விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2010

ஆ. மாதவன் அனேகமாக தினமும் ஃபோனில் கூப்பிட்டு ‘நான் சபரி எக்ஸ்பிரஸிலே கோயம்புத்தூருக்கு வாரேன் கேட்டேளா?’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். செல்லில் அவர் பெயரை பார்த்ததுமே ‘ஆ.மாதவன் தாத்தா சபரி எக்ஸிபிரஸிலே வாரதா சொல்றதுக்காக கூப்பிடுறார்’ என்று சைதன்யா கத்துமளவுக்கு. அவர் அதிகமாகப் பயணம் செய்வதில்லை. இப்போது வயோதிகம் வேறு.

பதினாறாம்தேதி காலையில் தமிழ்மகன் [வெட்டுபுலி நாவல் ஆசிரியர், தினமணி உதவியாசிரியர்] திருவனந்தபுரம் போகும் வழியில் வந்தார்கள். திருவனந்தபுரத்தில் ஒரு எழுத்தாளர் விழா நடப்பதாக அறிந்தேன். தமிழ்மகனிடம் இலக்கியம்பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது எம்.எஸ் சார் வீட்டுக்கு வந்தார். அவரும் கோவை வருவதாகச் சொன்னார். அவருக்கு டிக்கெட் எடுக்க முயன்றபோது அதிருஷ்டவசமாகக் கிடைத்தது. பெர்னாட் சந்திரா வருவதாகச் சொன்னாலும் கிளம்ப முடியவில்லை. வேதசகாயகுமார் மறுநாள் வருவதாக இருந்தார்- அன்று அவரது அன்னை நினைவுநாள்.

ஆகவே நானும் எம்.எஸ்ஸும் பதினேழாம் தேதி மாலையில் கோவைக்கு ரயிலில் கிளம்பினோம். நான் இப்போதெல்லாம் வழக்கமாக முந்தைய நாள் தூக்கத்தை மிகவும் குறைத்துக்கொள்வதனால் பயணங்களில் நன்றாகவே தூங்கிவிடுவேன். காலையில் கோவை சென்றிறங்கிய போது செல் முழுக்கத் தவறிய அழைப்புகள். கிருஷ்ணன் என்னை அதிகாலையிலேயே எழுப்ப முயன்றிருந்தார். காரணம் அவர் காலையில் எழுந்து விட்டிருந்தார்.

ரயில் நிலையத்துக்கு அரங்கசாமி வந்தார். ரயில்நிலையம் எதிரே காபி சாப்பிட்டு விட்டு கோரல் ரெஸிடென்ஸி என்ற அடுக்குமாடிக் கட்டிடத்துக்கு சென்றோம். அங்கே இரு வாடகைக் குடியிருப்புகளை இந்த விழாவுக்காக எடுத்திருந்தோம். குளிர்சாதன வசதி கொண்ட மூன்று படுக்கையறைகள், சமையலறை,பெரியகூடம் கொண்ட குடியிருப்புகள். விடுதியறைகளை எடுக்க திட்டமிட்டிருந்தோம். அதைவிட இவை வசதியானவை, அந்தரங்கத்தன்மை கொண்டவை என்று தோன்றியது

நான்சென்று சேர்ந்து குளித்து உடைமாற்றிக்கொண்டிருக்கும்போதே ஒவ்வொருவராக வர ஆரம்பித்திருந்தார்கள். ஈரோட்டில் இருந்து கிருஷ்ணன், விஜயராகவன் வந்தார்கள். சென்னையில் இருந்து வினோத், தனசேகர், ராஜகோபாலன், சிறில் அலெக்ஸ் வந்தார்கள். கடலூரில் இருந்து சீனு. பெங்களூரில் இருந்து தினேஷ் நல்லசிவம். நண்பர்கள் வந்து கொண்டே இருக்க ஒரு நல்ல இலக்கிய சபை கூடிவிட்டது.

