‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 44

43. காகச்சிறகுகள்

flowerதிரௌபதி தன் அறைக்குள் ஆடை மாற்றிக்கொண்டிருந்தபோது வெளியே கதவை மெல்ல தட்டி “தேவி” என்று பிரீதை அழைப்பது கேட்டது. அவள் சேலையை வயிற்றில் செருகிவிட்டு “உள்ளே வருக!” என்றாள். உள்ளே வந்த பிரீதை சுவரோரமாக தயங்கி நின்றாள். காதோரம் குழலை பின்னால் தள்ளி குத்தியிருந்த ஊசிகளை எடுத்தபடி “சொல்!” என்றாள் திரௌபதி. “என்னிடம் மீண்டும் கேட்டுவரச் சொன்னார்” என்றாள். “நான் இந்த வாரம் முழுக்க அரசியுடன் கொற்றவை பூசனைகளில் ஈடுபடவேண்டும்” என்றாள் திரௌபதி.

“அப்படியென்றால் அடுத்த வாரம் என்று சொல்லவா?” என்றாள். திரௌபதி “அடுத்த வாரம் குடியவைகள் தொடங்கிவிடுகின்றன. அதன்பின் மழைநோன்பு வருகிறது” என்றாள். பிரீதை பேசாமல் நின்றாள். “என்ன?” என்றாள் திரௌபதி. “நான் என்ன சொல்வது?” திரௌபதி ஊசிகளை அடுக்கி சிறிய பேழையிலிட்டபின் மஞ்சத்தில் அமர்ந்து “நான் சொன்னதையே சென்று சொல்” என்றாள். பிரீதை அசையாமல் அங்கேயே நின்றாள். “என்ன?” கழுத்தைச் சரித்து கூந்தலிழைகளை கைகளால் நீவியபடி திரௌபதி கேட்டாள். இல்லை என அவள் தலையசைத்தாள். “போ” என்றாள் திரௌபதி. “என்மேல் சினம் கொள்கிறார், தேவி” என்றாள் பிரீதை. திரௌபதி புன்னகைத்து “என்னை குறைசொல்லி அதன்பின் நான் சொன்னதை சொல்” என்றாள்.

மேலும் சில கணங்கள் நின்று திரௌபதி குழல்நீவுவதை நோக்கியபின் நீள்மூச்சுடன் பிரீதை வெளியே சென்றாள். அதுவரை இருந்த பொருட்டின்மை முகம் மாற சலிப்புடன் அவள் வெளியே செல்வதை திரௌபதி நோக்கினாள். நான்கு வாரம் முன்பு ஒருநாள் பிரீதை படிகளில் பாய்ந்து ஏறி மூச்சிரைக்க உடல் வியர்வை பரவ ஓடிவந்து அவள் கதவை தட்டாமலேயே உள்ளே நுழைந்து “பெரும்படைத்தலைவர் உன்னை உடனே கிளம்பி அவர் அரண்மனைக்கு செல்லும்படி சொன்னார்” என்றாள். நள்ளிரவில் அதற்கு சற்றுமுன்னர்தான் திரௌபதி திரும்பி வந்திருந்தாள். சுவடி நோக்கிக்கொண்டிருந்தவள் புருவம் சுளிக்க “என்னையா? அவரா? எதற்கு?” என்றபடி எழுந்தாள்.

சிரித்தபடி “எதற்கா? நல்ல வினா” என்றாள் பிரீதை. “மற்போருக்கு” என்றபோது அவள் முகம் சிவந்தது. “ஆம், அவர் அழைப்புக்குச் சென்று மீளும் பல பெண்கள் ஒரு வாரம் எழுந்து அமரமுடியாது…” மேலும் உரக்க நகைத்து “சென்ற மாதம் அணிச்சேடி சப்தையை அழைத்துச்சென்றார். சொல்லப்போனால் தூக்கிச்சென்றார். அவள் அங்கே நீராழியில் குளித்துக்கொண்டிருந்தாள். படைத்தலைவரின் தெற்கு உப்பரிகையில் நின்றால் நீராழியில் நீராடுபவர்களை நன்றாக பார்க்கமுடியும். அங்கிருந்து அவரே நேரடியாக இறங்கிவந்து அவளை நீரிலிருந்து இழுத்து எடுத்து தோளில் போட்டுக்கொண்டு சென்றார். நல்ல மதுமயக்கு. யானைபோல பிளிறிக்கொண்டே சென்றார். அவள் பாவம் சிறுமி. இன்னும் மருத்துவநிலையில் இருந்து எழவில்லை…” என்றாள்.

