அறம் என்பது…

நிலப்பிரபுத்துவ அறங்களை கைவிடுகிறோம். ஆனால் முதலாளித்துவத்துக்கு பல்வேறு அறங்களும் ஒழுக்கங்களும் உண்டு. அவற்றை நாம் கற்றுக்கொள்வதில்லை — கண்டவை கவலைப்பட்டவை கட்டுரையில் இவ்வாறு எழுதுகிறீர்கள்..

அது என்ன முதலாளித்துவ/ நிலப்பிரபுத்துவ/ கம்யூனிச அறம். இவற்றின் வகைகள்/ நிலைகள் ஆகியவற்றை விளக்க முடியுமா ?

கிருஷ்ணன்

அன்புள்ள கிருஷ்ணன்,

நேரில் கேள்விகேட்டு படுத்துவது போதாதென்று மின்னஞ்சலிலுமா?

பலவருடங்கள் முன்பு நிகழ்ந்த விஷயம் இது. ஒரு திரையரங்கில் மேலதிகாரி ஒருவரின் மனைவி தன் சினேகிதிகளுடன் படம் பார்க்க வந்திருந்தாள். அதே வகுப்பில் அலுவலக உதவியாளரின் மனைவியும் தன் தாய்வீட்டாருடன் படம் பார்க்க வந்திருந்தாள். மேலதிகாரியின் மனைவி உதவியாளரின் மனைவியை அதிகாரமாக அழைத்து டீ வாங்கிவரச்சொன்னாள். தன்மானம் சீண்டப்பட்ட அந்த பெண் மறுத்துவிட்டாள்.

அதிகாரியின் மனைவிக்கு அது கௌரவப்பிரச்சினையாக ஆகியது. உடனே அழுதபடி அவள் எழுந்து சென்று கணவனிடம் சென்று உதவியாளரின் மனைவி தன்னை அவமதித்துவிட்டதாகச் சொல்லி கதறினாள். கோபம் தலைக்கேறிய அதிகாரி உதவியாளரை வரவழைத்து வசைபாடி தற்காலிக வேலைநீக்கம் செய்தார்

அதைஒட்டி ஊழியர்சங்கம் ஊழியருக்காக பேச்சுவார்த்தைக்குச் சென்றது. அதிகாரியின் மனைவியும் வந்து பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார். அந்த உதவியாளாரின் மனைவி தன்னை அவமதித்ததாகச் சொல்லி அதிகாரியின் மனைவி அழுதுகொண்டே இருந்தாள். அலுவலக உதவியாளரை வெளியே வேலைவாங்குவதே தவறு, அவர் மனைவியை எப்படி வேலை வாங்கலாம் என்று எவ்வளவோ சொன்னாலும் அதிகாரிக்கும் புரியவில்லை, மனைவிக்கும் புரியவில்லை.

‘நான் என்ன தப்பு செய்தேன்? அவளிடம் ஒரு டீ வாங்கிவரச்சொன்னது தவறா? அதற்கு அவள் எப்படி முகத்திலறைந்தது போல மறுக்கலாம்? தன் சொந்தக்காரர்கள் முன்னால் பெருமையடித்துக்கொள்வதற்காக என் சினேகிதிகள்முன் என்னை அவமதித்தாள்’ என்று திரும்பத்திரும்ப சொன்னாள் அதிகாரியின் மனைவி. பல கோணங்களில் பேசியும் பயனில்லை. ஒருகட்டத்தில் அதிகாரியின் மனைவி மனமுடைந்து அழ ஆரம்பித்தாள்.

மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சி தொழிற்சங்கம். ஆகவே அடுத்த படிக்குச் சென்றது அது. மூன்றே நிமிடங்களில் அதிகாரி உதவியாளரை திரும்ப வேலைக்கு எடுப்பதாகச் சொல்லி சரணடைந்தார். வேறொன்றும் இல்லை. அதிகாரியின் மனைவிக்கு நீக்கம் செய்யப்பட்ட ஊழியருடன் கள்ள உறவிருப்பதாக அதிகாரி சந்தேகப்பட்டதனால்தான் அவரை வேலைநீக்கம் செய்தார் என்று துண்டுப்பிரசுரம் வெளியிட வேண்டியிருக்கும் என்றார் தோழர்.

அந்த தோழர் சொன்னார். ‘நிலப்பிரபுத்துவம் போயாச்சு. முதலாளித்துவமும் வந்தாச்சு. இனி கம்யூனிசமும் வந்தாலும் கூட நாம நூறுவருசமாவது இந்த நிலப்பிரபுத்துவ மனநிலைகள்கிட்ட போராடணும்னு படுது தோழர்’ இன்னொரு தோழர் சொன்னார் ‘தான் நினைக்கிறதுதான் சரீன்னு எப்டி நம்பிக்கையா இருக்காங்க!’

காரணம் எளியது. அந்த பெண்மணி உயர்சாதியில் நிலப்பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்து அச்சூழலிலேயே வளர்ந்தவர். அவரது பிறந்த வீடு முழுக்க வேலைக்காரர்கள் இருந்தார்கள். அந்தப்பெண்மணி வேலைக்காரிகளை அடிப்பாள் என்றும் ஆகவே மாதம் ஒரு வேலைக்காரியை பார்த்துக்கொடுக்கவேண்டியிருந்தது என்றும் சொன்னார்கள். அவளைப்பொறுத்தவரை வேலைக்காரர்கள் என்பவர்கள் அடிமைகள். அவர்களுக்கென தன்மானம் இருக்கக் கூடாது. சேவை செய்வதையே அவர்கள் வாழ்க்கையாகக் கொண்டிருக்கவேண்டும்.

அந்தப்பெண்மணி விசுவாசம், நன்றி என்ற சொல்லை சொல்லிக்கொண்டே இருந்தார் என்றார் தோழர். அவை அவளுக்கு மிகப்பெரிய அறங்கள். வேலைக்காரர்கள் அவற்றுக்குக் கட்டுப்பட்டவர்கள். அவை நிலப்பிரபுத்துவகால நில அடிமைகளுக்காக அச்சமூகம் உருவாக்கிய அறங்கள்.அவை எப்படி தவறாகும் என்றுதான் அவள் கேட்கிறாள்.

மொத்தத்தில், அறம் என்றால் என்ன?

எதிக்ஸ் என்ற சொல்லுக்கு நேர்ச்சொல்லாக அறம் என்பதைச் சொல்லலாம். சம்ச்கிருதத்தில் உள்ள தர்மம் என்ற சொல்லு நிகரான சொல். தர்மம் அறம் போன்ற சொற்களுக்கு நம் மரபில் பல பரிமாணங்கள் உண்டு. பொதுவாக அது மானுட அறத்தை, காலத்துக்கு ஏற்ப மாறாத மானுட அடிப்படை நெறிகளை சுட்டுவதாக உள்ளது. அதாவது ‘அரைசியல் பிழைத்தோர்க்கு கூற்றாக’ வரும் அறம்.

ஆனால் நம் மரபில் அறம் என்ற சொல் வாழ்க்கை நெறி என்ற பொருளிலும் பயன்படுகிறது. இல்லறம் துறவறம் என்று சொல்லும்போது அதையே நாம் குறிப்பிடுகிறோம். குலஅறங்கள் என ஒரு மரபு நமக்கு என்றும் இருந்துவந்துள்ளது.

இவ்விரு சொலாட்சிகளையும் பிரித்துப்பார்க்கும் வசதிக்காக முந்தையதை பேரறம் என்றும் பின்னதை சிற்றறம் என்றும் சொல்வதுண்டு. பேரறம் மானுடமளாவியது. காலத்திற்கும் இடத்துக்கும் ஏற்ப மாறாதது. சிற்றறம் அன்றாட வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்கும் நெறிகளால் ஆனது. கால இடத்துக்கு கட்டுப்பட்டது.

