அட்டைப்படங்களின் வரலாறு

devadevan1

தேவதேவனின் மின்னற்பொழுதே தூரம் தொகுப்புக்கு பிரமிள் வரைந்த பின்னட்டை

1992 ல் என்னுடைய திசைகளின் நடுவே சிறுகதைத் தொகுதியை அன்னம் மீரா [அகரம்] வெளியீடாக கொண்டுவந்தார். அதற்கு முன்னர் ரப்பர் நாவல் தமிழ்ப்புத்தகாலய வெளியீடாக வந்திருந்தது. அந்நூல் வெளிவர பவா செல்லத்துரை காரணம். திருவண்ணாமலை கலையிலக்கிய இரவில் அந்நூல் வெளியிடப்பட்டது.

அதன் அட்டையைப்பார்த்த இந்திரா பார்த்தசாரதி “இப்படி ஒரு அட்டையும் கட்டமைப்புமாக நூல் வெளிவருவதற்கு யோகம் வேண்டும்” என்றார். இன்று பார்ப்பவர்களுக்கு பெரிதாகத் தோன்றாது. அன்று மிக வசீகரமான அட்டையாக இருந்தது அது. காவடி கட்டி எடை தூக்கிச் செல்லும் ஒருவரின் படம் புகைமூட்டமாக தெரியும்.

கவிஞர் மீரா தமிழிலக்கியப் பதிப்புலகில் ஒரு பிதாமகர். என்னைப்போன்ற இளம்படைப்பாளிகளுக்கு முதல்தொகுதியை அவர்தான் வெளியிட்டார். மிகுந்த உழைப்புடன், அழகுணர்வுடன் தயாரானவை அவருடைய நூல்கள். மீரா  கி.ராஜநாராயணன்,நாஞ்சில்நாடன் நான் என மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களை அச்சில்கொண்டுவந்தவர். தமிழிலக்கிய வரலாற்றை அவரின்றி எழுத முடியாது.

மீராவின் அன்னம் பதிப்பகம் ஒரு ‘ஹப்’ போல. அன்று இளம்படைப்பாளிகள், இளம் ஓவியக்கலைஞர்கள், இளம் புகைப்படக்காரர்களின் தாவளம் அது. அவருடைய மதுரை சிவகங்கை அலுவலகங்களில் இளைஞர்களுக்கு எல்லாவகையான சுதந்திரங்களும் உண்டு. அங்கே அவர்கள் குடித்துக்கும்மாளமிடுவதும் உண்டு. ஆனால் அவர்களில் பலர் மிகமிக படைப்பூக்கத்துடன் அவருடைய நூல்தயாரிப்புகளில் உதவியிருக்கிறார்கள். புதுப்புதுச் சோதனைகள் நிகழ்ந்துள்ளன

இந்தச்சோதனைகள் கையில் பணத்துடன் செய்யப்பட்டவை அல்ல. ஏனென்றால் சிற்றிதழ்சார்ந்த பதிப்புகளுக்கு அன்று லாபம் என்பதே இல்லை. அது ஒருவகை தலைமறைவுச் செயல்பாடு மட்டுமே. பணமில்லாமல் நூல்தயாரிப்பது எப்படி என்பதே அன்றைய சவால். காசில்லா அழகியல் என்று சொல்லலாம். மீரா அதை நிகழ்த்திக் காட்டினார். ஒரு தலைமுறையையே இலக்கியத்திற்குள் கொண்டுவந்தார். ஓர் இலக்கிய இயக்கமாக இருந்தார்.

devadevan2

அப்போதே வண்ண ஆப்செட் வந்துவிட்டிருந்தது. ஆனால் ஐம்பதாயிரம் பிரதிகளுக்குமேல் அச்சிட்டால்மட்டுமே அது கட்டுப்படியாகும்.. குமுதம் விகடன் அட்டைகள் வண்ண ஆப்செட்டில் வெளிவரும். ராணி வாராந்தரி அதன் ஆண்டுமலர்களை மட்டும் ‘ஆறுவண்ண ஆப்செட் அட்டைப்படம்’ என்று சொல்லி வெளியிடும். தொட்டுப்பார்த்தால் ஆறுவண்ணமும் கையிலேயே வரும். சாவி, இதயம்பேசுகிறது அட்டைகளில் இனிய வார்னீஷ் மணம் இருக்கும்.