பிரீதை அவளை கூர்ந்து நோக்கி “ஆனால் நீ நிகராக மற்போரிட முடியும் என நினைக்கிறேன்” என்றாள். திரௌபதி உதடைச் சுழித்தபடி மீண்டும் சுவடியை எடுத்தாள். “கிளம்பு” என்றாள் பிரீதை. அவளை நோக்காமல் “எனக்கு இன்று சோர்வாக இருக்கிறது” என்றாள் திரௌபதி. “சோர்வா? என்ன சொல்கிறாய்? வந்திருப்பது எவ்வளவு பெரிய வாய்ப்பு என அறிவாயா? அவருக்கு உன்மேல் விருப்பம் நீடித்தால் நீ மாளிகையில் வாழலாம்.” திரௌபதி “என்னால் செல்லமுடியாது” என்றாள். “ஏன்? மறுக்கும் உரிமை சூதப்பெண்களுக்கும் சேடியருக்கும் இல்லை, அறிவாயா?” என்றாள். “என்னால் மூன்று நாட்களுக்கு செல்லமுடியாது” என்றாள் திரௌபதி.

அவள் சோர்ந்து “ஓ” என்றாள். பின்னர் “சரி, நான் இதை சொல்கிறேன். அவர் காத்திருப்பார்” என்றாள். பின் குரலைத் தாழ்த்தி “வழக்கமாக ஆணையிடுவார். இம்முறை கனிந்து சொன்னார். உன்மேல் காதல்கொண்டிருக்கிறார். ஐயமே இல்லை. நீ அவர் நெஞ்சில் குடிகொள்கிறாய். உன் தெய்வங்கள் உன்மேல் கனிந்துள்ளன” என்றாள். திரௌபதி ஒன்றும் சொல்லாமல் சுவடியை நோக்கிக்கொண்டிருந்தாள். “சுவடியில் நீ கற்றதை எல்லாம் அவரிடம் சொல்லாதே. அவருக்கு படிப்பவர்களை பிடிக்காது” என்றாள் பிரீதை. மேலும் திரௌபதி பேசாமலிருக்கவே “அவரிடம் என்னைப்பற்றி சொல். நான் உனக்கு இப்போது மிக அணுக்கமாகவே இருக்கிறேன்” என்றாள்.

மீண்டும் வந்தபோது அவள் முகம் மாறிவிட்டிருந்தது. “என்ன சொல்கிறாய்? இன்று நீ வருவாய் என நான் அவரிடம் சொல்லிவிட்டேனே?” என்றாள். அவள் அப்போது அரசியுடன் கலைக்கூடத்துக்குக் கிளம்ப அணிசெய்துகொண்டிருந்தாள். “அலுவல் உள்ளது, சொன்னேனே?” என்றாள். “அலுவலா? படைத்தலைவர் ஆணையிட்டால் அரசரே அவையலுவல்களை விட்டுவிட்டு கிளம்பிச்செல்வார்” என்றாள் பிரீதை. “ஆம், ஆனால் நான் ஆணையின்றி கிளம்ப முடியாது” என்றபின் திரௌபதி வெளியே சென்றாள். “நான் அரசியிடம் சொல்லச் சொல்கிறேன்” என்றபடி பிரீதை பின்னால் வந்தாள்.

மெல்ல மெல்ல பிரீதையின் குரல் மாறியது. “உன்னை அழைத்துவராவிட்டால் என்னை சவுக்காலடிப்பார். என்னை சவுக்கடி படவைப்பதுதான் உன் நோக்கமா?” என்றாள். சீற்றத்துடன் “நான் அப்படி எளிதாக தோற்றுச்செல்பவள் அல்ல. நீ அவரிடம் செல்லாவிட்டால் உன்னை முச்சந்தியில் கழுவேற்ற வைப்பேன்” என்றாள். “நீ என்னதான் எண்ணுகிறாய்? நீ ஒன்றும் இளவரசி அல்ல. அழகிதான். ஆனால் நடு அகவை கடந்தவள். இன்னும் எத்தனை நாள் உன் அழகு நீடிக்குமென நினைக்கிறாய்? கனிந்திருக்க கொய்யப்படாத பழம் உதிர்ந்து அழுகும் என்று அறிக!” என்றாள். “சொன்னால் புரிந்துகொள், அவர் இந்நாட்டை மெய்யாகவே ஆள்பவர். சினம்கொண்டால் காட்டுவேழம் போன்றவர்.”