மனிதகுலம் எப்படி சமைத்து உண்பதை கண்டுபிடித்ததோ கருவிகளை கண்டுபிடித்ததோ அதேபோலத்தான் அறத்தையும் கண்டுகொண்டது என நான் நினைக்கிறேன். அது அவர்களை சிறப்பாக ஒருங்கிணைக்கிறது. தனிமனிதர்களை சமூகமாக ஆக்குகிறது. அதன்மூலம் மேலான வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளச் செய்கிறது.

அறம் என்பது மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்துக்கொள்வதற்காக உருவாக்கிக்கொண்டுள்ள நெறிகளும் நம்பிக்கைகளும்தான். சில அறங்கள் மானுடகுலம் ஒட்டுமொத்தமாக உருவாக்கிக் கொண்டிருப்பவை. மனிதர்கள் மனிதர்களை தின்னக்கூடாது என்பதுதான் அப்படி உருவான முதல் மானுட அறமாக இருக்கவேண்டும். அதில் இருந்து தொடங்கி பல்வேறு அடிப்படை அறங்கள் உலகமெங்கும் நாகரீகத்தின் அடையாளங்களாக உள்ளன. மானுடநீதி என்பது அந்த அறங்களின் அடிப்படையில் அமைந்ததே.

அந்த அறங்களை மானுட சமூகம் மேலும் மேலும் விரிவாக்கிக்கொண்டே செல்கிறது. அனுபவங்களின் வழியாக அறத்தை வளர்த்துக்கொள்வதைத்தான் நாம் மானுட நாகரீகத்தின் வளர்ச்சி என்று சொல்கிறோம். நாகரீகம் அறம் நீதியுணர்ச்சி ஆகியவை வேறு வேறல்ல.

இவைதவிர ஒவ்வொரு சமூகத்திற்கும் அவற்றுக்குரிய அறங்கள் உள்ளன. அச்சமூகத்தின் வட்டத்துக்கு வெளியே அதிகம் பொருட்படுத்தப்படாதவையாக அவை இருக்கலாம். சிலசமயம் அந்த அறங்கள் மெல்ல பிற சமூகங்களுக்கும் பரவி காலப்போக்கில் மானுட அறங்களாக ஆகவும் கூடும். அதேபோல சில அறங்கள் சிலகாலகடங்களுக்குரியவை. அடுத்த காலகட்டத்தில் மறைபவை. இவையே சிற்றறங்கள்.

நான் மேலே குறிப்பிட்டது சிற்றறத்தை என்பதை அந்தச் சந்தர்ப்பத்தைப் பார்த்தாலே அறியலாம். உதாரணமாக பழங்குடிகளுக்கு குலமுறைமைகள் முக்கியமான அறங்கள். அவர்களிடம் தனியாளுமைக்கு இடம் கிடையாது. கூட்டாகவே செயல்பட்டாகவேண்டும். அவர்களின் அறங்கள் அந்த நோக்குக்காக உருவாகி நிலைபெற்றவை. ஆசார மரியாதைகளாகவும் நம்பிக்கைகளாகவும் அவை நிலை நிற்கின்றன.அவர்களின் வாழ்க்கைக்களத்திற்கு வெளியே அவற்றில் பெரும்பாலானவற்றுக்கு பொருளில்லை.