அன்று புத்தகங்கள் சாதாரணமாக ஆயிரம் பிரதிகள் அச்சிடுவார்கள். ஐந்து ஆண்டுகளில் அவை விற்கும். பொதுவாக நூல்கள் ஆயிரம். சிற்றிதழிலக்கியம் என்றால் முந்நூறு. அதற்கு வண்ண அட்டை கட்டுப்படியாகாது.  நூலை அச்சிடுவதற்கு கட்டை அச்சுதான். அதாவது ஈய எழுத்துரு ஒட்டப்பட்ட விரல்நீளக் கட்டைகளை ஒரு தட்டில் எழுத்துவரிசையாக அடுக்கி இறுக்கி அதை அச்சியந்திரத்தில் பொருத்தி தாள்மேல் ஒற்றி அச்சுப்பதிய வைப்பார்கள். காலால் மிதித்து ஓட்டப்படும் அச்சியந்திரம் டிரெடில் எனப்பட்டது. மின்விசையால் இயங்குவதற்கும் அதே அச்சுமுறைதான்.

de
பிரமிள் வரைந்த அட்டைப்படம்

ஜெயகாந்தன் எழுதிய முதல் சிறுகதை டிரெடில். காலால் அச்சியந்திரத்தை மிதித்து ஓட்டி உழைத்துச்சாகும் தொழிலாளி பற்றிய ’முற்போக்குக்’ கதை.ஆனால் அந்த அச்சியந்திரத்தின் மாற்றமில்லாத ஓசை, ஒன்றே திரும்பத்திரும்ப நிகழ்வதன் சலிப்பு, தான் அச்சிடுவது என்ன என்றே தெரியாத பரிதாபம் என  அந்த டிரெடில் இயந்திரத்தை குறியீடாக ஆக்குவதன்மூலம் அக்கதையை பலதளங்களுக்குக் கொண்டு சென்றிருந்தார் அன்று சின்னப்பயலாக இருந்த ஜெயகாந்தன். [இருபத்தொரு வயது].

அன்று அச்சகங்களிலேயே அமர்ந்து மெய்ப்பு பார்க்கவேண்டும். அச்சுக்கோப்பவர்களிடமிருந்து வாங்கி அந்த எழுத்துத்தட்டை தாளில் ஒற்றி மெய்ப்புநோக்குபவரிடம் அளிப்பார்கள். மெய்ப்பு நோக்கியதும் அந்த தட்டை சற்று தளர்த்தி பிழையான எழுத்துக்களை எடுத்து அகற்றி சரியாக அமைத்து மீண்டும் அச்சு எடுப்பார்கள். மூன்றுமுறை பிழைபார்க்கப்படும். அச்சுக்கோப்பதும் பிழைநோக்குவதும் கடுமையான உழைப்புள்ள பணி.

அச்சு முடிந்ததும் எழுத்துக்களை தனித்தனியாகக் கழற்றி அடுத்த அச்சுக்குக் கொடுத்துவிடுவார்கள். ஆகவே மொத்த நூலையும் ஒரேயடியாக அச்சிட்டுவிடுவார்கள். இன்றுபோல தேவைக்கேற்ப அச்சிட முடியாது.டிரெடில் அச்சில் 8 பக்கங்களாக தாளை மடிப்பார்கள். மின்னச்சு எந்திரத்தில் 16 பக்கங்கள். இது ஒரு ஃபாரம் எனப்பட்டது. பதினாறின் மடங்குகளாகவே அன்று நூலின் பக்கங்கள் அமைந்திருக்கும்.

அந்த அச்சுக்கூடத்திலேயே பெரும்பாலும் அட்டைகளும் அச்சிடப்படும். ஆகவே அட்டை ஒற்றைநிறம்தான். நீலம், சிவப்பு, மஞ்சள் போன்ற நிறங்களில் அட்டைத்தாளை வாங்கி அதில் வேறு ஏதேனும் வண்ணத்தில் தலைப்பையும் படத்தையும் அச்சிடுவார்கள். படங்கள் அன்று பிளாக் எடுத்தல் என்னும் முறைப்படி  படங்கள் அச்சுக்குரிய வடிவாக ஆக்கப்படும். படத்தின்மேல் விழுந்த ஒளி ஓர் ரசாயனக்கலவையில் விழும். படத்தில் வெண்மையாக இருந்த இடங்கள் ஒளியை பிரதிபலிக்கும். அந்த ஒளிபட்ட இடங்களில் அந்த ரசாயனக்கலவையில் உள்ள ஈயம் பூமுட்களாக சென்று படியும். அதற்கு எதிர்பிரதி எடுப்பார்கள்.

athi
சு ரா ஆதிமூலம் வரைந்தது

பிளாக் என்பது ஒரு ஈயத்தகடு. அதில் அந்த படம் முள்முள்ளாக அமைந்திருக்கும். தொட்டுப்பார்க்கமுடியும். அதை எழுத்துரு போலவே தட்டில்வைத்து இறுக்கி மையில் ஒற்றி தாளில் அழுத்தினால் முட்கள் மையை பதியவைக்க சிறிய புள்ளிகளாக ஓவியம் தாளில் பதிந்திருக்கும். படங்கள்: புல்லரித்த சருமம் போல புள்ளிகளாகத் தெரியும்.. தரமான தாளும் மையும் இல்லையேல் புகைப்படங்கள் கரிப்படங்களாக இருக்கும். தினதந்தி கரிப்படங்களுக்கு புகழ்பெற்றது.