ஒரு கட்டத்தில் அவள் தணியத் தொடங்கினாள். “நீ இத்தனை மிஞ்சியும் அவர் கெஞ்சுகிறார் என்றால் உன்மேல் அத்தனை காதல்கொண்டிருக்கிறார் என்று பொருள். அதை நீ இழுக்கலாம், அறுத்துவிடக்கூடாது” என்றாள். “நீ விழைவதென்ன? அதைமட்டும் சொல். அதை நான் குறிப்புணர்த்தினாலே போதும், அவர் பெருகி எழுவார்.” திரௌபதி சலிப்புடன் “நான் அதை எண்ணவில்லை. என் சிக்கல்களை சொல்லிவிட்டேன். இப்போது விழாக்காலம். இது முடியட்டும்” என்றாள். பிரீதை எரிச்சலுடன் “விழா முடிந்ததும் மழைக்காலம்” என்றாள். “ஆம்” என்றாள் திரௌபதி சினத்துடன். “நான் சொல்கிறேன், இந்த ஆணவத்தின்பொருட்டு நீ கழுவில் அமர்வாய். அன்று என் சொற்களின் பொருள் உனக்குப் புரியும்” என்றாள்.

தயங்கிய காலடிகள் சுபாஷிணி வருவதை காட்டின. இருமுறை கதவை கையால் சுண்டிவிட்டு உள்ளே வந்தாள். புன்னகையுடன் “என்ன சொல்லிவிட்டுச் செல்கிறாள் அண்டா?” என்றாள். திரௌபதி புன்னகைத்தாள். “அண்டா இப்போதெல்லாம் ஒழிந்துகிடக்கிறது” என்றபடி அவளருகே அமர்ந்த சுபாஷிணி “நீங்கள் சென்றிருக்கவேண்டும், அக்கா. சென்று அந்த தசைக்குன்றின் கன்னத்தில் நான்கு அறை வைத்திருக்கவேண்டும்” என்றாள். “மற்போரா?” என்றாள் திரௌபதி சிரித்தபடி. “உண்மையைச் சொன்னால் மற்போரில் அவன் உங்களை வெல்ல முடியாது. அவன் கைகள் வெறும் மலைப்பாம்புகள். உங்கள் கைகள் அரசநாகம்” என்றாள் சுபாஷிணி. திரௌபதி “என்ன, இன்று அலுவல்கள் முடிந்துவிட்டனவா?” என்றாள்.

“அலுவலுக்கு முடிவேது? நான் அப்படியே விழிகளில் இருந்து மறைந்துவிடுவேன். என்னிடம் கேட்பார்கள், எங்கே சென்றாய் என்று. நான் இங்கேதான் இருந்தேன் என்பேன். அவர்களால் ஒன்றும் சொல்லமுடியாது.” அவள் சிரித்து “நேற்று என்ன சொன்னேன் தெரியுமா? நான் கந்தர்வன் ஒருவனுடன் இருந்தேன் என்று” என்றாள். திரௌபதி அவள் கையை பற்றி “கந்தர்வர்கள் எவரேனும் வந்துவிடப்போகிறார்கள்” என்றாள். “வந்தால் நான் உங்களை முதலில் சந்திக்கும்படி சொல்வேன்” என்றாள் சுபாஷிணி. “நேற்று என்னிடம் சந்திரை சொன்னாள், நான் உங்களைப்போல நடப்பதாக. சேடியரைப்போல நிலம்நோக்கி நட என்று என்னிடம் அவள் சொன்னாள். நான் விழிதூக்கி நடக்கிறேன் என்று எனக்கே தெரியாது. நான் அப்படி நடந்ததே இல்லை.”

“நான் அப்படி நடக்க முயன்றேன்” என்றாள் சுபாஷிணி. “ஆனால் அப்படி நடந்தாலும் வேறுபாடு தெரியவில்லை. உடலில் வெளிப்படுவது உள்ளே வாழ்வதுதான்.” அவள் மேலும் நெருங்கி அவளருகே அமர்ந்து “என் உடலுக்குள் என்ன வாழ்கிறது?” என்றாள். “சின்னஞ்சிறிய சிட்டுக்குருவி ஒன்று” என்றாள் திரௌபதி. அவள் முகம் மலர்ந்து “ஆம், உண்மை. நான் சிட்டுக்குருவிகளை கனவில் காண்பேன்” என்றாள். பின்னர் “நீங்கள் கரவுக்காட்டுக்கு செல்கிறீர்கள் அல்லவா?” என்றாள். “எவர் சொன்னது?” என்றாள் திரௌபதி. “பேசிக்கொண்டார்கள். அரசி செல்கிறார்கள். காவலுக்கு நீங்களும் செல்கிறீர்கள்.” மேலும் குரலைத் தழைத்து “என்னையும் உடனழைத்துச் செல்லுங்கள்” என்றாள்.