பெரும்பாலான பழங்குடிகளுக்கு அவர்களின் அறங்கள் முழுக்க அவர்களுக்குள் மட்டுமே செல்லுபடியாகக் கூடியவை. பிறர் என்பவர்கள் அவற்றுக்கு பாத்திரமானவர்கள் அல்ல. ஒரு கதை உண்டு. பாதிரி பழங்குடியிடம் சொன்னாராம் ‘நான் உங்களுக்கு தப்புசரிகளை சொல்லித்தர வந்திருக்கிறேன்’ என. பழங்குடித்தலைவன் சொன்னான் ‘எங்களுக்கே அவை நன்றாக தெரியுமே’

‘சரி, தப்பு என்றால் என்ன?’ என்றாராம் பாதிரி. ‘பக்கத்து மலைக்காரன் வந்து என் கோழிகளை திருடி என் மனைவியை இழுத்துக்கொண்டு செல்வது’ என்றான் தலைவன். பாதிரி ‘சரி, சரி என்றால்?’ என்றுகேட்டார். ‘நாங்கள் அவர்களின் கோழிகளை திருடி அவர்களின் மனைவிகளை இழுத்துக்கொண்டு வருவது’ என்று பதில் வந்தது.

பழங்குடி வாழ்விலிருந்து நிலப்பிரபுத்துவம் உருவாகி வரும்போது சில அறங்கள் கைவிடப்படுகின்றன. சில அறங்கள் நீடிக்கின்றன. சில அறங்கள் உருமாற்றம் கொள்கின்றன. சில அறங்கள் புதிதாக உருவாகின்றன. நிலப்பிரபுத்துவ காலம் முழுக்க நீடித்த பரம்பரை ஆட்சி என்ற அறம், தகப்பனின் இடம் மகனுக்குத்தான் என்ற நம்பிக்கை, பழங்குடி வாழ்க்கை சார்ந்தது. ஆனால் நிலம் அனைவருக்கும் பொதுவானது என்ற பழங்குடி அறம் கைவிடப்பட்டது. நில உடைமையை தக்கவைக்க பெண்ணுக்குக் கற்பு என்ற அறம் உருவாகி வந்தது.

முதலாளித்துவம் பல நிலப்பிரபுத்துவ அறங்களை கைவிடுகிறது. இன்று ஆண்டான் அடிமை உறவு அகன்று முதலாளி-தொழிலாளி உறவு உருவாகிறது. உதாரணமாக இன்று விசுவாசமாக இருப்பது என்ற அறத்துக்கு மதிப்பே இல்லை. முதலாளிக்கு உழைப்பை அளித்து நிகரான ஊதியத்தை உழைப்பவன் பேரம்பேசி பெற்றுக்கொள்கிறான். கிடைக்காவிட்டால் இன்னொருவரிடம் சென்று விடுகிறான். கூலி கொடுத்ததற்காக அவன் நன்றியுடன் இருக்கவேண்டியதில்லை.

கம்யூனிச அறம் என்பது நிலத்தையும் இயற்கையையும் தனியுடைமையாக்குவது பிழை என எண்ணுவதில் ஆரம்பிக்கிறது. உழைப்பவர்கள் அனைவரும் நிகர் என்ற விழுமியம் அதில் இருந்து உருவாகிறது. ஆகவே மானுடர்களில் கொடுப்பவர் பெறுபவர் என எவரும் இல்லை. உற்பத்தி உறவுகளில் வணிகம் இருக்கக்கூடாது. பரிமாற்றம் மட்டுமே இருக்கவேண்டும். இது எங்காவது நடைமுறைக்கு வந்ததா என்றால் இல்லை. அது ஒரு கனவாகவே நின்றுவிட்டது

இவ்வாறு காலம் மாற, சமூக அமைப்புகள் மாற, அறங்களும் மாறுகின்றன. அதாவது சிற்றறங்கள் மறைகின்றன, உருமாறுகின்றன. ஒரு காலகட்டத்தில் நீதி என்று கருதப்பட்டது இன்னொரு காலகட்டத்தில் அநீதியாக ஆகிறது. மனைவிகளை விற்பது பல பழங்குடிப்பண்பாடுகளில் நீதியானதாக கருதப்பட்டது. அடிமைகளை விற்பது நிலப்பிரபுத்துவத்தில் நீதியாக கருதப்பட்டது. அவை அடுத்தடுத்த காலகட்டங்களில் பெரும் அநீதியாக உருவம் மாறின.

