முன்பு ஒருமுறை என் நண்பர் சதக்கத்துலா ஹசநீ என்னுடன் தங்கியிருந்தபோது “ஆ மழை!” என்றார். “எங்கே மழை?” என்று நான் கேட்டேன். அவர் முற்றத்தைக் காட்டினார். “அதை நாங்கள் தூறல் என்றுதான் சொல்வோம்” என்றேன். எங்களூரில் மழை என்பதன் பொருளே வேறு. நாங்கள் மழையின் மக்கள்
ஆனால் சென்ற ஓராண்டாகவே பெருமழை இங்கே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். சென்ற ஜூன் மாத தென்மேற்குப் பருவமழை சரியாகப் பெய்யவில்லை. டிசம்பரில் வடகிழக்குப் பருவமழையும் வலுக்கவில்லை. மீண்டும் இந்த ஜுனில் மழையை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தோம். பெய்தது, ஆனால் எங்கள் கணக்கில் அது மழை அல்ல
நேற்றுதான் பருவமழை என்றபொருளில் நாங்கள் சொல்லும் மழை பெய்தது. நேற்று [26-6-2017] பின்னுச்சிப் பொழுதில் கருமைகொண்டு மாலையில் தொடங்கியது. இரவில் நிலைக்காமல் மழை. காலையில் விடியவே இல்லை. இன்று முன்மதியம்தான் வெயிலெழுந்தது. அத்தனை ஓடைகளும் செம்பெருக்காயின. வயல்கள் செம்பரப்பென நெளிந்தன. வடமேற்கு வடகிழக்குமலைகள் முழுமையாக முகிலில் புதைத்தன
இரவில் இருட்டுக்குள் மழை இறங்கும் ஒலியைக் கேட்டுக்கொண்டு படுத்திருந்தேன். காலையில் எழுந்து வந்து நோக்கி நின்றேன். மழையிருட்டு. இரவிருட்டின் உக்கிரமும் ரகசியங்களும் இல்லாதது. மழையை இருட்டுக்குள் பார்க்க முடியவில்லை. நீர்த்தாரைகளே இருட்டென்றாகி விட்டிருந்தன. கூரைவழிவு அதை மேலுமொரு திரையென மறைத்தது.
பெருமழை என்னை எப்போதும் பேச்சிப்பாறை காட்டுக்குக் கொண்டுசெல்கிறது. குட்டப்பனின் , கீறக்காதனின் ,நீலியின் காடு. பேச்சிப்பாறைப்பகுதியின் மழைக்காடு இயல்பாகவே இருண்டுதான் இருக்கும். மழைக்கார் மூடுகையில் இலைதெரியாத இருட்டு. அவ்விருட்டுக்குள் ஒரு கள்ளக்காமம் போல மழை மூடிப்பெய்துகொண்டிருக்கும். அதிலும் நள்ளிரவில் என்றால் அது ஓசையின் உக்கிரம் மட்டுமே.
காலையில் மழைவெளுக்கையில் காட்டுக்குள் புதிய சுடர்கள் எழுந்து எரிந்து நின்றிருக்கும். அத்தனைப் பாறையிடுக்குகளிலும் வெண்ணிற வெளிச்சம் சிதறும் அருவிகள். காட்டுக்குள் சென்றால் ஒருபோதும் கண்துலங்க கண்டிராத இடங்களெல்லாம் மிளிர்ந்து நின்றிருக்கும். அந்த மரங்கள் பிறகெப்போதும் நிழல்கொள்வதில்லை. விழிபிதுங்கி இலைநுனிகளிலாடும் அந்த சிறு பச்சைத்தவளைகள் அந்த ஒளியை முன்பு கண்டிருப்பதில்லை.
கருவிமாமழை என்று கபிலர் பாடுகிறார். நான் எப்போதுமே சொல்லிவருவதுபோல கபிலர் எங்கள் சேரநாட்டவர். பிறருக்கு அவர் சொல்லும் பெரும்பாலான செய்திகளும் அனுபவங்களும் புரியாது. கருவிமாமழை என்பதற்கு பல அர்த்தங்கள். இடி மின்னல் என படைக்கலங்களைச் சூடி எழுந்து வரும் மாமழை என்பது பெரும்பாலானவர்களின் பொருள்.
கருவி என்பதை கருமையுடன் இணைத்துக்கொள்ளலாம்.இப்போதைக்கு இலக்கண ஒப்புதல் இல்லை என்றாலும் அதை ஒரு தொன்மையான சொல்லாட்சி என்று கொள்ளவே தோன்றுகிறது.கருமையே ஆன மழை!
யாமத்துக் கருவிமாமழை என்னும் சொல்லை உணர பேச்சிப்பாறையில் ஒரு மழையை நேரில்காணவேண்டும்.இருளின் அகக்கூச்சல் அது. முடிவிலாத ஒன்று தன்னுள் தன்னை நிகழ்த்திக்கொள்வது. நம்மைச்சூழ்ந்திருக்கிறது அது ,ஆனால் அதனுள் என்ன நிகழ்கிறதென்று நம்மால் அறியமுடியாது
காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென அருவி
விடரகத்து இயம்பும் நாட
எம் தொடர்பு தேயுமோ நின்வயினானே?
நீ காதலை மறந்துவிடலாம். நள்ளிரவில் காட்டில் இருண்ட மாமழை பெய்ததை அருவி காலையில் மலைச்சரிவுகளில் எழுந்து விழுந்து கூச்சலிட்டுச் உரைக்கும் நாட்டைச் சேர்ந்தவனே. எம் உறவு உன் உள்ளத்தில் தேய்ந்தழியுமா என்ன?
காட்டுக்குள் பெய்யும் கருவிமாமழையை அறிவித்த சிரிப்புகளை இப்போது சுற்றிலும் காண்கிறேன். கூவிநகைத்து பொழிகின்றன. இன்னும் சற்றுநேரத்தில் இளவெயில் எழும். வேளிமலையின் சரிவுகளில் வெள்ளிவழிவென அருவிகள். ஈரத்தின் வளைவொளிகள். தென்மேற்கே சவேரியார் குன்றின்மேல் கருமைதிரண்ட முகில்கள் மீண்டும் என்ற சொல்கொண்டு நின்றிருக்கின்றன