சோஃபாக்களுடன் நல்ல கூடம். எத்தனைபேர் வந்தாலும் தாங்கும். ஒருவர் உள்ளே வரும்போது அவரை பலமாக வரவேற்று ஏற்கனவே அமர்ந்திருந்த ஒருவரை எழுப்பி அமர இடமளிப்போம். இன்னொருவர் வந்ததும் இவர் எழுந்து தரையிலமர வேண்டும் என்ற ஏற்பாடு. இலக்கியம், சினிமா, நகைச்சுவை என மாலைவரை அரட்டை. ஒரு கட்டத்தில் ஒரு நல்ல இலக்கியக் கூட்டத்துக்கான கூட்டம் இருந்தது.


மதியம் நாஞ்சில் நாடன் வந்தார். மாலையில் ஆ.மாதவன் சபரி எக்ஸ்பிரஸில் அவரது மருமகனுடன் வந்து சேர்ந்தார். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு நாஞ்சில் கிளம்பிச் சென்றார். அதன்பின்னரும் பேசிக் கொண்டிருந்தோம். தூங்குவதற்கு ஒன்றரை மணி ஆகியது. மறுநாள் காலை முதல் புதிய நண்பர்கள் வந்தார்கள். கோவை திருப்பூர் ஈரோடு பகுதி வலைப்பதிவர்கள் பலரை சந்தித்தேன்.

மதியம் பன்னிரண்டு மணிக்கு புனத்தில் குஞ்ஞப்துல்லா வந்தார். வழக்கம்போல உற்சாகம் ததும்பும் முகம் பயங்கரமான சிரிப்பு. இக்காவை நெடுநாட்களுக்குப் பின் கட்டியணைத்துக்கொண்டபோது அபாரமான மனநிறைவு உருவானது. ஒருமணிக்கு மணிரத்னம் வந்தார். அவர் முந்தையநாளே வந்து ரெஸிடென்ஸி ஓட்டலில் தங்கியிருந்தார். கோவை கிளப்பில் கால்ப் விளையாடச் சென்று விட்டு வந்திருந்தார்.

எழுத்தாளர்கள் வலைப்பதிவர்கள் வாசகர்கள் நண்பர்கள் சூழ உற்சாகமான அரட்டையும் பேச்சும் சிரிப்பும். சுரேஷ் என்ற கோவை நண்பரும் எங்கள் ஆஸ்தான பாடகர் ராமச்சந்திர ஷர்மாவும் பாடினார்கள். மதியம் அனைவருக்கும் விஜிட்டபிள் பிரியாணி தயிர்சாதம். மணிரத்தினம் வந்து பங்கெடுத்துச் செல்வதற்கு எங்களுக்கான செலவு அவருக்கு அளிக்கப்பட்ட அந்த இரு பொட்டலங்கள் மட்டுமே.

ஐந்தரை மணி வரை பேச்சும் சிரிப்பும் பாட்டுமாக இருந்தது. அந்தக் குடியிருப்பு பகுதியில் வந்திருந்த பலர் வந்து மணிரத்னத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். ஐந்து மணிக்கு நானும் இக்காவும் மணிரத்னம் காரில் அரங்கு செல்ல நண்பர்களின் காரில் மணிரத்னம் அரங்குக்கு பின்னால் வந்தார். கோவை பிஎஸ்ஜி அரங்கில் கூட்டம்.

850 இருக்கைகளும் குளிர்சாதன வசதியும் கொண்ட மிக அழகான பெரிய அரங்கு. எங்களுக்காக அதை குறைவான வாடகையில் அளித்திருந்தார்கள் கல்லூரி நிர்வாகத்தினர். விழாவுக்கு மணிரத்னத்துக்கு மட்டுமான கூட்டம் வந்து விடக் கூடாது என்று மிகுந்த கவனம் எடுத்திருந்தோம் – கல்லூரியில் பெரும்பாலும் யாருக்கும் தெரிந்திருக்காது. ஒருவேளை நல்ல வாசகர் சிலருக்கும் தெரியாமல் போயிருக்கலாம். ஆனால் வேறு வழி இல்லை. இலக்கிய வாசகர்கள் மட்டுமே பங்கெடுக்க வேண்டும் என்பதே நோக்கம். அதுவே நிகழ்ந்தது என கூட்டத்தின் கவனம் மற்றும் கட்டுப்பாட்டில் தெரிந்தது. ஒருமுறைகூட அரங்கில் செல்போன் ஒலிக்கவில்லை.