காலம் மாறும்போது இடம் மாறும்போது அறமுரண்பாடுகள் உருவாகின்றன. அப்போது மகத்தான அறச்சங்கடங்கள் பிறக்கின்றன. அதைப்பற்றிப்பேசுபவைதான் பேரிலக்கியங்கள். மகாபாரதமானாலும் சரி, போரும் அமைதியுமானாலும் சரி. இரு சரிகளுக்கு இடையேயான போராட்டங்கள் அவை.

மகாபாரதம் குலதர்மத்துக்கும் தர்மத்துக்கும் இடையேயான போரைப்பற்றி பேசுவது. பீஷ்மரின் கோணத்தில் துரியோதனன் பதவிக்கு வருவதே சரி. ஏனென்றால் குலமுறைப்படி அவனே வாரிசு. திருதராஷ்டிரனுக்கு கண் தெரியாத காரணத்தால்தான் குருவம்ச உரிமை பாண்டுவுக்குச் சென்றது. திருதராஷ்டிரனின் மகன் அடுத்த வாரிசாக ஆவதே முறை. ஆனால் துரியோதனன் மூர்க்கன், அறப்பிரக்ஞை அற்றவன். தருமன் அறமே உருவானவன். அவன் ஆட்சிக்கு வருவதே பொதுநல அறம்.

கொலையும் கொள்ளையும் பஞ்சமா பாதகங்களில் அடங்கியவை. ஆனால் போரில் கொல்வதும் திருடுவதும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இல்லையென்றால் ஒரு சமூகம் நீடிக்க முடியாது. இந்த நிலப்பிரபுத்துவ அறத்துக்கு எதிராக மானுட அறமொன்றை முன்வைத்து பேசுவது போரும் அமைதியும். அறப்பூசலே பேரிலக்கியங்களின் உணர்ச்சிநிலைகளை நாடகத்தருணங்களை உருவாக்குகின்றது. பேரிலக்கியங்கள் அறங்களை மறு வரையறை செய்கின்றன. .

ஒரு காலகட்டம் மறைந்தபின்னரும் அந்த காலகட்டத்தின் மனநிலைகள் நீடிக்கையில் அது அநீதியாக, குரூரமானதாக கருதப்படுகிறது. அந்த அதிகாரியின் மனைவி அவள்நோக்கில் தவறாக ஏதும் செய்யவில்லை. அவள் பிறந்து வளர்ந்த நிலப்பிரபுத்துவகால அறங்களில் அவள் மனம் வேரூன்றியிருக்கிறது, அவ்வளவுதான். காலம் மாறியதை, முதலாளித்துவ அறம் வந்து விட்டதை அவள் உணர்வதில்லை.

இதற்கு மறுபக்கம் உண்டு. என் அலுவலக வாசலில் ஓர் ஓட்டல். அதன் உரிமையாளர் வயதானவர். ஒருநாள் ஓட்டலின் சமையற்காரர் குடித்துவிட்டு வந்து உரிமையாளரை பலமணிநேரம் வசைபாடினார். இவர் குச்சியை எடுத்து அடிக்கசென்றதும் ஓடிவிட்டு திரும்பி வந்து மீண்டும் கெட்டவார்த்தை. ‘இப்ப மாசத்திலே நாலுநாள் இதே ரோதனை. என் தலையெழுத்து, இப்டி வந்து வாச்சிருக்கு’ என்றார் உரிமையாளர்

‘வேலையைவிட்டு தூக்கவேண்டியதுதானே?’ என்றேன். ‘அதெப்படி, அவனுக்கு பிள்ளைகுட்டி இருக்குல்ல? நாளைக்கு அவ நண்டும் சிண்டுமா நம்ம வீட்டு முற்றத்திலே இல்ல வந்து நிப்பா?’ என்றார். விசுவாசம் என்ற அதுதான் நிலப்பிரபுத்துவ அறத்தின் மறுபக்கம். அதில் உரிமையாளர் அடிமைகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.