“நீ எதற்கு?” என்றாள் திரௌபதி. “நான் இதுவரை இந்த அரண்மனையைவிட்டு வெளியே சென்றதே இல்லை. ஒரு காட்டை பார்த்துவிட்டால் அதன்பின் நான் திரும்பிவரவே மாட்டேன். அங்கேயே பறந்து பறந்து அலைவேன்.” திரௌபதி “நீ வந்து என்ன செய்யப்போகிறாய் என்று சொல்ல?” என்றாள். “உங்களுக்கு உதவியாக” என்றாள் சுபாஷிணி. “நன்று, இதுவரை சேடியருக்கு சேடியர் அமைந்ததில்லை உலகில்” என்றாள் திரௌபதி. சுபாஷிணி முகம் கூம்பி “உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வேண்டாம்” என்றாள். திரௌபதி “அழைத்துச் செல்கிறேன்…” என்றதும் எழுந்து “மெய்யாகவா?” என்றாள். “நீ வருகிறாய்” என்றாள் திரௌபதி.

அவள் “அய்யோ” என்று கூவியபின் நின்று நாக்கைக் கடித்து ஐயத்துடன் “சந்திரை என்ன சொல்வாள்?” என்றாள் சுபாஷிணி. “நான் ஆணையிடுகிறேன்.” அவள் நெஞ்சில் கைவைத்து “அய்யோ!” என ஏங்கினாள். பின்னர் குதித்தபடி “நான் இதை உடனே ஆதிரையிடமும் சாமையிடமும் சொல்லவேண்டும்…” என்றாள். ஓடி வெளியே போய் உடனே திரும்பி வந்து “நான் எவரிடமும் இப்போது சொல்லமாட்டேன்” என்றபின் மீண்டும் ஓடிச்சென்றாள். புன்னகையுடன் மீண்டும் சுவடியை படிக்க முயன்றபின் திரும்ப கட்டிவைத்துவிட்டு திரௌபதி மஞ்சத்தில் படுத்துக்கொண்டாள்.

flowerகாலையில் திரௌபதி அரசியின் அறைக்கு சென்றபோது சற்று பிந்திவிட்டிருந்தது. அவள் முந்தையநாள் இரவு சரியாக துயிலவில்லை. நெடுநேரம் எண்ணங்களில் உழன்றுகொண்டிருந்தாள். எண்ணங்கள் ஒருபோதும் அத்தனை பொருளற்றதாக, முன்பின் உறவற்றவையாக இருந்ததில்லை. துயிலுக்குள் அவள் கரு உந்தி குருதி ஒழுகிக்கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு மருத்துவம் பார்த்தாள். குழந்தை வெளிவந்து குருதியில் நனைந்த துணி எனக் கிடந்தது. அதை எடுத்துப்பார்த்தாள். அதன் விழிகள் இறந்து திறந்திருந்தன. ஓர் அசைவை உணர்ந்து அவள் திடுக்கிட்டாள். அதன் தொப்புள்கொடி நாகமென நெளிந்தது. நாகமேதான். குருதி நனைந்த நாகம் அந்தத் தொப்புளை கவ்வியிருந்தது.

இடைநாழியின் மறுஎல்லையில் அவள் கீசகனின் பேருருவை கண்டுவிட்டாள். நடையை சீராக்கி தன் கால்களை மட்டுமே நோக்கி நடந்தாள். கால்கள் ஒன்றன்மேல் ஒன்றென அமைந்து முன்செல்ல தொலைவென்பதே இல்லாமல் ஆகியது. அவள் அவன் குரலை கேட்டாள். “தேவி, நில்!” அவள் நின்று தன் கால்களை நோக்கிக்கொண்டிருந்தாள். “நான் அனுப்பிய செய்திகள் வந்தனவா?” என்றான். “ஆம்” என்றாள். “அவள் மூடப்பெண். நான் சொன்னவற்றை சரியாகச் சொல்லியிருப்பாளா என்னும் ஐயம் எழுந்தது. ஆகவேதான் நானே நேரில் வந்தேன்” என்றான்.

அவள் “அவள் அனைத்தையும் சொன்னாள்” என்றாள். “பெண் எனக்கு புதிதல்ல. ஆனால் உன்னைக் கண்டதுமே நான் உணர்ந்தேன், பிறிதொரு பெண்ணை நான் எண்ணியும் பார்க்கமுடியாது என. நம் இருவரையும் அருகருகே நோக்கும் எவரும் அதை உணரமுடியும், நீயும் நானும் இணையானவர்கள் என்று” என்றான். “நான் எளிய புரவிகளில் ஊர முடியாது. நான் ஏகும் யானையே இந்நகரில் மிகப் பெரியது… நான் இப்புவியில் மிகப் பெரிய உடல்கொண்டவன். எனக்கு நிகரானவன் பாண்டவனாகிய பீமன். அவன் இறந்துவிட்டான்” என்றான் கீசகன். “நீ இப்புவியிலேயே பெரியவள்… ஐயமே இல்லை. உன்னைக் கண்ட நம் நிமித்திகன் ஒருவன் இதை சொன்னான்.”

