல்’கிறார்கள் [அல்லது உச்சாடனம் செய்கிறார்கள்.singing அல்ல reciting என்றார்] என்றார். புதிய ஒரு கோணம் அது. தமிழ் வாசிப்பவரான ராமன் தமிழ்க்கவிதைகளை சொல்லி அவற்றுக்கு அவர் செய்த மலையாள மொழியாக்கங்களையும் சொல்லிக்காட்டினார்.

 

ராமன் நூறு கவிதைகள் வரை மொழியாக்கம் செய்திருக்கிறார். அவர் மொழியாக்கம் செய்த ஞானக்கூத்தனின் அழத்திறந்த வாய் போன்ற கவிதைகளை மலையாளத்திலும் உரைத்துக்காட்டினார். தமிழில் இன்று கவிதையின் ஓசை காதில்விழ வாய்ப்பே இல்லாமலாகிவிட்டிருக்கிறது.

 

தேவதேவன் தமிழ்க்கவிதையின் நுண்ணுணர்வு குறித்து சுருக்கமாகப் பேசினார். அருணாச்சலம் மகாராஜன் ச.துரையின் கவிதைகளில் வெளிப்படும் எப்போதைக்குமுரிய கவிதையுணர்வுகள் பற்றிப் பேசினார்.

 

நான் இறுதியாக ச.துரையின் கவிதைகள் எப்படி இன்றைய கவிதைப்போக்கில் ஒரு புதிய தொடக்கமாக அமைகின்றன என்பதைப்பற்றிப் பேசினேன். அந்த அரங்கின் வெம்மையும் புழுக்கமும் மேலும் தீவிரமாகப் பேசலாகாது என எனக்கு உணர்த்தின. நான் பேசவிருந்த அதே தீவிரமான கருத்துக்களை முடிந்தவரை எளிதாகவும் உற்சாகமாகவும் பேசினேன். நான் கூறவந்தது புதுக்கவிதையின் நூறாண்டுக்கால பரிணாமம், அதில் ச. துரை எங்கிருக்கிறார் என. இருபதுநிமிடங்கள் திட்டமிட்டேன். அதைச் சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன்.

 

ச.துரையின் ஏற்புரைக்குப்பின் வெண்பா கீதாயன் நன்றி கூறினார். எட்டேகால் மணிக்கு நிகழ்ச்சி முடிந்தது.

 

 

நண்பர்கள் அனைவருக்கும் தங்க விடுதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேவதேவனும் ராமனும் ச.துரையும் அவருடன் வந்த வே.நி.சூர்யாவும் அங்குதான் தங்கியிருந்தார்கள். ஈரோடு கடலூர் என பல ஊர்களிலிருந்து வந்த நண்பர்களும் அங்கே தங்கினோம். நான் பகல் முழுக்க உற்சாகமாகக் கத்திப்பேசி உரையாடிச் சிரித்தேன். கருத்தரங்கிலேயே கொஞ்சம் தொண்டை அடைத்தது. ராமனின் பேச்சை மொழியாக்கம் செய்கையில் நன்றாகவே தொண்டை அடைத்தது. என் பேச்சில் கிரீச்சிடும் ஒலிகள் வாயிலிருந்து எழுந்தன. ஆனால் இந்த நட்புக்கூடல்கள்தான் இத்தகைய நிகழ்ச்சிகளின் கொண்டாட்டம். அவற்றை தவிர்க்கமுடியாது. நண்பர்கள் வருவதே அதற்காகத்தான்.

 

சௌந்தர், ராஜகோபாலன், மாரிராஜ், காளி, சண்முகம் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்தனர். எவருமே வழக்கமாக இலக்கியநிகழ்ச்சிகளை நடத்தக்கூடியவர்கள் அல்ல. ஆகவே எல்லாமே அவர்களுக்குச் சிக்கல்தான். அதைமீறி அவர்கள் இந்நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர். எங்கள் நிகழ்ச்சிகள் என்பவை மேடையில் நிகழ்பவை மட்டும் அல்ல. அதற்கு ஒருநாள் முன்பிருந்தே நண்பர்கள் வருவார்கள். ஒருநாள் தங்கிச்செல்வார்கள். இரண்டுமூன்றுநாள் நீளும் ஒரு இலக்கியக்கூடுகை இது. ஒவ்வொன்றாகப் பார்த்து ஏற்பாடு செய்வதென்பது ஒரு திருமணத்தை ஒருங்கிணைப்பதுபோல. நண்பர்களின் ஒத்திசைவும் ஏற்பாடுகளும் சிறப்பாக அமைந்திருந்தன

பி.ராமனின் மகன் ஹ்ருதய் ராமன் ஒரு வளரும் ஓவியர். கண்காட்சிகள் வைத்திருக்கிறார். ராமனின் மகன் சென்னை வந்ததில்லை. ஆகவே அவனை அழைத்துவரச்சொல்லியிருந்தேன். பத்தாம்தேதி அவனுக்கு 14 ஆவது பிறந்தநாள் அன்று அவனை சென்னை ஓவியக்கூடங்களுக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்திருந்தேன். நண்பர்களும் உடன்சென்றார்கள். நானும் வெண்கலச்சிலைக் கூடத்திற்குச் சென்றேன்.  அவர்கள் கடற்கரைக்குச் செல்ல நான் ரயில்நிலையம் கிளம்பினேன்.

 

ஏஸி காருக்குள்ளேயே அனல் பெய்தது.ரயில் குளிர அரைமணிநேரம் ஆகியது. ஊருக்குப் பேசியபோது அருண்மொழி இரண்டுநாட்களாக இடைவெளியே இல்லாத மழை, நல்ல குளிர் என்றாள். குமரிக்கு திரும்பமுடியும் என்பதுதான் சென்னையில் இருக்கையில் அடையும் மிகத் தித்திப்பான எண்ணம்

 

புகைப்படங்கள் : கார்த்திக்

‘ சப்தம் ஆப்பிள் வடிவிலானது’ – அருணாச்சலம் மகாராஜன்

முந்தைய கட்டுரைபோதைமீள்கையும் வாசிப்பும்
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-66