கூட்டம் நிறைந்தபோது கிட்டத்தட்ட 350 பேர் இருந்தார்கள். முதலில் ராமச்சந்திர ஷர்மா ‘மனதில் உறுதி வேண்டும்’ பாடியபின் எம்.ஏ.சுசீலா வரவேற்பு-அறிமுக உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து ஞானி. இலக்கியவிருதுகளின் அரசியலை, தமிழாசிரியர்கள் நவீன இலக்கியம் மீதுகொள்ளும் புறக்கணிப்பை மிகக்கடுமையாக நிராகரித்து பேசினார்.

<

அதன்பின் இக்கா மாதவனுக்கு விருதை வழங்கினார்.

‘கடைத்தெருவின் கலைஞன்’ நூலை மணி ரத்னம் வெளியிட என்னுடைய மிகச்சிறந்த இளம் வாசகர்களில் ஒருவரான ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்

இக்கா தமிழிலக்கியத்துக்கும் அவருக்குமான உறவைப் பற்றி பேசினார். வைக்கம் முகமது பஷீரின் உலகின் சாயலுள்ள படைப்பாளி மாதவன். இருளில் அலையும் மனிதர்கள் மேல் மெல்லிய ஒளி ஒன்று பட்டு விலகுவது போல இருந்தது அவர் காட்டிய படைப்புலகம் என்றார்.

அதன்பின் மணிரத்னம் படைப்புலகுக்கும் திரையுலகுக்குமான இடைவெளி குறைவதென்பது நல்ல சினிமாக்கள் உருவாக வழியமைக்கும் என்றார். ’மாதவனின் கதைகளைச் சமீபத்தில் வாசித்தபின் நேற்றுமுன்தினம் திருவனந்தபுரம் திரைவிழாவுக்குச் சென்றபோது மாதவனின் சாலைத்தெருவுக்குச் சென்றேன். அந்த தெருவில் இருவர் படத்தின் சில காட்சிகளை பதிவுசெய்தது ஞாபகம் வந்தது. இப்போது அந்தத் தெருவின் வாழ்க்கையே தெரிய ஆரம்பித்தது’ என்றார்.

நாஞ்சில் நாடனின் பேச்சுதான் நிகழ்ச்சியின் உச்சம். கோபமும் நக்கலுமாக நாஞ்சிலின் உரை அமைந்திருந்தது. மாதவன் அண்ணாச்சிக்கும் அவருக்குமான முப்பதாண்டுக்கால நட்பில் ஆரம்பித்து மாதவன்மேல் எப்படி ஒரு தொடர் புறக்கணிப்பு இருந்தது என்பதை சுட்டிக்காட்டினார் . ‘’ஆமாம், ஒரு கோணத்தில் அன்றும் இன்றும் எழுத்தாளன் பரிசில் வாழ்க்கை வாழ்பவனே. ஆனால் இன்று அவனது வரிசையில் முன்னால் முதலமைச்சர்களும் ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளும் அதிகாரிகளும் வந்து நிற்கிறார்கள்’ என்றார்.

‘அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே. அதையும் மறுப்பது அவனுக்குச் செய்யப்படும் அநீதி’ என்றார் நாஞ்சில்நாடன்.

அதைத்தொடர்ந்து வேதசகாய குமார் பேசினார். ’ஆ.மாதவனின் கடைத்தெருக்கதைகள் வெளிவந்தபோது ந.பிச்சமூர்த்தி அதற்கு ஒரு மதிப்புரை எழுதினார். அதில் பாச்சி, கோமதி என்ற இரு கதைகளைப்பற்றி மட்டும் பாராட்டு எழுதியிருந்தார். காரணம் அவற்றில் மானுட அன்பு வெளிப்படுகிறது என்றார். ஆனால் அந்தக்கதைகள் உட்பட மற்ற கதைகள் எவற்றிலும் மானுட அன்புக்கு அல்லது அறத்துக்கு இடம் இல்லை. அவை எல்லாமே மனிதனின் மனத்தில் எப்போதும் ஊறிக்கொண்டிருக்கும் குற்றம், காமம் இரண்டையும் பற்றிய கதைகள் மட்டுமே’ என்றார்.