ஆனால் கோட்டோவியங்கள் தெளிவாக அமையும். ஆகவே அன்றெல்லாம் புத்தக அட்டை கோட்டோவியங்கள்தான். ஈஸ்வர் என்ற ஒருவர் ஒரே மாதிரி வரையும் மூக்குமுழி ஓவியங்கள்தான் பெரும்பாலான வணிக எழுத்துக்களின் அட்டைகளை அலங்கரிக்கும். லதா, மாருதி போன்றவர்களின் கோட்டுப்படங்களும் புகழ்மிக்கவை.

கோட்டோவியத்தை ஒருவண்ணத்திலும் தலைப்பை இன்னொரு வண்ணத்திலும் அமைக்க அட்டையை இருமுறை அச்சிடவேண்டும். அதிகபட்சம் மூன்று வண்ணங்கள் அட்டையில் இருக்கும்.திசைகளின் நடுவே உண்மையில் சிவப்பு, நீலம் என இரு வண்ணங்கள் மட்டும் கொண்ட அட்டை. ஆனால் ஒரே படத்தை இருவண்ணங்களில் பிளாக் செய்து இருமுறை மேல்மேலாக அச்சிட்டு ஒரு நவீனக் கலையழகை உருவாக்கியிருந்தனர். அத்துடன் அதற்கு பாலிதீன் மேலொட்டும் இருந்தது. அன்று அட்டைகளில் அது மிக அரிது. ஆகவே அட்டை பிரமிப்பூட்டியது.

adhi
கே.எம்.ஆதிமூலம்

அன்றெல்லாம் சிற்றிதழ் எழுத்தாளர்களின் நூல்கள் மிக எளிமையாக இருக்கும். அட்டைத்தாள் ஒருவண்ணம், அச்சிடும் எழுத்து இன்னொரு வண்ணம்- அவ்வளவுதான். பலநூல்கள் எளிமையான கருப்புவெள்ளை நிறம்தான். அதற்குள் அன்று சோதனைகள் செய்தார்கள். கையாலேயே மரத்திலும் பழைய ரப்பர்செருப்பிலும் ஓவியங்களைச் செதுக்கி அச்சிடப்பட்ட அட்டைகள் வந்தன. ஸ்கிரீன்பிரிண்டிங் என்னும் முறையில் அட்டைகள் குறைந்த எண்ணிக்கையில் அச்சிடப்பட்டன.

சமீபத்தில் என் நூலகத்தின் பழைய அட்டைகளை பார்த்துக்கொண்டிருந்தேன். அன்று சற்று வியந்த அட்டைகள் சில. மிகச்சாதாரணமாக தோன்றியவை பல. இன்று அதற்குள் அவை வரலாற்றுத் தடையங்களாக, சிந்துவெளி மண்சிலைகள் போல தொன்மையானவையாக ஆகிவிட்டிருக்கின்றன.

pramil
பிரமிள்

அன்றைய அட்டைகளில் ஆதிமூலம் வரைந்தவற்றை இன்று எவராவது சேமித்து ஆவணப்படுத்துவது நன்று. பல வகையான சோதனைமுயற்சிகளை எழுத்துருக்களிலும் ஓவியங்களிலும் ஆதிமூலம் செய்திருக்கிறார். அவை ஒரு காலகட்டத்தின் காட்சிப்பதிவுகள். அதேபோல பிரமிள் வரைந்த அட்டைகள். அவற்றைப்பார்த்தாலே பிரமிள் எனத் தெரியும். ஒருவகை மூர்க்கமும் பயிலாததன்மையும் அவற்றில் இருக்கும். லயம் வெளியீடாக வந்த பலநூல்களுக்கு பிரமிள் வரைந்துள்ளார். குறிப்பாக தேவதேவன் நூல்களுக்கு.

நாம் எளிதில் வரலாற்றை குப்பைக்கூடைக்குள் செலுத்தும் மக்கள். இந்த பத்தாண்டுகளுக்குள் இந்த அட்டைகள் ஆவணப்படுத்தாவிட்டால் அவை ஆய்வுக்கும் எஞ்சாமலாகிவிடும். ஏனென்றால் அன்று முந்நூறு பிரதி அச்சிடப்படும் நூல்களில் நூறுபிரதிகளே விற்கும். எஞ்சியவை எங்கோ சென்று மறையும். அது ஒரு காலக்கருஞ்சுழி.

முந்தைய கட்டுரைலங்காதகனம் –கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 54