இந்த டீ சூடாறாதிருக்கட்டும்..

hampi

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு.

நேற்று ஹம்பியில் உடைந்த கோபுரத்தை மழைமேகங்களின் பின்னனியில் புகைபடம் எடுக்க என் கேமராவில் நோக்கினேன். ஒரு கணம்தான் உடல் அதிர்ந்தது. ஒரு நிலைகுலைவு. அந்த அச்சம் ஏன் என தெரியவில்லை. கோபுரம் பின்னோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. அதற்குள் தர்க்க மனம் விழித்துகொண்டது. மழைமேகம் மெதுவாக வானில் ஊர்ந்துகொண்டிருந்தது. தானாக மனதில் தேவதேவன் அவர்களின் இக்கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன.

 

deva

”அசையும்போது தோணி

அசையாதபோதே தீவு

தோணிக்கும் தீவுக்குமிடையே

மின்னற் பொழுதே தூரம்”

இந்த அசைதல் அகத்தில் நிகழ்வதல்லவா. இது உள்ளுணர்வுக்கும், தர்க்கத்திற்கும் உள்ள தூரம்தானே. இவ்வரிகள் இரண்டு நாட்களாக ஒரு நிலைகுலைவை ஏற்படுத்திவிட்டது. அந்த அச்சம் ஏன், நான் அறிந்த விதிகள் எல்லாம் பொய்த்துவிடுகின்றன என்பதாலா. அதனாலேயே அது நிலையற்றதா. ஆனால் இக்கவிதையில் ”அசையாதபோதே தீவு” என அவர் அப்புறமிருந்தே கூறுகிறார். சாதாரணமாக தோன்றிய வரிகள். ஆனால் ஸ்திரமற்ற உலகில், கனவில், கற்பனையில், உள்ளுணர்வை மட்டுமே நம்பியிருக்கிறார். அதுதானே கவிஞனின் இடம். படைப்பு மனம் எப்போதும் அசைந்து கொண்டிருபவர்கள்தான். கான்கிரீட் தரையில் வாழும் என் போன்றவர்களுக்கு அது மிகவும் தூரம்தான். அப்படியே வாய்த்தாலும் அச்சத்துடன் ஓடி வந்து “அப்பாடா அது உண்மையல்ல” என நம்பிக்கையுடன் இருப்பதுதான். உங்கள் வாரிகுழி கதையில் வரும் உண்ணிலட்சுமி யானை போல. அல்லது காலடியில் சுழன்று ஒடும் காட்டாற்றை கடக்க பயந்து இறக்கும் கீரகாதனைபோல (காடு நாவலில்). அசைவற்றது மரணம்தான், படைப்பின் மறுபக்கம்.

உச்சவழு போன்ற தருணம் அமைந்து, உள்ளுணர்வின் தடத்தை பின்தொடர, அதில் வாழ கொஞ்சம் “பைத்தியம் தேவைதான்”. அதில் வாழ தெய்வத்தை வேண்டிகொள்கிறேன்.

தெய்வமே !
இந்த டீ
சூடாறாதிருக்கட்டும்..
சுவை குன்றாதிருக்கட்டும்

அன்புடன்
ஆனந்தன்
புனே

 

முந்தைய கட்டுரைவெளி
அடுத்த கட்டுரைஉதயகுமாரின் பிராமண எதிர்ப்பு