அன்புள்ள ஜெ,
ஒரே ஒரு வினா. நீங்கள் சுப.வீரபாண்டியன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் உங்களைப்பற்றியும் இன்றைய காந்தியைப்பற்றியும்கூட எழுதியிருக்கிறார். சுப.உதயகுமார் பற்றி எழுதியதனால் இதைக் கேட்கிறேன்
அன்புடன்
எஸ்.ஆர்.மாதவன்
அன்புள்ள மாதவன்,
நான் யார் என்பது எனக்குத்தெரியும். எந்த எழுத்தாளனும் அவனுடைய முக்கியமான படைப்பை எழுதியதுமே அதை உணர்வான். அந்தப்பீடம் மீது நின்றுகொண்டே எழுத்தாளன் என்பவன் எதிர்வினையாற்றுவான்
நான் எதிர்வினையாற்றுபவர்கள் இருவகை. முதல்சாரார், உண்மையில் கற்றவர்கள், சிந்தனைத்தளத்தில் பங்களிப்புள்ளவர்கள். அவர்கள் மேல் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைக்கையில்கூட அவர்கள் மேல் உண்மையான மதிப்பு கொண்டிருக்கிறேன். நான் உணர்ச்சிகரமானவன் என்பதனால் சிலசமயம் பேச்சு சற்றுகூடிப்போகும்.[இப்போது என் தளத்தை பெண்கள் எடிட் செய்வதனால் கொஞ்சம் நிதானம் வந்துள்ளது. ஆனாலும் அவர்களை மீறி சில பிரசுரமாகிவிடும்] அப்படி கூடிப்போகும்போது அதற்காக வருந்துவேன்.
எனக்கு எதிர்நிலை எடுப்பவர்கள் கெட்டவர்கள் என்று நம்பவேண்டும் என்றுதான் என் வஞ்சம் சொல்கிறது. அதை என் மூளையால் அடித்து ஒடுக்கித்தான் அவர்களை நோக்கிச் செல்லவேண்டியிருக்கிறது. அவர்களின் நூல்களை பயில்வதுதான் அதற்கான சிறந்த வழி., அப்போது அவர்கள் நம் ஆசிரியர்களாக ஆகிவிடுகிறார்கள். நாம் ஆசிரியர்களை அனைத்துக்கும் அப்பால் நேசிக்கமுடியும்.
உதாரணமாக அ.மார்க்ஸ். அவருடைய கருத்துக்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவருடைய அரசியல் எதிர்மறைத்தன்மையும் அழிவுப்போக்கும் கொண்டது. ஆனால் அவர் எழுதிய அத்தனை நூல்களையும் வாசிக்கிறேன். பெயர் சொல்லாவிட்டாலும் அவருக்கு எழுத்திலும் மானசீகமாகவும் எதிர்வினையாற்றிக் கொண்டே இருக்கிறேன்.
அவர் மிகக்கடுமையாக என்னைப் பற்றி எழுதியிருக்கிறார். உண்மையாகவே எந்த வருத்தமும் இல்லை. அப்படி அவர் எழுதக்காண்கையில் ஒருவகை மகிழ்ச்சிதான். எப்படியோ நாம் சற்று அத்துமீறியிருந்தால் நிகராகிவிட்டது, குருசாபம் என்றெல்லாம் ஒன்றும் வந்து விழுந்துவிடாது என்னும் ஆறுதல். மிகக்கடுமையான பூசலில் இருக்கிறோம் என்றாலும் எஸ்.வி.ராஜதுரையும் எனக்கு அந்நிலையில் இருப்பவரே.