‘மனித மனத்தில் உள்ள கரும்புள்ளியைப் பற்றி மட்டுமே ஆ.மாதவன் பேசுகிறார். இந்த அம்சம் காரணமாகவே அவரை அன்றைய மூத்த விமர்சகர்கள், எழுத்தாளர்கள் புறக்கணித்தார்கள். சிட்டி-சிவபாதசுந்தரம் எழுதிய தமிழ்ச்சிறுகதைவரலாறு நூலில் மாதவனைப்பற்றி குறிப்பிடப்படவே இல்லை. க.நா.சு அவரைப்பற்றி சொல்லவில்லை. சிட்டிக்கு மாதவனைப்பற்றி தெரியாமல் இல்லை. நூல்களையே நான் தான் அனுப்பி வைத்தேன். ஆனால் அவர் புறக்கணித்தார். காரணம் தனிப்பட்ட முறையில் ஏதுமில்லை. அவரால் இந்த உலகை ஏற்கவே முடியவில்லை’

‘தமிழ் நவீனத்துவத்தின் உச்சமான அன்னியர்கள் என்றால் அவை சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சிலகுறிப்புகளில் ஜே.ஜே,  ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொருநாளே நாவலின் கந்தன் ஆ, மாதவனின் ’எட்டாவது நாள்’ குறுநாவலின் சாளைப்பட்டாணி. இவர்களில் காலத்தால் முந்தைய ஆக்கம் எட்டாவது நாள்தான். ஆனால் நாம் அதைப்பற்றி பேசுவதே இல்லை’

‘இன்று காலம் மாறிவிட்டது. உன்னதங்களை வைத்து நாம் இலக்கியத்தை அளவிடுவதில்லை. நாம் இன்று உண்மையை வைத்து இலக்கியத்தை அளவிடுகிறோம். ஆகவே மாதவன் முக்கியமாகிறார்’ என்றார்


நான் பேசும்போது ‘எழுத்தாளர்களின் வரலாறு இலக்கிய வாசிப்புக்கு முக்கியமானது என்ற எண்ணம் எனக்கு உண்டு. லா.ச.ராவின் சுயசரிதையில் [சிந்தாநதி] அவரது இளமையில் சாப்பாட்டுக்காக பட்ட கஷ்டம் பதிவாகியிருக்கிறது. தினமும் சோறும் ஊறுகாயும் மோரும்தான். அவ்வப்போது மடத்தில் அளிக்கப்படும் விருந்துதான் நல்ல உணவு. அங்கே மிஞ்சிப்போகும் குழம்பை காய்ச்சிக் காய்ச்சி சுண்டவைத்து பலநாட்கள் உண்கிறார்கள். அவரது இரு அண்ணன்களும் ஒருவர் பின் ஒருவராக அந்த குழம்பை உண்டு அதன் விஷாம்சம் காரணமாக உயிர்துறக்கிறார்கள்….

‘லா.ச.ராவின் கதைகளில் விருந்து வர்ணனைகள் இல்லை. ஆனால் மோர்க்க்குழம்பு வத்தக்குழம்பு பற்றிய வர்ணனைகள் வந்தபடியே உள்ளன. இந்த வரலாற்றுக்குறிப்பு அந்த வர்ணனைகளுக்கு அபாரமான ஆழத்தை அளிக்கிறது. அவரது படைப்புகள், அவரது காலகட்டம் ஆகியவற்றை அவரது வரலாற்றுடன் பிணைத்து ஒரு வரலாறு எழுதப்பட்டால் அது மிகமுக்கியமான திறப்புகளை அளிக்கும்’

அத்தகைய வரலாறுகளை சில முக்கியமான முன்னோடிகளைப் பற்றி எழுதலாமே என நினைத்தேன். அந்த முயற்சியே இந்த விருதாக மாறியது. இந்த விருது அவருக்கு நாங்கள் செய்யும் எளிய மரியாதை மட்டுமே. அவரது வாசகர்களும் வழித்தோன்றல்களுமான அடுத்த தலைமுறையினரின் அங்கீகாரம். அவரைப்பற்றிய இந்த நூல்தான் என் நோக்கில் முக்கியமானது ‘ என்றேன்.