திரௌபதி “நான் செல்லவேண்டும்” என்றாள். “உனக்காக காலையிலேயே எழுந்து வந்து காத்திருக்கிறேன். உனக்கு என்ன வேண்டும், சொல்! பொன்னா? மணியா? கருவூலச்செல்வமா? அரசமாளிகையா? என்னை நீ புறக்கணிப்பது ஏன்? அதை சொல்!” அவள் “நான் புறக்கணிக்கவில்லை” என்றாள். “நீ சூதர்மகள் அல்ல என நான் அறிவேன். நீ யாரென்று நான் கேட்கவில்லை. எனக்கு உன் அருள் வேண்டும். நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது… அதை ஒவ்வொரு கணமும் உணர்கிறேன்” என்றான் கீசகன். “ஒரு பெண்ணின்பொருட்டு நான் முழு இரவும் துயில்நீப்பேன் என சென்ற ஆண்டு நிமித்திகன் சொல்லியிருந்தால் அவன் தலையை வெட்ட ஆணையிட்டிருப்பேன். ஆனால் நான் துயின்று பல நாட்களாகின்றன.”

“உண்மை” என்று கீசகன் சொன்னான். “உன் எண்ணம் மட்டுமே என் உள்ளே ஓடிக்கொண்டிருக்கிறது. எந்தப் பெண்ணும் முதலசைவில் உன்னை போலிருக்கிறாள். எப்போதும் போர்க்களத்திற்குச் செல்வதற்கு முந்தைய கணத்தின் பதற்றமும் இனிய கிளர்ச்சியும் என் உடலில் இருந்துகொண்டே இருக்கின்றன… துயில்வது இருக்கட்டும், என்னால் எங்கேனும் நிலையாக அமரக்கூட முடியவில்லை.”

திரௌபதி “நீங்கள் அரசமகளிரை மணக்கவிருப்பதாக சொன்னார்கள்” என்றாள். அவன் “ஆம், ஷத்ரிய அரசகுலத்தில் பெண்கொள்வது என் அரசியல் எண்ணங்களுக்கு உகந்தது. ஆகவேதான் இதுவரை நான் எப்பெண்ணையும் மணக்கவில்லை” என்றான். உடனே உணர்ந்துகொண்டு “ஆம், நான் உன்னை அரசியாக்க இயலாது. நான் அரசனாகும்போது நீ அரியணை அமர்வதென்றால்…” என்று தடுமாறினான். அவள் ஆடையை பற்றிக்கொண்டு “நேரமாகிறது. அரசி எனக்காக காத்திருப்பார்கள். நான் செல்கிறேன்” என்றாள். அவன் “நில், நீ விழைந்தால் உன்னை மணம்கொள்கிறேன். பட்டத்தரசியாகவே அமரச்செய்கிறேன்” என்றான்.

திரௌபதி “எனக்கு நடு அகவை கடந்துவிட்டதே?” என்றாள். “இல்லை, நீ மாறாத கன்னி. உன்னைப் பார்த்த நிமித்திகன் சொன்னான், நீ அனல்போல என்றும் புதியவள் என்று. உன்னில் எதுவும் ஆகுதியாகுமே ஒழிய கலக்கவியலாதென்று. உன் ஒரு மயிரிழையை கொண்டுசென்று விழியிழந்த முதுநிமித்திகர் சுக்ரரிடம் அளித்தேன். தொட்டு நெறிநோக்கியதுமே இவள் அனல்மகள் என்றார். இவள் உடல் பிழையற்ற முழுமைகொண்டது, இவள் கை பற்றி உடனமர்வோன் பாரதவர்ஷத்தை ஆள்வான் என்றார்.”

திரௌபதி புன்னகையுடன் அவனை நோக்கி “அதுவா உங்கள் இலக்கு?” என்றாள். “ஆம், நீ பாரதத்தை ஆள்வாய் என்கிறார் சுக்ரர். ஐயமே வேண்டியதில்லை, இது கோல்தாங்கும் கை என்கிறார். நீ இன்று குடியோ படையோ இன்றி தனியளாக இருக்கிறாய். நான் உன் படைக்கலமாக ஆவேன். என்னைப்போன்ற வீரன் உதவியுடனேயே நீ நாடாள முடியும்” என்றான் கீசகன். “நான் உன்மேல் பித்துகொண்டிருக்கிறேன் என்று அறியமாட்டாயா? உன் காலடியில் கிடப்பேன். உன் சொல்லை தலைக்கொள்வேன்.” திரௌபதி “மச்சகுலத்து இளவரசர் பேசும் பேச்சா இது?” என்றாள். “பித்தன் என்றே கொள். என்னால் தாளமுடியவில்லை… வேறேதும் எண்ண முடியவில்லை. உன்னை இழந்தால் நான் அனைத்தையும் இழந்தவனாக ஆவேன்” என்றான் கீசகன்.