இன்னொரு தரப்பு, செயல்பாட்டாளர்கள். அவர்களின் பணி மிகமிகக் கடினமானது என்று எனக்குத்தெரியும்.பேசுவது எளிது, இந்நாட்டில் மக்களைத் திரட்டுவதும் அவர்களிடையே பணியாற்றுவதும் மிகமிக சவாலானது. உளச்சோர்வு கொள்வோம், தோல்விகள் அடைவோம்.கைவிடப்படுவோம். ஆயினும் அத்தகையவர்களால்தான் நம் சமூகம் முன்னேறுகிறது. அவர்கள் நம் சமூகத்தின் உப்பு
ஆகவே நான் களத்தில் நின்று பணியாற்றும் அத்தனைபேரிடமும் மானசீகமான பணிவையே கொண்டிருக்கிறேன். அவர்கள் செய்வதை என்னால் செய்யமுடியாது என ஆழமாக உணர்வதனால்தான். எழுதவந்த காலம் முதல் அத்தகையவர்களைப் பற்றி எழுதி வந்திருக்கிறேன். அவர்கள் வீரநாயகர்கள், நான் அவர்களைப் போற்றும் கவிஞன் என்றே உணர்கிறேன்
நானாஜி தேஷ்முக் முதல் அண்ணா ஹசாரே வரை, கிருஷ்ணம்மாள்- ஜெகன்னாதன் முதல் டாக்டர்.கே வரை, ஈரோடு ஜீவா முதல் என்னைவிட இளையவரான வா.மணிகண்டன் வரை என் மனநிலை இதுவே. எந்தத் தயக்கமும் இல்லாமல் அத்தகையோருக்காக நான் குரல்கொடுப்பது இதனால்தான்
கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்
இவர்களிலும் எனக்கு ஒவ்வாத கருத்துடையவர்கள் உண்டு. பீயூஷ் மனுஷ் பேசுவதும் சரி, உதயகுமாரின் அரசியல்நோக்கும் சரி என்னால் ஏற்கமுடியாதனவே. ஆனால் அவர்கள் ஆற்றும் பணி முக்கியமானது என நினைக்கிறேன்
இந்தியா போன்ற நாட்டில் சூழியல் சார்ந்தும், மக்களின் வாழ்வுரிமைசார்ந்தும், மனித உரிமைகள் சார்ந்தும் மிகவலுவான அமைப்பு எதிர்ப்புக் குரல்கள் எழுந்தாகவேண்டும். அரசின் முற்றாதிக்கத்துக்கு அத்தளங்களை விட்டுவிடக் கூடாது. இங்கே அரசு என்பது அதிகாரிகள்தான். அரசியல்வாதிகளும் அவர்களை இயக்கும் பெருமுதலாளிகளும்தான். அவர்களின் கருணைக்கு எளியோரை விட்டுவிடக்கூடாது.
சுகதகுமாரி
மக்களின் எதிர்ப்பு ஒருங்கிணைக்கப்படுவதும் அது மிகவலுவான ஒரு தரப்பாக நின்றிருப்பதும் நம் ஜனநாயகத்துக்கு மிகமிக அவசியமானது. இந்த எண்ணத்தை நான் என் இளமைக்கால ஆசிரியர்களான காந்தியவாதிகள் பி.கே.பாலகிருஷ்ணன் ஜி.குமாரபிள்ளை, எம்.கே.கங்காதரன் ஆகியோரிடமிருந்து பெற்றேன். இன்றும் என்னை இயக்கும் நம்பிக்கைகளில் ஒன்று இது
ஆகவேதான் சுந்தர்லால் பகுகுணா, மேதா பட்கர், சுகத குமாரி, அன்னா ஹசாரே என அத்தனை களப்பணியாளர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். அதற்காக பயணங்கள் செய்திருக்கிறேன். பலரை நேரில் சென்று சந்தித்திருக்கிறேன். எண்பதுகளில் எழுதவந்த காலம் முதல் என் எழுத்தின் கணிசமான ஒரு பகுதி அவர்களைப் பற்றித்தான். [பழைய தினமணி இதழ்களில் அக்கட்டுரைகள் பல இருக்கலாம்]
இவர்கள் இரு சாராரையும் பற்றி நான் கருத்துச் சொல்வேன். மறுப்பேன், வாதாடுவேன், கண்டிப்பேன். அவர்களைப்பற்றிய மதிப்புடனேயே அதைச்செய்வேன். ஏனென்றால் நான் இத்தலைமுறையின் முக்கியமான எழுத்தாளன். வாழும் சொல் கொண்டவன். பாரதியின் புதுமைப்பித்தனின் வழித்தோன்றல்.