மாதவன் குறைவாகவே பேசினார். ரத்த அழுத்தமும் சர்க்கரைநோயும் இருப்பதனால் அவருக்கு நினைவுச்சிக்கல் உடற்களைப்பு இருந்தது. ஆனால் அவர் வந்தது முதலே மிகவும் நெகிழ்ந்த நிலையில் இருந்தார். கூட்டம் முடிந்ததும் இளைஞர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கையெழுத்து வாங்கினார்கள். ஒருகட்டத்தில் அவரை கூட்டிச்செல்ல நேர்ந்தது. பலர் ஏமாற்றம் அடைந்திருக்கலாம். ஆனால் மாதவனால் மேற்கொண்டு நிற்க முடியவில்லை. மிகவும் சோர்ந்துவிட்டிருந்தார்.

அவரது நூல்கள் கணிசமாக விற்றன. கிருஷ்ணப்பருந்து 20 பிரதிகள் மட்டுமே இருந்ததை பலர் குறை சொன்னார்கள். சாதாரணமாக இலக்கியக்கூட்டங்களில் அதைவிட அதிகமாக விற்பதில்லை. சென்னையில் இருந்து கொண்டுவரவேண்டியிருந்தது.

அறைக்குத்திரும்பினோம். மணி ரத்னமும் கூடவே வந்தார். இக்கா பத்து மணிக்கு கிளம்பிச்சென்றார். பதினொன்றரை வரை மணி ரத்னமும் நண்பர்களும் நானும் அமர்ந்து உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தோம். மணி ரத்னம் சென்றபின் மேலும் பேச்சு. நானும் நண்பர்களும் தூங்க இரவு இரண்டு மணி ஆகியது.


ஆ. மாதவன் மறுநாள் சென்று சேர்ந்து தொலைபேசியில் சொன்னார். வழிநீள பாரதிய ஜனதாவின் ரயில் மறியலால் நிறைய தாமதம். ‘ரொம்ப நிறைவா இருக்கு. இவ்ளவு கூட்டம் இவ்ளவு அருமையா கவனிக்கிற கூட்டம் பாத்து ரொம்ப நாளாச்சு’ என்றார். ‘விருது எல்லாத்தையும் விட இலக்கியம் வாசிக்க இவ்ளவு இளைஞர்கள் வந்து உக்காந்து நாளெல்லாம் பேசிட்டிருக்கிறத பாக்கப்பாக்க மகிழ்ச்சியா இருந்தது… அந்தக்காலத்திலே கல்யாணக்கச்சேரின்னு சொல்லுவாங்க. கல்யாணத்துக்கு வந்தவங்க அம்பதுபேரு நூறுபேரு ஹாலிலே உக்காந்து அரட்டை அடிப்பாங்க. ஒரே சிரிப்பும் கும்மாளமுமா இருக்கும். இப்ப அப்டி கல்யாணம் இல்லை… ஒரு கல்யாணக்கச்சேரியிலே இலக்கியவாதிகள் ஒண்ணு சேர்ந்தது மாதிரி இருந்தது…போறும் மனநிறைவா இருக்கு…’ என்றார்

இலக்கியம் போன்றகலைகள் சிலசமயம் ஒருவகைக் களிவெறியாக ஆகும். அந்தப் போதையை அறிந்தவர்களுக்கு வேறெந்த போதையும் ஒரு பொருட்டாகவே தோன்றாது. அத்தகைய நாட்கள் அவை. இரண்டுநாட்கள் ஒலிக்கும் குரல்களும் முகங்களும் சிரிப்புகளுமாக வேறெங்கோ வாழ்ந்தோம்

படங்கள் பிக்காசா

 

 

http://epaper.timesofindia.com/Repository/ml.asp?Ref=VE9JQ0gvMjAxMC8xMi8yMCNBcjAwNzAw

http://ponniyinselvan-mkp.blogspot.com/2010/12/2010.html

http://thenaali.com/newsinner.php?id=2079

முந்தைய கட்டுரைமாவோயிச வன்முறை 2
அடுத்த கட்டுரைதிலீப்குமாருக்கு விளக்கு விருது