அதே காலகட்டத்தில்தான் பங்குச்சந்தைநிறுவனத்தின் மேலாளரான என் நண்பர் என்னிடம் தினம் பேசிக்கொண்டிருந்தார். அமெரிக்க பொருளியல் நெருக்கடி காரணமாக ஒவ்வொருநாளும் அவர் பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு ஏற்ப ஊழியர்களை வேலையை விட்டு தூக்கவேண்டியிருந்தது. ஒரு வார சம்பளம், ஒரு கடிதம் ,அவ்வளவுதான். எந்த பொறுப்பும் இல்லை. வேலையிழந்தவர் அழுதபடி செல்வதை தினமும் காண்பார். ஆனால் ஒன்றும் செய்யமுடியாது. அந்த உறவு ஒரு வணிக ஒப்பந்தம் மட்டுமே.

நான் சொல்வது இந்த மாற்றத்தில் உள்ள சீரின்மையைப்பற்றி. வேகமாக நம் வேலைக்களங்களும் வணிகச்சூழலும் முதலாளித்துவ மயமாகின்றன. தனிமனித உறவுகள் வணிக மயமாகின்றன. கணவனும் மனைவியும் தனித்தனியாக சம்பளத்தை செலவிடும் குடும்பங்கள் பெருகி வருகின்றன. நிலப்பிரபுத்துவ அறம் என்பது வயதுக்கு மதிப்பளிப்பது. ஆனால் இன்று எந்த அலுவலகத்திலும் மூப்புக்கு மதிப்பில்லை.

நெடுங்காலமாக நமக்கிருந்த பல நிலப்பிரபுத்துவ அறங்கள் நம்மை ஒரு சமூகமாகச் சேர்ந்தியங்கச் செய்தன. காலம் மாறிவிட்டது என நாம் அவற்றை நாம் கைவிடுகிறோம். மேலும் திறமையான உற்பத்திசமூகமாக நம்மை ஆக்குபவை முதலாளித்துவ அறங்கள். அவற்றை நாம் கற்றுக்கொள்வதும் இல்லை.

ஒரு பேருந்து நிலையத்திலேயே இதைக் காணலாம். நாம் நிலப்பிரபுத்துவ அறத்தில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் வயது மூத்தவர்கள் பேருந்தில் ஏறியபிறகே இளையோர் ஏறவேண்டும். நாம் முதலாளித்துவ அறத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் என்றால் முதலில் வந்தவர் முதலில் என்ற முறையில் வரிசை காக்கவேண்டும். நாம் என்னசெய்கிறோம். மிருகங்கள் போல முண்டியடிக்கிறோம்.

எல்லா தளத்திலும் இது நிகழ்கிறது. நான் நேற்று ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். பகுத்தறிவாளர். நவீன மனிதராக ஆகவேண்டுமென முயல்பவர். ஆகவே கோயில்களுக்குச் செல்வதில்லை. மதச்சடங்குகள் செய்வதில்லை. மதநூல்களை வாசிப்பதுமில்லை. நல்ல விஷயம்தான் என்றேன். ஆனால் இங்கே நல்ல சிற்பக்கலை, நல்ல இசை, செவ்வியல்கலைகள் அனைத்துமே கோயில்களுடனும் மதத்துடனும் தொடர்பு கொண்டவை. அவற்றை முழுமையாக நிராகரிக்கும் அவர் அவற்றுக்கு பதிலாக வேறெந்த செவ்வியல்கலைகளை, செவ்விசையை, இலக்கியத்தை அனுபவிக்கிறார்? ஏதுமில்லை. அவற்றைப்பற்றிய பிரக்ஞையே இல்லை.