“நான் என் நிலையை சொல்லிவிடுகிறேன், இளவரசே” என்றாள் திரௌபதி. “நான் ஐந்து கந்தர்வர்களுக்கு கட்டுப்பட்டவள். அவர்களை மீறி எதையும் எண்ணமுடியாதவள்” என்றாள். “கந்தர்வர்களா? ஆனால் அத்தனை பெண்களும் கந்தர்வர்களுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்லவா? மணவினை என்பதே கந்தர்வர்களை விட்டு பெண்ணை விடுவிப்பதுதானே?” என்றான் கீசகன். “இவர்கள் வேறுவகை கந்தர்வர்கள். பிறர் பெண்ணை அந்தந்த பருவங்களுக்கு மட்டும் உரிமைகொள்பவர்கள். இவர்கள் என்னை இறப்புவரை விடமாட்டார்கள். ஏனென்றால் இவர்கள் இங்கே இருக்கவேண்டுமென்றால் என்னை பற்றிக்கொள்ளவேண்டும். ஒவ்வொருநாளும் நான் இவர்களுக்கு அளிக்கும் மலரும் நீரும்தான் இவர்களின் அன்னம்” என்றாள் திரௌபதி. “இன்றுவரை என்னை அணுகிய அத்தனை மானுடரையும் இந்த கந்தர்வர்கள் கொன்றிருக்கிறார்கள். ஆகவேதான் நான் அஞ்சுகிறேன்.”

“கந்தர்வர்களே அஞ்சும் தெய்வம் ஒன்றின் அடியவன் நான்” என்றான் கீசகன். “பிறர் அறியாத ஒன்று அது. இன்று இந்நகரில் அனைவரும் வழிபடும் தெய்வம் மலைநின்ற இந்திரன். நானும் அவனை வழிபடுவதுண்டு. ஆனால் உளம்கொண்டிருப்பது தென்மேற்குக் காட்டில் உறையும் கலிதேவனை. அனலுறங்கும் விழியன், இருள் என பேருரு கொண்டவன். அவன் பெயரைச் சொன்னால் அஞ்சாத தேவர்கள் இல்லை. நான் சனிதோறும் கலிக்கு குருதிபலியிட்டு பூசனை செய்கிறேன். என் படைக்கலங்களை அவன் காலடியில் வைத்து வணங்கியே கையிலெடுக்கிறேன். ஆகவேதான் இன்றுவரை நான் எந்தப் போரிலும் தோற்றதில்லை.”

“என் உடலில் எப்போதும் அவனருள் இருந்துகொண்டிருக்கிறது” என்று கீசகன் தன் மணிக்கட்டிலிருந்த கரிய சரடை காட்டினான். “அவன் காலடியில் வைத்தெடுத்த கருங்காப்பு. என்னுடன் வா, அவன் காலடி பணிந்தெழு, உன் கைகளிலும் ஒன்றை கட்டுகிறேன். கந்தர்வர்கள் மட்டுமல்ல, அவர்களின் பேரரசனாகிய இந்திரனே அஞ்சி விலகிச்செல்வான்.” திரௌபதி “எங்குள்ளது அந்த ஆலயம்?” என்றாள்.

“மாமன்னர் நளன் மீண்டும் அரசுகொண்டபோது அவ்வாலயம் ஆதரவிழந்தது. ஆண்டுக்கொருமுறை மட்டுமே பூசனை பெறுவதாக மாறியது. பின்னர் காட்டுக்குள் இடிந்து கற்குவியலாக புதர்மூடிக் கிடந்தது. நிமித்திகர் ஒருவர் நூல்நோக்கி சொல்ல இங்கு கலியின் ஆலயமிருப்பதை அறிந்தேன். நானே தேடிக் கண்டடைந்தேன். அதை எடுத்துக்கட்டி நாள்பூசனைக்கும் ஒழுங்கு செய்தேன்” என்றான் கீசகன்.