எழுத்தாளன் ஒரு கருத்து சொல்கையில்,ஒருவரை எதிர்கொள்கையில் அவன் இருக்கும் மரபு என்ன என்னும் உணர்வு அவனுக்கு வேண்டும். தமிழ் எழுத்தாளர்களுக்குப் பொதுவாக இல்லாமலிருக்கும் உணர்வென்பது இந்த நிமிர்வே. ஜெயகாந்தனிடமிருந்து அதை நாம் கற்றுக்கொள்ளவேண்டும். எழுத்தாளன் என்னும் தன்னுணர்வுகொண்ட அத்தனைபேரிடமும் என் கோரிக்கை இதுவே
மூன்றாவது தரப்பு சிந்தனையோ களப்பணியோ இல்லாத வெற்று அரசியல்வாதிகள். அவர்கள் இன்று திசையெங்கும் பெருகி நாள்தோறும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பேச்சுக்களுக்கும் அறிவியக்கத்துக்கும் ஊடாட்டமே இல்லை. என் நோக்கில் சீமான், திருமுருகன் காந்தி, நாஞ்சில் சம்பத், கொளத்தூர் மணி, வினவு கோஷ்டியினர் போன்றவர்களும் அத்தகையவர்களே. அவர்களின் ஏதேனும் ஒவ்வாத கருத்து மக்களிடையே செல்வாக்கு பெறும் என்றால் அதைக் கண்டிக்கலாம்.
இன்று சமூகவலைத்தளங்கள் வந்தபின்னர் எந்த முட்டாளும் கணிப்பொறியில் அமர்ந்து எல்லாம்தெரிந்தவர்போல கருத்துச் சொல்லலாம்.ந் நேற்று டீக்கடையில் நின்று இதைச் சொல்லிக்கொண்டிருந்தனர். எதையும் செய்யாதவர்கள். எதையும் இழக்காதவர்கள். அதற்கான ஆன்மிகமான துணிவோ அர்ப்பணிப்போ இல்லாத எளியவர்கள். ஏதேனும் மத, சாதி, அரசியல் பற்று கொண்டவர்கள். அதனடிப்படையில் எந்த சிந்தனையையும் எந்தக் களப்பணியையும் இழிவுபடுத்த தங்களுக்கு உரிமை உண்டு என நினைக்கும் அறிவிலிகள். இவர்களை நான் ஒருபொருட்டாக நினைப்பதில்லை.
சுப.வீரபாண்டியன் இவர்களில் யார்? கண்டிப்பாக முதல் இரண்டு தரப்பிலும் அவர் இல்லை. அவர் எதையாவது வாசிப்புசார்ந்து, சிந்தனை சார்ந்து சொல்லி நான் அறிந்ததே இல்லை. அவர் களப்பணியாளரா? இல்லை, அவருடையது சுயமுன்னேற்ற கட்சியரசியல் மட்டுமே அவர் மூன்றாம் தரப்பும் அல்ல. சீமான் போல திருமுருகன் காந்தி போல அவருக்கு எந்த பின்னணியும் இல்லை.
வா மணிகண்டன்
அப்படியென்றால் அவர் யார்? வெற்றிகொண்டான் போல, தீப்பொறி ஆறுமுகம் போல, வண்ணை ஸ்டெல்லா போல, நாஞ்சில் சம்பத் போல, வே.மதிமாறன் போல ஒரு எளிய கட்சிப்பிரச்சார மேடைப்பேச்சாளர் மட்டுமே. தமிழகத்தில் தெருவுக்குத்தெரு இத்தகையவர்கள் மலிந்திருக்கிறார்கள். வெறுப்பரசியலின் மொழியில், மலினமான ரசனைக்கு உணவிடும்வகையில் எகிறி எகிறிப் பேசிக் எளியவர்களைக் கவர்பவர்கள். அதற்கான கூலியைப் பெற்று வாழ்பவர்கள். அவர்கள் சொல்வனவற்றுக்கும் அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
ஆக, என் அக்கறையின் பட்டியலை அளித்துவிட்டேன். நாளுக்கு ஒரு கடிதம் இந்தக்கூட்டத்தில் எவரேனும் பேசுவதை மேற்கோளாக்கி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு வந்துகொண்டிருக்கிறது. அனைவருக்கும் ஒரே பதில், இறுதியாக
ஜெ
***