எங்குமே இந்த இரண்டும்கெட்டான் நிலை. நிலப்பிரபுத்துவமனநிலையை வைத்து பார்த்தால் தாமிரவருணி அன்னைதெய்வம். அவளில் ஒரு அழுக்கு கலக்க விடுவதும் பாவம். ஆசாரக்கோவை நீரில் போடக்கூடாத பொருட்கள் என ஒரு பெரிய பட்டியலே போடுகிறது. காரணம் நீரெல்லாம் கங்கை. ஆனால் நாம் அந்த மனநிலையை உதறிவிட்டோம். ஆனால் முதலாளித்துவம் அளிக்கும் சூழியலுணர்வை, சமூகப்பொறுப்புணர்ச்சியை கற்றுக்கொள்ளவும் இல்லை. ஆகவே நம் நதிகள் சாக்கடைகளாக ஆகின்றன.

முதலாளித்துவம் உருவாக்கிய முக்கியமான பண்பாட்டு கொடை என்பது குடிமையுணர்ச்சிதான். ஐரோப்பாவில் முதலாளித்துவம் உருவாகி வந்த இருநூறு வருடங்களில் மெல்ல மெல்ல அது தன் அறவியலையும் அழகியலையும் அரசியலையும் உருவாக்கிக்கொண்டது. குடிமையுணர்ச்சியே அதன் மிகப்பெரிய அறம். தன்னை ஒரு குடும்பத்தின், சாதியின், மதத்தின் உறுப்பினனாக எண்ணாமல் மொத்தச்சமூகத்தின் உறுப்பாகக் கண்டு அது கோரும் எல்லா கடமைகளையும் புறக்கட்டாயம் இல்லாமல் செய்வதுதான் குடிமையுணர்ச்சி. குப்பைகளை அவற்றுக்கான இடத்தில் போடுவதில் இருந்து வாக்களிக்கையில் நாட்டுநலன் கருதி வாக்களிப்பது வரை அது வாழ்க்கையின் எல்லா கூறுகளிலும் உள்ளது.

நாம் முதலாளித்துவத்தில் இருந்து அதன் நுகர்வுக்கலாச்சாரத்தை கற்றுக்கொண்டோம். அதன் வணிகமனநிலையை பெற்றுக்கொண்டோம். அதன் குடிமைப்பண்பை மட்டும் விட்டுவிட்டோம். நாம் நிலப்பிரபுத்துவத்துக்குள் இருந்திருந்தால் குல ஆசாரங்களுக்கும் கிராமநெறிகளுக்கும் கட்டுப்பட்டிருப்போம். முதலாளித்துவத்தில் நுழைந்திருந்தால் குடிமைப்பண்புக்கு கட்டுப்பட்டிருப்போம். இப்போது நாம் கட்டுப்படுவது அரசாங்கத்தண்டனைக்கு மட்டுமே.

ஆகவே சுயகட்டுப்பாடற்ற கும்பலாக நாம் மாறி வருகிறோம். எந்த அளவுக்கு நம் மக்கள் படித்து சம்பாதிக்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்கள் நிலப்பிரபுத்துவ நெறிகளை உதறி குடிமை உணர்வும் இன்றி கட்டுப்பாடற்ற வெறிக்கூட்டமாக ஆவதைக் காணலாம். ஐயமிருந்தால் சென்னையின் இரவு விடுதிகளில் சுற்றினால் போதும் வசதிப்படாதென்றால் ஜனவரி ஒன்றாம் தேதி நம் தெருக்களில் ஒரு சுற்று சுற்றி வரலாம்.

ஜெ

மகாபாரதம் -ஒரு கடிதம்

கலை இலக்கியம் எதற்காக?

தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம்
இலக்கியமும் நவீன இலக்கியமும்

தன்னுரை நூல் பற்றி…

மரபிலக்கியம் இரு ஐயங்கள்

முந்தைய கட்டுரைநாஞ்சில் சென்னையில்…
அடுத்த கட்டுரைமாவோயிசம் கடிதங்கள்