திரௌபதி “என்னை ஆள்பவர்களில் முதல்வர் காற்றின் மைந்தர். கலி அவரை எண்ணினாலே அஞ்சுவான்” என்றாள். “எவர் சொன்னது?” என்று கீசகன் இரு கைகளையும் ஓங்கி அறைந்தபடி கூவினான். தன் மேலாடையை விலக்கி நெஞ்சைக் காட்டியபடி முன்னால் வந்தான். அதில் காகக்குறியும் சூலமும் பச்சை குத்தப்பட்டிருந்தன. இரு தோள்களிலும் காகச்சிறகுகளை பச்சை குத்தியிருந்தான், அவன் கைவிரிக்கும்போது அவை பறப்பதுபோல் தோன்றுவதாக. “பார், நான் அவன் அடியவன். அவன் குறியை நெஞ்சில் தாங்குபவன். அவனே நான். உன் கந்தர்வனுக்கு ஆண்மையிருந்தால் வந்து என்னை எதிர்கொள்ளச் சொல்… ஆம், நான் அவனை அறைகூவுகிறேன் என்றே சொல்.”

அவள் அதை நோக்கியபின் விழிவிலக்கி “இதை இங்கு எவரும் பார்த்ததில்லையா?” என்றாள். “இது என் குடிக்குறி என நினைக்கிறார்கள். நான் எவர் என்பதை அறிந்தவள் உன் அரசி மட்டுமே” என்றான் கீசகன். “நீ அஞ்சவேண்டியதில்லை. இப்புவியிலுள்ளோர் அனைவரும் எண்ணி அஞ்சும் ஒருவன் உன் அன்பைக் கோருகிறேன்.” திரௌபதி “நான் என் கந்தர்வனிடம் சொல்கிறேன். அவன் உங்களை எதிர்கொள்ள அஞ்சுவான் என்றால் மாற்று எண்ணுகிறேன்” என்றாள். “சொல், அவனை என்னிடம் வரச்சொல்” என்றான் கீசகன். “எனக்கு பொழுதாகிறது” என்றபடி அவள் முன்னால் சென்றாள்.

flowerஅரசி அறைக்குள் எரிச்சலுடன் நின்றிருந்தாள். திரௌபதி உள்ளே வந்ததுமே “எங்கே சென்றாய்? உனக்காக நான் காத்திருக்கவேண்டுமா?” என்றாள் சுதேஷ்ணை. “வழியில் உங்கள் இளையோனை கண்டேன்” என்றாள் திரௌபதி. முன்னரே கீசகனின் காதல் கோரிக்கையை அவள் அரசியிடம் சொல்லியிருந்தாள். அவள் முகம் மாறியது. “என்ன சொன்னான்? மிரட்டினானா? இன்று இவ்வரசே அவன் கையில் இருக்கிறது” என்றாள். “அதை முன்னரே அந்தச் சேடியிடம் சொல்லி அனுப்பியிருந்தார். விரும்பாதது நிகழுமென்றால் என் கத்தியால் கழுத்து நரம்பை அறுத்துக்கொள்வேன் என்று அவளிடம் சொல்லி அனுப்பினேன்” என்றாள் திரௌபதி.

“விலங்கு… காமம் கொண்டால் மதயானை கற்பாறையில் மத்தகத்தை முட்டிக்கொள்ளும் என கேட்டிருக்கிறேன்” என்றாள் அரசி. “அவரது எண்ணம் பிறிதொன்று. என்னை மணப்பவன் பாரதவர்ஷத்தின் தலைவனாவான் என நிமித்திகன் சொல்லியிருக்கிறான்” என்றாள். அரசி வாயைப் பொத்தி ஒருகணம் அமைந்தபின் “இருக்கும்… உன்னைப் பார்த்தால் எனக்கே அப்படி தோன்றுகிறது” என்றாள். பின்னர் “நீ அவனை எதன்பொருட்டும் ஏற்றுக்கொள்ளாதே” என்றாள். “என் கந்தர்வர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்” என்றாள் திரௌபதி.

“ஆம், அவர்கள் உனக்கு காப்பு. உன் காற்றுமைந்தனிடம் சொல், இந்தக் கீழ்மகனின் நெஞ்சை பிளக்கவேண்டும் என்று” என்றாள் சுதேஷ்ணை. “கீசகர் மாருதரை அறைகூவியிருக்கிறார்” என்று திரௌபதி சொன்னாள். “இப்போது எனக்கு எழும் ஐயம் வேறு. இந்த ஊன்குன்று ஒருவேளை உன் மாருதனையும் வென்றுவிடக்கூடும்.” திரௌபதி புன்னகைத்து “அவரை வெல்ல அவரது மூத்தவராகிய ஹனுமானால் மட்டுமே முடியும், அரசி. அச்சம் வேண்டாம்” என்றாள்.

பெருமூச்சுடன் அரசி தணிந்தாள். “இன்று ஏழு பூசனைகள், நான்கு அயல்நாட்டார் சந்திப்பு… அரசியாக நடித்து சலித்துவிட்டேன். எங்காவது எளிய ஷத்ரியனுக்கு மனைவியாகி அடுமனை வேலையும் அகத்தள வம்புமாக வாழ்ந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்” என்றாள். திரௌபதி புன்னகை செய்தாள். “கரவுக்காட்டுக்கு உத்தரன் கரிய புரவியில் வருகிறான். அதன் பெயர் காரகன். அவனே என்னிடம் வந்து சொல்லிவிட்டுச் சென்றான், தெரியுமா?” என்றாள் அரசி. “அவன் அந்த ஆணிலியை வேவுபார்க்கவும் அனைத்து ஒருக்கங்களையும் செய்துவிட்டான். நான் சொன்னால் அதை அரசாணையாகக் கொள்பவன் அவன் மட்டுமே. அவனை இங்கே பிற அனைவரும் இளக்காரமாகவே பார்க்கிறார்கள்.”

திரௌபதி மீண்டும் புன்னகைத்தபின் அறைக்குள் இருந்த சுவடிகளை அடுக்கி வைக்கத்தொடங்கினாள். சுதேஷ்ணை அருகே வந்து “அவனுக்கு அவன் விரும்பும்படி கலிங்க இளவரசி மணமகளாக அமைந்துவிட்டாள் என்றால் இளவரசுப்பட்டம் கட்டவேண்டும் என்று அரசரிடம் கோருவேன். அவர் இன்றிருக்கும் நிலையில் அந்தக் கிழநரி குங்கன் சொல்லாமல் எதுவும் நடக்காது. நீ அந்த சூதாடியை சென்று கண்டு அவன் என்ன எண்ணுகிறான் என்று கேட்டுப் பார்” என்றாள். திரௌபதி “அவரை நான் எங்கே சந்திப்பது?” என்றாள். “அவனையும் கூட்டிக்கொண்டுதான் அரசர் கரவுக்காட்டுக்கு வருகிறார். அங்கே அமர்ந்து சூதாடுவார்கள். வேறென்ன தெரியும் அவர்களுக்கு?” என்றாள் அரசி.

திரௌபதி புன்னகையுடன் “கேட்டுப் பார்க்கிறேன்” என்றாள். “வெறுமனே கேட்காதே. அவனுக்கு என்ன தேவை என்று கேள். அதை நான் அளிப்பேன். தேவைப்பட்டால் மெல்ல அவன் உள்ளத்தில் கீசகன் பற்றிய அச்சத்தை உருவாக்கு. என்ன இருந்தாலும் கீசகன் தன்னை அரசுசூழ்பவன் என எண்ணிக்கொண்டிருப்பவன். பிறிதொருவன் தன்னை விஞ்சுவதை அவன் ஒப்பமாட்டான். என்றைக்கானாலும் குங்கனின் தலையை கீசகன் வெட்டுவது உறுதி. அந்த அச்சம் அவனுக்கே இருக்கும். அதை உறுதிசெய்வதுபோல உன் ஐயத்தை மட்டும் சொல். ஐயம் எழுந்துவிட்டால் போதும், அது வளர்ந்தே தீரும்” என்றாள்.

உடனே மேலும் சொற்கள் எழ குரல் தாழ்த்தி “ஆனால் என் மைந்தன் எளிய உள்ளத்தவன். அவன் அரசனென்றானால் குங்கன் அவனுக்கு முதன்மை அரசுமதியாளனாக உடனிருக்கலாம்” என்றாள். மேலும் குரல் தழைய “உண்மையில் குங்கனே கோல்கொண்டு நாடாளலாம் என்று சொல். குங்கனைப் போன்றவர்கள் பொதுவாக எளியவர்களையே விழைவார்கள். அவர்களின் களத்தில் காயென அமைய அவர்களே உகந்தவர்கள்” என்றாள்.

திரௌபதி “ஏன் நாம் அவரை இப்படி வென்றெடுக்கவேண்டும்?” என்றாள். “உனக்கென்ன அறிவே இல்லையா? இன்று இந்நகரில் அறிவின் வல்லமை கொண்டவன் அவன் மட்டுமே. தீயவன் என்றாலும் ஆற்றல்மிக்கவன். அவன் நம் பக்கம் இருந்தால் நமக்கு பெரும்படைக்கலம். கீசகனை வீழ்த்தி உத்தரனை அரசமர்த்த அவனே போதும்” என்றாள் அரசி. திரௌபதி “ஆம், மெய்தான்” என்றாள்.

முந்தைய கட்டுரைஆத்மாநாம் விருதுகள்
அடுத்த கட்டுரைதீவிரம்!